வானில் நிலவை மேகங்கள் மறைத்து விலகுவது போல அவனது மனதுக்குள் கடந்த கால நினைவுகள் வந்து வந்து போயின . அவளது மாமாவுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் அவனல்ல . ஆனால் அவர் சொன்னதன் உண்மை அன்று அவனை சுட்டது . இன்று எளிதாக சுந்தரியுடன் பேசிக்கொண்டு நிற்பது போல அந்த காலத்தில் முடியவில்லை . இது கூட அவள் புருஷன் மற்றும் அவன் குடும்பத்தார் இல்லாததால் சாத்தியமானது என்றே நினைத்தான் . கல்யாணம் வரை பெண்ணிற்கு அவள் வீட்டார் போடும் சட்டதிட்டம் , கல்யாணத்திற்கு பிறகு புருஷன் போடும் சட்டதிட்டம் . அதில் சில வரைவுகள் வேறுபடலாம் ஆனால் அடிப்படையில் அவளை அடிமைப்படுத்துவது மாறப்போவதில்லை . கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் எந்த ஒரு தன் வீட்டு விசேஷத்துக்கும் பெண் விட்டுக்கொடுக்காமல் போகத் துடிக்கிறாள் . நிறைய கணவன்மார்களுக்கு அவர்கள் மனைவி மிக அருமையாக சமைப்பாள் என்பதே அவள் வீட்டார் வரும் போது தான் தெரிகிறது . திருமணத்துக்குப் பின் தன் வீட்டாருடனான தொடர்பு ஏதோ ஒரு வகையில் அவளுக்கு நிம்மதியை தருகிறது . முதல் காதலன் என்பதையும் தாண்டி சொந்தக்காரனுமான அவனை பார்த்ததில் அவளுக்கு நிறையவே மகிழ்ச்சி ...
யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதவை படாரென்று திறந்து அங்கே சிவா வந்து நின்றான் . " சாரி மாப்பிள்ளை கால் தடுக்கிருச்சு " . அவன் நல்ல போதையில் இருப்பது நன்றாகவே தெரிந்தது . போதையில் இருப்பவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வார்கள் . அதில் குழந்தைத்தனம் , குரூரத்தனம் எல்லாவற்றையும் பார்க்கலாம் . அடுத்த நாள் போதையில் சொன்னேன் என்று சொல்லி மழுப்பிக் கொள்ளலாம் . போதையில் இருப்பவனுக்கு ஈக்குவலாக அடுத்தவனும் அடித்திருந்தால் பிரச்சனையில்லை . ஒருவன் மட்டும் சரக்கடித்து விட்டு அடுத்தவன் அடிக்கவில்லையென்றால் மாட்டினவன் மாண்டான் . அந்த ஒரு நிலையில் சிவாவிடம் கார்த்திக் மாட்டியது போலவே இருந்தது ...
" நீயும் வந்திருக்கணும் மச்சி , ஒரிஜினல் சரக்கு , ஜிவ்வுன்னு ஏறுது " .
" பார்த்தாலே தெரியுது " . " அய்யயோ அடிச்சது தெரியுதா , மத்தவங்க பார்த்தா
தப்பாயிடும் மச்சி " . சின்ன வயதில் தம்மடித்து விட்டு வாடை வராமலிருக்க கொய்யா இலையெல்லாம் மென்று தின்னது அவனுக்கு நியாபகம் வந்தது .
அதிலும் அப்பா கையை மோர்ந்து பார்த்து கண்டுபிடித்து வெளுத்து வாங்கியதும் அவனுக்கு மறக்கவில்லை .
" அடிச்சது தெரியுதா மச்சி " . இதோ சொன்னதை சொல்ல ஆரம்பித்து விட்டான் . " வாடையே வராது சொன்னான் ?! " . அவன் தானாக பேச ஆரம்பித்தான் . " அதெல்லாம் ஒன்னும் தெரியல விடு " .
" அப்புறம் எப்போ மச்சி உன் படம் வரும் ? போன தடவையே ப்ரொடியூசர் கெடைச்சுட்டாரு சொன்ன ?! " .
அவன் கதை சொல்லி பிடித்துப்போன ஒரு பெரிய ஜவுளிக்கடை ஓனர் அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்க ரெடியாக தான் இருந்தார் . பூஜைக்கு கூட நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் . அந்த நேரம் பார்த்து மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வர இன்னும் மூன்று மாதம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று போனவர் இன்று வரை வரவில்லை . அரசாங்கம் நாட்டுக்காக எடுக்கும் நடவடிக்கை ஏதோ ஒரு தனிப்பட்டவனின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது ...
