Vanga blogalam in Facebook

11 February 2018

கலகலப்பு 2 - KALAKALAPPU 2 - குறைவு ...


வெற்றியடைந்த படத்தின் சீக்குவல் வருவது கோலிவுட்டில் பிரபலமாகி வருகிறது . அந்த வரிசையில் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 . முதல் பாகத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மிர்ச்சி சிவா மட்டும் ரீட் டைன் செய்யப்பட்டிருக்கிறார் . அப்படியே அந்த பாகத்தின் ரெஃப்ரெஷ்ஷான காமெடியையும் ரீட் டைன் செய்திருக்கலாம் ...

மந்திரியின் சொத்து ரசிகசியங்கள் அடங்கிய லேப்டாப் பை  வைத்துக்கொண்டு அவரை பணம் கேட்டு மிரட்டுகிறார் ஆடிட்டர் . ஏற்கனவே பணப்பிரச்சனையில்  இருக்கும் ஜீவா , ஜெய் மற்றும் அந்த பிரச்சனைக்கு காரணமான சிவா இவர்கள் கையில் லேப்டாப் சிக்க பிறகு என்ன ஆனது என்பதை தனது வழக்கமான பாணியில் அதே வழக்கமான நட்சத்திர பட்டாளத்துடன் சேர்ந்து சொல்லியிருக்கிறார் சுந்தர்.சி . முதல் பாகத்தில் ஹோட்டல் , வைரத்துக்கு பதில் இதில் மேன்ஷன் , லேப்டாப் என மாற்றியிருக்கிறார்கள் ...

ஜீவா , ஜெய் இருவரும் ஜி ஜி என்று அழைத்துக் கொள்கிறார்கள் . கேத்தரீனா , நிகில் இருவரும் சீ சீ என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் கவர்ச்சீயாக வந்து ஆட்டிவிட்டு சாரி ஆடிவிட்டு போகிறார்கள் . அவ்வளவு பெரிய பட்டாளத்தில் மிர்ச்சி சிவா வை தவிர ராதா ரவி யின் உதவியாளர் , ரோபோ சங்கர் , யோகி பாபு போன்றோர் கவனிக்க வைக்கிறார்கள் ...


ஒரு செலஃபீ பாட்டு தவிர மற்றவை ஸ்பீட் பேக்கர்ஸ் , சுந்தர் சி படத்தில் லாஜிக் கையெல்லாம் காமெடி மறக்க வைத்து விடும் . கலகல 2 வில் படம் நெடுக திகட்டினாலும் ஏதாவது ஒரு கேரக்டர் ஏதாவது செய்து கொண்டேயிருந்தது நம்மை என்கேஜ் செய்துவிடுகிறது . ஜெய் , ஜீவா , மிர்ச்சி சிவா காரைக்குடியில் தப்பிக்கும் சீன்ஸ் மற்றும் யோகி பாபு மந்திரி அடியாட்களிடம் படும் பாடு படத்துக்கு ஹைலைட் ...

முதல் பாகத்தின் கிளிஷேக்கள் படம் நெடுக தெறிக்க விட்டிருக்கிறார்கள் . ஒரு லெவெலுக்கு மேல் கலகலப்புக்கு கைகலப்பை மட்டும் நம்பியிருப்பது போரடிக்கிறது . படம் போவது தெரியவில்லை தான் ஆனால் போய்க்கொண்டேயிருப்பது தொய்வு . ஸ்கிரீனில் காமெடியன் பேரை பார்த்தாலே சிரிப்பவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் படம் பிடிக்கும் . மற்றவர்களுக்கு வயிறு வலிக்கவெல்லாம் சிரிக்க முடியாது விட்டு விட்டு வேண்டுமானால் சிரிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41 *

ரேட்டிங்க்          : 2.5 * / 5 *

ஏமாலி - YEMAALI - ஏமாற்றம் ...



முகவரி , நேபாளி பட இயக்குனர் துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிருக்கும் படம் ஏமாலி . ளி க்கு பதில் லி வருகிறதே என்கிற டைட்டில் குழப்பத்திற்கு படத்தில் விடை சொல்கிறார்கள் . மற்ற குழப்பங்களை நம்மிடமே விட்டு விடுகிறார்கள் !!!

