Vanga blogalam in Facebook

28 March 2012

கர்ணன் , நடிப்புலக கர்ணன் - காலத்தை வென்றவர்கள் ...!


பொதுவாக ஒரு படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டால் அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்வதை நான் தவிர்ப்பது வழக்கம் ... ஆனால்  38  ஆண்டுகளுக்கு முன் பி.ஆர்.பந்துலு - சிவாஜிகணேசன் கூட்டணியில் வெளியாகி , மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை பற்றி எழுதாமல் விட்டால் நான் பதிவுலக பாவியாகி விடுவேனோ என்ற பயத்தால் கர்ணன் படம் , சிவாஜி இவர்களை பற்றிய எனது அனுபவங்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் ...

என் அப்பாவும் , பெரிய அண்ணனும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள் , அதிலும் என் அப்பா மதுரையில் சிவாஜி படத்தை பார்க்க முடியாமல் போனால் கூட சைக்கிளை எடுத்துக்கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் போய் பக்கத்து ஊரிலாவது படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுமளவிற்கு சிவாஜியின் தீவிர வெறியர் ... சிறு வயதிலிருந்தே இவர்களை பார்த்து வளர்ந்த எனக்கு சிவாஜியின் பாதிப்பு இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை ...

சிவாஜியின் நடை , உடை ,பேச்சு என எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றும் எத்தனையோ ரசிகர்களை நான் சிறு வயதில் சந்தித்து வியந்திருக்கிறேன் ... பிறகு கொஞ்சம் , கொஞ்சமாக கமல் என்னை ஆக்ரமிக்க தொடங்கியும் என்னால் சிவாஜியின் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை ... ரஜினி , கமல் இருவரும் கோலோச்சிய பிறகும் கூட சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த " திரிசூலம் " படம் 200  நாட்களுக்கு மேல் ஓடியது ...


கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்"  என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...

பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தாலும் பத்துக்கு மேல் வந்து படத்தின் வேகத்தை குறைப்பதென்னவோ உண்மை ... எல்லா சிறந்த படங்களிலும் இருப்பது போல இப்படத்திலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன , ஆனால் அவையெல்லாம் சூரியனை கண்ட இருளை போல சிவாஜிக்கு முன் மறைந்து விடுகின்றன ...
 

படம் ஆரம்பித்ததிலிருந்தே சிவாஜியின் கர்ஜனை தொடங்கி விடுகிறது ... வில்வித்தை போட்டி நடக்கும் போது அர்ஜுனனுக்கு எதிராக சவால் விடுப்பது , பிறகு குலத்தை காரணம் காட்டி தன்னை அனைவரும் இழிவு படுத்தும் போது கூனி குறுகி நிற்பது , ஆட்ட மும்முரத்தில் நண்பனின் மனைவியை இடுப்பில் தட்டி நிறுத்திவிட்டு தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் துடிப்பது , தான் உதாசீனப்படுத்தப்படுவது தெரிந்ததும் பீஷ்மருடன் நேருக்கு நேர் மோதுவது , கோபத்தில் மாமனாருடன் உறுமுவது , தன் இழி நிலைக்கு காரணமான தாயை கொலை செய்ய வேண்டும் என்று கர்ஜித்து விட்டு பின் தாய் யாரென்பதை அறிந்ததும் குழந்தை போல அழுவது என சிவாஜியின் நடிப்பில் அரங்கமே மெஷ்மெரிசம் செய்யப்பட்ட காட்சிகள் ஏராளம் ...

சிவாஜியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து தன் இயல்பான நடிப்பால் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் சாவித்திரி ... இந்த இரண்டு ஜாம்பவான்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்வதென்று புரியாதது போல பாவம் விழிக்கிறார் அசோகன் ... சிவாஜிக்கு அடுத்த  படியாக அதிக கைத்தட்டல் பெறுபவர் கிருஷ்ணராக நடித்த என்.டி.ஆர் , சொல்லப்போனால் இவர் வந்த பிறகு படம் இன்னும் சூடு பிடிக்கிறது... சூட்சுமமாக அவர் பேசும் வசனங்கள் அருமை ...



