Vanga blogalam in Facebook

28 May 2016

உறியடி - URIYADI - உரத்த அடி ...


" நீங்க என்ன சாதி " - இந்த கேள்வி ஏதோ கல்யாணத்திற்கு ஜோடி தேடுபவர்களால் கேட்கப்படும் சம்பிரதாயமான கேள்வியாக இல்லாமல் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடம் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருக்கும் அளவிற்கு இன்றைய அரசியலில் சாதி இரண்டறக் கலந்துவிட்டது. ஆனால் ஒரு மாணவன் சாதி பார்த்து சக நண்பனையோ , காதலியையோ தேர்ந்தெடுப்பதில்லை .  அப்படி சாதி பார்க்காத மாணவர்களை பலியாடாக்க நினைக்கும் சாதி அரசியலை தான் இயக்கி , நடித்து , தயாரித்த முதல் படத்திலேயே  தோலுரித்துக் காட்டிய விஜய் குமாருக்கு வாழ்த்துக்கள் ...

கல்லூரி விடுதியில் தங்கி சரக்கடிக்கும் சாரி படிக்கும் நான்கு மாணவர்கள் சாதிய அரசியலுக்குள் விழுந்து ரத்தமும் , சகதியுமாய் எழுவதே உறியடி . இந்த சின்ன ஒன்லைனை வைத்து இரண்டு மணி நேர படத்தை சஸ்பென்சோடும் , சென்சிபிலான ஸ்க்ரீன்ப்ளே வோடும் சேர்த்து நம்மை ஒன்ற வைத்த விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் . அதே சமயம் வெளியூரில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் பற்றிய எந்த சிந்தனையுமே இல்லாமல் சரக்கடிப்பது இல்லை ஆளை அடிப்பது இந்த இரண்டை மட்டுமே முழு நேர வேலையாக செய்வது போல காட்டியதை தவிர்த்திருக்கலாம் ...

விஜய் குமார் செய்யும் ஆக்சன்களுக்கு தடையாக இருப்பது அவர் அமுல்பேபி முகம் . ஆனாலும் முதல் படம் என்பது தெரியாமல் இயல்பாக நடித்திருப்பதோடு நிறைய புது முகங்களையும் அதே போல நடிக்கவும்  வைத்திருக்கிறார் . நண்பர்களாக வருபவர்களுள் குவாட்டர் கவர்கிறார் . படத்தில் தெரிந்த ஒரே முகம் மைம்கோபி நம்மை ஏமாற்றவில்லை . ஆனால் இவருடைய எண்ணம் நமக்கு முன்பே தெரிந்து விடுவதால் பெரிய ட்விஸ்டை கொடுக்கவில்லை ...


சாதியை சொல்லி ஒரு பெரியவரை கடைக்குள்  அனுமதிக்க மறுப்பதும் அதை அந்த மாணவர்கள் எதிர்ப்பதுமான அந்த சீன் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது . அதை  தொடர்ந்து வரும் சீன்களும் விறுவிறுப்பை கூட்டுகின்றன .  பைத்தியம் மேட்டர் சஸ்பென்சாக இருந்தாலும் குழப்பத்தையும் , சில கேள்விகளையும் எழுப்புகிறது . நடக்கப் போவதை கேரக்டர்கள் நினைத்துப் பார்ப்பது போன்ற சீன்கள் க்ளைமேக்ஸில் கை கொடுத்த அளவிற்கு மற்ற இடங்களில் கொடுக்கவில்லை ...

நடிகர்ளை வேலை வாங்கிய விதம் , திரைக்கதை போன்றவற்றில் முதிர்ச்சி தெரிந்தாலும் மேக்கிங் வைஸ் ஒரு அமெச்சூர்னஸ் தெரிவதை மறுப்பதற்கில்லை . காதல் , காமெடி இதெற்கெல்லாம்  தனி  ட்ராக் வைக்காமல் ஒரு அளவோடு நிறுத்தியதற்கு பாராட்டுக்கள் . அதுவும் பஸ்ஸில் வாந்தியெடுக்கும் சீனில் கைதட்டல் அடங்க நேரமாயிற்று . இன்டர்வெலுக்கு முந்தைய லீட் சீன் வளர்ந்து வரும்  மாஸ் ஹீரோவுக்கு அல்டிமேட் ...

படம் சீரியசாக போனாலும் ஒரு கம்ப்ளீட்னஸ் இல்லாதது குறை . கொஞ்சம் பிசகினாலும் சுப்ரமணியபுரம் , மெட்ராஸ் மாதிரி ஒரு புதுப்பையன் எடுத்த்திருக்கான்பா என்று சொல்லக்கூடிய அபாயம் உள்ள கதையை கமர்சியல் காம்ப்ரமைஸ் எல்லாம் செய்து கொள்ளாமல் அடுத்தடுத்து ஆடியன்சை யோசிக்க வைத்து வேறு மாதிரி சீனை முடித்தததோடு , தன் மேல் உள்ள நம்பிக்கையில் சொந்த காசை போட்டு ரிஸ்க் எடுத்து கொடுத்ததுக்காக  இயக்குனருக்கு ஒரு சல்யூட் . யோசித்த அளவுக்கு சில இடங்களில் எக்ஸிக்யூஷன் இல்லையே என்கிற குறை இருந்தாலும்
சின்ன பட்ஜெட்டில்  புதுமுகங்களை வைத்துக்கொண்டு முதல் படத்திலேயே விஜய் குமார் அழுத்தமாக கொடுத்திருக்கும் உறியடி உரத்த அடி ...

ரேட்டிங்    : 3.5 * / 5 *

ஸ்கோர் கார்ட்  : 45

No comments:

Post a Comment