பெரும்பாலும் ஹிந்திப் படங்களை பெரிதும் விரும்பி பார்க்காத எனக்கு அமீர்கான் படங்களில் மேல் மட்டும் ஈர்ப்பு உண்டு . அவருடைய ஒவ்வொரு படத்திலும் நம்மை பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு அழுத்தமான மேட்டர் இருக்கும் . அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் பி.கே வும் விதிவிலக்கல்ல . முதலில் வேற்று கிரக வாசியான அமீர்கான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்தே நம்மை கவனிக்க வைக்கும் படம் முடியும் வரை நகர விடாமல் கட்டிப் போடுகிறது . ஒவ்வொரு மதத்தை பற்றியும் , கடவுளைப் பற்றியும் , அதன் பெயரால் நடக்கும் பிரிவினை பற்றியும் அமீர்கான் குழந்தைத்தனமாக கேட்கும் ஒவொரு கேள்விகளும் சாட்டையடி . ஒரு கட்டத்துக்கு மேல் கடவுள் நம்மை படைத்தார் என்பதை விட நாம் தான் நமக்கு ஏற்றபடி டிசைன் டிசைனாக கடவுளை படைத்திருக்கிறோம் என்று கடவுள் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர்களையே யோசிக்க வைப்பதே படத்தின் வெற்றி . அனுக்ஷா வின் ஜெர்மனிய காதலும் , பிரிதலும் அழகான ஹைக்கூ . ஆனால் க்ளைமேக்ஷில் இருவரும் சேர்வதும் , எல்லோரும் அழுவதும் நம்மூர் விகரமன் ஸ்டைல் வழக்கமான சினிமா . மொத்தத்தில் பி.கே கருத்து முலாம் பூசப்பட்ட ஜாலியான ரசிக்கக்கூடிய படம் ...
ஆனாலும் இது ரங்க் தே பசந்தி , 3 இடியட்ஸ் அளவிற்கு என்னை பாதிக்காததற்கு இரண்டே காரணங்கள் . 1. இந்து மதத்தில் கடவுளின் பெயரால் காசு பார்க்கும் சாமியார்கள் , அவர்களின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் மக்கள் , கடவுள் , மதம் இரண்டையும் வைத்து நடக்கும் சண்டைகள் , அரசியல் இப்படி ஏற்கனவே பார்த்து பழகிப் போன ப்ளாட் . 2. படத்தை பார்த்தவர்கள் ஆஹா , ஓஹோ என்கிறார்கள் , இன்னும் பி.கே பார்க்கவில்லையா என்று குசலம் விசாரிக்கிறார்கள் , அமீர்கானின் தையிரியத்தை பாராட்டுகிறார்கள் நிச்சயம் பி.கே பாராட்டப்பட வேண்டிய படம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு இதில் வித்தியாசமாய் ஒன்றுமில்லை ..;
எல்லா மதங்களிலும் நல்ல நம்பிக்கைகளுக்கு ஈடாக மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன . மத நம்பிக்கைகளை வைத்து வியாபாரம் நடத்தும் சாமியார்கள் , அரசியல்வாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் . அத்தோடு கடவுளின் பெயரை சொல்லி குழந்தைகள் , பெண்கள் ஏன் தங்கள் மதத்தினரையே கூட கொல்லும் தீவிரவாதிகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள் . ஆனாலும் வழக்கம் போல பி.கே படம் இந்து மதத்தினரின் பல கடவுள் வழிபாடு , போலி சாமியார்களின் ஏமாற்று வேலைகள் இதைத்தான் அதிகம் அலசுகிறது . ஒன்றிரண்டு சீன்கள் ஊறுகாய் போல மற்ற மதத்தினரைப் பற்றி வருகிறது . இந்தியாவில் இந்து மதத்தை கிண்டல் செய்து எவ்வளவோ படங்களை பார்த்தாகி விட்டது . இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள் இருப்பதால் அந்த மதத்தின் நன்மை , தீமைகள் அனைவரும் அறிந்ததே . அப்படியிருக்க இதில் வித்தியாசம் என்ன இருக்கிறது ? . அதே நேரம் இந்து மதத்தை போல மற்ற மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகள் , மூளைசலவை செய்து மதமாற்றம் செய்யப்படும் அப்பாவி மக்கள் , மதமாற்றத்துக்காக இந்தியாவில் கொட்டப்படும் அந்நிய முதலீடு , அடுத்தடுத்த அந்நிய படையெடுப்புகளால் படிப்படியாக அழிக்கப்பட்ட நமது கலாசாரம் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து அமீர்கான் & கோ டீடைல்டாக ஒரு படம் எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் . மேலும் கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கும் , பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்கும் பெயர் போன தமிழகத்தில் பி.கே பாணி படம் பழக்கப்பட்ட ஒன்று .
