Vanga blogalam in Facebook

25 December 2019

அவன் - அவன் - நிலா ( 14 ) ...


கார்த்திக் சுந்தரியை பற்றிய யோசனையில் இருந்ததால் இரண்டு தம்மோடு நிறுத்திக்கொண்டான் இல்லையேல் அந்த அரைமணி நேர நடையில் குறைந்தது நான்காவது கரைந்திருக்கும் . அவன் மனதை புரிந்து கொண்டு அவள் புகை பிடிப்பதை முழுவதுமாக நிறுத்த சொல்லாமல் குறைத்துக்கொள்ள சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது . அது போல செய்ய ஆரம்பித்தது அவனுக்கு பலனளித்தது .  காதலையும் அது போலவே  தடாலடியாக நிறுத்தினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது . மூளைக்குள் உட்கார்ந்து யாரோ சம்மட்டியால் அடிப்பது போல ஒரு வேதனையை கொடுக்கிறது . சில சமயம் சண்டை முற்றிப்போய் சுந்தரியிடம் " சரி தான் போடி , நீயில்லேன்னா எனக்கு வேற ஆள் இல்லையா " என்று கத்திக்கொண்டு வந்திருக்கிறான் . ஆனால் உண்மையிலேயே அவனுக்கு அவளை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது அந்த பிரிவில் தான் புரிந்தது . மனதை மாற்ற அப்படியே வேறு யாருடன் பழகினாலும் அவர்கள் உடலில் அவள் முகமே பொதிந்து நின்றது . இப்போது அவள் எப்படி பேசியிருப்பாள் , சிரித்திருப்பாள் என்று அவள் பிம்பமே அவனை ஆக்கிரமித்தது .  நார்மலாக அவன் மனதை ஓரளவு ஆக்ரமித்திருந்தவள் பிரிவின் போது மொத்தமாக ஆட்சி செய்தாள் என்றே சொல்லலாம் ...

மெயின் ரோட்டுக்கு வந்தவுடன் டாப்பை ஒரு பார்வை பார்த்தவனுக்கு அங்கே யாரும் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது . என்ன நாம ஊர்ல இல்லாத நேரமா பார்த்து எல்லா பசங்களும் திருந்திட்டாய்ங்களா ? என்று யோசித்துக்கொண்டே தெருவுக்குள் இறங்கினான் . இந்த நிசப்தம் அவனுக்கு எதையோ உணர்த்தியது . அந்த தெருவை இப்படியெல்லாம் அமைதியாக இருந்து அவன் பார்த்ததேயில்லை . என்ன நடந்திருக்கும் என்பதை சிலோன் ரேடியோவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என யூகித்தான் . நாட்டு  நடப்புகளை உண்மையான சிலோன் ரேடியோ சொல்லும் என்றால் அவன் தெருக்கோடியில் மளிகை கடை வைத்திருந்த இலங்கை அகதி ஏரியா செய்திகளை அப்படியே புட்டு புட்டு வைப்பார் . கார்த்திக் நேராக அவர் கடைக்கு சென்றான் . 45 வயதில் முன் தலை முழுவதும் சொட்டை விழுந்தாலும் ஆள் பார்க்க கம்பீரமாக இருப்பார் . உண்மையிலேயே ஆள் செய்தி வாசிக்கப் போகலாமென சொல்லும் அளவிற்கு நல்ல குரல்வளம் ...

கடையில் தக்காளி வாங்கிக்கொண்டிருந்த பெண் போகும் வரை அமைதியாக இருந்த கார்த்திக் " என்னண்ணே  ஆச்சு ? பசங்க ஒருத்தனையும் காணோம் " என்று கேட்டான் .  இவனுக்கு பதில் சொல்வதற்காகவே அந்த கடையில்  காத்திருந்தவர் போல " என்ன தம்பி உனக்கு விஷயமே தெரியாதா ? ரமேஷோட அண்ணனை யாரோ வெட்டிட்டாங்களாம் , ஆள் குத்துயிரும் கொலையுயிருமா ஜி.ஹெச் ல கெடக்காரு , பயலுகல்லாம் அங்க தான் போயிருக்காங்க " , அவர் சொன்ன மாத்திரத்திலேயே அவனுக்கு தொண்டை அடைத்தது . சில மாதங்களுக்கு முன்னாள் தான் அவரது கம்பீரத்தை அருகில் இருந்து பார்த்தான் . கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பார்கள் , ஆனால் அவன் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை . ரமேஷ்  பற்றி யோசிக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது . அண்ணன் சில வருடங்களில் அரசியலில் மிகப்பெரிய ஆளாக வந்துவிடுவார் அதன் பிறகு நம் ராஜ்ஜியம் தான் என்று கனவு கண்டு கொண்டிருந்தான் ...

