9 March 2014

பதிவு போடலையோ பதிவு ! ...


பதிவெழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . உடல் நிலை சரியில்லையா அல்லது சினிமா பார்ப்பதை விட்டு விட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள்  வர ஆரம்பித்த பிறகு தான் இந்த இடைவெளியின் நீளம் நன்றாக உறைக்கிறது.
எனக்கு அம்மை போட்டதன் காரணமாக இதே போன்றதொரு இடைவெளி சென்ற வருடம் இதே நேரம் ஏற்பட்டது . அப்பொழுது கூட விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருப்பவர்கள் திட்டையும் பொருட்படுத்தாமல் எழுத  ஆரம்பித்து விட்டேன் ...

மற்றபடி எழுதாமல் இருப்பதற்கு கணினியில்  கோளாறோ அல்லது இணையத்தில் தடையோ தான் பொதுவாக காரணமாக இருக்கும் . ஆனால் இந்த முறை அப்படி எந்தவித தடையும் இல்லாமல் நான் பதிவு போடாதது  மட்டுமல்ல இணையத்திலேயே உலவாமல் போனதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை .  அதே நேரம் திடீரென ஒரு நாள் ஷஹி மூலம்  மூன்றாம் கோணம் இணைய தள நிறுவனரும் , நண்பருமான அபி கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டதும் உண்மை ...

படங்கள் ரிலீசானவுடன் பார்க்காமல் போனது விமர்சனங்கள் எழுதாததற்கு காரணாமாக இருந்தாலும் அப்படி பார்க்காமல்  போனது ஏனென்று யோசித்தால் அதற்கும் விடையில்லை . ஆனால் ஒரு விஷயம் நமக்கு பிடித்திருந்தாலும் அதையே திரும்ப திரும்ப செய்யும் போது  ஏற்படும் அயர்ச்சி தான் இதற்க்கெல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  கணவன் மனைவிக்குள் என்ன தான் பிடித்தம் இருந்தாலும்
ஒரு இடைவெளி ஏற்படும் போது பிறக்கும்  சுதந்திரத்தை எல்லாரோலும் உணர முடியும் . பிரிவிற்கு பிறகு இணையும் போது உறவு இன்னும் வலுப்படும் . ஒரு மாத இடைவெளிக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேனோ . சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ...

கடைசியாக விமர்சனம் எழுதிய படம் ரம்மி . ஒரு வேளை அது தான் அடுத்து படங்களை ரிலீசானவுடன் பார்க்காதற்கு  காரணமோ என்றெல்லாம் யோசித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை . வீரம் , ஜில்லா என்று கமர்சியல் அதிரடியில் ஆரம்பித்த 2014 பிறகு கொஞ்சம்  தொங்க ஆரம்பித்து விட்டது . விஜய் சேதுபதியின் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே சரியாக போகவில்லை . பார்ட்டி உஷாராக வேண்டிய நேரமிது . கதையை  தேர்ந்தெடுப்பதில்  கவனம் செலுத்தாவிடில் காணாமல் போய்  விடும் அபாயம் உள்ளது ...

இங்க என்ன சொல்லுது , இது கதிர்வேலன் காதல் இரண்டுமே காமெடி என்ற பெயரில் வந்த மொக்கைகள் தான் என்றாலும் இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை . சின்ன பட்ஜெட்டில் வந்த  கோலி சோடா பாராட்டுக்களோடு பைசாவையும் அள்ளியது சந்தோசம் . படம் பிடித்திருந்தாலும் எனக்கென்னமோ ரேணிகுண்டாவில் நடித்தது போன்ற பையன்கள் நடித்திருந்தால் படம் இன்னும்  பிக் அப் ஆகியிருக்கும் . ஏனா பசங்க ரொம்ப பால்வாடி யா இருக்காங்க . வல்லினம் , தெகிடி இரண்டுமே நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் பார்க்கவில்லை . நிமிர்ந்து நில் ரிலீசாகி இருக்கிறது . பார்த்தவுடன் பதிவு போடலாம் என்றிருக்கிறேன் ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதியையே அறிவித்தாகி விட்டது . அரசியலை தொடாமல் போனால் நன்றாக இருக்குமா ? . நான் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல எதிர்பார்த்த படி பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க கூட்டணி அமையவிருப்பது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க , அ.தி.மு.க விற்கு நல்ல மாற்றாக இருக்கும் என நம்பலாம் . கம்யூனிஸ்டுக்களை கழட்டி விட்டதிலிருந்து அ.தி.மு.க அதீத நம்பிக்கையிலிருப்பது தெரிகிறது . தோழர்களுக்கு தோள் கொடுக்க மு.க காத்திருக்கிறார் . அவர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை . நான் பல முறை சொன்னது போல காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது . இப்படி பல்முனை போட்டி நடப்பது குழப்பத்தை கொடுத்தாலும் அந்தந்த கட்சிகளின் பலத்தை நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் வழக்கம்  இருந்தாலும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதையும் , மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதையும் மறக்காமல்மக்கள்  வாக்களிப்பார்கள் என்று நம்பலாம் . ஏனெனில் டில்லியில் ஆம் ஆத்மி அடித்த 48 நாள் கூத்தை யாராவது மறக்க முடியுமா ? சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் அரவிந்த் அடித்த அந்தர் பல்டி பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது . மத்தியிலும் இது போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் ...

2 February 2014

ரம்மி - RUMMY - ராங் டிக் ...


வரிசையாக வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தனிப்பட்ட முறையில் பரிச்சயமாயிருந்த இனிகோ பிரபாகர் இந்த இருவருமே ரம்மி யின் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள் .  இவர்கள் ஏமாற்றவில்லையென்றாலும் இயக்குனர் பாலகிருஷ்ணன் சுவாரசியமில்லாத ரம்மி யை ஆடி நம்மை படுத்தி விட்டார் ...

87 இல் கதை நடக்கிறது . விடுதியில் தங்கி கல்லூரியில் ஒன்றாக படிக்கும் சக்தி ( இனிகோ ) , ஜோசப் ( விஜய் சேதுபதி ) இருவருக்கும் அந்த ஊர் பெண்களிடம் ( காயத்ரி ,ஐஸ்வர்யா ) ஏற்படும் காதலும் , அதனால் வரும் பிரச்சனைகளும் என்கிற அதரபழசான ஒன்லைன் தான் கதை . 80 களின் பின்னணியில் கதை நடக்கிறது என்பதற்காக 80 களிலேயே பார்த்து புளித்துப்போன திரைக்கதையையேவா எடுக்க வேண்டும் ?! ...

அழகர் சாமியின் குதிரை , சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாத்திரங்களில் வந்த இனிகோ விற்கு இந்த படத்தில் முழு நீள கதாநாயகன் வேடம் . சில க்ளோஸ் அப் காட்சிகளில் நடிப்பில் நெருடினாலும் மொத்தத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இனிகோ . நிறைய வாய்ப்புகள் கிடைத்து மேலும் வளர வாழ்த்துக்கள் ...


முன்னதாகவே புக் செய்யப்பட்டு விட்டதால் வேறு  எந்த ஒரு நடிகரும் செய்திருக்கக் கூடிய சாதாரண வேடத்தில் விஜய் சேதுபதி . பார்ட்டியை கல்லூரி மாணவன் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியவில்லை . வெகுஜன நாயகன்  ( ஓசியா டைட்டில் கொடுத்தாச்சு ) விஜய் சேதுபதிக்கு இந்த படம் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவும் ...

வடிவேல் பாணியில் வளம் வரும் சூரி கல்லூரியில் செய்யும் சில சேட்டைகளை ரசிக்கலாம் . ஆனால்  அவர் சீரியசாக நட்பை பற்றி இனிகோவிடம் பேசும் போது சிரிப்பு வருகிறது . இனிகோ விற்கு ஜோடியாக சுமார் மூஞ்சி காயத்ரியும் , விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரொம்ப சுமார் மூஞ்சி ஐஸ்வர்யா வும் ( பேரையாவது மாத்தலாம் ) கிராமத்து பெண்கள் வேடத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் ...


யதார்த்தமான கதாபாத்திரங்கள் , இடைவேளைக்கு பிறகு  கொஞ்சம் சூடு பிடிக்கும் திரைக்கதை , மலரும் நினைவுகளை கொடுக்கும் டூரிங் டாக்கீஸ் காட்சிகள் , லொக்கேஷன் , ஒளிப்பதிவு போன்றவை ரம்மியை கவனிக்க வைக்கின்றன . இமானின் பின்னணி இசை எஸ்.ஏ ராஜ்குமாரை நினைவு படுத்தினாலும் பாடல்கள் படத்திற்கு பலம் மட்டுமல்ல ஆறுதலும் கூட ...

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முடிவெடுக்கும் போதே அவரவர் மனதில் ஒரு ஓன்லைன் உதயமாகும் . ஆனால் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கும் போது காலத்திற்கேற்றார்ப் போல கதை , திரைக்கதை யை செப்பனிடா விட்டால் கையை கடித்து விடும் . அந்த வரிசையில் இயக்குனருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ரம்மி - ராங் டிக் ...

ஸ்கோர் கார்ட் : 38


12 January 2014

வீரம் - VEERAM - வெல்லும் ...


தீனா தவிர்த்து பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் அத்தனை படங்களும் அட்டர் ஃப்ளாப் . அதோடு கோட் சூட் , கூலிங் க்ளாஸ் , கையில் துப்பாக்கி என்று அல்டரா  மாடல் போல சுற்றிக் கொண்டிருந்தவரை வேட்டி சட்டை , விபூதி , அரிவாள் என்று கிராமத்து ஆளாக காட்டினால் எடுபடுமா ? இப்படி பல சந்தேகங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் அஜித்தை வைத்து தல பொங்கல் கொடுத்து பதில் சொல்லியிருக்கிறார்  இயக்குனர் சிறுத்தை சிவா ...

