24 May 2013

2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? ...


ன்னும் ஒரு வருடத்திலோ அல்லது அதற்கு முன்னரோ 2014 ல் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது . அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக நடுத்தர , உயர் நடுத்தர வகுப்பினருக்கு இது மிக முக்கியமான தேர்தல் என்றே சொல்லலாம் . தற்போதைய நிலையில் விலைவாசி உயர்வு  , அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை  , ஊழல் இவையனைத்தும் ஏழை , பணக்காரர்களை விட நடுத்தர வர்க்கத்தையே அதிகம் பாதிக்கின்றன .  ஏனெனில் ஏழைகள் இலவசத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்  , பணக்காரர்கள் எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை .

2004 இல் இருந்து தொடர்ந்து பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸின் மேல் மக்கள் அதிக அதிருப்தியோடு இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை . 2009 இல் நாட்டின் ஸ்திரத்தன்மை போய் தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிருப்தி இருந்தும் அதையும் மீறி ஒட்டு போட்டு காங்கிரஸை மக்கள் ஆட்சி பீடத்தில் ஏற்றினார்கள் . இந்த முறையும் அதே போல ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென்பதில் அனைவரும் கவனமாக இருப்பார்கள் என நம்புவோமாக ! 2 ஜி , காமன்வெல்த் தொடங்கி நிலக்கரி , ரயில்வே என்று எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது . அதோடில்லாமல் ஊழலை தடுக்க வேண்டிய அரசே சி.பி.ஐ யை கையில் போட்டுக் கொண்டு குற்றப்பத்திரிக்கைய மாற்றியமைத்ததையும்  அதற்காக உச்சநீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்  கொண்டதையும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டோம் . ஊழல் இந்தியாவில் பல வருடங்களாக புரையோடியிருந்தாலும் இந்த அளவிற்கு வெளிப்படையாக ஒரு அரசு செயல்படுவதாக உச்சநீதி மன்றமே  கண்டித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ...

பொருளாதாரம் , ஊழல் இரண்டையும் தாண்டி கவலையளிக்கும் மற்றொரு விஷயம்  சீனா , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் நாட்டிற்கு  ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் . ஏற்கனவே 1962 போரில் நம் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்றி விட்ட சீனா இப்பொழுது நம் நாட்டிற்க்குள் 19 கி.மீ புகுந்து தங்களின் டெண்டை போட்டிருக்கிறார்கள் . ஒரு மாத போராட்டத்திற்கு பின் அவர்களை வெளியேற்றினாலும் அதற்கு பதிலாக நம் படை வீரர்களும் பின் வாங்கியிருப்பது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குறியாக்குகிறது  . தனக்கும் அஜ்மலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பகல் வேஷம் போட்ட பாகிஸ்தான் அப்சல் குரு தூக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து நம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாகவே தலையிடுவதும் , சிறைக்குள் வைத்து நம் இந்திய  கைதி சர்பஜித் சிங்கை கொடூரமான முறையில் கொன்றிருப்பதும் நம் நாட்டின்மேல் அதற்கிருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டதென்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றன . இவை தவிர இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம் மாணவர்களை கூட ரோட்டிற்கு வரவைத்து விட்டது .  இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை ஒட்டு போட வைப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது . இப்படி உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுடனும் ஒரு ஆரோக்கியமான உறவு இல்லாமல் அச்சத்துடனேயே நமது அரசாங்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது ...

இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸிற்கு எதிராக இருக்கும் ஒரே மாற்று பி.ஜே.பி மட்டுமே . தேர்தலை ஒட்டி உருவாகும் மூன்றாவது அணி என்றுமே மழையில்  முளைக்கும் காளான் தான் . இருப்பினும் தேசிய அளவில் காங்கிரஸிற்கு  எதிரான வாக்குகளை பி.ஜே,பி ஒட்டுமொத்தமாக திரட்ட தவறியது அந்தந்த மாநில கட்சிகளை தேசிய அளவில் அதிகமாக முக்கியத்துவம் அடைய வைத்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது . அர்விந்த் கேஜ்ரால் , அன்னா ஹசாரே போன்றோரின் வருகை படித்த நடுத்தர மக்களிடையே பி.ஜே,பி யின் செல்வாக்கை சரித்திருப்பதும் உண்மை . உட்கட்சி பூசல் , மோடி யை பிரதமாராக அறிவிப்பதில் உள்ள சிக்கல் , கர்நாடகாவில் அடைந்த படு தோல்வி போன்றவைகளும் பி.ஜே.பி க்கு பெரும் பினடைவை ஏற்ப்படுத்தியிருக்கின்றன . இவை எல்லாவற்றையும் விட காங்கிரஸ் என்ன தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மக்கள் பி.ஜே.பி சிறிய தவறு செய்தாலும் மன்னிக்க முடியாத மனப்பான்மையுடன் இருப்பதும் , ஊடகங்களிடையே தனது உறவை பி.ஜே.பி மேம்படுத்திக் கொள்ளாததும் அந்த கட்சிக்கு சறுக்கலாக இருக்கும் மற்ற அம்சங்கள் . இப்படி சில குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரசுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது பி.ஜே.பி சிறந்த தேர்வாகவே படுகிறது . இத்தனை வருட சுதந்திர இந்தியாவில் காங்கிரஸு க்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு வேறெந்த கட்சிக்கும் கொடுக்கப்படவில்லை . எனவே பி.ஜே.பி க்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறிருப்பதாக தெரியவில்லை ...

பி.ஜே.பி க்கு எதிராக முக்கியமாக வைக்கபடும் மதவாத குற்றச்சாட்டு ஒரு சந்தர்ப்பவாத குற்றச்சாட்டே . மதவாதம் என்று சொல்லப்படும் பி.ஜே.பி ஓட்டுக்காக எந்தவொரு மதத்துக்கும்  சலுகைகள் வழங்கி உதவிகள் செய்யவில்லை . ஓட்டுக்காக மைனாரிட்டிகளை  தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல் தனித்தே வைத்திருக்கும் பல கட்சிகளின் கூட்டு சதியே இந்த மதவாத பிரச்சாரம்  . உலக மக்கள் தொகையில்  மைனாரிட்டியாக இருக்கும் ஹிந்துக்களை சாதி ரீதியாக பிரித்து வைப்பதே இங்குள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய நோக்கம் . எங்கே அவர்கள் ஒன்றுபட்டு விடுவார்களோ என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த போலி மதவாத பிரச்சாரம் . ஒரு கட்சி  எந்தவொரு குறிப்பிட்ட மதத்தை ஆதரித்தாலோ அல்லது அதன் சார்பாக நடந்து கொண்டாலோ அதை மதவாத கட்சி என்று சொல்லலாம் . அந்த அடிப்படையில்  ஹிந்துக்கள் சார்பாக நடப்பதாக சொல்லப்படும் பி.ஜே.பி மதவாத கட்சி என்றால் மற்ற மதங்களை தலையில்  தூக்கிப் பிடிக்கும் மற்ற கட்சிகள் மட்டும் மிதவாத கட்சிகளா ? இதை யோசித்தாலே அரசியல் கட்சிகள் போடும் பகல் வேடம் தெளிவாகும் ...

பாபர் மசூதி இடிப்பும் , கோத்ரா கலவரமும் பி.ஜே.பி க்கு எதிராக வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள். பாபர் மசூதி பிரச்சனைக்கு ஏற்கனவே உச்ச நீதி மன்றம் சுமூகமான தீர்ப்பை வழங்கிவிட்டது . கோத்ராவை பொறுத்தவரை எதி ர்கட்சிகள் எவ்வளவோ முயன்றும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை . சமீபத்தில் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது . எந்தவொரு கட்சியின் வளர்ச்சிக்கு பின்னாலும் ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது குற்றச்சாட்டுகள் கண்டிப்பாக இருக்கும் என்பதே வரலாறு .  இதற்கு பி.ஜே.பி மட்டும் விதிவிலக்கல்ல . இந்த குற்றச்சாட்டுக்கள் மட்டுமே அந்த கட்சிக்கான ஓட்டுக்களை சிதைத்து விட முடியாது . ஏனெனில் தேசிய அளவில் மூன்று  விதமான ஒட்டு வங்கிகள் உள்ளன . அதில் முதலாவது மற்றும் முக்கியமானது ஏழைகள் ஒட்டு , இரண்டாவது மைனாரிட்டிகள் ஒட்டு , மூன்றாவது படித்த நடுத்தர வர்க்கத்தினர் ஒட்டு ...


