ஒரு நடிகனாக தனக்கென்று தனி மார்கெட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு சுந்தரபாண்டியன் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம் குட்டிப்புலி . வழக்கமான நண்பர்கள் சென்டிமெண்டிலிருந்து அம்மா சென்டிமெண்டிற்கு மாறியிருக்கும் சசிகுமார் வெற்றியடைந்தாரா ? பார்க்கலாம் ...
ஊர்ப்பெண்ணை அசலூர்க்காரன் கிண்டல் செய்ததற்காக அவனை போட்டு விட்டு தானும் சாகும் ஒரு நல்ல ! மனிதனின் ( லால் ) பிள்ளை குட்டிப்புலி
( சசிகுமார் ) . அப்பனை போலவே இருப்பதால் உசுருக்கு உத்திரவாதம் இல்லை என்று காரணம் சொல்லி கல்யாணம் செய்ய மறுக்கும் குட்டிப்புலிக்கு கால்கட்டு போட நினைக்கிறார் அம்மா ( சரண்யா ) . இதற்கிடையில் தெருப்பெண் பாரதி ( லக்ஷிமேனன் ) இவரை லவ்வ அம்மாவின் எண்ணம் நிறைவேறியதா என்பதை வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார்கள் ...
விருமாண்டி , பருத்திவீரன் ஸ்டைலில் இருந்தாலும் கைகளை பின்னே கட்டிக்கொண்டு தலையை தொங்கப்போட்டு நடக்கும் மேனரிசத்தில் ரசிக்க வைக்கிறார் சசிகுமார் . சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷத்தையும் , காதல் காட்சிகளில் வெட்கத்தையும் காட்டி தனக்கும் நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் . என்ன தான் ஹீரோயிச படம் என்றாலும் தனியாளாக எந்திரன் ஸ்டைலில் பற்றியெறியும் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை காப்பாற்றுவதெல்லாம் ரொம்ப ஓவர் . சசி ரசிக்க வைத்தாலும் அவரை மாஸ் ஹீரோவாக ஏற்க மட்டும் ஏனோ மனம் மறுக்கிறது ...
மாநிறமாக இருந்தாலும் மேக்கப்பும் , உயரமான உடல்வாகும் லக்ஷ்மிமேனனை கவனிக்க வைக்கின்றன . அம்மணி பத்தாவது பரீட்சை இப்பொழுது தான் எழுதினார் எனும் போது தான் எத்தனாவது தடவை என்று கேட்கத் தோன்றுகிறது . பெரிய வேலை வெட்டியில்லாமல் சண்டை போட்டுத்திரியும் ஹீரோவை வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்தின் படி காதலித்துத் தொலைக்கிறார் லக்ஷ்மி . இவர் உயரத்தை கணக்கில் கொண்டு சசியை லாங் ஷாட்டில் நடக்கவிட்டே சமாளித்திருக்கிறார்கள் . நான்கைந்து நண்பர்களுடன் திரியும் சசிக்கு இந்த படத்தில் முருகதாஸ் மட்டுமே இருப்பது ஆறுதல் . இவரை தவிர காமெடிக்காக சிலர் இருந்தும் ( பப்பு & கோ ) பெரிய அளவிற்கு சிரிப்பு வரவில்லை . சித்தப்பா , மாமா என்று வரும் ஊர்க்காரர்கள் ரசிக்க வைக்கிறார்கள் ...
டெம்ப்ளேட் அம்மாவாக சரண்யா . அவரை விட அவருடன் வரும் ரமா பிரபா கவனிக்க வைக்கிறார் . மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் முதல் சில சீன்கள் மிக சிறப்பு . கிப்ரான் இசையில் சசியின் சண்டியரே அறிமுக பாடலும் , காதல் பாடலும் அருமை . பின்னணி இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை . இசைஞானியின் பாடல்களை வைத்தே நிறைய சீன்களை ஒட்டிவிட்டார்கள் ...
பெருசாக எதையும் யோசிக்காமல் சேஃபாக முதல் படத்தில் கமர்சியல் ரூட்டை கையில் எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் முத்தையா . முதல் காட்சியில் நம்மை நிமிர வைத்ததில் , சசிகுமார் கேரக்டரை எஸ்டாப்ளிஷ் செய்த விதத்தில் , " நான் ஒண்ணுமே செய்யலம்மா " எனும் ஊர்க்காரனிடம் " அதானே செஞ்சுட்டாதான் இந்நேரம் குருவம்மாவுக்கு நாலு பிள்ளை பொறந்துருக்குமே " என்று சரண்யா முணுமுணுப்பது உட்பட ஆங்காங்கே வரும் வட்டார வசனங்களில் , சசிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயத்தை கொடுத்து விட்டு பின் க்ளைமேக்சில்
வைத்த ட்விஷ்டில் இப்படி நிறைய இடங்களில் இயக்குனர் பளிச் ...
கதை தான் பழசு சீன்களில் எதையாவது புதிதாய் யோசித்திருக்க வேண்டாமோ ? ! . இந்த இடத்தில் கோட்டை விட்டு விட்டார் முத்தையா . சசிகுமார் செய்யும் அளப்பரைகளை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியிருப்பது போர் . இண்டெர்வல் ப்ளாக் அதிர்ச்சி கொடுத்தாலும் , குத்துயிரும் , கொலையுயிருமாக வெட்டப்படும் சசி பின் சக்திமான் போல மீண்டு வந்து ஒத்தையாளாக வில்லன் கோஷ்டியை அடித்து சாய்ப்பதெல்லாம் போங்கு . அம்மா சென்டிமெண்டில் இருக்கும் அழுத்தம் கூட ஹீரோ - வில்லன் மோதலில் இல்லை . சென்டிமெண்ட் , காதல் , காமெடி , சண்டை என்று பழசானாலும் புளியோதரையாய் ருசிக்க வைத்தாலும் , மாஸ் ஹீரோவாக சசிகுமாரை முன்னிறுத்தும் முயற்சியில் ஒண்டிப்புலியாக அவரை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம் குட்டிப்புலி . சசிகுமாரை ரசிப்பவர்களுக்கு படம் விருந்து , மற்றவர்களுக்கு பத்தில் ஒன்று ...
ஸ்கோர் கார்ட் : 40
4 comments:
ம்ஹீம்... ஒன்னும் சரியில்லை...
திண்டுக்கல் தனபாலன் said...
ம்ஹீம்... ஒன்னும் சரியில்லை...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
நிஜவாவே உங்களுக்கு இரத்தக் கண்ணீர் வரலையா...
VIKNESHWARAN said...
நிஜவாவே உங்களுக்கு இரத்தக் கண்ணீர் வரலையா...
உங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...
Post a Comment