ஒரு முறை ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென உதயமான அண்ணன் மிக குஷியில் இருந்தார் . அவர் நடையிலேயே சரக்கடித்திருக்கிறார் என்பது தெரிந்தது .
" என்ன தம்பி ரமேஷுக்கு படிப்பு சொல்லித்தருவன்னு  பார்த்தா சினிமாக்கதை பேசிக்கிட்டு இருக்க ?! " அவர் கேட்பதிலேயே அவனை சும்மா காலை வாருகிறார் என்பது புரிந்தது . " அண்ணே அவன் பெரிய டைரக்டரா வரப்போறான்னே , கதையை கேட்டா மிரண்டுருவ " . ரமேஷ் உடனே புகுந்து அண்ணனுக்கு சீரியசாக விளக்கிக்கொண்டிருந்தான் . " அப்படியென்னடா மிரட்டுற  மாதிரி கதை , பேய்க்கதையா ?" அவர் சிரித்துக்கொண்டே கேட்டார் .
" இல்லேண்ணே , ஒரு சாதாரணமான ஆள் ஒரு பிரச்சனையால் ரவுடியாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து கடைசியா ஸ்டேட்டோட சி.எம் ஆகுற கதை " . கார்த்திக் சொன்னவுடனே அவனை கொஞ்ச நேரம் பார்த்தவர் ,
" தம்பி அதெல்லாம் சினிமாவுல தான் நடக்கும் , நிஜத்துல கொஞ்சம் மேல வரதுக்குள்ள  குத்திப்போட்டு போய்டுவானுங்க " என்றார் . அவர் சொன்ன யதார்த்தத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை ...

" அண்ணே சும்மா உளராத " என்று ரமேஷ் அவரிடம் கோபப்பட்டான் .
" நெருப்புன்னா சுடுமாடா , ஆனா தம்பி சொல்ற மாதிரி நடக்குறதெல்லாம் நூத்துல ஒன்னு , ரொம்ப சிலர் தான் அமைச்சரால்லாம் கூட ஆகியிருக்காங்க".  " நாம இங்க சொல்றது எதுவுமே எங்கோ ஒரு இடத்துல நடந்தது தான் , இல்ல நடக்கப்போறது தான் " .
கார்த்திக் தீர்க்கமாக சொன்னதை அவர் ஆச்சர்யமாக பார்த்தார் .
" நல்லா பேசுறாண்டா " என்று தம்பியிடம் அவனுக்காக சர்டிஃபிகேட் கொடுத்தார் . " சரி அப்படி என்னதான் கத வச்சுருக்க சொல்லு கேட்போம் " என்று சொல்லிக்கொண்டே மாணிட்ச்சந்தை பிரித்து வாயில் போட்டுக்கொண்டார் . அவன் கதையை சுருக்கமாகவும் , முக்கியமான சீன்களை மட்டும் விலாவாரியாவாகவும் விவரித்தான் . " டே என்னடா , நம்ம சுடுகாட்டு மேட்டர் , பஸ் சண்டைல்லாம் வச்சுருக்க " . " ஆமாண்ணே சினிமாவோ , நாவலோ நடந்ததோட தொகுப்பு தானே ,  மானே , தேனே போடுற மாதிரி நம்ம கற்பனைய சேத்துக்கணும் " .  இதுவரை நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த கதையை இப்போது தான் அண்ணாந்து பார்க்கும் ஒருவரிடம் அதுவும் இந்த கதைக்கான சீன்களை யாரை உற்று நோக்கி எடுத்துக்கொண்டானோ அவரிடமே சொல்வது அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது ...

