29 November 2011

குறும்பட கார்னர் - சொல்ல மறந்துட்டேன் ...

  
   காதலும் வன்முறையை போல இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் . அதை சரியான விதத்தில் புரிந்து கொண்டு கரையேறுபவர்களும்  உண்டு , ஆழம் தெரியாமல் காலை விட்டு அவஸ்தைப்படுபவர்களும் உண்டு ...

   " காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் " என்றான் பாரதி ... இன்றோ " காதல் காதல் காதல் போயின் காதல் காதல் காதல் பிறரோடு " என்பது வழக்கமாகிவிட்டது ... அப்படிப்பட்ட ஒரு காதல் மாயைக்குள் சிக்கிய கார்த்திக்கின் கதையே " சொல்ல மறந்துட்டேன் " குறும்படம் ...



    காதல் தோல்வியுடன் ஹளுஷினேஷனையும் , கொஞ்சம் திகிலையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ... கதைக்கான கருவை தவிர டெக்னிக்கல் விஷயங்கள் பெரிதாக இல்லையென்றாலும் , ஒரே ரூமுக்குள் வைத்து படத்தை சுருக்கமாகவும் , சுவாரசியமாகவும் சொன்ன விதம்  அருமை ...

   கார்த்திக் கேரக்டரில் நடித்திருக்கும் உமாபதி நன்றாக நடித்திருந்தாலும் மற்ற மூவரின் நடிப்பு  ரொம்ப சுமார் ... பார்த்திபன் இயக்கிய " குடைக்குள் மழை " படத்தை இந்த குறும்படம் நியாபகப்படுத்தினாலும் முடிவில் வைத்த ட்விஸ்ட் அழகு ...

    " சொல்ல மறந்துட்டேன் " தலைப்பு பொருத்தமாக இருந்தாலும் அதையே இருபது தடவைக்கு மேல் சொல்ல வைத்ததை தவிர்த்திருக்கலாம் ...

இயக்கம் : கமலகண்ணன்

தயாரிப்பு : பி.கே.யு ப்ரொடக்சன்

26 November 2011

மயக்கம் என்ன - அரை மயக்கம் ...


   செல்வராகவனை நம்பி தனுஷ் தன்னை முழுதாக ஒப்படைத்திருக்கும் மூன்றாவது படம் " மயக்கம் என்ன " ... படம் பார்த்து முடித்த பிறகு தனுஷும் நம்மைப் போல நிச்சயம் ஏமாந்திருப்பார் என்று தான் சொல்ல வேண்டும் ... இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் மயக்கத்தில் தத்தளித்ததே அதற்கு காரணம் ...

   பெற்றோர்கள் இல்லாததால் நண்பன் சுந்தரின் உதவியோடு வாழும் தனுஷிற்கு பெரிய வைல்ட் லைப் போட்டோகிராபராக ஆக வேண்டுமென்பதே லட்சியம் ... தான் மானசீக குருவாக நினைக்கும் மாதேஷிடம் உதவியாளராக சேர வேண்டுமென்பது உட்பட அவருடைய எல்லா முயற்சிகளும் தொடர்ந்து தோல்விகளையே சந்திக்கின்றன ...


   சுந்தர் காதலிப்பதாக சொல்லி அழைத்து வரும் ரிச்சாவுக்கும் , தனுஷுக்கும் மோதலில் ஆரம்பிக்கும் பழக்கம் வழக்கம் போல காதலில் முடிகிறது ... நண்பன் விட்டுக்கொடுத்த பின் ரிச்சாவை  மணக்கும் தனுஷ் தன் லட்சியத்தில் ஜெயித்தாரா என்பதே மீதி கதை ...

   புதுப்பேட்டை , ஆடுகளம் வரிசையில் தனுஷின் நடிப்பு பசிக்கு " மயக்கம் என்ன "  அருமையான தீனி ... மனிதன் கார்த்திக்காகவே வாழ்ந்திருக்கிறார் ...
" பிரியாணி எங்கடா வாங்கின கோழி ரொம்ப பழசா இருக்கு " என்று ரிச்சாவை கலாய்ப்பதும் , நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதாக நினைத்து குற்ற உணர்ச்சியில் துடிப்பதும் , தன் திறமையை அடுத்தவன் திருடி விட்டான் என்று தெரிந்தவுடன் தவிப்பதும் , தன் ஆற்றாமையை மனைவியிடத்திலும் , மற்றவர்களிடத்திலும் கோபமாக காட்டுவதும் என படம் முழுவதும் நடிப்பு தாண்டவமாடுகிறார் தனுஷ் ...

