Vanga blogalam in Facebook

2 October 2015

புலி - PULI - பலி ...


ஜினிக்கு அடுத்தபடியாக குழந்தைகளால் அதிகம் ரசிக்கப்படும் மாஸ்  ஹீரோ விஜய் , முதல் படம் தவிர ஹிட் கொடுக்காத ஃபேண்டசி இயக்குனர் சிம்புதேவன்  இருவரும் குழந்தைகளுக்கான படமாக புலியை கொடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகும் பெரியவர்களின் நிலைமையை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கலாம்...

வேதாளங்களின் ( அஜித் இல்லைங்கோ ! ) கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் மருதீரன் ( விஜய் ) , வேதாளங்களால் கடத்தப்பட்ட தன் காதலி பவளவள்ளி (ஸ்ருதிஹாசன் ) யையையும் , அடிமைப்பட்ட தனது  கிராமத்தையும் எப்படி மீட்கிறார் என்பதே கடைசி வரை எப்படா பாயும் என்று நம்மை நோகடித்த புலியின் கதை ...

தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் இது போன்ற ஃபேண்டசி டைப் படத்துக்கு ஓகே சொன்னதற்கு பாராட்டுக்கள் . ஆனால் அதோடு தன் வேலை முடிந்து விட்டது என்று நினைத்து விட்டாரோ என்னமோ ! கொஞ்சம் நடிங்க பாஸ் ! . ஸ்ருதி யோடு அவருக்கு என்ன பிரச்சனையோ ?! எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசுகிறார் . அப்பா புலியாக ஃப்ளாஷ்பேக்கில் சீரியசான  குரல் மாடுலேஷனில் அவர் பேசும் போது சிரிப்பு சிரிப்பாக வருகிறது . பிரச்சனை என்னவென்றால் குழந்தைகளுக்கான படத்தை தனது ரசிகர்கள் நிராகரித்து விடுவார்களோ என்கிற பயத்தில் நடப்பு அரசியல் , " நான் ஆளப்பிறந்தவன் இல்ல , மக்களுக்காக வாழப்பிறந்தவன் " என்றெல்லாம் டயலாக் பேசவிட்டு அப்பா புலியை சாகடித்து விடுகிறர்கள் . பரிதாபம் வரவேண்டிய இந்த இடத்தில் புலி மேக்கப் புடன் ஒரு மாதிரி பேசும் விஜயை பார்த்து நமக்கு பயம் வருகிறது . கத்தி , துப்பாக்கி என்று ஒரு ஸ்டைலிஷான ஹீரோவாக மாறிக்கொண்டிருந்தவர் மேல் யார் கண் பட்டதோ ?! . குருவி , சுறா வரிசையில் புலி யை பார்த்தால் விஜய்க்கு மிருக தோஷமா ?! . கொடுமை என்னவென்றால் அந்த சுறாவையே நிறைய இடங்களில் தின்று விட்டது புலி . இளைய தளபதி யின் பழைய படத்தை பார்த்த ஃபீலிங் ...


ஐ.பி.எல் மேட்ச் நடுவில் ஆடும் சீர் லீடர் வேலை தான் ஸ்ருதி ஹாசனுக்கு . இலியானாவுக்கு அடுத்து அதிகம் இடுப்பை ஆட்டியவர் இவராகத்தான் இருப்பார் . இவருக்கு யாராவது டப்பிங் கொடுத்தால் தேவல ! . விஜயிடம்
" இப்படிக்கூடவா காதுல சொல்லுவாங்க " னு ஒரு டயலாக் பேசுகிறார் . என்னடா ஏதாவது பலான ஜோக் தான் விஜய் சொல்லிட்டாரோ னு பாத்தா , அது "காதுல " இல்லேங்கின்னா " காதல " அதத் தான் அந்த அம்மணி அப்புடி சொல்றாங்கோ ! . ஸ்ருதியின் இடைக்கு ஒய்வு கொடுத்து இடைவேளைக்குப் பின் அந்த வேலையை எடுத்துக்கொல்கிறார் சாரி கொள்கிறார் ஹன்சிகா மோத்வானி . ஸ்ரீதேவி க்குல்லாம் வயதே ஏறாதா ?! வேதாளமாக அதீத மேக்கப்புடன் சில இடங்களில் பயமுறுத்தினாலும் நார்மாலாக நைஸ் டு வாட்ச். பெரிய ஹீரோ என்றவுடன் நடிக்க டப்பென்று ஒப்புக்கொண்டிருப்பார்  நந்திதா . கமல் , மணிரத்னம் படங்களிலாவது ஏதோ டயலாக் கொடுத்திருப்பார்கள் போல ! பாவம் ஒரு பாட்டுக்கு வரும் டேன்சர் அளவிற்கு கூட நந்திதா ஸ்க்ரீனில் இல்லை ...

