போதையில் இருப்பவர்களுக்கு பொய் சொல்ல வராது இல்லை மனதிற்குள் புதைந்து கிடக்கும் உள்ளக்கிடக்கைகளை அவர்களால் அமுக்கி வைக்க முடியாது . அதனை கொட்டிக்கொண்டே இருப்பார்கள் , அதில் நல்லதும் வரும், நாற்றமும் அடிக்கும் . சிவா அது போன்ற ஒரு மனநிலையில் பேசிக் கொண்டே இருந்தான் . "உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மச்சி , சாம்பு மாமா மாதிரி லவ் பண்ண பொண்ணு கிடைக்கலேன்னு ஏதோ ஒரு அருக்காணியை கட்டாம வைராக்கியமா உன் கோல் ல குறியா இருக்க " .
சாம்பு மாமாவுக்கு அவனை போல சினிமா ஆசை இல்லாமல் இருந்திருக்கலாம் . அதனால் போட்டிக்காக விரக்தியில் ஏதோ ஒன்றை செய்து விட்டு மீதி வாழ்க்கை முழுவதும் அதை நொந்து கொண்டிருக்கிறார் . சிவா சொன்னது போல அவனால் அவ்வளவு எளிதாகவெல்லாம் சுந்தரியின் பிரிவை தாண்டி வரமுடியவில்லை . சிவா தஞ்சையிலும் அவன் மதுரையிலும் இருந்ததால் அவள் பிரிவால் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பை சிவா முழுவதுமாக உணர்ந்திருக்க வாய்ப்பில்லை ...
" என் கூட நீ சரக்கடிக்காதது மட்டும் தான் ஒரே குறை " , சிவா சொன்னான். வாழ்க்கையின் மிகப்பெரிய குறைகளையெல்லாம் இது போன்ற சின்ன சின்ன குறைகள் மறைத்துக்கொண்டே இருக்கின்றன அல்லது பெரிய குறைகளை நினைத்து நாம் தலை சுற்றி மலைப்பதற்குள் சிறிய குறைகளுக்குள் விரும்பியே சிக்கிக்கொள்கிறோம் . சிவாவுக்கு திருமணம் ஆகாதது தவிரவும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் பிசினஸில் இருக்கிறது . ஆனால் நிச்சயம் அதையெல்லாம் உற்ற நண்பனுடன் இருக்கும் போது மறக்க முடிகிறது . அதனால் தான் அவனுடன் அமர்ந்து சரக்கடிக்காதது கூட சிவாவுக்கு ஒரு குறையாகப்படுகிறது . " மச்சி இன்னும் கொஞ்சம் நாள் நீ இருந்துட்டு போ " சிவா கேட்கும் போதே சென்னையில் அடுத்து என்னென்ன வேலை இருக்கிறது என்று அவன் யோசிக்க தொடங்கி விட்டான் . உடனடியாக போகும் அளவுக்கு பெரிய வேலையில்லை தான் ஆனாலும் சினிமாவில் இருப்பவர்கள் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையென்றால் பிணமென்று நினைத்து தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று சண்முகம் அண்ணன் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது ...
'" மச்சி இருந்துட்டு போ ரொம்பவெல்லாம் யோசிக்காத " அவனை யோசிக்க விட்டால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவான் என்பதால் சிவா முடிவாகாவே சொல்லி விட்டான் . சென்னையில் ரூமை அடைத்துக்கொண்டு என்ன தான் யோசித்தாலும் அவனால் ரெண்டு சீன்களுக்கு மேல் எழுத முடிவதில்லை . சிவாவுக்கு தோட்டம் , தோப்போடு கூடிய அமைதியான வீடு , தேவைப்பட்டால் ஏதாவது குறிப்புகள் எடுத்துக்கொள்ள வசதியாக அருகாமையிலேயே நூலகம் . இதையும் சேர்த்தே யோசித்தவன் " சரி மாப்பிள்ளை நான் இருக்கேன் , ஆனா சண்டே கெளம்பிடுவேன் " என்று சொன்னான் .
அதற்கு நடுவில் இன்னும் மூன்று நாட்கள் இருந்தது .
" அப்போ நம்ம தோப்புல உட்கார்ந்து இளநி மிக்சிங்கோட அடிக்கிறோம் " . இப்பொழுதே சிவா பிளான் செய்ய ஆரம்பித்து விட்டான் .