சதி திட்டத்தால் கர்ணனை அவர் வீழ்த்தி விட்டு அழிந்தது உடல் தானே தவிர, ஆன்மா அல்ல , தர்மத்தை நிலை நிறுத்த இது போன்ற செயல்கள் அவசியமே என்றெல்லாம் தத்துவங்கள் பேசுவதை புத்தி ஏற்றுக்கொண்டாலும் மனம் ஏற்க மறுக்கிறது ... ஏன் கடவுள் மேல் கோபமே வருகிறது , ஏனெனில் இறந்து கிடப்பது கர்ணன் மட்டுமா  ? கர்ணனை நடிப்பால் எமக்கு காட்டிய நடிகர் திலகமல்லவா ?! ... கடைசியில் மாஸ் ஹீரோ இறப்பது போல காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு கர்ணன் படம் நல்ல உதாரணம் , அதனால் தானோ என்னவோ படம்  1964  இல் வெளியான போது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ( தளபதியில் இந்த முடிவை தவிர்த்ததால் படம் வெற்றி பெற்றது ) ..

அதே சமயத்தில் வாழும் போது உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாவிட்டாலும் சாவிற்கு பின் நீங்கா புகழால் எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதியை போல இன்று வரை பல முறை மறு வெளீயீடு செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்துக்கொண்டிருக்கும் படம் கர்ணன் ...

ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிவாஜியை கேலி பேசுபவர்கள் நிச்சயம் அவர் இது போல நடித்திருக்காவிட்டால் கர்ணனாய் , கப்பலோட்டிய தமிழனாய் , வீரபாண்டிய கட்டபொம்மனாய் நம்மிடையே  வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ... சிவாஜி என்றுமே இயக்குனர்களின் நடிகராய் இருந்ததால் அவர்கள் சொல்வதை மறுப்பில்லாமல்  அப்படியே செய்திருக்கிறார் ... உணர்ச்சிவயப்படும் காட்சிகளில் அது ஓவர் ஆக்டிங்காக வெளிப்பட்டிருக்கிறது ... நிச்சயம் அதை குறைத்திருக்கலாம் , ஆனால் அதுவே சிவாஜியின் தனித்தன்மை ...

படம் ஆரம்பித்தவுடன் சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் படம் முடிந்து வெளிவரும் போது கொஞ்சம் கலங்கியது போலிருந்ததை காண முடிந்ததே இதற்கு மற்றுமொரு சான்று  ... மெத்தட் ஆக்டிங்கில் புகழ்பெற்ற மேலைநாட்டு நடிகர்களே சிவாஜியை வானளாவ புகழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு ...


கர்ணன் படம் நமக்கு உணர்த்தும் பாடங்கள் நிறைய ... என்ன தான் நட்பை போற்றும் நல்லவனாக இருந்தாலும் மண்ணாசையும் , மனதில் வளர்க்கும் பகைமையும் ஒருவனை வீழ்த்தி விடும் என்பதற்கு
துரியோதனன் ஒரு உதாரணம் , கொடை வள்ளலாக இருந்தாலும் வாய் துடுக்கு ஆகாது என்பதற்கு கர்ணன் ஒரு உதாரணம் , தர்ம சீலன்  கூட கேட்பார் பேச்சை கேட்டு புத்தி தடுமாறுவான் என்பதற்கு தர்மன் ஒரு உதாரணம் , தர்மத்தை நிலை நாட்டுவதற்காக எந்த வழியையும் கையாளலாம் என்பதற்கு கிருஷ்ணன் ஒரு உதாரணம் , போர் மூண்டால் அதனால் நாசமாக போவது பல்லாயிரக்கணக்கான உயிர்களே என்பதற்கு படமே பெரிய உதாரணம் ...


கர்ணனுக்கும் , சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமைகள் தான் எத்தனை ! கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்பவர்கள் கைகள் கூட தாழ்ந்து விடக்கூடாது என்பதற்காக வருபவர்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளும் பொருட்டு தன் கைகளை தாழ்த்திபிடித்தவன் , கர்ணனிடம் நேரடியாகவும் , மறைமுகமாகும் யாசகம் பெற்றவர்கள் எத்தனையோ பேர் ... சிவாஜியும் தான் வாழ்ந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல் எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார்.

