15 January 2016

தாரை தப்பட்டை - THARAI THAPPATTAI - அடக்கி வாசிச்சிருக்கலாம் ...


டிகர்களின் கையில் இருக்கும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மிக சில இயக்குனர்களுள் முக்கியமானவர் பாலா . அவருடைய படங்கள் ஒரே டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பார்க்கத் தூண்டி விடும் . இசைஞானியின் 1000 மாவது படம் என்பது படத்திற்கு மற்றுமொறு மைல்கல்...

தஞ்சாவூரில் தாரை தப்பட்டை குழு வைத்து நடத்தி வரும் சன்னாசி
( சசிகுமார் ) , அவரை தீவிரமாக ( துணிக்கடையில் என் ப்ரா சைஸ் சொல்லு மாமா என்று கேட்குமளவுக்கு ) காதலிக்கும் அந்த குழுவின் முக்கிய ஆட்டக்காரி சூறாவளி ( வரலக்ஷ்மி ) இவர்களின் காதல் , பிரிவு , கிராமியக் கலைஞர்களின் சரிவு இவற்றை தனக்கே உரிய பட்டவர்த்தனமான ஸ்டைலில் அதே சமயம் வில்லனின் சைக்கோத்தனமான டார்ச்சர்கள் மற்றும் க்ளைமேக்ஸில் வில்லனின் சங்கை அறுக்கும் ஹீரோவின் வெறியாட்டத்துடன் படத்தை முடித்து வீட்டுக்கு போனா முதல்ல குளிக்கனும்டா சாமி என்கிற அளவுக்கு நம்மை வெறியேற்றி அனுப்பி வைக்கிறார் பாலா ...

சசிகுமார் தனது குருவுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும் . மற்ற ஹீரோக்களை போல இவருக்கு பெரிய டார்ச்சர் இல்லை . கரகாட்டம் சம்பந்தப்பட்ட படமென்பதால் சசிகுமாரை ஆட வைத்து விடுவாரோ என்கிற பயத்திலிருந்து நம்மை விடுவித்ததற்கு நாமும் கூட நன்றி சொல்லலாம் . மற்றபடி முடிந்தவரை நன்றாக நடித்திருக்கிறார் சசிகுமார் . படத்தின் மையப்புள்ளியே வரலக்ஷ்மி தான் . கொஞ்சூண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு  குத்தாட்டம் போடுவதாகட்டும் , மாமா மாமா என்று சசிக்குமாரை கொஞ்சுவதாகட்டும் , சரக்கடித்து விட்டு ஜி.குமாரை கலாய்ப்பதாகட்டும் , சசி தன்னை மறுத்தவுடன் அழுவதாகட்டும் இந்த படத்துல பொண்ணு நடிக்கல , வாழ்ந்திருக்கு . ஆனால் எப்போதுமே சரக்கை போட்டு விட்டு கவுச்சியாக பேசும் அம்மணி ஒருத்தன் படுக்க கூப்புட்டவுடன் அவனை பொளந்து  எடுப்பதும் , துணிக்கடையில் வைத்து படு விரசமாக பேசுவதும் ஓவர் டோஸ் போலவே படுகிறது ...


வாழ்ந்து கெட்ட  கலைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜி.குமார். சசி திட்டியவுடன் ஒரு பக்கமாய் படுத்துக்கொண்டு அழும் இடம் அருமை . மற்றபடி ஒரு பாடலை மட்டும் பாட விட்டு இவர் பெருமையை முடித்துக்கொள்கிறார்கள் . இவர் எந்தவிதமான கலைஞர் என்பதற்கு பெரிய டீட்டைளிங் இல்லை . வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் அந்த ரோலுக்கு பொருத்தமாக இருக்கிறார் . ஆனால் பாலா  வின் மற்ற வில்லன்களோடு ஒப்பிடும் போது ஒரு மாற்று குறைவு தான் . இன்னும் சொல்லப்போனால் கிராமியக் கலைஞர்கள் பற்றிய வாழ்க்கைப் பதிவில் சைக்கோத்தனமான இவருடைய கேரெக்டர் இடைச்செருகல் போல இருந்து நம்மை  நிறையவே இம்சிக்கிறது ...

பொதுவாக பாலா படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட நம்மை நிறைய கவர்வார்கள் . அதே போல இந்த படத்தில் வரும் அண்ணன் - தங்கை கேரக்டரும் , வயிற்றுப் பொழைப்புக்காக ரெட்டை அர்த்த வசனம் பேசி அவர்கள் பாடும் பாடலும் படம் முடிந்து நீண்ட நேரம் ஆகியும் நம் மனதை ஏதோ செய்கிறது . ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போடும் காயத்ரி ரகுராமும் , அவருடைய அம்மாவாக நடித்திருப்பவரும் கவனிக்க வைக்கிறார்கள் ...

