மீடியாக்களுக்கு , குறிப்பாக ஆங்கில சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் தீனி போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் . அப்பொழுது தான் அவர்கள் பிழைப்பு ஓடும் . 2ஜி , மோடி விவகாரம் , டெல்லி பெண் கற்பழிப்பு ( அந்த சம்பவத்தை ஒட்டி தமிழ் நாட்டில் ஒரு பள்ளி சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஒரு சிறிய சலசலப்பைக் கூட இவர்கள் காட்டவில்லை ) , ஐ.பி.எல் பெட்டிங் இப்படி பலவற்றை தொடர்ந்து இப்பொழுது அவர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது சமீபத்தில் காங்கிரசின் ஆதரவோடு டில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மியும் , அதன் முதல்வர் அர்விந்த்
கெஜ்ரிவாலும் ...
அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி யில் படித்தவர் , அரசு வேலையை உதறி விட்டு பொதுநலப் பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் , ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு அரசியலில் குதித்தவர் என பல சிறப்பம்சங்களையும் தாண்டி கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களிலேயே டில்லியில் ஆட்சியை பிடித்தவர் என்கிற ஒரு காரணத்திற்காகவே இன்று இந்தியாவையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . சினிமா , அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் இது போன்ற ஒரு சாதனையை அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது . முதல்வன் படத்தில் வருவது போல ஒரு சாமான்யன் நினைத்தாலும் இது போன்ற மாற்றங்களை கொண்டு கொண்டு வர முடியும் என்று நிரூபித்த விதத்தில் அவர் இந்திய எதிர்கால அரசியலுக்கு ஒரு நம்பிக்கை ...
இதையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில் அவரின் வெற்றியை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்த பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் , அவரின் கட்சிக்கு இந்தியா முழுவதும் பெருத்த ஆதரவு இருப்பது போலவும் சில மீடியாக்களும் , அதிலுள்ள அறிவு ஜீவிகளும்
Knee Jerk ரியாக்சன் கொடுப்பது அவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது . முதலில் ஊழலுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்தவர் எப்பொழுது காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தாரோ அப்பொழுதே அர்விந்த் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகி விட்டார் . அடுத்தது காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு கருத்தை பிரஷாந்த் பூஷன் சொல்லி வைக்க அதை தொடர்ந்து சில அமைப்பினர் உ.பி யில் உள்ள ஆம் ஆம்தி அலுவலுகத்தை சூறையாடினர் . அதனை தொடர்ந்து
" காஷ்மீர் பிரச்சனை தீர எனது உயிர் தான் தேவை என்றால் அதை தரவும் நான் தயார் " என்று அர்விந்த் அதீத உணர்ச்சியோடு பேசியதிலிருந்து சாமான்ய முகத்திரையை அவிழ்த்து சாணக்கிய அரசியல் முகமூடியை போடத் தொடங்கி விட்டார் ...
நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த டில்லி வாக்காளர்களுக்கு
காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்ததன் மூலம் ஏமாற்றம் அளித்தவர் , முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் அவசரம் அவசரமாக தேசிய அரசியலுக்கு தாவுவது அவரின் நம்பகத்தன்மையை குலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் பக்கா அரசியல்வாதியாகவே நம் கண் முன் காட்டுகிறது . ஏனெனில் டில்லி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் போதாது . அப்படியிருக்க தேசிய அரசியலில் அவர்கள் காட்டும் ஆர்வம் காங்கிரசுக்கும் , ஆம் ஆத்மிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது . அடுத்த முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அழிந்திருக்கும் நிலையில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை . மாற்றாக மோடிக்கு ஆதரவாக விழும் ஓட்டுக்களை ஓரளவுக்கேனும் சிதைப்பதற்கு நிச்சயம் அர்விந்த் அனுகூலமாக இருப்பார் ...
அர்விந்த் படித்த புத்திசாலி , தனிப்பட்ட முறையிலும் தூய்மையானவர் எனவே அவர் பிரதமர் ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம் . நிச்சயம் தவறில்லை தான் . ஆனால் முதலில் முதல்வராக அவர் தனது கடமையை திறம்பட செய்து தன்னை நிரூபிக்கட்டும் என்பதே பலரது எண்ணம் . மேலும் அர்விந்த் போலவே அதிகம் படித்தவரும் , தனிப்பட்ட முறையில் தூய்மையானவரும் ஆன
மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பது நாடறிந்த விஷயம். அதற்காக மன்மோகன் போல தான் அரவிந்தும் இருப்பார் என்று சொல்ல வரவில்லை . அதே நேரம் படிப்பும் , தனிப்பட்ட தூய்மையும் மட்டும் திறம்பட ஆட்சி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையே வலியுறுத்துகிறேன் ...
கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக
அன்னா ஹசாரே , கிரண் பேடி போன்றோருடன் இணைந்து அர்விந்த் நடத்திய போராட்டங்களே அவரை டில்லி மக்களிடையே பிரபலப்படுத்தியது . அன்னா , கிரண் இருவரும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட அவர்களுக்கு கிடைத்த ஆதரவையும் சேர்த்து மொத்தமாக அர்விந்த் அறுவடை செய்தார் என்பதே நிதர்சனம் . அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை அன்னா புறக்கணித்ததும் , அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதும் பலவித சந்தேகங்களை கிளப்புகின்றன .
மோடி போன்ற வலிமையான ஒருவர் இந்தியாவுக்கு பிரதமராவதை அமெரிக்கா விரும்பாததால் அங்கிருந்து அதிக பணம் மறைமுகமாக ஆம் ஆத்மிக்கு வருகிறது என்பது ஒரு சாரரின் கருத்து ...
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை கலைத்து விட சொன்னார் காந்தி . அதே போல காந்தியவாதியான அன்னா ஹசாரே
ஆம் ஆத்மி என்று கட்சியை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தார் . இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலவே படுகிறது . இவையெல்லாவற்றையும் விட லோக்பால் மசோதாவுக்காக அர்விந்த் , அன்னா வுடன் ஒரே குழுவில் இருந்து போராடிய
கிரண் பேடி மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கு மோடிக்கே எனது ஒட்டு என்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தாண்டி அவர் நாட்டின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது . இதே போன்றதொரு முடிவை அன்னா எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதையெல்லாம் மீறி அர்விந்த் தான் அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு அளந்து விடும் அறிவுஜீவிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம் . பவர் ஸ்டார் ஹிட் கொடுத்து விட்டார் என்பதற்காக சூப்பர் ஸ்டாராக ஆகி விட முடியாது ...