 
     தனுஷுக்கு ஈடு கொடுக்கும் முக்கியமான யாமினி கேரக்டரில் ரிச்சா ... முதல் பாதியில் மலச்சிக்கல் வந்தவர் போல தன் முட்டை கண்களால் தனுஷை முறைத்துக் கொண்டே இருப்பவர் பின் பாதியில் தனுஷின் மனைவியான பிறகு நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி காட்டுவதோடு , ஆளும் தனுஷுக்கு அக்கா போல மெச்சூர்டாக இருக்கிறார் ...

   ரிச்சாவுக்கு மன அழுத்தத்தில் முழு நேர குடிகாரனாகிய கணவன் தரும் இம்சைகளையும் பொறுத்துக்கொண்டு அவனை முன்னுக்கு கொண்டு வரும் பாசிடிவ் மனைவி கேரக்டர் ... ஆனால் ஒருவனுடன் டேட் செய்ய ஒப்புக்கொண்டு விட்டு பின் அவன் நண்பனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் பாராட்டப்பட வேண்டிய கேரக்டர் படுகுழியில் தள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக , சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவனின் நண்பன் ஒருவன் இவளை அடைய முயற்சிக்கும் போது அவனுக்கு ரிச்சா செய்யும் அட்வைசை ரசிப்பதற்கு பதிலாக தியேட்டரில் அனைவரும் கைகொட்டி சிரிக்கிறார்கள் ...

   மூன்றாவது முக்கிய பாத்திரம் தனுசின் நண்பனாக வரும் சுந்தர் ... முதல் காட்சியில் இவரை பார்க்கும் போதே அழகான காதலியை தனுஷ் கொத்திக்கொண்டு போய் விடுவார் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது ... அவர் இயல்பாக நடித்திருந்தாலும் முகத்தில் சுத்தமாக பணக்கார கலையே இல்லை .. தனுஷை விட சுமாராக இருக்க வேண்டுமென்பதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல ...


   தன் கேர்ள் பிரெண்டை தனுஷுக்கு கூட்டிக்கொடுக்கிறேன் என்று இவர் நேரடியாக சொல்லவில்லையே தவிர , மற்றபடி பாத்ரூம் கதவை திறந்து வைத்துக்கொண்டு குளிக்கும் ரிச்சாவை பார்த்துக்கொள்ள சொல்லி இவர் தனுஷிடம் பணிப்பது உட்பட எல்லா வேலைகளையும்  செய்கிறார் ...
" அவளுக்கு நீன்னா ஒ.கே டா " என்று இவர் தனுஷை பார்த்து சொல்லும்போதெல்லாம் " இவ்வளவு மொக்கையாவா ஒருத்தன் இருப்பான் " என பரிதாபப்பட வைக்கிறார் ...

   ராம்ஜியின் ஒளிப்பதிவும் , ஜி.வி யின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய தூண்கள் ... காட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் எல்லா காட்சிகளுமே கண்களுக்கு குளிர்ச்சி ... " ஓட ஓட " , " காதல் என் காதல் " இந்த இரண்டு பாடல்களுமே படம் வருவதற்கு முன்பே செம ஹிட் ... " காதல் " பாட்டுக்கு செல்வா , தனுஷின் வரிகள் சிம்ப்லி சூப்பர் ... பழைய நெடி அடித்தாலும் பின்னணி இசையே படத்தின் பின்பாதியை  தூக்கி நிறுத்துகிறது ...

   மனதில் பட்டதை தைரியமாக எடுக்கும் சில இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர் ... கேரக்டர்களை மனதில் பதிய வைப்பதிலும் , விசுவலாக எதையும் சொல்வதிலும் வல்லவர் ... 7 ஜி யும் , புதுப்பேட்டையும் இதற்கு சிறந்த உதாரணங்கள் ... இருவர் காதலிப்பதற்கு முன் டேடிங் செய்வது, ஆண் , பெண் பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே ரூமுக்குள் படுத்து உறங்குவது , நண்பர்களுக்கு அவர் தந்தையே சரக்கு ஊத்திக்கொடுப்பது என இந்த படத்திலும் இவருடைய போல்ட் அட்டெம்ப்ட் நிறைய ...

