29 April 2012

லீலை - ஏமாற்றவில்லை ...


கர பின்ணனியில் ஒரு ஆள் மாறாட்ட காதல் கதையை அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ அழகாக சொல்ல முற்பட்டிருக்கும் படம் " லீலை " ... சில வருடங்கள் கிடப்பில் இருந்து விட்டு தாமதமாக வெளி வந்திருந்தாலும் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கும் படம் ... 

கார்த்திக் ( ஷிவ் பண்டிட் ) கல்லூரி காலத்தில் ஈசி கோயிங் கய் ... கார்த்திக்கும் , அவன் காதலித்து கைவிடும் இரண்டு பெண்களின் ரூம் மேட் கருணை மலரும் ( மானசி பரேக் ) ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமலேயே போனில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் ... 

இரண்டு வருடங்கள் கழித்து இருவரும் எச்.சி.எல் லில் வேறு வேறு தளங்களில் வேலை பார்க்கும் போது எதிர்பாரா விதமாக மறுபடியும் அதே போல போனில் சண்டை வருகிறது ...பின் கருணை மலரை நேரில் பார்த்தவுடன் காதல் வயப்படும் கார்த்திக் தன்னை சுந்தர் என் அறிமுகம் செய்து கொண்டு காதல் லீலையை தொடர்கிறான் ... இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா என்பதை சற்றே நீளமாக இருந்தாலும் குழப்பாமல் சொல்லியிருக்கிறார்கள் ... 


ஷிவ் பண்டிட் ஐ.டி யில் வேலை பார்க்கும் இளைஞராக எளிதில் பொருந்துகிறார் ... இயல்பான நடிப்பு அவருடைய ப்ளஸ்...ஆனால் அவர் நடை மட்டும் ஏனோ மலச்சிக்கல் வந்தவர் போல இருக்கிறது ... 

மானசி பார்த்தவுடன் காதல் வயப்படும் அளவிற்கு அழகில்லை என்றாலும் சிரிப்பாலும் , நடிப்பாலும் கவர்கிறார் ... ஷிவ் பண்டிட் போல முகத்தை உம்மென்று வைத்துக்கொள்ளாமல் முக பாவங்களை காட்டி அசத்துவது இவருடைய ப்ளஸ் .ஆனால் பெரிய ஹீரோயினாக வளம் வருவதற்க்குரிய தோற்றம் இவரிடம் இல்லை ... 

கார்த்திக்கின் தோழி சுஜாவாக நடித்திருக்கும் சுஹாசினி ராஜ் கவனிக்க வைக்கிறார் ... சந்தானத்தின் தனி காமெடி ட்ராக் படத்திற்கு பெரிதாய் உதவவில்லை ... படத்தோடு இணைந்து சந்தானத்தையும் பயணம் செய்ய விட்டிருந்தால் ரசித்திருக்கலாம் ...சதீஸ் சக்ரவர்த்தி இசையில் " காதல் ஒரு வரம் " , " ஒரு துளி " பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன ... பின்னணி இசையும் ஒ.கே ... படத்திற்கு தேவையான அர்பன் லுக்கை வேல்ராஜின் ஒளிப்பதிவு கொடுக்கிறது ... 

          
சிம்பிளான ஒரு காதல் கதையை ஸ்டைலாக சொல்லியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம் ... லீட் ஆக்டர்களின் நடிப்பு , பாடல்கள் , ஷிவ் , மானசி இருவரின் கதாபாத்திரங்களையும் சில ஆரம்ப காட்சிகளிலேயே க்யுட்டாக விளக்கிய விதம் , பொறுமையாக அதே சமயம் தெளிவாக பதிய வைக்கப்படும் இருவருக்குமுண்டான காதல் இவையெல்லாம் லீலையை ரசிக்க வைக்கின்றன ... 

எல்லா சென்டர்களுக்கும் பொருந்தாத கதை பின்னணி , புதுமுகங்களை மையப்படுத்தியே படம் நகர்ந்து ஒரு விதமான சலிப்பை தருவது , சுவாரசியமான காட்சிகள் அதிகம் இல்லாமல் ஒரே லொக்கேஷன்களுக்குள் கதை சுற்றி வருவது இவையெல்லாம் லீலையில் நம்மை லயிக்க விடாமல் தடுக்கின்றன ... பெரிய எதிர்பார்ப்பு இல்லாததாலோ என்னவோ லீலை ஏமாற்றவில்லை ...

