நான் ஈ வெற்றியின் மூலம் தமிழகத்தில் கால் பதித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் என்பதையும் தாண்டி தமிழில் ஒரு சரித்திர படம் ( என்ன தான் டோலிவுட ஹீரோவாக இருந்தாலும் ) பார்க்க வேண்டும் என்கிற தாகத்தை தீர்த்து வைக்கிறது பாகுபலி ...
மகாபாரதத்தில் வரும் பங்காளி சண்டை தான் கதை . அர்ஜுனனுக்கு பதில் பிரபாஸ் , துரியோதனுக்கு ரானா , கர்ணனுக்கு சத்யராஜ் , சகுனிக்கு பதில் நாசர் இவர்களை நடிக்க வைத்து கதையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . என்ன அவ்வளவு நேரம் படத்தை பார்க்க வைத்து விட்டு க்ளைமேக்ஸ் இல் முடிவு சொல்லாமல் இன்டர்வெல் ப்ளாக் போட்டு 2016 பார்ட் 2 வில் பார்க்கலாம் என்று முடித்து விட்டார்கள் . இவ்வளவு பெரிய படத்தை இப்படி முடித்திருக்கும் இயக்குனரின் தையிரியத்தை பாராட்டினாலும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை ...
பிரபாஸ் , ரானா இருவருமே சரித்திர கால வேஷத்துக்கேற்றபடி அட்டையில் செய்த கவசத்தை போடாமலேயே நல்ல உடற்கட்டுடன் இருக்கிறார்கள் . ஹீரோ பிரபாஸ் என்ட்ரிக்கு ஒருபடி மேலே இருக்கிறது ரானா வின் அறிமுகம் . ரொமான்ஸ் சீன்களில் மெழுகு பொம்மை போல போல வரும் தமனா சீரியாசக சண்டையும் போட்டு உருக வைக்கிறார் . இவர்கள் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டவில்லை . நாசர் , சத்யராஜ் , ரம்யாகிருஷ்ணன் எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள் . சத்யராஜுக்கு பெயர் படத்தில் கட்டப்பா . என்ன கொடுமைப்பா ! . அனுஷ்கா வின் அழகை ரசிக்க நினைத்து வந்த அங்கிள்களுக்கு ஏமாற்றமே . பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...
ஒளிப்பதிவு , எங்கேயுமே பொம்மைப் படம் போல இல்லாமல் உண்மையிலேயே மிரள வைக்கும் சி.ஜி , அரண்மனை செட் , மிரட்டும் போர்க்காட்சிகள் , விசுவல்ஸ் என்று எல்லாமுமாய் சேர்த்து நம்மை பிரம்மாண்டமாய் கட்டிப் போடுகின்றன . இந்த பிரம்மாண்டத்தையும் தாண்டி நான் ஈ யில் உயிர்ப்பாக இருந்த கதை , திரைக்கதை இதில் மிஸ்ஸிங் . குறிப்பாக கிரேசி மோகனின் வசனங்கள் நான் ஈ க்கு ப்ளஸ் . இழுத்துக் கொண்டு போகும் முதல் பாதி , கொட்டாவியை வர வைக்கும் தமனா - பிரபாஸ் காதல் காட்சிகள் , கொஞ்சம் சலிப்பைத் தரும் நீண்ண்ண் ட சண்டைக் காட்சிகள் , சட்டென முடியும் படம் போன்ற சில குறைகள் இருந்தாலும் இப்பூடி ஒரு படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து அதை வீணாக்காமல் ரசிக்கும் படி தந்த விதத்தில் பாகுபலி நல்ல ஆரம்பம் ...
ஸ்கோர் கார்ட் : 45
பின் குறிப்பு : ( தென் இந்திய இயக்குனரின் படம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான படம் என்பதோடு முதல் மூன்று நாட்கள் வசூலிலேயே எல்லா கான்களையும் தூக்கி சாபிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது )
No comments:
Post a Comment