   தனுஷ் ,ரிச்சாவின் முதல் சந்திப்பு , " நீ என்ன கார்பரேசன் கக்கூஸ் ல தானே வேலை செய்யற " , " ஆமாமா உங்கப்பன் வேலை செய்யற எடத்துலதான் " ,
 " அப்படியா உங்கம்மா இதப்பத்தி சொல்லவே இல்ல " இப்படி தனுஷ் , ரிச்சா இருவரும் அடித்துக்கொள்ளும் காட்சி , தனுஷ் , ரிச்சா இருவரும் பாலத்தில் நடந்து கொண்டே பேசிக்கொள்ளும் காட்சி , " அவன் என் படத்தை ஆய்னுட்டான் " என அழுது கொண்டே சொல்லும் தனுஷை அணைத்து கொண்டே ரிச்சா காதலை வெளிப்படுத்தும் காட்சி என முதல் பாதி முழுவதும் செல்வராகவனின் டச்சிங் நிறைய ...


    செல்வராகவனுக்கு " செகண்ட் ஆப் சின்றோம் " என நினைக்கிறேன் ...
 " ஆயிரத்தில் ஒருவன் " போல இந்த படமும் இரண்டாம் பாதியில் எங்கெங்கோ தடுமாறி பிரயாணம் செய்கிறது ... இவ்வளவு பணக்கார நண்பர்களை வைத்துக்கொண்டு தனுஷ் தன்னை ஏமாற்றியவனுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான ஆக்சனையும் எடுக்காதது ஆச்சர்யமே ... விக்ரமன் படத்தில் ஹீரோ ஒரு பாடலில் பணக்காரன் ஆவது போல இந்த படத்தில் தனுஷ் பின்னணி இசையில் சர்வதேச விருதை பெறுகிறார் ... இடைவேளைக்கு பிறகு வசனங்களை குறைத்து விசுவலாக நகர்த்தியிருந்தாலும் அதை ஏதோ டாகுமெண்டரி அளவுக்கு ஜவ்வாக இழுத்திருக்க வேண்டாம் ...

   முதல் பாதியில் ரிச்சாக காட்டப்படும் ரிச்சா பின்பாதியில் மிடில் கிளாசாக மாறியது ஏனோ ?.. இவை தவிர தனுஷின் தங்கை , சுந்தரின் அப்பா என பொருந்தாத காஸ்டிங்க்ஸ் பெரிய குறை ... காதல் கொண்டேன் , 7 ஜி மயக்கத்தில் இருந்து செல்வராகவன் முழுதாக விடுபடாதது " மயக்கம் என்ன " வில் தெரிகிறது ... தனுஷ் , ரிச்சா நடிப்பு , ராம்ஜியின் ஒளிப்பதிவு , ஜி.வி. யின் இசை ," ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்" என்பதை உணர வைக்கும் கதை , இளமை துள்ளலான காட்சிகள் இப்படி நிறைய ப்ளஸ்கள் இருந்தும் தெளிவில்லாத திரைக்கதையும் , போரடிக்கும் பின்பாதியும் "மயக்கம் என்ன" வை அரை மயக்கத்திலே வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் - 40   

24 November 2011

தனிமை ...


அதிகாலை வேளையில்
எனை எழுப்ப
அருகே வரும்
உன் கைகள்
அதை அணைத்தபடியே
போடும் குட்டி தூக்கம் ...

வாசல் வரை
வந்து வழியனுப்பி விட்டு
பின்
ஏதோ ஒரு
பொய் சாக்கு சொல்லி
நான் திரும்ப
வருவேன் என்பதை
குறிப்பால் உணர்த்தும்
உன்
கண்களின் குறும்பு ...

உரிமையில்
என் பெயரை
சொல்லி விட்டு
உடனே
நாக்கை கடிக்கும்
உன் அழகு ...

இரவில்
நான் வீடு திரும்ப
வெகு நேரம் ஆனாலும்
செல்போனில் சிணுங்காமல்
என்
புகைப்படத்துடன் பேசும்
உன் பொறுமை ...

