முதல் படத்தில் சில்லுனு ஒரு காதலை கொடுத்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் கரடுமுரடான காதலுடன் நெடுஞ்சாலை யில் பயணப்பட்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா . மேக்கிங்கில் முதல் படத்திலிருந்து நிறைய வித்தியாசம் காட்டியிருப்பது தெரிகிறது ...
80 களின் மத்தியில் தேனியில் , ஓடும் லாரிகளிலிருந்து பொருட்களை லாவகமாக கொள்ளையடிக்கும் தார்ப்பாய் முருகன் ( ஆரி ) , அவன் காதலி மங்கா ( சிவதா), அவர்கள் காதலுக்கு இடையூறு செய்யும் இன்ஸ்பெக்டர் மாசானி முத்து ( பிரஷாந்த் நாராயன் ) இவர்களின் கதையை முருகனின் கூட்டாளி ஃப்ளாஷ்பேக்கில் விவரிப்பதே படம் ...
பருத்திவீரன் கார்த்தியை நினைவு படுத்தினாலும் முரட்டு உடம்பு , தாடி , மீசையுடன் அந்த அராக்கு கேரக்டருக்கு நன்றாகவே பொருந்துகிறார் ஆரி . மங்காவை பழி வாங்குவார் என்று நினைக்கும் போது அவளுக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்லி இன்ஸ்பெக்டர் முகத்தில் கரியை பூசுவது க்ளாஸ் . சாந்தமான முகம் , பாவாடை சட்டையுடன் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிவதா . " ஒரு பொம்பளை தனியா தொழில் பண்ணா என்ன தேவிடியா வா ? " என்று சொல்லி தையிரியமாக இன்ஸ்பெக்டர் காலை உடைக்கும் போது நிமிர்ந்து நிற்கும் இவர் கேரக்டர் ஆரியை காபாற்றுவதற்காக ரூமிற்குள் நிர்வாணமாக நிற்கும் போது சரிந்து விடுகிறது ...
டேனியல் பாலாஜி சாயலில் இருக்கும் கஞ்சா குடுக்கி இன்ஸ்பெக்டரும் , மாட்டு சேகரும் ( சலீம் ) கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் படம் சோர்வடையாமல் பயணப்பட உதவியிருக்கிறார்கள் . அதிலும் இன்ஸ்பெக்டர் " இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர எப்படியா சரிக்கட்டின " என்று கேட்க மாட்டு சேகர்" நான் எங்க சாரே , என் பொண்டாட்டி தான் சரிக்கட்டினா " என்று சொல்வதும் , மனைவியின் ரூமிலிருந்து வரும் வேலைக்காரன் கூலாக " எதுக்கு அவசரமா கூப்புட்டீங்க " என்று சேகரிடம் கோபப்படுவதும் ரசிக்க வைக்கும் இடங்கள் ...
சத்யாவின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டுமே பலம் . ஆனால் சில பாடல்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போலிருப்பது பலவீனம் . படத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிறைய ஷாட்கள் ஒளிப்பதிவாளர் ராஜவேலின் உழைப்பை காட்டுகின்றன . கரண்ட் , ஃப்ளாஷ்பேக் என்று மாறி வரும் காட்சிகளில் கிஷோர் கொஞ்சம் கரண்ட் காட்சிகளை கட் செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் ...
நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளை மையப்படுத்திய கதைக்களம் , கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்திய நேர்த்தி , வசனங்கள் , ட்விஸ் டுடன் நகரும் திரைக்கதை போன்றவை படத்தை கவனிக்க வைக்கின்றன ... பெரிய இம்பேக்டை கொடுக்காத ஆரி - மங்கா காதல் , தொய்வைடைய வைக்கும் சில ரிப்பீட்டட் சீன்கள் , ட்விஸ்ட் இருந்தாலும் எதிர்பார்த்தபடி அமையும் க்ளைமேக்ஸ் , நடந்ததை கூட்டாளி சொல்லி முடித்து விட்டு லாரியில் இருந்து இறங்கி நடக்கும் போதே படத்தை முடிக்காமல் கொஞ்சம் இழுத்தது போன்றவை சார்ட் அன்ட் கிரிஸ்ப்பாக இருந்திருக்க வேண்டிய நெடுஞ்சாலை பயணத்தை நெடும்பயணமாக மாற்றுகின்றன ...
ஸ்கோர் கார்ட் : 41
No comments:
Post a Comment