8 September 2015

பாயும் புலி - PAAYUM PULI - ஃபார்முலா புலி ...

 


பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷால் - சுசீந்திரன் கூட்டணியில் சரத்குமார்  & கோ வை எதிர்த்து நடிகர் விஷால் நிஜத்திலேயே பாய்ந்து கொண்டிருக்கும் வேளையில் வந்திருக்கிறது பாயும் புலி . ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு  புலி பாயாமல் போனது ஏமாற்றமே  ...

மதுரையில் பிசினஸ்மேன்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல் எஸ்ஐ ஒருவரை கொன்று விட , ரகசிய என்கவுன்டரில் அவரகளை கொன்று பழி தீர்க்கிறார் ஏ.எஸ்.பி ஜெயசீலன் ( விஷால் ) . ஆனாலும் அவர்களின் பணம் பறிக்கும் படலம் தொடர , அந்த கும்பலின் உண்மையான தலைவனை கண்டறியும் புலி ( விஷால் ) அதிர்ச்சியானாலும் பாய்ந்து வேட்டையாடுவதே பாயும் புலி ...

சத்யம் , வெடி போல விஷாலுக்கு மற்றுமொரு ஏ.எஸ்.பி வேடம் . தன் உயரத்துக்கு ஏற்ற வேஷத்தில் நன்றாகவே செட் ஆகிறார் விஷால் . பஞ்ச் டயலாக் பேசாமல் எதிரிகளுக்கு பஞ்ச் மட்டுமே கொடுக்கும் விஷால் ஆறுதல்.பெண்கள் ஏதேதோ சாதனைகள் செய்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ரோட்டை கூட க்ராஸ் செய்ய பயப்படும் ஹீரோயினாக காஜல் அகர்வால் . இவரை பார்த்த மாத்திரத்திலேயே விஷால் லவ்வ மறக்காமல் டூயட்டுக்கு வந்து போகிறார் . விஷாலின் அண்ணனாக முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நல்ல தேர்வு . இவருடைய கேரக்டர் ட்விஸ்ட் கொடுத்தாலும் டீட்டைளிங் புதுசாக இல்லாதது சறுக்கல் . வடிவேலுக்கு பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் மீண்டும் தோற்றிருக்கிறார் சூரி ...


" மதுரக்காரி " , " சிலுக்கு மரமே " போன்ற பாடல்களில் ஹம்  செய்ய வைக்கும் இமான்  பி.ஜி க்கு பெரிதாக மெனக்கெடவில்லை . பாடல்கள் நடுநடுவே திணிக்கப்பட்டது போலிருப்பதை தவிர்த்திருக்கலாம் . டாப் ஆங்கிள் ஷாட்களில் வெல்டன் சொல்ல வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் . இந்த முறையும் பிரபல டெக்னீஷியன்களுடன் கூட்டணி வைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் ...

வழக்கமான  பழி வாங்கும் கதையையே நான் மகான் அல்ல , பாண்டியநாடு படங்களில்  ரசிக்கும் படி கொடுத்திருப்பார் சுசீந்திரன் . அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இடைவேளை வரை பதுங்கும் புலி பின் வேகமாக பாயத்தான் செய்கிறது . படம் ஆங்காங்கே கிளிஷேக்கலாக இருந்தாலும் க்ளைமேக்சில் இயக்குனர் தெரிகிறார் . நேர்மையான போலீஸ் ஹீரோ , தன் சுய லாபத்துக்காக பெத்த அப்பனையே கொல்லத் தயங்காத வில்லன் , சக போலீஸ்காரனை கொல்லும்  வில்லன் கும்பல் என சமீபத்தில் வெளிவந்த தனி ஒருவனுக்கும் பாயும் புலிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் சொல்லப்பட்ட விதத்தில் தனித்து நிற்கிறான் தனி ஒருவன். மற்றபடி மசாலா வாடை இல்லாவிட்டாலும் ஐந்து பாட்டு , ஃபைட் , சென்டிமென்ட் , காமெடி ட்ராக் என்று சினிமாவின் வியாபாரத்தை  நம்பி வந்திருக்கும்  இந்த பாயும் புலி ஃபார்முலா புலி ...

ஸ்கோர் கார்ட் : 41 

ரேட்டிங் : 2.75* / 5* 




30 August 2015

தனி ஒருவன் - THANIORUVAN - தலைவன் ...


ஜெயம் ரவிக்கு இந்த குருப்பெயர்ச்சி நன்றாக வொர்கவுட் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன் . ஒரே வருடத்தில் மூன்று  படம் , அதிலும் இதுவரை  அவர் நடித்த படங்களிலேயே தனித்து நிற்கிறான் இந்த தனி  ஒருவன் . ஜெயம் ரவியை வைத்து ரீமேக் மட்டுமே செய்து கொண்டிருந்த மோகன்ராஜா ( முன்னர் ஜெயம் ராஜா ) தனது தம்பிக்கு முதன்முறை ஆகச்சிறந்த சொந்த கதையை தேர்வு செய்து அதை எழுத்தாளர்கள் சுபா வோடு சேர்ந்து திரைக்கதையாக்கி முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியை அட்டகாசமாக நடிக்க வைத்து ஜெயித்திருக்கிறார் ...

தனது  வழியில் குறுக்கிடும் வில்லன்களை மட்டும் துவம்சம் செய்யும் ஹீரோக்கள் மத்தியில் தனக்கு நிகரான எதிரியை டார்க்கெட் செய்து தானாகவே சென்று அடிக்கிறான் இந்த தனி ஒருவன் . ஐபிஎஸ் போஸ்டிங்குக்கு முன்னரே சக பேட்ச் மேட்களுடன் சேர்ந்து இரவில் குற்றவாளிகளை பிடிக்கும் மித்ரன் ( ஜெயம் ரவி ) எல்லா குற்றங்களுக்கும்  மூலமான சித்தார்த் அபிமன்யு ( அரவிந்த்சாமி ) வை  தேடிப்பிடித்து களையறுப்பதே கதை ...

படத்தின் டைட்டிலே அரவிந்த்சாமிக்கு தானோ என்பது போல படமே அவரின் சிறு வயதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது . மங்காத்தா அஜித்துக்கு பிறகு இந்த அளவு நெகடிவ் கேரக்டருக்கு ரசிகர்களிடையே அவ்வளவு  வரவேற்பு . அஜித் போல ரசிகர் பட்டாளம் எல்லாம் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு கைதட்டல் கிடைக்க காரணம் அந்த கேரக்டரின் வடிவமைப்பும் , அதை தனது  அசால்டான நடிப்பால் அனாயசமாக செய்த அரவிந்த் சாமியும் . இந்த படத்திற்காக உடல் இளைத்து செம மேன்லியாக  இருக்கிறார் ரோஜா நாயகன் . இந்த படம் அரவிந்த்சாமிக்கு ஒரு மைல்கல் ...

ஜெயம்ரவி நிமிர்ந்து நில் மூலம் கவனிக்க வைத்தவர் தனி ஒருவனில் அதையும் தாண்டி மித்ரனாகவே மாறி ரசிக்க வைக்கிறார் . தோற்று விட்டோம் என்று கோபப்படும் இடத்திலும் , நண்பன் சாவை நேரில் பார்த்து கலங்கும் இடத்திலும் ஜெயம் ரவியிடம் தேர்ந்த நடிப்பு . சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து விட்டு டகால்டி செய்யாமல் படத்தோடு வரும் முக்கியமான ரோலில் நயன்தாரா . க்ளோசப் காட்சிகள் அம்மணியின் வயதை காட்டுகிறது . அரவிந்த்சாமியின் அப்பாவாக வரும் தம்பி ராமையா தனியாக காமெடி ட்ராக் இல்லாமல் திரைக்கதையோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார் . முதலமைச்சராக நாசர் , நண்பனாக கணேஷ் வெங்கட்ராமன் எல்லோருமே சரியான தேர்வு ...


ராம்ஜி யின் ஒளிப்பதிவு இருட்டுப் பக்கங்கள் நிறைந்த படத்துக்கு நல்ல வெளிச்சம் . ஹிப் ஹாப் தமிழா இசையில் காதல்  கிரிக்கெட் , தனி ஒருவன் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றான் . படத்திற்கு பிஜி ப்ளஸ். க்ரைம் நாவல் போன்ற விறுவிறுப்பை திரைக்கதையில் இயக்குனரோடு இணைந்து சுபா கொடுத்திருக்கிறார்கள் . அதிலும் அடுத்தடுத்த சீன்களுக்கான சிங்கிங் சூப்பர் . " மைனாரிட் டி  அரசு " போன்ற வசனங்கள் வரி விலக்குக்காக யாரையோ திருப்திப்படுத்த வைக்கப்பட்டதோ ?! ...

காக்க காக்க , என்னை அறிந்தால் ஸ்டைலில் நல்ல காப் , கொடூரமான வில்லன் மோதல் தான் கதை . ஆனால் போரடிக்காமல் , ட்ராக் மாறாமால் நிறைய யோசித்து புது புது சீன்களை வைத்த விதத்தில் நம்மை கட்டிப்போடுகிறான் தனி ஒருவன் . எல்லோரும் ட்ரைனிங் கில் இருக்கும் போது ஜெயம் ரவி மட்டும் சீனியர் போல ஆர்டர் போடுவது ஏன் ? , இவர்கள் செய்யும் இரவு வேலைகளை எந்த போலீசும் கண்டு கொள்ளாதது ஏன் ? , அரவிந்த் சாமியின் குற்றங்களில் முதலமைச்சர் நாசரின் பங்கு என்ன ? பல்லாயிரம் கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வரும் ஏன்ஜெலினா வுக்கு எதற்கு இவ்வளவு குறைவான பாதுகாப்பு ? மருந்து மாபியா அரவிந்தசாமிக்கு ஒரு கார் ட்ரைவர் கூடவா இல்லை ? கோர்ட்டில் வீடியோ ஆதாரத்தை எடிட் செய்து கொடுக்கும் ஜெயம் ரவிக்கு அதுவே ஆப்பாகி விடாதா ? போன்ற கேள்விகளை நமது ஆறாம் அறிவு எழுப்பினாலும் இரண்டேமுக்கால் மணி நேரம் நம்மை வேறெதையும் யோசிக்க விடாமல் மெஸ்மெரிசம் செய்து கூட்டத்தை கூட்டும் இந்த தனி ஒருவன் - தலைவன் ...

ஸ்கோர் கார்ட் : 45


ரேட்டிங் : 3.75* / 5*





16 August 2015

வாலு - VAALU - சமத்து ...


ரு படத்தில் பிரச்சனை வந்தால் அதை கிடப்பில் போட்டு விட்டு அடுத்தடுத்த படத்துக்கு தாவும் ஹீரோக்கள் மத்தியில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக வாலு படத்தின் ரிலீசுக்காக தன் சொந்த படத்தையே ஒத்தி வைத்த சிம்புவின் சின்சியாரிட்டியை பாராட்ட வேண்டும் . அதே போல படம் லேட்டாக வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒப்பனிங் லேட்டஸ்டாகவே இருக்கிறது ...

வேலை வெட்டி எதுவும் இல்லாவிட்டாலும் வீட்டின் செல்லப்பிள்ளை ஷார்ப்
( சிம்பு ) . இது போன்றவர்களை முழு நேர பிசியாக்கும் காதல் , ப்ரியாவை
( ஹன்சிகா ) பார்த்தவுடன் அவருக்கு வருகிறது . ஆனால் முறைப்பையன்
( படம் பூரா முறைச்சுக்கிட்டே தான் இருக்காரு ) அன்பு ( ஆதித்யா ) வுடன் ப்ரியாவுக்கு திருமணம் செய்து வைப்பதாய் வீட்டில் பேசி வைத்திருக்கிறார்கள் . ( நல்ல வேளை  இதுவரை யாருமே சொல்லாத வித்தியாசமான கதைன்னு டைரக்டர் எந்த பேட்டிலையும் சொல்லல ) . சோ கடைசியில் இது போன்ற படங்களில் எது நடக்குமோ அது சுகமாவே நடந்து படம் முடிகிறது . ஆனால் சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசென்சும் , போரடிக்காத திரைக்கதையும் இந்த சாதாரண கதையை காப்பாற்றுகிறது ...


பாட்டு , டான்ஸ் , பைட் , பஞ்ச் , அளவான நடிப்பு என ஒரு சக்சஸ்புல் ஹீரோவுக்கு தேவையான  எல்லா திறமைகளும் சரிவரப் பெற்றவர் சிம்பு . ஆனால் சொந்த பிரச்சனையோ அல்லது சுழியோ அவரை அலைக்கழிக்க அந்த இடைவெளியில் சில ஸ்டார்கள் மேலும் தங்களை ஸ்ட்ராங் ஆக்கிக் கொண்டார்கள் . ஒரு வழியாக வாலு மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் சிம்பு ஒரே பாணி கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் வெரைட்டியாக படங்களில் நடித்து மேலும் வளர வாழ்த்துக்கள் ...

படத்தின் கால தாமதத்துக்கு சாட்சி போல மைதா மாவு ஹன்சிகா சில இடங்களில் சப்பாத்தி போல இளைத்தும் , சில இடங்களில் புரோட்டா போல பெருத்தும் இருக்கிறார் . ஆனாலும் சின்ன குஷ்பு சிரிப்பில் மயக்குகிறார் . ஹன்சிகா வோடு மட்டுமல்ல சந்தானம் - விடிவி கணேஷ் இருவரோடும் சிம்புவின் கெமிஸ்ட்ரி வழக்கம் போல நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருப்பது படத்தின் பலம்  . அப்பா வாக வரும் நரேன் சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார் . தமனின் இசையில் சிம்பு வின் நடனம் தாளம் போட வைக்கும் ...

என்ன தான் படத்தின் டிளே கூடுதல் ஆதரவைக் கொடுத்திருந்தாலும் அதை கெடுக்காத வகையில் எண்டெர்டைன்மெண்டாக  படத்தை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் . படத்தின் க்ளைமேக்சுக்கு முன் வரும் சண்டை தேவையில்லாதது போல பட்டாலும்   ஓவர் ஆக்ஷன் காட்சிகளை  காட்டி நம் உடம்பை ரணமாக்காமல் விட்டதற்கு இயக்குனருக்கு நன்றி . பழைய கதை , படத்தின் நீளம் போன்ற குறைகளை தாண்டி சிம்பு ரசிகர்களை மட்டுமின்றி தல , தளபதி ரசிகர்களையும் இழுக்கும் வகையில் ஸ்மார்ட்டாக சொன்ன விதத்தில் சிம்பு விட்ட இடத்தை பிடிக்க உதவியிருக்கும் இந்த வாலு - சமத்து ...

