முதல் படமான தென்மேற்குபருவக்காற்று வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் தர்க்க ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளையும் , சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதினையும் இயக்குனர் சீனுராமசாமிக்கு பெற்றுத்தந்தது , ஆனால் இரண்டாவது படமான நீர்ப்பறவை இரண்டையுமே தக்கவைத்துக்கொள்ளாமல் போனது துரதிருஷ்டமே ...
இறந்து போய் தன் வீட்டிலேயே புதைக்கப்பட்ட கணவனை பற்றிய போலீஸ் விசாரணையில் ஒரு தாயின் ( நந்திதா தாஸ் ) ஃப்ளாஸ்பேக்கில் 25 வருடங்கள் முன்னோக்கி படம் விரிகிறது . குடிக்கு அடிமையான அருளப்பன்சாமி ( விஷ்ணு ) , தேவாலயத்தில் வளரும் பெண் எஸ்தர்
( சுனைனா ) இருவருக்குமிடையேயான காதல் அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதை ...
அடுத்தவர்களை ஏமாற்றி காசு வாங்கியாவது குடிக்கும் கதாபாத்திரத்தில் விஷ்ணு பெரிதாக கவரவில்லை . எதற்கு அவர் குடிக்கு அடிமையானார் என விளக்கப்படாததும் , இத்தனை வருடங்களாய் திருந்தாதவர் ஒரு பெண் தலையில் கை வைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டதும் திருந்த முற்படுவதும் அதரப்பழசாக இருப்பதால் மனதில் ஒட்டவில்லை ...
சுனைனாவை அப்படியே விட்டிருக்கலாம் ஏன் கருப்படித்தார்கள் என தெரியவில்லை . கவர்ந்திருக்க வேண்டிய இவரது கதாபாத்திரம் விஷ்ணுவுடனான ஏனோ தானோ காதலால் நம் கவனத்தை பெறவில்லை . கணவனை காணாமல் தேடும் இடத்தில மட்டும் மனசை லேசாக தொடுகிறார். இவருடைய வயதான கேரக்டருக்கு தேவையில்லாமல் நந்திதா தாஸை வீணடித்திருக்கிறார்கள் . விஷ்ணுவை ஒரு தலையாய் காதலிக்கும் பெண் சுனைனாவை விட அழகாக இருக்கிறார் ...
தாயாக நடித்திருக்கும் சரண்யா பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை . இன்றைய தமிழ் நடிகர்களுக்கு இருக்கும் யதார்த்த தாய் . மகன் குடிக்கு காசு கொடுப்பது இவர் கதாபாத்திரத்தின் மேல் மதிப்பை தருவதற்கு பதில் வெறுப்பை தருகிறது . படகு செய்யும் பாய் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி , தமிழ் வாத்தியார் ஜோசப் பாரதி ( குடிகார கதாபாத்திரத்துக்கு அந்த மகாகவி பெயரை வைக்க இயக்குனருக்கு கூசவில்லையா ?! ) யாக தம்பிராமையா , நண்பனாக அட்டாக்பாண்டி , அப்பாவாக வருபவர் , பாதிரியார் வேஷத்தில் அழகம்பெருமாள் , மீனவராக அருள்தாஸ் என்று எல்லோரும் படத்திற்கு இயல்பாக பொருந்துகிறார்கள் .
பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு ராமேஸ்வர கடல் பின்னணியை கண்முன் நிறுத்துகிறது . " ரத்தக்கண்ணீர் " பாடலில் வரும் விஷ்ணுவின் சில்அவுட் சிறந்த ஒளிப்பதிவிற்க்கு ஒரு சின்ன டீஸ்பூன் . " பர பர " பாடலில் மட்டும் ரகுனந்தனின் இசை தெரிகிறது . வைரமுத்துவின் பாடல் வரிகளில் " தேவன் மகளே , ஆசீர்வாதம் , ஜெபிக்கவா , சிலுவைக்காடு " என பிரசங்க நெடி...
கடல் பின்னணி , மீனவர்களை பற்றிய சில தகவல்கள் , குடிக்கு அடிமையான கிறிஸ்துவரை இந்து டாக்டர் திருத்துவது , குடியிலிருந்து மீண்ட பிறகு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு முஸ்லீம் உதவுவது போன்ற காட்சிகளில் சொல்லாமல் சொல்லப்பட்ட தேசிய ஒருமைப்பாடு போன்ற சில விஷயங்கள் மட்டுமே படத்தில் கவனிக்க வைக்கின்றன .
25 வருடங்களுக்கு முன்னாள் நடந்தது என்று வாயால் சொல்கிறார்களே தவிர அதை காட்சிகளில் காட்டுவதற்கு சுத்தமாக மெனக்கெடவில்லை . உதாரணத்திற்கு ஒரு சீனில் 1985 என பொறிக்கப்பட்ட மசூதி காட்டப்படுகிறது , ஆனால் அதை பார்க்கும் போதே தற்போதைய நிலையில் அப்படியே படம் பிடித்ததால் 25 வருடங்களுக்கு முந்தையது என்று நன்றாகவே தெரிகிறது. மேலும் உடை,அலங்காரம் போன்றவற்றிக்கு கூட பெரிதாய் அக்கறைப்பட்டதாக தெரியவில்லை .
அது மட்டுமல்லாமல் தீவிரவாதம் , மீனவர் படுகொலை போன்ற நடப்பு சமாச்சாரங்கள் பற்றிய வசனங்கள் 25 வருடங்களுக்கு முன்னாள் பேசப்படுவது யதார்த்தமாக இல்லை . ஜெயமோகன் கூட இருந்தும் வசனங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை . கடலோரக்கவிதைகள் , இயற்கை போன்று கடல் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்களில் காதல் சுனாமியை பார்த்த நமக்கு நீர்ப்பறவை ஒரு நீர்த்த பறவையாகவே கண்களுக்கு தெரிகிறது ...
ஸ்கோர் கார்ட் : 39
4 comments:
Nice comments!!
அட்டகாசமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க அனந்த்.எப்ப நெட்ல நல்ல கொப்பி வருமோன்னு இருக்கு !
Ramesh kumar D said...
Nice comments!!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!
ஹேமா said...
அட்டகாசமா விமர்சனம் பண்ணியிருக்கீங்க அனந்த்.எப்ப நெட்ல நல்ல கொப்பி வருமோன்னு இருக்கு !
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!
Post a Comment