ஸ்கோர் கார்ட் : 40 

18 April 2012

பழையன புகுதலும் - பார்க்கத் துடிக்கும் படங்கள் ...



ந்த வருடம் வெளியான படங்களில் " கர்ணன் " சிறிய முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டியிருப்பது திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பதோடு , கர்ணன் போல ஏற்கனவே பெரிய வெற்றியடைந்த படங்களை மீண்டும் மறு வெளியீடு செய்வதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபடவும் வைத்திருக்கிறது ... இது போன்று எல்லா படங்களையும் மறு வெளியீடு செய்வார்களா என்று தெரியவில்லை , ஆனால் ஒரு ரசிகனாக நான் திரையில் பார்க்க விரும்பும் எவர் கிரீன் படங்களின் பட்டியல் இதோ :


சந்திரலேகா

எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு , இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு $ 600000 /. பட்ஜெட்டில் அந்த காலகட்டத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசான முதல் தமிழ் படம் " சந்திரலேகா " .எம்.கே.ராதா , டி.ஆர்.ராஜகுமாரி , ரஞ்சன் , என்.எஸ்,கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் என்றே சொல்லலாம்



வீர பாண்டிய கட்டபொம்மன்

பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் ஜெமினி கணேசன் , பத்மினி உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து  1959 ஆம் ஆண்டு வெளியான " வீர பாண்டிய கட்டபொம்மன் " வசூலில் சக்கை போடு போட்டதுடன் நடிகர் திலகத்திற்கு ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது ... ஆக்ஸ் துறையுடன் சிம்ம குரலில் சிவாஜி பேசிய வசனங்களை பெரிய திரையில் பார்ப்பது போல நினைத்து பார்த்தாலே உடல் புல்லரிக்கிறது ...

திருவிளையாடல்

சிவாஜி - சாவித்திரி ஜோடியில் வெளி வந்த மற்றுமொரு வெற்றி படம்
" திருவிளையாடல் " ... ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான படத்தில் எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் இருந்தாலும் என்றுமே நினைவில் நீங்காமல் இருப்பது சிவபெருமானாக நடித்த சிவாஜிக்கும் , தருமியாக நடித்த நாகேசுக்கும் இடையேயான வசனங்களும் , பால முரளி கிருஷ்ணா குரலில் " ஒரு நாள் போதுமா " பாடலும் ...


ஆயிரத்தில் ஒருவன்

சிறு வயதிலிருந்தே நான் சிவாஜி ரசிகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரை பார்த்து முற்றிலும் பிரமித்த படம் " ஆயிரத்தில் ஒருவன் " ...1965  இல் சிவாஜிக்கு ஒரு திருவிளையாடல் என்றால் எம்.ஜி.ஆருக்கு " ஆயிரத்தில் ஒருவன் " ... எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , நம்பியார் , நாகேஷ் போன்றவர்களின் நடிப்பிற்காகவும் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வாலி எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்களுக்காகவும் எத்தனை  முறை பார்த்தாலும் சலிக்காத படம் ...


 
எங்க வீட்டு பிள்ளை

டபுள் ஆக்டிங்கில் ஆள் மாறாட்டத்தை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அவை எவையும் " எங்க வீட்டு பிள்ளை " யை மிஞ்ச முடியாது. வாலியின் வரிகளில் " நான் ஆணையிட்டால் " பாடல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக போவதை மக்களுக்கு முன் கூட்டியே உணர்த்தியது ...

காதலிக்க நேரமில்லை

பெரிய ஹீரோக்கள் படம் மட்டும் தான் மனதில் நிற்க வேண்டுமா ? நிச்சயம் இல்லை என்று " காதலிக்க நேரமில்லை " படம் பார்த்த அனைவரும் சொல்வார்கள் ... அறிமுக ஹீரோ ரவிச்சந்திரன் , காஞ்சனா , முத்துராமன் , நாகேஷ் இவர்கள் கூட்டணியுடன் , விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும், ஸ்ரீதரின் இயக்கமும் யாரமையுமே படம் பார்க்க நேரமில்லை என்று சொல்ல வைக்காது ... நாகேஷ் , பாலையாவிடம் சொல்லும் பேய் கதையை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும் ...