அடுத்த பெண்ணை
நான்
ரசிக்கும் போது
அக்கா ரொம்ப அழகு
என சொல்லும்
உன் சாமர்த்தியம் ...

காக்கா கரையும்
போதெல்லாம்
என் விழிகளை
வாசல் பார்க்க வைக்கும்
உன் காதல் ...

நினைவுகளை போர்த்தியபடி
தனிமையை
விரட்ட எண்ணி
வழக்கம் போல்
தோற்றுப்போகும்
என் கண்கள் ...






22 November 2011

குறும்பட கார்னர் - போஸ்ட்மேன் ...


Thumbnail

   "  பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வகையினானே " என்ற நன்னூலின் கூற்றுக்கேற்ப உலகில் மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே ... இதை மற்றவர்களுக்கு எளிதில் சொல்லி விடலாம் , ஆனால் நமக்கு வரும் போது தான் அதன் உண்மையான வலியும், அர்த்தமும் புரியும் ... 

   தொலைபேசியின் வருகைக்கு பிறகு மக்கள் தபால்துறையை எப்படி மறக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் தேசிய விருது பெற்ற குறும்படமே " போஸ்ட்மேன் " ... அந்த ஊரே அவனை வெறும் போஸ்ட்மேனாக பார்க்காமல் நண்பனாக , உறவினனாக பார்ப்பதில் மூர்த்திக்கு ரொம்ப பெருமை ... 


    எவராலும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதது தான் நேசிப்பவர்களால் உதாசீனப்படுத்தப்படுவது ... இந்த சோகத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் விசுவலாக விளக்கியதில் இயக்குனர் ஒரு படி மேலே நிற்கிறார்... போஸ்ட்மேனை கண்டுகொள்ளாமல் ஆளாளுக்கு தொலைபேசியில் பிஸியாக இருப்பது ஒரு நல்ல உதாரணம் ...

    திரைப்படத்திக்குண்டான காதல் , சென்டிமென்ட் , சோகம் , காமெடி  இதையெல்லாம் அழகாக இந்த குறும்படத்தில் புகுத்தியதே இயக்குனரின் சாமர்த்தியம் ... பாட்டிக்காக பேரன் எழுதுவது போல மூர்த்தி எழுதும் கடிதங்கள் க்யூட் ஹைக்கூ ... 

    ஹீரோவாக வரும் இஸ்வரின் முகம் அவரின் ஒட்டு தாடி போலவே தமிழுக்கு கொஞ்சம் அன்னியமாக இருந்தாலும் முக பாவங்கள் நன்றாக இருக்கின்றன ... தீனா காதல் காட்சிகளில் இசைஞானியின் பாடலை உபயோகப்படுத்தியிருந்தாலும் கிளைமாக்ஸ் உட்பட பின்னணி இசையில் மனதை வருடுகிறார் ... மற்றொரு முக்கியமான அம்சம் அபிநந்த ராமானுஜத்தின் ஒளிப்பதிவு ... ஆற்றுப்படுகையில் போஸ்ட்மேன் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வருவது கண்கொள்ளா காட்சி ... 

    படத்தை பார்த்து முடித்தவுடன் சின்ன வயதில் தீபாவளி , பொங்கலுக்கு நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கிடந்த நாட்கள் கண்முன் வந்து போவதை யாரும் தவிர்க்க முடியாது ...

இயக்கம் : மனோகர்

தயாரிப்பு : எல்.வி.பிரசாத் அகாடமி


17 November 2011

கூட்டணி தர்மம் ...


            
    " ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் " என்றார்  பாரதி . " எது தர்மம் " என்பது பற்றி அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கினார் சாணக்கியன் , ஆனால் இதையெல்லாம் விட தர்மம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அரசியல்வாதிகளால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் தர்மம் " கூட்டணி தர்மம் " ...

    பொது ஜனம் எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் பதவி பறிபோய் விடக்கூடாதென்பதே இந்த தர்மத்தின் முக்கிய குறிக்கோள்..இது மட்டுமல்ல இன்னும் நிறைய கிளை குறிக்கோள்கள் , கொள்கைகள் ... இந்த கூட்டணி தர்மத்திற்காக கட்சி தலைவர்கள் என்னவெல்லாம்  செய்கிறார்கள் அல்லது செய்யலாம் என்பது பற்றிய சில குறிப்புகள் இதோ ...

