Vanga blogalam in Facebook

16 December 2012

கும்கி - கோவில் யானை ...


மிகவும் தாமதமாக தனது ஐந்தாவது படத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தக்கவைத்துக் கொள்ள இயக்குனர் பிரபுசாலமன் எடுத்த முயற்சி கும்கி யை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசத்திலிருந்து நன்றாக தெரிகிறது.கும்கி யை பொறுத்தவரை அவரின் முயற்சி திருவினையாக்கியதா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லலாம் ...

சிறு வயதிலிருந்தே மாணிக்கம் என்கிற யானையை ( கும்கி ) வைத்து பிழைப்பு நடத்தும் சொக்கன் (  விக்ரம்சிவாஜி ) தெரிந்தவருக்கு உதவி செய்வதற்காக தனது யானையை கும்கி ( காட்டு யானைகளை விரட்ட உதவும் பயிற்சி பெற்ற யானை ) என்று சொல்லி ஆதிக்காடுக்குள் நுழைகிறான் .  ஊர்த்தலைவர் மகள் அல்லி ( லக்ஷ்மிமேனன் ) மீதான காதல் தனது தாய் மாமா கொத்தல்லி ( தம்பிராமையா ) சொல்லையும் மீறி சொக்கனை அந்த காட்டிலேயே தங்க வைக்கிறது . சொக்கன் காதல் நிறைவேறியதா ? கொம்பன் என்கிற காட்டு யானையிடமிருந்து  ஊர் மக்களை காப்பாற்றினானா ? என்ற கேள்விகளுக்கு பதில் தான்  கும்கி ...

விக்ரம் சிவாஜிக்கு இந்த படம் நல்ல அறிமுகம் . முகத்தில் ஒரு விதமான கடுமை இருந்தாலும் யானைக்காக கெஞ்சும் இடத்திலும் , க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் தன குடும்பத்தின் பெயரை காப்பாற்றுகிறார் . காதல் காட்சிகளுக்கு விக்ரம் பெரிய அண்ணா கமல் ஹாசனிடம் க்ளாஸ் எடுத்துக்கொண்டால் கூடிய விரைவிலேயே தேறிவிடுவார் ... முதலில் புக் செய்ததால் லக்ஷ்மி மேனனை அறிமுகம் என்று போடுகிறார்கள் . யானையை கண்டு பயப்படும் போதும் , பிறகு அதன் மீது பாசம் காட்டும் போதும் தனது நடிப்புத்திறமையை நிரூபிக்கிறார் ...


கதையை விட இயக்குனர் தம்பி ராமையாவை நம்பியிருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது . " ஹெல்பர் அனிமல்" என்று இவர் உதவியாளரை அழைப்பதும் , வேலையை தக்க வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய சூட்சுமங்களை சொல்வதுமென முதல் பாதி முழுவதும் காமெடியுடன் இவரை வைத்தே படத்தை நகர்த்துகிறார்கள் . மனிதர்  யானை பற்றிய உண்மை தெரிந்தால் என்ன ஆகுமென பயந்து நடுங்க ஊர் மக்களோ இவரை பெரிய வீரர் என்று பில்ட் அப் செய்ய அதற்கேற்றாற்போல தம்பி ராமையா அண்டர்ப்ளே நடிப்பால் அசத்துகிறார் . இவருக்கு வில்லன் போல தேவையில்லாமல் பின்னணி இசை கொடுப்பதும் , சீரியசான படத்திற்கு காமெடியை பிரதானமாக நம்பியதும் மிகப்பெரிய குறை ...

ஊர்த்தலைவராக வருபவர் இயல்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் . ஜூனியர் பாலையா , மைனா வில் இன்ஸ்பெக்டராக நடித்தவர் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் . முதல் ப்ரேமிலிருந்து கடைசி வரை சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களிலேயே நிற்கிறது . சொல்லப்போனால் இவரின் ஒளிப்பதிவும் , லொக்கேஷனும் இல்லையென்றால் நிச்சயம் படத்தை  பார்த்திருக்க முடியாது . இமானின் இசை படத்திற்கு மற்றொரு பெரிய பலம் .
 " ஒன்னும் புரியல " ,  " அய்யய்யோ " பாடல்களும் அதை படமாக்கிய  விதமும் அருமை .பின்னணி இசை தான் கொஞ்சம் மைனா வை நினைவுபடுத்துகிறது...


தற்செயலாக ஊருக்கு வரும் ஹீரோ , ஊர்த்தலைவர் மகள் மேல் காதல்வயப்படுவது என்கிற வழக்கமான ஒன்லைன் தான் என்றாலும் அதில் யானையை புகுத்திய சாமர்த்தியம் , யானை - விக்ரம் இருவருக்குமிடையேயான பாசத்தை விளக்கும் காட்சிகள் , காட்டில் வாழ்ந்தாலும் தன் மகள்  மேல் சிறிதும் சந்தேகப்படாத அப்பா , அவரின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக காதலை துறக்கும் மகள் , ஜம்போ வந்தால் என்ன ஆகுமோ என்கிற பயத்தை தக்கவைக்கின்ற டெம்போ இப்படி இசை , ஒளிப்பதிவு தவிர படத்தில் ரசிக்கும்படியான மற்ற விஷயங்களும் இருக்கின்றன ...

ஒரு பெண்ணை பார்த்தவுடன் காமம் வருவது இயற்கை , ஆனால் பார்த்தமாத்திரத்தில் பசியில்லை , தூக்கமில்லை , இவள் தான் உயிர் என்றெல்லாம் காதல் கிறக்கத்தில் ஹீரோ அலைவது அதர பழசான பேத்தல் . யானை - விக்ரம் உறவில் ஏற்பட்ட தாக்கத்தில் ஒரு சிறு விழுக்காடு கூட விக்ரம் - லக்ஷ்மி காதலில் ஏற்படாதது படத்தின் பெரிய சறுக்கல் . காதல் சுவாரசியமாக இல்லாததால் பிரிவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .
எக்கச்சக்க பில்ட் அப் கொடுத்துவிட்டு கடைசியில் யானைகளுக்கிடையேயான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் சி.ஜி சமாராக இருப்பது பெருத்த ஏமாற்றம் . படத்தின் கவராத காதலால் காட்டு யானைகளையே  விரட்டக்கூடிய கும்கி கட்டிப்போடப்பட்ட கோவில் யானையாகவே கண்களுக்கு தெரிகிறது . கும்கி - COULD HAVE BEEN BETTER ...

ஸ்கோர் கார்ட் : 42  


8 comments:

  1. மைனா வில் இன்ஸ்பெக்டராக நடித்தவர் '' he is not that one,

    MALAYALAM ACTOR ''SREEJITH RAVI'' ACTED AS FOREST OFFICER

    ReplyDelete
  2. VANDHIYAN said...
    மைனா வில் இன்ஸ்பெக்டராக நடித்தவர் '' he is not that one,
    MALAYALAM ACTOR ''SREEJITH RAVI'' ACTED AS FOREST OFFICER

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்... நன்றி.

    ReplyDelete
  4. Rathnavel Natarajan said...
    அருமை.
    நன்றி.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

    ReplyDelete
  5. வெங்கட் நாகராஜ் said...
    அருமையான விமர்சனம்... நன்றி.
    Monday, December 17, 2012

    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

    ReplyDelete
  6. marimuthu said...
    Supper
    Tuesday, December 18, 2012

    Thanks ...

    ReplyDelete
  7. hakk said...
    Nice...
    Tuesday, December 18, 2012

    Thanks ...

    ReplyDelete