அன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில் கொஞ்சமாவது கை கால்களுக்கும் செலவிட்டிருக்கலாம் . அவன்
கிறிஸ்துவப் பள்ளியில் படித்ததால் இயேசு கிறிஸ்துவை பார்த்ததும் பழக்க தோஷத்தில் ப்ளஸ் போடப்போன கைகைளை பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டான் . பள்ளி நாட்களில் அவனது ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து சிலபஸில் இல்லாத போதனைகளையும் வழங்கினார்கள் . அவனவன் கர்மா வை அவனவன் கடந்தே தீர வேண்டுமென்கிற சிந்தனை உரைக்கும் வரை அவன் கஷ்டம் வரும் போதெல்லாம் தெரு முக்கு பிள்ளையாரையும் சரி , ஜீசஸையும் சரி விட்டுவைக்கவில்லை . பத்தாவது படிக்கும் போது அவனுடன் நெருக்கமான கேரளத்து கிறிஸ்துவ பெண் காதலோடு சேர்த்து கர்த்தரின் கருத்துக்களையும் பரப்பினாள் . ஒருவேளை அவள் கூட இங்கே வரலாம் என்று யோசித்தவனுக்கு உடனே சுந்தரியின் முகம் நியாபகத்துக்கு வர அந்த நினைப்பை உடனே அழித்தான் ...
அவன் அவ்வளவு யோக்கியனெல்லாம் இல்லை , ஆனாலும் அவனுக்கு சுந்தரி எல்லா விஷயத்திலும் ஏற்றவளாகவே இருந்தாள் . அவள் போன்ற ஒருத்தியை சந்திக்கும் வரை அந்தந்த வயதிற்கான தேடல் இருக்கவே செய்தது . அதிலும் பேருந்தில் , ஏரியாவில் பேருக்காவது ஒரு பெண்ணோடு சம்பந்தப்படுத்தி பேசப்படாதவன் கேலி செய்யப்பட்டான் அல்லது கழட்டி விடப்பட்டான் . அந்த பெண்ணிற்கு ரூட் போட பல பேர் சுற்றினார்கள் . ஏரியா பரிச்சியத்தாலும் , அவள் அப்பாவை அவன் அப்பாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் அவளுடன் பழகுவதற்கு எந்த தடையுமில்லை . அவளுடன் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பேராவது சைக்கிள் பெல் வேலை செய்கிறதா என்பதை செக் செய்து கொண்டே அவள் வீட்டை கடந்திருப்பார்கள் . இருவருக்குமே சிரிப்பாக வரும் . அதிலும் ஒரு ஆளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் ஆகியிருந்தால் அவள் வயதுக்கு பையனோ , பொண்ணோ இருந்திருக்கும் . ஆனாலும் அத்தனை ஆட்கள் தன்னை சுற்றி வருகிறார்கள் என்பதில் அவளுக்கு பயத்தை விட கர்வமே மேலோங்கியிருந்தது ...
அந்த கர்வம் தொடங்கிய புள்ளியிலிருந்து தான் அவளுக்கு சிக்கல் தொடங்கியது . பொதுவாகவே கேரளத்து பெண்கள் மற்ற ஆண்களுடனும் இயல்பாக பேசக்கூடியவர்கள் . பாசாங்கு , போலித்தனமில்லாத அவர்கள் பேச்சு இங்கே பல ஆண்களுக்கு தனக்கான பிரத்தியேகமான பாசமாகவோ , அழைப்பாகவோ பார்க்கப்படுகிறது . அதனால் தான் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சிலர் அவளை துரத்திக்கொண்டு அலைகிறார்கள் .
ஒரு முறை அவனது அப்பாவே அவள் வீட்டு வாசலருகே சைக்கிளை ரிப்பேர் செய்வது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தவனை கூப்பிட்டு பளேரென அறைந்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார் . வேறு ஏரியாவிலிருந்து வந்தவன் அதன் பிறகு அந்த பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை . அந்த பிரச்சனைக்கு பிறகு அவளது அப்பா ஓரளவு மகளிடம் புத்தி சொல்லி அனைவருடனும் பேசுவதை தவிர்க்க சொன்னார் . அவளுக்கே அது கடுப்பாகி அவள் அப்பாவை பற்றி அவனிடமே திட்டியிருக்கிறாள் ...