    முதலில் தன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழல் செய்ய போகிறார் என்று திட்டவட்டமாக தெரிந்திருந்தாலும் பிரதமர் கடிதம் எழுவதை தவிர வேறொன்றையும் செய்து விடக்கூடாது , அதிலும் அந்த கடிதத்தில்  ஊழல் செய்யலாமா , கூடாதா என்பதையெல்லாம் தெளிவாக விளக்காமல் விட வேண்டும் ...

                                                         
     பதில் கடிதத்தில் அமைச்சர் இல்லையில்லை நான் என் கட்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஊழல் தான் செய்வேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை தடுப்பது போல நேரடியாக எந்தவொரு பதில் கடிதமும் போட்டு விடக்கூடாது , அதே சமயம் நீங்கள் செய்யப்போகும் ஊழல் நிச்சயம் நல்ல திட்டமே , இருப்பினும் பிற்காலத்தில் ஏதும் சிக்கல் வராமல் இருக்க மற்ற இலாக்கா அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யலாம் என்று வேண்டுமானால் அறிவுரை வழங்கலாம் ...

    இரண்டாவது , கூட்டாக எவ்வளவு கொள்ளையடித்தாலும் தனியாக யாரையும் மாட்டி விடக்கூடாது   , அப்படியே ஊழல் சில லட்சம் கோடிகளை தாண்டும் போது அது சம்பந்தமாக நடவடிக்கைகளே எடுக்காமல் ஏதாவது அறிக்கைகள்  விட்டும் பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சிகளும் நிறைய அமளி துமளி செய்தால் கூட்டணி கட்சி தலைவருடன் அமர்ந்து பேசி அவர் கை காட்டும் நபரை சில நிபந்தனைகளுடன் மாட்டி விடலாம்...
                                       
    நிபந்தனைகளின் படி மாட்டிவிடப்படும் நபருக்கு சி.பி.ஐ ரெய்ட் வரப்போவதை  முன் கூட்டியே தெரிவித்து முடிந்தவரை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைக்குமாறு சொல்லிவிட வேண்டும் . அதையும் மீறி அவர் மாட்டும் போது சட்டம் தன்  கடமையை செய்யும் என்று அறிக்கை விடலாம்...

                         
    அடுத்ததாக , கைதானவரை வெளியில் விட சொல்லி கூட்டணி கட்சி தலைவர் நச்சரிக்கும் சமயத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் நிற்க வைப்பதற்கு வேட்பாளர்களே இல்லையென்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் போது , எப்படியிருந்தாலும் தோறகத்தானே போகிறோம் என்ற உண்மை தெரிந்தும் ஏன் இவ்வளவு தொகுதிகள் கேட்கிறார்கள் என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் கூட்டணி கட்சி தலைவரும் விட்டுக்கொடுத்து விட வேண்டும் ...

     இலங்கை அரசு ஈழ தமிழர்களை அழிப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்வது தெரிந்திருந்தும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் .அதையும் மீறி  மனம் வெதும்பினால் ஏர் கூலரில் காற்று வாங்கியபடியே சொந்தங்கள் புடை சூழ  கூட்டணி கட்சி தலைவர் குடும்ப தொலைக்காட்சியில் கொலு பொம்மை போல அரை நாள் லைவ் ஷோ காட்டலாம் .

    அதுவும் போதாதென்றால் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்த பிரதமருக்கு தமிழிலேயே கடிதம் எழுதலாம் , பிரதமருக்கு தான் தமிழ் தெரியாதே என்று யாராவது தமிழ் பற்றே இல்லாமல் கேள்வி கேட்டால் , புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சாமர்த்தியமாக பதில் சொல்லலாம் .

                               
     ஈழ தமிழர்களுக்காக என் உயிரையே தருவேன் என கட்டுரை எழுதலாம் , யாராவது ஏன் இன்னும் உயிரை விடவில்லை என்று குசும்பாக கேட்டால் நான் போய் விட்டால் தமிழர்களை யார் காப்பற்றுவார்கள் என்று பதில் கேள்வி கேட்டு மடக்கி விடலாம் ...

