Vanga blogalam in Facebook

10 October 2015

தெருக்கூத்து - கூத்தாடிகள் ரெண்டுபட்டால் ?! ...


டந்த சில மாதங்களாகவே பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கும் செய்தி அக்டோபர் 18 ல் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல் . கடந்த 15 வருடங்களாகவே தேர்தலே இல்லாமல் நடிகர் சங்கத் தலைவர் பதிவியை தக்க வைத்துக்கொண்டிருந்த சரத்குமாருக்கும் , 29 வருடங்களாக செயலாளர் பதவியில் இருக்கும் ராதாரவிக்கும் " பாண்டவர் அணி " என்று அழைக்கப்படும் விஷால் , கார்த்தி , நாசர் , பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் இந்த ஐவரால்
( பாஞ்சாலி யாருன்னெல்லாம் குசும்பா கேட்கக்கூடாது ) சில வருடங்களாக குடைச்சல் கொடுக்கப்பட்டு இன்று சரத்துக்கு எதிராக நாசரும் , ராதாரவிக்கு எதிராக விஷாலும் தேர்தலில் நிற்கும் அளவிற்கு மிகப்பெரிய மோதலாக வெடித்திருக்கிறது ...

நடிகர் சங்கத்தை இடித்து அங்கே எஸ்பிஐ சினிமாஸ் வருவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே பூச்சி முருகன் என்பவர் கேஸ் போட்டு கட்டிடம் கட்டுவதற்கு ஸ்டே வாங்கியிருந்தார் . இந்த முறைகேடு சம்பந்தமாக விஷால் , எஸ்.வி.சேகர் போன்றவர்கள் கேட்ட கேள்விக்கு பொறுப்பான பதில்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்தவர்கள் தனி டீம் அமைத்து இன்று ஜனநாயக முறையில் தேர்தலை சந்திக்க முனைத்திருக்கிரார்கள் . முதலில் இவர்களை பெரிதுபடுத்தத சரத்குமார் & கோ இப்பொழுது கமல்ஹாசனின் ஆதரவோடு சத்யராஜ் உட்பட பல சீனியர்களின் ஆதரவும் கிடைத்திருப்பதால் நிறையவே டென்சன் ஆகியிருக்கிறார்கள் . கட்டிடம் கட்டும் விஷயத்தில் முறைகேடு நடந்ததா ? இல்லையா என்று யாருக்கும் தெரியாது . ஆனாலும் விஷால் & கோ வினர் நிர்வாகிகள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் . மறு தரப்பினரோ பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்த பிறகு தான் தீர்மானம் போடப்பட்டது என்கிறார்கள் . உண்மையில் நடிகர் சங்க இடத்தின் மேல் அவ்வளவு அக்கறை இருப்பவர்கள் கோடி கோடி யாக தாங்கள் வாங்கும் சம்பளத்தில் அள்ளிக் கொடுக்க வேண்டாம் , கிள்ளிக் கொடுத்திருந்தாலே இந்த பிரச்சனை எப்பொழுதோ தீர்ந்திருக்குமே ?! அது அனைத்து நடிகர்களுக்குமே வெளிச்சம் ! ...

பொதுவாகவே எந்த ஒரு சங்கத்தும் குறிப்பிட்ட  ஆண்டு இடைவெளியில் ஜனநாயக முறையில் தேர்தல்  நடத்தப்பட்டு நிர்பவாகிகள் தேர்ந்தேடுக்கப்படுவதே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் . அப்படி இல்லாமல் ஒரே ஆட்களே ( மாமன் , மச்சானாக இல்லாமல் போனாலும் ) நீண்ட வருடகளுக்கு பொறுப்பில் இருப்பது நிச்சயம் இது போன்ற பிளவுக்கு ஒரு நாள் இல்லை நாள் வழிவகுக்கும் . அது தான் இப்போது நடந்திருக்கிறது . ஆர்யா , விஷ்ணு , விக்ராந்த் , சாந்தனு என்று இளவட்டங்கள் விஷாலுக்கு பின்னால் வரிந்து கட்ட , சிம்பு , தனுஷ் போன்ற சீனியர் இளவட்டங்கள் சரத்துக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் .  சிம்பு சரத் அணியினர் சார்பில் போட்டியிட , கார்த்தி விஷால் சார்பில் போட்டியிடுகிறார் . ஊர் ஊராக சென்று நாடக நடிகர்களை சந்தித்து அவர்கள் ஆதரவை விஷால் அணியினர் கோரினால் , சின்னத்திரையினர் ஆதரவை ராதிகா சரத்குமார் வைத்திருக்கிறார் .  இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைப்பது போல விஷாலை அவன் , இவன் என்று வசை பாடுகிறார் வாலு நடிகர் . நாமெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே பிரஸ் மீட்டில் விஷாலை கழுவி கழுவி ஊற்றுகிறார் சிம்பு . சரத்குமார் ஒரு படி மேலே சென்று விஷால் மேல் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கே போட்டுவிட்டார் . விஷாலோ எதையும் சந்திக்க தயார் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் . லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நினைவு தின விழாவைக் கூட இவர்கள் அரசியல் விட்டுவைக்கவில்லை . இப்படி நிஜ அரசியல் தேர்தலை கூட மிஞ்சி விடும் போலிருக்கிறது இவர்கள் சண்டை ...