அந்த சம்பவத்துக்கு பிறகு அவளோடு எந்த தடங்கலும் இல்லாமல் அவள் வீட்டிலேயே அமர்ந்து பேசக்கூடிய ஒரே ஆணாக அவன் மாறிப்போனான் . அவள் அருகாமையில் இருக்கும் போது தான் ஏன் அத்தனை ஆண்கள் அவள் பின்னால் நாயாய் அலைந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டான் . அவள் தோற்றமே வயதுக்கு மீறியதாக இருந்தது . மாநிறமாய் பெண்கள் அலைந்த ஊருக்குள்ளே அவள் மாம்பழ கலரில் இருந்தாள் . அவள் சிரிப்பு அழகாக இருக்கும் . அதை அனைவரும் ரசிக்கிறார்கள் என தெரிந்தோ என்னமோ அவள் அடிக்கடி சிரித்தாள் . அவன் அவளை அதிகம் பாராட்டாமலேயே இருந்தது அவளுக்கு போரடித்தது . அவனுக்கு என்றுமே அதீத அலட்டல் பிடிப்பதேயில்லை . அவளிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும் தனது அழகை பற்றிய அளவு கடந்த தற்பெருமை இருந்தது . அதனாலேயே அவளை புகழ்பவர்களிடம் அவள் மயங்கினாள் . அவளது வீக்னெஸ்ஸை புரிந்து கொண்டவர்கள் அதை பயன்படுத்தினார்கள் ...
அவளுடன் அதிக நெருக்கமாக இருந்தவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அவள் நடவடிக்கைகள் மேல் அதிருப்தி வந்தது . தன்னை பாராட்டுபவர்களுக்கு மத்தியில் யதார்த்தமாக இருக்கும் அதுவும் தொட்டதுக்கெல்லாம் கோபப்படும் அவன் மேல் அவளுக்கும் எரிச்சல் வந்தது . அதிலும் அவன் பன்னிரெண்டாவது வந்தவுடன் படிப்பிலும் , நண்பர்களோடும் பிஸியானதால் இருவருக்கும் விரிசல் அதிகமானது . அந்த விரிசலும் பிறகு அவளை இவனோடு பார்த்தேன் , அவனோடு பார்த்தேன் என்று யாராவது சொல்லும் போது அவனுக்கு ஏதோ ஒரு வெறுமை வரும் பிறகு நண்பர்களோடு பேச பேச அது கரைந்து விடும் . காதலியை பிரிந்து வரும் காதலனுக்கு நண்பர்களிடத்தில் அமோக வரவேற்பு இருக்கும் . அவன் இத்தனை நாட்கள் நம்மை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணோடு சுத்தினானே என்கிற ஏக்கம் , பொறாமை எல்லாமே கலந்து வருபவனை சற்று கூடுதலாகவே கவனிப்பார்கள் . அதுவும் சில நேரங்களில் அவனை சந்தோசப்படுத்துவதாக நினைத்து அவளை பற்றி ஏதாவது ஏடாகூடமாக பேசி அவனிடம் வாங்கிக்கட்டிக் கொள்பவர்களும் உண்டு ...
அவள் நினைவிலிருந்து மீண்டு அவன் சுரேஷின் தங்கையின் வழியில் வந்து தொல்லை கொடுப்பவர்கள் வருகிறார்களா என்று தேட ஆரம்பித்தான் . அவனுடைய ஆட்களும் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள் . அந்த மூன்று
பேரையும் எப்படியாவது அந்த சந்து வழியாக துரத்திக்கொண்டு சுடுகாடு ஸ்பாட்டுக்கு கொண்டு போய் விடவேண்டும் . அங்கே நண்பனின் அண்ணனை வைத்து பஞ்சாயத்து பேசி முடித்து விடலாம் . ஆனால் அது சொல்வது போல அவ்வளவு எளிதில்லை . அவர்களுக்கு தெரிந்தவர்கள் கூடி விட்டாலோ , போலீஸ் வந்துவிட்டாலோ கதை கந்தலாகி விடும் . ஒரு
சேஃப்டிக்கு பொருள் வைத்திருந்தாலும் அதை எடுப்பது நல்லதில்லை . அடிதடி என்பது இல்லாமல் அது கொலை முயற்சி என்கிற லெவெலுக்கு போய் வாழ்க்கையையே தடம் மாற்றி விடும் . அந்த உள்ளுணர்வு எப்பொழுதுமே அவனுக்கு உண்டு . அதனால் தானோ என்னமோ அவன் பல கண்டங்களிலிருந்து தப்பி வந்திருக்கிறான் ...
மர்ரூ எதெற்கெடுத்தாலும் சட்டென்று பொருளை எடுத்து விடக்கூடியவன் . அதனால் அவனை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே நிற்க வைத்திருந்தான் . அந்த மூவரில் முக்கியமானவனை அவன் வம்பிழுத்து அடிதடியை ஆரம்பிக்க வேண்டும் . அதன் பிறகு மொக்கையும் மற்றவனும்
வேறு திசைகளிலிருந்து வந்து அட்டாக் செய்ய வேண்டும் . அவர்களை ஓடவிட்டு துரத்திக்கொண்டு ஸ்பாட்டுக்கு போக வேண்டும் . ப்ளானை யோசித்துக்கொண்டே ஒரு தம்மை பற்ற வைத்தான் கார்த்திக் . இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் அவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள் . அவன் தம்மை அணைத்து விட்டு நேராக அவர்களை நோக்கி போனான் . அவன் கவனம் முழுவதும் மெயின் ஆள் மேலேயே இருந்தது . யார் அந்த க்ரூப்புக்கு தலைவனோ அவனை முதலிலேயே அடித்து விட வேண்டும் . அப்பொழுதான் கூட இருப்பவர்கள் பயத்தில் குழம்பிப்போய் சிதறி ஓடுவார்கள் ...