அந்தந்த ஏரியாவில் வினியோகிக்கப்படும் பணமும் , இலவசங்களும் முதலாவது ஒட்டு வங்கியை கவனித்துக் கொள்கின்றன . மத்திய அரசு
 " உங்கள் பணம் உங்கள் கையில் " திட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருப்பதற்கு காரணத்தை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை . இரண்டாவதாக இருக்கும் மைனாரிட் ஓட்டை சிறிய விழுக்காடேனும் பி.ஜே.பி பக்கம் போக விடாமல் வைத்திருப்பதே மற்ற கட்சிகளின் முக்கியமன நோக்கமாக இருக்கிறது . ஹிந்துக்களை போல அல்லாமல் மைனாரிடிகள் ஒட்டு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பது இந்த வகை ஒட்டு வங்கியை பலப்படுத்துகிறது . மூன்றாவதாக இருக்கும் நடுத்தர ஒட்டு வங்கி அந்தந்த சூழ்நிழைக்கு ஏற்றவாறு தங்களின் நிலையை வெளிப்படுத்திக் கொள்கிறது . காங்கிரசின் மேல்  இருந்த நம்பிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு  வெகுவாக சரிந்திருப்பது பி.ஜே.பி க்கு சாதமாக இருந்தாலும் முன்னமே சொன்ன மாதிரி அவை முழு மையாக பி.ஜ.பி க்கு சென்றடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . வரப்போகிற தேர்தலில் இந்த மூன்றாவது வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிக்கப் போவது உண்மை . முன் போல இல்லாமல் ஒட்டு போடும் வழக்கம் அதிகமாகி வருவதும்  அதற்கு மற்றொரு முக்கிய காரணம் ...

இரண்டாவது வகை ஒட்டு வங்கியில் தனக்கு ஏற்படும் இழப்பை பி.ஜே.பி இதில் சமன் செய்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன . அதே நேரம் இந்த வகை ஒட்டு மொத்தமாக பி.ஜே,பி பக்கம் சாயும் போது தான் பலன் அதிகமாக இருக்கும் . ஆனால் இந்த வகை மக்கள் சென்ற தேர்தலை போல நாம் ஓட்டுப் போட்டாலும் தனித்த மெஜாரிட்டியில் பி.ஜே.பி வராது என்றோ அல்லது மூன்றாவது அணி அதிக இடங்களை பெற்று கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி வந்து விடும் என்றோ பயத்தில் திரும்பவும் காங்கிரஸ் பக்கமே சாய்ந்து விடுகிற அபாயமும் உள்ளது . இதை சரி கட்டுவதற்கு பி.ஜே.பி க்கு உள்ள ஒரே பிரம்மாஸ்திரம் நரேந்திர மோடி . சமீபத்தில் பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் பேஸ் புக்கில் நடத்திய கருத்துக்கணிப்பில் 84 சவிகிதம் பேர் நரேந்திர மோடி பிரதமராக வர  விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்  . மூன்றாவது வகை ஒட்டு வங்கியில் அதிகம் இருப்பவர்கள் இவர்களே . இதே கருத்துக்கணிப்பில் ராகுல் காந்திக்கு 13 சதவீதம்  பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது . மோடியை  முன்னிருத்தினால் மைனாரிட்டிகள் புறக்கணிப்பார்கள் என்ற நினைப்பில் வரை தவிர்த்து அத்வானியையோ அல்லது வேறு யாரையோ பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவித்தாலும் அந்த ஓட்டு வங்கியில் பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுவிடப் போவதில்லை .  மாற்றாக மோடியை அறிவிப்பதன் மூலம் படித்த நடுத்தர மைனாரிட்டிகளிடையே ஒட்டு பெறுவதற்கு பி.ஜே.பி க்கு வாய்ப்பு உள்ளது . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன ...