ஸ்கோர் கார்ட் : 40

ரேட்டிங் : 2.5* / 5*

15 August 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க -VSOP - வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...


பாஸ் எ பாஸ்கரன் வெற்றிக்கு பிறகு ராஜேஸ் - ஆர்யா - சந்தானம் கூட்டணியில் ஆர்யாவின் 25 வது படமாக வந்திருக்கிறது வாசுவும் சரவணனும் ஒண்ணா குடிச்சவங்க சாரி படிச்சவங்க ( V S O P ) . 25 வது படத்தில் எந்தவித புதுமைக்கும் வழி கொடுக்காமல் சேம் அண்ட் டெஸ்டெட்  டைரக்டர் ராஜேசுடன்  கை கோர்த்ததில் நடிகராக ஆர்யா ஏமாற்றினாலும் தயாரிப்பாளராக  ஸேஃப் கேம் ...

வாசு ( சந்தானம் ) வும் , சரவணனும் ( ஆர்யா ) சிறு வயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள் . இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்களால்
( பானு , தமனா ) நட்பிற்கு ஏற்படும் விரிசலை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே V S O P . வழக்கம் போல கதைக்கு மெனக்கெடாத ராஜேஸ் & கோ என்ன தான் பழைய படங்களின் தேஜாவு போல இருந்தாலும் திரைக்கதைக்கு உழைத்திருக்கிறார்கள் ...


பொதுவாக ஹீரோ இருந்தால்  அவனுக்கு ஒரு நண்பன் இருப்பான் . இந்த படத்தில் யார் ஹீரோ யார் நண்பன் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு படம் முழுவதும் இருவருமே வியாபித்திருக்கிரார்கள் . ஆர்யா வழிசலான சில சிரிப்புகளில் மட்டும் தனியாக தெரிகிறார் . மற்றபடி அவர் சந்தானத்திடம் சரண்டர் . படத்தை தன் தோள்களில் தூக்கி நிறுத்துவது சந்தானத்துக்கு புதிதில்லை என்றாலும் எல்லோரையும் கலாயத்து அவர் செய்யும் காமெடி ஒரு லெவெலுக்கு மேல் கடி .  வெறும் வார்த்தை ஜாலங்களாக மட்டும் இருக்கும் காமெடிக்கு வித்யூ ராமின் ரியாக்சன்ஸ் பெரிய ரிலீஃப் . ஆனால் காமெடி  என்ற பெயரில் அவர் வீட்டில் சந்தானம் அண்ட் கோ அடிக்கும் லூட்டிகள் டூ மச் அண்ட் போரிங் . தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் கருணாகரன் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத ரோல்களை தவிர்க்கலாம் ...

இனிமேல் ராஜேஸ் படங்களுக்கு " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு " என்று ஓரமாக டைட்டில் போடுவதுக்கு பதில் பெரிதாக எப்பொழுதுமே போட்டு விடலாம் . அந்த அளவுக்கு படத்தில் கடியை விட குடி அதிகம். நட்பு , காதல் , குடி , கலாய் ,,, கொஞ்சமாவது மாத்தி யோசிங்களேன் பாஸ் ?! . டி.இமானின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே . நீரவ்ஷா வின் ஒளிப்பதிவு பளிச் . ராஜேஸ் படங்களில் ஒரு அட்வான்டேஜ் . என்ன  நடக்கும் என்பது நமக்கு முன்பே தெரியும் . அது எப்படி நடக்கிறது என்று மட்டும் பார்த்தால் போதும் . அந்த விதத்தில் படம் ஆங்காங்கே நமக்கு கொட்டாவியை வரவைத்தாலும் ஆல் இன் ஆல் போல மொக்கையாக இல்லை . பாஸ் போல பெஸ்டாகவும் இல்லை . அவர்கள் பாஷையில் சொன்னால் பீர் போல வயிற்றை ரொப்பாமல் , ஃபுல் போல பெரிய போதையையும் கொடுக்காமல் கட்டிங் லெவெலுக்கு இருக்கிறது  V.S.O.P . வெட்டியா சிரிக்கணும்னா ஒருதடவ பாக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 39

ரேட்டிங் : 2.25* / 5* 


20 July 2015

மாரி - MAARI - மினிமம் காரண்டீட் ...


னது முதல் இரண்டு படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் பாலாஜி மோகன்  , இரண்டு ஹிட்களை தொடர்ந்து தனுஷ் இருவரும் இணைந்திருக்கும் படம் மாரி . இருவரின் காம்பினேஷன் , புதுப்பேட்டை க்கு பிறகு தனுஷ் போட்டிருக்கும் டான் வேஷம் , படத்தின் ட்ரைலர் எல்லாமே சேர்த்து கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்திருப்பது  படத்துக்கு பலம் ஆனால் அதை பூர்த்தி செய்யாமல் விட்டது பலவீனம் ...

சின்ன கொலை மூலம் பெரிய டான் ஆகி விடும் மாரி ( தனுஷ் ) கட்டப் பஞ்சாயத்துடன் சேர்த்து புறா ரேசிலும் கொடிகட்டிப் பறக்கிறார் . இவரது எதிரி பேர்ட் ரவி ( மைம் கோபி ) , லோக்கல் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்  ( விஜய் யேசுதாஸ் ) இருவரும்  மாரியை ஒழிக்கும் திட்டத்தில் ஜெயித்தார்களா என்று நாம் நிறைய மசாலா படங்களில் மாறி மாறி பார்த்த சாதா கதையை தனுஷ் மூலம் மெருகேற்றி கொடுத்திருக்கிறார்கள் ...


எந்த வேடம் கொடுத்தாலும் அதை பெர்ஃபெக்டாக செய்யும் சில நடிகர்கள் வரிசையில் தனுஷ் எப்போதோ சேர்ந்து  விட்டார் . அந்த வகையில் புதுப்பேட்டையில் பார்த்த  சீரியஸ் கொக்கி குமாரில் இருந்து விலகி காமெடியும் கலந்த டான் வேஷத்தில் தனுஷ் கச்சிதம் . செஞ்சிருவேன்  என்று பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கடைசி வரை ஒன்றும்  செய்யாவிட்டாலும் கூலர்ஸ் , கழுத்து சங்கிலி , வாயில் சிகரெட் இத்தோடு ஆக்சன் காட்சிகளில் வேகம் என நிஜ ரவுடியாகவே ராவுடி செய்கிறார் தனுஷ் . ஆனால் இவர் ரவுடியாவதற்கு காரணமாக காட்டப்படும்  ஃப்ளாஷ்பேக் படு வீக் ...

இன்டர்வெல் ப்ளாக்கில் ஒரு ட்விஸ்ட் தருவதை தவிர காஜல் அகர்வாலுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை . தனுஷின் அல்லக்கைகளாக வரும் இருவரும் படத்துக்கு  ப்ளஷ் . குறிப்பாக தனக்கு ஏன் சனிக்கிழமை என்று பேர் வந்தது என விளக்கும் சீனில் ஆரம்பித்து கிடைக்கிற கேப்பில் தனுஷை கூட விட்டு வைக்காமல் காமெடி கெடா வெட்டும் ரோபோ  சங்கர் ஆர்டினரி படத்துக்கு எக்ஸ்ட்ராடினரி எண்டெர்டைன்மெண்ட் . காமெடியன்கள் எல்லாம் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு முன்னணி காமெடியனாக வருவதற்கு இந்த படத்தின் மூலம் நல்ல வாய்ப்பு . ஆல் தி பெஸ்ட் ...


தனுஷை பார்த்தாலே அல்லு விடும் மைம் கோபி , போலீஸ் வேஷத்துக்கு சுத்தமாக பொருந்தாத விஜய் யேசுதாஸ் ( அறிமுகம் ) என இரண்டு வில்லன்களுமே மாரி படத்துக்கு ரொம்ப ஸாரி . பாடல்களை அப்படியிப்படி சுட்டிருந்தாலும் ( டானு பாடல் - ஆத்தாடி ஆத்தாடி  தேன் மொட்டு தான் ) பி.ஜி யில் பின்னியெடுக்கிறார் அனிருத் . ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இதம் ...

படத்தின் பரீ ரிலீஸ் மார்க்கெட்டிங் , தனுஷின் ஸ்டார் வால்யு , கலகலவென போகும் முதல் பாதி , பாட்ஷாவை நினைவுபடுத்தும் மார்கெட் சீன்கள் போன்றவை மாரிக்கு பூஸ்ட் . சொதப்பலான வில்லன்கள், சொதசொதப்பான இரண்டாம் பாதி , மாமனாரே  மறந்து விட்ட சிகரெட்டை தனுஷ்  படம் நெடுக ஸ்டைலாக புஸ்புஸ் என்று ஊதி நெகடிவ் பப்ளிசிட்டி கொடுப்பது போன்றவை படத்துக்கு ஸ்கேரி . மொத்தத்தில் படு மொக்கையாகவும் இல்லாமல் மாஸ் மசாலாவாகவும் இல்லாமல் தனுஷின் அடிமட்ட ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் வந்திருக்கும் மாரி - மினிமம் காரண்டீட் ...

ஸ்கோர் கார்ட் : 40

( பின்குறிப்பு  : படத்தில் வன்முறை , ஆபாச காட்சிகள் இல்லாததால் யு சான்றிதழ் கொடுத்ததுக்கு பதில் இளசுகளை அதிகம் இன்ஃப்லுயன்ஸ் செய்யும் வகையில் தனுஷ் படம் நெடுக சிகரெட் பிடித்ததற்கு தண்டனையாக யூஏ கொடுத்திருக்கலாம் )




14 July 2015

பாகுபலி - BAHUBALI - நல்ல ஆரம்பம் ...


நான் ஈ வெற்றியின் மூலம் தமிழகத்தில் கால் பதித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம் என்பதையும் தாண்டி தமிழில் ஒரு சரித்திர படம் ( என்ன தான் டோலிவுட ஹீரோவாக  இருந்தாலும் ) பார்க்க வேண்டும் என்கிற தாகத்தை தீர்த்து வைக்கிறது பாகுபலி ...

மகாபாரதத்தில் வரும் பங்காளி சண்டை தான் கதை . அர்ஜுனனுக்கு பதில் பிரபாஸ் , துரியோதனுக்கு ரானா , கர்ணனுக்கு சத்யராஜ் , சகுனிக்கு பதில் நாசர் இவர்களை நடிக்க வைத்து கதையை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . என்ன அவ்வளவு நேரம் படத்தை பார்க்க வைத்து விட்டு க்ளைமேக்ஸ் இல் முடிவு சொல்லாமல் இன்டர்வெல் ப்ளாக் போட்டு 2016 பார்ட் 2 வில் பார்க்கலாம் என்று முடித்து விட்டார்கள் . இவ்வளவு பெரிய படத்தை இப்படி முடித்திருக்கும் இயக்குனரின் தையிரியத்தை பாராட்டினாலும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை ...


பிரபாஸ் , ரானா இருவருமே சரித்திர கால வேஷத்துக்கேற்றபடி அட்டையில் செய்த கவசத்தை போடாமலேயே நல்ல உடற்கட்டுடன் இருக்கிறார்கள் . ஹீரோ பிரபாஸ் என்ட்ரிக்கு ஒருபடி மேலே இருக்கிறது ரானா வின் அறிமுகம் . ரொமான்ஸ் சீன்களில் மெழுகு பொம்மை போல போல வரும் தமனா சீரியாசக  சண்டையும் போட்டு உருக வைக்கிறார் . இவர்கள் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒட்டவில்லை . நாசர் , சத்யராஜ் , ரம்யாகிருஷ்ணன் எல்லோருமே தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள் . சத்யராஜுக்கு பெயர் படத்தில் கட்டப்பா . என்ன கொடுமைப்பா ! . அனுஷ்கா வின் அழகை ரசிக்க நினைத்து வந்த அங்கிள்களுக்கு ஏமாற்றமே . பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...

ஒளிப்பதிவு , எங்கேயுமே பொம்மைப் படம் போல இல்லாமல் உண்மையிலேயே மிரள வைக்கும் சி.ஜி , அரண்மனை செட் , மிரட்டும் போர்க்காட்சிகள் , விசுவல்ஸ் என்று எல்லாமுமாய் சேர்த்து நம்மை பிரம்மாண்டமாய் கட்டிப் போடுகின்றன . இந்த பிரம்மாண்டத்தையும் தாண்டி நான் ஈ யில் உயிர்ப்பாக இருந்த கதை , திரைக்கதை இதில் மிஸ்ஸிங் . குறிப்பாக கிரேசி மோகனின் வசனங்கள் நான் ஈ க்கு ப்ளஸ் . இழுத்துக் கொண்டு போகும் முதல் பாதி , கொட்டாவியை வர வைக்கும் தமனா - பிரபாஸ் காதல் காட்சிகள் , கொஞ்சம் சலிப்பைத் தரும் நீண்ண்ண் ட சண்டைக் காட்சிகள் , சட்டென முடியும் படம் போன்ற சில குறைகள் இருந்தாலும்  இப்பூடி ஒரு படத்தை அதிக பொருட்செலவில் எடுத்து அதை வீணாக்காமல் ரசிக்கும் படி தந்த விதத்தில் பாகுபலி நல்ல ஆரம்பம் ...

ஸ்கோர் கார்ட் : 45

பின் குறிப்பு : ( தென் இந்திய இயக்குனரின் படம் இந்தியாவிலேயே பிரம்மாண்டமான படம் என்பதோடு முதல் மூன்று நாட்கள் வசூலிலேயே  எல்லா கான்களையும் தூக்கி சாபிட்டு விட்டது குறிப்பிடத்தக்கது )






9 July 2015

அரையாண்டு தமிழ் சினிமா 2015 - TAMIL CINEMA 2015 HALF YEARLY REVIEW ...