அதே கண்கள்
 
ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த ரவிச்சந்திரனை ஆக்சன் ஹீரோவாகவும் ஆக்கிய அருமையான த்ரில்லர் படம் " அதே கண்கள் " , த்ரில்லர் படமாக இருந்தாலும் நாகேஷ் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம் ... 

16 வயதினிலே


ரஜினி , கமல்
இருவரும் இணைந்து நடித்த எத்தனையோ படங்களுள் அவர்களின் நடிப்புக்காக மட்டுமின்றி , வெறும் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளி உலகுக்கு எடுத்து வந்த ட்ரென்ட் செட்டர் பாரதிராஜாவின் இயக்கத்திற்காகவும் இன்றளவும் பேசப்படும் படம் " 16  வயதினிலே " ... இவை தவிர மயிலாக ஸ்ரீதேவியின் நடிப்பு , கவுண்ட மணியின் அறிமுகம் , இசைஞானியின் இசை இவையெல்லாம் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ...


நாயகன்

தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை உடைத்ததில் பாரதிராஜா ஒரு ட்ரென்ட் செட்டர் என்றால் அதை " நாயகன் " படத்தின் மூலம் தொழில் நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற விதத்தில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட் செட்டர் ... கமல் , தோட்டா தரணி , பி.சி.ஸ்ரீராம் இவர்களுக்கெல்லாம் இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்ததில் சந்தோஷம் என்றாலும் இசைஞானிக்கு கிடைக்காமல் போனது காலத்திற்கும் மனதில் நிற்கும் வருத்தம் ... 




பாட்ஷா

எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் " ரஜினிகாந்த் " ... அவரை மாஸ் ஹீரோவாக முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் " பாட்ஷா " தான் மாஸ் ஹீரோயிசத்தின் உச்சக்கட்டம் ... " நான் ஒரு தடவ சொன்னா " என்ற பாலகுமாரனின் வசனத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி கோடி தடவை கூட கேட்கலாம் ... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் " பாட்ஷா " ...


13 April 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஓ.கே ...


        
சினிமா எடுப்பவர்களில் இரண்டு வகை உண்டு ... ஒவ்வொரு படத்திலும் புதிதாக எதையாவது செய்வது அல்லது செய்ய முனைவது , பெரிதாக எதையும் பற்றி கவலைப்படாமல் தனக்கு எது சரியாக வருமோ ரிஸ்க் எடுக்காமல் அதில் மட்டுமே பயணிப்பது ... இதில் இரண்டாவது வகையான இயக்குனர் ராஜேஷ் தன் முதல் இரண்டு படங்களை போலவே இப்படத்திலும் காமெடி குதிரையில் சந்தானத்தின் உதவியுடன் போரடிக்காமல் பயணம் செய்திருக்கிறார் ...

கதையை பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் சொல்கிறேன் ... சத்யம் தியேட்டரில் வேலை பார்க்கும் சரவணன் ( உதயநிதி ஸ்டாலின் ) சத்யம் தியேட்டர் ஓனர் பையன் போல டிப் டாப் ட்ரெஸ்சுடன் தன் நண்பன் பார்த்தாவுடன் ( சந்தானம் ) வெட்டியாக ஊர் சுற்றுகிறார் ... ஒரு நாள் ட்ராபிக் சிக்னலில் மீராவை ( ஹன்சிகா ) சந்தித்தவுடன் எல்லா ஹீரோக்களும் என்ன செய்வார்களோ அதையே அவர் டெபுடி கமிஷனரின் மகள் என்று தெரிந்தும் செய்கிறார் ... கடைசியில் காதலியின் கையை பிடித்தாரா என்பதை இயக்குனர் தன் பாணியில் சொல்லியிருக்கிறார் ...