மாலி ( சாம் ) க்கு அவர் லவர்  ரிது ( அதுல்யா ) பிரேக் அப் சொல்லிவிட அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார் மாலி .  இதை நெருங்கிய நண்பரான அரவிந்திடம் ( சமுத்திரக்கனி ) சொல்ல அவரோ மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலை செய்வதென ரிகர்சல் பார்த்து விட்டு பிறகு செய்யலாம் என ஐடியா கொடுக்கிறார் . அவர்களே போலீசாக கற்பனை செய்து கொண்டு அந்த ஐடியாவை செயல்படுத்துகிறார்கள் . கற்பனையிலும் சரி , நிஜத்திலும் சரி அந்த நல்ல ஐடியாவை ஒழுங்காக செயல்படுத்தாமல் ஏமாந்திருப்பதே ஏமாலி ...

சாம் ஜோன்ஸ் புது முகம் என்கிற பதட்டம் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார் . காதலா , காமமா என்று அவர் கேரக்டர் ஒட்டாதது போலவே  முகத்துக்கு தாடியும் . மழுங்க சேவ் செய்து போலீசாக வரும் போது மேன்லி யாக இருக்கிறார் . திரும்பவும் சி.பி.ஐ ஆபீஸராக வரும் போது க்யா , ஹை என தேவையில்லாமல் அவரை ஹிந்தி பேச வைத்து வெறுப்பேற்றுகிறார்கள் . நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அவர் மேலும் வளர வாழ்த்துக்கள் ...


சமுத்திரக்கனி யை வியாபாரத்துக்காக கோர்த்திருக்கிறார்கள் . மனுஷனும் படம் முழுக்க வந்தாலும் வழக்கம் போல  நாலு வார்த்தை அட்வைஸ் செய்கிறார் . இவருக்கும் திவ்யா ( ரோஷினி ) வுக்கும் இடையேயான
டிராக் அந்த ஜோடியை போலவே சுத்தமாக ஓட்டவேயில்லை . சிங்கம்புலி , பாலசரவணன் லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் ...

சில வருடங்களாகவே காதல் தோல்வியால் இளம்பெண்கள் கொலை செய்யப்படுவதை மையப்படுத்தி கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர் . அதில் கொலை செய்வதற்கு முன் போலீஸ் கோணத்திலிருந்து விசாரணை என்கிற உத்தியையும் புகுத்தியிருப்பது புத்திசாலித்தனம் . ஆனால் புது இயக்குனர்கள் கூட  பக்காவாக ஹோம் ஒர்க் செய்து மெனெக்கடும் வேளையில் அனுபவ இயக்குனரான துரை நல்ல கதையை ஒழுங்காக எக்சிகியூட் செய்யாமல் கோட்டை விட்டிருப்பது துரதிருஷ்டம் . மாலி - ரிது காதல் ( காம ) காட்சிகள் சுத்த பேத்தல் ...

ஹிரோயின் சிகரெட் பிடிக்கிறார் , வேறொரு ஐடி பெண் விசாரிக்கும் போலீசையே ஜல்சா பண்ணுவது போல பேசுகிறார் . ஒரு காலத்தில் டீச்சர் னா
கொண்டையும் , டாக்டர் னா கண்ணாடியும் இருப்பது போல இப்பொழுதெல்லாம் ஐடி பெண்கள் னா அப்படியிப்படி என்று கேரக்டர் அஸ்ஸசினேஷன் செய்து விடுகிறார்கள் . ஜாலிக்காக செய்யும் காதலுக்காக ஒருவன் கொலை அளவு போவானா என்கிற கேள்வி பெரிதாக எழுகிறது . அதை கன்வின்சிங்காக சொல்வதற்கும் துரை  தவறி விட்டார் . அதே போல கற்பனை , நிஜம் இரணடையும் சரியான கலவையில் சொல்லத்தெரியாமல் குழப்பியிருக்கிறார்கள் . நல்ல கான்செப்ட் இருந்தும் அமெச்சூர்டாக எடுத்திருப்பதால் ஏமாலி நமக்கு மட்டுமல்ல எடுத்தவர்களுக்கும் ஏமாற்றமே ...

ஸ்கோர் கார்ட் : 39

ரேட்டிங்க்          : 2 * / 5 *