"மன்" மன்னாராக கமல் , "மதன்" மதன கோபாலாக மாதவன் , "அம்பு" அம்புஜம் ( எ) நிஷாவாக த்ரிஷா இவர்கள் மூவரை பற்றிய கதையே "மன் மதன் அம்பு"
கோடீஸ்வரன் மாதவன், நடிகை த்ரிஷா இருவரும் காதலிக்கிறார்கள் ...நிச்சயதார்த்தம் வரை செல்லும் காதல் மாதவனின் சந்தேக புத்தியாலும் ,இருவரின் ஈகோவாலும் விரிசல் அடைகிறது ...த்ரிஷா ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார் ..அவருடன் அவர் தோழி கீதா ( சங்கீதா) வும், அவளின் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கொள்கிறார்கள் ...அங்கு த்ரிஷாவை வேவு பார்க்க மாதவனால் நியமிக்கப்படுகிறார் மேஜர் மன்னார் ( கமல் )...வேவு பார்க்க வந்த இடத்தில் இருவருக்கும் பரஸ்பர நட்பு ஏற்பட்டு அதுவே காதலாக மலர்கிறது ...முடிவில் யார் யாருடன் சேர்கிறார்கள் என்பதே மீதி கதை ...
முதல் காட்சியிலேயே மாதவனுக்கும் ,அவர் அம்மாவுக்கும் த்ரிஷா நடிகை என்பதால் ஏற்படும் சந்தேகத்தையும் , அதை தொடர்ந்து வரும் கார் பயணத்தில் மாதவன், த்ரிஷா இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சனையையும் தெளிவாகவும் , புத்திசாலித்தனமாகவும் சொல்லி இருக்கிறார்கள் ....அதே தெளிவும் , புத்திசாலித்தனமும் படம் முழுவதும் இல்லாதது பெரிய குறை ..........
மன்னார் கமல் தன் வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் ...அவர் அறிமுகமே அசத்தல் ..மேஜர் என்றவுடன் விறைபபுடன் அலையாமல் யதார்த்தமாக இருக்கிறார் ...தகிடத்த்தம் பாடலுக்கு அவர் ஆட்டம் இளமையாக இருந்தாலும் தொப்பை இடிக்கிறது .."ப்ளாஷ்பாக்" என்றாலும் இவர் மனைவி சம்பத்தப்பட்ட காட்சிகளை இழுக்காமல் ஒரு பாடலுடன் முடித்திருப்பதை பாராட்டலாம் ....
தன் நண்பன் ( ரமேஷ் அரவிந்த் ) ஆபரேஷன் செலவிற்கு பணம் புரட்டவே வேவு பார்க்கும் வேலைக்கு வந்திருக்கிறார் என தெரியும் போது மனைதை தொடுகிறார் ..பணத்திற்காக இவர் மாதவனிடம் கெஞ்சும் போதும், பணம் தர மறுக்கவே அதை பெற குறுக்கு வழியை கையாளும் போதும் கைத்தட்டல் பெறுகிறார் ...
மாதவனுக்கு காமெடி, சீரியஸ் இரண்டும் எளிதாக வருகிறது ..த்ரிஷாவை பிரியும் இடத்தில நல்ல முகபாவம் ...குடிபோதையில் உலறும் போதும், கழிவறையில் கைபேசியை தவற விட்டு பின் அதை கையில் எடுத்து அலம்பி, ஸ்ப்ரே அடித்து பேசும் போதும் கல ...கல....ஆனால் படம் முழுவதும் மாதவனை ஏதோ மயில்சாமி போல போதையிலேயே உலவ விட்டிருப்பது அபத்தம் ..த்ரிஷாவை சந்தேகப்படுகிறார் என்பதற்காக அவரை முட்டாள் போலவும் , அம்மா பேச்சை அப்படியே கேட்கும் அசடாகவும் , கடைசியில் பணத்திற்காக விவாகரத்து வாங்கி இரண்டு பசங்களுடன் இருக்கும் சங்கீதாவுடன் சேருவதாக காட்டுவதும் அவரின் கதாபாத்திரத்திற்கே பெரிய சறுக்கல் .......
