4 December 2013

விடியும் முன் - VIDIYUM MUN - வெளிச்சம் ...




புற்றீசல் போல வரும் லோ பட்ஜெட் படங்களுள் அத்திப் பூத்தாற்ப் போல ஒன்றிரண்டு மட்டும் கூர்ந்து கவனிக்க வைக்கும் . அப்படி கவனிக்க வைத்த படங்களுள் ஒன்று விடியும் முன் . இப்படியுமா ஒருவன் வக்கிரமாக சிந்திப்பான் என்றும் , இப்படிப்பட்ட இருட்டு சம்பவங்களை வைத்து  படமெடுக்கும் தையிரியம் ஒருவனுக்கு இருக்கிறதே என்றும் இரு வேறு வகையான எண்ண ஓட்டங்களை மனதிற்குள் விதைக்கிறார்  இயக்குனர் பாலாஜி குமார் ...

விலை மாது ரேகா ( பூஜா ) ஒரு 12 வயது சிறுமியுடன்  ( மாளவிகா ) மழை இரவில் தப்பியோடுகிறாள் . பணக்காரன் சின்னையா ( வினோத் ) , ரவுடி துரைசிங்கம் , பிம்ப் சிங்காரம் ( அமரேந்திரன் ) , அவன் நண்பன் லங்கேஷ் ( ஜான் விஜய் ) என நால்வரும் அந்த இருவரையும் துரத்துகிறார்கள் . அது  ஏன் ? எதற்கு ? எப்படி என்பதை விறு விறு திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

அசிங்கமான பிச்சைக்காரியாக நடித்ததாலோ என்னவோ நான் கடவுளுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த பூஜா விற்கு இந்த படத்தில் பெயர் சொல்லும் வேடம் . குற்ற உணர்ச்சி , விரக்தி இரண்டையும் அவர் கண்கள் இயல்பாகவே வெளிப்படுத்துகின்றன . சின்ன பெண் மாளவிகா கொஞ்சம் கொஞ்சமாய்  மனதை ஆக்ரமிக்கிறாள் . அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துவதே திரைக்கதையின் தனிச்சிறப்பு . அவளுக்கும் பூஜாவுக்கும் இடையேயான சீன்கள் குட்டி ஹைக்கூ ...


அமரேந்திரன் , ஜான் விஜய் இருவரும் சில இடங்களில் படத்தின் மேல் நமக்கு ஏற்படும் அயர்ச்சியை  போக்க உதவியிருக்கிறார்கள் . வசனங்கள் அதிகம் இல்லாமல் கண்களால் மட்டும் பேசும் வினோத் நல்ல தேர்வு . சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு , கிரீஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் ...

அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது பிடிக்காத கதை , விறுவிறுப்பு இருந்தாலும் ஆங்காங்கே தொய்வுடன் செல்லும் மிஸ்கின் பாணி திரைக்கதை , சலிப்பை தரும் க்ளைமாக்ஸ் , உடல் ரீதியான ஆபாசங்கள் இல்லாவிட்டாலும் அதைவிட அதிகமாக மன ரீதியான கிளர்ச்சியை அல்லது வக்கிரத்தை தூண்டி விடக்கூடிய அபாயமுள்ள சீன்கள் இப்படி விடியும் முன் நிறைய  இருட்டுப் பக்கங்களை கொண்டிருக்கிறது ...

தர்க்க ரீதியான விவாதங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக கிட்டத்தட்ட இரண்டரை  மணி நேரம் திரைக்கதைக்குள் நம்மை ஒன்ற வைத்த தந்திரம் , கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு , படம் முடிந்த பிறகும் அது நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு போன்றவை இருட்டையும் தாண்டி படத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 45

3 comments:

Anonymous said...

நல்லதொரு படம் என கருதுகின்றேன். குறிப்பாக சமூகத்தில் நடைபெறும் ஆனால் பெரிதும் பேசப்படாத விடயங்களை சினிமாவில் கொண்டு வந்தமைக்கு விடியும் முன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

--- விவரணம் இணையதளம். 

திண்டுக்கல் தனபாலன் said...

ஆங்காங்கே தொய்வுடன் சென்றாலே மிஸ்கின் பாணி என்றாகி விட்டது...! நல்லதொரு விமர்சனம்...

வெங்கட் நாகராஜ் said...

விடியும் முன் படம் பற்றிய விமர்சனம் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...