20 July 2013

மரியான் - MARIYAAN - மாரத்தான் ...


தேசிய விருதுக்கு பிறகு தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ் . அந்த வரிசையில் ராஞ்சானா  வெற்றிக்கு பிறகு பாரத்பாலா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் அவர் கை கோர்த்திருக்கும் படம் மரியான் . அவர் நடிப்பு அருமை . ஆனால் படம் ? அலசலாம் ...

வெளிநாடு  செல்ல வேண்டுமென்கிற தன்  தாயின் விருப்பத்தை மீறி கடலை நம்பி வாழும் மீனவன் மரியான் ( தனுஷ் ) . சிறு வயதிலிருந்தே தன்னை விரும்பும் பனிமலரின் ( பார்வதி ) காதலை ஏற்றுக்கொண்ட பிறகு அவள் வீட்டுக் கடனை அடைப்பதற்காக இரண்டு வருட காண்ட்ராக்டில் மரியான் சூடான் செல்கிறான் . நாடு திரும்பும் வேளையில் அங்கே தீவிரவாதிகளிடம் பயக்கைதியாக பிடிபடும் மரியான் மீண்டு வந்தானா ? என்பதை தனுஷ் , பார்வதி நடிப்பை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள் ...


பத்து வருடங்களுக்கு முன் பார்த்த பையனா  என்று நம்ப முடியாத அளவிற்கு நடிப்பில் மெருகேறியிருக்கிறார் தனுஷ் . உடல்மொழியில் கமல் , ரஜினி யை சிற்சில இடங்களில் நினைவுபடுத்தினாலும் தனியாளாக மரியானை மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறார் . காதலியை உதைக்கும்  இவர் கதாபாத்திரம் பழசாக இருந்தாலும் நடிப்பை ரசிக்க முடிகிறது . குறிப்பாக கம்பெனிக்கு போன் பேசுவதாக சொல்லி விட்டு காதலியிடம் தன் நிலைமையை விளக்கும் இடம் க்ளாஸ் . கமர்சியல் வெற்றிக்கு பின்னால் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் தனுஷ் ஆரோக்கியமான விதிவிலக்கு ...

பூ படத்திற்கு பிறகு மலையாளத்துக்கு போய் விட்ட பார்வதி ஐந்து வருட இடைவெளி விட்டு வந்திருந்தாலும் மரியானில் பனிமலராய் நடிப்பில்  மலர்ந்திருக்கிறார் . இறுக்கமான பாவாடை சட்டையில் வந்து லோ ஆங்கில் சாட்களில் கிறங்கடிக்கிறார் . இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் தனுஷ் நடிப்பிற்கு முன் காணாமல் போயிருப்பார்கள் . காதலன் தன்னை அடித்த பிறகு ஆதங்கமும் , அழுகையும் கலந்த நடிப்பில் பார்வதி படு பாலன்ஸ்ட் . தமிழ் இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது ... 

லீட் நடிகர்களை தவிர அப்புக்குட்டி , உமா ரியாஸ் , சலீம் குமார் , ஜெகன் என்று பாத்திரத்தேர்வுகள் அருமை . சூடான் தீவிரவாதிளை தேர்ந்தெடுத்ததில் மட்டும் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மார்க் கோனிக்ஸ் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் படத்திற்கு சர்வதேச தரத்தை கொடுத்திருக்கிறார்கள் .  ஏ.ஆர்.ஆர் இசையில் " நெஞ்சே எழு " , " கடல் ராசா " , " நேற்று அவள் " போன்ற பாடல்கள் இனிமை . பின்னணி இசையில் இரண்டாம் பாதி பிரமாதம் . வாலிப கவிஞர் வாலியின் கை வண்ணத்தில் " நிலவே அந்த நேற்றுகளை கொண்டு வா " போன்ற வரிகள் அவர் மறைவிற்கு பொருத்தமாக அமைந்திருப்பது சோகத்திலும் ஆச்சர்யம் ... 


பாரத் பாலா இயக்கிய " வந்தே மாதரம் " ஆல்பம் சர்வதேச அளவில் புகழ் பெற்று ஏ.ஆர்.ரஹ்மானை பல படிகள் மேலே கொண்டு சென்றது . இந்த படத்திலும் அதே போல ஒரு சர்வதேச டச் இருப்பதை மறுக்க முடியாது . தனுஷ் - பார்வதி நடிப்பில் கெமிஸ்ட்ரி , பயாலஜி , பிஸிக்ஸ் என்று எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்து அவர்களை கையாண்ட விதத்திற்காக இயக்குனரை பாராட்டலாம் . பார்வதி தனுஷை லிப் கிஸ் அடிக்கும் இடம் கூட விரசமாக தெரியாமல் படத்தோடு ஒன்றியிருப்பது நேர்த்தி . தனுஷ் கடத்தப்பட்ட பிறகு வரும் சூடான் காட்சிகள் ரியாலிட்டி ... 

யதார்த்தமான படம் என்றாலும் ஒரு லெவலுக்கு மேல் தனுஷ் , பார்வதி மாறி மாறி அழும் சோக காட்சிகள் ரசிகர்களை சோதிப்பது , எல்லோரையும் யோசிக்காமல் சுடும் தீவிரவாதி தனுஷிடம் மட்டும் பேசிக்கொண்டிருப்பதும் , லோக்கல் ரவுடியிடம் பேசுவது போல தனுஷ் அவரிடம் கத்துவதும் என்று ரியாலிட்டியை சிதைப்பது , கடத்தல் மேட்டரை இடைவேளையில் வைத்து ஜெர்க் கொடுத்து விட்டு அதன் பிறகு படத்தை ஜவ்வாக இழுத்திருப்பது என்று படத்தின் குறைகளை அடுக்கலாம் . நடிப்பு , டெக்னிக்கல் விஷயங்கள் போன்றவை சர்வதேச தரத்தில் இருந்தாலும் ரசிகனை கட்டிப்போடும் சமாச்சாரங்கள் எதுவும் இல்லாமல் படம் மாரத்தான் போல மெதுவாக செல்வதை தவிர்த்திருந்தால் மரியான் மரித்திருக்க மாட்டான் ... 

ஸ்கோர் கார்ட் : 40 




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மரிச்சி போச்சா...? தனுஷ் நடிப்பிற்காக பார்க்கலாம்...!

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்..... நல்ல விமர்சனம். தனுஷ் நல்லா நடிச்சு இருக்காரா..... ஓகே.... சில காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்தேன்...... படம் பார்க்க வேண்டும்....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...