குடும்பம்  பிரிந்து விடுமோ  என்கிற பயத்தில்  4 தம்பிகளுடன் கட்டை பிரமச்சாரியாக வாழ்கிறார் விநாயகம் ( அஜித்குமார் ) . தம்பிகளோ கோப்பெரும்தேவி ( தமன்னா ) யை அண்ணனுக்கு கரெக்ட் செய்ய , காதலியின் அப்பா ( நாசர் ) சம்மதம் வாங்க அவளுடன் ஊருக்கு செல்லும் அஜித்  அந்த குடும்பத்திற்கு ஏற்படவிருக்கும் பெரிய அபாயத்தை அவர்களுக்கே தெரியாமல் தன்  வீரம் காட்டி முறியடிக்கிறார் ...


சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டாலும் பேச்சில் அமைதியையும் , சண்டையில் ஆக்ரோஷத்தையும் அழகாக காட்டி  வசீகரிக்கிறார் அஜித் . மாஸ் ஹீரோக்களில் ரஜினிக்கு அடுத்து " Larger than Life"  இமேஜை ஸ்க்ரீனில் படம் முழுவதும் கேரி செய்யும் தகுதி தனக்கிருப்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறார் . சண்டையில்லாமல் அறிமுகம் ஆகிறாரே என்று சந்தோசப்பட்டால் அதன் பிறகு பல பேரை  அடித்து கொன்றே அதை சிதைத்து விடுகிறார் . ஆனாலும் ரயில் சண்டையில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அபாரம் . இது வரை ஒப்பனிங் கிங் என்று அறியப்பட்டவர் தொடர் வெற்றிகளின் மூலம் மாஸ் கலெக்சன் கிங்காகவும் மாறியதற்கு வாழ்த்துக்கள் ...

தமன்னா பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ரசிகர்களை தம்மடிக்க அனுப்பாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . நான்கு தம்பிகளுள் விதார்த் தேறுகிறார் . அடிதடி குடும்பத்தை பெயிலில் எடுக்கவே வீட்டோடு இருக்கும் வக்கீல் சந்தானம் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் கல கல . முதல் பாதி இவர் உபாயத்தில் வேகமாகவே போகிறது . வில்லன்கள் ராவத் , அதுல்  இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களில்  பழைய நெடி இருந்தாலும் அஜித் சண்டை  போடும் போது வீரம் பின்னணி பாடல் முறுக்கேற்றுகிறது ...


புதிதாய் எதுவும் இல்லாத கதை , அஜித் - தமன்னா இருவரின் காதலை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியது , பாடல்கள் , அளவுக்கதிகமான சண்டைகள் போன்ற குறைகள் இருந்தாலும் சந்தானத்தின் காமெடி , அஜீத் தை
கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொங்கல் விருந்து கொடுத்த விதத்தில் வீரம் வெல்லும் ...

ஸ்கோர் கார்ட் : 43



ஜில்லா - JILLA - தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...




நண்பன் , துப்பாக்கி என்று புது பாணியில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் தலைவா வின் தோல்விக்கு பிறகு தன் பழைய பாணிக்கு திரும்பியிருக்கும் படம் ஜில்லா . தனது தீவிர ரசிகர்கள் மட்டுமே கல்லாவை  நிரப்பி விடுவார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் ஜில்லாவில் நேசனுடன் இணைந்து களம் இறங்கியிருக்கிறார் விஜய் . நினைத்தது பலித்ததா ?. பார்க்கலாம் ...

மதுரையின் பெரிய தாதா சிவன் ( மோகன்லால் ) , அவரது வளர்ப்பு மகன் சக்தி ( விஜய் ) . போலீஸ் என்றாலே பிடிக்காத சக்தியை தன்னுடைய சவுகரியத்துக்காக ஏ.சி ஆக்குகிறார் சிவன் . வளர்த்த கடா மார்பில் பாய்வது போல போலீசானவுடன் சிவனுக்கு எதிராக திரும்புகிறார் சக்தி . ஜெயித்தது சிவனா ? சக்தியா ? என்பதே மூன்று மணி நேர படம் ...



விஜய் தன் வழக்கமான துள்ளல் நடிப்பில் மனதை அள்ளுகிறார் . அவர் குரலில் வரும் கண்டாங்கி பாடலுக்கும் , சிவனும் பாடலில் அவர் நடனத்துக்கும் தியேட்டரே அதிர்கிறது .  என்ன தான் மந்திரி சிபாரிசில் போலீசானாலும் முதல் நாளே ஏதோ  காலேஜுக்கு போவது போல கலர்  ட்ரெஸ்ஸில் வருவது , கமிசனருக்கு சல்யூட் போடாமல் சவடாலாய் பேசுவது எல்லாம் ர்ரொம்பவெ ஓவர்ங்கண்ணா . போக்கிரியாக மனதில் பதியும் விஜய் போலீசாக , சாரி பாஸ் ...

டைட்டிலில் விஜய்க்கு முன்னாள் பெயர் வருவதோடல்லாமல் படம் முழுவதும் " நான் சிவன்டா " என்று விஜய் பேசாத பஞ்ச் டயலாக்ஸ் பேசி ரணகளப்படுத்துகிறார் சேட்டன் மோகன்லால் . மலையாள வாடையில் பேசினாலும் இந்த மதுரை தாதாவை ரசிக்கலாம் . பொதுவாக ராஜ்கிரண் செய்யக்கூடிய சாதாரண தாதா பாத்திரமானாலும் அதற்கு மோகன்லாலை தேர்ந்தெடுத்தது சிறப்பு . ஆனால் தன் மகன் ( மகத் ) செய்த தவறால் ஊரே பற்றியெரிய அதற்காக ஒரு சிறு வருத்தம் கூட காட்டாத இவரது கேரக்டர் பெரிய சறுக்கல் ...

காஜல் அகர்வால் மசாலா படங்களில் வரும் வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார் . சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் டபுள் மீனிங் வசனங்கள் நெளிய வைக்கின்றன . இவர் அபாய இடத்தில் அடி வாங்கி அடிக்கடி கதறுவதும் எரிச்சல் . சம்பத் போன்ற சிறந்த நடிகர் வில்லனாக வந்து உதை வாங்குவது வருத்தமாக இருந்தாலும் விஜயுடனான இவரது மோதல் படத்திற்கு பலம் . தம்பி ராமையா , அட்டாக் பாண்டி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் . டி.இமானின் இசையில் பாடல்கள் ஹம்மிங் செய்ய வைத்தாலும் பின்னணி இசை இரைச்சல் ...



கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து இணைக்கப்பட்டிருக்கும் மோகன்லால் , இடைவேளையில் விஜய் எடுக்கும் போலீஸ் அவதாரம் , விஜயின் துள்ளல் , சம்பத் கொடுக்கும் ட்விஸ்ட் இப்படி ஜில்லாவில் சில விஷயங்கள் நல்லாவே இருக்கின்றன ...

அதரப்பழசான கதை தான் என்றாலும் புதிதாய் யோசித்து சீன்கள் பிடிக்காமல் போனதில் கோட்டை விடப்பட்ட திரைக்கதை , படத்தின் நீளம் , மோகன்லால் கேரக்டரின் சறுக்கல் , அதனால் விஜய் - மோகன்லால் பிரிவு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது , தங்கை சென்டிமெண்டிற்காக புகுத்தப்பட்ட ஆர்.கே எபிசோட் இவையெல்லாம் ஜில்லாவின் கல்லாவை ரொம்பவே பாதிக்கின்றன . கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் வந்திருக்க வேண்டிய படம் வில்லு , சுறா அளவிற்கு மோசமாக இல்லாததால் ஜில்லாவில் தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


10 January 2014

ஆம் ஆத்மியும் அறிவுஜீவிகளும் ...


மீடியாக்களுக்கு , குறிப்பாக  ஆங்கில சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் தீனி போட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும் . அப்பொழுது தான் அவர்கள் பிழைப்பு ஓடும் . 2ஜி , மோடி விவகாரம் , டெல்லி பெண் கற்பழிப்பு ( அந்த சம்பவத்தை ஒட்டி தமிழ் நாட்டில் ஒரு பள்ளி  சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஒரு சிறிய சலசலப்பைக்  கூட இவர்கள் காட்டவில்லை ) , ஐ.பி.எல் பெட்டிங் இப்படி பலவற்றை தொடர்ந்து இப்பொழுது அவர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது சமீபத்தில் காங்கிரசின் ஆதரவோடு டில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மியும் , அதன் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ...

அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி யில் படித்தவர் , அரசு வேலையை  உதறி விட்டு பொதுநலப் பணிக்காக  தன்னை அர்ப்பணித்தவர் , ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு அரசியலில் குதித்தவர் என பல சிறப்பம்சங்களையும் தாண்டி கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களிலேயே டில்லியில் ஆட்சியை பிடித்தவர் என்கிற ஒரு காரணத்திற்காகவே இன்று இந்தியாவையே  தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . சினிமா , அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் இது போன்ற ஒரு சாதனையை  அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது . முதல்வன் படத்தில் வருவது போல ஒரு சாமான்யன் நினைத்தாலும் இது போன்ற மாற்றங்களை கொண்டு  கொண்டு  வர முடியும் என்று நிரூபித்த விதத்தில் அவர் இந்திய எதிர்கால அரசியலுக்கு ஒரு நம்பிக்கை ...

இதையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில் அவரின் வெற்றியை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்த பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் , அவரின் கட்சிக்கு இந்தியா முழுவதும் பெருத்த ஆதரவு இருப்பது போலவும் சில மீடியாக்களும் , அதிலுள்ள அறிவு ஜீவிகளும் Knee Jerk ரியாக்சன் கொடுப்பது அவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது . முதலில் ஊழலுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்தவர் எப்பொழுது காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தாரோ அப்பொழுதே அர்விந்த் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகி விட்டார் . அடுத்தது காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு கருத்தை பிரஷாந்த் பூஷன் சொல்லி வைக்க அதை தொடர்ந்து சில அமைப்பினர் உ.பி யில் உள்ள ஆம் ஆம்தி அலுவலுகத்தை சூறையாடினர் . அதனை தொடர்ந்து
 " காஷ்மீர் பிரச்சனை தீர எனது உயிர் தான் தேவை என்றால் அதை தரவும் நான் தயார் " என்று அர்விந்த் அதீத உணர்ச்சியோடு பேசியதிலிருந்து சாமான்ய முகத்திரையை அவிழ்த்து சாணக்கிய அரசியல் முகமூடியை போடத்  தொடங்கி விட்டார் ...

நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்  என்ற நம்பிக்கையோடு வாக்களித்த டில்லி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்ததன் மூலம் ஏமாற்றம் அளித்தவர் , முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட  முடிவடையாத நிலையில் அவசரம் அவசரமாக தேசிய அரசியலுக்கு தாவுவது அவரின் நம்பகத்தன்மையை குலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ளும் பக்கா அரசியல்வாதியாகவே நம் கண் முன் காட்டுகிறது . ஏனெனில் டில்லி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் போதாது . அப்படியிருக்க தேசிய அரசியலில் அவர்கள் காட்டும் ஆர்வம் காங்கிரசுக்கும் , ஆம் ஆத்மிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது . அடுத்த  முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அழிந்திருக்கும் நிலையில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை . மாற்றாக மோடிக்கு ஆதரவாக விழும் ஓட்டுக்களை ஓரளவுக்கேனும் சிதைப்பதற்கு நிச்சயம் அர்விந்த் அனுகூலமாக இருப்பார் ...

அர்விந்த் படித்த புத்திசாலி , தனிப்பட்ட முறையிலும் தூய்மையானவர் எனவே அவர் பிரதமர்  ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம் . நிச்சயம் தவறில்லை தான் . ஆனால் முதலில் முதல்வராக அவர் தனது கடமையை திறம்பட செய்து தன்னை நிரூபிக்கட்டும் என்பதே  பலரது எண்ணம் .  மேலும் அர்விந்த் போலவே அதிகம் படித்தவரும் , தனிப்பட்ட முறையில் தூய்மையானவரும் ஆன மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பது நாடறிந்த விஷயம். அதற்காக மன்மோகன் போல தான் அரவிந்தும் இருப்பார் என்று சொல்ல வரவில்லை . அதே நேரம் படிப்பும் , தனிப்பட்ட தூய்மையும் மட்டும் திறம்பட ஆட்சி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையே வலியுறுத்துகிறேன் ...

கட்சி ஆரம்பித்து ஒன்பது  மாதங்களே ஆகியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே , கிரண் பேடி  போன்றோருடன் இணைந்து அர்விந்த் நடத்திய போராட்டங்களே அவரை டில்லி மக்களிடையே பிரபலப்படுத்தியது . அன்னா , கிரண் இருவரும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட  அவர்களுக்கு கிடைத்த ஆதரவையும் சேர்த்து மொத்தமாக அர்விந்த் அறுவடை செய்தார் என்பதே நிதர்சனம் . அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை அன்னா புறக்கணித்ததும் , அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதும் பலவித சந்தேகங்களை கிளப்புகின்றன . மோடி போன்ற  வலிமையான ஒருவர்  இந்தியாவுக்கு பிரதமராவதை அமெரிக்கா விரும்பாததால் அங்கிருந்து அதிக பணம் மறைமுகமாக ஆம் ஆத்மிக்கு வருகிறது என்பது ஒரு சாரரின் கருத்து ...

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை  கலைத்து விட சொன்னார் காந்தி . அதே போல காந்தியவாதியான அன்னா ஹசாரே ஆம் ஆத்மி என்று கட்சியை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தார் . இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலவே படுகிறது . இவையெல்லாவற்றையும் விட லோக்பால் மசோதாவுக்காக அர்விந்த் , அன்னா வுடன் ஒரே குழுவில் இருந்து போராடிய கிரண் பேடி மத்தியில் நிலையான ஆட்சி  அமைவதற்கு மோடிக்கே எனது  ஒட்டு என்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தாண்டி அவர் நாட்டின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது . இதே போன்றதொரு முடிவை அன்னா எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதையெல்லாம் மீறி அர்விந்த் தான் அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு அளந்து விடும் அறிவுஜீவிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்  . பவர் ஸ்டார்  ஹிட் கொடுத்து விட்டார் என்பதற்காக சூப்பர் ஸ்டாராக ஆகி விட முடியாது ...


1 January 2014

தமிழ் சினிமா 2013 - TAMIL CINEMA 2013 ...


கடந்த வருடம் ரிலீசான 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் 80க்கும் மேற்பட்டவை புதுமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வந்திருப்பதும் , கமல் , அஜித் , சூர்யா என மெகா ஸ்டார்களின் படங்கள் ஹிட் ஆகியிருப்பதும் மொத்தத்தில் வெறும் பத்து சதவிகித படங்கள் கூட ஹிட் ஆகாததன் இழப்பை  கொஞ்சம் மறக்கடிக்கின்ற்ன . பாரதிராஜா , மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் சறுக்கினாலும் நலன் குமாரசாமி ,  பாலாஜி குமார் , விக்ரம் சுகுமாரன் போன்ற புதுமுகங்கள் நம்பிக்கை தருகிறார்கள் .  விஸ்வரூபம்  ரிலீசாகா விட்டால் நாட்டை விட்டே  சென்று விடுவேன் என்று கலங்கிய கமல் , தலைவா ரிலீஸ் பிரச்சனைக்காக கொடநாடு வரை சென்று விட்டு முதல்வரை பார்க்க முடியாமல் விரக்தியுடன்  திரும்பி வந்த விஜய் என்று சர்ச்சைகளுக்கு பெயர் போன ஆண்டாகவும் 2013 இருந்தது . வாலி ,டி.எம்.எஸ் , பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற ஜாம்பவான்களின் மறைவு ,  விஸ்வரூபம் .. பிரச்சனையை திறம்பட சமாளித்த உலகநாயகனின் துணிவு ,  இந்திய சினிமா 100 கொண்டாட்டங்களில் ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமாக சினிமா கலைஞர்கள் காட்டிய கனிவு போன்றவை 2013 ஆம் நாட்டின்  சிறப்பம்சங்கள் . முதல் ஆறு மாதங்களை பற்றி அறிய காண்க : அரையாண்டு சினிமா 2013 ... 

இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2013

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. கண்ணா லட்டு தின்ன ஆசையா 
 2 .விஸ்வரூபம் 
 3. பரதேசி  
 4. சூது கவ்வும் 
 5. நேரம்  
 6. ஆதலால் காதல் செய்வீர்  
 7. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
 8. பாண்டிய நாடு 
 9. விடியும் முன் 
10. மதயானைக் கூட்டம் 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ் (  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  கண்ணா லட்டு தின்ன ஆசையா 
2.  விஸ்வரூபம்
3.  சூது கவ்வும்
4.  தீயா வேலைசெய்யணும் குமாரு
5.  சிங்கம் 2 
6  .ராஜா ராணி
7.  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
8. ஆரம்பம்
9 .பாண்டிய நாடு
10.பிரியாணி


ப்ளாக்பஸ்டர்  : விஸ்வரூபம்

டாப் டென் பாடல்கள்

1. கண்ணா லட்டு ( க.லதி.ஆ )
2. எவனென்று நினைத்தாய் ( விஸ்வரூபம் )
3. ஆஹா காதல் ( மூன்று பேர் மூன்று காதல் )  
4. மின்வெட்டு நாளில் ( எதிர்நீச்சல் )
5. காசு பணம் ( சூது கவ்வும் )
6. பிஸ்தா ( நேரம் )
7. கடல் ராசா ( மரியான் )
8. வாங்கன்னா ( தலைவா )
9. ஹே பேபி ( ராஜா ராணி )
10.பனங்கள்ளா ( இரண்டாம் உலகம் )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - பரதேசி
 கவர்ந்த நடிகர் - கமல்ஹாசன்   ( விஸ்வரூபம்   )
 கவர்ந்த நடிகை - பார்வதி   ( மரியான் )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - பாரதிராஜா  ( பாண்டியநாடு  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - துளசி ( ஆதலால் காதல் செய்வீர் )
 கவர்ந்த காமெடி நடிகர் -  பவர் ஸ்டார்  ( க.ல.தி.ஆ  )
 கவர்ந்த வில்லன் நடிகர் - ராகுல் போஸ் ( விஸ்வரூபம்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா   ( மூ.பே.மூ.கா )
 கவர்ந்த பின்னணி இசை - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  ( இளையராஜா   )
 கவர்ந்த ஆல்பம் - மூன்று பேர் மூன்று காதல் ( யுவன் ஷங்கர் ராஜா )
 கவர்ந்த பாடல் -  ஆனந்த யாழை ( தங்க மீன்கள்   )
 கவர்ந்த பாடகர் - கானா பாலா  ( ஹே பேபி )
 கவர்ந்த பாடலாசிரியர் - வைரமுத்து  ( எவனென்று  )
 கவர்ந்த வசனகர்த்தா - நவீன்  ( மூடர் கூடம் )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - நலன் குமாரசாமி ( சூது கவ்வும் )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சானு வர்கீஸ்  ( விஸ்வரூபம் )
 கவர்ந்த இயக்குனர் - பாலா   ( பரதேசி   )
 கவர்ந்த புதுமுகம் - நஸ்ரியா  ( நேரம் )

வசூல் ராஜாக்கள் 

கமல்ஹாசன் ( விஸ்வரூபம் )
சூர்யா ( சிங்கம் 2 )
அஜித்குமார் ( ஆரம்பம் ) 

ஏமாற்றங்கள்

அலெக்ஸ் பாண்டியன் 
கடல் 
நய்யாண்டி
அன்னக்கொடி 
இரண்டாம் உலகம்

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  




















30 December 2013

மதயானைக் கூட்டம் - MADHAYANAIKOOTTAM - மிரள வைக்கும் ...


