Vanga blogalam in Facebook

8 June 2012

சுமைகள் ... - சிறுகதை



தினமும் ஜாக்கிங் போவது என் வழக்கம் . கைகளை வேகமாக வீசிக்கொண்டு நடக்கும் பெரியவர் , சீரியல் கதைகளை பேசிக்கொண்டு ஓட்டமும் , நடையுமாக போகும் குண்டு பெண்கள் , வானம் தலையில் விழுந்து விடுமோ என்ற பயத்தில் அண்ணாந்து பார்த்துக் கொண்டே ஓடும் நடுத்தர வயதுக்காரர் என விதவிதமான மனிதர்கள் , விதவிதமான முகங்கள் . உடல் ஆரோக்கியம் என்பதை விட காலையில் இளஞ்சூரியனின் வெப்பத்தை வாங்கிக்கொண்டு , சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவதென்பது ஒரு அனுபவம் . இதை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள் என்று தெரியவில்லை . உடலை விட வேகமாக ஓடும் மன ஓட்டங்கள் , முன்னோக்கி ஓட பின்னோக்கி போகும் சிந்தனைகள் .

நம் எல்லோரையும் விட வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது . அதற்கு எந்த கவலையுமில்லை . பல கோடி ஆண்டுகளாய் அது எல்லோரையும் பார்த்துக்கொண்டே தானிருக்கிறது . நாம் பிறப்பதற்கு முன் என்னவாய் இருந்தோம் , இறப்பிற்கு பின் எங்கே போகிறோம் என்ற கேள்வியை அநேகமாய் எல்லோரும் ஒரு சமயமாவது நமக்கு நாமே கேட்டுக்கொண்டிருப்போம் . இது போன்ற கேள்விகள் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டுதான் போகின்றன . தீராத ஆசை கொண்ட ஆன்மாவிற்கு அடுத்த பிறவி நிச்சயம் உண்டு என்கிறார்கள் . எல்லோருக்கும் அடுத்த பிறவி உண்டா ? சென்ற பிறவியில் நாம் யார் ? மனிதனாய் தான் பிறந்திருப்போமா ? மனிதப்பிறவி பெருமிதம் கொள்ளத்தக்கது தானா ? தெரியவில்லை . பதில் தெரியாத கேள்விகளை அசை போட்டுக்கொண்டே ஓடுவதிலும் ஒரு தனி சுகம் .கண்டதை சிந்திக்கவில்லை என்றால் மனிதனாய் பிறந்து என்ன பயன் ?

ஏதேதோ நினைப்பில் ஓடிக்கொண்டிருக்கும் போது தான் அந்த கூட்டத்தை பார்த்தேன் . சுகம் ,துக்கம் என எல்லாவற்றிற்கும் மனிதர்கள் கூடுகிறார்கள் , ஆனாலும் தனியாய் தான் நிற்கிறார்கள் . அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனை பார்க்கும் போதும் ஆபீசிற்கு டைம் ஆகிவிட்டதா என்று மணிக்கட்டை பார்க்கும் பரபரப்பான மனிதர்கள் தான் இங்கு அதிகம் . அங்கு கூடியிருந்த சிறு கூட்டம் மனிதனுக்கானது அல்ல . அது ஒரு பூனையை வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டம் .

" ஆக்கும் , தெனமும் திருட்டு பால் குட்சிக்கினுர்ந்தது , இன்னிக்கு நல்லா சொம்புவுள்ள தலைய விட்டு மாட்டிக்கிச்சு " , பால் வித்தியாசமின்றி கூட்டத்துடன் உரசிக்கொண்டே சொன்னாள் அந்த பெண் . " கரிக்கிட்டா சொன்னம்மே " சொல்லிக்கொண்டே அவன் திருட்டுத்தனமாய் ஏனோ கண்ணடித்தான் . " இத்தோட ஒரே ரோதன சார் , தெனமும் என் வூட்டு மீன புட்சிக்குனு போயிடும் , இன்னிக்கு நல்லா மாட்டிக்கிச்சு " மீன் போன துக்கத்தை விட பூனை மாட்டிக் கொண்டதில் அவளுக்கு சந்தோசம் போல இருந்தது . " இப்படியே வுட்டா செத்துரும் " கூட்டத்தை ஏக்கத்துடன் பார்த்தான் அந்த சிறுவன் .

