Vanga blogalam in Facebook

20 July 2014

வேலையில்லா பட்டதாரி -VIP - வெல்வான் ...


பொதுவாகவே ஒரு படத்தின் ஆடியோ பெரிய ஹிட்டாகி பட ரிலீஸ் தள்ளிப் போனால் நம்மையறியாமலேயே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும் . அதிலும் ஆல் இந்தியா பிரபலமாகி விட்ட நம்ம ஊரு தனுஷின் 25 வது படம் வி.ஐ.பி என்பது கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திருப்பதை படத்திற்கு கிடைத்த ஒப்பனிங்கை வைத்து உறுதி செய்ய முடிகிறது ...

தினமும் தண்டச்சோறு என்று திட்டும் கோபக்கார அப்பா , பாசம் காட்டும் அம்மா , மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும்  தம்பி , பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் அழகான பெண் இவர்களுக்கு மத்தியில் தான் படித்த சிவில் இன்ஜினியரிங் சம்பந்தமான வேலைக்கு மட்டுமே போவேன் என்று நான்கு வருடம் பெட்ரோமாஸ் லைட்டே தான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் வேலையில்லா பட்டதாரி ரகுவரன் ( தனுஷ் ) தன் துறையில் எதிரிகளை வென்று எப்படி சாதிக்கிறார் என்பதே வி.ஐ.பி ...

தனுஷ் இது வரை நடித்த 25 இல் இது போன்ற கதைகளில் குறைந்தது பத்துக்கும் மேல் நடித்திருப்பார் . இருப்பினும் நம்மை சோர்வடைய விடாமல்
பார்த்துக் கொள்வதே தனுஷின் திறமை . மயக்கம் என்ன , மரியான் என்று ஹெவி வெயிட் படங்களுக்கு பிறகு இந்த கேசுவல் தனுஷ் அடுத்த வீட்டுப் பையனாக அதிகமாகவே கவர்கிறார் . அம்மா இறந்தவுடன் வீட்டுக்கு வருபவரிடம் அதீத பெர்ஃபார்மன்சை எதிர்பாத்தால் அடக்கி வாசித்து ஏமாற்றி விடுகிறார் . சாமான்யர்களின் கஷ்டத்தை சொல்லும் தனுஷின் லாங் டயலாக் நீண்ட நாட்கள் பேசப்படும்  . சில தோல்விகளுக்கு பிறகு தமிழில் இந்த படம் நிச்சயம் தனுஷிற்கு கமர்சியலாக கை கொடுக்கும் . ஆனால் இந்த மாதிரி படங்களை பண்ண நிறைய வி.ஐ.பி கள்  இருப்பதால் தனுஷும் தொடர்ந்து இதே பாணியில் பயணப்பட்டு விடுவாரோ என்கிற பயமும் லேசாக தொற்றிக்கொள்கிறது ...

நிச்சயமாகி விட்ட தாலோ என்னனவோ அமலா பால் அதிக அழகாக தெரிகிறார் . அந்த பெரிய கண்களை உருட்டி பேசும்  அழகு ஆஸம் . சுரபிக்கு படத்தில் பெரிய வேலை இல்லை . இண்டர்வெலுக்கு பிறகு சீரியசாக போகும் படத்தில் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்ட விவேக் .உதவியிருக்கிறார்  .  சரண்யா , தனுஷ் என்கிற இரண்டு நேஷனல் அவார்ட் வின்னர்களின் நடிப்புக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் சமுத்திரக்கனி சரண்யா இறந்த சீனில் தனக்கும் நன்றாக நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் ...


அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு பெரிய பலம் . ஏ.ஆர்.ஆர் , யுவனுக்கு பிறகு இளைஞர்களை அதிகம் கவர்கிறார் அனிருத் . எஸ்,ஜானகி குரலில் " அம்மா அம்மா " பாடல் கேட்கும் அனைவரையும் அதிகம் முனுமுனுக்க வைக்கும் பாடல் . எல்லா பாடல்களையும் தனுஷ் , அனிருத் பாடியிருப்பதும் , பாடல்களின் பின்னணியை  வைத்தே பி.ஜி யை ஒப்பேற்றியிருப்பதும் குறை . வாலியின் பணியில் பொயட்டு தனுஷ் . வளர வாழ்த்துக்கள் . இயக்குனராகி விட்டதால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பெரிதாக மிளிரவில்லை ...

தனுஷ் மற்றும் வீட்டில் நடப்பதை வைத்தே முதல் பாதியை தேற்றியிருப்பது புத்திசாலித்தனமான திரைக்கதை . அப்பாவுடன் சண்டை போடும் போது
" எனக்கு மட்டும் வில்லன் பேர் ரகுவரன் , தம்பிக்கு  ஹீரோ பேர் கார்த்திக்  " என்று தனுஷ்  ஆதங்கப்படும் இடங்களில் வசனங்கள் பளிச் . ஆனால் தன்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்க்காததால் தான் வேலை கிடைக்கவில்லை என்று கூறும் தனுஷிற்கு  50000 ரூபாய்க்கு  கால் சென்டரில் வேலை கிடைத்தது எப்படியோ ? டைரக்டருக்குத் தான்  வெளிச்சம் .யாரையும் அடிக்கக்கூடாது என்று அம்மா கையில் கட்டிய காப்பால் தனுஷ் அடி வாங்குகிறார் ஒ.கே . ஆனால் அவரோடு வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஏதோ காப்பு கட்டியது போல வில்லனின் அடியாட்களிடம் அந்த மொத்து வாங்குவது ஏனோ ? ...

இரண்டாம் பாதியில் முன்னேறத்  துடிக்கும் ஹீரோவிற்கு முட்டுக்கட்டை போடும் வில்லன் எப்படி இருக்க வேண்டும் ?!. அவரோ அமுல் பேபி போல வந்து அடி வாங்குவதோடு சரி .  வில்லனின் அப்பாவாவது ஏதாவது புத்திசாலித்தனமாக செய்வார் என்று பார்தால்  அவர் அதை  விட மொக்கை. ஹீரோ - வில்லன் ஆட்டம்  நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் சூடு பிடித்திருக்கும் . படத்தின் நீளம் , கன்டினுட்டி பார்க்க  ஆள் இருந்தாரா இல்லையா என்று நினைக்கும் அளவிற்கு  தாடி , தாடியில்லாமல் என்று மாறி மாறி வரும் தனுஷின் தோற்றம் , வேலை வெட்டியில்லாத ஹீரோ , அம்மா சென்டிமென்ட் , தடைகளை தாண்டி ஜெயிக்கும் ஹீரோ என்று வழக்கமான ஃபார்முலா இப்படி குறைகள் இருந்தாலும் சென்டிமென்ட் , ஆக்சன் , ஹீரோயிசம் என்று எதையுமே ஓவர் டோஸ் ஆக்காமல் பெர்ஃபெக்டாக கொடுத்த விதத்தில் வணிக ரீதியாக இந்த வி.ஐ.பி வெல்வான் ...

ஸ்கோர் கார்ட் : 42 



No comments:

Post a Comment