Vanga blogalam in Facebook

10 November 2015

தூங்காவனம் - THOONGAVANAM - தூள் வனம் ...


பொதுவாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பைர் ஆகி அல்லது சுட்டு இங்கே தனது கதை , திரைக்கதையில் அவ்வைசண்முகி , தெனாலி , பஞ்சதந்திரம் என்று படமெடுத்து ஹிட் ஆக்கும் உலகநாயகன் முதன்முறையாக ஒரு ஃப்ரெஞ்ச் படத்தை ( Sleepless night ) வாங்கி திரைக்கதை அமைத்து ! தன் உதவி இயக்குனர் ராஜேஸ் ம செல்வா வை வைத்து இயக்கியிருக்கிறார் . இதே போல நேர்மையாக அவர் நிறைய நல்ல படங்களை வாங்கி இங்கே தரமாக ரீ மேக்கினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது..

ஒரு நாள் இரவில் காப் & மாஃபியா கேங் இடையே நடக்கும் மோதலே தூங்காவனம் . மாஃபியா விடமிருந்து திவாகர் ( கமல்ஹாசன் ) போதைப்பொருளை கடத்த பதிலுக்கு விட்டல் ராவ் ( பிரகாஷ்ராஜ் ) கமலின் மகனை கடத்திவிடுகிறார் . கடத்திய போதைப்பொருளும் கை நழுவிப் போய் விட மகனை கமல் மீட்டாரா ? என்பதை தனது வேகமான திரைக்கதையால் படு ஸ்டைலிஷாக சொல்லியிருக்கிறார் கமல் ...


பாபநாசம் படத்திற்கு பிறகு அதே போல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வித் எமோஷனல் டச் படம் கமலுக்கு கிடைத்தது பார்ப்பவர்களுக்கு விருந்து . அவர் எங்கும் வானத்தில் எகிறிக் குதித்து யாரையும் அடிக்கவில்லை ( அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும் ) , மகனை மீட்பேன் என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசவில்லை ஆனால் படம் முழுவதும் ஒரு ஹீரோயிசத்தை நிலை நாட்டியிருப்பது கமல் எனும் லெஜென்டால் மட்டுமே முடியும் . கோபம் , வீரம், சோகம் என நிறைய உணர்சிகளை அவர் கண்களாலேயே காட்டியிருப்பது கிளாசிக் . ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்காமல் ஆடியன்ஸ் மேல் நம்பிக்கை வைத்து திரைக்கதை அமைத்திருப்பது கமலின் மெச்சூரிட்டி ...

கமலை சேஸ்  செய்யும் காப் ரோலில் த்ரிஷா படு ஃபிட் . சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் பிரகாஷ் ராஜ் , அவரது உதவியாளராக வந்து கிடைக்கும் கேப்பில் சிரிக்க வைக்கும் குரு சோமசுந்தரம் , காப் திரவியமாக கிஷோர் , கமலின் கொலீக் மணியாக யூகி சேது , சின்ன ரோலில் வந்தாலும் கவனிக்க வைக்கும் சாம்ஸ் மற்றும் சம்பத் , ஜெகன் , ஆஷா என சின்ன படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் படத்திலிருந்து கொஞ்சம் கூட விலகாமல் நம்மை ஒன்ற வைக்கிறார்கள் . கமலின் மகனாக வரும் அப்துல்லா , பப்பில் ஏதோ பிராண்டி வாங்கி அடிப்பது போல மவுத் கிஸ் அடிக்கும் மது ஷாலினி என இருவருமே ப்ளஸ் ...

முதல் சீனிலேயே கதைக்குள் சென்று விடும் படம் இடைவேளை வரை விறுவிறுப்புடன் அதே நேரம் சஸ்பென்ஸ் வைக்க தவறாமல் செல்கிறது இடைவேளைக்குப் பின் கொஞ்சம் வேகம் குறைவது போல் பட்டாலும் நம் கண்களை திரையில் இருந்து எடுக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் கமல்.
சம்பவ இடத்திற்கு சென்று கமல் , யூகி சேது நடந்ததை விசாரிக்கும் ஸீன் , , நிமிஷ கதிக்குள் எல்லோரையும் அடித்துவிட்டு கமல் தப்பிக்கும் ஸீன் ,, கமல் - த்ரிஷா அண்ட் கமல் - கிஷோர் சண்டை போட்டுக்கொள்ளும் ஸீன் என படத்தில் நிறையவே மாஸ்டர் பீஸ்கள் . சானு ர்கீஷின் ஒளிப்பதிவு , ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்கின்றன ...


படம் முழுவதுமே பெரும்பாலும் ஒரு நாள் இரவு ஹோட்டலில் நடந்தாலும் பார் , ரெஸ்டாரன்ட் , பப் என வரும் ரிப்பீட்டட் லொகேஷன்ஸ் கொஞ்சம் சலிப்பை தருவதை மறுப்பதற்கில்லை . கமல் எதிலுமே ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார் என்பது யாவரும் அறிந்ததே . ஆனால் ஒரு சீனில் டாய்லெட்டில் கக்கா போய்க்கொண்டிருப்பவன் மேல் விழுந்து கமல் ஓடுவார் . அதற்கு அடுத்த ஷாட்டில் தண்ணீர் விடாததால் அப்படியே கிடக்கும் கக்கா வை கூட காட்டும் அளவிற்கு நேர்த்தியாக இருப்பார் ( தேவையா ?! ) என எதிர்பார்க்கவில்லை .

உத்தமவில்லன் ஒடாததால் கமலுக்கு தயாரிப்பாளராக இந்த படம் முக்கியமான படம் . அப்படியிருக்க மனுஷன் போன வெள்ளிக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யாமல் எதுக்கு தேவையில்லாமல் வேதாளத்துடன் தீபாவளிக்கு வரிந்து கட்டுகிறார் என்று ஓர் ஆதங்கம் இருந்தது . வேதாளத்தை விட மிக குறைவான ஒப்பணிங்கே படத்துக்கு கிடைத்திருப்பதோடு நிறைய தியேட்டர்களில் வேதாள பிரம்மாண்டத்துக்கு முன் ஏதோ புது பட ஹீரோ போஸ்டர் போல கமல் படம் இருந்ததை பார்த்த போது  50 வருடத்துக்கு மேல் சினிமா அனுபவம் , பல வெற்றிகள் , விருதுகள் , உலக அளவிலான ரசிகர்கள் இதெல்லாம் பொய்யா ? வெறும் நடிப்பா என புதிய பறவை சிவாஜி ரேஞ்சுக்கு அந்த ஆதங்கம் கொஞ்சம் அதிகமானது . ஆனால் படத்தை பார்த்த பிறகு கமல் தன்  மேல் மட்டுமல்ல தனது ரசிகர்களின் ரசனை  மேலும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது புரிகிறது  . மொத்தத்தில் வழக்கமான காப் கதையாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் கமல் நடித்திருக்கும் தூங்காவனம் தூள் வனம் ...

ஸ்கோர் கார்ட் : 44

ரேட்டிங்   : 3.5* / 5* 

( படம் முடிந்த பிறகு வரும் " நீயே உனக்கு ராஜா " பாடல் ஹைலைட் )




No comments:

Post a Comment