இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஐ யாகத் தான் இருக்கும் . யூ டியூபில் டீசர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை கண்டு களித்திருப்பது அதற்கு ஒரு சான்று . பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் , பிரமாத நடிகர் விக்ரம் இருவரும் அந்நியன் வெற்றிக்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து மிக பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து கொடுத்திருக்கும் ஐ ரிலீசுக்கு முன்னரே பலரின் ஐ பாலை உருட்டியதென்னமோ உண்மை . ஆனால் இப்படி இத்தன பில்ட் அப்புடன் வந்திருக்கும் படம் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியதா என்ற கேள்விக்கு நியாயமான பதில் சாரி ...
மிஸ்டர் மெட்ராஸ் ஏரிக்கரை லிங்கேசன் ( விக்ரம் ) பிரபல மாடலிங் தியா
( எமி ) மேல் பைத்தியமாக இருக்கிறார் . பைத்தியம் என்றால் அவர் ஆடில் நடித்த ப்ரா , பேண்டீஸ் வாங்குமளவுக்கு பைத்தியம் . ஒரு கட்டத்தில் தியாவுடன் ஜோடி சேர்ந்து மாடலிங் செய்யும் சந்தர்ப்பம் லிங்கேசனுக்கு வர அவர் பிரபல மாடல் லீ யாகி விடுகிறார் . ஆனால் அதுவே அவர் வாழ்க்கைக்கு வினையாகி விடுகிறது . அப்படி என்ன ஆனது என்பதே 3.10 மணி நேர ஐ படம் ...
விக்ரம் நடிப்பில் மட்டுமல்ல மார்க்கெட்டிலும் சிவாஜி , கமல் வரிசையில் வந்திருக்க வேண்டியவர் . ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் வழுக்கி விட அஜித் , விஜய் போன்ற அவரை விட இளம் நடிகர்கள் அந்த இடத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு விட்டார்கள் . 48 வயதிலும் இந்த படத்துக்காக விக்ரம் எடுத்துக் கொண்ட சிரத்தையை இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அடித்து சொல்லலாம் . 86 கிலோவிற்கு உடலை ஏற்றி 56 கிலோவிற்கு குறைப்பதெல்லாம் நிஜத்திலும் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் . சென்னை பாஸை பேசும் பாடி பில்டர் லிங்கேசனாக , பிரபல மாடல் லீயாக , கூன் விழுந்த குரூபியாக என எல்லாமுமாக படத்தில் வியாபித்திருக்கும் விக்ரமின் நடிப்புக்கு ஐ ஒரு மாஸ்டர் பீஸ் . ஆனால் இந்த யானையின் நடிப்பு பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் கதை சோளப்பொரியாகிப் போனது சொதப்பல் ...
இண்டர்நேஷனல் மாடலாக எமி எக்கச்சக்க பொருத்தம் . ஆனால் இவரிடம் உள்ள சதையளவுக்கு கூட படத்தில் கதையில்லையே என்பது தான் வருத்தம்.\
படம் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் இருந்தாலும் இவர் உடையில் மட்டும் தயாரிப்பாளர் காட்டியதென்னமோ சுணக்கம் . ( என்ன எழுத்து டி.ஆர் மாதிரி ஆயிருச்சு ! ) . லிங்கேசனிடம் காதலிப்பதாக பொய் சொல்லி விட்டு குற்ற உணர்ச்சியில் துடிக்கும் இடங்களில் எமி பொண்ணு நல்லாவே நட்சுக்குது !. இருவரின் பிஸிக் மட்டுமல்ல கெமிஸ்ட்ரியும் நல்லாவே இருக்கு ...
சந்தானம் வழக்கம் போல சகட்டுமேனிக்கு எல்லோரையும் கலாய்த்து கிச்சுகிச்சு மூட்டுகிறார் . கூட்டமாக வரும் வில்லன்களில் ராம்குமார் , திருநங்கையாக நடித்திருப்பவர் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் .
