அவன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏரியாவே அலறும் ஒரு தாதாவின் கும்பல் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை . அது என்னமோ புலிக்கு பயந்து ஏரிக்குள் விழுந்து முதலையிடம் மாட்டிய கதை போலாகிவிட்டது . இதெல்லாம் முன்னமே தெரிந்திருந்த கார்த்திக் சாவகாசமாக ஒரு சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டே அவர்களிடம் வந்தான் . எம்பிக்கொண்டு அடிக்கப்போன மர்ருவை கார்த்திக் தடுத்தான் . அந்த இடத்தில் அவர்களை அவன் ஆட்கள் அடிப்பது சரியில்லை அது அவன் நண்பனின் அண்ணனுக்கு செய்யும் மரியாதைக்குறைவாகி விடும் . அமைதியாக இருக்க சொல்லி தனது ஆட்களுக்கு சைகை செய்தான் . சிறிது நேரத்தில் அங்கே ஒரு சலசலப்பு உருவானது . இருட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று போல அவன் நண்பனின் அண்ணன் வந்தார் ...
அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான் . முதன் முதலில் காலேஜில் கூடப்படிக்கும் பெண்ணை கிண்டல் செய்த பஸ் கண்டக்டரை தனி ஆளாக அடித்து ஓட விட்டதில் அவர் பெயர் கல்லூரி வளாகம் எங்கும் பரவியது . அதன் பின் கண்டக்டரோடு வந்த ஆட்களை கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைத்ததில் அந்த ஏரியா முழுவதும் பெயர் பிரபலமானது . அதற்கு மேல் கல்லூரி படிப்பிலெல்லாம் நாட்டம் இல்லாமல் முழு நேர அடிதடி ஆளாக அவர் மாறினார் . பிறகு எம்.எல்.ஏ வுக்காக ஒரு செய்கை செய்ததில் இருந்து காவல்துறை அவரை கண்டுகொள்ளாமல் தள்ளியே இருந்தார்கள் . அதை பயன்படுத்தி எதிரிகளை காலி செய்து தென் மதுரை முழுவதும் பெரிய தாதாவானார் . அவரை நேரடியாக தெரியாதவர்கள் கூட அவர் பெயரை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொண்டார்கள் . ரமேஷ் மட்டும் தான் இருப்பானென்று அவன் நினைத்திருந்தான் அண்ணன் இருப்பாரென நினைக்கவில்லை அப்படியே இருந்தாலும் இந்த சப்பை மேட்டருக்கெல்லாம் அவர் வரமாட்டாரென எண்ணியிருந்தான் ...
அவரின் அடிதடி பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருந்து அவர் ஆறடிக்கு மேல் ஆஜானுபாகுவாக இருப்பாரென கற்பனை செய்து வைத்தவனுக்கு அவனை விட உயரம் குறைவாக ஒரு ஐந்தடி மட்டுமே இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஓடி வந்தவர்களின் கேங்க் லீடர் மட்டும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் பயத்தில் வெலவெலத்து போய் விட்டான் . விஷயம் தெரியாத மற்றொருவன் தேவையில்லாமல் துள்ள இடி இறங்குவது போல ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்ததில் சுருண்டு தள்ளிப்போய் விழுந்தான் . அவரை கண்டு ஏன் எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . அந்த அடியின் வீரியத்தை அருகிலிருந்த அவனாலேயே உணர முடிந்தது . விழுந்தவன் சுதாரித்து எழ சிறிது நேரம் பிடித்தது . அவர் கார்த்திக்கையும் , எதிர் ஆளையும் பார்த்து சைகையில் கூப்பிட்டார் . இருவரையும் பார்த்து கொன்று விடுவேன் என்பது போல எச்சரிக்கை செய்து விட்டு எந்த ஏரியா என்று கேட்க இருவரும் சொன்னார்கள் . " இனிமே ஒருத்தன் ஏரியாக்குள்ள ஒருத்தன் போவக்கூடாது , மீறி பார்த்தேன் கொன்னு போட்ருவேன் , போங்கடா " என்று கத்த கார்த்திக் லேசாக கடுப்பானான் . உடனே அதை புரிந்து கொண்டவனாய் ரமேஷ் அவனை பார்த்து கண் ஜாடை செய்ய அவனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது ...
