இசைஞானி - மிஸ்கின் கூட்டணி யில் உதயநிதி பார்வை இழந்தவராக நடித்திருக்கும் சைக்கோ திரில்லர் படம் சைக்கோ. ஏற்கனவே அஞ்சாதே , யுத்தம் செய் , பிசாசு போன்ற படங்களால் நம்மை கவர்ந்த மிஸ்கின் பொலிவிழந்த உதயநிதியின் நடிப்போடு இசை , ஒளிப்பதிவு , இயக்கம் என எல்லா டெக்கினிக்கல் சமாச்சாரங்களாலும் தமிழ் சினிமா உலகிற்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் ...
The Chaser என்றொரு கொரியன் படம் அதில் சைக்கோ வில்லன் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்வான் . அவனிடம் சிக்கிக்கொள்ளும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அவளுடைய ஓனரால் எவ்வளவு முயன்றும் காப்பாற்ற முடியாமல் போகும் . PSYCHO என்றொரு தமிழ் படம் அதில் சைக்கோ வில்லன் ( ராஜ்குமார் ) பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறான் . அவனிடம் சிக்கிக்கொள்ளும் ரேடியோ ஜாக்கி ( அதிதி ) யை கண் பார்வையிழந்த காதலன் ( உதயநிதி ) கஷ்டப்பட்டு மீட்கிறான் . The Chaser படத்தின் நாட்டை தனக்கேற்ற பாணியில் மிஸ்கின் கவனிக்கும் படி சொல்லியிருக்கும் படமே சைக்கோ ...
அமுல் பேபி போல முகம் இருந்தாலும் ( The Chaser லும் அப்படியே ) க்ளோஸ் அப் காட்சிகளில் பார்வையாலேயே மிரட்டுகிறார் புதுமுக வில்லன் அங்குலுமாலியாக வரும் ராஜ்குமார். அடிக்காதீங்க டீச்சர் என்று இவர் க்ளைமேக்ஸ் காட்சிகளில் கதறும் நடிப்பில் கவருகிறார் . அம்மாவையே வாடி போடீ என்று வசைபாடும் முதல் சீனிலேயே அதிரடியாக அறிமுகம் ஆகிறார் நித்யா மேனன் . வீல்சேரிலேயே வலம் வந்தாலும் இவருடைய கேரக்டர் படத்தை தொய்வில்லாமல் நிமிர வைக்கிறது . பொதுவாக மிஸ்கின் படங்களில் ஹீரோக்கள் செய்யும் எக்சன்ட்ரிக் ரோலை இதில் நித்யா மேனன் திறம்பட செய்திருக்கிறார் ...
ஆர்ஜே வாக வரும் அதிதி பார்வையில்லாதவனையே கவரும் அளவுக்கு அழகாக இருக்கிறார் . காதலையே கன்ஃபார்ம் பண்ணாமல் இன்னும் ஒரு வாரத்தில் கவுதம் ( உதயநிதி ) உன்னை கொன்று விட்டு என்னை காப்பாற்றுவான் என தலையை வெட்ட வரும் வில்லனிடம் டயலாக் விடுவது சினிமாத்தனம் . அதே போல தலையை வெட்டி கொடூரமாக கொல்லும் சைக்கோவை இவர் குழந்தை என்று கடைசியில் சொல்வது நமக்கு கொலைவெறியை ஏற்றுகிறது . மேற்படி மூன்று கேரக்டர்களுக்கு பிறகே ஹீரோ உதயநிதி நமக்கு தெரிகிறார் . அவருடைய அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஓகே . அழுகின்ற சீன்களில் மூஞ்சியை மூடி ஒப்பேற்றுகிறார் . தேர்தல் பிரச்சாரங்களில் காட்டிய நடிப்பில் பாதியையாவது படத்தில் காட்டியிருக்கலாம் ...