வருடக் கடைசியில் எதிர்பாராமல் வரும் சில படங்கள் நம்மை ஏகாதிபத்தியம் செய்து  விடுவதுண்டு . அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வந்திருக்கும் மதயானைக்கூட்டத்தை சேர்க்கலாம் . அரிவாள் , கத்தியுடன் அவிங்க , இவிங்ய என்று அலையும் மதுரை மாந்தர்களை பற்றிய மற்றுமொரு படம் தான் என்றாலும் அதை மண்  மணம் மாறாமல் யதார்த்தமாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறார் சுகுமாரன் ...

ரெண்டு பொண்டாட்டிக் காரரான  ஜெயக்கொடி தேவரின் ( முருகன் ஜி ) மறைவுக்கு பிறகு குடும்ப  பகை கொளுந்து விட்டு எரிகிறது .  மூத்த மனைவி செவனம்மா ( விஜி ) ,  அவள் மகன் , அவளுடைய சகோதரன் வீரத் தேவர்
( வேல ராமமூர்த்தி ) , இளைய மனைவியின் மகன் பார்த்திபன் ( கதிர் ) இப்படி காதாப்பாத்திரங்களின் உணர்ச்சித்  தீயில் நம்மை குளிர் காய வைக்கிறார் இயக்குனர் ...

முதல் படமே கதிருக்கு இப்படி அமைந்தது அதிர்ஷ்டம் . அதனை  இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம் . நிறைய இடங்களில் உணர்ச்சிகளை காட்டாமல் உம்மென்றே இருக்கிறார் . அடுத்தடுத்த படங்களில்  தேறி விடுவார் என்று நம்பலாம் . எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதில் கல் தோன்றா காலத்து காதலியின் அத்தியாவசியத்துக்காக ஓவியா ...



விஜி க்கு இந்த படம் ஒரு மைல்கல் . படம் முழுவதும் ஒரு விதமான வெறித்த பார்வையால் நம்மை மிரள வைப்பவர் க்ளைமேக்ஸ் காட்சியில் கதறி அழுது நம்மை கலங்க வைக்கிறார் . இவருக்கும் இவர் சகோதரராக  நடித்திருக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும் இடையேயான சீன்கள் குட்டி கிழக்கு சீமையிலே . படத்தில் வரும்  எல்லோரும் யதார்த்தமாக நடித்திருப்பது பெரிய பலம் . ரகுநந்தனின் பின்னணி இசை ரம்யம் ...

சாவில் தொடங்கி சாவில் முடியும் படம் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் சின்ன சின்ன சடங்குகளுக்கும் காட்டப்படும் டீட்டைளிங்கில் நம்மை கட்டிப் போடுகிறது . தேவர் மகன் , விருமாண்டி போல தேவர் பின்னணி படம் தான் என்றாலும் அதிலிருந்த ஸ்டார்டம் இதில் இல்லாததால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது . சாவு ஒப்பாரியிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் விளக்கிய விதம் , அவரவர் கோணத்திலிருந்து பார்க்கும் போது செய்வது சரி தான் என்பது போன்று அமைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு , யதார்த்தமாக இருந்தாலும் சின்ன சின்ன ட்விஸ்டுடன் நகரும் திரைக்கதை என எல்லாமே மனதில் பதிகின்றன ...

படத்தோடு ஒன்றாத காதல் , யதார்த்த சினிமாவில் திடீரென க்ளைமேக்ஸ் இல் புகுத்தப்படும் ஹீரோயிசம் , " புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா " என்று கமல் சொல்லி 23 வருடங்களாகியும் இன்னும் பயபுள்ளைங்க திருந்தலையோ என்று லேசாக வரும் சலிப்பு இப்படி குறைகள் இருந்தாலும் படம் பார்த்து சில  நாட்கள் ஆகியும் தன் நினைவுகளால் இந்த மதயானைக் கூட்டம் நம்மை மிரள வைக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 45

28 December 2013

2014 - மோடி ஆர் நோபடி - MODI OR NOBODY ...


எதிர்பார்த்ததைப் போலவே 2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும்  , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு  பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள்  உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...

ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய  (!) பி.ஜே.பி யுடன் கூட்டு  இல்லை என்று சொன்ன  கலைஞர்  அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான்  இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால்  பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும்  என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு   பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும்  ...

கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை  கை கழுவியிருக்கும் இந்த வேளையில் ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை  தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும்  எதிர்பார்த்ததே...

தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன்  தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...

நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த  வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல் ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...

அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி , அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள்  பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி  இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள  குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...

தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது  அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை  ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...

பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள்  போவது உறுதி ...

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி , காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு  நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே  தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...

எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன்  என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு .  ஏனெனில் டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு மோடி ஆர் நோபடி ...


22 December 2013

பிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...


ஆல் இன்ஆல் அழகுராஜா விற்காக ஒன்றரை மாதம் தள்ளி இப்பொழுது ரிலீஸ் ஆகியிருக்கும் வெங்கட் பிரபு வின் பிரியாணி ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையாமல் போனாலும் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றிக்காக காத்திருக்கும் கார்த்தி யின் பசியை  தீர்க்கும் என்று நம்பலாம் ...

சுகன் ( கார்த்தி ) , பரசு ( ப்ரேம்ஜி  ) இருவரும் இணைபிரியா நண்பர்கள் . ஜொல்சுடன் லெக் பீசுக்கு ( மாண்டி தாக்கர் ) ஆசைப்பட்டு இருவரும்  இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் .  பின் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை ( ! ) ... 


கார்த்தி க்கு பிரேம்ஜி பார்க்கும்  பெண்களையும் சேர்த்து உஷார் செய்யும் ப்ளேபாய் கேரக்டர் . ரசித்து நடித்திருக்கிறார் . பழக்க தோஷத்திற்காக இரண்டு சண்டைகள் போட்டாலும் அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் . படத்திற்கு  பெரிய ப்ளஸ் ப்ரேம்ஜி . ஒவ்வொரு பெண்ணாக தேடிப்பிடித்து கடைசியில் கார்த்திக்கு தாரை வார்க்கும் போது ரசிக்க வைக்கிறார் ...


ஹன்சிகா படத்தில் இருக்கிறார் . நாசர் , ராம்கி , சம்பத் என எல்லோருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் . முக்கியமான கதாபாத்திரத்திற்கு மாண்டி நல்ல தேர்வு . பொதுவாக வெங்கட் பிரபு வின் படங்களுக்கு நன்றாக இசையமைக்கும் யுவனுக்கு இது 100 வது படம் என்பது கூடுதல் சிறப்பு . " நா நனனா " , " மிஷிஷிப்பி " பாடல்கள் முணுமுணுக்க  வைக்கின்றன ...


வழக்கம் போல கதைக்கு மெனெக்கெடாமல் விறுவிறுப்பான திரைக்கதையை கையிலெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு . நீளமாக தெரிந்தாலும் சுவாரசியமாக போகும் முதல் பாதி , அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் திரைக்கதை , பாடல்களை படமாக்கிய விதம் எல்லாமே பிரியாணியை மணக்க வைக்கின்றன ...

சரக்கடிப்பது தவிர வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையென்பது போல ஹேங்ஓவர் கொடுக்கும் ஓவர் டோஸ் சீன்கள் , பெண்களை மட்டப்படுத்தும் வசனங்கள் , நாசர் வேஷத்தில் பிரேம்ஜி போகும் ஜெய்சங்கர் காலத்து பார்முலா , ட்விஸ்ட் இருந்தாலும் நிறைவை தராத க்ளைமேக்ஸ் போன்றவை பிரியாணியின் காரத்தை குறைத்தாலும் பொழுதுபோக்கிற்காக ஒரு முறை சுவைக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


4 December 2013

விடியும் முன் - VIDIYUM MUN - வெளிச்சம் ...




புற்றீசல் போல வரும் லோ பட்ஜெட் படங்களுள் அத்திப் பூத்தாற்ப் போல ஒன்றிரண்டு மட்டும் கூர்ந்து கவனிக்க வைக்கும் . அப்படி கவனிக்க வைத்த படங்களுள் ஒன்று விடியும் முன் . இப்படியுமா ஒருவன் வக்கிரமாக சிந்திப்பான் என்றும் , இப்படிப்பட்ட இருட்டு சம்பவங்களை வைத்து  படமெடுக்கும் தையிரியம் ஒருவனுக்கு இருக்கிறதே என்றும் இரு வேறு வகையான எண்ண ஓட்டங்களை மனதிற்குள் விதைக்கிறார்  இயக்குனர் பாலாஜி குமார் ...

விலை மாது ரேகா ( பூஜா ) ஒரு 12 வயது சிறுமியுடன்  ( மாளவிகா ) மழை இரவில் தப்பியோடுகிறாள் . பணக்காரன் சின்னையா ( வினோத் ) , ரவுடி துரைசிங்கம் , பிம்ப் சிங்காரம் ( அமரேந்திரன் ) , அவன் நண்பன் லங்கேஷ் ( ஜான் விஜய் ) என நால்வரும் அந்த இருவரையும் துரத்துகிறார்கள் . அது  ஏன் ? எதற்கு ? எப்படி என்பதை விறு விறு திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

அசிங்கமான பிச்சைக்காரியாக நடித்ததாலோ என்னவோ நான் கடவுளுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த பூஜா விற்கு இந்த படத்தில் பெயர் சொல்லும் வேடம் . குற்ற உணர்ச்சி , விரக்தி இரண்டையும் அவர் கண்கள் இயல்பாகவே வெளிப்படுத்துகின்றன . சின்ன பெண் மாளவிகா கொஞ்சம் கொஞ்சமாய்  மனதை ஆக்ரமிக்கிறாள் . அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துவதே திரைக்கதையின் தனிச்சிறப்பு . அவளுக்கும் பூஜாவுக்கும் இடையேயான சீன்கள் குட்டி ஹைக்கூ ...


அமரேந்திரன் , ஜான் விஜய் இருவரும் சில இடங்களில் படத்தின் மேல் நமக்கு ஏற்படும் அயர்ச்சியை  போக்க உதவியிருக்கிறார்கள் . வசனங்கள் அதிகம் இல்லாமல் கண்களால் மட்டும் பேசும் வினோத் நல்ல தேர்வு . சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு , கிரீஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் ...

அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது பிடிக்காத கதை , விறுவிறுப்பு இருந்தாலும் ஆங்காங்கே தொய்வுடன் செல்லும் மிஸ்கின் பாணி திரைக்கதை , சலிப்பை தரும் க்ளைமாக்ஸ் , உடல் ரீதியான ஆபாசங்கள் இல்லாவிட்டாலும் அதைவிட அதிகமாக மன ரீதியான கிளர்ச்சியை அல்லது வக்கிரத்தை தூண்டி விடக்கூடிய அபாயமுள்ள சீன்கள் இப்படி விடியும் முன் நிறைய  இருட்டுப் பக்கங்களை கொண்டிருக்கிறது ...

தர்க்க ரீதியான விவாதங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக கிட்டத்தட்ட இரண்டரை  மணி நேரம் திரைக்கதைக்குள் நம்மை ஒன்ற வைத்த தந்திரம் , கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு , படம் முடிந்த பிறகும் அது நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு போன்றவை இருட்டையும் தாண்டி படத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 45

23 November 2013

இரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM - இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ?...

 

7G யில் பிரமிக்க வைத்து புதுப்பேட்டை க்கு பின் மனதில் குடியேறியவர் செல்வராகவன் . கிடைத்த  அருமையான வாய்ப்பை ஆயிரத்தில் ஒருவன் போலவே இழுவையான இரண்டாம் பாதியால் இரண்டாம் உலகத்திலும்
நழுவ விட்டிருக்கிறார் ...

நார்மலான நம் உலகம் , ஃபேண்டஸி யான இரண்டாம் உலகம் . இரண்டிலும் ஆர்யா , அனுஷ்கா இருக்கிறார்கள் . இந்த உலகத்தில் காதலியை இழக்கும் ஆர்யா காதலே இல்லாத இரண்டாம் உலகத்திற்கு சென்று அங்கிருக்கும் ஆர்யா - அனுஷ்கா இடையே காதல் பூவை மலர வைக்கிறார்  . காதல் , ஃபேண்டஸி இரண்டையும் குழப்பி கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...


சரியான  உடற்கட்டுடன் ஆர்யா கதைக்கு நல்ல தேர்வு . ஆதி வாசி தோற்றத்தில் ஆஞ்சநேயர் போல இருந்தாலும் சிங்கத்துடனும் , அனுஷ்கா வுடனும் சண்டை போடும் இடங்களில் ரசிக்க வைக்கிறார் . அனுஷ்கா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் . மென்மையான டாக்டர் , வீரமான காட்டுவாசி இரண்டிலும் வித்தியாசம் காட்டி வியாபிக்கிறார் . மற்ற பெண்களுடன் ஆர்யா  பழகுவதை பார்த்து பொறுமுவது , காதல் வந்தவுடன் வெட்கப்படுவது என நிறைய இடங்கள் ஆஸம் . ஆர்யாவின் நண்பராக வருபவர் தமிழ் காமெடிக்கு நல்ல வரவு ...

ராம்ஜி செல்வராகவனின் முதுகெலும்பு என்பதை ஒளிப்பதிவில் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் . வைரமுத்து - ஹாரிஸ் கூட்டணியில் எல்லா பாடல்களும் ஹம்மிங் செய்ய வைக்கின்றன . அனிருத் தின் பின்னணி இசை படத்திற்கு பலம் . ஸ்பெஷல் எஃபெக்டஸ்  , லொக்கேசன் எல்லாமே எல்லாமே படத்திற்கு தேவையான பிரம்மாண்டத்தை தக்க வைக்கின்றன ...


கதையின் தொடக்கத்திலேயே அனுஷ்கா தன் காதலை சொல்வது , ஆர்யா காதலை ஏற்க மறுப்பது , பின் ஆர்யா தொடர அனுஷ்கா மறுப்பது , காதலை ஏற்றுக்கொண்ட பின் வரும் காதல் காட்சிகள் என எல்லாவற்றிலுமே செல்வராகவனின் அக்மார்க் காதலிஸம் கண்களுக்கு விருந்து .  அதே போல படம் நெடுக வரும் ஷார்ட் அண்ட் க்யுட் வசனங்கள் , படத்தின் முதல்பாதி இரண்டுமே இரண்டாம் உலகத்தில் முதல் தரம் ...

இது போன்ற சில சிறப்பம்சங்கள் , கதை தேர்வு போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால்  இரண்டாம் பாதி , குழப்பமான திரைக்கதை , ஆர்யா - அனுஷ்கா தவிர மனதில் பதியாத இரண்டாம் உலக கதாபாத்திரங்கள் இவையெல்லாம் இரண்டாம் உலகத்தை பாதாள உலகத்திற்கு அனுப்புகின்றன . தனக்கு தெரிந்த காதல் களத்தில் கவர்ந்தாலும் மகதீரா , அவதார் போன்ற படங்களின் பாதிப்பில் " அவலை நினைத்து உரலை இடித்தது " போல இந்த படத்தை எடுத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது . வழக்கமான மசாலா இல்லாமல் தமிழில் ஃபேண்டஸி வகையறா படம் எடுத்த முயற்சியை பாராட்டலாம் . ஆனால் அதை சரி வர கொடுக்க முடியாமல் போனதால் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ? என்று ஏக்கத்தோடு சொல்ல வைக்கிறார் இயக்குனர் ...

ஸ்கோர் கார்ட் : 40


16 November 2013

சச்சின் - SACHIN ...


மூன்றே நாட்களில் இந்தியா டெஸ்ட் மேட்சை ஜெயித்ததற்காக முதல் முறையாக ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் . உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல மைதானமே நிரம்பி வழிகிறது . 18 ஆட்டங்களிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவனையும்  , அறிமுகமான முதல் இரண்டு ஆட்டங்களிலும்  செஞ்சுரி அடித்தவனையும் அனைவரும் மறந்தே போகிறார்கள் . அம்பயர் உட்பட எதிரணியினர் அனைவரும் ஒரு  விளையாட்டு வீரனை வரிசையில்  நின்று வரவேற்கிறார்கள் .  இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை ஒருவனுக்கு 40 வயதிலேயே வழங்கி கவுரவிக்கிறது . இவையனைத்தும் நடந்தது 24 வருடங்களுக்கு முன்னால்  நவம்பரில் அறிமுகமாகி இன்று நவம்பர் 16 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்னும் மகத்தான மனிதனுக்காக ...

கால் நூற்றாண்டு காலமாக கிரிக்கெட்டையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வருபவர் , உலகிலேயே  அதிக அளவு டெஸ்ட் மற்றும் ஒன் டே ஆட்டங்களை  ஆடியவர் மற்றும் ரன்களை குவித்தவர் , சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்தவர் , ஒரு நாள் கிரிக்கெட்  மேட்சில்  முதன் முறையாக 200 ரன்களை அடித்தவர் , அதிக அளவு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்களை வாங்கிக் குவித்தவர்  இப்படி எவ்வளவோ சாதனைகளையும் , புள்ளி விவரங்களையும் தாண்டி  " கிரிக்கெட் எங்கள் மதம் சச்சின் அதன் கடவுள் " என்று நாத்திகர்களை கூட சொல்ல வைத்தவர் சச்சின் ...

எளிமை ,  ஒழுக்கம் , கட்டுப்பாடு , அர்ப்பணிப்பு , உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளால் சிறந்த வீரர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக ரசிர்களால் மட்டுமல்லாமல் முன்னாள் , இந்நாள் விளையாட்டு வீரர்களாலும் கொண்டாடப்படுபவர் சச்சின் . இவரது ஒரு நாள் போட்டி சாதனைகள் ஒரு வேளை நாளை கோலிக்களாலோ  , டெஸ்ட் மேட்ச் சாதனைகள் புஜாராக்களாலோ முறியடிக்கப்படலாம் . ஆனால் அப்பொழுதும் கிரிக்கெட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக சச்சின் மட்டுமே இருப்பார் ..


15 November 2013

பீட்சா II வில்லா - WOULD HAVE BEEN BETTER ...




பொதுவாக பெரிய வெற்றியடையும் படங்களின் இரண்டாம் பாகங்கள் எதிர்பார்ப்பை அவ்வளவாக  பூர்த்தி செய்வதில்லை . தமிழில்  பில்லா விற்கு பிறகு அதற்கு சமீபத்திய உதாரணம் வில்லா . ஆனாலும்  பெயரை தவிர முதல் பாகத்தோடு வேறு எந்தவித தொடர்புமில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு திகில் படத்தை கொடுக்க முற்பட்டமைக்காக இயக்குனர் தீபனை பாராட்டலாம் ...

பிசினசில்  எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் பெரிய எழுத்தாளனாக வேண்டுமென்கிற கனவில் இருக்கும் ஜெபினுக்கு ( அசோக் செல்வன் ) இறந்து போன அப்பாவின் ( நாசர் ) சொத்தான வில்லா கைக்கு வருகிறது . அங்கு காதலி ஆர்த்தி ( சஞ்சிதா ) யுடன் தங்கும் ஜெபினுக்கு என்ன நேர்கிறது என்பதை ஸ்லோவான முதல் பாதி , புத்திசாலித்தனமான க்ளைமேக்ஸ் இரண்டையும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்  ...

அசோக் செல்வனுக்கு எழுத்தாளனுக்கு ஏற்ற கேரக்டர் . தாடி , ஜிப்பா , ரிம்லெஸ்  கண்ணாடி என பொருத்தமாகவே இருக்கிறார் . முகம் மட்டும் எப்பொழுதும் இறுக்கமாகவே இருக்கிறது . ஹீரோவுக்கு சமமான அல்லது ஒரு படி மேலான பாத்திரத்தில் சஞ்சிதா . நல்ல வாய்ப்பிருந்தும் ஏனோ பெரிதாக கவரவில்லை . நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார் ...


