Vanga blogalam in Facebook

27 October 2013

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ...


டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார்  யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்  என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே  இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு  இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...

மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப்  பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு  பி.ஜே.பி யினரிடம்  கண் கூடாக காண முடிகிறது ...

தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி  மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே  எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது  வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில்  நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள்  . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள்  கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...

இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க   மந்திரி அமர்ந்ததையும்  , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக  நடந்தது  என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க   கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி  சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது  . கடந்த  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான  இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை  கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம்  பெற்றிருப்பதும்  குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...

அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு  அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது .  2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட  அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து  விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க  ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை  மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே  மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான்  நடந்து கொண்டிருக்கின்றன ...

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது  மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த்  இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு  தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர்  மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில்  அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி  மட்டுமே  . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...

இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன்  தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து  ஜாதி கட்சிகளை இணைக்கும்  முயற்சியை  கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும்  , அப்படி அமையும் கூட்டணி  தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த  சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில்  உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம்  இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...

இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே  சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில்  மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ்  மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்  . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து  கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...

ஆனால்  நிலையான ஆட்சி அமைவதற்கும்  272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து  கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...



6 comments:

  1. An article in the point of view of a BJP man.

    ReplyDelete
  2. Article may sounds like that . Mr.MODI is a most wanted man for India .

    ReplyDelete
  3. கட்டுரை நல்ல அலசல். அதேநேரத்தில் திரு. ரவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அனந்துவின் பதிலையும் அப்படியே ஆமோதிக்கிறேன். தன்னார்வமற்ற தொண்டர்களின் பங்களிப்பு என்பது தவறான வார்த்தை பிரயோகம். தன்னார்வமுள்ள தொண்டர்கள் அல்லது தன்னலமற்ற தொண்டர்கள் என்று இருக்க வேண்டும். திருத்தி பிரசுரிக்கவும்

    ReplyDelete
  4. பிழை திருத்தப்பட்டது . நன்றி ...

    ReplyDelete