ஐந்து
வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக ,
கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக ,
இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....
வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...
கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ...
பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம்
வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ...
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் , ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் .கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன . அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...
டான்ஸ் , ஃபைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை . அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...
இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள்
பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் ,
தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
தேசிய விருதுகளையும்
தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் ,
ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க
வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க
முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது
சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும் இருப்பதே
தமிழ் சினிமாவின் வேதனை ...
இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம்
தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும். நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில்
கமலின் நடிப்பை பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் . தோல்விப்
படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க
முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...
வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு , கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து நிற்பார்கள். தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...
சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது
அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று
வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ...
ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...
ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என
கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய
விசாலத்தை காட்டியது . ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக
கமல் கையை சுட்டுக்கொண்ட காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ...
முந்தைய படமான மன் மதன் அம்பு வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் . இன்று ஐம்பத்தெட்டாவது பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...
- மீள்பதிவு
- மீள்பதிவு
No comments:
Post a Comment