ந்த வருடம் பயங்கர எதிர்பார்ப்போடு வந்த , மாசு , உத்தமவில்லன் என்று பெரிய ஹீரோக்களின் படங்கள் சொதப்ப தேசிய விருது பெற்ற காக்காமுட்டை , டார்லிங் , டிமாண்டி காலனி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் பெற்றிருப்பது புது முயற்சிகளுக்கு என்றுமே தமிழ் ரசிகர்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது ...

ஐ படத்தில் பாடல் காட்சிகளை படமாக்குவதில் மெனக்கட்டதற்கு கால்வாசியாவது ஷங்கர் கதைக்கு பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காஸ்ட்லி ஃபோனா இருந்தாலும் சிக்னலே வரலேன்னா எப்படி பாஸ் ? இருந்தாலும் பொங்கல் விடுமுறை தயாரிப்பாளருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லாமல் காப்பாற்றியிருக்கும் . Blessing in Disguise என்பது போல ஐ பட டிக்கெட் கிடைக்காமல் டார்லிங் போனவர்கள் டர் ஆகாவிட்டாலும் பேய் ட்ரெண்டில் மற்றுமொரு படத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . தனது அழுத்தமான விமர்சனங்களால் படிப்பவர்களின் மனதை தொடும் கேபிள் சங்கர் நல்ல கதையை தேர்ந்தெடுத்தும் தொட்டால் தொடரும் மூலம் கொடுத்ததென்னமோ மைல்ட்  டச் தான் . அடுத்த படத்தில் சிக்சர் அடிக்க வாழ்த்துக்கள் ...

காக்க காக்க , வேட்டையாடு விளையாடு படத்தின் ரீமேக் போல இருந்தாலும் ஐந்து கெட்டப்களில் அஜித்தை அவ்வளவு அழகாக காட்டியதற்கும் , ஸ்டைலிஷான மேக்கிங்குக்கும் பேசப்பட்டது என்னை அறிந்தால் . புதிய மொந்தையில் பழைய கள் தான் என்றாலும் ருசிக்கலாம் . தோல்விகளால் துவண்டிருந்த தனுஷுக்கு வி.ஐ.பி க்கு பிறகு மற்றுமொரு வெற்றிப்படம் அனேகன் . க்ரைம் நாவல் போன்ற கதைக்காகவும் , வேகமான திரைக்கதைக்காகவும் வென்றான் இந்த அனேகன் . தந்திரமான திரைக்கதையால் ராஜதந்திரம் அனைவரையும் கவனிக்க வைத்தது . பி சி சென்டர்களில் வசூலோடு சர்ச்சையையும் சேர்த்து கிளப்பியிருக்கிறது கார்த்திக் நடிப்பில் வந்த கொம்பன் . காக்கி சட்டையின் வெற்றி சிவகார்த்திகேயனை சக்சஸ் ஹீரோவாக மீண்டும் நிரூபித்திருக்கிறது ...

பேய் சீசனின் பேய் ஹிட் காஞ்சனா 2 . இரண்டாம் பாதி கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் எல்லா சென்டர்களிலும் கல்லா கட்டியது காஞ்சனா . தனது படங்களில் வெரைட்டியை விரும்பும் அருள்நிதியை டிமாண்ட் நாயகனாக ஆக்கியிருக்கிறது டிமாண்டி காலனியின் வெற்றி . உலகநாயகனின் உத்தமவில்லன் இந்த அளவு சோதிப்பான் என்று யாரும் நினைக்கவில்லை . ஒரு நடிகனாக பிரமிக்க வைத்தாலும் கதை , திரைக்கதை ஆசிரியராக கமல் காலை வாரியது துரதிருஷடம் . ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை ஏ சென்டர்களில் கை யை கடிக்காததாக கேள்வி . ஜனநாதனின் இயக்கத்தில் புறம்போக்கு மேம்போக்காக இருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை  பெறாவிட்டாலும் ஷாமின் நடிப்பு பாராட்டப்பட்டது ...

குரு எஸ்.ஜே சூர்யாவின் இசை சவுண்டாக வசூல் செய்யாவிட்டாலும் சிஷ்யன் லக்ஷ்மனின் ரோமியோ ஜூலியட் கமர்சியலாக ஜெயம் ரவிக்கு நல்ல ப்ரேக் கொடுத்திருக்கிறது . பல சர்வதேச விருதுகளோடு தேசிய விருதும் சேர்ந்து கொள்ள கிடப்பிலிருந்த காக்கா முட்டைக்கு டீசண்ட் ஓபனிங் கிடைத்தது . வன்முறை , சோகம் எதுவுமில்லாமல் மென்மையான படங்களாலும் அழுத்தமாக மனதை தொட முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த படம் . வெறும் விமர்சகர்களால் மட்டும் பாராட்டப்படாமல் படம் வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியம் ...

ஓ காதல் கண்மணி மூலம் ரசிகர்கள் , விமர்சகர்கள் இருவரிடமும் டபுள் ஓ.கே வாங்கி விட்டார் மணிரத்னம் . கணவர் சூர்யாவின் மாசுவை துடைக்கும் வகையில் ஜோதிகாவின் 36 வயதினிலே படம் நல்ல ஹிட் . குட் கம் பேக் . தரமான படங்களை தயாரித்து வரும் சி.வி.குமாரின் மற்றுமொரு நல்ல படைப்பு இன்று நேற்று நாளை . டைம் மிஷின் கான்செப்ட் பழசு தான் என்றாலும் தமிழுக்கு சொன்ன விதத்தில் புதுசு . இரண்டாம் அரையாண்டின் ஆரம்பத்திலேயே பாபநாசம் மூலம் உத்தம வில்லனின் பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார் உலகநாயகன் . விஜய் நடிப்பில் புலி , சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் பெயரிடப்படாத தல 56 இரண்டிற்காகவும் ரசிகர்கள் பசியுடன் காத்திருக்கிறார்கள் ...


4 July 2015

பாபநாசம் - PAPANASAM - ஆஸம் - AWESOME ...


நான் பார்த்து வியந்த மலையாள படங்களுள் முக்கியமானது த்ரிஷ்யம் . எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய அந்த கதை ரீ மேக்கில் தெலுகு , கன்னட வெற்றியை தொடர்ந்து தமிழில் அதே  இயக்குனர் ஜீது ஜோசப்பின் கைவண்ணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசமாக வந்திருக்கிறது . என்ன தான் ஒரிஜினல் இயக்குனர் எடுத்தாலும் கமல் எதையாவது புகுந்து கெடுத்து விடுவாரோ என்கிற பயம் இருந்தது . ட்ரைலரில் மீனா ரோலில் கவுதமியை க்ளோஸ் அப்பில் பார்த்த போது அந்த பயம் இன்னும் அதிகமானது . ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்க செய்யும் வகையில் சுயம்புலிங்கம் & ராணி யாகவே கமலும் கவுதமியும் வாழ்ந்து காட்டியிருக்கிரார்கள் ...

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தன் உழைப்பிலேயே சுயம்பாக வளர்ந்து சொந்தமாக கேபிள் டிவி வைத்து நடத்தி வரும் சுயம்பு லிங்கம்  ( கமல்ஹாசன் ) தானுண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்து வருகிறார் . நாலாம் க்ளாசை கூட தாண்டிறாத சினிமா பைத்தியம் சுயம்பு ஒரு அழையா விருந்தாளியால் ஏற்படும் பெரிய பிரச்சனையிலிருந்து த்ன்து குடும்பத்தை சினிமா தந்த அறிவிலிருந்து எப்படி புத்திசாலித்தனமாக காப்பாற்றுகிறார் என்பதே இந்த மூன்று மணிநேர பாபநாச பயணம் ...


கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமேயில்லை . ஆனால் நடிப்பதே தெரியாமல் அண்டர்ப்ளே செய்யும் மோகன்லால் கேரக்டரில் கமல் எப்படி சூட்டாவார் என்கிற தயக்கம் இருந்தது . கேசுவலாக நம்மை ஆளுமை செய்த ஜார்ஜகுட்டியை போலவே எமோஷனலாக சுயம்புவும் நம் நெஞ்சை தொடுகிறார் . என்னதான் கேசுவலாக இருந்தாலும் பெத்த பொண்ணுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை வரும்போதும் மனுஷன் கல்லு மாதிரி நிக்கிறாரே என்று மோகன்லாலை பார்த்து நான் நினைத்ததுண்டு . அந்த குறையை கமல் நிவர்த்தி செய்கிறார் . அதே சமயம் க்ளைமேக்ஸ் நடிப்பில் கமல் நம்மை நெகிழ வைத்தாலும் ஐ.ஜி. கணவரிடம் உண்மையை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு ஒரு பாவ மன்னிப்பு போல பேசியது கொஞ்சம் நெருடுகிறது . த்ரிஷ்யத்தில் மோகன்லால் பேசும்போது இருந்த ஹீரோயிஸம் இதில் மிஸ்ஸிங் . ஒரு வேளை இயக்குனர் தெரிந்தே தமிழுக்காகவோ இல்லை கமலுக்காகவோ செண்டிமெண்டை சேர்த்திருக்கலாம் ...

கமல் - கவுதமி ஜோடி எப்பவுமே நல்ல பொருத்தம் . இப்பொழுது நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்குள்ள நெருக்கம் படத்தின் கெமிஸ்ட்ரிக்கு நன்றாகவே வொர்கவுட் ஆகியிருக்கிறது . சொந்த குரல் என நினைக்கிறேன் கமலுக்கு ஈடாக கவுதமியும் நெல்லை தமிழில் நன்றாகவே பேசி நடித்திருக்கிறார் . குட் கம் பேக் . கமலின் மகள்களாக நிவேதா மற்றும் ஈஸ்தர் நல்ல தேர்வு . எம்.எஸ்,பாஸ்கர் , இளவரசு , சுயம்புலிங்கத்தை காவு வாங்கத்துடிக்கும் பெருமாள் ( கமல் குசும்பு ?! ) வேடத்தில் கலாபாவன் மணி என்று எல்லோருமே இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார்கள் . குறிப்பாக கடுமையான ஐ.ஜி யாகவும் , அதே சமயம் மகனை பறிகொடுத்த தாயாகவும் நடிப்பில் நம்மை மிரள வைக்கிறார் ஆஷா சரத் . அவருக்கு உறுதுணையாக அடக்கி வாசிக்கும் கணவர் ஆனந்த் மகாதேவன் க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் பேசி உருக வைக்கிறார் . கமல் & கவுதமி யை போலவே இந்த ஜோடியையும் நம் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிறார் இயக்குனர் . ஜிப்ரான் இசையில் இரண்டு பாடல்களுள் பின்னணி இசையும் இமயம் ...

ஜெயமோகன் - சுகா வசனங்களில் உள்ள சிலேடை ரசிக்க வைக்கின்றன. இடைவேளை வரை கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுயம்பு லிங்கம் குடும்பத்தில் நடக்கும் காட்சிகள் அவர்களோடு சேர்த்து நம்மையும் ஒன்ற செய்வதால் போரடிக்கவில்லை  . குறிப்பாக குட்டிகோரா பவுடர் போடும் கமலை வாரும் மகள் , கார் வாங்கும் விஷயத்தில் கமல் - கவுதமி இடையே நடக்கும் ஊடல் - கூடல் எல்லாமே எல்லை மீறாமல் இயல்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன . இடைவேளைக்குப் பின் அங்கே இங்கே நகர விடாமல் திரைக்கதை  நம்மை கட்டிப்போடுகிறது . ஆடியன்ஸ் இப்படி கேட்பார்கள் என்பதை யோசித்து லாஜிக்கலாக சில பதில்களை சொல்லியிருப்பது புத்திசாலித்தனம். சில இடங்களில் உறுத்துகிற கமலின் ஒட்டு மீசை , நெல்லை பேச்சு போன்ற  குறையை  தவிர்த்து எளிமையான குடும்பத்தில் நடக்கும் அப்நார்மலான விஷயங்களை சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பான காட்சிகளால் நம்மை ஒன்ற செய்த விதத்தில் பாபநாசம் - ஆஸம் ...

ஸ்கோர் கார்ட் : 48 

பின்குறிப்பு : ( பல வருடங்கள் கழித்து குடும்பத்தோடு பார்க்க வேண்டிய கமல் படம் )




18 June 2015

ரோமியோ ஜூலியட் - ROMEO JULIET - கமர்சியல் காவியம் ...


ங்கேயும் காதல் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி - ஹன்சிகா இருவரும் காதலித்திருக்கும் சாரி கை கோர்த்திருக்கும் படம் ரோமியோ ஜூலியட் . கல் தோன்றி மண் தோன்றா காலத்தே பார்த்து பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் நல்ல வேளை படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் இவர்களை காதலில் கசிந்துருக வைத்து நம்மை வெறுப்பேற்றாமல் சரியாக பயன்படுத்தி டைம் பாஸ் செய்து அனுப்புகிறார் ...

கோடீஸ்வரனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக நினைக்கும் ஏர் ஹோஸ்டஸ் ஐஸ்வர்யா ( ஹன்சிகா ) ஜிம் கோச் கார்த்திக்கை ( ஜெயம் ரவி ) பணக்காரன் என்று நினைத்து வழிய வழிய போய் லவ்வி விட்டு உண்மை தெரிந்தவுடன் கழட்டி விடுகிறார் . பெரும்பாண்மை ஆண்களைப் போல வெறும் சரக்கடிப்பதோடு நின்று விடாமல் ஹன்சிகா வின் மனதை மாற்ற முயற்சிக்கிறார் ரவி . அதில் ஜெயம் கண்டாரா ? என்பதை பெரிசாக யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ளாமல் படம் பார்க்க வரும் இளம் காதல் ஜோடிகளை மனதில் வைத்து ஜாலி ரோந்து வந்திருக்கிறார் லக்ஷ்மன் ...