மோடிக்கு ஏற்பட்டிருக்கும் பாப்புலாரிட்டி  ஒரே நாளில் ஏற்பட்டதில்லை  எனபது கடந்த 12 ஆண்டு கால குஜராத் மாநில வளர்சியயை கூர்ந்து பார்த்தாலே புரிய வரும் . அவரின் மேல் மதசார்பு சாயத்தை எவ்வளவோ காங்கிரஸ் பூசிப்பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை . முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் அவருக்கு ஆதரவாக அதிக ஓட்டுக்கள்  விழுந்திருப்பது அவர்  மேல் மைனரட்டிகள்  வைத்திருக்கும் நம்பிக்கையை கா ட்டுகிறது . 2002 இல் நடந்த கலவரத்தை தாண்டி அவர்கள் முன்னேறி வந்திருப்பது தெரிகிறது . ஏனெனில் குஜராத் என்றுமே அமைதி பூங்காவாக  இருந்ததில்லை . 2002 க்கு முன்  அடிக்கடி அங்கே இந்து - முஸ்லிம் கலவரம் நடப்பது வாடிக்கை . ஆனால் 2002 கலவரத்திற்கு பின் கடந்த 11 ஆண்டுகளில் மத வேற்றுமைகளை  கடந்து அனைவரும் ஒற்றுமையாக  முன்னேறி வருகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை . குஜராத்தின் உண்மை நிலைமை அங்கிருப்பவ்ர்களுக்கே தெரியும் . இந்திரா காந்தி  படு கொலை செய்யப்பட பிறகு 1500 சீக்கியர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள் . ஆனால் இன்று காங்கிரஸ் தலைமையிலான அரசில் பிரதமராக இருப்பவர் மன்மோகன் சிங் என்பதே வரலாறு ...

ஏதோ மோடியே  முன்னிருந்து கலவரத்தை நடத்தியது போல போலியாக சித்தரிக்கிறார்கள் . அது சம்பந்தப்பட வழக்குகளிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . மோடியை முன்னிருத்தினால்  கூட்டணியிலிருந்து விலகி விடுவோமென பீஹார் முதல்வர் நிதிஸ் குமார் சொல்லியிருக்கிறார் . அப்படி நடக்கும் பட்சத்தில் பீகாரில்  15 - 20 இடங்கள் பி.ஜே.பி க்கு கிடைக்காமல் போகலாம் .
ஆனால் இந்தியா முழவதும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்தால்  பீகாரின் இழப்பு பி.ஜே.பி க்கு பெரிதாக இருக்காது . எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை அடையப் போவதிலலை . 160 -180 இடங்களை  தனித்து கைப்பற்றினாலே மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவை  வெளியிலி ருந்தோ உள்ளிருந்தோ கொடுத்து விடுவார்கள் என்பதே இன்றைய இந்திய அரசியலின் நிலை . தென் இந்தியாவில்  வளர்ச்சியடையாததும் , கர்நாடகாவில் இருந்த ஒரே ஆட்சியை ஊழலாலும்  , உட்கட்சி பூசலாலும் பறிகொடுத்ததும்  , உத்திர பிரதேசத்தில் சரிந்த செல்வாக்கும் பி.ஜே,பி க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் . ஆனால் இன்று கர்நாடகாவில் பி.ஜே.பிக்கு நேர்ந்த  நிலை நாளை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கும்  ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை . ஊழல் மற்றும்  நிர்வாகத் திறன் இல்லாத அரசை  மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதே கர்நாடக மக்கள்  கற்றுத்தந்த பாடம் ...

காங்கிரஸை பொறுத்தவரை பி.ஜே.பி யை நோக்கி மற்ற கட்சிகள் செல்லாததும் , பி.ஜே.பி போலல்லாமல் தென்னிந்தியாவில் தமிழகம் தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும்  ஆட்சியமைத்திருப்பதும்  அதற்கு பெரிய பலம் .  அது மட்டுமல்லாமல் பண பலம் ,அரசியல் பலம் இரண்டும்  வேறெந்த கட்சிகளை விடவும் காங்கிரஸிற்கு அதிகமாகவே உள்ளன . கட்சிகளும் சரி , மக்களும்  சரி கடைசி நேரத்தில் மனது மாறி தங்களிடம் தான் வருவார்கள் என்கிற நம்பிக்கையும் காங்கிரஸிற்கு உண்டு . இரண்டு முறை பிரதமாராக இருந்து விட்டதால் இந்த முறை  மன்மோகனை தவிர்த்து ராகுல் காந்தியை பிரதம வேட்பாளராக காங்கிரஸ்  அறிவிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது . விலைவாசி உயர்வு , தீவிரவாதம் , ஊழல்  , அயல்நாடுகளின் அச்சுறுத்தல் இப்படி பல காரணங்களால்  காங்கிரஸ் மேல் மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் ராகுலின் வருகை அவற்றை மாற்றி புது உத்வேகத்தை கொடுக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் நம்பிக்கை . உ.பி , குஜராத் மாநிலங்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்பது உண்மையாக இருந்தாலும் அவரை கழித்துக் கட்டி விட முடியாது . 2004 இல் சோனியாவின் வருகை காங்கிரஸை எட்டு வருடங்களுக்கு பிறகு ஆட்சி பீடத்தில் ஏற்றியதையும் யாரும் மறுக்க முடியாது ...

