Showing posts with label MADHAVAN. Show all posts
Showing posts with label MADHAVAN. Show all posts

22 July 2017

விக்ரம் வேதா - VIKRAM VEDHA - வெல்டன் ...


கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகி விட்டது விமர்சனம் எழுதி . புதுப்படங்களை உடனே பார்க்கும் ஆர்வம் குறைந்தே போனது . விக்ரம் வேதா வை விடாததற்கு காரணம் விஜய் சேதுபதி யும் , மாதவனு ம் . கவண் போன்ற கமெர்சியல்களை விட இது போன்ற நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர் ரோல்களிலேயே விஜய் சேதுபதி அதிகம் ஜொலிக்கிறார் . இந்த இருவரையும் சரியான புள்ளியில் இணைத்த புஷ்கர் - காயத்ரி க்கு பாராட்டுக்கள் ...

விக்ரமாதித்யன் தோள்களில் அமர்ந்து கொண்டு வேதாளம் கேள்வியாய் கேட்டு அவனை சுத்த விடும் . அது போல போலீஸ் விக்ரம் - தாதா வேதா இருவருக்கிடையேயான மோதலை சுவாரசியமான கேள்வி பதிலாய் கொடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் . க்ளைமேக்ஸுக்கான பதிலை நம்மிடமே விட்டு சென்றது தையிரியம் ...

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமாக மாதவன் முழு தாடி , அரை தாடி என ஸ்டைலில் மாறினாலும் நடிப்பில் சீராக ( புரியும்ல ) இருந்து சிறப்பிக்கிறார் . இவருக்கு பெரிய ஃப்ளாஷ்பேக் எல்லாம் வைக்காமல் சில வசனங்களிலேயே சிம்பிளாக கேரக்டருக்குள் போய்  விடுவது சிறப்பு . உர்ரென்றே இருப்பவருக்கு வக்கீல் மனைவி ஸ்ரதா  ஸ்ரீநாத் நல்ல ரிலாக்ஸ் . நமக்கும் தான் . ஒற்றை மூக்குத்தியில் ஜொலிக்கும் ஸ்ரதா  ஸ்ஸ்ஸ்ரதா ...


இந்த அளவு ஓல்ட் கெட்டப் தேவையா என யோசிக்க வைத்தாலும் அந்த ரோலுக்கு தனது உடல் மொழியால் வெய்ட் ஏத்துகிறார் விஜய் சேதுபதி . ஸ்லோவாக இவர் கொடுக்கும் என்ட்ரி செம்ம மாஸ் . கையிலிருக்கும் ரொட்டியை போலீஸ் நாய்க்கு தூக்கி போட்டு விட்டு அசால்ட்டாக நடக்கும் இடம் க்ளாஸ் . ரெண்டு செய்கையிலேயே வேதாவாக நம் மனதில் நங்கூரம் போட்டு உட்கார்ந்து கொள்கிறார் . ஜிகர்தண்டா வில் சின்ன ரவுடி ரோலில் வந்து நம்மை சில் செய்த விஜய் சேதுபதியின் ஹாட் வெர்சன் இந்த வேதா ...

வேதாவின் தம்பி புள்ளி யாக வரும் கதிர் , விஜய் சேதுபதியின்  ஜோடியோ என புதிர் போட்டு பிறகு கதிருக்கு ஜோடியாக வரும் வரலக்ஷ்மி , ட்ரக் டீலர் ரவி , மாதவனின் போலீஸ் டீம் , சேட்டன் என படத்தில் நிறைய கேரக்டர்கள் வலம்  வந்தாலும் தொய்வில்லாத திரைக்கதைக்கு உதவுகிறார்கள் . பி,எஸ்.வினோத் தின் ஒளிப்பதிவு க்ரே பக்கங்களை ஜோராக காட்டுகிறது . சாம் பி.ஜி.எம் மில் பின்னியெடுக்கிறார் ...