ஜீவா , ஆர்யா க்களுக்கு எளிதாக செட்டாகும் ரோலில் சீரியஸ் பேஸ்  ஜெயம் ரவி முதலில் கொஞ்சம்  ஏமாற்றம் கொடுத்தாலும் போக போக பழகி விடுகிறார் . சரக்கடித்து விட்டு விடிவி கணேஷை கலாய்க்கும் போதும் , ஹோட்டலில் ஹன்சிகா வை மிரட்டும் போதும் இலசுகளிடம் கைத்தட்டல் வாங்குகிறார் . சில தோல்விகளுக்கு பிறகு கம்ர்சியலாக இந்த படம் ரவிக்கு ஜெயம் கொடுக்கும் . ஹன்சிகா வை பிடித்தவர்களுக்கு படம் ரொம்ப பிடிக்கும். ஹன்சிகா வை பிடிக்காதவர்களுக்கு இனி அவரை பிடிக்கும் . ஜோதிகா போல ஆங்காங்கே ஓவர் ஆக்ட் தெரிந்தாலும் நெகடிவ் சேட் உள்ள கேரக்டரிலும் தன்  இன்னொசன்ட் நடிப்பால் நன்றாக கவர்கிறார் . பணத்துக்காக ஆளை மாற்றும் போதும் ஏனோ அந்த மைதா மாவு மூஞ்சி மேல் கோவம் வரவில்லை. ..


விடிவி கணேஷ் விடிவி கணேஷாகவே வந்து கரகர குரலில் கலகலக்க வைக்கிறார்  . கொஞ்ச நேரம் வந்தாலும் ரெண்டாவது ஹீரோயின் ரோலுக்கு ஆண்ட்ரியா தான் வேணும் என்று அடம்பிடிக்கும் ஆர்யா ஆஸ்ம் . டி.இமானின் இசை படத்துக்கு பெரிய பலம் . டண்டணக்கா வில் டேன்ஸ் ஆட வைப்பவர் தூவானம் மெலடியில் நனைய வைக்கிறார் . முதல் பாதியில் மூன்று பாடல்களை நிரப்பியிருந்தாலும் போரடிக்கவில்லை ...

காசப் பாத்தவுடனே கால வாரும் ஹீரோயின்  , திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று அந்த மேட்டரை டீலில் விடாமல் சீரியசாகும் ஹீரோ கதையை நிறைய படங்களில் பார்த்திருப்போம் . அதே போல படம் பார்க்கும் மூணாவது சீனிலேயே " நான் சொல்லல அடுத்து இப்படி வரும்னு " என்று பக்கத்து சீட் காரரின் அதி மேதாவித்தனங்களையும் அனுபவித்திருப்போம் . ரோமியோ ஜூலியட் அந்த வகையறா படம் தான் என்றாலும் காதல் , காதல் தோல்வி சென்டிமென்ட் , குறிப்பாக ஹீரோ காதல்னா என்று ஆரம்பித்து க்ளைமேக்சில் கிளாஸ் எடுக்கும் கொடுமை என்றெல்லாம் நம்மை மொக்கை போடாமல் சொல்ல வந்ததை நேர்கோட்டில் குறிப்பாக ஒருநாள் டேட்டிங்கில் ஜெயம் ரவி யை ஹன்சிகா வெறுப்பேற்றும் சீன்களில் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்ன விதத்தில் ரோமியோ ஜூலியட் ரெப்ரெஷிங் . ஜெயம் ரவி - ஹன்சிகா கெமிஸ்ட்ரி , ஹிட் பாடல்கள், வித்தியாசமான டைட்டில்  கார்ட் ,  போரடிக்காத அல்லது பொறுமையை சோதிக்காத ஸ்க்ரீன்ப்ளே இவையெல்லாம்  படத்தை காதல் காவியமாக்காவிட்டாலும் கமர்சியல் காவியமாக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 41

7 June 2015

காக்கா முட்டை - KAKKA MUTTAI - குயில் ...


சில வருடங்களுக்கு முன்னாள் நண்பன் ஒருவன் மூலம் காக்கா முட்டை படம் பற்றி கேட்ட மாத்திரத்திலேயே அந்த டைட்டிலுக்காக பிடித்திருந்தது . பிறகு அவ்வப்போது படத்தின் போஸ்டர் பார்க்கும் போதே ஒரு விதமான ஆவலைக் கொடுத்தது . பல வருடங்கள் ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் என்று தெரிந்ததுமே நிச்சயம் பார்க்க வேண்டுமென தோன்றியது . கடைசியில் படத்தை பார்த்த பிறகு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டு இன்னும் என்னடா புடுங்கிட்டு இருக்க என்று என் மனசாட்சியின் கேள்வி எனை தூங்க விடாமல் செய்தது ...

சேரியில் இருக்கும் இரண்டு ஏழை சிறுவர்களின்  ( ரமேஷ் , விக்னேஷ் ) பீட்சா தின்ன வேண்டுமென்கிற கனவும் , அதற்கான போராட்டமுமே காக்கா முட்டை . டிக்கெட் பின்னால் எழுதிவிடக் கூடிய கதை , ஆனால் அதை அந்த இரண்டு சிறுவர்களுடன் பீட்சா வுக்காக நம்மையும் சேர்த்து இரண்டு மணிநேரம் பயணிக்க வைத்த விதத்தில் பிரமிக்க வைக்கிறார் புதுமுக இயக்குனர் மணிகண்டன் ...

சிறுவர்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை . ஏனெனில் ஒரு சீனில் கூட அவர்கள் நடிக்கவில்லை . பீட்சா வுக்காக காசு சேர்த்தாலும் திருடாத , பிச்சை எடுக்காத அண்ணன் பெரிய காகா முட்டை , அப்பாவித்தனமான ரியாக்சன்களால் மனதை அள்ளும்  தம்பி சின்ன காக்கா முட்டை இருவருக்கும் , அவர்களை இந்த விதத்தில் வேலை வாங்கிய இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் . சிறுவர்களை  நமக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைப்பது அவ்வளவு சுலபமல்ல . சிறுவர்கள்  மட்டுமல்ல பசங்களின் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா , பாட்டி , ரயில்வே தொழிலாளி பழரசம் ( ஜோ ) , அதிகம் பேசாத பீட்சா கடை ஓனர் பாபு ஆண்டனி , பேசியே தொல்லை கொடுக்கும் அவர் பால்ய நண்பன் கிருஷ்ணமூர்த்தி , வெள்ளை சட்டை லுங்கியுடன் பேட்டி  கொடுக்கும் அரசியல்வாதி , பாபு ஆண்டனியை ப்ளாக்மெயில் செய்யும் இரண்டு சேரி திருடர்கள் என்று எல்லோருமே இந்த எளிமையான படத்துக்கு வலிமையான தூண்கள் ...


இயக்குனர் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இருந்தது சவுகரியம் . நாம் சட்டென்று கடந்து போகும் சேரியை சற்றும் சலிக்காமல் காட்டியிருக்கிறார் மணிகண்டன் . " கருப்பு கருப்பு " பாடல் மற்றும் பின்னணி இசையில் ஜி.வி நன்றாகவே தெரிகிறார் . இது போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் . தனியாக சீன்கள் வைக்காமல் படம் நெடுக கேரக்டர்களின் சின்ன சின்ன வசனங்கள் மூலம் நம்மை சிரிக்க வைப்பது இயக்குனரின் திறமை ...

இரண்டு சேரி சிறுவர்களின் அறிமுகத்திலிருந்து ஆரம்பிக்கும் படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் பீட்சா பாய்ண்டுக்கு வந்தவுடன் சூடு பிடிக்கிறது . பீட்சா வுக்காக பணம் சம்பாதிக்க சிறுவர்கள் செய்யும் முயற்சிகள் , பணம் கிடைத்தும் பீட்சாவை சாப்பிட முடியாமல் அடையும்  அவமானங்கள் , அதை வைத்து சுயலாபம் அடைய நினைக்கும் மற்றவர்கள் என்று  எல்லாமே எதையோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருக்கும் நம் எல்லோரின் ஆசைகளையுமே தோலுரித்துக் காட்டுகிறது . ஏழை என்றாலே நல்லவன் , பணக்காரன் எல்லோருமே கெட்டவன் என்பது போல நாடகத்தனமான சீன்களை வைக்காமல் இயல்பாக இரண்டு பக்கங்களையும் காட்டியிருப்பது உண்மையான யதார்த்தம் . சுருக்கமாக சொன்னால் பக்கம் பக்கமான வசனங்களால் உணர வைக்க முடியாத கம்யூனிசத்தை படம் பார்க்கும் போது ஒன்றாக வாழும் நம் மனிதர்களுக்குள் ஏனித்தனை வேறுபாடுகள் ? என்ற எண்ணத்தை எழுப்பியதன் மூலம் அறிய வைக்கிறது இந்த காக்கா முட்டைக்குள் இருக்கும் குயில் ...

ஸ்கோர் கார்ட் : 52

( பின்குறிப்பு : கமல் ஒரு பேட்டியில் அன்பே சிவம் படத்தை இப்பொழுது டிவிடி , நெட்டில் பார்த்து விட்டு அருமை என்று பாராட்டுகிறவர்கள் அப்பொழுதே தியேட்டரில் பார்த்திருந்தால் தயாரிப்பாளர் தப்பித்திருப்பார் என்று சொல்லியிருப்பார் . அதே மாதிரியொரு பேட்டி சின்ன பட்ஜெட் படம் என்பதாலும் , இன்றைய காலகட்டத்தில் இணைய தளங்கள் மூலம் நல்ல படங்களுக்கு நிறைய வரவேற்பு கிடைப்பதாலும் தனுஷ் வாயிலிருந்து நிச்சயம் வராது என்று நம்பலாம் )


18 May 2015

புறம்போக்கு - PURAMBOKKU - மேம்போக்கு ...


ரு படம் ஹிட் அடித்தவுடன் அடுத்த படத்துக்கு பறக்காமல் தனக்கு ஏற்ற கதைக்களன் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்கும் சில இயக்குனர்களுள் ஒருவர் எஸ்.பி.ஜனனாதன் . அவர் ஆர்யா , விஜய் சேதுபதி , ஷாம் என மூன்று ஹீரோக்களுடன் கை கோர்த்திருக்கும் படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை . ஆனால் அனைவருக்கும் புறம்போக்கு பிடிக்குமா ? பார்க்கலாம் ...

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி சாரி தீவிர கம்யூனிசவாதி பாலு
( ஆர்யா ) ,  அதை கலாசி ( விஜய் சேதுபதி ) எம லிங்கம் (  நல்ல  பெயர் பொறுத்தம் ) மூலம் நிறைவேற்ற துடிக்கும் காவல் அதிகாரி மெக்காலே
( ஷாம் ) மூவருக்குமிடையேயான போராட்டமே புறம்போக்கு . கேட்டவுடன் கவரும் ஒன்லைனை வைத்துக்கொண்டு அதை எக்ஸிக்யூட் செய்ய முடியாமல் திணறியிருக்கிறார் இயக்குனர் ...

உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது இயக்குனர் சொல்லிக் கொடுத்த கம்யூனிச சித்தாந்தங்களை வசனங்களாய் உதிர்ப்பதை தவிர ஆர்யாவுக்கு பெரிய வேலை எதுவுமில்லை . மீகாமன் னில் சிங்கிள் ஹீரோவாக வந்து சிலாகிக்க வைத்தவர் இதில் கூட்டத்தோடு வந்து ஸ்கோர் செய்ய மறுக்கிறார் . பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் . ஷாம் நேர்மையான காவல் அதிகாரி மெக்காலே வாக பெரிதாக மெனக்கெடாமல் இயல்பான நடிப்பில் கவர்கிறார் . ஆல் தி பெஸ்ட் . இ.தா.ஆ.பா வின் பார்ட் 2 போல குடிகாரன் கேரக்டராக இருந்தாலும் தன் உடல்மொழியால் அதையும் ரசிக்க வைக்கிறார் விஜய் சேதுபதி . தூக்கு போடும் பரம்பரை தொழிலை வெறுக்கும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் தமிழுக்கு புதுசு . பாலுவை இவர் காப்பாற்ற நினைப்பது குயிலி ( கார்த்திகா ) யின் காதலுக்காகவா ? அல்லது கம்யூனிச கருத்துக்களால் கவரப்பட்டா  ? என்பது இயக்குனருக்கே வெளிச்சம் !


பாடல்கள் ஏற்கனவே நேர்கோட்டில் செல்லும் படத்துக்கு  மேற்கொண்டு வரும் தடை . ஜெயிலில் ஷாம் - ஆர்யா இடையேயான வசனங்கள் ஷார்ப் . தன்னுடைய கம்யூனிஸ கருத்துக்களை திணிப்பது போல தோன்றாமல் படத்தோடு ஒன்றி வர வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . ஆனால் பாலுவின் தரப்பு நியாயத்தை சொல்வதற்காக காட்டப்படும் லடாக் - ராஜஸ்தான் சீன்கள் சுத்த சொதப்பல் . தோழர் என்று சொல்லிக்கொண்டு வரும் கார்த்திகா & கோ நாட் இன்ட்ரெஸ்டிங் ...

ரஷ்யா , சீனா போன்ற நாடுகளிலேயே கம்யூனிஸம் காலாவதியாகி விட்ட  வேளையில் கம்யுனிஸவாதியாக ஹீரோவை காட்டும் இயக்குனரின் தைரியத்தை பாராட்டலாம் . ஆனால் அதை வெறும் வசனங்களாகவே நிரப்பியிருப்பது துரதிருஷ்டம்  . அதுவும் ஆர்யாவின் தூக்குக்கு காரணமான சீன்களை நாடகத்தனமாக எடுத்திருப்பது ஏமாற்றம் . ஏழைகளுக்கு கை கொடுக்கும் பங்காளிகளான கம்யூனிஸ்டுகளே தொழிலாளி எமலிங்கத்தை கொல்ல  நினைப்பதும் , காரியத்தை சாதிக்க குயிலி எமலிங்கத்தை ஏமாற்ற நடிப்பதும்  படத்தின் ஓட்டைகள் . இந்த காரணங்களால் ஆர்யாவின் மேல் பரிதாபம் வருவதற்கு பதில் நமக்கு கொட்டாவி தான் வருகிறது ...

தூக்கில் போடும் தொழிலாளியின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அலசி இருப்பதும் , மூவரையும் சமமமான விதத்தில் கையாண்டிருப்பதும் , ஜெயிலில் இருந்து  ஆர்யா தப்பிக்கும் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கியிருப்பதும் மட்டுமே படத்துக்கு ஆறுதல் . மற்றபடி ஆர்யா - விஜய்சேதுபதி கூட்டணியின் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கம்யூனிஸ கொள்கைகளை வைத்து அழுத்தம் இல்லாமல் மேம்போக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் புறம்போக்கு...

ஸ்கோர் கார்ட் : 40   

6 May 2015

உத்தம வில்லன் - UTHAMA VILLAIN - ஒன் மேன் ஷோ ...


ரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் உலகநாயகனின் படம் . கமல் படம் என்பதோடு மட்டுமல்லாமல் சில சிக்கல்களுக்குள் சிக்கி ஒரு நாள் தள்ளிப் போய் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . குணா , மகாநதி , அன்பே சிவம் போன்ற கமலின் சில படங்கள் கமர்சியலாக தோல்வியை தழுவியிருந்தாலும் நம்மிடையே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் . அந்த வரிசையில் கமர்சியலாக தோல்வியை தழுவி ஆனால் உண்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத படம் உத்தம வில்லன் ...

பெரிய சக்சஸ் ஹீரோ மனோரஞ்சன் ( கமல்ஹாசன் ) தனக்கு வந்த நோய் மூலம் சாவு நெருங்குவது தெரிந்து விட தனது கடைசி படம் குருநாதர் ( கே.பி ) இயக்கத்தில் வரவேண்டி அவருடன் கைகோர்க்கிறார் .வரப்போகும்  தங்களது  கடைசி படம் எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்து  அவர்கள் எடுக்கும் படம் உத்தம வில்லன் . அவர்கள் எண்ணத்தில் தர்ப்பையை போட்டு கொளுத்த என்று சொல்லுமளவுக்கு நம் பொறுமையை சோதிக்கும் இந்திரலோகத்தில் அழகப்பன் தான் அந்த  உத்தம வில்லன் . வாழ்வின் கடைசி தருவாயில் இருக்கும் ஹீரோ தனது  குருநாதர் , மகன், மனைவி , பழைய காதலி , அவள் மூலம் பிறந்த மகள் , தற்போதைய கள்ளக் காதலி ( அப்பா எம்பூட்டு பேரு !) என்று எல்லோரிடமும் நடத்தும் உணர்ச்சிப் போராட்டங்களை நீ.....ளமாக இருந்தாலும்  உத்தமமாக எடுக்கப்பட்ட  படத்தை உண்மையில் கெடுக்கும் வில்லன் படத்துக்குள் படமாக வரும் இந்த உத்தம வில்லன் ...


எந்த கேரக்டராக இருந்தாலும் பின்னியெடுக்கும் கமலுக்கு ஹீரோ கேரக்டரையே கொடுத்தால் கேட்கவா வேண்டும் , பின்னி பெடலெடுத்திருக்கிறார் அதே சமயம் உணர்சிக் கொந்தளிப்பான பல காட்சிகளில் அடக்கி வாசித்து மற்றவர்களையும் நடிக்க விட்டிருப்பது அவரின் தனிச்சிறப்பு . குறிப்பாக மகனுடன் அவர் உரையாடும  காட்சி மைல்ஸ்டோன் பழைய காதலி இறந்த செய்தி கேட்டவுடன் அவர் காட்டும் ரியாக்ஷன் நெகிழ்வு. உத்தமனாக வரும் காட்சிகள் மொக்கையாக இருந்தாலும் மொத்தத்தில் ஒரு தேசிய விருதை தட்டும் அளவிற்கு இருக்கிறது கமல் என்னும் உன்னத நாயகனின் நடிப்பு ...

பொதுவாக எல்லோரும் குடும்ப டாக்டர் வைத்திருப்பார்கள் . ஆனால் இதில் டாக்டர் ஆண்ட்ரியாவை குடும்பத்துக்கு தெரியாமல் வைத்திருக்கிறார் கமல் . சாகப்போகும் போது கூட கமல் - ஆன்ட்ரியா சில்மிஷங்களுக்கு குறைவே இல்லை . ஹீரோயினாக வரும் பூஜா சில இடங்களில் ஓவர் ஆக்ட் செய்தாலும்  ஆண்ட்ரியாவை விட  பல இடங்களில் அழகாகவே இருக்கிறார் .
( எந்த எடம்னுல்லாம் குசும்பா கேக்கப்படாது ! )   கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதார்த்தமான நடிப்பில் அழுத்தமாக கவர்கிறார் . கமல் வியாதியை பற்றி தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்திலும் , பழைய காதலியின் கடிதத்தை படிக்கும் போது குற்ற உணர்ச்சியிலும் அவரின் நடிப்பை பார்க்கும் போது " இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பாஸ்கரா ?! " ...

ஆஸ்பத்திரியில் பேசும் ஒரு சீனில் தான் நடிப்பில் யாருக்கும் இளைத்தவள் சாரி சளைத்தவள் இல்லை என நிரூபிக்கிறார் ஊர்வசி . கமலின் மகனாக நடித்திருப்பவர் , மகளாக வரும் பார்வதி , ஜெயராம் ,கே.விஸ்வநாத் என்று எல்லோருமே கிடைத்த கேப்பில் நடிப்பு கெடா வெட்டியிருக்கிறார்கள் . நாசர் & கோ காமெடி என்ற பேரில் செய்யும் கடிகள் மட்டுமே திருஷ்டிப்பொட்டு . ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலம் . டைட்டில் கார்டில் வசனகர்த்தா பெயர் வரவில்லை . ஆனால் " ஆத்மாவுக்கு காது இல்லை " , ஆஸ்பிட்டலில் டாக்டர் ஆண்ட்ரியா ஷர்டை கழட்ட சொல்லும் போது " அதுக்கெல்லாம் டைம் இருக்குமா " போன்ற குறும்பு வசனங்கள் கமல் அக்மார்க் ...


லீட் கேரக்டருக்கு கேன்சர் , பிரைன் டியூமர் என்று நிறைய படங்கள் கோடம்பாக்கத்தில் வந்திருந்தாலும் அதை நுணுக்கமாக கையாண்ட விதத்தில் கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர் ! ரமேஷ் அர்விந்த் . எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல்  மாஸ் ஹீரோவின் இருட்டு பக்கத்தை காட்டுவதோடு அவர் மகன் செய்யும் லீலைகளையும் போகிற போக்கில் பொசுக்கிப் போடுவது , நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல் ஹீரோவின் பிரச்சனைக்குள் சட்டென நுழைவது , பழைய காதலியை காட்டாமலேயே கடிதம் வாயிலாக அந்த கேரக்டரை கண்முன் உலவ செய்தது , உறவுகளுக்கு இடையேயான உணர்ச்சிகளை சரியாக கையாண்டது , சாகப்போகும்  ஹீரோ கடைசிப் படத்தில் சாகாவரம் பெற்ற கலைஞன் வேடத்தில் நடிப்பது , கமலின் உண்மை முகம் அவர் மமகள் பார்வதிக்கு தன் அம்மா எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் வகையில் கமல் தனது மேக் அப்பை கலைப்பது என்று படத்தில் நிறைய நுணுக்கமான , அழுத்தமான சீன்கள் ...

இவையெல்லாமே சேர்த்து படத்தை உயரத்துக்கு கொண்டு போக மற்றொரு பக்கம் பொறுமையை ரொம்பவே சோதிக்கும்படத்தின் நீளம் , ஓவர்டோஸ் சோகக் காட்சிகள் , காமெடி என்ற நினைப்பில் ட்ராஜெடி செய்யும் உத்தமன் படக்காட்சிகள் ( அதிலும் ஷூட்டை பார்த்து விட்டு அவர்களே மாறி மாறி சிரித்துக் கொள்கிறார்கள் , நமக்கு தான் ஒரு எழவும் வர மாட்டேங்குது )  , வெகுஜனங்களை கவராத தொம்மையான ஸ்க்ரீன்ப்ளே இப்படி எல்லாமே உத்தம வில்லனை உருட்டிப் போடுகின்றன . கமலின் நடிப்பு ஒன்றுக்காக மட்டும் எல்லா சோதனைகளையும் தாண்டி ரசிகர்கள் படம் பார்ப்பார்கள் என நினைத்தது காலக் கொடுமை . இப்படி கழுவி கழுவி ஊற்ற படத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் கமல் எனும் நடிகனின் ஒன் மேன் ஷோ படம் விட்டு வெளியே வரும் போது ஒரு லேசான வலியை கொடுக்கத்தான் செய்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 43

( பின் குறிப்பு : கமல் இனிமேல் தன்னை முழு நடிகனாக மட்டும் ஒப்படைத்து நல்ல  இயக்குனர்கள் படங்களில் நடிப்பது உத்தமம் )


25 April 2015

காஞ்சனா 2 - KAANJANA 2 - கல்லா கட்டும் ...


ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் முனி சீரிஸில் மூன்றாவதாக வந்திருக்கும் படம் காஞ்சனா 2. முந்தைய இரண்டு படங்களின் வெற்றி இப்படத்திற்கும் நல்ல ஓபனிங் கொடுத்திருக்கிறது . போதாக்குறைக்கு சன் பிக்சர்ஸ் படத்தை வாங்கியிருப்பது படத்திற்கு வியாபார ரீதியாக கூடுதல் பலம் . ஆனாலும் மூன்று படங்களில் புதுசாக வந்திருக்கும் இந்தப்படம் திரைக்கதையில் அதரபழசு ...

பயங்கர பயந்தாங்கொல்லியான கேமரா மேன் ராகவா வை பேய் சம்பந்தமான தொடருக்கு ஒளிப்பதிவ பாழடைந்த பங்களாவுக்கு கூப்புடுகிறார்கள் . லவ் பண்ணும் பொண்ணு தான் ( டாப்சீ ) டைரக்டர் என்பதால் எங்கும் ஒளிய முடியாமல் ஒத்துக்கொள்கிறார் ராகவா . இடைவேளை வரை ஸ்ரீமன் & கோ உதவியுடன் விறு விறு  வென செல்லும் படம் டாப்சீக்கு பேய்  பிடித்தவுடன் கொஞ்சம் ட்ராக் மாறி  எப்படா பேய் விடும் என்று புலம்பும் அளவிற்கு மொக்கையாகவே முடிகிறது ...


வழக்கமான பயந்தாஙகொள்ளி கதாபாத்திரத்தில் மட்டும் வரும் ராகவா லாரன்ஸ் இந்த முறை பேயாகவும் வந்து மிரட்டுகிறார் . டான்ஸ் , சண்டை என்று பட்டையை கிளப்பினாலும் இவரே ப்ளாஸ்பேக்கிலும் வருவது ஓவர் டோஸ் . முந்தைய படங்களில் வந்த ராஜ்கிரண் , சரத்குமார் போல யாராவது ஒருவரை இந்த ரோலில் போட்டிருந்தால் இன்னும் வெயிட்டாக இருந்திருக்கும் ...


டாப்சீ பிரிட்ஜில் இருந்து எடுத்த வெண்ணை போல வழவழவென்று இருக்கிறார் . இவர் பேய் வேஷத்தில் வரும் போது " என்னம்மா இப்புடி பண்றீங்கலேமா " என்று தான் சொல்லத் தோன்றுகிறது . மாற்றுத்திரனாளியாக வரும் நித்யா மேனனுக்கு இந்த படம் நல்ல வாய்ப்பு . கல்யாணப்பத்திரிக்கை கொடுக்கும் முதல் சீனிலேயே கலக்குகிறார் .முதல் பாதி யை ஸ்ரீமனும் , இரண்டாம் பாதியை கோவை சரளா வும் சமமாக பிரித்து சிரிக்க வைக்கிறார்கள் . மயில்சாமி - ராகவா காமெடி டாகூடமாக் இருந்தாலும் ரசிக்கலாம் ...

காஞ்சனா 1 போல வெறும் காமெடி பீசாக மட்டும் இல்லாமல் பயப்படவும் வைப்பது பலம் . முதல் சீனில் ஆரம்பித்து இடைவேளை வரை வேகமாக போகிறது திரைக்கதை . இரண்டாம் பாதியில் வீட்டுக்குள் போனவுடன் படத்தின் வேகமும் அடைபடுகிறது . படத்தின் நீளம் , வீக்கான ப்ளாஷ்பேக் , பொறுமையை சோதிக்கும் அதரபழ்சு கிளைமேக்ஸ் இப்படி நிறைய குறைகள் இருந்தாலும் பி,சி சென்டர்களை எய்ம் செய்து வந்திருக்கும் படம் அங்கு கல்லா கட்டும் ...

ஸ்கோர் கார்ட் : 41 


18 February 2015

அனேகன் - ANEGAN - வேகன் ...


வி.ஐ.பி யின் வெற்றிக்கு பிறகு  அதே பாணி கமர்ஸியலோடு சேர்த்து தனுஷின் நடிப்புக்கும் தீனி போட்டிருக்கும் படம் அனேகன் . பஸ்ஸிலோ , ட்ரைனிலோ போகும் போது அநேகமாக அனைவரும் படித்திருக்கும் டைம் பாஸ் பாக்கெட் நாவல் டைப் கதை தான் அனேகன் . அதையே போரடிக்காமல் கொடுத்திருக்கிறது சுபா - கே.வி.ஆனந்த் கூட்டணி ...

ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் மது விற்கு ( அமைரா ) பல முகங்கள் , சம்பவங்கள்  முன் ஜென்ம நினைவாக வருகின்றன . முன் ஜென்ம காதலன் போலிருக்கும் அஸ்வினை ( தனுஷ் ) யும் காதலிக்கிறார் அமைரா. போன பிறவியில் தனக்கும் தன் காதலன் காளிக்கும் இழைக்கப்பட்ட அநீதியை கண்டுபிடிக்கும் அமைரா அதற்கு காரணமான வில்லனிடமிருந்து தப்பித்தாரா என்பதை லாஜிக் மீறல்கள் இருந்தாலும் க்ரிப்பான ஸ்க்ரீன்ப்ளே எனும் மேஜிக்கால் மறக்கடிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர் ...


தனுஸிற்கு வழக்கமான ஈஸி கோயிங்க் கதாபாத்திரம் தான் என்றாலும் நடிப்புக்கு தீனி போடுகிறான் காளி . 3 விதமான கெட்  அப்புகளிலும் வித்தியாசம் காட்டும் உடல்மொழி அவரின் சிறப்பு . சூனா ரூனா வுக்கு ஃபீலாகும் கூட்டம்  . டங்கா மாரிக்கு மெரசலாகிறது  . கார்த்திக்கை அஷ்வின் மிமிக் செய்யும் போது அப்ளாஸ் அள்ளுகிறது . கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது பழமொழி தனுஷிற்கு ஏகப் பொருத்தம் ...