" இல்ல மாப்பிள்ளை அவர் பேக் அடிச்சுட்டாரு . இப்போ வேற ஒரு கம்பெனி ல கதை சொல்லிருக்கேன் அனேகமா ஊருக்கு போனவுடனே ஆரம்பிச்சுடலாம்".
திருமணம் ஆகாதவனிடமும் , குழந்தை இல்லாதவர்களிடமும் எப்போ விசேஷம் என்று கேட்பது போலவே தான் நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கும் சினிமாக்காரனிடம் எப்போ அடுத்த ப்ராஜெக்ட் என்று கேட்பதும் . இதை தவிர்க்க முடியாது . சிவா ஒரு அக்கறையில் கேட்கிறான் , நிறைய பேர் இன்னும் வெட்டியா தான் இருக்கியா என்பது போல கேட்பார்கள் . இதற்காகவே அவன் பல விசேஷங்களுக்கு போவதில்லை . இருட்டு அறையில் நிறைய நாள் தண்ணீர் சிகரெட்டோடு முடங்கி கிடந்திருக்கிறான் . வேலை இருக்கும் போது இரவு பகல் பாராமல் உழைப்பதும் வேலையில்லா நாட்களில் சும்மாவே ஒரே ரூமில் கிடப்பதும் சினிமாக்காரர்களுக்கே சாத்தியம் ...
" உன்ன பார்த்தா எப்போ படம் ? என்ன பார்த்தா எப்போ கல்யாணம் ? இப்படி கேக்குறதே இங்க நெறைய பேருக்கு வேலையா போச்சு ! "
" நீ ஏண்டா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க ?"
" எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்லேன்னுல்லாம் பொய் சொல்லல மச்சி , பொண்ணு கிடைக்கல அதான் உண்மை " . அவன் சொல்லும் போதே கண்களில் ஒரு வேதனை தெரிந்தது . பொதுவாக கல்யாணம் ஆகாத முதிர்கண்ணன்கள் திருமண சடங்கை கேலி செய்தோ இல்லை மணப்பெண்ணை குறை சொல்லியோ சுய இன்பம் அடைந்து கொள்வார்கள் . சிவா அப்படியல்ல . பெரிதாக படிக்கவில்லையென்றாலும் பிசினஸில் நன்றாக சம்பாதிக்கிறான் . உள்ளூரில் எல்லா பெட்டிக்கடைகளிலும் , சூப்பர் மார்க்கெட்டிலும் இவன் ப்ராண்ட் ஊறுகாய் , புளியோதரை பேஸ்ட் வகையறா இல்லாமல் இருக்காது . அவன் சமைத்தால் ஊரே மணக்கும் , அப்படியொரு கைப்பக்குவம் . பெரிதாக படிக்கவில்லை என்பது அவனுக்கு ஒரு குறையாகவே இருந்ததில்லை ஆனால் அதை பெரிய விஷயமாக்கி அவனை ரிஜெக்ட் செய்தவர்கள் ஏராளம் ...
ஒரு முறை ஒரு கல்யாணத்துக்கு போயிருந்த போது அவன் சண்முகம் அண்ணனை பார்க்க நேர்ந்தது . சண்முகம் அண்ணன் அவன் வேலை பார்த்த இயக்குனரிடம் அஸோஸியேட் ஆக இருந்தவர் . பொண்டாட்டி போல கூடவே இருந்து புதிதாக சேரும் அஸிஸ்டண்ட்களை இயக்குனரிடம் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்வதே அவரின் முக்கிய வேலை . ஒரு படம் ஓடியதால் பிரபலமான இயக்குனருக்கும் இது போன்றதொரு அல்லக்கை தேவைப்பட்டது . கல்யாண மண்டபத்தில் இவனருகே உட்கார்ந்த போது வன்மத்தோடு பேசிக்கொண்டே போனார் .
" இந்த பொண்ணு கண்ண பாரேன் அலைபாயுது , நிச்சயம் கல்யாணத்துக்கப்புறம் நிலையா இருக்காது " .
" கல்யாணத்தப்பவே பொண்ணு இந்த ஆட்டம் போடுதே கல்யாணத்துக்கப்புறம் மாப்பிள்ளை சொல்றத மசுருல கேக்கும் " .
" காசு பணத்த பார்த்து பொண்ண கட்டிக்கிட்டு அப்புறமா இங்க குடையுதே அங்க குடையுதேம்பானுங்க முட்டாப்பசங்க " .