" அதென்னமோ தெரில ஆனா நேர்ல பார்த்ததை விட நீ சொல்றது சுவாரசியமா இருக்கு , அதுவும் இண்டெர்வெல் பிளாக் சூப்பர் " , அவன் ஆடியன்ஸிடம் எதை எதிர்பார்த்தானோ அதை சரியாக சொன்னார் . அவன் வைத்த சீன்களின் ஒரிஜினல் சம்பவங்கள் தெரிந்த அவருக்கே இது பிடிக்கும் போது புதுசாக பார்ப்பவர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று அவன் யூகித்தான்.
" இத படமா எடுக்க என்ன ஒரு அஞ்சு லட்சம் ஆகுமா ?" அவர் அப்பாவியாக கேட்க அவன் சிரித்துக்கொண்டே " இல்லேண்ணே மினிமம் அம்பது லட்சம் ஆகும் , அதுவும் பெரிய ஹீரோவா போடாம இருந்தா " . அவன் சொன்னதைக் கேட்டு அவர் வாயடைத்துப்போனார் . " என்னப்பா சொல்ற பெரிய ஹீரோ இல்லாமயே அவ்ளோ ஆகுமா ?" . " ஆமாண்ணே புதுசா சங்கர் னு ஒரு டைரக்டர் வந்து சினிமாவோட டைமென்ஷனையே மாத்திட்டார் " .
" ஒரு பாட்டுக்கே நூறு மும்பைக்காரிகளை ஆட விடுவாரே அவர் தானே ?,
ஆனா அவர் படமெல்லாம் செம்மப்பா , இந்தியன நானே நாலு தடவ பாத்துட்டேன் " . சினிமாவுக்கு  சாமான்யனிலிருந்து ராஜா வரை யாரையும் கட்டிப்போடும்  மகிமை இருக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
யாரிடமும் அவ்வளவாக பேசிக்கொள்ளாதவர் சினிமாவை பற்றி அவனிடம் அளவளாவிக்கொண்டிருந்தார் ...

" அம்பது லட்சம் என்ன , அஞ்சு கோடி கொடுக்குற ஆளுங்கள கூட நமக்கு தெரியும் " . அவர் சொன்ன போது அவனுக்கே கேட்க ஆசையாக  இருந்தது .
" என்ன தம்பி சும்மா புருடா விடுறேன்னு பாக்குறியா " , அவர் கேட்டவுடன்
" சே , சே இல்லேண்ணே ஆச்சர்யமா பார்த்தேன் " . அவர் மெதுவாக சென்று அங்கே இருக்கும் வாஷ்பேஷனில் எச்சில் துப்பி விட்டு வந்தார் .
" சீரியஸா சொல்றேன் கேட்டுக்க , நம்ம பரமு அண்ணன் கிட்ட இல்லாத பணம் இல்ல , என்ன போன எலக்சன்ல நெறைய பணத்தை விட்டுட்டாரு , ஜெயிச்சிருந்தா கதை வேற " . அவர் பரமு அண்ணனுக்கு எவ்வளவு க்ளோஸ் என்பது ஊருக்கே தெரியும் . " ஒன்னும் பிரச்சனை இல்ல , இன்னும் ஆறு மாசத்துல விட்டத எடுத்துருவாப்புல , நான் உன்ன அங்க கூட்டிட்டு போறேன்".
அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து அவர் பேசியது அவனுக்கு பெருமையாக இருந்தது . " இப்போ நீ சொன்னதெல்லாம் அப்படியே படமா எடுத்துடுவியா " அவர் கேட்கும் போது பயமும் கூட வந்தது  .
" இல்லேண்ணே நான் முதல்ல  அசிஸ்டன்டா ஒர்க் பண்ணனும் , அதுக்கப்புறமா தைரியமா எடுக்கலாம் " . " ஏன்பா இந்த நாயகன் படம் எடுத்தாரே அவர் பேரென்ன ?" , ரமேஷ் உடனே " மணிரத்னம் " என்று சொல்லி தனக்கும் சினிமா தெரியும் என்பது போல பார்த்தான் . " ம் , அவர்லாம் யார்ட்டயும் ஒர்க் பண்ணலன்னு சொல்றாங்க ?! " . 
" உண்மை தாண்ணே  , ஆனா அவர் ஃபாரீன்ல போய்  கோர்ஸ் படிச்சாரு ப்ளஸ் அவருக்கு ஃபேமிலி பேக்கப் நல்லா இருந்தது ,
அதோட அவர் செம்ம டேலெண்டெட்  " என்று அவனுக்கு தெரிந்ததை வரிசையாக  சொன்னான் ....

" இருக்கலாம் , ஆனா அவர் மேல நம்பிக்கை வச்சு பணம் போட்டாங்கள்ள அதான் மேட்டர் " . ஆமாம் அவர் சொல்வது உண்மை தான் , இங்கே திறமை இருப்பவர்கள் அனைவருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை , வாய்ப்பு கிடைத்த அனைவரும் வெற்றி பெறுவதில்லை , வெற்றி பெற்ற  அனைவரும் அதை தக்க வைத்துக்கொள்வதில்லை . சினிமா என்றுமே ஒரு மாய உலகம் .
" தம்பி நீ கதையை ரெடி பண்ணிக்கோ , அப்படியே யார்ட்டயாவது ஒர்க் பண்ணிக்கோ , உன்ன அவர்கிட்ட போய் உக்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு " அவர் பேச்சு அவனுக்கு உற்சாக டானிக் போல இருந்தது .
கதையை மேலும்  மெருகேற்ற வேண்டுமென நினைத்துக்கொண்டான் . லைப்ரரிக்கு போய் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் . ஒரு நெடு பயணம் போக வேண்டும் , அப்பொழுத் தான் நிறைய புது மனிதர்களை , சம்பவங்களை பார்க்க முடியும் . " சரி தம்பி , நீ சினிமா கதையை ரெடி பண்றதோட சேர்த்து இவனையும் பாஸ் பண்ண வச்சுடு " . என்று ரமேஷை பார்த்து கை  நீட்டி சொல்லிக்கொண்டே அவர் மொட்டை மாடியில் அவருக்கென பிரத்யேகமாக இருக்கும் ரூமுக்கு போனார் ...