முதல் பாகத்துடன் ஒப்பிடும்  பொழுது ஒரு மாற்று குறைவாக  இருந்தாலும் தீபக்  கின் ஒளிப்பதிவும் , சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு பலங்கள் . வழக்கமான திகில்  படம் போல இருந்துவிடக் கூடாது என்கிற இயக்குனரின் எண்ணத்திற்கேற்ப இருவரும் அடக்கி வாசித்திருப்பது போல தெரிகிறது ...

பேய் , திகில் படம் என்றவுடன் லிப்ஸ்டிக் , மைதா மாவை அப்பிக்கொண்டு ஓடி வரும் பெண்கள் , அதிர வைக்கும் இசை , அப்நார்மல் கேரக்டர்ஸ் போன்றவற்றை தவிர்த்ததில் இயக்குனர் வித்தியாசம் காட்டுகிறார் . ஸ்லோவாக இருந்தாலும் டீட்டைலிங்கான பின்னணியுடன் கதையை நகர்த்திய விதம் , யோசிக்க வைக்கும் க்ளைமேக்ஸ் போன்றவை வில்லா வில் நல்லாவே இருக்கின்றன ...

வழக்கமான விஷயங்களை தவிர்த்திருந்தாலும் திகில் படங்களுக்கே உரிய அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பை கொடுக்க தவறியிருக்கிறார்கள் . அதிலும் படம் படு ஸ்லோவாக நகர்வதால் ஒன்னேமுக்கால்  மணி நேரம் என்பதே மூன்று மணிநேரம் போல ஒரு அயர்ச்சியை கொடுக்கிறது . அருமையான க்ளைமேக்ஸ் தான் . ஆனால் அதுவும் சட்டென்று அனைவராலும் புரிந்து கொள்ள  முடியாத விதத்தில் இருப்பது வணிக ரீதியாக
படத்திற்கு சறுக்கல் . ஏ சென்டரை மட்டும் கருத்தில் வைக்காமல் கதையோடு சேர்த்து  ரசிக்கும் படி விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருந்தால் அனைவரும் வில்லா வில் வசித்திருக்கலாம் . பீட்சா II வில்லா - வுட் ஹேவ் பீன் பெட்டெர் ...

ஸ்கோர் கார்ட் : 41







7 November 2013

கலைமகன் கமல் ...


ஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...            

கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ...


இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் , ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் .கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன . அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...                   

டான்ஸ் , ஃபைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை . அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...
        
இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும். நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் . தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு , கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள். தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...         


ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது . ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் .  இன்று ஐம்பத்தெட்டாவது  பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...

- மீள்பதிவு


6 November 2013

பாண்டிய நாடு - PANDIYA NADU - விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

  


தீபாவளிக்கு  வந்திருக்கும் மூன்று படங்களுள் சுசீந்திரனின் பாண்டிய நாடு சென்சிபிலாக இருக்கும் என்ற எண்ணம் பொய்க்கவில்லை . கதை பிடித்ததால் விஷாலே படத்தை தயாரிக்க முன் வந்ததும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது ...

பயந்தாங்கொள்ளி சிவகுமார் ( விஷால் ) அண்ணனையும் , நண்பனையும் கொன்றவர்களை பழிதீர்க்கும் வழக்கமான மதுரை மண் மணக்கும் படம் தான் பாண்டிய நாடு . ஆனால் அதை நேர்த்தியான திரைக்கதையால் சுவாரசியமாக்குகிறார் இயக்குனர் ...

ஒத்தையாளாக  நின்று ஊரையே அடிக்கும் விஷாலுக்கு இது  நல்ல ப்ரேக் . பயத்தில் திக்குவது , அடியாட்களை பார்த்து பம்முவது , பொய்யாக போன் பேசிக்கொண்டே காதலியை ரூட் விடுவது , குறிப்பாக பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது என  இந்த வித்தியாச விஷால் வியக்க வைக்கிறார் . விஷாலை பிடிக்காதவர்களுக்கும் இந்த படத்தில்  அவரை பிடிக்கும் . கீப் இட் அப் ...


லக்ஷ்மி மேனனின் லக் இதிலும் தொடர்கிறது . பார்ப்பதற்கு  பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்தாலும் கண்களும் , உடல்வாகும் வசீகரிக்கின்றன . விஷாலின் நண்பனாக சில சீன்களே  வந்தாலும் விக்ராந்த் நல்ல தேர்வு . சூரி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் ...

விஷாலை போல நடிப்பில் படத்தை தூக்கி நிறுத்தும் மற்ற தூண்கள் அப்பா பாரதிராஜா வும் , வில்லன் சரத் லோஹிதஸ்வா வும் . மகனை  கொன்றவனை பழி தீர்க்க துடிக்கும் அப்பாவாக  வரும் பாரதிராஜா நடிப்பிற்காக  பேசப்படுவார் . இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு அப்பா வேடமாக கொடுத்து முடக்காமல் இருத்தல் நலம் . கட்டுமஸ்தான் உடல்வாகு இல்லாவிட்டாலும் கண்களாலேயே மிரட்டுகிறார் வில்லன் சரத் ...

இமானின் இசையில் " ஒத்தக்கடை " , " பை பை " பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பை பை பாடல் ஸ்பீட் பிரேக்கர் . அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் யதார்த்தம் ...



இழவு சீனில் இருந்து படத்தை தொடங்குவது , வில்லன் , ஹீரோ கேரக்டர்களை மனதில்  பதிய வைத்தது , " தடையற தாக்க " பாணியில் ஹீரோ முகத்தை மூடிக்கொண்டு அடியாட்களை அடித்தாலும் அதை விறுவிறுப்பாக படமாக்கியது , ஹீரோ வில்லனை பழிவாங்குவது நூற்றாண்டு கால சினிமா என்றாலும் அதை டீட்டைளிங்கோடு கொடுத்தது என பாண்டிய நாட்டில் பிடிக்கும் விஷயங்கள் நிறைய ...

வலுவான அண்ணன் கதாபாத்திரத்துக்கு வலுவில்லாத ஆளை தேர்வு செய்தது , முகத்தை மூடிக்கொண்டு அடித்தாலும் சொந்த வண்டியின் நம்பர் பிளேட்டை மூடாமல் போகும் லாஜிக் சொதப்பல் , ஊரை விட்டு ஓடிப்போன விக்ராந்திற்கு என்ன  ஆனது என்பதை சொல்லும் சினிமாத்தனமான ப்ளாஷ்பேக் போன்றவை பாண்டிய நாட்டிற்கு நேர்ந்த சோதனைகள் ...

மதுரையையே கைக்குள் வைத்திருக்கும் தாதா , அண்ணனை கொன்றதற்காக  அவனை பழி வாங்க பொங்கியெழும் பயந்தாங்கொள்ளி ஹீரோ , தாதாவிற்கு உதவியாக மினிஸ்டர் , சென்டிமென்ட் அப்பா இப்படி நிறைய வழக்கமான வழக்கங்கள் படத்தில் இருந்தாலும் சுசீந்திரனின் நேர்த்தியான திரைக்கதை . மதியின் நுட்பமான ஒளிப்பதிவு , விஷாலின் நடிப்பு இவையெல்லாம் சரியான விகிதத்தில் சேர்ந்ததால் பார்ப்பவர்களுக்கு பாண்டிய நாடு விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

ஸ்கோர் கார்ட் : 43



4 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - ALL IN ALL - அமெச்சூர் ...




முதல் மூன்று படங்களையுமே வெற்றி பெற செய்த ராஜேஸ், சில வெற்றிகளுக்கு பிறகு தொடர்  தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் கார்த்திக்குடன் நண்பன் சந்தானத்தை நம்பி கை கோர்த்திருக்கும் படம் ஆல் இன் ஆல் . ஆனால் அனைவருக்கும் அது ஆல் இஸ் வெல் ஆக அமையாமல் போனது துரதிருஷ்டமே ...

லோக்கல் சேனல் AAA டி.வி யை தன் அசிஸ்டன்ட்  கல்யாணத்தின்
( சந்தானம் ) உதவியுடன் NO.1 ஆக்க முயற்சிக்கிறார் எம்.டி அழகுராஜா
( கார்த்தி ) .  ஒரு கல்யாண ரிசப்சனில் அழகான தேவிப்ரியாவை ( காஜல் ) பார்த்தவுடன் தனது கொள்கையை கிடப்பில் போட்டு விட்டு  அவளை காதலித்து திருமணம் செய்வதையே புது கொள்கையாக கையிலெடுக்கிறார் .
அதில் ஜெயித்தாரா என்பதை கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கொஞ்சம் சிரிப்புடனும் , நிறைய மொக்கைகளுடனும்  சொல்லி நம்மை வதக்கி எடுக்கிறார் இயக்குனர் ...
 
பொதுவாகவே ராஜேஸ் படங்களில் வரும் கேசுவல் ஹீரோ வேடம் கார்த்திக்கு எளிதாக பொருந்துகிறது . ஆனால்  ராஜேஷின் மற்ற ஹீரோக்களை போலில்லாமல் இவர் சந்தானத்தை விட அதிகமாக பேசி நம்மை அதிகம் சோர்வாக்குகிறார் . சண்டை எதுவும் போடாதது ஆறுதல் ...



ஹீரோக்களை  அடா புடா என்று  அளவளாவும் சந்தானம் இதில் கார்த்திக்கை வாங்க சார் , போங்க சார் என்று அழைப்பது அவருக்கு  மட்டுமல்ல நமக்கே புதுசாக தான் இருக்கிறது . ஆனால் ப்ளாஷ் பேக் கில்  கார்த்திக்கை வாடா தம்பி என்று கூப்பிட்டு சமன் செய்கிறார் . வழக்கம் போல இப்படத்திலும் அவர் ஆபத்பாந்தவனாக இருந்தாலும் முந்தைய ராஜேஸ் படங்களின் மேஜிக் இதில் டோட்டலி மிஸ்ஸிங் ...

காஜல் கேரக்டர் சுத்த பேத்தலாக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . ஒரு மாதத்தில் ஷோபனா ஆகி விடுவேன் என்று சவால் விட்டு அதற்காக எம்.எஸ். பாஸ்கரிடம் பரதம் கற்றுக்கொள்வது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க முடிகிறது ...