இப்படி ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொண்டே இவர்களெல்லாம் கல்யாணமாலை நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பார்கள் ...
லேசாக தள்ளாடிய சிவா சுவற்றில் சாய்ந்து கொண்டே பேசினான் .
" இப்போ பொண்ணுங்களெல்லாம் நெறைய எதிர்பார்க்குறாங்க மச்சி , நல்ல சம்பளத்துல வேலை , பணம் , ஃபாரீன் ட்ரிப் இப்படி மட்டுமில்ல பையனோட அம்மா , அக்கா , தங்கை ன்னு யாரும் இருக்கக்கூடாதாம் , பொண்ணோட அப்பா , அம்மாவே இத ஜாடை மாடையா கேக்குறாங்க " .
" நம்ம சாம்பு மாமாவுக்கு இல்லாத காண்டாக்ட்டா , அவரால முடியாதா ?"
" அவர் கூட்டிட்டு போன இடம் தான் அது , அவரே கடுப்பாகி அப்போ என்ன கல்யாணம் பண்ணனும்னா வீட்ல இருக்கறவாளெல்லாம் கழுத்த நெறிச்சு கொன்னுடனுமா ன்னு காட்டமா கேட்டுட்டு வந்துட்டார் " .
சாம்பு மாமா எதையும் பட்பட் டென்று பேசக்கூடியவர் . சொந்த சாதிக்காரன் யாரும் அவரோடு அவ்வளவாக வைத்துக்கொள்ள மாட்டார்கள் . ஊரே அவரை கொண்டாடினாலும் " சாதிய கெடுக்க வந்த சத்ரு " என்றே அவரை பொரிந்து தள்ளுவார்கள் . ஆனால் இவர்கள் இருவருக்கும் அவரை ரொம்பவே பிடிக்கும் ...
அவருக்கு திருமணமான கதையே பெரிய கதை . அவர் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை காதலித்தார் . அந்த பெண்ணிற்கும் அவரை பிடித்திருந்தது. இருவரும் சரியான பொருத்தம் என்று பேசிக்கொள்வார்கள் . திடீரென ஒரு நாள் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டவர் வீட்டை விட்டு ஓடி விட்டார் . எங்கே போனாரென்று தெரியவில்லை . இந்த கவலையில் அவர் அம்மா மிகவும் நொடிந்து விடவே , ஆபத்பாந்தவனாக அவரிடமிருந்து ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது . அதில் அவர் மிலிட்டரியில் சேர்ந்து விட்டதாகவும் ஆறு மாதம் கழித்து ஊருக்கு வருவதாகவும் தகவல் இருந்தது . இதை கேள்விப்பட்ட அந்த சொந்தக்கார பெண்ணிற்கும் இதுநாள் வரை இருந்த கோபம் மறைந்து அவரை பார்க்க வேண்டுமென்கிற ஆர்வம் வந்தது . அவரும் உயரத்துக்கேற்ற நல்ல உடல்வாகோடு வந்தார் . ஊரில் தெரிந்தவர்களுக்கெல்லாம் அவரால் முடிந்ததை வாங்கி வந்தார் தனக்கு பிடித்த பெண்ணிற்கு உட்பட . அதை ஆசையோடு அவளுக்கு கொடுக்கலாமென்று ஆத்தங்கரைக்கு வர சொன்னவர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது ...
காவேரி ஆறு அருமையாக ஓடிக்கொண்டிருந்தது . சாம்பு மாமா சைலண்டாக ஆற்றங்கரையில் உட்கார்ந்து மணலை நோண்டிக்கொண்டிருந்தார் . மணலால் அவர் கட்டிய அழகான கோட்டை இடியப்போவது தெரியாமல் வெள்ளந்தியாக உட்கார்ந்திருந்தார் . எப்பொழுதும் பூனை போல வந்து கண்ணை பொத்துபவள் இன்று அப்படி செய்யாமல் நேராக வந்து நின்றாள் .
அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியதால் வந்த கோபம் என்று நினைத்தார்.
" உனக்காக எத்தன நேரமா காத்துண்டு இருக்கேன் தெரியுமா ?" .
" என்ன ரெண்டு வருஷம் இருக்குமா ?" . இவர் ஓடிப்போய் ராணுவத்தில் சேர்ந்து திரும்ப வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதை சொல்கிறாள் என அவருக்கு புரிந்தது . " இன்னும் கோபம் தீரேலியா ?" .
