24 October 2014

கத்தி - KATHTHI - ஷார்ப் ...


துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டுமொரு தீபாவளி ரிலீஸில் இணைந்திருக்கிறார்கள் விஜயும் , ஏஆர்.முருகதாசும் . கதைக்காக கத்தி மேலெல்லாம் நடக்காமல கல் தோன்றா மண் தோன்றா காலத்து டபுள் ஹீரோ ஆள்மாறாட்ட கத்திக்கு சோசியல்
மெஸேஜ் என்னும் சானை பிடித்து பளபளப்பாக்கியிருக்கிறார்கள் ...

கொல்கொத்தா ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதி கதிரேசன் (எ) கத்தி
( மேக்கப் போட்ட விஜய் ) , தன்னூத்து கிராமத்தை கார்ப்பரேட் குளிர்பான கம்பெனியின் நில ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஜீவானந்தம்
( மேகப்பில்லாமல் எண்ணை வழியும் முக விஜய் ) இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இடம் மாறுகிறார்கள் . இட மாற்றத்தால் மனம் மாறும் கத்தி தன்னூத்து கிராமத்தை எம்.என்.சி முதலாளி ( நீல் நிதின் முகேஷ் ) யிடமிருந்து காப்பாற்றினானா என்பதை கொஞ்சம் நீட்டி முழக்கினாலும் ( ரெண்டேமுக்கா மணிநேரம் ) ஃப்ரெஸ்ஸான திரைக்கதையால் திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

எத்தனை வேடம் போட்டாலும் கெட்டப்பில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் விஜய்க்கு ஏற்றபடியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட் . டான்ஸ் , ஃபைட் என்று துள்ளி விளையாடியிருக்கும் கத்தி விஜய் எமோஷனல் சீன்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார் . போலீசுக்கே கைதியை பிடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது , ரூபாயை சுண்டி விட்டு 50 அடியாட்களை அடிப்பது , ஏரியை அபகரித்து சென்னை மக்களை ரெண்டு நாட்கள் தண்ணியில்லாமல் தவிக்க விடுவது , ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் பிரஸ் மீட்டில் புள்ளி விவரங்களை அள்ளி தெளிப்பது என்று லாஜிக் பார்க்காமல் இருந்தால் இந்த விறு விறு விஜய்யின் மேஜிக்கை நன்றாகவே ரசிக்கலாம் . ஆனாலும் ஒரு விஜய் கண்ணை மட்டும் சிமிட்டி வித்தியாசம் காட்டியிருப்பது உலக சினிமாக்களிலேயே இது தான் முதல்முறை ...


மூணு  பாட்டுக்கு விஜய்யோடு சேர்ந்து அரைகுறை ஆடையில் ஆட ஆள் வேண்டும் . அந்த வேலைக்கு சமந்தா சரியாக பொருந்துகிறார் .( இதுக்கு எத்தன கோடியோ ! ) . அதெப்படியோ  தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் யாராக இருந்தாலும் பக்கா ப்ளான் போடும் புத்திசாலியாக இருக்கிறார்கள் . ஆனால் ஹீரோயின்கள் மட்டும் லூசு போலவே சித்தரிக்கப்படுகிறார்கள் . என்று தணியும் இந்த ஆணாதிக்க மோகம் ?! . ( ஹி ஹி கொளுத்திப் போட்டாச்சு ) . சோலோ காமெடியனாக வரும் சதீசுக்கு இந்த படம் செம ப்ரேக் . ஆல் தி பெஸ்ட் ப்ரோ . வில்லன் முகேஷ் பல்லை காட்டியெல்லாம் பயமுறுத்தாமல் கூலாக நடித்து ஸ்கோர் செய்கிறார் . இவருக்கு டப்பிங் பேசியவர் சூப்பர் தேர்வு ...

அனிருத்தின் பி.ஜி.எம் சான்சே இல்ல . சாதாரண சீன்களை கூட இவருடைய இசை பிரம்மாண்டமாக்குகிறது . அஜித் படங்கள் போல விஜய்க்கும் பின்னணி இசை பேசியிருக்கிறது . " செல்பி புள்ள " தாளம் போட வைத்தால் , யேசுதாஸ் குரலில் " யார் பெற்ற " பாடல் தழுதழுக்க வைக்கிறது . ,ஆனால் வழக்கமான விஜய்யின் மாஸ பாடல்கள் இதில் மிஸ்ஸிங் . படத்தில் சண்டைக்காட்சிகளும் பிரமாதம் ...