சொம்பில் கையை வைத்து இழுக்க பூனை அதிகமாய் திமிறியது . தினமும் பாலும் , மீனும் தின்று அதன் உடல் கொஞ்சம் கனத்திருந்தது . " ஐயோ , நகத்தால கீறிட்டது சார் " சொல்லிக்கொண்டே அவர் கையை விட பொத்தென்று விழுந்தது அந்த பழுப்பு நிற பூனை . ஏதோ ஆர்டர் கொடுத்து செய்தது போல தன் தலையோடு ஒட்டிக்கொண்டு இருந்த சொம்பை பூனை முன்னுக்கும் பின்னுக்கும் பலமாக ஆட்டிக் கொண்டிருந்தது . " பூனை முடி கொட்டினா பாவம் " மனதின் ஓரமாய் வந்த நினைப்பை ஓரங்கட்டி விட்டு இடுப்போடு பூனையை அணைத்து தூக்கினேன் . பத்தடி தூரத்தில் தான் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது . அவர்கள் ஏதாவது சாதனத்தை வைத்து பூனையை காப்பாற்றிவிடுவார்கள் என்பது என் நம்பிக்கை .

பூனையின் சாவை விட இப்படியே விட்டுவிட்டால் சாவிற்கு முன் அது அடையப்போகும் வேதனையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது . பூனையின் தலையை ஆக்ரமித்துக் கொண்ட சொம்பை போல் மனதிற்குள் தான் எத்தனை சுமைகள் . படிக்காதவனுக்கு படிப்பு , படித்தவனுக்கு வேலை , வேலைக்கு போகிறவனுக்கு சம்பளம் , சம்பளக்காரனுக்கு அன்றாடம் ஆகும் செலவுகள் , பணம் நிறைய இருப்பவனுக்கோ அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமேயென்ற கவலை . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை , அது தரும் சுமை . பாலிற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட பூனை போல நாமும் எதிலோ மாட்டிக்கொண்டு அதை விலக்கி வைக்க முடியாமல் சுமைகளுடனே சுற்றிக்கொண்டிருக்கிறோம் .

" அழுத்தி பிடிங்க சார் , நான் டிரில்லிங் மிசின்ல கட் பண்ணிர்றேன் " . அழுத்தி பிடிக்க பிடிக்க பெற்றோர் மேல் நம்பிக்கை இல்லாத டீன் ஏஜ் பசங்களை போல அது மேலும் திமிறியது . இது வேலைக்காவாது என்பது போல கொஞ்சம் பேர் கலையத்தொடங்க பூனை பிழைக்குமா ? சாகுமா ? என சிலர் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள் . " அதோட விதி அவ்வளவு தான் சார் " எனக்கு ஒத்தாசையாக இருந்த நபர் தனக்கு நேரமாவதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார் . மரணம் பெரிய விமோசனம் என்கிறார்கள் , அது சாவை சந்திப்பவனுக்கு தான் . சாவை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்கு அல்ல .

" கொஞ்சம் பொறுமையா இருந்தா காபாத்திரலாம் " என் குரல் ஏனோ கம்மியது . " யாராவது ஆஸா ப்ளேட் இருந்தா கொடுங்க " எனக்கு நம்பிக்கை கொடுத்தது அந்த குரல் . அந்த ஆஸா ப்ளேட் கூட உடனே கிடைக்கவில்லை . ஏதோ யாசகம் கேட்பவனைப் போல பார்த்தார்கள் . " ரொம்ப நேரமா போராடீனுக்குற , அத்த பாக்கவும் பாவமா இருக்குது , இந்தா ப்ளேட பிடி " கடைசியில் தன் மீனை தின்று விட்டதாக வருத்தப்பட்ட பெண்ணே தள்ளியிருந்த அவள் வீட்டுக்கு சென்று ப்ளேட் கொண்டு வந்து கொடுத்த போது இவளை தப்பாக நினைத்து விட்டோமே என்று கொஞ்சம் வெக்கமாக இருந்தது . சூழ்நிலையே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது . அதுஅடையாளம் காட்டுவதற்குள் நாம் உணர்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்துவிடுகிறோம் .

மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கும் காமம் போல மெதுவாய் அவர் சொம்பின் இடைவெளிக்குள் ஆஷா பிளேடை நுழைத்து நெம்பிக் கொண்டிருந்தார் . " கடைசியா ட்ரை பண்ணுவோம் , இதுக்கு மேல நெம்பினா கழுத்து அறுந்துரும் " அறுப்பவர் சொல்ல , அப்படியொரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதென கடவுளை வேண்டிக்கொண்டேன் . இப்படி சித்திரவதையில் சாவதை விட உடனே செத்து விடலாம் என்ற எண்ணமும் ஏனோ தலை காட்டியது . " இந்த தடவ கண்டிப்பா காப்பாத்திடலாம் " திடமாய் சொன்னேன் . அந்த நிமிடம் அந்த உயிரை காப்பாற்றி விட வேண்டுமென்பதே எனக்கு தலையாய குறிக்கோள் போல இருந்தது .

பூனையின் மனதில் இப்பொழுது என்ன ஓடிக்கொண்டிருக்கும் . சில பேர் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதற்கு தெரியுமா? முகமே தெரியாத பின் வரும் சந்ததிக்கு பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வயிற்று பசிக்காக சொம்பிற்குள் தலையை விட்ட பூனைக்கு மட்டும் ஏனோ இந்த கதி . ஒரு வேலை அது கிளம்பும் போது மனிதன் குறுக்கே போயிருப்பானோ ?!. இது போன்றெல்லாம் நினைப்பதற்கு பூனைக்கு வாய்ப்பில்லை . பாவம் பூனைக்கு ஐந்தறிவு .

" சார் , கொஞ்சம் அழுத்திப் பிடிங்க , பாதி எடுத்தாச்சு " , மீதியையும் எடுப்பதற்காக அதன் மிருதுவான உடலின் மேல் என் கைகளை இறுக்கினேன். இருந்த கொஞ்சம் பேரும் பூனை பாய்வதற்கு ஏதுவாக வழியை விட்டு பின் பக்கமாக நின்று கொண்டார்கள் . பத்து , ஒன்பது , எட்டு ஒவ்வொன்றாக மனதிற்குள் எண்ணிக்கொண்டேன் . ஒன்று வரை எண்ணி முடிக்கும் முன்னே பல நாள் பசியில் இருந்தவன் உணவை பார்த்தவுடன் ஓடுவதைப் போல விருட்டென்று ஓடியது அந்த பூனை .

" எப்படியோ ஒரு வழியா காபாத்திட்டோம் " வேடிக்கை பார்த்த ஒருவர் மகிழ்ச்சியாக சொன்னார் . அங்கே எல்லோர் முகத்திலும் வெற்றிகரமாக ராக்கெட்டை பறக்க விட்ட விஞ்ஞானிகளை போல ஒரு பெருமிதம் . சுமை இறக்கிவிடப்பட்டவுடன் சிட்டாய் பறந்த பூனையின் திசையை பார்த்தபடியே அவரவர் மன சுமைகளுடன் ஒவ்வொருவராய் பிரிந்தோம் .

16 comments:

  1. அருமையான உருவகக் கதை
    ஐந்தறிவு பூனையை ஆறறிவு காப்பாற்றிவிட்டது சரி
    இந்த ஆறறிவுகளைக் காக்க வாலறிவன் அல்லவா
    வேண்டியதாய் இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உடலை விட வேகமாக ஓடும் மன ஓட்டங்கள் , முன்னோக்கி ஓட பின்னோக்கி போகும் சிந்தனைகள் .

    நம் எல்லோரையும் விட வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது

    பூனை காப்பாற்றப்பட்டது.. மனிதன் !!?????

    ReplyDelete
  3. "சூழ்நிழையே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது . அதுஅடையாளம் காட்டுவதற்குள் நாம் உணர்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்துவிடுகிறோம்"

    -அருமை...
    S.R.Seshan

    ReplyDelete
  4. பிரமாதம். ஒரு சிறுகதைக்குள் இத்தனை நெடுங்கருத்துகளா? எத்தனை உருவகங்கள், உவமானங்கள். பூனையின் தலைச் சுமையைச் சாக்கிட்டு மனிதன் மனச் சுமைகளை அருமையாகப் பிட்டு வைத்திருக்கிறாய் தம்பி. எப்போது கற்றாய் எழுத்திலே சிற்பம் வடிக்க? அருமையான படிமம். தொடர்க இலக்கியப் பணி. உயர்ந்த இடம் காத்திருக்கிறது. அன்புடன் பத்மன்.