குறிப்பாக சொன்னால் மணிவண்ணனை ஹீரோவாக வைத்து , வேலு பிரபாகரன் இயக்கத்தில் கடவுள் என்றொரு படம் தமிழில் வந்தது . நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள் , பார்த்தவர்களும் மறந்திருக்கலாம் . அந்த படத்தில் மணிவண்ணன் கடவுளாக நடித்திருப்பார் . பூமிக்கு வரும் அவர் தன் பெயரால் நடக்கும் சாதி கலவரங்கள் , மூடநம்பிக்கைகள் இவற்றை பொறுக்க முடியாமல் அதற்கு எதிராக அவரே களத்தில் இறங்குவார் . கடைசியில் கடவுளே மக்களால் கொல்லப்படுவது போல படம் முடியும் . இந்த படத்தில் இருந்து மணிவண்ணன் கடவுளாக வருவதை எடுத்துவிட்டு , அமீர்கானை வேற்றுகிரக வாசியாக்கி புத்திசாலித்தனமான திரைக்கதையையும் , மார்கெட்டிங்கையும் இணைத்து விட்டால் பி.கே . இரண்டும் ஒரே ப்ளாட் என்பதற்காகத்தான் இந்த ஒப்பீடே தவிர நிச்சயம் இரண்டு படங்களுக்கானதல்ல . அப்படி செய்தால் அதை விட அபத்தம் வேறுதுவும் இருக்காது . இருப்பினும் பி.கே வில் புதுசாக எதுவுமில்லை என்று புரிய வைப்பதற்காகத்தான் இந்த ஒப்பீடு ...
பி.கே ஜாலியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் தானே தவிர இதில் அமீர்கானின் தைரியத்தையோ , வித்தியாசமான சிந்தனையையோ பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை . இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளை மறுக்கும் நாத்திக கொள்கைகளுக்கு மூல நதியான சார்வாகம் , கம்யூனிஸ சித்தாந்தங்களுக்கு வேரான லோகாயுதம் போன்ற தத்துவங்கள் வேரூன்றி இருந்திருக்கின்றன . மேலும் தெருவுக்கு தெரு கடவுளாக ஆராதிக்கப்படும் ராமனையும் , கிருஷ்ணனையும் கிண்டல் செய்து பட்டிமன்றம் நடத்தும் தைரியமும் , அதை ரசித்து அதிலிருக்கும் உண்மைகளை சீர் தூக்கிப் பார்க்கும் பெருந்தன்மையும் காலங்காலமாக இந்துக்களுக்கு இருக்கிறது . எனவே இதில் அமீர்கான் & ராஜு இராணியின் தையிரியத்தை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை ...