மாஸ் ஹீரோ படத்தில் ஹீரோயினை  சுற்றி நகரும் கதை கிடைத்ததுக்கே அம்மணி அமைரா வுக்கு சுற்றிப்  போட வேண்டும் . 3 வித கெட்டப்புகளில் கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சை நனைக்கிறார் சமுத்ரா . ஆல் த பெஸ்ட் அமைரா . பிரபு போல சேதாரத்தை அடித்தெல்லாம் நொறுக்காமல் செலெக்டிவான ரோலில் பின்னி எடுத்திருக்கிறார் கார்த்திக் . இவரது கேரக்டரை முதலில் வெறுமனே உலவ விட்டு பின் விஸ்வரூபம் எடுக்க விட்டிருப்பது சாமர்த்தியம் . கார்த்திக் தமிழில்  பேசினாலே புரிய நேரமாகும் , அவரை ஆங்கிலத்தில் ஓவராக அளவளாக விட்டிருப்பது  தான் கொஞ்சம் டப்பிங் பட ஃபீலை கொடுக்கிறது . ஆஷிஷ் வித்யார்த்தி க்கு கமிஷனராக அக்மார்க் வேஷம் . இவருக்கெல்லாம் ரிட்டையர்மெண்டே கெடையாதோ ?! . இவரது கேரக்டரில் உள்ள குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...



டங்கா மாரி தியேட்டரையே அதிர வைத்தாலும் ஹாரீஸ் - ஆனந்த் கூட்டணியின் முந்தைய படங்களின் மேஜிக் இதில் மிஸ்ஸிங் . விஜய் நடித்திருக்க வேண்டிய படம் அவரே தனுஷை ரெக்கமண்ட் செய்ததுக்கு முதலில் நன்றி . ஹீரோயினை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்காது . க்ரைம் நாவல் டைப்பில் லாஜிக்கை  யோசிக்க விடாமல் நம்மை கதைக்குள் ஒன்ற வைக்கும் திரைக்கதையே படத்தின் பலம் . வில்லன் தரப்பு நியாத்துக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருப்பது ஆரோக்கியம் ...

முதல் இருபது நிமிடங்கள் வரும் பர்மா எபிசோட் படத்தின்  மெயின் கதைக்கு தேவை தானா ? ,கார்த்திக் கம்பெனியில் எல்லோரும் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது மதுவுக்கு மட்டும் ஏன் பூர்வ ஜென்ம நினைவு வருகிறது ?தனுஷ்   மேல் மட்டும் ஆர்வம் காட்டும் அமைரா கூடவே உலா வரும் மற்ற பூர்வ ஜென்ம கேரக்டர்களை ஏன் கண்டு கொள்ளவே இல்லை ? அவ்வளவு பெரிய கம்பெனியில் திடீரென லிஃப்ட் விழுவது ஏன் ? ஆஷிஸ் வித்யார்த்தி ஏன் ஆர் வைத்த மோதிர விரலை மறைக்கிறார் ? 25 வருடங்கள் எதுவுமே ஆகாத போது ஏன் கார்த்திக் திடீரென பதறுகிறார் ? அவ்வளவு பெரிய ஆள் இந்த இரண்டு பேரின் கதையை முடிப்பதற்கு இவ்வளவு நாள் வெயிட் செய்ய வேண்டுமா ? இப்படி படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது தோன்றும்  நிறைய ஏன்களை படம் பார்க்கும் போது யோசிக்க விடாமல் வேகமாக திரைக்கதை அமைத்த விதத்தில் ஜெயிதிருக்கிறான் இந்த அனேகன் ...

ஸ்கோர் கார்ட் : 43 

6 February 2015

என்னை அறிந்தால் - YENNAI ARINTHAAL - பழைய கள் புது மொந்தை ...


நாம் எதிர்பார்க்கும் காம்பினேஷன்களில் ஒன்று அஜித்குமார்  - கவுதம் மேனன் கூட்டணி . ஏற்கனவே காக்க காக்க வில் தவறிப் போனது என்னை அறிந்தால் மூலம் நடந்திருக்கிறது . காக்க காக்க , வேட்டையாடு விளையாடு பார்ட் 2 போல படம் இருந்தாலும் படம் நெடுக மாஸ் அஜித்தை கிளாசாக காட்டி குறைகளை சமன் செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ...

த்ரிஷா , ஜோதிகா என்று தனது படங்களில் ஹீரோயின்களை அழகழகாக காட்டும் கவுதம் அஜித் மேல் காதல் வயப்பட்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு விதவிதமான கெட்டப்களில் இந்த படத்தில் தல அவதாரம் எடுக்க வைத்திருக்கிறார் . அனுஷ்கா ஒரு சீனில் சொல்வது போல அஜித் அழகுன்னா அவ்வளவு அழகு . ஆனால் அதற்காக விமானத்தில் முதல் தடவை பார்த்தவுடனேயே அனுஷ்கா ஜொள்ளு விட்டுக் கொண்டு லவ்வு வசனம் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர் . அனுஷ்கா அந்த அளவு மொக்க பிகரா என்ன ? . அஜித்தை நடக்க மட்டும் விடாமல் நடிக்கவும் விட்டிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் . சூர்யா , கமல் இருவருக்கும் மேலே காப் கதாபாத்திரத்துக்கு அஜித் ஒரு ஸ்டைலிஷ் லுக் கொடுத்திருப்பது உண்மை . குறிப்பாக நிறைய இடங்களில் சோர்வாக போகும் திரைக்கதையை தூக்கிப் பிடிப்பது அஜித்தின் இமேஜ் மட்டுமே ...

த்ரிஷா , அனுஷ்கா இருவரில் சீன்கள் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருப்பது த்ரிஷா மட்டுமே . கேரக்டர் படி வே.வி ஜோதிகா வின் ஜெராக்ஸ் தான் த்ரிஷா பட் கவர்கிறார் . அஜித்தை பார்த்து ஜொள் விடுவதை தவிர அனுஷ்காவிற்கு பெரிய வேலை எதுவுமில்லை . ஹீரோவாக் இருக்கும் போதே வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட அருண் விஜய் க்கு ஒரு ஹான்ட்ஸ் ஆப் . வழக்கமான கவுதம் ப்ராண்ட் வில்லன் போல கத்தினாலும் சண்டைக்காட்சிகளில் ஹீரோவை விட ஒரு படி மேலாகவே ஸ்கோர் செய்கிறார் . படத்தின் மெயின் ப்ளாட்டுக்கு தொடர்பில்லாதது போல பட்டாலும் ஆஷிஷ் வித்யார்த்தி - அஜித் சம்பந்தப்பட்ட சீன்கள் ரசிக்க வைக்கின்றன . விவேக் இட்ஸ் ஓகே ரகம் ...


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , தாமரையின் வரிகளில் " மழை வர போகுது " ,
" உனக்கென்ன " போன்ற பாடல்கள் இனிமை . ஆனாலும்  ஆக்ஸன படத்துக்கு இவ்வளவு பாடல்கள் நடுநடுவே வந்து சோர்வடைய வைக்கின்றன . டான் மாசர்துரின் ஒளிப்பதிவு காப் படத்துக்கு க்ரேட் கலரிங் கொடுத்திருக்கிறது ...

கா.கா , வே.வி பாணியில் ஒரு போலீஸ்காரன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே என்னை அறிந்தால் . ஹீரோவுக்கு ஈக்குவலான வில்லன் கேரக்டர் , அதற்கு அருண் விஜயை தேர்வு செய்தது , அண்டர்க்ரவுண்டில் நடக்கும் ஆர்கன் திருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது , ஸ்டைலிஷ் மேக்கிங் , கடைசி 45 நிமிடங்கள் நம்மை கட்டிப்போடும் திரைக்கதை இவையெல்லாம் என்னை அறிந்தால் அறியத் தூண்டும் விஷயங்கள் ...


ஹாலிவுட்டில் வேறு வேறு ஹீரோக்களை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் எடுப்பது போல இங்கே கவுதம் எடுப்பதில் தப்பில்லை . ஆனால் பழைய பாட்டுக்கு நடுநடுவே மானே தேனே போடுவது போல முதல் இரண்டு படங்களின் தொடர்ச்சி போல இதையும் அமைத்திருப்பது பின்னடைவு . குறிப்பாக வே.வி ஜோதிகா போல த்ரிஷா , கா,கா ஜோதிகா போல அனுஷ்கா , சில சீன்களில் கமலை நியாபகப்படுத்தும் அஜித் ( கேரக்டர் ) இவற்றை தவிர்த்திருக்கலாம் . அதிலும் " தே ..., ஒ ... " போன்ற வசனங்களை இந்த படத்தில் வில்லனை விட ஹீரோ  அதிகமாக பேசுவது சறுக்கல் . 4 வருஷம் ஊர் ஊராக சுற்றி விட்டு  திடீர்னு போலீஸ் ஷூ போடுக்குட்டு உடனே அஜித் வேலைக்கு போவதெல்லாம் அதாரு உதாரு ...

முதல் பாதி படு ஸ்லோவாக  போவது படத்துக்கு பெரிய அடி . நம்மளும் அஜீத்துக்காக எவ்வளவு அடிய தான் பொறுக்கறது . பேசாம டி வியில வேட்டையாடு விளையாடு , காக்க காக்க போடும் போது பாதுருக்கலாமோ என்று நினைக்க வைக்குமளவுக்கு எனனே கவுதம் சாரே ?! . புது மொந்தையில் பழைய கள்ளாக இருந்தாலும் மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் பட்டி தட்டி ட்ரிம் செய்திருந்தால் நிச்சயம் இன்னும் கவர்ந்திருக்கும் இந்த என்னை அறிந்தால் ...

ஸ்கோர் கார்ட் : 42 



27 January 2015

தொட்டால் தொடரும் - THOTTAL THODARUM - மைல்ட் டச் ...


டத்தை பார்த்து இரண்டு நாட்களாகி விட்டது . இருந்தாலும்  பிரபல பதிவர் என்பதையும் தாண்டி 2013 பதிவர் சந்திப்பின் பயனாக தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரிந்தவரான கேபிள் சங்கரின் படத்தை விமர்சிக்கலாமா ? வேண்டாமா என்பதில் சின்ன தயக்கம் . கடைசியில் தனது பட்டவர்த்தமான விமர்சனங்களின் மூலம் பல இயக்குனர்களின் படங்களை கிழித்துக் காயப் போட்டவரின் முதல் படத்தை விமர்சிக்காமால் விட்டு விட்டால் அது காலச்சொல் ஆகிவிடாதா ?! . இனி ...

ஒரு அமைச்சர் ( பிரமிட் நடராஜன் ) சாலை விபத்தில் இறப்பதிலிருந்து தொடங்குகிறது படம் . அது கொலையா ? விபத்தா ? என்று போலீஸ் விசாரணை செய்யும் த்ரில்லர்  ட்ராக் ஒரு புறம் . ஐ.டி கம்பெனி எச்.ஆர் சிவா
( தமன்குமார் ) , கால் சென்டர் சேல்ஸ் கேர்ள் மது ( அருந்ததி ) இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே செல்போனில் லவ்விக்கொள்ளும் ரொமாண்டிக் ட்ராக் மறுபுறம் என இடைவேளை வரை செல்லும் படம் கொலைகளை விபத்து போல திட்டமிட்டு செய்யும் கொலைகார கும்பலிடம் வழிய சென்று மது மாட்டிக்கொண்டவுடன் நேர்கோட்டில் பயணிக்கிறது ...

ஐ,டி யில் வேலை செய்பவராக கனகச்சித பொருத்தம் தமன் . இவருக்கு சொந்த குரலா ? டப்பிங்கா என்று தெரியவில்லை . ஆனால் வாய்ஸ் கம்பீரம் . மற்றபடி பெரிதாக மெனக்கெடாமல் அளவாக நடித்திருக்கிறார் தமன்குமார் . இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இந்த படம் அருந்ததிக்கு நல்ல ப்ரேக் . இவரை சுற்றியே நடக்கும் கதையில் முடிந்த வரை ஸ்கோர் செய்கிறார் . முகம் கொஞ்சம் முத்தலாக இருப்பதாலோ என்னமோ சோகக் காட்சிகள் கை கொடுக்கும் அளவிற்கு இவருக்கு காதல் காட்சிகள் கை கொடுக்கவில்லை . இவருடைய கேரக்டர் ஸ்கெட்சில் இருக்கும் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...


" அடுத்தடுத்து பஞ்ச் சொல்ல  நான் என்ன சந்தானமா ? " என்று கேட்டாலும்
" பொண்ணுங்க கார் மாதிரி , இருக்குறவனுக்கு செலவு , இல்லாதவனுக்கு கனவு " , " கடலை போடுறது கருவாடு மாதிரி , ஊரெல்லாம் நாறினாலும் போடுறவனுக்கு மட்டும் மணக்கும் " என்று படம் நெடுக பஞ்ச்களை அள்ளித் தெரிக்கிறார் பாலாஜி . முதலில் ரசிக்கும் படியாக இருந்தாலும் முதல் பாதி முழுவதையும் இவர் தோள்களில் சுமத்தியிருப்பது ஓவர் டோஸ் . கேபிளுடன் சேர்ந்து கார்க்கி எழுதியிருக்கும் வசனங்கள் க்யூட்டாக இருந்தாலும் சந்தானத்திடம் இருக்கும் டைமிங் பாலாஜிக்கு மிஸ் ஆவதால் நல்ல வசனங்கள் கூட ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவது துரதிருஷ்டம் . " கேட்குறது பெர்சனல் லோன் , அதுக்கு ஏன் அபிசியலா பேசணும் " என்று பாலாஜி போனில் கலாய்ப்பதை உதாரணமாக சொல்லலாம் ...

பி.சி சிவனின் இசையில் " பாஸு  பாஸு " , " பெண்ணே பெண்ணே " பாடல்கள் ரம்யம் . சேசிங் சீன்களில் மட்டும் பின்னணி இசையை கவனிக்க வைக்கிறார் . ஈ.சி.ஆர் ரோடுகளில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்கின் டாப் ஆங்கிள் ஷாட் கவர்கிறது . எடிட்டிங்கில் சாய் அருண் தூங்கி விட்டாரா இல்லை இயக்குனர் தூங்கி விட்டாரா என்று தெரியவில்லை ...