மிஸ்கின் படம் என்பதையும் தாண்டி இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் ஓப்பனிங்கிற்கு முக்கிய காரணம் இசைஞானியின் இசையும் , சித் ஸ்ரீராம் குரலில் " உன்னை நெனைச்சு " பாடலும் தான் . அதை தவிர " நீங்க முடியுமா" பாடலிலும் பிஜிஎம் மிலும் தனது இசையால் மெஸ்மெரிஸம் செய்கிறார் இசைஞானி . பி.சி யின் மாணவர் தன்வீரின் ஒளிப்பதிவு குருவை போலவே கனகச்சிதம் . பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே நடந்தாலும் இவரது ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் ஒளியேற்றுகிறது . சிங்கம் புலி யின் கதாபாத்திரமும் அவரது முடிவும் சிம்ப்ளி சூப்பர்ப் . இன்ஸ்பெக்டராக வரும் ராமை விட டீச்சராக வரும் கேரக்டர் தான் படத்துக்கு பெரிய ஹைலைட் ...
முதல் சீனிலேயே சைக்கோ அறிமுகத்தால் நம்மை உறைய வைப்பது , காதல் காட்சிகளில் நேரத்தை வீணடிக்காமல் ஒரே பாடலில் அதன் வீரியத்தை உணர்த்தியது , நித்யா மேனன் கேரக்டரால் படத்துக்கு தேவையான பெப்பை கூட்டியது , வழக்கமான தமிழ் சினிமா போல கொலைகாரானுக்கு பெரிய
ப்ளாஸ்பேக்கெல்லாம் வைக்காமல் சில சீன்களிலேயே அதை உணர வைப்பது, பெண்ணின் உடலை அடையாளம் காட்டி விட்டு அழுது கொண்டே போகும் தாயாரை ஏரியல் சாட்டில் காட்டுவது என படம் நெடுக மிஸ்கினத்தனங்கள் நம்மை கட்டிப்போடுகின்றன ...
ஒவ்வொரு கொலைக்கு பிறகும் போலீஸ் வந்து தொப்பியை கழட்டுவதை தவிர கொலைகாரனை பிடிக்க வேறு எதையும் தீவிரமாக செய்யாதது சறுக்கல் . அதிலும் இந்த கொலைகாரனை பிடிக்கும் வேளையில் பிஸியாவே இருந்ததால் பொண்டாட்டியே ஓடிட்டா என்று சொல்லும் ராம் ஒரு சிசிடிவி யை கூட செக் செய்யாமல் இருப்பது பெருத்த பின்னடைவு . சைக்கோ கொலைகாரனுக்கு ப்ளாஷ்பேக் இல்லாதது ஓகே ஆனால் அவர் பெண்களை மட்டும் கொலை செய்வதற்கும் அவர்கள் தலையை வெட்டி விட்டு உடலை மட்டும் உள்ளாடைகளுடன் பப்ளிக்கில் டிஸ்பிளே செய்வதற்கும் உளவியல் ரீதியாக ஒரு விளக்கம் கொடுக்காமல் விட்டது பெரிய மைனஸ் . வில்லனுக்கு கட்டை விரல் இல்லை என்கிற க்ளூவை சிங்கம் புலி விட்டுச்செல்வதை வில்லனை கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் க்ளோஸ் காட்சிகளில் வில்லனுக்கு கட்டை விரல் இருப்பது இமாலய கவனக்குறைவு ...
The Chaser , Red Dragon , I SAW Devil போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு Psycho
பெரிய அதிர்வை தராது ஆனால் தமிழ் படங்களை மட்டும் பார்க்கும் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் மஸ்ட் வாட்ச் . கடந்த வருடம் வெளி வந்த சீரியல் கில்லர் மூவி ராட்சனில் இருந்த நிறைவு சைக்கோ வில் மிஸ்ஸிங். ஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க் எக்ஸ்பீரியன்ஸ்...
ரேட்டிங் : 3.25 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 44
No comments:
Post a Comment