" ஐயாயிரம் கோடி கடன் வாங்கி திரும்ப கொடுக்காதவன் தற்கொலை பண்ணிக்கல , ஆனா அஞ்சாயிரம் வாங்கின விவசாயி வட்டி கட்ட முடியாம சாகுறான் " போன்ற வசனங்கள் படத்திற்கு பெரிய பலம் . விவசாயிகள் தற்கொலையைப் பற்றி எந்த அக்கறையும் காட்டாமல் டி.ஆர்.பி க்காக மட்டும் நியூஸ் தேடி அலையும் மீடியாக்களையும் இயக்குனரின் வசனங்கள் விட்டு வைக்கவில்லை . ஆனால் அதே சமயம் 2 ஜி உட்பட எவ்வளவோ  பெரிய ஊழல்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நான்காம் தூண்களின்  செயல்களை மறந்து விட்டு அவற்றை வெறும் மூன்றாம் தரமாக மட்டும் சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் . இன்று சிட்டியிலிருக்கும் முக்கால் வாசி பேர் கிராமத்திலிருந்து வந்து செட்டிலானவர்கள்  என்பதை தெளிவாக விட்டு  விட்டு நகரவாசிகளை வில்லன்கள் போலவும் , கிராமத்து வாசிகளை நல்லவர்கள்  போலவும் சித்தரிக்கிறது படம் ...

டபுள் ஹீரோ ஃபார்முலா கதை , பாண்டவர் பூமி உட்பட பல படங்களில் பார்த்த விவசாயிகள் பிரசசனை போன்ற குறைகளை , சொல்ல வந்த விஷயத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்கள் மறக்கடிக்கின்றன . சின்ன ஏ.வி என்று சொல்லிவிட்டு ஜீவானந்தத்தின் முழுக் கதையையும் காட்டுவது முதலில் நெளிய வைத்தாலும் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நெகிழ வைக்கிறது . மொத்தத்தில் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் இந்த கத்தி கொஞ்சம் பழசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் நல்ல ஷார்ப் ...

ஸ்கோர் கார்ட் : 42

( பின்குறிப்பு ) : அரசியல்வாதிகள் , காவல்துறையினர் , அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் , ஆசிரியர்கள் , கார்பரேட்கள் என்று எல்லோரையும்  தோலுரிக்கும் நம்மூர் சினிமாக்காரர்கள் ஏன் இதுவரை சினிமாவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் , வரி ஏய்ப்புகள் , அதிகார துஷ்பிரயோகங்கள்,
ஊழல்கள் , பிரபலங்களின் இருட்டு பக்கங்கள் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களை தைரியமாக எடுக்க முன்வரவில்லை ? அப்படி எடுத்தால் நிச்சயம் அந்த படத்தை நல்ல சினிமா ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று போடலாம )


15 October 2014

தெருக்கூத்து - 5 ...


2002 கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி மோடிக்கு விசாவை மறுத்து வந்த அமெரிக்கா இப்பொழுது இந்தியாவின் பிரதமரான பிறகு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது .  பிரதமர் சென்ற இடமெல்லாம் அவருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பை பார்த்து அமெரிக்காவே ஆடி விட்டது என்றே சொல்லலாம் . வெறும் சாராயத்துக்கும் , பிரியாணிக்கும் இங்கே கூடும் அரசியல் கூட்டம் போலல்லாமல் ஒரு உணர்ச்சிப் பூர்வமான சந்தோஷத்தை அமரிக்க வாழ் இந்தியர்களிடம் காண முடிந்தது . அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் மூலம் சீனாவுக்கு  சின்ன செக் வைத்திருக்கிறார் மோடி . காஷ்மீர் விவாகரத்தில் தலையிட முடியாது என்று ஐ.நா சொன்னதன் மூலம் மீண்டுமொருமுறை மூக்குடை பட்டிருக்கிறது பாகிஸ்தான் . இங்கே துப்பாகியால் சுட்டு விட்டு அங்கே போய் ஒப்பாரி வைப்பார்களாம் . இது தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதோ ?! ...

