மோடி 100 என்ற தலைப்பில் எக்கச்சக்க விவாதங்கள் , கட்டுரைகள் என கடந்த ஒரு வாரமாகவே எல்லா ஊடகங்களும் அலசி ஆராய்ந்து காயப் போட்டு விட்டதால் நாம் பெரிதாக சொல்வதற்கேதுமில்லை . ஒரு ஷோவை பார்த்து விட்டு விமர்சனம் செய்வதற்கு இது சினிமா அல்ல . ஒரு புதிய அரசாங்கத்தை சரியாக கணித்து சொல்வதற்கு 100 நாட்கள் நிச்சயம் பத்தாது . ஆனாலும் அது எந்த டைரக்சனில் செல்கிறது என்பதை வைத்து அதன் எதிர்கால செயல்பாட்டை கணிக்கலாம் . அந்த வகையில் சார்க் , ப்ரிக் நாடுகளுடனான உறவு , அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் , ஜப்பானிலிருந்து 2 லட்சம் கோடி முதலீடு . பாசிட்டிவான சென்செக்ஸ் குறியீடு போன்றவை இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுகிறது என்பதை உணர முடிகிறது . கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் அரசாங்க நிறுவனங்களிலும் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க சொல்லி அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதும் ஆரோக்கியமான விஷயம் ...
உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க வுக்கு எதிராக பா.ஜ.க மட்டும் நிற்கும் சூழல் உருவானது . ஆனால் நிறைய இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் விலகிக்கொள்ள அ.தி.மு.க அன்னபோஸ்டில் செலெக்ட் ஆகி விட்டார்கள் . ஆளுங்கட்சியின் மிரட்டல் தான் இதற்கு காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்ட , இரண்டு கட்சிகளின் கூட்டு சதி தான் இது என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது . எது எப்படியோ பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து விட்டது . இதே போல 2016 இல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . இல்லையேல் கட்சியின் கனவு அம்பேல் ! ...
ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாடப்படுவதற்கு பயங்கர எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க பெரிய சம்பளம் இல்லாத காரணத்தால் தன்னார்வத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக படித்த செய்தி இது போன்ற கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கி விடுகிறது . நவாப் செரீப் பிரதமருக்கு மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருக்கிறார் . " ஏண்டா காஷ்மீர்ல எங்க ஆளுகள சுட்டுட்டு இங்க மாம்பழத்த கொடுத்தா அத திங்க நாங்க என்ன மாங்கா மடையனுங்களா , அவ் " என்று விஜயகாந்த் ஸ்டைலில் மோடி சொல்லியிருக்கலாமோ ?! ...
நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் தலைமையில் ஒரு விவாதம் . அதில் மீடியா வினரை கழுத்தை நெரித்து விடுவேன் , குழிக்குள் புதைத்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டிய தெலுங்கானா முதல்வரை ஹிட்லர் என்று வர்ணித்தர்கள் . அது சரி , ஆனால் யார் விவாதத்திற்கு வந்தாலும் பேச விடாமல் தானே மிரட்டல் தொனியில் பேசிக் கொண்டேயிருக்கும் அர்னாப் கோஸ்வாமி என்ன முசோலினியா ?! ...
ஒரு படம் ஹிட்டானால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும் தோற்றால் தூக்கிப் போட்டு மிதிப்பதும் பலரது வாடிக்கை . அந்த வகையில் சிறந்த அரசியல் பத்திரிக்கையான துக்ளக் ஒரு கட்டுரையில் அஞ்சான் படத்தை அறுவை சிகிச்சை செய்திருக்கிறது . அந்த கட்டுரையை எழுதியவர் ஆர்வக் கோளாறில் சதுரங்க வேட்டையை இயக்கியவர் லிங்குசாமி எனவும் ( லிங்குசாமி அந்த படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் ) , தமிழ் தாதா வை மையப்படுத்தி வந்த படம் மும்பை எக்ஸ்ப்ரெஸ் (அந்த படம் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ) எனவும் குறிப்பிட்டிருந்தார். படத்தில் தான் லாஜிக் இல்லை அதை விமர்சிக்கும் கடிதத்திலுமா ?!. இப்படி சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத பத்திரிக்கைகள் கூட படத்தை கழுவி கழுவி ஊற்ற குமுதம் மட்டும் நன்று என்று விமர்சனம் போட்டிருப்பது அடடா ஆச்சர்யக்குறி ! ...
இரண்டாவது பாதி திரைக்கதைக்காகவும் , வசனத்திற்காகவும் சலீம் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது . பெரிய ஹீரோ இல்லாமலேயே விறுவிறு திரைக்கதை பார்ப்பவர்களை கட்டிப் போட்டாலும் விஷால் , ஆர்யா யாராவது படத்தில் நடித்திருந்தால் பெரிய கல்லா கட்டியிருக்கும் என்பது பரவலான கருத்து . தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள் . நாளை ரிலீசாகும் சிகரம் தொடு , வானவராயன் வல்லவராயன் , பர்மா ஆகிய மூன்று படங்களில் போஸ்டர்கள் பர்மா வை பார்க்க தூண்டுகிறது . கே டிவி யில் சுப்ரமணியபுரம் போட்டிருந்தார்கள் . என்ன படம் ! . ஒரு சாதாரண நடிகன் சசிகுமாருக்காக சிறந்த இயக்குனர் சசிகுமாரை நாம் இழந்து விட்டோமோ ! ...
நொறுக்குத்தீனி :
கணவன் : நம்ம பையன நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ..
மனைவி : ஏன் உங்கள விட ரொம்ப புத்திசாலியா இருக்கானேன்னா ! ...
மீண்டும் கூடுவோம் ...
1 comment:
Good Mixture of news items with satirical comments. Congrats.
Post a Comment