வருடக் கடைசியில் எதிர்பாராமல் வரும் சில படங்கள் நம்மை ஏகாதிபத்தியம் செய்து விடுவதுண்டு . அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வந்திருக்கும் மதயானைக்கூட்டத்தை சேர்க்கலாம் . அரிவாள் , கத்தியுடன் அவிங்க , இவிங்ய என்று அலையும் மதுரை மாந்தர்களை பற்றிய மற்றுமொரு படம் தான் என்றாலும் அதை மண் மணம் மாறாமல் யதார்த்தமாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறார் சுகுமாரன் ...
ரெண்டு பொண்டாட்டிக் காரரான ஜெயக்கொடி தேவரின் ( முருகன் ஜி ) மறைவுக்கு பிறகு குடும்ப பகை கொளுந்து விட்டு எரிகிறது . மூத்த மனைவி செவனம்மா ( விஜி ) , அவள் மகன் , அவளுடைய சகோதரன் வீரத் தேவர்
( வேல ராமமூர்த்தி ) , இளைய மனைவியின் மகன் பார்த்திபன் ( கதிர் ) இப்படி காதாப்பாத்திரங்களின் உணர்ச்சித் தீயில் நம்மை குளிர் காய வைக்கிறார் இயக்குனர் ...
முதல் படமே கதிருக்கு இப்படி அமைந்தது அதிர்ஷ்டம் . அதனை இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம் . நிறைய இடங்களில் உணர்ச்சிகளை காட்டாமல் உம்மென்றே இருக்கிறார் . அடுத்தடுத்த படங்களில் தேறி விடுவார் என்று நம்பலாம் . எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதில் கல் தோன்றா காலத்து காதலியின் அத்தியாவசியத்துக்காக ஓவியா ...
விஜி க்கு இந்த படம் ஒரு மைல்கல் . படம் முழுவதும் ஒரு விதமான வெறித்த பார்வையால் நம்மை மிரள வைப்பவர் க்ளைமேக்ஸ் காட்சியில் கதறி அழுது நம்மை கலங்க வைக்கிறார் . இவருக்கும் இவர் சகோதரராக நடித்திருக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும் இடையேயான சீன்கள் குட்டி கிழக்கு சீமையிலே . படத்தில் வரும் எல்லோரும் யதார்த்தமாக நடித்திருப்பது பெரிய பலம் . ரகுநந்தனின் பின்னணி இசை ரம்யம் ...
சாவில் தொடங்கி சாவில் முடியும் படம் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் சின்ன சின்ன சடங்குகளுக்கும் காட்டப்படும் டீட்டைளிங்கில் நம்மை கட்டிப் போடுகிறது . தேவர் மகன் , விருமாண்டி போல தேவர் பின்னணி படம் தான் என்றாலும் அதிலிருந்த ஸ்டார்டம் இதில் இல்லாததால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது . சாவு ஒப்பாரியிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் விளக்கிய விதம் , அவரவர் கோணத்திலிருந்து பார்க்கும் போது செய்வது சரி தான் என்பது போன்று அமைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு , யதார்த்தமாக இருந்தாலும் சின்ன சின்ன ட்விஸ்டுடன் நகரும் திரைக்கதை என எல்லாமே மனதில் பதிகின்றன ...
படத்தோடு ஒன்றாத காதல் , யதார்த்த சினிமாவில் திடீரென க்ளைமேக்ஸ் இல் புகுத்தப்படும் ஹீரோயிசம் , " புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா " என்று கமல் சொல்லி 23 வருடங்களாகியும் இன்னும் பயபுள்ளைங்க திருந்தலையோ என்று லேசாக வரும் சலிப்பு இப்படி குறைகள் இருந்தாலும் படம் பார்த்து சில நாட்கள் ஆகியும் தன் நினைவுகளால் இந்த மதயானைக் கூட்டம் நம்மை மிரள வைக்கும் ...
ஸ்கோர் கார்ட் : 45
2 comments:
devadass snr said...
அன்புடையீர்.
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
"புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா" - ஆறுபது வருடமா படித்தும் இன்னும் பல பேர் பசியோட இருக்காங்கப்பா அது என்னைக்கு தான் ஆங்கிலம் படித்த அறிவாளிகளுக்கு தெரியப் போகுதோ?
மதயானைக் கூட்டத்தில் வீரியமும் விவேகமும் எல்லாம் உண்டு. .
செம்பு தூக்கி கூட்டத்திற்கு... வேறென்ன சிறு சிறு சலசலப்பு மட்டும் தான்.
Post a Comment