வரும் நவம்பரில் ராஜஸ்தான் , டில்லி , சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2014 பொது தேர்தலுக்கு வெள்ளோட்டமாக இருக்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள் . பாராளுமன்ற தேர்தல் கமிட்டியில் மோடி இடம் பெற்றிருப்பதும் , மோடிக்கு நெருக்கமான அமித் ஷா உத்திர பிரதேசத்திற்கு பொறுப்பேற்றிருப்பதும் அவர் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவ்தற்கான வாய்ப்பை ஊர்ஜிதம் செய்கின்றன . காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை பி.ஜே.பி க்கு சாதகமான ஓட்டாக மாறினால் மட்டுமே அதன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் . அப்படி நடக்காமல் காங்கிரஸ் மற்றும் உதிரி கட்சிகள் அதிக இடங்களை பெரும் பட்சத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் அரசு அமைவதற்க்கான வாய்ப்பே உருவாகும் . சுதந்திரம் அடைந்ததில் இருந்து வாழையடி வாழையாக நேரு குடும்பத்தினரோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரோ தான் இந்தியாவை ஆண்டு வந்திருக்கிறார்கள் . எனவே 2014 தேர்தலில் ஜெயிக்கப் போவது காங்கிரஸா ? பி.ஜே,பி யா ? அல்லது மோடியா ? ராகுலா ? என்பதை விட பழமையில் ஊறிய மன்னாராட்சியா ? முன்னேற்றம் கொடுக்கும் மக்களாட்சியா ? என்பதே நம் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது ...


10 comments:

Anonymous said...

Now Very Clear U R a Naramaamisa Moodi Supporter. Correct !!!.

Yaathoramani.blogspot.com said...

விரிவான அருமையான அலசல்
ஆயினும் அன்றைய சூழலில்
சுனாமி போல ஏதாவது ஒரு பிரச்சனை வந்து
மக்களை சம நிலை தவறாமல்
இருக்கச் செய்யவேண்டும்
பார்ப்போம்

Anonymous said...

மோடி என்பவர் முதல்வர் பதவிக்கு எப்படி வந்தார் என்பதில் இருந்து பார்க்க துவங்கினால் அவரால் வர கூடிய ஆபத்து தெளிவாக விளங்கும்
ஒரு ஊராட்சி தேர்தலில் கூட நிற்காமல் ஆர் எஸ் எஸ் உயர் தலைவர்களை காக்காய் பிடித்து ,சூழ்ச்சி அரசியல் செய்து நேரடியாக பின்பக்கமாக முதல்வர் ஆனவர்.பல ரைட் ஆதரவாளர்களின் ,RIGHT களின் கனவு அது
சொந்தமாக ஜெயிக்க ஒரு தொகுதி கூட கிடைக்காமல் ,ஜெயிக்க கூடிய தொகுதியாக தேர்ந்தெடுத்த தொகுதியின் எம் எல் ஏ ஹரேன் பாண்ட்யா அதற்க்கு ஒத்து கொள்ள மறுத்ததால் அவரை பதவியில் நேரடியாக உட்கார வைத்த தலைவர்களின் வேண்டகோளை புறக்கணிக்க மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடி மிரட்டி அவர் அரசியல் வாழ்வை அழித்தவர்.அவரும் கொல்லப்பட்டது (குடும்பத்தினர் அதற்க்கு காரணம் என்று பல ஆண்டுகளாக கதறுவது யாரை பார்த்து தெரியுமா RIGHT மோடி )
நாம் ஐந்து நமக்கு இருவத்தி ஐந்து என்று இஸ்லாமியரை நக்கல் செய்து,தேர்தலை உடனே நடத்த மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியை james மைகேல் lyngdoh என்று கூட்டம் கூட்டமாக முழங்கி அவர் மதத்தின் காரணமாக எதிர்க்கிறார் என்று பழி போட்ட RIGHT தான் மோடி

ஆண் பெண் சதவீதத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை அவரின் பத்து ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டாரா

மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றி விட்டாரா

மற்ற மாநிலங்களை விட அதிக இடங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு வேலை,கல்லூரிகளில் கிடைக்குமாறு செய்துள்ளாரா

பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் அதிக அளவில் மத்திய மாநில அரசு கல்வி,வேலைவாய்ப்பில் இடம் பிடிக்க காரணமாக இருந்துள்ளாரா
குடும்ப கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் பிறப்பு விகிதத்தை விரும்பிய அளவிற்கு குறைத்து விட்டாரா
குடி தண்ணீருக்காக மக்கள் கொஞ்சம் கூட சிரமப்பட வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டாரா
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டாரா(நம்ம ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கிறாரா )
விளையாட்டு துறையில் குஜராத்திகள் அவரின் ஆட்சியில் கீழ் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா

மருத்துவ படிப்பு,செவிலியர் படிப்பு,பொறியியல் போன்றவற்றில் மாநிலத்தின் தேவை அளவிற்காவது அங்கு மாணவர்கள் படிக்கிறார்களா /இருக்கிறார்களா இல்லை பக்கத்து மாநிலங்களை நம்பி தான் அங்கு பள்ளிகள்/கல்லூரிகள்/மருத்துவமனைகள் இருக்கின்றதா

தமாதூண்டு ஏழை மாநிலம் மணிபூர்
தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி
கலை,அறிவியல்,விளையாட்டு,ராணுவம்,துணை ராணுவம்,மத்திய அரசு பணிகள்,விஞ்ஞானிகள்.ஆட்சி பணியாளர்கள் என்று எல்லாவற்றிலும் பூஜியதிர்க்கு அருகில் தான் குஜராத்திகள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்றும் ராணுவத்தில் சேர இட ஒதுக்கீடு உண்டு.அந்த இடங்கள் கூட பூர்த்தி ஆகாத மாநிலம் நம்ம குஜராத் தான்

test said...

உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/

மொட்டைபையன் said...

பொறாமை பிடித்த அடையாளம்தெரியாத ஒரு மனிதனின் முட்டாள்தனமான பதிவு

ananthu said...

Anonymous said...
Now Very Clear U R a Naramaamisa Moodi Supporter. Correct !!!.

Not as you said . am supporting the correct person as of now . Modi is need of the hour ...

ananthu said...

amani S said...
விரிவான அருமையான அலசல்
ஆயினும் அன்றைய சூழலில்
சுனாமி போல ஏதாவது ஒரு பிரச்சனை வந்து
மக்களை சம நிலை தவறாமல்
இருக்கச் செய்யவேண்டும்
பார்ப்போம்

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

To Anonymous ...

நீங்கள் வலிய முனைந்து மோடியின் மேல் குற்றம் சாட்டியிருப்பது தெரிகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தவொரு திறமையான அரசியல்வாதி மீதும் குற்றச்சாட்டுக்கள் இருந்து கொண்டுதானிருக்கும் . ஆனால் குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டியது நம் கடமை . அரசு வேலை வாய்ப்புகளை பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள் . குஜராத்திகள் எப்பொழுதுமே அடிமை வேலையை நாடாமல் சுய தொழில் செய்வதையே விரும்புபவர்கள் . ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனிலிருந்த குஜராத்தை பத்து வருடங்களில் ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் அதிக வருவாய் ஈட்ட வைத்தவர் மோடி . பெண்களின் சுய வேலைவாய்ப்புக்கு அதிக பண உதவியும் , மேம்பாட்டுப் பணிகளும் செய்து வருவதில் முன்னணியில் இருக்கிறது குஜராத் . 24 மணி நேர மின்சாரம் , குடி நீர் வசதி , அதிக அளவிலான முதலீடு , நேர்மையான நிர்வாகம் இப்படி மோடி அரசின் சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் . எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சாதாரண குடிமகனுக்கும் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவர் மோடி . பூனை கண் மூடி விட்டால் உலகம் இருட்டாகி விடாது , கண் திறந்து பார்த்தல் தான் புரியும் . இன்றைய சூழ்நிலையில் நாட்டின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நரேந்திர மோடி . உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

karthik sekar said...
உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/

உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

மொட்டைபையன் said...
பொறாமை பிடித்த அடையாளம்தெரியாத ஒரு மனிதனின் முட்டாள்தனமான பதிவு

விடுங்க பாஸ் , பாத்துக்கலாம் !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...