இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் உலகநாயகனின் படம் . கமல் படம் என்பதோடு மட்டுமல்லாமல் சில சிக்கல்களுக்குள் சிக்கி ஒரு நாள் தள்ளிப் போய் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . குணா , மகாநதி , அன்பே சிவம் போன்ற கமலின் சில படங்கள் கமர்சியலாக தோல்வியை தழுவியிருந்தாலும் நம்மிடையே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் . அந்த வரிசையில் கமர்சியலாக தோல்வியை தழுவி ஆனால் உண்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத படம் உத்தம வில்லன் ...
பெரிய சக்சஸ் ஹீரோ மனோரஞ்சன் ( கமல்ஹாசன் ) தனக்கு வந்த நோய் மூலம் சாவு நெருங்குவது தெரிந்து விட தனது கடைசி படம் குருநாதர் ( கே.பி ) இயக்கத்தில் வரவேண்டி அவருடன் கைகோர்க்கிறார் .வரப்போகும் தங்களது கடைசி படம் எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்து அவர்கள் எடுக்கும் படம் உத்தம வில்லன் . அவர்கள் எண்ணத்தில் தர்ப்பையை போட்டு கொளுத்த என்று சொல்லுமளவுக்கு நம் பொறுமையை சோதிக்கும் இந்திரலோகத்தில் அழகப்பன் தான் அந்த உத்தம வில்லன் . வாழ்வின் கடைசி தருவாயில் இருக்கும் ஹீரோ தனது குருநாதர் , மகன், மனைவி , பழைய காதலி , அவள் மூலம் பிறந்த மகள் , தற்போதைய கள்ளக் காதலி ( அப்பா எம்பூட்டு பேரு !) என்று எல்லோரிடமும் நடத்தும் உணர்ச்சிப் போராட்டங்களை நீ.....ளமாக இருந்தாலும் உத்தமமாக எடுக்கப்பட்ட படத்தை உண்மையில் கெடுக்கும் வில்லன் படத்துக்குள் படமாக வரும் இந்த உத்தம வில்லன் ...
எந்த கேரக்டராக இருந்தாலும் பின்னியெடுக்கும் கமலுக்கு ஹீரோ கேரக்டரையே கொடுத்தால் கேட்கவா வேண்டும் , பின்னி பெடலெடுத்திருக்கிறார் அதே சமயம் உணர்சிக் கொந்தளிப்பான பல காட்சிகளில் அடக்கி வாசித்து மற்றவர்களையும் நடிக்க விட்டிருப்பது அவரின் தனிச்சிறப்பு . குறிப்பாக மகனுடன் அவர் உரையாடும காட்சி மைல்ஸ்டோன் பழைய காதலி இறந்த செய்தி கேட்டவுடன் அவர் காட்டும் ரியாக்ஷன் நெகிழ்வு. உத்தமனாக வரும் காட்சிகள் மொக்கையாக இருந்தாலும் மொத்தத்தில் ஒரு தேசிய விருதை தட்டும் அளவிற்கு இருக்கிறது கமல் என்னும் உன்னத நாயகனின் நடிப்பு ...
பொதுவாக எல்லோரும் குடும்ப டாக்டர் வைத்திருப்பார்கள் . ஆனால் இதில் டாக்டர் ஆண்ட்ரியாவை குடும்பத்துக்கு தெரியாமல் வைத்திருக்கிறார் கமல் . சாகப்போகும் போது கூட கமல் - ஆன்ட்ரியா சில்மிஷங்களுக்கு குறைவே இல்லை . ஹீரோயினாக வரும் பூஜா சில இடங்களில் ஓவர் ஆக்ட் செய்தாலும் ஆண்ட்ரியாவை விட பல இடங்களில் அழகாகவே இருக்கிறார் .
( எந்த எடம்னுல்லாம் குசும்பா கேக்கப்படாது ! ) கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதார்த்தமான நடிப்பில் அழுத்தமாக கவர்கிறார் . கமல் வியாதியை பற்றி தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்திலும் , பழைய காதலியின் கடிதத்தை படிக்கும் போது குற்ற உணர்ச்சியிலும் அவரின் நடிப்பை பார்க்கும் போது " இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பாஸ்கரா ?! " ...