சமீபத்தில் ரமேஷை பார்த்த போது  கூட அவன் அண்ணன் கார்திக்கையும் , அவன் கதையை பற்றியும் விசாரித்ததாக சொன்னான் . அதுவும் அவர் யாரைப்பற்றியும் அவ்வளவு மெனெக்கெட்டு விசாரித்ததில்லை , கடந்த முறை பரமு அண்ணன் வந்த போது கூட அவன் மேட்டரை காதில் போட்டு வைத்திருப்பதாகவும் சொன்னது அடுத்த ஒரு வருடத்துக்குள் ஆட் ஏஜென்சி அனுபவத்தை வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட வேண்டுமென திட்டமிட்டிருந்தான் .  ஆனால் எல்லாமே ஒரு நொடியில் தகர்ந்து விடுகிறது .
அவர் தீர்க்கதரிசனமாக அன்றே  சொன்னது அவன்  நினைவுக்கு வந்தது .
சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தவன் வீட்டுக்கு போய் யமஹா சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடியானான் . " வந்ததும் வராததுமா எங்கடா போற " என்று கேட்க எத்தனித்த அம்மா அவன் கத்தலுக்கு  பயந்து பேசாமல் இருந்தாள்  . " என்னடி பேசாம நின்னுட்ட , துரை எங்க போகப்போறாரு , முக்குல தோஸ்துங்க கூட நின்னு தம்மை ஊத்தப்போறாரு "
அவன் அப்பா குரல் கேட்டதும் அவரை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு அந்த கோபத்தை வண்டியின் கிக் ஸ்டார்ட்டில் காண்பித்தான் ...

மெயின் ரோட்டுக்கு வந்த போதே கும்பல் கும்பலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் . இவனை பார்த்து கூட சிலர் முணுமுணுப்பது போலவே அவனுக்கு இருந்தது . வண்டியை ஒரு பெட்டிக்கடையில் ஓரங்கட்டி ஹாஃப் பாக்கெட் கோல்ட் பிளேக் ஃபில்டர் வாங்கிக்கொண்டான் . அதில் ஒன்றை எடுத்து  பற்ற வைப்பதற்குள்ளே  மொக்கை அவனை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது . கார்த்திக்கிடம் நெருப்பை வாங்கி ஒரு சிசர்ஸை பற்ற வைத்த மொக்கை " மாப்பிள உன்ன பாக்க தான் வேகமா வந்துக்கிட்டு இருக்கேன் " என்றான் . அண்ணன் குத்துப்பட்டதாய் சொல்ல தான் வந்திருக்கான் என்பது புரிந்தது . " ம் சிலோன் அண்ணன்  சொன்னாரு , ஜி.ஹெச் சுக்கு தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன் " . கார்த்திக் சொன்னதை கேட்டு வெறுமையாக பார்த்த மொக்கை " இல்ல மாப்பிள்ளை ஜிஹெச் போகத் தேவையில்லை " என்றான் . " என்னடா ஆச்சு  ?"
" இல்ல  மாப்பிள்ளை டாக்டர்ஸாலயும் காப்பாத்த முடில , அவ்வளோ வெட்டு உடம்பு ஃபுல்லா , அண்ணன் செத்துட்டாரு " . அவன் சொன்னதை கேட்டவுடன் கார்த்திக்கின் வாயிலிருந்த சிகெரெட் தவறி கீழே விழுந்தது .
" நாம அவர் வீட்டுக்கே போய்டலாம் , பாடிய கொண்டு வந்துடுவாங்க"
அவனை போன்றவர்களுக்கு ஒரு ஆளுமையாக இருந்த ஒரு மனிதன் இறந்த சில நிமிடங்களிலேயே அஃறிணையாக மாறியது அவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது . அடுத்தடுத்து விதி விகாரமாக தனது கோரைப்பற்களை அவனுக்காக காட்ட காத்துக்கொண்டிருந்தது ...

தொடரும் ...









No comments:

Post a Comment