" மெரசலாயிட்டேன் " , " என்னோடு நீ " பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏ க்ளாஸ் ரஹ்மான் . பி.சி யின் ஒளிப்பதிவு உலகத்தரம் . அனல் அரசு வின் சண்டைக்காட்சிகள் குறிப்பாக ஜிம்முக்குள் நடக்கும் சண்டை நம்மை நகரவிடாமல் ஜாம் செய்கிறது . ஒரு பாடலுக்கும் யாரையும் தம்மடிக்க போக விடாமல் ஷங்கரின் க்ரியேடிவ் பிரம்மாண்டம் கட்டிப் போடுகிறது . குறிப்பாக " மெர்சல் " பாடலில் எமி செல்போன் , பைக் என்று ஒவ்வொன்றாக உருமாறுவதும் , " ஐலா " பாடல் முழுவதும் வரும் சின்ன சின்ன ஆட் கான்செப்டுகளும் ஷங்கர் டச் ...
ஆஸ் யூசுவல் லொக்கேஷன் , க்ராபிக்ஸ் இரண்டிலும் பின்னியெடுக்கிறார் இயக்குனர் . முதல் சீனிலேயே எமியை கடத்தி கதைக்குள் (!) போய் விடுவது சாமர்த்தியம் . கரென்ட் , ப்ளாஷ்பேக் என நகரும் ஐ படம் சைனாவுக்குள் நுழையும் வரை இன்ட்ரெஸ்டிங்காகவே செல்கிறது . திருநங்கையை இந்த அளவுக்கு ஒட்டியிருப்பது அய்யே ! . ஹீரோ எதற்கு இப்படி ஆனான் என்று முழுசாக தெரியவரும் போது தான் ஐ ஹைலி டிஸப்பாய்ன்டிங் ! . இந்தியனில் கமல் , அந்நியனில் விக்ரம் இருவரின் நடிப்பையும் தாண்டி ஷங்கரின் கதை , அதை சொல்லும் விதம் இரண்டும் நம்மை வசீகரிக்கும் . ஆனால் இந்த படத்தில் அந்த ஷங்கர் மேஜிக் மிஸ்ஸிங் ...
ஷங்கர் வழக்கமான சமூக அக்கறை பாணி படங்களை விட்டுவிட்டு ரொமாண்டிக் த்ரில்லர் வகையறாவுக்கு வந்ததை பாராட்டலாம் . ஆனால் கொஞ்சம் வீக்கான கதைக்கு இன்னும் வீக்கான திரைக்கதை அவர் பழைய பாணிக்கு திரும்புவதே தேவலை என்று சொல்ல வைக்கிறது . டூ பீஸ் மாடல் எமி , கோ மாடல் ஜானுடன் அட்ஜஸ்ட் செய்யாததால் ஏற்படும் பிரச்சனை , லீயுடனான பழைய காதலால் எமிக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று அம்மா புலம்புவது , அதிலும் சின்ன குழந்தை கூட கண்டுபிடித்து விடும் மேட்டரை ட்விஸ்ட் என்ற நினைப்பில் சொருகியிருப்பதையெல்லாம் பார்த்தால் ஷங்கர் & கோ வின் கற்பனை வறட்சி பிரம்மாண்டமாக தெரிகிறது ...
சுருக்கமாக சொன்னால் இன்டர்நெட் , மியூசிக் என எல்லா சிறப்பம்சங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அல்ட்ரா மாடல் செல்போன் " ஹலோ " என்று இரண்டு வார்த்தை பேசுவதற்குள் சார்ஜ் போனால் எப்படியிருக்குமோ கிட்டத்தட்ட அதுவே ஐ . இருப்பினும் பொங்கல் விடுமுறை , விக்ரமின் நடிப்பு , டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் , படத்திற்கான ப்ரொமோ , எல்லாவற்றையும் விட மொக்கை என்று ஒதுக்கிவிட முடியாத படியான படம் இவையெல்லாம் ஐ யை காப்பாற்றக்கடவது . இந்த படத்தில் விக்ரம் பாடி பில்டராக வருகிறார் . அந்த பாணியில் சொல்வதானால் ஐ - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...
ஸ்கோர் கார்ட் : 42
( பி.கு : விக்ரம் என்னும் நடிப்பு ராட்ஸனுக்காகவே இந்த மார்க் )
Good review...............
ReplyDelete