தன் முதல் படத்திற்கு நாவல் போல இன்ட்ரெஷ்டிங்கான இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு கை குலுக்கலாம் . அதே போல ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டாக கொடுத்தமைக்கும் சபாஷ் . பேஷ் புக் , ட்விட்டர் காலத்தில் பார்க்காமலேயே போனில் காதல் செய்யும் காட்சிகளை முடிந்தவரை நம்பும்படியாகவே எடுத்திருக்கிறார் கேபிள் . காதல் ப்ளாட் பழசாக இருந்தாலும் காட்சிகளை ப்ரெஸ்ஸாக வைத்தமைக்கு பாராட்டுக்கள் ...


பாலாஜியின் ஓவர் டோஸ் வசனங்கள் , ஹீரோயினின் சித்தி எபிசோட் , தம்பி ஆக்ஸிடெண்டுக்கு பணம் தேவைப்படுவது என்று நிறைய பழைய நெடி அடித்தாலும் இன்டர்வெல் ப்ளாக்கில் சரியாக ட்விஸ்ட் வைக்கும் கேபிள் அதன் பிறகு அதை தக்க வைக்காமல் தடுமாறியிருக்கிறார் . அதிலும் வில்லனை கண்டுபிடிக்க போகும் இடத்தில் கட்டிங்கை பார்த்தவுடன் கை நடுங்கும் குடிமகனைப் போல ரூமை போட்டவுடன் ஜல்சா வுக்கு ரெடியாகும் ஹீரோயின் எல்லாம் " என்னம்மா இப்படீ பண்ணுறீங்கலேம்மா " ...

கொலையை விபத்து போல செய்யும் வின்சென்ட் ஹீரோயினை நேரடியாக துரத்துவது சொதப்பல் . அதிலும் க்ளைமேக்ஸில் காரை துரத்திக் கொண்டு அவர் பைக்கில் போவதெல்லாம் ஹை வே காமெடி . படத்தை முடித்திருப்பதிலும் அவசர கதி தெரிகிறது . இந்த படத்திற்கு ப்ளஸ் மைனஸ் இரண்டுமே கேபிள் தான் . அதிகம் பரிச்சியமில்லாதவர்கள் நடித்திருக்கும் படத்திற்கு பிரபல ப்ளாகரான கேபிளும் , அவருடைய கதையும் ப்ளஸ் . அதே  சமயம் அவருக்காக எதிர்பார்ப்புடன் வருபவர்களை ஏமாற்றும் வகையில் ஆவெரேஜாக படம் இருப்பது மைனஸ் . எந்த படமாக இருந்தாலும் அதன் நிறை குறையை நேர்த்தியாக அலசி ஆராய்ந்து  அழுத்தமான எழுத்துக்களால் கவரும் கேபிள் சங்கர் தனது முதல் படமான தொட்டால் தொடரும் மூலம் நம்மை மைல்டாகவே டச் செய்கிறார் . இருப்பினும் முதல் படத்தையே குடும்பத்துடன் பார்க்கும் படியான டீசண்ட் டச்சுடன் கொடுத்ததால் அவருடைய பணி தொடர வாழ்த்துக்கள் ...

ஸ்கோர் கார்ட் : 40 


15 January 2015

ஐ - AI - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...


துவரை தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் யாகத் தான் இருக்கும் . யூ டியூபில் டீசர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை கண்டு களித்திருப்பது அதற்கு ஒரு சான்று . பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் , பிரமாத நடிகர் விக்ரம் இருவரும் அந்நியன் வெற்றிக்கு பிறகு பத்து ஆண்டுகள் கழித்து மிக பிரம்மாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் சேர்ந்து கொடுத்திருக்கும் ஐ ரிலீசுக்கு முன்னரே பலரின் ஐ பாலை உருட்டியதென்னமோ உண்மை . ஆனால் இப்படி இத்தன பில்ட் அப்புடன் வந்திருக்கும் படம் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டியதா என்ற கேள்விக்கு நியாயமான பதில் சாரி ...

மிஸ்டர் மெட்ராஸ் ஏரிக்கரை லிங்கேசன் ( விக்ரம் ) பிரபல மாடலிங் தியா
( எமி )  மேல் பைத்தியமாக இருக்கிறார் . பைத்தியம் என்றால் அவர் ஆடில் நடித்த ப்ரா , பேண்டீஸ் வாங்குமளவுக்கு பைத்தியம் . ஒரு கட்டத்தில் தியாவுடன் ஜோடி சேர்ந்து மாடலிங் செய்யும் சந்தர்ப்பம் லிங்கேசனுக்கு வர அவர் பிரபல மாடல் லீ யாகி விடுகிறார் . ஆனால் அதுவே அவர் வாழ்க்கைக்கு வினையாகி விடுகிறது . அப்படி என்ன ஆனது  என்பதே 3.10 மணி நேர ஐ படம் ...

விக்ரம் நடிப்பில் மட்டுமல்ல மார்க்கெட்டிலும் சிவாஜி , கமல் வரிசையில் வந்திருக்க வேண்டியவர் . ஆனால் துரதிருஷ்டவசமாக  அவர் வழுக்கி விட அஜித் , விஜய் போன்ற அவரை விட இளம் நடிகர்கள் அந்த இடத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு விட்டார்கள் . 48 வயதிலும் இந்த படத்துக்காக விக்ரம் எடுத்துக் கொண்ட சிரத்தையை இந்திய சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அடித்து சொல்லலாம் . 86 கிலோவிற்கு உடலை ஏற்றி 56 கிலோவிற்கு குறைப்பதெல்லாம் நிஜத்திலும் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் . சென்னை பாஸை பேசும் பாடி பில்டர் லிங்கேசனாக , பிரபல மாடல் லீயாக , கூன் விழுந்த குரூபியாக என எல்லாமுமாக படத்தில் வியாபித்திருக்கும் விக்ரமின் நடிப்புக்கு ஒரு மாஸ்டர் பீஸ் . ஆனால் இந்த யானையின் நடிப்பு பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் கதை சோளப்பொரியாகிப் போனது சொதப்பல் ...


இண்டர்நேஷனல் மாடலாக எமி எக்கச்சக்க பொருத்தம் . ஆனால் இவரிடம் உள்ள சதையளவுக்கு கூட படத்தில் கதையில்லையே என்பது தான் வருத்தம்.\
படம் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் இருந்தாலும் இவர் உடையில் மட்டும் தயாரிப்பாளர் காட்டியதென்னமோ சுணக்கம் . ( என்ன எழுத்து டி.ஆர் மாதிரி ஆயிருச்சு ! ) . லிங்கேசனிடம் காதலிப்பதாக பொய் சொல்லி விட்டு குற்ற உணர்ச்சியில் துடிக்கும் இடங்களில் எமி பொண்ணு நல்லாவே நட்சுக்குது !. இருவரின் பிஸிக் மட்டுமல்ல கெமிஸ்ட்ரியும் நல்லாவே இருக்கு ...

சந்தானம்  வழக்கம் போல சகட்டுமேனிக்கு எல்லோரையும் கலாய்த்து கிச்சுகிச்சு மூட்டுகிறார் .  கூட்டமாக வரும் வில்லன்களில் ராம்குமார் , திருநங்கையாக நடித்திருப்பவர் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் .
" மெரசலாயிட்டேன் " , " என்னோடு நீ " பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏ க்ளாஸ் ரஹ்மான் . பி.சி யின் ஒளிப்பதிவு உலகத்தரம் . அனல் அரசு வின் சண்டைக்காட்சிகள் குறிப்பாக ஜிம்முக்குள் நடக்கும் சண்டை நம்மை நகரவிடாமல் ஜாம் செய்கிறது . ஒரு பாடலுக்கும் யாரையும் தம்மடிக்க போக விடாமல் ஷங்கரின் க்ரியேடிவ் பிரம்மாண்டம் கட்டிப் போடுகிறது . குறிப்பாக " மெர்சல் " பாடலில் எமி செல்போன் , பைக் என்று ஒவ்வொன்றாக உருமாறுவதும் , " ஐலா " பாடல் முழுவதும் வரும் சின்ன சின்ன ஆட் கான்செப்டுகளும் ஷங்கர் டச் ...

ஆஸ் யூசுவல் லொக்கேஷன் , க்ராபிக்ஸ் இரண்டிலும் பின்னியெடுக்கிறார் இயக்குனர் . முதல் சீனிலேயே எமியை கடத்தி கதைக்குள் (!) போய் விடுவது சாமர்த்தியம் . கரென்ட் , ப்ளாஷ்பேக் என நகரும் ஐ படம் சைனாவுக்குள் நுழையும் வரை இன்ட்ரெஸ்டிங்காகவே செல்கிறது . திருநங்கையை இந்த அளவுக்கு ஒட்டியிருப்பது அய்யே ! . ஹீரோ எதற்கு இப்படி ஆனான் என்று முழுசாக தெரியவரும் போது  தான் ஐ ஹைலி டிஸப்பாய்ன்டிங்  ! . இந்தியனில் கமல் , அந்நியனில் விக்ரம் இருவரின் நடிப்பையும் தாண்டி ஷங்கரின்  கதை , அதை சொல்லும் விதம் இரண்டும் நம்மை வசீகரிக்கும் . ஆனால் இந்த படத்தில் அந்த ஷங்கர் மேஜிக் மிஸ்ஸிங் ...


ஷங்கர் வழக்கமான சமூக அக்கறை பாணி படங்களை விட்டுவிட்டு ரொமாண்டிக் த்ரில்லர் வகையறாவுக்கு வந்ததை பாராட்டலாம் . ஆனால் கொஞ்சம் வீக்கான கதைக்கு இன்னும் வீக்கான திரைக்கதை அவர் பழைய பாணிக்கு திரும்புவதே தேவலை என்று சொல்ல வைக்கிறது . டூ பீஸ் மாடல் எமி , கோ மாடல் ஜானுடன் அட்ஜஸ்ட் செய்யாததால் ஏற்படும் பிரச்சனை  , லீயுடனான பழைய காதலால் எமிக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று அம்மா புலம்புவது , அதிலும் சின்ன குழந்தை கூட கண்டுபிடித்து விடும் மேட்டரை ட்விஸ்ட் என்ற நினைப்பில் சொருகியிருப்பதையெல்லாம் பார்த்தால் ஷங்கர் & கோ வின் கற்பனை வறட்சி பிரம்மாண்டமாக தெரிகிறது ...

சுருக்கமாக சொன்னால் இன்டர்நெட் , மியூசிக் என எல்லா சிறப்பம்சங்களுடன் பார்ப்பதற்கு அழகாக  இருக்கும்  அல்ட்ரா  மாடல் செல்போன் " ஹலோ " என்று இரண்டு வார்த்தை பேசுவதற்குள் சார்ஜ் போனால் எப்படியிருக்குமோ கிட்டத்தட்ட அதுவே . இருப்பினும் பொங்கல் விடுமுறை , விக்ரமின் நடிப்பு , டெக்னிகல் ஆஸ்பெக்ட்ஸ் , படத்திற்கான ப்ரொமோ , எல்லாவற்றையும் விட மொக்கை என்று ஒதுக்கிவிட முடியாத படியான படம் இவையெல்லாம் ஐ யை காப்பாற்றக்கடவது . இந்த படத்தில் விக்ரம் பாடி பில்டராக வருகிறார் . அந்த பாணியில் சொல்வதானால் - பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் ...

ஸ்கோர் கார்ட் : 42 

( பி.கு : விக்ரம் என்னும் நடிப்பு ராட்ஸனுக்காகவே இந்த மார்க்


11 January 2015

பி.கே - PK - IS IT O.K ?! ...


பெரும்பாலும் ஹிந்திப் படங்களை பெரிதும் விரும்பி பார்க்காத  எனக்கு அமீர்கான் படங்களில் மேல் மட்டும் ஈர்ப்பு உண்டு . அவருடைய ஒவ்வொரு படத்திலும் நம்மை பாதிக்கும் வகையில் ஏதாவது ஒரு அழுத்தமான மேட்டர் இருக்கும் . அந்த வரிசையில் இப்பொழுது வந்திருக்கும் பி.கே வும் விதிவிலக்கல்ல . முதலில் வேற்று கிரக வாசியான அமீர்கான் இந்தியாவுக்கு வந்ததிலிருந்தே நம்மை கவனிக்க வைக்கும் படம் முடியும்  வரை நகர விடாமல் கட்டிப் போடுகிறது .  ஒவ்வொரு மதத்தை பற்றியும் , கடவுளைப் பற்றியும் , அதன் பெயரால் நடக்கும் பிரிவினை பற்றியும் அமீர்கான் குழந்தைத்தனமாக கேட்கும் ஒவொரு கேள்விகளும் சாட்டையடி . ஒரு கட்டத்துக்கு மேல் கடவுள் நம்மை படைத்தார் என்பதை விட நாம் தான் நமக்கு ஏற்றபடி டிசைன் டிசைனாக கடவுளை படைத்திருக்கிறோம் என்று கடவுள் மேல் அதிக நம்பிக்கை உள்ளவர்களையே யோசிக்க வைப்பதே படத்தின் வெற்றி . அனுக்ஷா வின் ஜெர்மனிய காதலும் , பிரிதலும் அழகான ஹைக்கூ . ஆனால் க்ளைமேக்ஷில் இருவரும் சேர்வதும் , எல்லோரும்  அழுவதும் நம்மூர் விகரமன் ஸ்டைல் வழக்கமான சினிமா .  மொத்தத்தில் பி.கே கருத்து முலாம் பூசப்பட்ட ஜாலியான ரசிக்கக்கூடிய படம் ...

