19 July 2014

சக்ர வியூகம் ...


ன் மனைவியின் சொந்த ஊரான மாயவரத்திற்கு சென்றிருந்தேன். பரபரப்பான  சென்னை வாழ்க்கையிலிருந்து இரண்டு நாட்கள் ப்ரேக் கிடைத்தது  என்பதை விட  அந்த இரண்டு நாட்களையும்  அமைதியான ஊரில் என் மகளுடன் செலவழிக்க முடிந்தததில்  இரட்டிப்பு மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சியான தருணங்கள் என்றுமே மறக்க முடியாதவை. சென்னைக்கு வந்ததிலிருந்து நீண்ட நாள் விடுப்பு முடிந்து முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மாணவனின் மன நிலையிலிருந்து இன்னும் என்னால் விடுபட முடியவில்லை ...

நாம் தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு நல்லவனாகவோ , கெட்டவனாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . ஏன் சிலரை அவரவர் கணவன் , மனைவியே கூட வெறுக்கலாம் . ஆனால் எல்லோரும் தத்தம் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் பாசம் மட்டும் பொய்க்காது . அதிலும் குறிப்பாக குழந்தைகள் சிறுவர் ,  சிறுமியாக மாறும் வயதிற்குட்பட்ட காலம் எந்த ஒரு பெற்றோருக்கும்  பொற்காலம் . அதே நேரம் தாய் - மகன் உறவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தந்தை - மகள் உறவுக்கு கொடுக்கப்படவில்லையோ என்று எனக்கொரு ஆதங்கம் எப்பொழுதுமே உண்டு ...

ஒரு கட்டத்தில் குடும்பம் , உறவுகளை தாண்டி வெளி உலகிற்கு குழந்தைகள்  பழக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்  . அப்படிப்பட்ட சூழலுக்கு பிள்ளையார் சுழி போடுபவை பள்ளிகள் . இந்த காலத்தில் எல்.கே.ஜி யில் சேர்ப்பதற்கே நாம் லாங் க்யூவில் நிற்க வேண்டியது  அவசியம் . அதிலும் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தான் பிள்ளையை சேர்ப்பேன் என்று அடம் பிடிக்கும் பெற்றோர்களும் இங்கே அதிகம் . மனைவி இரண்டாவது பிரசவத்திற்கு ஊருக்கு சென்றுவிட்டதால் அங்கேயே என் மகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டியதாக போய் விட்டது . ஒரே நாளில் எளிதாக வேலை முடிந்துவிட்ட சந்தோசம் இருந்தாலும் மகளை பிரிந்து ஆறு மாதங்களுக்கும் மேல் இருக்கப் போவதை நினைத்தாலே ஏக்கமும் ,சோகமும் மனதை அப்பிக் கொள்கிறது ...

அவளை கவனிக்காமல் டி .வி பார்த்துக் கொண்டிருந்தால் ஒங்கி முதுகில் அடி வைப்பதும் , சேர்ந்து விளையாடாமல் தூங்கி விட்டால் முகத்தில் தண்ணீரை விட்டு எழுப்புவதும் , வயிற்றில் ஏறி நின்று குதித்து விளையாடுவதுமென எல்லாமே கண் முன் நிற்கின்றன . சென்னையில்  இருக்கும் போது கூட நான் நிறைய நேரங்களில் புத்தகம் , டி.வி , இணையம் , மொபைல் என என் சொந்த வேலைகளில் மூழ்கி  விடுவதுண்டு . அந்த சுயநலத்திற்கு கிடைத்த சாட்டையடியே இந்த தற்காலிக பிரிவு என்று நினைக்கிறேன் . ஊரில் இருந்த  இரண்டு நாட்களும் பரபரப்பில்லாத சூழலில் என்னை முழுவதுமாக அதுல்யா மட்டுமே ஆக்ரமித்திருந்தாள் ...

தனிமை எனக்கு புதிதில்லை . சொல்லப் போனால் திருமண வாழ்க்கை நமது சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் என்று பேசியவன் நான். இன்றோ பொய்க் கோபம் காட்டவும் , பொய் அழுகையை வாங்கவும் ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் . வெறும் கோபக்காரராகவே அறியப்பட்ட எனது அப்பா கூட என்னை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு  இதே போல ஃபீல் பண்ணியிருப்பாரோ என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது . உடன் பிறந்த நால்வரும் சகோதரிகள் என்பதாலோ என்னவோ எனது அப்பாவிற்கு பெண்கள் என்றாலே அலர்ஜி . சகோதரிகளுடன் பிறக்காததாலோ என்னவோ எனக்கு பெண்கள் மேல் அலர்ஜியுமில்லை , அதீத அன்பும் இருந்ததில்லை .
வயது ஏற ஏற பெண்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது . புரிதலுக்கு பின் வரும் அன்பில் என்றுமே அடக்குகின்ற தன்மை இருப்பதில்லை . அப்படிப்பட்ட அன்பே என்றும்  நிலைக்கும் ...