" இரு மச்சி வெள்ளிக்கிழமை வேலைக்கு வேற ஏற்பாடு பண்ணிட்டு வரேன் ". சிவா செல்போனை எடுத்து நம்பர் போட்டுக்கொண்டே நகர ஆரம்பித்தான் ...
அவன் பிறந்து , வளர்ந்தது எல்லாம் மதுரையாக இருந்தாலும் அவனுடைய அம்மா சைடில் எல்லாம் தஞ்சாவூரை சுற்றி தான் . பள்ளி கோடை விடுமுறை நாட்களில் ஒவ்வொரு வருடமும் சாம்பு மாமா வீட்டுக்கு வருவது அவன் வழக்கம் . மாமியின் பேச்சுக்கு பயந்தே சாம்பு மாமா பணத்தை கொடுத்து ஜீவா அண்ணனுடன் அவனை சினிமாவுக்கு அனுப்பி விடுவார் . அவனுக்கு கமல் பிடிக்கும் , அவருக்கு ரஜினி பிடிக்கும் அதனால் சில வேளைகளில் தொடர்ந்து இரண்டு சினிமா பார்த்த அனுபவமும் அவனுக்கு உண்டு . ஜீவா அண்ணன் வயதில் மிக மூத்தவராக இருந்தாலும் அவனை நண்பன் போல பாவித்து பழகுபவர் . வயதுக்கு மீறி அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் புன்னகையுடன் பதில் சொல்லக்கூடியவர் . ஒரு முறை அவன் சொன்னதற்காக புரோட்டா கடைக்கு கூட்டிப்போனார் . ஏதோ ரெண்டு மூணு சாப்பிடுவான் மூணு ரூவா ஆகுமென நினைத்தார் போலும் , அவனை சாப்பிட சொல்லிவிட்டு பெட்டிக்கடைக்கு வெத்தலை பாக்கு வாங்க போய்விட்டார்...
பெட்டிக்கடைக்காரனுடன் கொஞ்ச நேரம் பேசி விட்டு திரும்ப வந்தவருக்கு பதினெட்டு புரோட்டா , சிக்கன் குழம்பு , நாலு ஆம்லெட் என ஐம்பது ரூபாவுக்கு மேல் பில்லை பார்த்தவுடன் அவருக்கு தலையே சுற்றிவிட்டது. ஏதோ தெரிந்த கடைக்காரன் என்பதால் வந்து தருகிறேன் என்று சொன்னவுடன் விட்டான். இதே டவுன் கடையாக இருந்திருந்தால் களேபரம் தான் . நடந்து போகும் போது " நீ எல்லாம் என் சாதில பொறந்திருக்கணும்டா " .
அவர் சிரித்துக்கொண்டே இதை மட்டும் தான் சொன்னார் . அவர் சொன்னவுடன் இந்த சாதி இத இத இவ்வளவு தான் சாப்பிடணும்னு ஏதாவது கணக்கு இருக்கா என அவன் யோசிக்க ஆரம்பித்தான் . ஏற்கனவே அவர் பில்லுக்காக பட்ட சிரமத்தை உணர்ந்து எதுவும் கேள்வி கேட்காமல் அவன் பேசாமலேயே நடக்கலானான் . இப்படி மதுரையை போலவே டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்ல அந்த மக்களோடும் அவனுக்குள்ள தொடர்பு அலாதியானது . அதனால் கூடவும் தான் சிவா சொன்னவுடன் அவனால் மறுக்க முடியவில்லை . இங்கேயே சில நாட்கள் தங்குவது என முடிவெடுத்தவுடன் அவனுக்கு பையனை பார்த்துவிட்டு வருகிறேனென்று சொல்லிவிட்டு போன சுந்தரியின் நியாபகம் வந்தது .