     தன் கட்சியை சேர்ந்த தமிழர்களின் பதவிக்காகவும் , தமிழச்சியான தன் மகளின் ஜாமீனுக்காகவும் தான் நாம் டில்லி போகிறோம் என்பது கூட  தெரியாமல் ஏன் ஈழ தமிழர்கள் பிரச்சனைக்காக நீங்கள் டில்லி செல்லவில்லை என்று யாராவது கேட்டால் அப்படி கேட்பவர்கள் தமிழர்களே அல்ல , ஆரியர்கள் என்று பதில் சொல்லலாம் ...

     பெட்ரோல் விலையை குறைக்கா விட்டால் நான் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என பிரதமர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து சொல்லிவிட்டு , அவருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு மம்தா அந்தர் பல்டியடித்ததை விடவா என்  தமிழ்பற்று மோசம் என்று கூட சொல்லி மழுப்பலாம் ...

    விலைவாசி உயர்வுக்கு மக்கள் அதிகமாக மீன் முட்டை என்று உணவை வெளுத்து வாங்குவது தான் காரணம் என்று பிரணாப் சொன்னதை மேற்கோள்காட்டி அன்னா வழியில் எல்லோரையும் உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்... ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பிறகும் " தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது " என்று சொல்லும் பிரதமரை விட வேறு யாரால் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கவோ , ஒடுக்கவோ முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கலாம் ...


                           
     மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் , டீசல் , காய்கறி இவற்றின் விலைகளை ஏற்றி இந்திய பொருளாதாரத்தையே ஏற்றத்தில் வைத்திருக்கும் மத்திய அரசின் நல்லாட்சி கவிழ்ந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூட்டணியில் தொடர்ந்தால் அது புரியாமல் மாநிலத்தில் ஆட்சி பறிபோய் ,  மகளும் ஜாமீனில் வர முடியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மத்திய அரசுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சுயமரியாதையை சுரண்டி பார்க்கும்  போது உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று சுயத்தை காட்டலாம் ...

     இப்படி பல கட்சிகள் தனித்தனியாக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதோடு , தீவிரவாதம் , ஊழல் , விலைவாசி உயர்வு , சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இப்படி மத்திய அரசுக்கு எதிராக நிறைய  குற்றச்சாட்டுக்கள் இருந்தும் தங்கள் ஆதரவை மட்டும் வாபஸ் பெற்று விடக்கூடாது என்ற தர்மத்தையும் கூட்டாக கடைபிடிக்கின்றன ...

    இதற்கு கட்சிகளின் பதவி ஆசையோ , இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் சௌகரியமாக கொள்ளையடிக்க முடியும் என்ற நினைப்போ , தேர்தலை சந்திக்க பயமோ மட்டும் காரணம் அல்ல . சினிமாவில் ஹீரோ என்ன வேண்டுமானால் செய்யலாம் , ஆனால் ஹீரோயின் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அடிமட்ட ரசிகன் நினைப்பது போல காங்கரஸின் குறைகள் மக்களுக்கே பழகிப் போன பிறகு , பல கட்சிகளுக்கு மாற்று கட்சியை விட காங்கிரசுடன் கூட்டு சேர்வது வசதியாகி விட்டதும் மிக முக்கிய காரணம் ...

14 November 2011

நூறாவது நூறு ...

                      
    நம் நாட்டில் எவ்வளவோ மதங்கள் இருந்தாலும் கிரிக்கெட்டை தங்கள் மதமாகவும் , சச்சினை அதன் கடவுளாகவும் வழிபடும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் ...

    சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதலே சாதாரணமான இந்தய - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை  அசாதரணமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது ... அதிலும் கடந்த முதல் டெஸ்டில் சச்சின் 76 ரன்களுக்கு அவுட் ஆனார் ... அவர் படபடப்புடன் இருந்தது அவருடைய சாட் செலக்ஷனில் நன்றாகவே தெரிந்தது.

    இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் சச்சின் பதட்டப்படாமல் தன்னுடைய  நேச்சுரல் கேமை ஆடினாலே தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்வார் என்பது வல்லுனர்களின் கணிப்பு... அதிலும் போட்டி அவருக்கு லக்கியான ஈடன் மைதானத்தில் நடைபெறுவதும் , வீக்கான மேற்கிந்திய தீவுகளுடன் மோதுவதும் அவருக்கு சாதகமாக இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள். ஏற்கனவே சச்சின் ஈடன் மைதானத்தில் மூன்று முறை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ...