நடுவில் வந்து கொண்டிருந்தவன் மேல் கார்த்திக் வேகமாக போய் மோதினான் . " டே தாயோளி பாத்து வர மாட்ட " மோதின வேகத்தில் தடுமாறியவன் கோபத்தோடு கத்தினான் . அதையே எதிர்பார்த்திருந்த கார்த்திக் உடனே அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ட்யூப் லைட்டை எடுத்து
சொன்னவன் தோள்களில் அடித்தான் . அதை சற்றும் எதிர்பாராதவன் தடுமாறி விழ அருகில் இருந்தவர்கள் யோசிப்பதற்குள்ளேயே இடுப்பில் ஒரு உதை விட்டான் . இதை பார்த்தவுடன் அவன் நண்பர்கள் வேறிடத்திலிருந்து வந்து அவர்களை தாக்கினார்கள் . பயத்தில் மூவரும் ஓட ஆரம்பிக்க திட்டமிட்டபடியே அவர்களை சுடுகாடு வழியிலே துரத்திக்கொண்டு போனார்கள் கார்த்திக் & கோ . திடீரென அதில் ஒருவன் விலகி மெயின் ரோட்டுக்கு ஓட ஆரம்பிக்க கார்த்திக் துரத்த ஆரம்பித்தான் . வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்தை தாண்டி கண நேரத்தில் ஓடினான் கார்த்திக் . டிரைவர் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிப்பாட்டி அவனை வசை பாடிக்கொண்டிருந்தார் ...
இது எதுவும் தெரியாமல் சொன்னபடி மர்ரூ அங்கே சரியாக நிற்க வேண்டும் அவன் ஏதாவது பெட்டிக்கடைக்கு போயிருந்தால் சிக்கல் என்பதை யோசித்துக்கொண்டே அவன் ஓடினான் . அவன் நினைத்தது போலவே மர்ரூ சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொறித்துக்கொண்டிருந்தான் . " டே " என்று சத்தம் கேட்டு கார்த்திக் வந்த திசையில் பார்த்தவன் முதலில் உனக்கும் வாங்கவா என்பது போல சைகை செய்ய கார்த்திக் கொன்னுடுவேன் என்று கை காட்டியதையும் உடனே எதிரி ஓடும் திசையை பார்த்தான் . அதனை பார்த்தவுடன் சுதாரித்த மர்ரூ வேறு திசையில் ஓடி வந்து காலை தடுக்க அவன் எகிறி போய் விழுந்தான் . அங்கே வந்து சேர்ந்த கார்த்திக் விழுந்தவனை கொத்தாய் தூக்கி ரெண்டு அறை விட்டான் . பிறகு சுடுகாட்டு வழியாக அவனை ஓடுவதற்கேற்ப திருப்பி விட்டான் . அது புரியாத அவனும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த வழியாக ஓட இடைவெளி விட்டு அவர்கள் துரத்திக்கொண்டு போனார்கள் . ஒரு வேலையாக மதுரைக்கு வந்திருந்த சுந்தரியின் மாமா பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்ததால் எவனோ ஓடுவதையும் அவனை துரத்திக்கொண்டு கார்த்திக் ஓடுவதையும் பின்னர் நடந்த கூட்டத்தையும் நன்றாகவே பார்க்க முடிந்தது ...
ஒரு வழியாக ஓடி ஓடி கடைசியில் தடுப்பு சுவர் மேல் அவர்கள் முட்டி நின்றார்கள் . ஒன்று அதை தாண்ட வேண்டும் அல்லது சற்று தள்ளியிருந்த சின்ன சந்து வழியாக ஓட வேண்டும் . அங்கே சந்து இருப்பது இருட்டில் தெரியாமல் அவர்கள் கஷ்டப்பட்டு சுவற்றில் ஏறிக்கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே இருவர் ஏறி விட கடைசியாக ஏறிக்கொண்டிருந்தவனை மர்ரூ பிடித்து இழுத்துப் போட்டு மேலே ஏறி உட்கார்ந்தான் . அவன் எடைக்கு விழுந்தவன் தாக்குப்பிடிக்க முடியாமல் கத்த கார்த்திக் ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து அவனை பிடித்து இழுத்துப் போட்டான் . இந்த கேப்பில் விழுந்து கிடந்தவன் எழுந்து சந்தை கண்டுபிடித்து ஓட இவர்கள் பொறுமையாக சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அவர்களின் ஓட்டம் முடியும் இடம் இவர்களின் ஸ்பாட் என்று நன்றாகவே தெரியுமென்பதால் ஆசுவாசமாக அதை நோக்கி நடந்தார்கள் ...
தொடரும் ...
No comments:
Post a Comment