அன்று மாமா பேசிவிட்டு போன பிறகு அவள் நடந்து கொண்ட விதம் அவளுக்கு மாமா வந்த பேசியது எதுவும் தெரியாதது போலவே இருந்தது . அவள் உடல் அக்காவின் அருகே இருந்தாலும்மனம் அவனை பார்க்க போக முடியவில்லையே என ஏங்கியது . அந்த ஏக்கம் அவள் முகத்தை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்தது . அவள் நாளை கட்டு சாதம் கொடுத்து பெண் வீட்டாருடன் கிளம்புவாள் ஆனால் அவன் இன்றே கிளம்பியாக வேண்டும் அதற்குள் அவளுடன் எப்படியாவது பேசியே ஆக வேண்டும் என தீர்மானமாக இருந்தான் . திருவானைக்காவலில் தான் அவள் வீடு , படிக்கும் பள்ளிக்கூடம் எல்லாமே இருக்கிறது . அவன் கிளம்புவதற்குள் அவளிடம் பேசி அடுத்து எங்கே சந்திப்பது என்பதையெல்லாம் முடிவு செய்து விட வேண்டும் . அவளிடம் மாமா பற்றியும் அவர் அவளிடம் ஏதாவது சொன்னாரா என்பது பற்றியும் முதலில் விசாரிக்க வேண்டும் ...
பொதுவாக பணம் படைத்தவர்கள் எதிராளி சாமானியனாக இருந்தால் தங்கள் வீட்டுப் பெண்களிடம் பேசுவதை விடுத்து முதலில் சம்பந்தப்பட்ட பையனிடம் பேசுகிறார்கள் , மசியவில்லையென்றால் அவன் வீட்டாரிடம் பேசுகிறார்கள் . இதிலேயே நிறைய காதல்கள் முளையிலேயே பொசுங்கி விடுகின்றன . வந்தவன் தானாகவே விலகுவது போலாகிவிட்டால் அந்த பெண்ணிடம் அவனது இமேஜ் முழுவதுமாக உடைந்துவிடும் . அடுத்து தன் வீட்டார் சொல்வதை அவள் முழுமையாக நம்பிவிடுவாள் என்பதே அவர்கள் போடும் மனக்கணக்கு . யார் என்ன கணக்கு போட்டாலும் காலம் ஒரு கணக்கு போடுகிறது , அதிலிருந்து யாரும் தப்ப முடிவதில்லை ...
அங்கே ஆளாளுக்கு நலுங்கில் தங்கள் திறமையை காட்டிக்கொண்டிருந்தார்கள் . ஆடல் பாடல்களில் பெண் வீட்டாரின் கையே ஓங்கியிருந்தது . அவனை பார்த்தவுடன் அவன் அம்மா சத்தமாக கார்த்தி இங்க வா என்று கூப்பிட்டாள் . அம்மா பக்கத்தில் உட்கார்ந்தால் சுந்தரிக்கு நேரெதிர் அமர்ந்து அப்படியே அவளை ரசிக்கலாம் . அடுத்த திட்டத்தை கண்களாலேயே பேசிக்கொள்ளலாம் . ஆனால் கல்யாண வீடுகளில் அவன் அம்மா படுத்தல் அதிகமாகவே இருக்கும் . அவன் என்றோ பாடிய " கல்யாண சமையல் சாதம் " பாடலை பாட சொல்லுவாள் . அதெல்லாம் பழசும்மா என்று சமாளித்தால் உடனே :" நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் " பாட்டு ரஜினி படத்துல வருமே அதப்பாடுன்னு விடமாட்டாள் . அம்மாவை பொறுத்தவரை அவன் குழந்தை தான் . அதுவும் அவனை ஆட சொல்லி பாட சொல்லி அவன் திறமையை எல்லா சொந்தக்கார்களுக்கும் தெரியவைத்ததில் அவளது பங்கு தான் அதிகம் . காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு எனும் போது கர்நாடக சங்கீதம் தெரிந்த அவனது அம்மா குயிலுக்கு கேட்வா வேண்டும் ?!.
