Vanga blogalam in Facebook

26 March 2017

கடுகு - KADUGU - காரத்தை குறைத்திருக்கலாம் ...


ரண்டாவது  படம் கோலி சோடா மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் . முதல் படம் போலவே மூன்றாவது படத்திலும் தனது கதையை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார் . பரத் - ராஜகுமாரன் என்று வித்தியாச கூட்டணியிலேயே  புருவம் உயர்த்த வைத்தவர் அதில் ஜெயித்தாரா ? பார்க்கலாம் ...

அழிந்து போன புலிவேஷக்கலையின் மிஞ்சியிருக்கும் சொற்ப கலைஞர்களுல் ஒருவன் புலி ஜே பாண்டி ( ராஜகுமாரன் ) . தரங்கம்பாடி க்கு 
மாற்றல் ஆகும் இன்ஸ்பெக்டருடன் எடுபிடியாக செல்லும் பாண்டி அங்கே 14 வயது சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக வெடித்து சிதறுவதே கடுகு ...

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதையை படித்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது . ஆனால் சினிமாவில் யாரும் தொடாத அந்த புலிவேஷத்தை கையிலெடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . குள்ளமான தோற்றத்தில் சாதுவாக இருக்கும் ராஜகுமாரன் இந்த கேரக்டருக்கு சரியான தேர்வு . முதல் சீனிலேயே அவருடைய கேரக்டரை எஸ்ட்டாப்ளிஸ் பண்ண விதம் சிறப்பு . சாது மிரண்டால் பாணியில் அவர் க்ளைமேக்க்ஷில் பொங்கி எழுவது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தாலும் யதார்த்த கதைக்களனுக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது . அதுவும் இடைவேளைக்கு பிறகு அவர் நிறைய அழுது கொண்டே இருப்பது தொய்வு ...


ஓவர் ஆக்டிங்க் செய்து நம்மை சில இடங்களில் நெளிய வைக்கும் ராஜகுமாரனுக்கு எதிர்ப்பதமாக தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார் பரத் . தவறிழைக்கும் மந்திரியை பலமிருந்தும் சுய லாபத்துக்காக எதிர்க்காமல் மவுனம் காத்து குற்ற உணர்ச்சியில் வாடும் நம்பி யாக வரும் பரத் பெர்ஃபெக்ட். ஆனால் இவர் நல்லவரா ? கெட்டவரா என்கிற குழப்பம் இயக்குனருக்கே இருந்திருக்கும் போல . புலி வேஷம் கட்டுபவர்  என்று என்ன தான் லாஜிக் சொன்னாலும் பக்கா பாக்சரான பரத் தை ராஜகுமாரன் பாய்ந்து பாய்ந்து அடிப்பதெல்லாம் காதில் பூ . இதற்கு பதில் பரத் எவ்வளவு அடித்தும் இவர் நியாயத்துக்கு போராடுபவராக காட்டி அதன் மூலம் பரத் மனம் திருந்துவது போல காட்டியிருந்தால் யதார்த்தமாக இருந்திருக்கும் ...

விஜய் மில்டனின் சகோ பரத் சீனிக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை . முதல் பாதி தொய்வில்லாமல் நகர்வதற்கு இவர் முக்கிய காரணம் . அதே போல இவர்  காதலில் நடக்கும் ஆள்  மாறாட்டம் பெரிதும் கவரவில்லை . காதலுக்கு வெளி அழகு முக்கியமில்லை என்பதை தெளிவாக உணர்த்தும் கேரக்டராக டீச்சர் எபி . அதில் நடித்திருக்கும் பிரசித்தா வுக்கும் , அந்த கேரக்டரின் பின்புலத்தை சி.ஜி மூலம் நெகிழ்ச்சியாக சொன்ன விதத்துக்கும் பாராட்டுக்கள் ...


" கெட்டவங்களை விட தப்பு நடக்கும் போது தட்டிக்கேக்காம போற நல்லவங்க தான் தப்புக்கு காரணம் " , " நேத்து வரை அண்ணா , மாமா ன்னு அசையா பேசின பொண்ணு இன்னிக்கு ஆம்பளைங்கள பாத்தாலே பயந்து ஓடுறா சார் " போன்ற வசனங்கள் சூப்பர் . ஃபேஷ்புக் , வாட்ஸ் அப் என்று நடப்பு தொழில் நுட்பத்தை வைத்து காமெடி செய்திருப்பது அருமை . முதல் பாதியை தொய்வில்லாமல் நகர்த்தி இடைவேளையில் டென்ஷனோடு முடித்த திரைக்கதைக்கு  ஒரு பூங்கொத்து . ஆனால் இடைவேளைக்கு பிறகு நடக்கும் ட்ராமாக்களை பார்க்கும் போது  நல்லாத் தானேய்யா போய்கிட்டு இருந்துச்சு என்று கேட்கத்  தூண்டுகிறது ...

எளியவன் வலியவனை எதிர்க்கும் கதை . இதில் கடைசியில் எளியவன் ஜெயிப்பதைத் தான் அனைவரும் விரும்புவார்கள் என்று இயக்குனருக்கும் தெரியும் .  அதையே செய்திருக்கிறார் ஆனால் ஓவர் எமோஷனலை பிழிந்து . பரத் கேரக்டரில் உள்ள குழப்பம் , எமி டீச்சர் பிரச்சனை  தெரிந்தும் அந்த சிறுமியை நேரில் பார்க்காமலேயே இருப்பது , சிறுமி அந்த பிரச்சனையை தாயிடம் கூட சொல்லாமல் தற்கொலை அளவு போவது , பக்கா சினிமாத்தனமான கிளைமேக்ஸ் சண்டை இப்படி குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன . கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் . என்ன கொஞ்சம் காரத்தை குறைத்திருக்கலாமோ என்று தோன்றினாலும் நாட்டில் சுற்றி நடக்கும் பாலியல் வன்முறைகளை பார்க்கும் போது இது போன்ற கன்டென்ட் சூழலுக்கு தேவையானது தான் ...

ரேட்டிங்க்  : 3.25 * / 5 *  

ஸ்கோர் கார்ட் : 43



No comments:

Post a Comment