                                     
    இந்த வருடம் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய 99 வது அடித்த சச்சின் அதற்கு பிறகு மற்ற போட்டிகளில் நூறாவது சதத்தை அடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமே ...

    அதிலும் குறிப்பாக செமி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களுக்கு அவர் அவுட் ஆனதில் பலருக்கு பி.பி எகிறியது ... உலக கோப்பை வெற்றி தந்த மாபெரும் சந்தோசத்தில் அந்த ஏமாற்றம் சிறிது காலம் மறக்கப்பட்டது ...

    இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது ... இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் ஒட்டு மொத்த ஆட்டமும் சொதப்பலாக இருந்ததால் கடைசி டெஸ்டில் 9 ரன்களில் சச்சின் தவறவிட்ட சதம் பெரிய சத்தத்தை எழுப்பவில்லை ...இங்கிலாந்தை நாம் பழி தீர்த்த 5  ஒரு நாள் போட்டிகளிலும் காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை ...

               
     சாதனையின் மறு பெயர் சச்சின் ... தன் பதினாறாவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இன்று வரை அதிக டெஸ்ட் ரன்கள் , அதிக ஓ.டி,ஐ ரன்கள் , ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் இப்படி எத்தனையோ சாதனைகள் அவருக்கு பின்னால் இருந்தாலும் கடந்த 8  மாதங்களில்  ஒ.டி.ஐ மற்றும் 5  டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில்   அனைவருக்கும் வருத்தமே ...

     அவருக்கும் வருத்தம் இருக்காதா என்ன? .சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே  நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது ...

7 November 2011

கலைமகன் கமல் ...


   ஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

   வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...

                

   கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ... 

   இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் ... 

   கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன ... அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...

                     

   டான்ஸ் , பைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை ... 

   அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...

        
   இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
   தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

    இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும் ... நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது ... முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் ... தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


    வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள்... தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

   சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

    ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...

           

   ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது ... ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
    முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பார் என்று சினிமா ஆர்வலர்களை வழி மேல் விழி வைத்துக் காக்க வைப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் ... இன்று ஐம்பத்தேழாவது பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...

1 November 2011

வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் ...

   

      ரீமேக் படங்கள் மட்டுமே இயக்கிய ராஜா , கில்லி போன்ற ரீமேக் படங்களால் உச்சத்தை எட்டிய விஜய் இருவருடனும்  இணைந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் ரைட்ஸ் வாங்காமல் தயாரித்திருக்கும்  ரீமேக் படமே
 " வேலாயுதம் " ... தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து கொண்டிருந்த விஜய்க்கு இந்த படம் சின்ன கமர்சியல் ப்ரேக் ...

    அக்கிரமம் செய்பவர்களை அழிப்பதற்கு " வேலாயுதம் " வருவான் என்று பத்திரிக்கையாளர் ஜெனிலியா கதை கட்டி விட , இதற்கிடையில் தான் உயிரையே வைத்திருக்கும் தங்கையின்  கல்யாண செலவுக்கு சீட் பணத்தை வாங்க சென்னைக்கு வருகிறார் உண்மையான  வேலாயுதம் விஜய் ...விஜய் அக்கிரமக்காரர்களை அழித்தாரா ? அவர் தங்கையின் கல்யாணம் நடந்ததா ? என்பதே மீதி கதை...

     பல வெற்றிப் படங்களின் சீன்களை ஒரு ஜாடியில் போட்டு குலுக்கி அதில் சிலவற்றை பொறுக்கி எடுத்ததே படத்தின் திரைக்கதை... விஜய்யின்  வழக்கமான பாட்டு , டான்ஸ் , பைட்டு , காமெடி , தங்கை சென்டிமென்ட் என போகிறது படம் ...
           