இந்திய - சீன போர் மூண்ட போது தானே வழிய வந்து பண உதவி செய்ததோடு பல நாடகங்கள் நடத்தி அதன் மூலம் வந்த வசூலை அப்போதைய பிரதமர் நேருவிடம் வாரி  வழங்கியது ஒரு உதாரணம் ... சிவாஜிக்கு பிறகு வந்த எந்த நடிகரும் அவருடைய நடிப்பை யாசகம் வாங்காமல் நடித்ததில்லை , அந்த விதத்தில் சிவாஜி ஒரு நடிப்புலக  கர்ணன் ...

கர்ணனிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தும் தேரோட்டி என்று சொல்லி அவனை புறம் தள்ளினார்கள் , அதே போல  "
வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்தில் சிறப்பாக நடித்ததற்காக  ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகன் என்ற விருதினை பெற்றிருந்தும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதினை கூட கொடுக்காமல் உதாசீனப்படுத்தியது இந்திய அரசு ...

போரில் ஜெயிப்பதற்காக நயவஞ்சக சூழ்ச்சிகள் செய்து கர்ணனை வீழ்த்தினான் கண்ணன் ... இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார் ... எத்தனை யுகங்கள் கடந்தாலும் நாம் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றும் பேசிக்கொண்டிருப்பது போல , இன்னும் எத்தனை யுகங்கள் போனாலும் சிவாஜியின் நடிப்புத்திறமையையும்  பேசிக்கொண்டு தானிருப்போம் , ஏனெனில் இருவருமே காலத்தை வென்றவர்கள் ...

16 comments:

  1. ///இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார்.///

    நான் வசிப்பது அமெரிக்கா. எனக்கு தமிழ் நாட்டு அரசியல் கிடையாது..

    விமர்சனம் கர்ணன் படம்பத்தி...இதில் எதுக்கு கருணா என்ற ஊறுகா?

    மெட்ராஸ் பாஷையில் இதுக்கு பேர் தான் சந்திலே பேந்தா உடருதுன்னு பேரு...

    நல்ல ஒரு விமர்சனத்தை உங்கள் கட்சி அபிமானத்தால் கெடுத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  2. ///கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்" என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...///

    நம்மில் பலருக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும்...

    ReplyDelete
  3. கர்ணன்...நல்ல அலசல்...மேலும் அரிய தகவல்..வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நடிகர் திலகம் போலவே அசத்தலான விமர்சனம்.அலுக்காத ஒருபடம்.மீட்டித் தருகிறார்கள்.நன்றி !

    ReplyDelete
  5. நல்ல பதிவு அண்ணா! சிவாஜியின் நடிப்புத்திறமையை நானும் பல படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்... "கர்ணன்" படம் முன்பு டி.வியில் போட்டபோது துரதிருஷ்டவசமாக பாதிதான் பார்க்க முடிந்தது. இப்போது முழுசாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete
  6. The one and only Nadigar Thilagam

    ReplyDelete
  7. நம்பள்கி said...
    ///இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார்.///

    நான் வசிப்பது அமெரிக்கா. எனக்கு தமிழ் நாட்டு அரசியல் கிடையாது..

    விமர்சனம் கர்ணன் படம்பத்தி...இதில் எதுக்கு கருணா என்ற ஊறுகா?
    மெட்ராஸ் பாஷையில் இதுக்கு பேர் தான் சந்திலே பேந்தா உடருதுன்னு பேரு...
    நல்ல ஒரு விமர்சனத்தை உங்கள் கட்சி அபிமானத்தால் கெடுத்து விட்டீர்கள்...

    நண்பா நான் என் பதிவிலேயே குறிப்பிட்டிருப்பது போல இது கர்ணன் பட விமர்சனம் அல்ல , என் அனுபவ பகிர்வு மட்டுமே ...நான் எந்த கட்சி அபிமானத்திலும் அந்த செய்தியை குறிப்பிடவில்லை , உண்மையை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே ! மற்றபடி பெரிதாய் எந்த உள்நோக்கமுமில்லை ... நீங்கள் இருப்பது அமெரிக்காவில் என்றாலும் சென்னை தமிழ் நன்றாகவே வருகிறது ...உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  8. HOTLINKSIN.COM திரட்டி said...
    ///கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்" என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...///
    நம்மில் பலருக்கும் நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும்...