ஆஸ்பத்திரியில் பேசும் ஒரு சீனில் தான் நடிப்பில் யாருக்கும் இளைத்தவள் சாரி சளைத்தவள் இல்லை என நிரூபிக்கிறார் ஊர்வசி . கமலின் மகனாக நடித்திருப்பவர் , மகளாக வரும் பார்வதி , ஜெயராம் ,கே.விஸ்வநாத் என்று எல்லோருமே கிடைத்த கேப்பில் நடிப்பு கெடா வெட்டியிருக்கிறார்கள் . நாசர் & கோ காமெடி என்ற பேரில் செய்யும் கடிகள் மட்டுமே திருஷ்டிப்பொட்டு . ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலம் . டைட்டில் கார்டில் வசனகர்த்தா பெயர் வரவில்லை . ஆனால் " ஆத்மாவுக்கு காது இல்லை " , ஆஸ்பிட்டலில் டாக்டர் ஆண்ட்ரியா ஷர்டை கழட்ட சொல்லும் போது " அதுக்கெல்லாம் டைம் இருக்குமா " போன்ற குறும்பு வசனங்கள் கமல் அக்மார்க் ...
லீட் கேரக்டருக்கு கேன்சர் , பிரைன் டியூமர் என்று நிறைய படங்கள் கோடம்பாக்கத்தில் வந்திருந்தாலும் அதை நுணுக்கமாக கையாண்ட விதத்தில் கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர் ! ரமேஷ் அர்விந்த் . எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் மாஸ் ஹீரோவின் இருட்டு பக்கத்தை காட்டுவதோடு அவர் மகன் செய்யும் லீலைகளையும் போகிற போக்கில் பொசுக்கிப் போடுவது , நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல் ஹீரோவின் பிரச்சனைக்குள் சட்டென நுழைவது , பழைய காதலியை காட்டாமலேயே கடிதம் வாயிலாக அந்த கேரக்டரை கண்முன் உலவ செய்தது , உறவுகளுக்கு இடையேயான உணர்ச்சிகளை சரியாக கையாண்டது , சாகப்போகும் ஹீரோ கடைசிப் படத்தில் சாகாவரம் பெற்ற கலைஞன் வேடத்தில் நடிப்பது , கமலின் உண்மை முகம் அவர் மமகள் பார்வதிக்கு தன் அம்மா எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் வகையில் கமல் தனது மேக் அப்பை கலைப்பது என்று படத்தில் நிறைய நுணுக்கமான , அழுத்தமான சீன்கள் ...
இவையெல்லாமே சேர்த்து படத்தை உயரத்துக்கு கொண்டு போக மற்றொரு பக்கம் பொறுமையை ரொம்பவே சோதிக்கும்படத்தின் நீளம் , ஓவர்டோஸ் சோகக் காட்சிகள் , காமெடி என்ற நினைப்பில் ட்ராஜெடி செய்யும் உத்தமன் படக்காட்சிகள் ( அதிலும் ஷூட்டை பார்த்து விட்டு அவர்களே மாறி மாறி சிரித்துக் கொள்கிறார்கள் , நமக்கு தான் ஒரு எழவும் வர மாட்டேங்குது ) , வெகுஜனங்களை கவராத தொம்மையான ஸ்க்ரீன்ப்ளே இப்படி எல்லாமே உத்தம வில்லனை உருட்டிப் போடுகின்றன . கமலின் நடிப்பு ஒன்றுக்காக மட்டும் எல்லா சோதனைகளையும் தாண்டி ரசிகர்கள் படம் பார்ப்பார்கள் என நினைத்தது காலக் கொடுமை . இப்படி கழுவி கழுவி ஊற்ற படத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் கமல் எனும் நடிகனின் ஒன் மேன் ஷோ படம் விட்டு வெளியே வரும் போது ஒரு லேசான வலியை கொடுக்கத்தான் செய்கிறது ...
ஸ்கோர் கார்ட் : 43
( பின் குறிப்பு : கமல் இனிமேல் தன்னை முழு நடிகனாக மட்டும் ஒப்படைத்து நல்ல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது உத்தமம் )
\\பொதுவாக எல்லோரும் குடும்ப டாக்டர் வைத்திருப்பார்கள் . ஆனால் இதில் டாக்டர் ஆண்ட்ரியாவை குடும்பத்துக்கு தெரியாமல் வைத்திருக்கிறார் கமல்\\ சூப்பருங்க.
ReplyDelete\\கமல் இனிமேல் தன்னை முழு நடிகனாக மட்டும் ஒப்படைத்து நல்ல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது உத்தமம்\\இதேதானுங்க நானும் நெனச்சேன்.
http://sivigai.blogspot.com/2015/05/blog-post.html
Good Review!!
ReplyDelete