த்ரிஷா நடிகையாகவே வருவதால் இயல்பாக வந்து போகிறார் ..ஒரு காட்சியில் கமல் த்ரிஷாவிடம் இவ்வளவு அழகாக தமிழ் பேசும் நீங்கள் உங்கள் படங்களில் இது போல பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறார் ..அனால் இந்த படத்திலேயே ஏதோ ஆங்கில படத்திற்கு வந்து விட்டோமோ என்று சந்தேகப்படும் அளவிற்கு எக்கச்சக்க ஆங்கில வசனங்கள் .......
சீமான் , ஆகாஷ் சிறிது நேரமே வந்தாலும் கிச்சு ...கிச்சு ...களவானி படத்தில் மனதை திருடிய ஓவியா இதில் ஏதோ வேலைக்காரி போல வந்து போவது துரதிருஷ்டம் ... இப்படத்தின் கதை ,திரைக்கதை , வசனம் , சில பாடல்கள் என நிறைய பொறுப்புகள் கமலின் தலையில் ..கதை மின்சார கனவு ,குரு என ஆளு போன்ற படங்களின் கலவை ..அதற்கு காமெடி சாயம் பூச பார்த்திருக்கிறார்கள் ஆயினும் வெளுத்து விட்டது ..ஆள் மாறாட்ட கட்சிகளில் இவர்கள் செய்யும் காமெடி பெரிய குழப்பம் ..கிரேசி மோகன் வசனம் எழுதாது ஏமாற்றம் ...
படத்தின் சில ஆறுதல்கள் சங்கீதாவின் பையனாக வரும் சிறுவன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை.. குறிப்பாக பாடல்கள் ....
மாதவன் அம்மா பேசுவது வலிய திணிக்கப்பட்ட பிராமண வசனங்கள் ...ஒரு நடிகை தன் மருமகளாக வருவதை விரும்பாத தாய் பிராமணராக தான் இருக்க வேண்டுமா ? ??..
"வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை " , " நேர்மையானவனுக்கு திமிர் தான் ஆயுதம் " போன்ற வசங்கள் அருமை ...கமல் அதே நேர்மையை இந்த படத்திலும் காட்டி இருக்கலாம் ..ஏனெனில் ஒரு காட்சியில் கமல் தனக்கும் வழி பிறக்கும் எனும் போது சர்ச் மணி ஒலிக்கிறது ...காவி உடை தரித்த கள்ளகாதலன் என்று கமல் மாதவனிடம் காவியையும் , கள்ளகாதலையும் இணைத்து பேசுவது போல காட்சி வருகிறது ...கடவுளே இல்லை என்று பகுத்தறிவு வாதம் பேசும் கமலிடம் ஏன் இந்த முரண்பாடு ?...
கள்ள காதலுடன் சம்பத்தப்பட்டவரும் ஒரு நடிகை தான் என்பதை ஏனோ மறந்து விட்டார் ....செலக்டிவ் அம்னீசியா போலும் ....
கமல் அவர்களே உங்கள் கருத்துக்களை திணிப்பதற்கும் , மக்களை குழப்புவதற்கும் , பதவியில் இருப்பவர்களை குஷி படுத்துவதற்கும் தான் டிவி பேட்டி இருக்கிறதே .. அதை விட்டு விட்டு ஏன் காசு கொடுத்து படத்தை பார்க்க வரும் ரசிகர்களை கொல்கிறீர்கள்....
திரைப்பட விமர்சனங்களில் பொதுவாக தனிப்பட்ட எவரையும் நான் விமர்சிப்பதில்லை ...இருந்தும் இந்த படத்தை விமர்சிப்பதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதாலும் , சமீப காலமாகவே உங்கள் படங்களில் கருத்து திணிப்பு அதிகமாக இருப்பதே இந்த தனிப்பட்ட விமர்சனத்திற்கு காரணம்....
மொத்தத்தில் வலுவில்லாத கதை , திரைக்கதையாலும் வலுக்கட்டாய வசன திணிப்புகளாலும் மண்ணை கவ்வியது - " மன் மதன் அம்பு "
padam paakalaama vendamaa
ReplyDeleteivvalavu solliyum romba thaan thairiyam umakku....
ReplyDelete