ஆனாலும் இது ரங்க் தே பசந்தி , 3 இடியட்ஸ் அளவிற்கு என்னை பாதிக்காததற்கு இரண்டே காரணங்கள் . 1. இந்து மதத்தில் கடவுளின் பெயரால் காசு பார்க்கும் சாமியார்கள் , அவர்களின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் மக்கள் , கடவுள் , மதம் இரண்டையும் வைத்து நடக்கும் சண்டைகள் , அரசியல்  இப்படி ஏற்கனவே பார்த்து பழகிப் போன ப்ளாட் . 2. படத்தை பார்த்தவர்கள் ஆஹா , ஓஹோ என்கிறார்கள் , இன்னும் பி.கே பார்க்கவில்லையா என்று குசலம் விசாரிக்கிறார்கள் , அமீர்கானின் தையிரியத்தை பாராட்டுகிறார்கள் நிச்சயம்  பி.கே பாராட்டப்பட வேண்டிய படம் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை . ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அளவிற்கு இதில் வித்தியாசமாய் ஒன்றுமில்லை ..;

எல்லா மதங்களிலும் நல்ல நம்பிக்கைகளுக்கு ஈடாக மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன . மத நம்பிக்கைகளை வைத்து வியாபாரம்  நடத்தும் சாமியார்கள் , அரசியல்வாதிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் . அத்தோடு கடவுளின் பெயரை சொல்லி குழந்தைகள் , பெண்கள் ஏன் தங்கள் மதத்தினரையே கூட கொல்லும் தீவிரவாதிகளும் இவ்வுலகில் இருக்கிறார்கள் . ஆனாலும் வழக்கம் போல பி.கே படம் இந்து மதத்தினரின் பல கடவுள் வழிபாடு , போலி சாமியார்களின் ஏமாற்று வேலைகள் இதைத்தான் அதிகம் அலசுகிறது . ஒன்றிரண்டு சீன்கள் ஊறுகாய் போல மற்ற மதத்தினரைப் பற்றி வருகிறது . இந்தியாவில் இந்து மதத்தை கிண்டல் செய்து எவ்வளவோ படங்களை பார்த்தாகி விட்டது . இந்தியாவில் 80 சதவிகிதத்துக்கும் மேல் இந்துக்கள் இருப்பதால் அந்த மதத்தின் நன்மை , தீமைகள் அனைவரும் அறிந்ததே . அப்படியிருக்க இதில்  வித்தியாசம் என்ன இருக்கிறது ? .  அதே நேரம் இந்து மதத்தை போல  மற்ற மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகள் ,   மூளைசலவை செய்து மதமாற்றம் செய்யப்படும் அப்பாவி மக்கள் , மதமாற்றத்துக்காக இந்தியாவில் கொட்டப்படும்  அந்நிய முதலீடு , அடுத்தடுத்த அந்நிய படையெடுப்புகளால் படிப்படியாக அழிக்கப்பட்ட நமது கலாசாரம் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து அமீர்கான் & கோ டீடைல்டாக ஒரு படம் எடுத்திருந்தால் இன்னும் வித்தியாசமாக இருந்திருக்கும் . மேலும் கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கும் , பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்கும் பெயர் போன தமிழகத்தில் பி.கே பாணி படம் பழக்கப்பட்ட ஒன்று  .

குறிப்பாக சொன்னால் மணிவண்ணனை ஹீரோவாக வைத்து , வேலு பிரபாகரன் இயக்கத்தில் கடவுள் என்றொரு படம் தமிழில் வந்தது . நிறைய பேர் பார்த்திருக்க  மாட்டார்கள் , பார்த்தவர்களும் மறந்திருக்கலாம் . அந்த படத்தில் மணிவண்ணன் கடவுளாக நடித்திருப்பார் . பூமிக்கு வரும் அவர் தன்  பெயரால் நடக்கும் சாதி கலவரங்கள் , மூடநம்பிக்கைகள் இவற்றை பொறுக்க முடியாமல் அதற்கு எதிராக அவரே களத்தில்  இறங்குவார் . கடைசியில் கடவுளே மக்களால் கொல்லப்படுவது போல படம் முடியும் . இந்த படத்தில் இருந்து மணிவண்ணன் கடவுளாக வருவதை  எடுத்துவிட்டு , அமீர்கானை வேற்றுகிரக வாசியாக்கி புத்திசாலித்தனமான திரைக்கதையையும் , மார்கெட்டிங்கையும் இணைத்து விட்டால் பி.கே . இரண்டும் ஒரே ப்ளாட் என்பதற்காகத்தான் இந்த ஒப்பீடே தவிர  நிச்சயம் இரண்டு படங்களுக்கானதல்ல . அப்படி  செய்தால் அதை விட அபத்தம் வேறுதுவும் இருக்காது .  இருப்பினும் பி.கே வில் புதுசாக எதுவுமில்லை என்று புரிய வைப்பதற்காகத்தான் இந்த ஒப்பீடு ...

பி.கே ஜாலியாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படம் தானே தவிர இதில் அமீர்கானின் தைரியத்தையோ , வித்தியாசமான சிந்தனையையோ பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை . இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுளை மறுக்கும் நாத்திக கொள்கைகளுக்கு மூல நதியான சார்வாகம் , கம்யூனிஸ சித்தாந்தங்களுக்கு வேரான லோகாயுதம் போன்ற தத்துவங்கள் வேரூன்றி இருந்திருக்கின்றன . மேலும் தெருவுக்கு தெரு கடவுளாக ஆராதிக்கப்படும் ராமனையும் , கிருஷ்ணனையும் கிண்டல் செய்து பட்டிமன்றம் நடத்தும் தைரியமும் , அதை ரசித்து அதிலிருக்கும் உண்மைகளை சீர் தூக்கிப் பார்க்கும் பெருந்தன்மையும் காலங்காலமாக இந்துக்களுக்கு இருக்கிறது . எனவே இதில் அமீர்கான் & ராஜு இராணியின் தையிரியத்தை பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை ...

இதே அமீர்கான் அவர் மதத்திலேயே உள்ள மூட நம்பிக்கைகளை கிண்டல் , கேலி செய்து கேள்வி கேட்டு படம் எடுத்திருந்தால் அவர் தைரியத்துக்கு பெரிய சல்யூட் அடித்திருக்கலாம் .   ஏன் இந்த படத்திலேயே வரும்  குண்டு வெடிப்பு சம்பவத்தை வெறும் பாசிங் சீனாக காட்டாமல் அதற்கு  காரணமானவர்களைப்  பற்றிய  உண்மையான விவாதங்களை முன் வைத்திருந்தால் அமீர் & கோ வுக்கு கை குலுக்கியிருக்கலாம் . இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் சினிமா கேரியர் எஞ்சியிருக்கும் அமீர் கானால் அப்படியொரு ரிஸ்க் எடுக்க முடியுமா ? பிரான்சில் கார்ட்டூன் வரைந்ததற்கே அந்த கதி என்னும் போது படம் எடுத்தால் ? . புத்தகம் எழுதியதற்காக சொந்த நாட்டுக்கே திரும்ப முடியாமல் நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரின் , சல்மான் ருஷ்டி இவர்கள் கதையெல்லாம் அமீர் கானுக்கு தெரியாதா என்ன ?உண்மையை உரக்க சொல்லும் தையிரியமான படத்தை அமீர்கான் என்றல்ல யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும் பார்க்கலாம் ! . மற்றபடி எல்லா சினிமாக் காரர்களின் ஈசி டார்கெட் யாரோ அவர்களை மட்டுமே இவர்களும் குறி வைத்திருக்கிறார்கள் . கொஞ்சம் வித்தியாசத்துக்கு மற்ற மதத்தினரைப் பற்றிய ஒன்றிரண்டு சீன்களை சேர்த்திருக்கிறார்கள் அவ்வளவே . இதை எழுதுவதால் எனது நோக்கம் எல்லா மதத்தினரையும் கிண்டல் செய்ய வேண்டுமென்பதல்ல . என்னுடைய வாதம் புதிதாய் நாம் அறியாத களம் எதுவும் படத்தில் இல்லை என்பது மட்டுமே ...

குறிப்பாக  மோடி ஆட்சியில் இப்படியொரு படம் எடுப்பதற்கு தையிரியம் வேண்டுமென்று ஒரு  பத்திரிக்கை எழுதியிருப்பதை படித்தால் சிரிப்பு தான் வருகிறது . அப்படி தையிரியத்தை பாராட்டுவதற்கு அமீர்கான் ஒன்றும் சாப்ளினும் அல்ல , மோடி ஒன்றும் ஹிட்லரும் அல்ல . எல்லோரும் செய்து கொண்டிருக்கும் பார்முலா படத்தை எடுத்து நாலு காசு பார்ப்போம் என்கிற வகையறா படம் தான் பி.கே வே தவிர மற்றபடி பெரிதாக எதுவுமில்லை . அப்படியே பாராட்டுவதாக இருந்தால் இந்த படத்தை எதிர்த்து தியேட்டர்களை அடித்து நொறுக்கி படத்துக்கு மேலும் பப்ளிசிட்டியை கூட்டிய சில இந்து அமைப்புகளை தவிர்த்து எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் அதை பற்றி கவலைப்படாமல் பெருந்தன்மையாக எல்லா படங்களையும் ரசித்து ஊக்குவிக்கும் சாமனிய இந்துக்களை பாராட்டி விழா எடுக்கலாம் . இதை படித்து விட்டு யாராவது  கருத்து சுதந்திரக் கொடியை தூக்கலாம் . சினிமா விமர்சகனாக் மட்டுமல்ல தனி  மனிதனாகவும் எப்பொழுதும்   நான் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல . நான் எதிர்ப்பது  செலெக்டிவ் கருத்து சதந்திரத்தையும் , கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் அரைத்த மாவையே அரைப்பதையும் தான் . மற்றபடி பி.கே லாஜிக்கை தவிர்த்து விட்டு பார்த்தால் ரசித்துப் பார்க்கக் கூடிய  ஜாலி படம் ...


1 January 2015

தமிழ் சினிமா 2014 - TAMIL CINEMA 2014 ...




டந்த வருடம் 200 க்கும் அதிகமான தமிழ்படங்கள் ரிலீசாகியிருந்தாலும் வழக்கம் போல பத்துக்கும்  சற்று அதிகமான படங்களே வெற்றி பெற்றிருப்பது ஏமாற்றம் . லிங்குசாமி , கே.எஸ்.ரவிக்குமார் போன்ற கமர்சியல் இயக்குனர்களின் படங்கள்  தோல்வியை தழுவியிருந்தாலும் வினோத் , ஆனந்த்ஷங்கர்  போன்ற புதுமுக இயக்குனர்களின் வெற்றி ஆறுதல். விஜய் மில்டன் , வேல்ராஜ் , ரவி.கே.சந்திரன் ஆகிய மூன்று பிரபல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அதில் முதல் இருவரின் படங்கள் ஜெயித்திருப்பது நம்பிக்கை . பாலுமகேந்திரா , கே.பாலசந்தர்  , மணிவண்ணன் போன்ற சிறந்த இயக்குனர்களின்  மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு . மற்றபடி புதுமுகங்களை விட  அஜித் , விஜய் , சுந்தர்.சி , ஏ.ஆர்.முருகதாஸ் என்று பிரபலமானவர்களே  2014 இல் ஜெயித்திருக்கிறார்கள்  என்பது இப்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி . முதல் ஆறு மாத சினிமா அலசல்களை  பற்றி அறிய காண்க : அரையாண்டு தமிழ் சினிமா 2014 ...


இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2014

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1.தெகிடி
 2 கோலி சோடா
 3. குக்கூ
 4. யாமிருக்க பயமே
 5. முண்டாசுப்பட்டி
 6. சதுரங்க வேட்டை
 7. ஜிகர்தண்டா
 8. கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
 9. மெட்ராஸ்
10.பிசாசு 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  வீரம் 
2.  கோலி சோடா
3.  யாமிருக்க பயமே
4.  சதுரங்க வேட்டை
5.  வேலையில்லா பட்டதாரி
6.  ஜிகர்தண்டா
7.  அரிமா நம்பி  
8.  அரண்மனை
9.  சலீம்
10கத்தி 


ப்ளாக்பஸ்டர்  : வீரம் கத்தி 

டாப் டென் பாடல்கள்

1. கண்டாங்கி ( ஜில்லா  )
2. விண்மீன் ( தெகிடி  )
3. கூடமேல கூட ( ரம்மி )
4. ஆகாசத்த  ( குக்கூ )
5. காதல் கனவே  ( முண்டாசுபட்டி   )
6. அம்மா அம்மா  ( வி.ஐ.பி  )
7. என்தாரா என்தாரா ( திருமணம் என்னும் நிக்காஹ்  )
8. மணப்பெண் சத்தியம் ( கோச்சடையான்  )
9. பேசாதே ( திருடன் போலீஸ்  )
10.ஆத்தி இவள  ( கத்தி  )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - குக்கூ
 கவர்ந்த நடிகர் - அட்டகத்தி தினேஷ்  ( குக்கூ )
 கவர்ந்த நடிகை - ஆண்ட்ரியா  ( அரண்மனை  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - சத்யராஜ் / ராதாரவி ( சிகரம் தொடு / பிசாசு )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - சரண்யா ( வி.ஐ.பி  )
 கவர்ந்த காமெடி நடிகர் -  சந்தானம்  ( அரண்மனை )
 கவர்ந்த வில்லன் நடிகர் -  ப்ரிதிவிராஜ்  ( காவியத்தலைவன்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயன்   ( குக்கூ )
 கவர்ந்த பின்னணி இசையமைப்பாளர் -  ஆரோல் கோரெல்லி ( பிசாசு )
 கவர்ந்த ஆல்பம் - வி.ஐ.பி  ( அனிருத் )
 கவர்ந்த பாடல் - அம்மா அம்மா  ( வி.ஐ.பி  )
 கவர்ந்த பாடகி - எஸ்.ஜானகி ( அம்மா அம்மா )
 கவர்ந்த பாடகர் - அனிருத் ( உன் விழிகளில்  )
 கவர்ந்த பாடலாசிரியர் - யுகபாரதி  ( மனசுல சூரக்காத்து )
 கவர்ந்த வசனகர்த்தா - வினோத்   ( சதுரங்க வேட்டை )
 கவர்ந்த கதாசிரியர் - ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ( க.தி.வ.இ )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - கார்த்திக் சுப்பராஜ்  ( ஜிகர்தண்டா  )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் -  ஆர்.டி.ராஜசேகர் ( அரிமா நம்பி )
 கவர்ந்த இயக்குனர் - வினோத்  ( சதுரங்க வேட்டை   )
 கவர்ந்த புதுமுகம் - மாளவிகா ( குக்கூ  )

வசூல் ராஜாக்கள் 

அஜித் ( வீரம்  )
விஜய்  ( கத்தி  )
தனுஷ்  ( வி.ஐ.பி  ) 
சுந்தர்.சி ( அரண்மனை ) 

ஏமாற்றங்கள்

அஞ்சான் 
லிங்கா 

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  
Related Posts Plugin for WordPress, Blogger...