                                     
ஆரம்ப காட்சிகளில் ஏனோ தானோ என்று இருந்தாலும் போக போக பக்கத்து வீட்டு பையனை போல பரிச்சியம் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின் ... க்ளோஸ் அப்பில் நடிப்பிற்கு புதுசு என்று தெரிந்தாலும் அலட்டி கொள்ளாத நடிப்பால் அட போட வைக்கிறார் ... குறிப்பாக ஹன்சிகாவிற்கு பார்த்த மாப்பிள்ளை அவரை மூக்கை உடைத்தவுடன் உதயநிதி ரியாக்சனுடன் ஒரு ஆட்டத்தை போட்டு க்ளாப்சை அள்ளுகிறார்...டான்ஸ் மாஸ்டர் இவரை அதிகம் சிரமப்படுத்தக் கூடாது என்று நினைத்தாரோ என்னவோ எல்லா பாடல்களுக்கும் ரொம்பவே சாப்ட் மூவ்மெண்ட்ஸ் கொடுத்து பாக்யராஜ் போல உதயநிதியை உடற்பயிற்சி செய்ய வைத்துவிட்டார் ...

                                      
படத்தில் ஹன்சிகாவை சின்னத்தம்பி குஷ்பூ போல இருப்பதாக ஹீரோ சொல்கிறார் ஆனால் அவரோ இப்போதிருக்கும் குஷ்பூ போல ஓவர் புஷ்டியாகவே இருக்கிறார் ... சில ஹீரோயின்களை பார்த்தால் காதல் வரும் , சில ஹீரோயின்களை பார்த்தால் காமம் வரும் , ஏனோ ஹன்சிகாவை பார்த்தால் மட்டும் எதுவும் வரமாட்டேன் என்கிறது ...நடிப்பை பொறுத்தவரையில் ஓ.கே ...;

சந்தானத்தை பற்றி என்ன சொல்ல ? கவுண்டமணி நடிக்காத குறையை தீர்த்து வைக்கிறார் ...இந்த படத்தில் கலாய்ப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தன் மேனரிசம் மூலமும் நன்றாகவே சிரிக்க வைக்கிறார் ... சரண்யா தனக்கு ஏன் தேசிய விருது கொடுத்தார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் ... இவருக்கும் , அழகம் பெருமாளுக்கும் இடையேயான ட்ராக் ஒரு அழகான குட்டி கதை ...


யுவனை விட்டு விட்டு ராஜேஷ் ஹாரிசுடன் சேர்ந்ததில் பாதிப்பில்லை ... நா.முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன .. குறிப்பாக " காதல் ஒரு " , " வேணாம் மச்சான் " பாடல்கள் அருமை... சினேகா , ஆர்யா சில சீன்களே வந்தாலும் நல்ல ரெஸ்பான்ஸ் ... 

படம் போவது தெரியாமல் சிரித்தாலும் இயக்குனரின் முந்தைய இரண்டு படங்களிலும் பார்த்த அதே கதை , யூகிக்க முடிகின்ற அடுத்தடுத்த சீன்கள் இவையெல்லாம் இன்னும் எத்தனை படம் தான் இப்படியே எடுப்பாரோ என்று கேட்க வைக்கின்றன ... காமடியான பல சீன்களை எடுத்து அதை கதையாக சொல்லாமல் கதையுடன் கூடிய காமெடி படத்தை எடுத்தால் நிச்சயம் காதலிக்க நேரமில்லை , மைக்கேல் மதன காமராஜன் , உள்ளத்தை அள்ளித்தா போல என்றுமே மனதில் நிற்கும் படங்களை இயக்குனர் ராஜேஷாலும் தர முடியும் ... இயக்குனர் முயற்சி செய்வாரா என்பதை அடுத்த படத்தில் பார்க்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 

8 April 2012

யாழ் விருது 2012 - தமிழ் குறும்பட போட்டி ...



குறும்படங்கள் மாற்று சினிமாவுக்கான முயற்சியாகவும் , திரைத்துறையில் மக்கள் பங்கேற்பை கொண்டு வரும் முயற்சியாகவும் இருப்பதால் அதனை ஊக்குவிக்கும் பொருட்டு பிரபல திரைப்பட இயக்குனர் மு,களஞ்சியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தமிழர் நலம் பண்பாட்டியக்கம் ஆண்டு தோறும் மே மாதத்தில் " யாழ் விருது " குறும்பட போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது ... அதன்படி இந்த ஆண்டு தன் முதல் குறும்பட போட்டியை நடத்தவுள்ளது ...