பெரிய கட்சிகளெல்லாம் தனித்தனியாக நிற்பதன் மூலம் மகாராஷ்டிரா , ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நன்றாகவே சூடு பிடித்திருக்கின்றன . இடைத்தேர்தலில் கிடைத்த தோல்விகள் மூலம் மோடி யின் மேஜிக் அவ்வளவு தான் என்று மற்ற கட்சிகள் சொல்லி வரும் வேளையில்  இடைத்தேர்தலை போல அல்லாமல் இந்த முறை அதிக கூட்டங்களில் மோடி ஜி பேசி வருவது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி . அதை நிரூபிப்பது போலவே தேர்தலுக்குப் பின் நடந்த சர்வேக்கள் எல்லாமே பா.ஜ.க தனிப் பெரும் கட்சியாக ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருக்கின்றன . இது நடக்கும் பட்சத்தில் கூடுதலாக இரண்டு மாநிலங்களை பிடிப்பதுடன்  பா.ஜ.க  வுக்கு ராஜ்யசபாவில் அதிக எம்.பி க்கள் கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும் . சும்மா இருந்த சிங்கத்தை சீப்பால சீவி விட்டுட்டாங்களோ ?! ...

அடுத்தடுத்து அம்மா ப்ராண்ட் பொருட்களை மலிவு விலையில் அறிவித்துக் கொண்டிருந்தவர் மேலே யாரு கண்ணு பட்டதோ ? . 18 வருடமாக இழுத்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ உட்பட நால்வரையும்  உள்ளே வைத்து விட்டார்கள் . கர்நாடகா கோர்ட்  பெயிலை  மறுத்து விட 17 ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் கழக கண்மணிகள் . தண்டனை அங்கேயும் உறுதி செய்யப்பட்டு  விட்டால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் முதல்வரால் தேர்தலில் நிற்க முடியாது . அப்படி நடக்கும் பட்சத்தில் கட்சிக்குள் இப்போதிருக்கும்  கட்டுப்பாடு   குலைந்து கட்சியே சிதறும் அபாயம் உள்ளது . 2 ஜி வழக்கின் தீர்ப்பு வரும் போது  இதே போன்ற நிலைமை தி.மு.க வுக்கு ஏற்படாவிட்டாலும் ஏற்கனவே சரிவிலிருக்கும் கட்சி மேலும் சிதையும் . இந்த இரண்டு பிரதான கட்சிகளின் சரிவால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு யாருமில்லை .
ஆனால் சென்ற முறை தே.மு.தி.க , பா.ம.க , ம.தி.மு.க போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்த பா.ஜ.க சரியாக காய்களை நகர்த்தினால் அடுத்த சட்டசபை தேர்தலில் நடுநிலையாளர்களையும் , அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்களையும் தங்கள் வசம் எளிதாக இழுக்கலாம் . பா.ஜ.க பாச்சா இங்கே பலிக்குமா ?! ...

நிச்சயம் பா.ஜ.க வுக்கு ஒரு வலுவான தலை தமிழகத்தில் தேவை . அதற்காக அவர்கள் சூப்பர் ஸ்டாரை இழுப்பதாகவும் , அவரும் இதற்கு ஒரளவிற்கு சம்மதித்துவிட்டார் என்பது போலவும் செய்திகள் கசிகின்றன . யார் யாரோ அரசியலுக்கு வரும் போது தனக்கென்று ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினி வருவதில் எந்த தவறுமில்லை . ஆனா தலைவரு வராரோ இல்லையோ தன்னோட ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னாடியும் இந்த அரசியல் படத்த தவறாம ஓட விட்டுருறாரு . புலி வருமா ?!. மெட்ராஸ் , ஜீவா மாதிரி தரமான படங்கள் ஒரே நாளில் ரிலீசானதில் சந்தோசம் . ஆனால் எந்த லாஜிக்கும் இல்லாத ஆவரேஜ் படம் அரண்மனை தான் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது . பேயே லாஜிக் இல்ல அப்புறம் எதுக்கு பேய்ப்படத்துக்கு லாஜிக்கு ன்றீங்களா ?! ....

திரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கிறார்கள்  . மோகன்லால் ரோலில் நடிக்கும் உலக நாயகன் படத்திற்கு நிச்சயம் ஸ்டார் வால்யூவை கொடுத்தாலும் அந்த ஜார்ஜ் குட்டி என்கிற யதார்த்த நாயகனை சாகடித்து விடுவார் . கமல் பிரபு , ராஜ்கிரண் அல்லது வேறு யாரையாவது நடிக்க வைத்துவிட்டு படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டிருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நிறைய பதக்கங்களை பெற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் ஒரு பெரிய ஓ போடுவோம் ...

மீண்டும் .கூடுவோம் ...




Related Posts Plugin for WordPress, Blogger...