கல்லூரிக்கு போகும் அவனை இன்னும் சிறுவனாக பாவித்து அது பண்ணு, இது பண்ணு என்று அவன் அம்மா சொல்லும் போது அவனுக்கு சங்கடமாகவே இருக்கும் , அதுவும் இப்போது சுந்தரி வேறு இருக்கிறாள் . அவளுக்காக அம்மாவின் அன்பு குடைச்சல்களை பொறுத்துக்கொள்ளலாமா என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே இதோ அவன் அம்மாவே சத்தமாக மண்டபமே அதிரும் படி கூப்பிட்டு விட்டாள் . அவன் அம்மா அருகே அமர்ந்தான் . கண்ணைக் காட்டி சுந்தரி பழிப்பு செய்வது போலவே அவனுக்கு இருந்தது . சுற்றிலும் பார்த்தான் கொஞ்சம் மாமாக்களுடன் நிறைய மாமிகள் இருந்த அந்த கூட்டத்துக்குள் அவளது மாமா இல்லாதது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது . " என் புள்ள நன்னா பாடுவான் " அவன் அம்மா அவனுக்கு எம்எல்எம் செய்ய ஆரம்பித்து விட்டாள் . அவன் குறைந்தது ரெண்டு பாட்டாவது பாடி கைத்தட்டல் வாங்காமல் ஓய மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது ...
" ஏண்டாம்பி அம்மா தான் சொல்றாளோலியோ நல்ல பாட்டா பாடேண்டா" அவனது அம்மாவுக்கு மட்டும் அப்பாயிண்ட் செய்யாமலேயே சம்பளம் இல்லாமல் பி.ஆர்.ஓ எப்படியோ கிடைத்து விடுகிறார்கள் .
" நன்னா சொல்லுங்கோ மாமா ரொம்ப தான் பிகு பண்ணிப்பான் " .
அவன் அம்மா பாட்டை அப்போதே ஆரம்பித்து விட்டாள் . எல்லோரும் அவனையே பார்ப்பது போலிருந்தது . அப்படி என்னத்த பாடிரப்போறான் என்பது போலவும் , என்னத்த வேணா பாடட்டும் பொழுது போனா சரி என்பது போலவும் அவர்களது பார்வை இருந்தது . சுந்தரி அவனை பாட சொல்லி கண்களாலேயே ஜாடை காட்டிக்கொண்டிருந்தாள் . அவன் தொண்டையை செருமிக்கொண்டான் . ஸ்கூல் படிக்கும் போது நன்றாக தான் பாடிக்கொண்டிருந்தான் . அதன் பிறகு வந்த சிகரெட் பழக்கத்தால் தொண்டை அவன் சொல்வதை கேட்பதில்லை . ரொம்ப நேரம் தம் அடிக்காததாலோ என்னமோ அப்பொழுது கொஞ்சம் தேவலாம் போல அவனுக்கு பட்டது ...
" சுந்தரி நீயும் சுந்தரன் ஞ்ஞானும் " என்று கமல்-ஜானகி பாடிய டூயட் பாட்டை அவன் சிங்கிளாக பாட ஆரம்பித்தான் . சிகரெட் உபயத்தால் கொஞ்சம் தொண்டை கனமாக மாறி கமல் குரலுக்கு அவனுக்கு கைகொடுத்தது . அவன் பாட கேட்கும் போதே சுந்தரி வெட்கத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியாமல் அங்கிருந்த ஜமக்காளத்தை சுரண்டிக்கொண்டிருந்தாள் .
ஒரு வழியாக அவன் பாடி முடித்து விட்டு அங்கே அமர்ந்திருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தான் . சில வினாடிகள் அமைதிக்கு பிறகு எல்லோரும் கை தட்ட ஆரம்பித்தார்கள் . சுந்தரி இன்னும் குழந்தை போல மாறி வேகமாக தட்டிக்கொண்டிருந்தாள் . இந்த கரகோஷம் தான் அவனை சினிமாவுக்குள் போக தூண்டியது . அந்த ஒரு நிமிடம் கை தட்டும் யாவரும் அவன் யார் , என்னவென்றெல்லாம் யோசிக்கவில்லை . அவன் திறமையை மட்டுமே பார்த்தார்கள் . கலையும் , கலாச்சாரமும் வேறுபட்டு நிற்கும் மனிதர்களை கூட இணைக்கிறது . அவன் பாடியதை சுந்தரியின் அம்மா , அப்பா , பாட்டி எல்லோருமே நன்றாக ரசித்துக்கொண்டிருந்தார்கள் . அவன் பாட ஆரம்பிக்கும் போதே வந்து சற்று தள்ளியிருந்த தூணில் சாய்ந்து கொண்டிருந்த அவளது மாமா மட்டும் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ...
தொடரும் ...
முதல் நான்கு பாகங்களை படிக்க கீழே சொடுக்கவும் ...
No comments:
Post a Comment