Vanga blogalam in Facebook

31 January 2016

இறுதிச்சுற்று - IRUTHI SUTRU - ஜெயிக்கும் ...


லைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர் மாதவன் . ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறது இறுதிச்சுற்று ...

தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc ...) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர் சுதா கோங்குரா ...


மாதவன் அழகாக இருந்தாலும் அவரிடம் உள்ள  சாக்லேட் பாய் இமேஜ் நெருடும் . வெறும் உடம்புடன் வரும் முதல் சீனிலேயே அதை சுத்தமாக உடைத்தெறிந்து நம்மை உள்வாங்குகிறார் மேன்லி மாதவன் . இந்த உடற்கட்டுக்காக வருடக்கணக்கில் அவர் போட்ட உழைப்பு வீண்போகவில்லை .  மனைவி ஓடிப்போனதை சொல்லும் போது காட்டும் ஆதங்கம் , மாணவி வேண்டுமென்றே தோற்கும் போது காட்டும் கோபம் , நீ அவ்ளோ தாண்டா என்று சொல்லும் போது காட்டும் நக்கல் என படம் முழுவதும் கோபக்கார கோச் பிரபு வாக வியாபித்து நிற்கிறார் மாதவன் . இனிமேல் இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்துவார்  என்று நம்புவோமாக ...

மதி ரோலுக்கு பாக்சர் ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்ததோடு விட்டு விடாமல் அவர் முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு . பொண்ணு பின்னி பெடெலெடுத்திருக்கு . மாதவனுக்கு ஈக்குவலாக ஏன் ஒரு படி மேலாகவே ரித்திகா நம்மை கவர்கிறார் என்றால் மிகையாகாது . வேண்டுமென்றே தோற்று விட்டு மாதவனை பார்த்து நக்கலாக சிரிக்கும் இடம் ஒன்றே போதும் இந்த பொண்ணோட திறமைக்கு சான்று ...



மதியின் அக்கா லக்ஸ் ( மும்தாஸ் ) கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் டிலிருந்து  சற்று விலகி நிற்கிறது படம் . எனக்கு ஏன் மாஸ்டர் நீங்க அவள  மாதிரி கோச்சிங் கொடுக்கல என்று அவர் ஆதங்கப்படுவதும் , அதற்கு மாதவன் பதிலளிப்பதும் உருக்கம் . காளி வெங்கட் , ராதா ரவி குறிப்பாக நாசர் என எல்லோருமே இறுதிச்சுற்றில் நம்மை இறுக்கிப்பிடிக்கிறார்கள் . ஏற்கனவே லீ படத்தில் பார்த்த அதே ரோலில் ஜாகிர் ஹுசைன் . இவர் மாதவனிடம் பேச்சோடு பேச்சாக ஐடி கார்டை வாங்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . சந்தோஷ் நாராயணின் இசை , சிவகுமார் சூரியனின் ஒளிப்பதிவு , சதீஷ் சூரியா வின் எடிட்டிங் என எல்லாமுமே படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன . அருண் மகேஸ்வரனின் கவுச்சியான வசனங்கள் கவுதம் மேனன் படங்களை சில நேரம் நினைவு படுத்தினாலும் நிறைவு ...

உலக அளவில் நிறைய படங்களில் பார்த்த வாழ்ந்து கெட்ட கோச்சின் கதை , அதில் வழக்கமான அரசியல் பண்ணும் வில்லன் , மாஸ்டரின் பேரைக் காப்பாற்றும் மாணவி என கதையில் எதுவுமே புதுசாக இல்லாமல் போனாலும் கேரக்டர்களுக்குள் நம்மை கொண்டு செல்லும் டீட்டைளிங்கிலும், ( குறிப்பாக மாதவன் வரும் முதல் சீனிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொன்ன விதம் ) ப்ரெசெண்டேசனிலும் தான் மணிரத்னத்தின் மாணவி என்று நிரூபிக்கிறார் சுதா கோங்குரா . இது போன்ற கதைகளில் கிளைமேக்சில் ஒரு சண்டை வரும், அதில் முதலில் அடி வாங்கும் லீட் கேரக்டர் பிறகு எதிராளியை வீழ்த்தி ஜெயிக்கும் என்று தெரிந்த சீனாக இருந்தாலும் இதில் மதி ஜெயிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நம்முள் விதைத்த விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் , ஆணாதிக்கம் , அதிகார துஷ்பிரயோகம் இவற்றை அழுத்தமாக சொன்ன விதத்திலும் , இரண்டு மணி நேர படம் முடிந்த பிறகும்  பிரபு , மதி இருவரையும் பற்றி நம்மை நினைக்க வைத்த வகையிலும் இறுதிச்சுற்று ஜெயிக்கும் ...

ரேட்டிங்  : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 



No comments:

Post a Comment