அந்த அடிக்கு பிறகு விழுந்தவனை கூட்டிக்கொண்டு அவர்கள் சடுதியில் இடத்தை காலி செய்தார்கள் . அதன் பிறகு கார்த்திக் , ரமேஷ் இருவரின் தோள்களிலும் கை போட்டுக்கொண்ட அண்ணன் " ரமேஷ் ஒழுங்கா படிக்க மாட்டேன்றான் , நீ தான் பாத்துக்கணும் . நீயும் இதோட எல்லாத்தையும் விட்டுட்டு படிக்குற வேலைய மட்டும் பாரு " அவர் சொல்லும் போதே ரமேஷ் அவனை பற்றி நிறைய அண்ணனிடம் சொல்லியிருக்கிறான் என்பது கார்த்திக்கிற்கு புரிந்தது . " சரிண்ணே , நான் பாத்துக்கறேன் , நீங்க ஃப்ரீயா விடுங்க " என்றான் . அதன் பிறகு அங்கிருந்து மெயின் ரோடு வரை வந்த ரமேஷை சரக்கடிக்க கூப்பிட அவன் அண்ணனுக்கு பயந்து ஆளை விடு என்று எஸ்கேப் ஆகிவிட்டான் . சுரேஷ் சமீப காலமாக அவர்கள் டாப் அடிக்கும் இட்லிக்கடையில் பரபரப்பாக வெயிட் செய்து கொண்டிருப்பான் . லோக்கல் ஆள் அப்படியே கெளம்பி விட கார்த்திக் யமஹா 100 ஐ ஸ்டார்ட் செய்ய மற்ற இருவரும் ஸ்ப்ளெண்டரில் கிளம்ப 100 கிமி வேகத்தில் ஏரியாவை நோக்கி பறந்தார்கள் ...
நேரம் கடந்திருந்ததால் இட்லிக்கடை மூடியிருந்தது ஆனால் அதனோடு சேர்ந்திருந்த பெட்டிக்கடையும் சாத்தியிருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது . செகண்ட் ஷோ முடிந்து ஆட்கள் வந்த பிறகு தானே மூடுவார்கள்!. மற்றவர்கள் சிகரெட் அண்ட் சரக்குக்கு தேவையான சைடிஷ்கள் வாங்க புறப்பட கார்த்திக் சுந்தரியை பற்றி யோசித்து கொண்டே பின் பக்கம் நடக்கலானான் . அவள் அவனது வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான் அவனுக்கு எதிர்காலத்தை பற்றிய எச்சரிக்கை உணர்வு அதிகமானது . அவள் படிப்பை பற்றி நிறைய பேசுவாள் . அவன் அவள் கை விரல்களை இறுக்கிகொண்டே கழுத்துப்பக்கம் எதையோ தேடிக்கொண்டிருப்பான் . ஆனால் கருப்பைக்குள் இருந்த அபிமன்யு தாய் சொன்னதையெல்லாம் கேட்டது போல அவள் சொன்னதெல்லாம் அவன் மூளைக்குள் நன்றாகவே ஏறியிருந்தது . அவளால் சினிமாவை பற்றிய அவனது எண்ணத்தை மாற்ற முடியவில்லையே தவிர வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் அதுவும் குறைந்தது டிகிரியாவது வேண்டுமென்பதை நன்றாகவே உணர்த்தியிருந்தாள் . அதனால் அவன் தேவையில்லாத அடிதடி , பஞ்சாயத்துக்களிலெல்லாம் தலையிடமாலேயே இருந்தான் . இது சுரேஷின் தங்கை விஷயம் என்பதால் அவனால் தவிர்க்க முடியவில்லை ...