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  9. kovai Neram said...
    கர்ணன்...நல்ல அலசல்...மேலும் அரிய தகவல்..வாழ்த்துகள்

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  10. ஹேமா said...
    நடிகர் திலகம் போலவே அசத்தலான விமர்சனம்.அலுக்காத ஒருபடம்.மீட்டித் தருகிறார்கள்.நன்றி !

    ஹேமா ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு ! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  11. JZ said...
    நல்ல பதிவு அண்ணா! சிவாஜியின் நடிப்புத்திறமையை நானும் பல படங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்... "கர்ணன்" படம் முன்பு டி.வியில் போட்டபோது துரதிருஷ்டவசமாக பாதிதான் பார்க்க முடிந்தது. இப்போது முழுசாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

    தம்பி , இன்னுமா பார்க்கவில்லை ! உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  12. ஜோ/Joe said...
    The one and only Nadigar Thilagam

    Yes ... You are right ... Globally one and only Acting maestro ... Thanks

    ReplyDelete
  13. சிறப்பான பதிவு சார் ! பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  14. திண்டுக்கல் தனபாலன் said...
    சிறப்பான பதிவு சார் ! பகிர்வுக்கு நன்றி !

    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete
  15. கர்ணன் என்ற மகாபாரதத்தின் ஒரு நாயகனை சிவாஜி கண் முன் கொண்டு வந்துள்ளார்..குருஷேத்திரப்போரில் கெளரவர்கள் தோற்று வீரமரணம் அடைந்து சொர்க்கத்திற்குப்போகிறார்கள்..ஆனால் தர்மவான் கர்ணன் மட்டும் நரகம் போகிறான்...தர்மவான்கள் என்ற பாண்டவர்களோ யுதிஷ்டிரன் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகம் போகிறார்கள்..ஏன்...பாரதப்போரில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக கடவுள் கிருஷ்ணனின் ஆலோசனையின்படி எட்டு முறை போர் நெறிகளை மீறுகிறார்கள்..ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் துரியோதணன் தரப்பில் இரண்டுமுறை மட்டுமே அப்பனும், மகனும்(துரோணரும், அசுவத்தாமனும்)போர் நெறிகளை மீறுகிறார்கள்..கர்ணன் படம் மூலம் மகாபாரதம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு மீண்டும் வந்திருக்கிறது, நான் உட்பட...இத்வே கர்ணனின் வெற்றியாகும்..

    ஆ.ஈசுவரன்/ திருப்பூர்.
    .

    ReplyDelete
  16. ESWARAN.A said...
    கர்ணன் என்ற மகாபாரதத்தின் ஒரு நாயகனை சிவாஜி கண் முன் கொண்டு வந்துள்ளார்..குருஷேத்திரப்போரில் கெளரவர்கள் தோற்று வீரமரணம் அடைந்து சொர்க்கத்திற்குப்போகிறார்கள்..ஆனால் தர்மவான் கர்ணன் மட்டும் நரகம் போகிறான்...தர்மவான்கள் என்ற பாண்டவர்களோ யுதிஷ்டிரன் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகம் போகிறார்கள்..ஏன்...பாரதப்போரில் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக கடவுள் கிருஷ்ணனின் ஆலோசனையின்படி எட்டு முறை போர் நெறிகளை மீறுகிறார்கள்..ஆனால் கெட்டவர்களாக சித்தரிக்கப்படும் துரியோதணன் தரப்பில் இரண்டுமுறை மட்டுமே அப்பனும், மகனும்(துரோணரும், அசுவத்தாமனும்)போர் நெறிகளை மீறுகிறார்கள்..கர்ணன் படம் மூலம் மகாபாரதம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு மீண்டும் வந்திருக்கிறது, நான் உட்பட...இத்வே கர்ணனின் வெற்றியாகும்..

    ஆ.ஈசுவரன்/ திருப்பூர்.


    உங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...!

    ReplyDelete