பள்ளி முழுவதும் சிறிய . பெரிய வயதில் நிறைய குழந்தைகள் . சில மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே ஏதோ தண்டனைக்காக உட்கார வைக்கப்படிருக்கிறார்கள் . நான் பத்தாவது படிக்கும் வரை வகுப்பறைக்கு வெளியே உட்கார்ந்த நாட்களே அதிகம் . பாடத்தில் சுட்டி என்றாலும் ஏதாவது சேட்டை செய்து வாத்தியாரால் வெளியில் அனுப்பப்படுவது எனக்கு வாடிக்கை . மரங்களையும் ,  அதிலுள்ள பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கும் போது வகுப்பறைக்குள் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கும் அனைவரும் தண்டனைக்கைதிகள் போலவே எனக்கு காட்சியளிப்பார்கள் . இன்றும் நிச்சயம் தண்டனை அந்த மாணவனுக்கு இல்லை என்று புரிகிறது ...

அலுவலகத்தில் கட்டிய பணத்திற்கு முக்கால் சதவிகிதத்திற்கு மட்டுமே  ரசீது கொடுத்தார்கள் . மீதியை  டொனேஷன் என்றார்கள் . வகுப்பறைக்குள் சென்றவுடன் யாரோ ஒரு குட்டிப் பெண்ணுக்கு அருகில் என் மகள் உட்கார்ந்து கொண்டாள் . என்னைத் தேடுகிறாளோ பார்ப்போம் என்ற நப்பாசையில் அரைமணி நேரம் நான் வெளியில் காத்திருந்தது தான் மிச்சம் . அவள்   தன்  உலகிற்குள்  மூழ்கத் தொடங்கியிருந்தாள் . கொஞ்ச நேரம் கழித்து அவள் என்னை தேட ஆரம்பித்தது தெரிந்ததும் இன்னும் ஒழிந்து கொண்டேன் . கண்களில் கண்ணீர் கொஞ்சமாக எட்டிப்  பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு தாங்காமல் விளையாட்டை முடித்துக் கொண்டேன் . முதல் நாள் என்பதால் அவளை என்னுடன் அனுப்பி  விட்டார்கள் . அடுத்த நாளிலிருந்து பாட்டி கொண்டு வந்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு அதுல்யாவை தூக்கிக் கொண்டேன் ...

இன்னும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்கூடம் , பாட்டி வீடு எல்லாமே அவளுக்கு பழகி விடும் . நடந்த சம்பவங்களும் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை . ஒரு வகையில் ஞாபக மறதி எவ்வளவு சவுகரியம். நிறைய பேருக்கு எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதே மன நிம்மதி போவதற்கு முக்கிய காரணம் . பிடித்ததோ , இல்லையோ கடமைக்காக  கௌரவர்களின் பக்கம் நின்றார்  பீஷ்மர் . நேற்று என் அப்பா எனக்கு செய்த கடமையை நான் என் மகளுக்கு இன்று செய்திருக்கிறேன் . அவளும் நாளை இதே போல செய்யலாம் . அங்கே சுவற்றின் மேல் சிலந்தி கொஞ்சம் கொஞ்சமாக தனது வலையை பின்னிக்கொண்டு அதனுள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது . அதைப் பார்த்த போது சொந்த  கடமை என்றாலும் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த சக்ர வியூகத்திற்குள் என் மகளையும் கொண்டு வந்து விட்டு விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது . அவளோ  வழக்கம் போல தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள் என் தோள்களின் மேல் தூங்க ஆரம்பித்திருந்தாள் ...





2 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஒரு வகையில் ஞாபக மறதி சவுகர்யம்! உண்மைதான்! ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த சக்ரவியுகம் வரும் போல!

கோமதி அரசு said...

புரிதலுக்கு பின் வரும் அன்பில் என்றுமே அடக்குகின்ற தன்மை இருப்பதில்லை . அப்படிப்பட்ட அன்பே என்றும் நிலைக்கும் ...//

அருமையாக சொன்னீர்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...