பிரபு , கோட்டா ஸ்ரீனிவாச ராவ் , நரேன் , சரண்யா  போன்ற நட்சத்திர பட்டாளத்தில் கோட்டா தனித்து நிற்கிறார் . தமன் இசையில் " உன்னை பார்த்த" பாடல்  மட்டும் ஹம்மிங் செய்ய வைக்கிறது . ( தேங்க்ஸ் டூ இசைஞானி ) ...

வெட்டியாக அல்லது வெட்டியான லட்சியத்துடன் சுற்றும் ஹீரோ , அவன் எது செய்தாலும் ஆதரிக்கும் அம்மா , அவன் உதவிக்கு சந்தானம் , பார்த்தவுடன் காதல் வயப்பட வைக்கும் ஹீரோயின் என்று ராஜேஸ் தனக்கு ஏற்ற படியான டெம்ப்ளேட் கேரக்டர்களுடன் ஆல் இன் ஆலிலும்  களமிறங்கியதில் தப்பில்லை . ஆனால் வீக்கான  கதைக்கும்  தனி ட்ராக் எதுவுமில்லாமல் சந்தானத்தின் கவுண்ட்களை வைத்து சுவாரசியமாக அவர் பின்னும் திரைக்கதை இதில் சரிவர அமையாமல் ஒரு லெவெலுக்கு மேல் ஆள விடுங்க ராஜா என்று சொல்லுமளவுக்கு போனது தான்  பரிதாபம் ...

கார்த்தி நடிப்பதால் சண்டை , வழக்கமாக ராஜேஸ் படங்களில் வரும் ஹீரோ - ஹீரோயின் ஈகோ மோதல் , ஒயின் ஷாப் சீன்கள் ( ஒரு சீனை தவிர ) போன்றவற்றை தவிர்த்தது அறுதல் . படத்தின் நீளம் , பொறுமையை சோதிக்கும் ப்ளாஷ்பேக் , காஜல் சம்பந்தப்பட்ட மொக்கை சீன்கள் இவையெல்லாம் சந்தானம் ஸ்க்ரீனில் வந்தாலே சிரிக்கும் அதிதீவிர ரசிக கண்மணிகளுக்கு பிடிக்க வாய்ப்பு இருந்தும் ஆல் இன் ஆல் அழகுராஜா வை அமெச்சூர் என்றே சொல்ல வைக்கின்றன ...

 ஸ்கோர் கார்ட் : 39








2 November 2013

ஆரம்பம் - ARAMBAM - அவசரம் ...


அஜித் - விஷ்ணுவர்தன் - யுவன் காம்பினேஷனின் ஸ்டைலிஷான மேக்கிங் , அஜித் தின் ஒப்பனிங்  இரண்டையும் மட்டும் அதிகமாக நம்பி வந்திருக்கிறது ஆரம்பம் . தீபாவளிக்கு வந்திருக்கும் படம் ரசிகர்களுக்கு உண்மையிலேயே  தல தீபாவளியா ? !  பார்க்கலாம் ...

நண்பனின் சாவுக்கு காரணமானவர்களின் கதையை முடிப்பதே ஆரம்பம் . இதை அஜித் படத்தில் பேசுவது போல " Make IT Simple " ஆக சொல்லாமல் இடைவேளை வரை சஸ்பென்ஸ் வைத்து பின் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் , கூலிங் க்ளாஸ் , ஸ்டைலான லுக்
( கோட் இல்லாமலா ? )  , கையில் கன் என அஜித்திற்கு அல்டிமேட் ரோல் . வசனமே தேவையில்லை அவர் வந்தாலே தியேட்டர் அதிர்கிறது .  போலீஸ் தோள்  மேலே  கை வைத்தவுடன் அஜித் முறைத்து விட்டு கூலிங் க்ளாஸ்  போடும் இடம் க்ளாஷான மாஸ் . அஜித் ரிஸ்க் எடுத்து சண்டை செய்திருந்தும் உடல் சுற்றளவு பிரபுவை நியாகப்படுத்துகிறது . அதிலும் ராணா , அதுல் , ஆர்யா ,  கிஷோர் என  வருபவர்கள் எல்லாம் ஸ்லிம் அன்ட் பிட்டாக இருக்க என்ன தல இது ? ...


ஆர்யா விற்கு தனி லவ் ட்ராக் , நிறைய சீன்கள் எல்லாம் இருந்தும் தல இருப்பதால் தனித்துவம் இல்லாமல் இருக்கிறார் . அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்கிற குழப்பத்தில் இவர் செய்யும் சேட்டைகள் சூப்பர் . ப்ளாஷ்பேக் லவ் காட்சிகளில் அங்கிள் பன் போல வந்து அட போட வைக்கிறார் . லாஜிக் இடித்தாலும் ஆர்யாவின் ஹாக்கிங் மேட்டர் ரசிக்க வைக்கிறது ...

நயன் , டாப்சீ இருவரில் முன்னவர் தாரளாமாக நடித்து தாகம் வர  வைக்கிறார்.  பப்ளி ரோலில் டாப்சீ , மெச்சூர்ட் ரோலில் நயன் இருவருமே கவர்கிறார்கள் . அஜித்தின் நண்பனாக ரானா , போலீஸ் ஆபீசர்களாக அதுல் குல்கர்னி , கிஷோர் , கடைசியில் சாகப்போகும் போது  கூட டே ஆபீசர் என்று விளிக்கும் வில்லன் என பொருத்தமான நட்சத்திரங்கள் ...

 "  அடடடா " , " என் பியூஸ் "  பாடல்கள் யுவன் அக்மார்க் . அஜித்  வரும் போது
ஒலிக்கும் பி.ஜி பெர்பெக்ட் . ஆனாலும் யுவன் - விஷ்ணு கூட்டணியின் பழைய மேஜிக் மிஸ்ஸிங் . ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , ஆக்ஸன் எல்லாமே படத்திற்கு பலம் ...


இடைவேளை வரை சஸ்பென்சுடன் நகரும் திரைக்கதை , ஆய் , ஊய் வசனங்கள் இல்லாமல் அஜித்தின் மாஸை க்ளாஸாக காட்டும் சீன்கள் , ஆர்யா , நயன் என நட்சத்திர பட்டாளங்கள் , ஹாக்கிங்கை ( ஹாலிவுட்டில் இருந்து சுட்டிருந்தாலும் ) பயன்படுத்திய விதம் , சில நேரமே வந்தாலும் அஜித் - ரானா சம்பந்தப்பட்ட காட்சிகள் என எல்லாமே அஜித் மூலம் படத்திற்கு கிடைத்த ஆரம்பத்தை தக்க வைக்கின்றன ...

அஜித்தை ஸ்டைலாக நடக்க விடுவது , கூலிங் க்ளாஸ் போட வைப்பது , பைக் ஓட்ட விடுவது இதெற்கெல்லாம் ஆரம்பத்துடனாவது முடிவு கிடைக்குமா ? கொஞ்சம் போரடிக்குது பாஸ் . தீபாவளி ரிலீஸ் என்பதாலோ என்னவோ படம் நெடுக சுடுகிறார்கள் . ஆனால் நமக்கோ  ஜேம்ஸ் பாண்ட்  வகையறா படங்களை விட ஜாக்கிசான் படங்கள் தான் பிடிக்கிறது . ராணுவ வீர்களின் தற்காப்பு சாதனங்களில் கூட நடக்கும் ஊழலை வைத்து பின்னப்பட்ட அழகான கதை , வழக்கமான அரசியல் வாதி , ஊழலுக்கு  உடந்தையான மேலதிகாரி , அதை கண்டுபிடிக்கும் நல்ல போலீஸ் போன்றவற்றால் பின்னுக்கு தள்ளப்படுகிறது . பில்லா  , மங்காத்தா போல ஆரம்பம் அஜித்திற்கு அல்டிமேட் படமாகும் வாய்ப்பிருந்தும் அதை ஏதோ அவசரத்தில் நழுவ விட்டிருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 42


27 October 2013

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ...


அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார்  யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்  என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே  இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு  இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...

மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப்  பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு  பி.ஜே.பி யினரிடம்  கண் கூடாக காண முடிகிறது ...

தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி  மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே  எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது  வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில்  நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள்  . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள்  கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...

இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க   மந்திரி அமர்ந்ததையும்  , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக  நடந்தது  என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க   கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி  சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது  . கடந்த  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான  இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை  கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம்  பெற்றிருப்பதும்  குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...

அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு  அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது .  2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட  அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து  விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க  ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை  மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே  மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான்  நடந்து கொண்டிருக்கின்றன ...

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது  மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த்  இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு  தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர்  மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில்  அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி  மட்டுமே  . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...

இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன்  தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து  ஜாதி கட்சிகளை இணைக்கும்  முயற்சியை  கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும்  , அப்படி அமையும் கூட்டணி  தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த  சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில்  உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம்  இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...

இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே  சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில்  மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ்  மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்  . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து  கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...

ஆனால்  நிலையான ஆட்சி அமைவதற்கும்  272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து  கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...



12 October 2013

நய்யாண்டி - NAYYAANDI - நாடகம் ...


தனது இரண்டாவது படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனரும் , நடிப்பிற்க்காக தேசிய விருது பெற்ற நடிகரும் ஒன்று சேர்ந்தால்
எதிர்பார்ப்புக்கு பஞ்சமா இருக்கும் ? ஆனால் எதிர்பார்த்த ரசிகர்களை இருவருமாக சேர்ந்து நய்யாண்டி செய்து விட்டார்கள்
என்று தான் சொல்லத் தோன்றுகிறது ...

