கடநத வருடம் போல இந்த வருடம் இதுவரை தேசிய விருதோடு பெரிய வெற்றி பெற்ற விஸ்வரூபம் , பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த பரதேசி போன்ற படங்கள் வராமல் போனாலும் வீரம் , ஜில்லா போன்ற கமர்சியல் வெற்றிகளும் , தெகிடி , முண்டாசுப்பட்டி போன்ற கவனத்தை ஈர்த்த சிறு பட்ஜெட் படங்களும் ஆறுதல் . ஆரம்பம் வெற்றியை தொடர்ந்து வீரம் வெற்றி மூலம் தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அஜித் . கோட் ,சூட் இல்லாமல் வேட்டி , சட்டையில் தல கண்களுக்கு விருந்து . ஆனால் இந்த படத்தோடு சால்ட் - பெப்பர் லுக்குக்கு கொஞ்சம் லீவு விட்டால் தேவல...
ரஜினியை போல என்றும் ட்ரிம்மாக இருக்கும் விஜய்க்கு ஜில்லா பெரிய வெற்றியாக அமையா விட்டாலும் ரசிகர்களின் ஆதரவால் விநியோகஸ்தர்கள் கையை கடிக்கவில்லை . சிறந்த படங்களின் மூலம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே தோல்வியடைந்தது சறுக்கல் . இனிவரும் படங்களில் கதைத் தேர்வில் அதிக கவனம் செலுத்துவார் என்று நம்புவோமாக ...
க்ரைம் பின்னணியை கொண்ட தெகிடி , வாலிபால் விளையாட்டை மையமாக வைத்து வந்த வல்லினம் இரண்டுமே கவனிக்க வைத்த படங்கள் . வாயை மூடி பேசவும் மௌனமாக வந்து போய விட்டது . கேமரா மேன் விஜய் மில்டன் இயக்கத்தில் வந்த கோலி சோடா கமர்சியல் வெற்றி , விமர்சகர்களின் பாராட்டு இரண்டையுமே பெற்ற நல்ல மிக்ஸிங் . வடிவேலு எதிர்பார்த்த ரீ என்ட்ரி தெனாலிராமன் கொடுக்கவில்லை ...
நெடுஞ்சாலை நெடிய பயணமாக தெரிந்தாலும் போரடிக்கவில்லை . அதன் ஹீரோ ஆரி க்கு அதிக வாய்ப்புகள் வந்திருக்கும் என்று நம்பலாம் . அதே போல பிரஷாந்த் நாராயன் , சலீம் இருவரும் தமிழுக்கு நல்ல வரவு . எழுத்தாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வந்த குக்கூ மாற்றுத் திறனாளிகளின் காதலையும் , வலியையும் பாசிட்டிவாக சொன்ன விதத்தில் கலர்ஃபுல் ஹைக்கூ . சமுத்திரக்கனி - ஜெயம் ரவி கூட்டணியில் வந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு நிமிர்ந்து நிற்கவில்லை ....
மௌன குரு வில் சீரியசாக வலம் வந்த அருள்நிதி க்கு காமெடிப்படமான ஒரு கன்னியும் மூணு களவானிகளும் ஒரு கன்னித்திருட்டு . பாண்டியநாடு வெற்றியை தொடர்ந்து விஷால் பூசிய கமர்சியல் அரிதாரம் நான் சிகப்பு மனிதன் . இதுவரை தமிழ் ஹீரோக்களுக்கு திரை யில் நண்பனாக இருந்து பல ஹிட்களுக்கு தோள் கொடுத்த சந்தானம் தன் சொந்த செலவில் சோலோ ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வாய்ச்சண்டையாகிப் போனது துரதிருஷ்டமே . சசிக்குமார் நடித்த பிரம்மன் எழுதிய தலைவிதியால் தயாரிப்பாளர் நொந்தது தான் மிச்சம் ...
படத்தேர்வில் கவனம் செலுத்தும் கிருஷ்ணாவிற்கு யாமிருக்க பயமே வின் வெற்றி பெரிய தையிரியத்தை கொடுத்திருக்கும் . டெக்னிக்கல் விஷயங்களுக்காக குறை சொல்லப்பட்டாலும் குழந்தைகளை அதிகம் கவர்ந்தான் கோச்சடையான் . சிவ கார்த்திகேயன் நடிப்பில் மான் கராத்தே மண்ணைக் கவ்வா விட்டாலும் மனதை தொடவில்லை . லிங்குசாமி தயாரிப்பில் மஞ்சப்பை கதைக்காகவும் , ராஜ்கிரண் நடிப்பிற்காகவும் அதிகம் பாராட்டப்ட்டது ...
தமிழ் சினிமாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குறும்பட இயக்குனர்களினன் தர்பாரில் லேட்டஸ்ட் வரவு இயக்குனர் ராம்குமார். வெறும் ஸ்டான்ட் அப் காமெடியாக இல்லாமல் ரசிக்க வைத்த விதத்தில் முன்னுக்கு வந்திருக்கிறது முண்டாசுப்பட்டி . முனீஷ்காந்தாக நடித்த ராமதாஸின் காமெடி ராஜ்ஜியம் வரும் படங்களிலும் தொடர்வதற்கு வாழ்த்துக்கள் . சைவம் விஜய் எடுத்த முதல் தமிழ்படம் . கார்த்திக் கின் மெட்ராஸ் , விஜய் யின் கத்தி , சூர்யா வின் அஞ்சான் போன்றவை அடுத்த சில மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன . அதே போல பிரபல வலைப்பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் திரைக்கு வந்து பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் ...
veeram periya hit'a? jilla small hit'a? ok ajith fan, bo collection report parunga... jilla crossed 100 days in theaters, veeram crossed 100 days in sun tv.
ReplyDelete