" கவலைப்படாதீங்கோ நான் கோபப்பட்டு எங்கயும் ஓட மாட்டேன் "
அவருக்கு சுருக்கென்றது . " என்ன பண்றது , என் அப்பன் கண்டபடி திட்டினான், ஒரு நிமஷம் அங்க இருக்க முடியாதுன்னு ஓடிட்டேன் " .
" ஓடிப்போன அந்த ஒரு க்ஷணம் என்ன நெனைச்சுப் பார்த்தேளா ? "
" உன்ன மட்டுமா அம்மா , தங்கை , இந்த ஆத்தங்கரை எதையும் நெனைக்கமா
தானே ஓடினேன் , அப்போ எதையும் யோசிக்க முடியல " .
அவர் தீர்க்கமாக பதில் சொன்னார் ...
" கோவத்துல ஆத்த விட்டு ஓடினவன் எப்பிடி உன்ன கடைசி வர காப்பாத்துவான் னு அப்பா கேக்குறார் " . அவள் வீட்டில் இந்த இரண்டு வருடத்தில் பேசி பேசி நிறையவே மனதை மாற்றியிருந்தார்கள் . அவர்களை சொல்லி குற்றமில்லை அந்த காலத்தில் கல்யாண வயதில் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது என்னமோ வெடிகுண்டை வைத்திருப்பது போல .
" உங்க அப்பா தான் ஆத்தங்கரைக்கு போய் அந்த முட்டாப்பய கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு வான்னு அனுப்பிச்சாரோ ? " .
" இல்ல அவருக்கு தெரியாம நானா தான் வந்தேன் " .
" என்ன பார்க்க வருவ , இந்த பரிசை கொடுக்கலாம்னு ஆசையா காத்திருந்தேன் , ஆனா நீ உன்ன ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டு போன விஷயத்த சொல்ல வந்திருக்கேன்னு நெனைக்கிறேன் " .
அவருக்கு அந்த விஷயம் தெரிய வந்ததில் ஒரு வியப்புமில்லை . ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களிடம் சொல்லவேண்டியதை சொல்ல நாலு பேர் மரத்தடியில் எப்பொழுதுமே காத்துக்கொண்டிருப்பார்கள் ...
" அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் நீங்களும் வந்திருக்கேளா ?" அவள் அழுகையுடன் கேட்டாள் . ஆண்களுக்கு ஒரு விஷயத்தில் ஆத்திரம் வருவது போல பெண்களுக்கு உடனே அழுகை வந்துவிடுகிறது . அது ஆயுதமா ? கேடயமா ? என்பது சம்பந்தப்பட்டவர்களை பொறுத்தது .
" தெரியும் ஆனா உன் சம்மதத்தோட நடக்கறது தெரியாது " .
அவரின் சுருக்கு பேச்சு அவளை மேலும் பாதித்தது .
" ஆமாமா நான் தான் வந்து என்ன பொண்ணு பாருங்கோன்னு வாசல்ல நின்னுண்டு இருந்தேன் " அழுகையும் , ஆத்திரமுமாக அவள் பேச்சு வெடித்ததில் அவருக்கும் ஆத்திரம் தலைக்கேறியது ,
" அப்புறம் ஏண்டி இங்க வந்த ? உங்க அப்பன் சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான " அவர் கத்தியபடியே கையில் வைத்திருந்த பொருளை ஆற்றில் தூக்கியெறிந்தார் . அது அவளுக்கு அவளை தூக்கியெறிந்தது போலவே இருந்தது , இனிமேல் அங்கே நிற்பது நல்லதல்ல என்று நினைத்து அவள் வேகவேகமாக அழுகையுடன் நடக்க ஆரம்பித்தாள் .
" போடி போ உங்கப்பன் பார்த்த நொள்ளை மாப்பிள்ளையையே கட்டிண்டு அழு " , சொல்லும் போதே அவளுக்கு கல்யாணம் நடக்கப்போகும் அதே தேதியில் நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று மனதுக்குள்ளேயே கருவலானார் . சொந்தக்காக்காரன் , சாதிக்காரன் ஒரு பயல கூப்பிடக்கூடாது என்று அப்பொழுதே முடிவு செய்தார் . அந்த போட்டி மனப்பான்மை அவர் அழகுக்கும் , அறிவுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுடன் முடிச்சு போட வைக்கப்போகிறது என்று பாவம் அவருக்கு அன்றே தெரிந்திருக்கவில்லை ...
தொடரும் ...
முதல் மூன்று பகுதிகளை படிக்க கீழே சொடுக்கவும் ...
முதல் மூன்று பகுதிகளை படிக்க கீழே சொடுக்கவும் ...
No comments:
Post a Comment