40 வயதை நெருங்கியும் திருமணமாகாத இரண்டு முதிர்கன்னர்களின் கடைக்குட்டி தம்பி சின்ன வண்டு ( தனுஷ் ) . மாமா பையனின்
( சூரி ) ஊர்த்திருவிழாவில் சின்ன வண்டு வன ரோஜாவை ( நஸ்ரியா ) சந்திக்க , வேலை வெட்டி இல்லாத ஹீரோக்களுக்கு என்ன பிறக்குமோ அது பிறக்கிறது . ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களது காதல் கல்யாணத்தில் முடிய ஹீரோ தனது குடும்பத்தாரை எப்படி சமாளிக்கிறார் என்பதை நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சற்குணம் ...

தேசிய விருதுக்கு  பிறகு தொடர்ந்து சீரியசான படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நினைத்து விட்டார் போலும் . அவர் எண்ணப்படி ஜாலியான கேரக்டர் . கேசுவலாக செய்திருக்கிறார் . ஆனால் கதையை கொஞ்சம் சீரியசாகவே கேட்டிருக்கலாம் பாஸ் . சிறந்த நடிகர் கிடைத்துவிட்டார் என்று நாம் நெஞ்சை நிமிர்த்தும் வேளையில் சிவாவுக்கும் , சிவ கார்த்திகேயனுக்கும் போட்டியாக இதெல்லாம்  தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது ...

தனது நடிப்புத் திறமையை சினிமாவை  தாண்டியும் சமீபத்தில் நிரூபித்திருக்கும் நஸ்ரியா விற்கு இதில் படித்த  பல் டாக்டராக இருந்தாலும் பல்லிளிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப்பெண் பாத்திரம் . ஜெனிலியா போல  ஓவர் ஆக்ட் செய்து வெறுப்பெற்றாமல் அளவாக நடித்திருப்பதை பாராட்டலாம் ...

சந்தானம் இல்லாத  குறையை சூரியை வைத்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள் . மற்ற நண்பர்களில் இமான் அண்ணாச்சி கவனிக்க வைக்கிறார் . அண்ணன்கள் ஸ்ரீமன் , சத்யன் இருவரில் தொப்பையை இறுக்கி சிவாஜி போன்ற முகபாவத்தில் ஸ்ரீமன் மட்டுமே சிரிக்க வைக்கிறார் . ஜிப்ரான் இசையில் இனிக்க இனிக்க , டெடி பீர் பாடல்கள் நன்றாக இருக்கின்றன . பின்னணி இசையில் எஸ்.ஏ.ராஜ்குமார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார் . காமெடி படமாக இருந்தாலும் குத்துவிளக்குகளுக்கு நடுவில் புகுந்து தனுஷ் , நஸ்ரியாவை காட்டும் ஷாட்டில் வேல்ராஜ் ஒளிர்கிறார் ...

கரண்ட் ட்ரெண்டிற்கு ஏற்றபடியான கதை , இரண்டு அண்ணன்களின் ஜொள்கலுக்கிடையே வழிந்தோடும்  இரண்டாம் பாதி , தனுஷ் - நஸ்ரியா ஜோடி , ஒளிப்பதிவு போன்றவை நய்யாண்டி யில் தர்பார் செய்கின்றன . இரண்டு சீரியஸான  ஆட்கள் சேர்ந்து ஜாலியான படம் பண்ண நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை சீரியசாக பண்ண வேண்டாமோ ? . நஸ்ரியாவை கவர தனுஷ் ஐடியா வாக என்னென்னமோ பண்ணி காமெடி என்ற பெயரில் கடிக்க அவரோ சப்பென்ற காரணத்திற்காக காதலில் விழுந்து " இதுக்கு ஏம்பா இத்தன நேரம் இழுத்தீங்க " என்று சொல்ல வைக்கிறார் ...

செண்டிமெண்டிற்காக  அப்பா நரேன் , தனுஷிற்காக இரண்டு சண்டை , க்ளைமாக்சில்  வந்து மிதி வாங்கும் வில்லன் , எதிர்பார்த்த படி வரும் அடுத்தடுத்த காட்சிகள் இப்படி நத்திங் நியூ இன் நய்யாண்டி . சற்குணத்தின் முதல் படம் களவானியில் இருந்த ப்ரெஷ்னெஸ் இதில் இல்லாமல் போனது கூட பரவாயில்லை , ஆனால் மொத்த படமும் ஏதோ நாடகம் பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தை தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 39



5 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ONAK - மனதை வேட்டையாடும் ...



சில படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டுமென்று தோன்றினாலும் ஏதோ சில காரணங்களால் பார்க்க முடியாமல் போகும் . அந்த லிஸ்டில் சமீபத்திய படம் மூடர் கூடம் . அதே லிஸ்டில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே தாமதமானாலும் பார்த்து விட்டேன் ...

துப்பாகியால் சுடப்பட்டு ரோட்டில் சாகக்கிடக்கும் ஒருவனை மருத்துவக் கல்லூரி மாணவன் சந்துரு ( ஸ்ரீ ) தன் சொந்த முயற்சியால் காப்பாற்றுகிறான் . காபாற்றப்பட்டவன் போலீசால் தேடப்படும் கிரிமினல் ஊல்ப் ( மிஸ்கின் ) என்று தெரிய வர சந்துருவுக்கு என்ன நேர்ந்தது ? ஊல்பின் பின்னணி என்ன ? என்பதே இரண்டரை மணி நேர படம் . ஹீரோ , ஹீரோயின் , காமெடி , காதல் என்று தமிழ் சினிமாவின் வழக்கங்கள் எதுவுமில்லாமலேயே இந்த இரண்டரை மணி நேரத்தில் ( மொட்டைத்தலை அடியாள் , வெறித்துப் பார்க்கும் கேரக்டர்கள் , ஸ்டாண்ட்ஸ்டில் ஷாட்ஸ் போன்ற மிஸ்கினத்தனங்கள் இருந்தாலும் ) தன் விறு விறு திரைக்கதையால் லயிக்க வைக்கிறார் மிஸ்கின் ...

வழக்கு என் னிற்கு பிறகு ஸ்ரீ க்கு மற்றுமொரு பெயர் சொல்லும்படியான பாத்திரம் . நிறைவாக செய்திருக்கிறார் . முன் பின் தெரியாதவனுக்காக
ஒருவன் இவ்வளவு ரிஸ்க் எடுப்பனா என்று தோன்றினாலும் அவனை காப்பாற்ற இவர் படும் பாடு நமக்கே பாவமாக இருக்கிறது .
மிஸ்கின் தன்னைப் பற்றிய பின்னணியை காட்டமால் இடைவேளை தாண்டியும் பயணப்பட்டிருப்பது பலம் . அதே போல பிளாஷ்பேக் எதுவும் வைக்காமல் குழந்தைக்கு கதை சொல்வது போல ஒரே ஷாட்டில் தன் பின்னணியை சொல்லிவிடுவது வித்தியாசமாக இருந்தாலும் ஏனோ நிறைவாக இல்லை . மிஸ்கின் சண்டைக் காட்சிகளில் ரசிக்க வைத்தாலும் உடல் எடை உறுத்துகிறது ...

 

முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்று டைட்டிலில் போடுகிறார்கள் . அதை நிரூபிப்பது போல இசை சில காட்சிகளில் முன்னில் வந்து அதிகப்பிரசங்கித்தனம் செய்தது போல இருக்கிறது . மற்ற படி வசனங்கள் இல்லாத நிறைய இடங்களில் ( குறிப்பாக கல்லறை சீன் , க்ளைமாக்ஸ் ) நம்மை ஒன்ற வைக்கிறது இசைஞானியின் இசை . படம் முடிந்தவுடன் செல்லாமல் பொறுமையாக இருந்தால் டைட்டில் கார்ட் உடன் வரும் இசையில் நனையலாம் . இசைஞானியை தவிர வேறெந்த டெக்னீசியன் பெயரையும் மிஸ்கின் போஸ்டர்களில் போடா விட்டாலும் ஜூனியர் ரங்காவின் ஒளிப்பதிவு சென்னையின் சந்து பொந்துகளில் புகுந்து இரவையும் ரசிக்க வைக்கிறது ...

படத்தின் நீளம் , திரைக்கதையில் பெப் இருந்தாலும் ஸ்லோ மூவிங் காட்சிகள் இப்படி சில குறைகள் இருந்தாலும் டாப் ஆங்கிள் ஷாட்டில் ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்கு சற்று முன்பு வரை டாப் கியரிலேயே செல்வது , அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்தது , ஒரே இரவில் ஓநாய் ஆட்டுக்குட்டியுடன் காட்டுக்குள் நம்மை ஒன்ற வைத்தது போன்ற வகையில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பிறகும் தற்போதைய காமெடி ட்ரெண்டுக்கு மடங்காமல் நம் மனதை வேட்டையாடுகிறார் மிஸ்கின் ...

நந்தலாலா , முகமூடி இரண்டிற்கும் ஓவர் பில்டப் கொடுத்து ஓடாமல் போனதாலோ அல்லது பணப்பற்றாக்குறையாலோ ப்ரோமோ அதிகம் இல்லாமல் தன் படத்தை மட்டும்  பேச வைத்திருக்கிறார் மிஸ்கின் . நிறைய தியேட்டர்களை  ராஜா ராணி ஆக்ரமித்துக் கொள்ள ஓநாய் ஒடுக்கப்பட்டதென்னமோ உண்மை . என்ன தான் மவுத் பப்ளிசிட்டி இருந்தாலும் ரசிகனுக்கு ஏற்ற விதத்தில் ஷோ இல்லாமல் போவதால் என்ன பிரயோஜனம் . உலக நாயகன் முயற்சியால் டி.டி.எச் முறையில் படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கபட்டால் தன் படத்திற்கு தானே போஸ்டர் ஓட்டும் நிலைக்கு மிஸ்கின்களும் , இது போன்ற படங்களை தயாரிக்க முன் வந்ததால் கடனாளியாகும் நிலைக்கு முதலாளிகளும் தள்ளப்பட மாட்டார்கள் . மனமிறங்குவார்களா பெரிய முதலைகள் ? ...

ஸ்கோர் கார்ட் : 47
Related Posts Plugin for WordPress, Blogger...