பின்னால் நடந்து கொண்டிருந்தவனுக்கு காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தால் அங்கே ஹாஃப் பாட்டில் சிறிது சரக்கோடு உருண்டு கொண்டிருந்தது . கொஞ்சம் தொலைவில் இட்லிக்கடை கம் பெட்டிக்கடைக்காரன் வேட்டி விலக விழுந்து கிடந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே போதை என்று தெரிந்தது . ஆனால் காஸ்ட்லியான சரக்கெல்லாம் அவன் அடிக்க மாட்டானே அந்த பாட்டிலை யார் வாங்கிக்கொடுத்தது என்று யோசித்துக்கொண்டே கார்த்திக் குடிசைப்பக்கம் பார்க்க அந்த விரிசலில் சுரேஷ் சரக்கடித்து விழுந்து கிடந்தவன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்கு கடைக்காரனுக்கு யார் சரக்கு வாங்கிக்கொடுத்து மட்டையாக்கியது என விளங்கியது . அவனுக்காக அவர்கள் வேலை செய்த இடைவெளியில் அவன் என்னடாவென்றால் புருசனுக்கு சரக்கை வாங்கி ஊற்றிக்கொடுத்து விட்டு பொண்டாட்டியோடு ஜல்சா செய்து கொண்டிருக்கிறான் . அவர்கள் தண்ணியடிக்கும் போதெல்லாம் சுரேஷ் அடிக்கடி பின்னால் போய்விட்டு லேட்டாக வருவதன் சூட்சுமம் அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . ஆனால் அவர்கள் செட்டிலேயே எந்த பெண்ணை பற்றியும் அனாவசியமாக பேசாத அல்லது சைட் அடிக்காதவன் இவ்வளவு பெரிய வேலையையே கமுக்கமாக செய்து கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு ஒரு பக்கம் அதிசயமாக இருந்தது . மிகவும் அமைதியாக இருப்பவர்களுக்கு பின்னால் தான் நிறைய அதிசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன ...
எது எப்படியோ இப்பொழுது அவர்கள் இருக்கும் நிலையில் நடுவே புக விரும்பாமல் ஓரமாக வந்தான் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடைக்கும் மர்மங்கள் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தன . அவள் சாப்பிடும் போது சுரேஷ் அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் மீன் குழம்பு ஊத்துங்க என்று புருஷனிடம் சொல்லி ஊற்ற சொல்லுவாள் . அவனும் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அவனுக்கு மீனை நிறையவே வைப்பான் . ஆனால் யோசித்துப் பார்த்தால் இது ஏதோ அவசர கதியில் நடந்தது போல அவனுக்கு படவில்லை . அவள் புருஷனுக்கு குடி இல்லாமல் இருக்க முடியாது . குழந்தைக்கு பாலுக்காக வைத்த காசை கூட எடுத்துக்கொண்டு போய் குடித்திருக்கிறான் . அவளுடைய முயற்சியால் இந்த கடை அமைந்தது . அதன் பிறகு கடனை உடனை வாங்கி இந்த இட்லிக்கடையை நடத்திக்கொண்டிருக்கிறாள் ...
சுரேஷ் அவர்களுக்கு நிறைய தடவை கடனாக பண உதவி செய்திருக்கிறான்.
அதை கொடுத்துக்கழிப்பதற்கு பதில் படுத்துக்கழிக்கிறாள் போலிருக்கிறது , ஆனால் பண விஷயத்தையும் தாண்டி அதீத நெருக்கத்தை அவர்களிடம் அவனால் காண முடிந்தது . உதவி செய்தவன் மேலுள்ள விசுவாசம் காதலாக மாறியிருக்கலாம் . புருஷனின் கையாலாகாத்தனம் அவளை சுரேஷ் பக்கம் ஈர்த்திருக்கலாம் . சுரேஷ் அதிக செலவு செய்து அக்காவை பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்த கடனையே இன்னும் அடைத்துக்கொண்டிருக்கிறான் . இன்னும் தங்கை , தம்பி இவர்களின் படிப்பு, குடும்ப செலவையும் அவன் தான் பார்க்க வேண்டும் . அவனது அப்பா தனியார் கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்து ரிட்டையர் ஆனவர் . அவருடைய கொஞ்சம் சேமிப்பு மருத்துவ செலவுக்கே சரியாக இருக்கும் ...