    விஜய் தனக்கேற்ற டெயிலர் மேட்   கதாபத்திரத்தில் ஜொலிக்கிறார் ... எண்ணை வழியும் கருப்பு முகத்தோடு சுற்றுபவர் பாடல்களில்  மட்டும் வெளுப்பாக இருக்கிறார் ... சூர்யா சிக்ஸ் பேக்கை வயிற்றில் காட்டினால் விஜய் த்ரீ பேக்கை விலா எலும்பில் காட்டி வெற்றுடம்புடன் எதிரிகளை அடிக்கிறார் ... தங்கை இறந்தவுடன் அழும் இடத்தில் கொஞ்சம் நன்றாகவே நடிக்கிறார் ...

     விஜய்யை சுற்றி சுற்றி வரும் அத்தை பெண்ணாக கொழுக் மொழுக் ஹன்சிகா ... ம்ம் எங்களுக்கும் தான் கிராமத்துல அத்தை பொண்ணு இருக்கு , ஏம்பா வயித்தெரிச்சலை கிளப்புறீங்க ... பாடல்களில் தொப்பையை காட்டுவதை தவிர இவருக்கு பெரிதாக வேறொரு வேலையுமில்லை ...

                                         
                                                                         
    பொதுவாக லூசு பொண்ணு போல நடிக்கும் ஜெனிலியாவுக்கு இதில் சீரியஸ் வேடம் ... அம்மணி முக பாவங்களில் ஸ்கோர் செய்கிறார் ... தங்கையாக சரண்யா பெர்பெக்ட் ... சூரி ஆரம்பித்து வைக்கும் காமெடியை சந்தானம் டேக் ஓவர் செய்த பிறகு படம் சூடு பிடிக்கிறது...

     சில படங்களில் நிறைய வில்லன்களை வைத்து வெறுப்பேத்துவார்கள் , ஆனால் இதில் உள்துறை அமைச்சராக வரும் வில்லனே குண்டு வைப்பது , கள்ள நோட் அடிப்பது , பெண்களை கடத்துவது என்று எல்லா அக்கிரமங்களையும் செய்வதாக  காட்டி வெறுப்பேத்துகிறார்கள்...காதெல்லாம் முடி வச்சுகிட்டு , கண்ண கண்ண உருட்டிக்கிட்டு வர கார்ட்டூன் கேரக்டரை எங்கப்பா புடிச்சீங்க ?  இது பத்தாதுன்னு பாகிஸ்தானிலிருந்து வந்து  சென்னையில் குண்டு வைக்கும் டெர்ரரிஸ்ட் வில்லன் வேற ... விஜயகாந்தும் , அர்ஜுனும் படங்களில் நடிக்காததால் விஜய் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்திருப்பார் போல ...

    விஜய் - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன ... அதிலும் சரியான இடங்களில் பாடலை பொறுத்தி ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார்கள் ...



    பழைய காமெடி தான் என்றாலும் விஜய்யின் கோழி சேசிங் சீனில் ஆரம்பித்து சூரி , சந்தானம் உதவியில் விறுவிறுவென போகிறது முதல் பாதி படம் ... விஜய் கற்பனை வேலாயுதமாக இருந்த போது உள்ள பரபரப்பு இரண்டாவது பாதியில் உண்மையான வேலாயுதமாக மாறி பறந்து , பறந்து சண்டை போடும் போது புஸ்சென்று போய் விடுகிறது ...


     விஜய் பாணி படமென்றாலும் படம் ஆரம்பித்து பதினைத்து நிமிடங்கள் கழித்தே விஜய் வருவது ,அரைமணி நேரம் கழித்து  முதல் பாடலும் , முக்கால் மணி நேரம் கழித்தே முதல் பைட்டும் இருப்பது , விஜய் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசுவது , கடைசியில் குத்து பாடல் வைக்காமல் செண்டிமெண்ட் பாட்டு வைத்தது இப்படி சில வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார்கள் ... மற்றபடி பி ,சி சென்டர்களில் படம் ஒடுமென்றாலும் வேலாயுதத்தை நீளாயுதமாக இல்லாமல் கொஞ்சம் ட்ரிம் செய்து , புதிதாக யோசித்து விறுவிறுப்பான சீன்களை வைத்திருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் விஜய்க்கு மிகப்பெரிய  வெற்றிப்படமாக அமைந்திருக்கும் ...  
" நண்பன் " கை கொடுப்பானா ? பொங்கலுக்கு பிறகு பார்க்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 
Related Posts Plugin for WordPress, Blogger...