போட்டியில் வெற்றி பெறும் குறும்படங்களுக்கு முதல் பரிசு ரூ.20000 /. , இரண்டாம் பரிசு ரூ.10000 /., மூன்றாம் பரிசு ரூ. 5000 /. , மற்றும் ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 /.. வீதம் ஐந்து குறும்படங்களுக்கும் தரப்படும் எனவும் அறிவித்துள்ளது ...

எடிட்டர் லெனின் தலைமையில் இயக்குனர் ஜனனாதன் உட்பட பிரபல இயக்குனர்கள் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்வார்கள் எனவும் , போட்டிகள் முன்னணி இயக்குனர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன்னிலையில் நடைபெறும் எனவும் தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் செ.பி.முகிலன் தெரிவித்தார் ... தமிழர் நலம் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அக்னி ராஜ் (எ) தமிழரன் உடனிருந்தார் ...திரைப்படநடிகை அஞ்சலி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கு பெறப்போவதும் மற்றொரு சிறப்பம்சம்...

தமிழ் குறும்பட குறுவட்டையையும் ( டி.வி.டி ) , " தமிழர் நலம் கலை பண்பாட்டியக்கம் " என்ற பெயருக்கு ரூ.250 / க்கான வரைவோலையையும்
( டி.டி ) போட்டியில் பங்கு பெறுவதற்கு கடைசி நாளான ஏப்ரல் 20 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி:

தலைவர் , தமிழர் நலம் பேரியக்கம் ,
எண் : 5 ,முதல் தெரு , இரண்டாவது நிழற்சாலை ,
அசோக் நகர் , சென்னை - 600083 .
அலை பேசி : 73588 38594

விதிமுறை பற்றிய மற்ற தவல்களுக்கு கீழ்கண்டவற்றை பார்க்கவும்

www.thamilarnalam.com / email : thamilarnalam@gmail.com 

2 April 2012

நல்லதோர் வீணை ... ( நேசம் + யுடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )




குறும்படம் இயக்க வேண்டுமென்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதில் இருந்தும் அதற்கான நேரமும் , சந்தர்ப்பமும் அமையவில்லை ... குறிப்பாக கலைஞர் தொலைகாட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை ஆரம்பித்த வருடமே கதையை முடிவு செய்தும் அதை எடுப்பதற்கான சூழல் இல்லை ...

வழக்கம் போல சினிமா விமர்சனங்களில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த பொழுது , குறும்படங்களையும் விமர்சனம் செய்யலாமே என மூன்றாம் கோணம் ஷஹி கொடுத்த ஆலோசனைக்கேற்ப " குறும்பட கார்னர் " பகுதியில் சில குறும்படங்களை விமர்சனம் செய்து வந்தேன் ... விமர்சனங்களுக்காக குறும்படங்களை பார்க்க தொடங்கியதில் மீண்டும் என் குறும்பட ஆசை துளிர்க்க தொடங்கியது ...

இதற்கிடையில் நேசம் + யுடான்ஸ் அமைப்பினரின் புற்றுநோய் விழிப்புணர்வு கதை , கட்டுரை , குறும்பட போட்டிகளுக்கான அறிவுப்பு வரவே நாம் எடுக்கப்போகும் முதல் குறும்படமே ஒரு நல்ல நோக்கத்திற்காக இருக்கட்டுமே என்ற எண்ணம் என்னை மேலும் உந்தியது ...

அலுவல்களும் , குறுகிய கால அவகாசமும் இடையூறுகளாக இருந்த போதிலும் நினைத்த படி இரண்டே நாட்களில் குறும்படத்தை முடிக்க முடிந்ததில் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்வதோடு எனக்கு உறுதுணையாய் இருந்த நடிகர் சேஷன்,ஒளிப்பதிவாளர் ஆனந்த் சாரி , எடிட்டர் கார்த்திக் , இசையமைப்பாளர் உதய் மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

எனது குறும்படத்தை புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக     தேர்ந்தெடுத்தமைக்கும் , சான்றிதழ் வழங்கி கெளரவித்தமைக்கும் நேசம் +  யுடான்ஸ் அமைப்பினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ...இது வரை என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து நிறை , குறைகளை சுட்டிக்காட்டி உற்சாகம் அளித்து வரும் நண்பர்களும் , அன்பர்களும் அதே ஆதரவை என் புது முயற்சிக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதோ குறும்படத்திற்கான இணைப்பை தருகிறேன் ..

Related Posts Plugin for WordPress, Blogger...