இதே அமீர்கான் அவர் மதத்திலேயே உள்ள மூட நம்பிக்கைகளை கிண்டல் , கேலி செய்து கேள்வி கேட்டு படம் எடுத்திருந்தால் அவர் தைரியத்துக்கு பெரிய சல்யூட் அடித்திருக்கலாம் . ஏன் இந்த படத்திலேயே வரும் குண்டு வெடிப்பு சம்பவத்தை வெறும் பாசிங் சீனாக காட்டாமல் அதற்கு காரணமானவர்களைப் பற்றிய உண்மையான விவாதங்களை முன் வைத்திருந்தால் அமீர் & கோ வுக்கு கை குலுக்கியிருக்கலாம் . இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் சினிமா கேரியர் எஞ்சியிருக்கும் அமீர் கானால் அப்படியொரு ரிஸ்க் எடுக்க முடியுமா ? பிரான்சில் கார்ட்டூன் வரைந்ததற்கே அந்த கதி என்னும் போது படம் எடுத்தால் ? . புத்தகம் எழுதியதற்காக சொந்த நாட்டுக்கே திரும்ப முடியாமல் நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின் , சல்மான் ருஷ்டி இவர்கள் கதையெல்லாம் அமீர் கானுக்கு தெரியாதா என்ன ?உண்மையை உரக்க சொல்லும் தையிரியமான படத்தை அமீர்கான் என்றல்ல யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும் பார்க்கலாம் ! . மற்றபடி எல்லா சினிமாக் காரர்களின் ஈசி டார்கெட் யாரோ அவர்களை மட்டுமே இவர்களும் குறி வைத்திருக்கிறார்கள் . கொஞ்சம் வித்தியாசத்துக்கு மற்ற மதத்தினரைப் பற்றிய ஒன்றிரண்டு சீன்களை சேர்த்திருக்கிறார்கள் அவ்வளவே . இதை எழுதுவதால் எனது நோக்கம் எல்லா மதத்தினரையும் கிண்டல் செய்ய வேண்டுமென்பதல்ல . என்னுடைய வாதம் புதிதாய் நாம் அறியாத களம் எதுவும் படத்தில் இல்லை என்பது மட்டுமே ...
குறிப்பாக மோடி ஆட்சியில் இப்படியொரு படம் எடுப்பதற்கு தையிரியம் வேண்டுமென்று ஒரு பத்திரிக்கை எழுதியிருப்பதை படித்தால் சிரிப்பு தான் வருகிறது . அப்படி தையிரியத்தை பாராட்டுவதற்கு அமீர்கான் ஒன்றும் சாப்ளினும் அல்ல , மோடி ஒன்றும் ஹிட்லரும் அல்ல . எல்லோரும் செய்து கொண்டிருக்கும் பார்முலா படத்தை எடுத்து நாலு காசு பார்ப்போம் என்கிற வகையறா படம் தான் பி.கே வே தவிர மற்றபடி பெரிதாக எதுவுமில்லை . அப்படியே பாராட்டுவதாக இருந்தால் இந்த படத்தை எதிர்த்து தியேட்டர்களை அடித்து நொறுக்கி படத்துக்கு மேலும் பப்ளிசிட்டியை கூட்டிய சில இந்து அமைப்புகளை தவிர்த்து எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் அதை பற்றி கவலைப்படாமல் பெருந்தன்மையாக எல்லா படங்களையும் ரசித்து ஊக்குவிக்கும் சாமனிய இந்துக்களை பாராட்டி விழா எடுக்கலாம் . இதை படித்து விட்டு யாராவது கருத்து சுதந்திரக் கொடியை தூக்கலாம் . சினிமா விமர்சகனாக் மட்டுமல்ல தனி மனிதனாகவும் எப்பொழுதும் நான் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல . நான் எதிர்ப்பது செலெக்டிவ் கருத்து சதந்திரத்தையும் , கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் அரைத்த மாவையே அரைப்பதையும் தான் . மற்றபடி பி.கே லாஜிக்கை தவிர்த்து விட்டு பார்த்தால் ரசித்துப் பார்க்கக் கூடிய ஜாலி படம் ...
kadavul padam mattum alla, arai yen 305-l kadavul -padaithin pirathium PK.
ReplyDeleteபிகே படத்தினை பற்றி ஆஹா, ஓஹோ........ என்று பலரும் இஷ்டத்துக்கும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், உள்ளது உள்ளபடி அந்தப் படத்தை தோலுரித்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி. அருமையாக எழுத்தும் ஆற்றல் தங்களிடத்தில் உள்ளது, மேலும் மேலும் எழுதுங்கள், தொடருகிறேன்!!
ReplyDelete