24 November 2015

காட்டுப்பசி - சிறுகதை ...


ன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே இருப்பது தெரியவில்லை . இந்த அத்துவானக் காட்டுக்குள் எப்போது வந்து மாட்டிக்கொண்டோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது . சிறுவனாய் இருக்கும் போது அம்மா , அப்பா இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டே நடந்தது நினைவுக்கு வருகிறது . அம்மாவுக்கு எப்போதும் சிரித்த முகம் . அப்பா அவ்வளவு கோவப்படும் போதும் அவளிடம் சின்னதாய் ஒரு புன்முறுவல் இருந்துகொண்டே இருப்பது ஆச்சர்யமாக இருக்கும் . நான் என்ன தப்பு செய்தாலும் அம்மா என்னை அப்பாவிடம் அடிவாங்க விட்டதேயில்லை . அந்த கோபமும் அம்மா மேல் அடியாக வந்திறங்கும் . இந்த இடத்திற்கு சுற்றுலா வருவதற்கு நான் தான் காரணமாக இருந்தேன் . எதிர்பாராத மழை வெள்ளத்தில் நான் அடித்துக்கொண்டு இங்கே வந்து சேர்ந்ததற்கும் சேர்த்து அம்மாவிற்கு நிறைய அடி விழுந்திருக்கும் .  இந்த காடும் , தனிமையும் பழகிவிட்டது . அப்பா என்னை மறந்திருப்பாரா ?  அவர்  ஒரு நாள் கூட என்னை பசியால்  வாட விட்டதில்லை . கோபப்பட்டாலும் எங்கும் கடன் கிடன் வாங்காமல் வீட்டிற்கு தேவையானதை செய்து கொண்டுதானிருந்தார் ...

ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருந்த நான் இங்கே எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன் . கிடைத்ததை தின்று , சின்ன விலங்குகளை கொன்று , பெரிய விலங்குகளிடம் இறையாகமால் தப்பித்து ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகவே கழிந்தது . பின் மெதுவாக இந்த காட்டு வாழ்க்கையும் பிடித்துவிட்டது  . பகலில் எங்கும் அமைதி , இரவில் பேரிரைச்சல் . அது இல்லையென்றால் இப்பொழுதெல்லாம் தூக்கம் வருவதேயில்லை . நிறைய இரவுகள் பசியோடு படுத்திருக்க வேண்டும் . எப்பொழுதாவது மனிதர்கள் தென்படும்போது தான்  உயிரே வரும் . அந்த சில நாட்கள் பசியில்லாமல் இருக்கலாம் . ஆனால் இந்த அத்துவானக் காட்டுக்குள் யாரும் அடிக்கடி வருவதில்லை . சில அரிய மூலிகைகளை எடுக்க , போட்டோ எடுக்க , இயற்கையை ரசிக்க , விலங்குகளை ஆராய்ச்சி செய்ய என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக அரசின் எச்சரிக்கையையும் மீறி சிலர் எப்போதாவது வருவார்கள் . அப்படி வரும் போது வயிற்றுக்கு ஏதாவது கிடைக்கும் . மற்றபடி மரணப்பசியுடன் காலம் தள்ள வேண்டியதுதான் ...

ஏதோ சத்தம் கேட்கிறது . தூரத்தில் யாரோ வரும் சத்தம் . காலடி ஓசைகள்  பெரிதாக கேட்கின்றன . டார்ச் லைட் வைத்துக்கொண்டு ஒருவன் நடந்து வர பின்னால் ஒரு பெண் நடந்து வருகிறாள் . வருபவள் அழகாக இருந்தாள் , அதோடு கைகைளில் ஏதோ பை . நிச்சயம் ரெண்டு நாட்களுக்கு தேவையான உணவாக இருக்கும் . இருக்கட்டும் நல்லது . மரத்திலிருந்து நான் மெல்ல இறங்குகிறேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை . அவர்கள் ஏதோ மொழியில் பேசிக்கொள்கிறார்கள் . மனிதர்களை அடிக்கடி பார்க்காததால்  ஏதோ ஒரு பரபரப்பு , பயம் , அன்னியம் தொற்றிக்கொள்கிறது . இன்றும் அப்படி ஏதோ ஒரு உணர்வு  தள்ள ஒதுங்கி நின்றேன் . அதைப்போல சிலர் என்னைப்பார்தவுடன் அலறி விடுவதுண்டு . அதற்காகவே கூட நான் ஒதுங்கி நின்று கொள்வேன் . ..

அவர்கள் என்னமோ பேசிக்கொள்ள அவன் மட்டும் கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு ஓடைப்பக்கம் செல்கிறான் . அனேகமாக பறவைகளை படம் பிடிக்கப்  போகிறான் . நேரம் ஆகிறது அவன் வரவில்லை . அவள்  கவலையாகிறாள் . அவன் போன திசையில் நடக்கலாமா என யோசித்து அவள் பின்வாங்குவது தெரிகிறது . இதுதான் சரியான சந்தர்ப்பம் . அவளுக்கு பின் மெதுவாக செல்கிறேன் . மிக அருகில் போனதும் அவள் முடியிலிருந்து ஏதோ இதுவரை முகர்ந்திரத வாசனை . அவள் தோள்களில் என் கையை வைக்கிறேன் . என்னைப் பார்த்ததும் ஒரு அலறலுடன் லேசாக மேலே சாய்கிறாள் .  நினைத்தபடியே அவள் பை என் கைக்குள் மாட்டுகிறது . அத்தோடு சேர்த்து எனது உணவையும்  தூக்கிக்கொண்டு நான் வேகமாக  எனது இடத்திற்கு போகிறேன் . எடையைப் பார்த்தால்  நிச்சயம் இவள் நான்கு  நாட்களுக்கு மேல் தாங்குவாள் . அவளை கீழே கிடத்தியவுடன் எனது முன்பற்கள் என்னை விட வேகமாக அவள் கழுத்தை நோக்கி போவது போலிருந்தது ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...