ஹீரோ அறிமுக காட்சியில் இருந்து , க்ளைமேக்ஸ் சண்டை வரை இசைஞானியின் பின்னணி இசை படத்தில் ஒரு கேரக்டராகவே வலம் வருகிறது . மாணிக்கவாசகர் வரிகளில் பாருருவாய பாடல் உயிருக்குள் புகுந்து ஏதோ செய்கிறது . அந்த பாடலில் சசிகுமார் - வரு காதல் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன . இந்த காட்சிகளில் இளையராஜா - பாலா இருவரும் தாங்கள் ஜீனியஸ் என்று நிரூபிக்கிறார்கள் . இசைஞானி யால் மட்டும் தான்  காதல் , சோகம் , கோபம் , ஏக்கம் என்று எல்லா உணர்ச்சிகளையும் இசையால்  நமக்கு தர முடியுமென்பதற்கு தாரை தப்பட்டை  மற்றுமொரு உதாரணம் ...

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை எந்தவித காம்ப்ரமைசும் இல்லாமல் நம்  முன்னே விரிய விடுவதற்கு பாலா வைப் போல யாராலும் முடியாது . படம் நெடுக நிறைய விரச வசனங்கள் இருந்தாலும் அதை குறையாக சொல்லாமல் படத்தோடு நம்மை ஒன்ற வைப்பதென்பது பாலா வால்  மட்டுமே முடியும் . பொழப்புக்கு ஆட்டம் , பாட்டை தவிர ஒன்றுமே தெரியாத கும்பலின் வாழ்க்கை சினிமா டேன்ஸ் வருகையால் எப்படி பாதிக்கிறது என்பதை தெளிவாகவே பதிய வைக்கிறார் பாலா . இப்படி படத்தின் பலத்துக்கு எப்படி அவர் காரணமோ பலவீனங்களுக்கு அவரே முழுப்பொறுப்பு ...


ஜட்டியை விட கொஞ்சம் பெரிய சைஸ் டவுசரைப் போட்டுக்கொண்டு ஆடும் கும்பல் சினிமா பாடலை வைத்து ரெட்டை அர்த்த வசனம் பேசி  ஆடுபவர்களை கேவலமாக பார்ப்பதும் , குடிகாரக் கும்பலுக்கு முன் கர்னாடக  சங்கீதம் பாடிவிட்டு விட்டு வரும் ஜி.குமார் தன்னை பெரிய சாதனையாளர் போல பேசிக்கொள்வதும் மனதில் ஒட்டவில்லை . முதலில் இது எந்த மாதிரியான கதை என்பதே விளங்கவில்லை . வாழ்ந்து கெட்ட கலைஞனின் கதையா ? தனது வாழ்வாதாரத்தை காக்க முடியாத ஆட்டக்காரனின் கதையா ? காதலியின் வாழ்க்கை சீரழிவிற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமான காதலனின் கதையா ? பெண்களை வைத்து தொழில் பண்ணும் ஒரு கொடூரனின் கதையா ? ஆட்டம் என்ற பெயரில் உடலை வைத்து காட்சி விபச்சாரம் செய்யும் பெண்களின் கதையா ? என்பது பாலாவுக்கே வெளிச்சம் ...

ஆட்டம் , பாட்டத்தை வைத்து பொழைப்பு நடத்தும் கும்பலின் வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகளை மட்டும் வைத்து பாலா வின் அழுத்தமான ஸ்டைலில் படம் பண்ணியிருந்தால் நிச்சயம் தாரை தப்பட்டை  அதிரியிருக்கும் . அதில் தேவையில்லாமல் சைக்கோ வில்லனை விட்டு  வழக்கம்  போல வக்கிர எண்ணங்களை  காட்சிகளாக வகைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .  படத்தில் இப்படி  குறைகள் இருந்தாலும் இசைஞானியின் இசை , வருவின் நடிப்பு , மனதை  பிசையும் சில அழுத்தமான காட்சிகள் இவற்றால் படம் நம்மை பாதிக்காமல் இல்லை . ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றி இப்படத்தில் சொந்த கதை ?வசனத்தில் இறங்கியிருக்கும்  பாலா  ஒரே ட்ராக்கில் பயணித்து தேவையில்லாத ஆபாசம் , வன்முறை இரண்டிலும் அடக்கி வாசித்திருந்தால்
( என்னதான் படத்துக்கு சான்றிதழ் கொடுத்திருந்தாலும் ) ஒருவேளை தாரை தப்பட்டை நன்றாக ஒலித்திருக்கும் ...

ரேட்டிங் : 2.75 * / 5 *

ஸ்கோர் கார்ட் : 41 

2 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...