முதலில் கூடுதல் பலத்திலிருந்த சரத் & கோ விஷால் சிலம்பலுக்கு  செவி சாய்க்காமல் தானிருந்தனர் . பிறகு உலகநாயகனின் நேரடி ஆதரவு அவர்களை நிலைகுலைய செய்தது . சூப்பர்ஸ்டார் மண்டபத்தில் வைத்து விஷால் அணியினர் கூட்டம் நடத்தியிருப்பது அவரின் மறைமுக ஆதரவாக மற்ற அணியினர் பார்க்கிறார்கள் . இப்படி ஒரு பக்கம் ஆதரவு கூடி வருவதை கண்ட சரத் அணியினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதை மறுத்துவிட்டார் விஷால் . இன்னும் தல ஆதரவு யாருக்கு என்று தெளிவாக தெரியவில்லை . ஆனால் இளையதளபதி புரட்சிதளபதி க்கு எதிராகத் தான் இருப்பார் போலத் தெரிகிறது . அரசியல் ஆசையில் இருக்கும் அவருக்கு கலைஞர் ஆட்சியில் மேடையிலேயே கேள்வி கேட்டு கெத்து காட்டிய தல போல சீனியர்களுடன் நிஜ ஸ்டண்ட்  அடித்து வரும் விஷாலின் வளர்ச்சி வெறுப்பேற்றியிருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள் ....

இந்த இரண்டு அணியினரின் சண்டை ஒரு புறம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை மாற்றி தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் வைக்க வேண்டும் மற்றும் ஒரு தமிழர் தான் சங்கத்தின் உயர் பதவிக்கு வரவேண்டுமென்றும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர் மற்றொரு அணியினர் . இது போன்ற இன , மொழி பேதங்களை கலைஞர்களுக்குள் புகுத்துவது சரியில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் தமிழர் யாரும் எந்த பதவியிலும் நிற்க முடியாது என்று அவர்கள் சொல்கிற செய்தியையும் மறுக்க முடியாது . புலி படம் ஃப்ளாப்பா , ஹிட்டா என்று இணையதளங்களில் நடக்கும் சண்டையை விஞ்சி நிற்கும் இந்த தேர்தல் பரபரப்புக்கு அக்டோபர் 18 க்கு பிறகு விடை தெரியும் . தேர்தல் முடிந்து நல்ல மாற்றம் ஏற்பட்டால் நல்லது தான் . எது எப்படியோ ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் . இங்கே கூத்தாடிகள் ரெண்டுபட்டிருப்பது ஊருக்கு கொண்டாட்டமோ இல்லையோ மீடியாக்களுக்கு நல்ல கொண்டாட்டம் . இதைப்பற்றி தினமொரு பேட்டி , செய்தி  என்று பரபரப்பாக்க இயங்கிக்கொண்டிருக்கின்றன மீடியாக்கள் ...



3 comments:

  1. Madras Rajagopala Radhakrishnan Naidu

    ReplyDelete
  2. Madras Rajagopala Radhakrishnan Naidu

    ReplyDelete
  3. maaman machan kootani - sarathkumar + radha ravi
    Next
    Maaman marumagan kootani - sarathkumar + vishal

    ReplyDelete