அடிக்கடி வரும் பாடல்களை பொதுவாக ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்லாலம் . ஆனால் இந்த படத்தில் ஸ்பீடே  இல்லாததால் அப்படி சொல்ல முடியவில்லை . விஜய் சூப்பரா டேன்ஸ் ஆடுறத நாங்க சன் மியூஸிக் லையே பாத்துட்டு போறோம் . அதுக்காக இப்புடியா !? . மற்றபடி
 " ஜிங்கிலியா  " தாளம் போட வைத்தால் விஜய் குரலில் " ஏண்டி ஏண்டி " மெஷ்மெரிசம் செய்கிறது . படத்தின் ஹைலைட் நடராசன் எ நட்டுவின் ஒளிப்பதிவு . சும்மா நச்சுன்னு இருக்கு . சிஜி சில இடங்களில் பல்லிளித்தாலும் நிறைய இடங்களில் சூப்பர் . ஆர்ட் டைரக்ஷன் அமர்க்களம் ...


சக்சஸ்  ஹீரோ விஜய் , ஸ்ரீதேவி , சுதீப் என பெரிய நடிகர் பட்டாளாம் , 100 கோடியை தாண்டிய பட்ஜெட் இப்படி கிடைத்த மிக பிரம்மாண்ட வாய்ப்பை நழுவ விட்டாலும் பரவாயில்லை சிதைத்து விட்டார் சிம்புதேவன் . பரிசலில் வரும் ராஜவம்ச குழந்தை , கொடுங்கோல் ஆட்சி , அந்த ராஜ்யத்துக்குள் செல்லும் ஹீரோ என பாகுபலி டைப் கதை தான் புலி . ஆனால் திரைக்கதை ?!. 100 கோடிக்கு மேல் இயக்குனரை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் சுஜாதா வின்  " திரைக்கதை எழுதுவது எப்படி " என்கிற 100 ரூபா புத்தகத்தை முதலில் வாங்கிக் கொடுத்திருக்கலாம் . பதுங்கவும் இல்லாமல் , பாயவும் இல்லாமல் ஒரே ஃப்ளாட்டாக இருக்கிறது புலியின் திரைக்கதை . 150 வயது ஆமை , ஒத்தைக் கண்ணன் , தவளை போன்ற சில சுவாரசியங்களும் படத்தில் உண்டு . ஹன்சிகா வை கருஞ்சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் சீன் , விஜய் தன்னை வேதாளம்  என்று நிரூபிக்கும் சீன் போன்ற  ஒன்றிரண்டை ரசிக்கலாம் ...

வேதாளத்திடமிருந்து ஊர் மக்களை காப்பாற்ற விஜய் ஓடி வரும் ஒப்பெநிங் சீனில் புலி வேதாளத்தை ( அஜித் ?! ) துவட்டி எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கத்த அவரோ வேதாளத்தின் காலை இறுகப்பிடித்து ஊரை காப்பாற்றுகிறார் . ஹீரோவின் பயந்த கேரக்டருக்கு ஏற்றபடி இந்த ஸீன்  இருந்தாலும் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் அடங்கிப் போகிறார்கள். வேதாளம் பிரபு வை  கொன்று விட்டு ஸ்ருதி யை கடத்திப் போவதை ஸீனாக வைக்காமல் செய்தி போல் நரேன் சொல்வதைக் கேட்டு விஜய் ஆவேசமாக போவது ஏதோ " ஆடித்தள்ளுபடி முடியப்போகுதாம்மா அதுக்குள்ளே சேலை எடுத்தரலாம் " என்று போவதைப் போல இருக்கிறது . ஒரு இலையைக் காட்டி சங்கிலி முருகன் வேதாளம் கதையை சொல்லி முடிப்பதற்குள் நாம் முருங்கை மரமே ஏறி விடுவோம் . பொதுவாக பாட்டுக்கு வெளியே போகிறவர்களை பார்த்திருப்போம் . இதில் வெளியில் போனவர்கள் பாட்டுக்கு உள்ளே வருகிறார்கள் ...

படம் என்ன அவ்வளவு மொக்கையா ? அப்படின்னா நீங்க அஜித் ரசிகரா ?1 என்று சிலர் கேட்கலாம் . ஆழ்வார் , ஆஞ்சநேயா போன்ற அஜித் படங்களாலும் பாதிக்கப்பட்ட அபலைத் தமிழர்களில் நானும் ஒருவன் தான் . விவரம் தெரியாத குழந்தைகளுக்கு படம் பிடிக்கலாம் . அவர்கள் சந்தோஷத்துக்காக படத்துக்கு போகிற பெரியவர்கள் ஷாப்பிங் போகும் போது ப்ளே ஏரியாவில் குழந்தைகளை விட்டு விட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பது போல விலகி நிற்பது நலம் . பிரம்மாண்டத்தால் பாகுபலி யுடன் ஒப்பிடப்பட்ட புலி வரிசையாக வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த விஜய்க்கு திருஷ்டி கழிப்பதை போல ரசிகர்களுக்கும் சேர்த்து போடப்பட்ட பலி ...

ஸ்கோர் கார்ட் : 37 

ரேட்டிங்      : 2* / 5*


4 comments:

  1. Hi ji appo kottai yedukka patta puliya

    ReplyDelete
  2. புலி புளித்து போன ஒன்று என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  3. நேர்மையான விமர்சனம்

    ReplyDelete
  4. நேர்மையான விமர்சனம்

    ReplyDelete