கல்யாண வயதை தாண்டி குடும்பத்துக்காக உழைப்பவர்களுக்கு என்றுமே மனதுக்குள் ஒரு தீராத ஏக்கம் இருக்கும் . அந்த ஏக்கத்தை தான் அவன் குடிசைக்குள் தணித்துக் கொண்டிருப்பதாய் கார்த்திக் நினைத்தான் . சுந்தரிக்கும் அவனுக்கும் நடுவில் இருப்பது காதல் ஆனால் அவர்களுக்குள் நடப்பது கள்ளக்காதல் ஏனென்றால் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது . இதெல்லாம் யார் போட்ட சட்டம் ? . இந்த வயதிலிருந்து இந்த வயதுக்குள் தான் காதல் வர வேண்டுமென்று யார் சொல்வது ? வேலைக்காகாதவனாக இருந்தாலும் அவன் கூடவே தான் குப்பை கொட்ட வேண்டுமென்கிற விதியை அவளுக்கு யார் எழுதியது ? . அதே சமயம்
கணவன் மனைவி இருவரிடையேயும் ஒரு அன்யோன்யத்தை அவன் பலமுறை பார்த்திருக்கிறான் . அவள் புருஷன் சரக்கடிக்கும் போது அவள் ஒரு நாளும் ஆம்லெட் வைக்க தவறியதில்லை . மனித மனங்களின் விளையாட்டு அவனுக்கு விசித்திரமாக இருந்தது ...
" என்ன பாஸ் போன விஷயம் என்ன ஆச்சு ? ரொம்ப பதட்டமாகவே இருந்தேன் " சுரேஷ் சொல்லிக்கொண்டே அவனிடம் தான் வைத்திருந்த சிகரெட்டை நீட்டினான் . கார்த்திக் நடந்து முன் பக்கம் வந்து விட்டதால் சுரேஷுக்கு அவன் மேல் துளியும் சந்தேகம் வரவில்லை . ஆமாமாம் உங்க பதட்டத்தை தான் நான் பார்த்தேனே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே
" போன வேலை நல்லபடியா முடிஞ்சது , இனிமே அவன் நம்ம தங்கச்சி பக்கம் வரவே மாட்டான் " . கார்த்திக் சொன்னவுடனே சுரேஷுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது . " ரொம்ப தேங்க்ஸ் பாஸ் நீங்க தான் சுமூகமா இத முதல்லயே முடிச்சு வச்சீங்க " . அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது போல கார்த்திக் அவனையே பார்த்தான் . " இல்ல பாஸ் இந்த பொண்ணுங்களோட வயச நம்ப முடியாது , அவ பாட்டுக்கு லவ் கிவ்வு ன்னு அவன் பின்னாடி போக ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் குடும்ப மானம் கப்பலேறிடும் " . அவன் சொன்னவுடனே கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது.
" அட தாயோளி தங்கச்சி வேற ஜாதிக்காரன லவ் பண்ணா குடும்ப மானம் போய்டும் ஆனா இவன் வேற ஜாதிக்காரப் பொண்ணோட படுத்தா மானம் போகாதா ? என்னடா லாஜிக் என்பது போல நினைத்துக்கொண்டே
" அதான் மேட்டர் முடிஞ்சாச்சே , டோன்ட் ஒரி , அப்புறம் உங்க வேலைல்லாம் நல்லா முடிஞ்சதா ?" கார்த்திக் கேட்டவுடனே சுரேஷுக்கு பக்கென்று இருந்தது. " இன்னிக்கு ஏதோ பெரிய பெரிய டீல் முடியறதா சொன்னீங்களே பாஸ் ? கார்த்திக் சொன்னவுடனே " ஓ அதுவா " என்று கேட்டுக்கொண்டே அசடு வழிந்தான் சுரேஷ் . அவர்கள் இருவரும் தம்மை அடித்து முடிக்கும் போது மர்ரு அண்ட் கோ சரக்குக்கேற்ற இத்யாதிகளுடன் வந்து சேர்ந்தார்கள் ...
தொடரும் ...
No comments:
Post a Comment