    ReplyDelete
  5. Ramani said...
    அருமையான உருவகக் கதை
    ஐந்தறிவு பூனையை ஆறறிவு காப்பாற்றிவிட்டது சரி
    இந்த ஆறறிவுகளைக் காக்க வாலறிவன் அல்லவா
    வேண்டியதாய் இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் உற்சாகங்களுக்கு நன்றி சார் ...

    ReplyDelete
  6. இராஜராஜேஸ்வரி said...
    உடலை விட வேகமாக ஓடும் மன ஓட்டங்கள் , முன்னோக்கி ஓட பின்னோக்கி போகும் சிந்தனைகள் .நம் எல்லோரையும் விட வாழ்க்கை மிக வேகமாக ஓடுகிறது
    பூனை காப்பாற்றப்பட்டது.. மனிதன் !!?????
    Saturday, June 09, 2012

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  7. Anonymous said...
    "சூழ்நிழையே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது . அதுஅடையாளம் காட்டுவதற்குள் நாம் உணர்சிவசப்பட்டு முடிவுகள் எடுத்துவிடுகிறோம்"
    -அருமை...
    S.R.Seshan

    நன்றி சேஷா ...

    ReplyDelete
  8. pragnan said...
    பிரமாதம். ஒரு சிறுகதைக்குள் இத்தனை நெடுங்கருத்துகளா? எத்தனை உருவகங்கள், உவமானங்கள். பூனையின் தலைச் சுமையைச் சாக்கிட்டு மனிதன் மனச் சுமைகளை அருமையாகப் பிட்டு வைத்திருக்கிறாய் தம்பி. எப்போது கற்றாய் எழுத்திலே சிற்பம் வடிக்க? அருமையான படிமம். தொடர்க இலக்கியப் பணி. உயர்ந்த இடம் காத்திருக்கிறது. அன்புடன் பத்மன்.

    என் எழுத்துக்களை பாராட்டி , தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி , நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் உற்சாகங்களுக்கு நன்றி அண்ணா ! முதல் புத்தகத்திற்கே தமிழக அரசின் விருதை பெற்ற நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ...

    ReplyDelete
  9. திண்டுக்கல் தனபாலன் said...
    கதை அருமை ! நன்றி !

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  10. இத்தனை உவமானங்களும் உருவகங்களும் ஒரு சிறு கதைக்குள் நான் எதிர்பார்கவில்லை. மனித மனத்தின் அத்தனை வண்ணங்களையும் (எண்ணங்களையும்) போலித்தனமின்றி உவமான, உருவகங்கலாக்கி நீங்கள் படைத்த இந்த சிறுகதை மிக அருமை. ஐந்தறிவோ ஆறறிவோ உயிர்களின் மதிப்பு அனைத்திற்கும் ஒன்றே என்ற உங்கள் கருத்து பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  11. கடம்பவன குயில் said...
    இத்தனை உவமானங்களும் உருவகங்களும் ஒரு சிறு கதைக்குள் நான் எதிர்பார்கவில்லை. மனித மனத்தின் அத்தனை வண்ணங்களையும் (எண்ணங்களையும்) போலித்தனமின்றி உவமான, உருவகங்கலாக்கி நீங்கள் படைத்த இந்த சிறுகதை மிக அருமை. ஐந்தறிவோ ஆறறிவோ உயிர்களின் மதிப்பு அனைத்திற்கும் ஒன்றே என்ற உங்கள் கருத்து பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  12. ரொம்ப நாள் விட்டு ஒரு அற்புதமான சிறுகதை படித்த நிறைவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. அப்பாதுரை said...
    ரொம்ப நாள் விட்டு ஒரு அற்புதமான சிறுகதை படித்த நிறைவு. பாராட்டுக்கள்.

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete
  14. இறுதி வரையிலும் ...மூச்சை இழுத்து பிடித்து பயத்துடன் படித்தேன் .
    மிக்க சந்தோஷம் பூனை காப்பாற்றப்பட்டது .

    ReplyDelete
  15. angelin said...
    இறுதி வரையிலும் ...மூச்சை இழுத்து பிடித்து பயத்துடன் படித்தேன் .
    மிக்க சந்தோஷம் பூனை காப்பாற்றப்பட்டது .

    உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ...

    ReplyDelete