போலீஸ் மாதவன் , அவருடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் சைமன் , கால் ஊனமுற்றவராக வரும் மேலதிகாரி இவர்களெல்லாம் குருதிப்புனல் படத்தை நம் கண்முன் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை . வழக்கமான காப் - டான் ஸ்டோரியை வெறும் மேக்கிங்கால் மட்டும் வித்தியாசப்படுத்தாமல் கதை சொல்லும் விதத்திலும் வித்தியாசப்படுத்தி  ஸ்கோர் செய்கிறார்கள் இயக்குனர்கள் . படம் முழுவதும் அடுத்து நடப்பதற்கான சின்ன சின்ன க்ளூவை தெறிக்க விட்டிருப்பது இண்டெலெக்சுவல் ஸ்க்ரீன்ப்ளே . கேட் அண்ட் மவுஸ் ஸ்டோரியில் நம்மையும் சேர்த்தே ஓட  வைத்திருப்பது இன்டெரெஸ்ட்டிங் ...

சர்ரென்று போகும் படம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல்லடிப்பது போல படுகிறது . குருதிபுனலின் தாக்கம் , விக்ரம் , வேதா இருவருமே சுற்றியிருப்பவர்கள் மேல் கொஞ்சம் கூட கவனம்  வைக்காமல் இருப்பது , புள்ளி என்கவுண்டரில் வரும் குட்டி குழப்பம் இவையெல்லாம் சில சறுக்கல்கள் . " Well planned is Half done " என்பார்கள் அந்த விதத்தில் சரியான மாதவன் - விஜய் சேதுபதி காம்பினேஷன் அண்ட் டெச்னீசியன்ஸ் தேர்வு செய்த விதத்திலும் , நம்மை அதிகம் என்கேஜ் செய்த விதத்திலும் விக்ரம் வேதா வை வெல்டன் என்றே சொல்லலாம் ...

ரேட்டிங்க்            : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 





31 January 2016

இறுதிச்சுற்று - IRUTHI SUTRU - ஜெயிக்கும் ...


லைபாயுதே வில் அறிமுகமாகி மின்னலே , ரன் வெற்றிகளின் மூலம் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக்கொண்டவர் மாதவன் . ஹீரோவாக மட்டும் வளம்  வர நினைக்காமல் பீக்கில் இருக்கும் போதே ஆயுத எழுத்து படத்துக்காக மொட்டை போட்டுக்கொண்டு வில்லனாக நடித்து மற்ற கமர்சியல் ஹீரோக்களை விட பல படிகள் மேலே சென்றவர் . ஆனால் அப்படிப்பட்டவரை மன்மதன்அம்பு , வேட்டை படங்களில் ஒரு ஜோக்கர் போல பார்க்க நேர்ந்தது காலக்கொடுமை . இதோ அதற்கு பிராயச்சித்தம் போல இத்தனை வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறது இறுதிச்சுற்று ...

தன்னால் சாதிக்க முடியாததை தனது மாணவி மூலம் சாதிக்க நினைக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதை தான் இறுதிச்சுற்று . ஏற்கனவே பார்த்துப்பழகிய ( வெற்றி மேல் வெற்றி , குமரன் S / O மகாலட்சுமி etc ...) கதைக்கு யதார்த்தமான அதேசமயம் க்ரிப்பான திரைக்கதையால் மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர் சுதா கோங்குரா ...


மாதவன் அழகாக இருந்தாலும் அவரிடம் உள்ள  சாக்லேட் பாய் இமேஜ் நெருடும் . வெறும் உடம்புடன் வரும் முதல் சீனிலேயே அதை சுத்தமாக உடைத்தெறிந்து நம்மை உள்வாங்குகிறார் மேன்லி மாதவன் . இந்த உடற்கட்டுக்காக வருடக்கணக்கில் அவர் போட்ட உழைப்பு வீண்போகவில்லை .  மனைவி ஓடிப்போனதை சொல்லும் போது காட்டும் ஆதங்கம் , மாணவி வேண்டுமென்றே தோற்கும் போது காட்டும் கோபம் , நீ அவ்ளோ தாண்டா என்று சொல்லும் போது காட்டும் நக்கல் என படம் முழுவதும் கோபக்கார கோச் பிரபு வாக வியாபித்து நிற்கிறார் மாதவன் . இனிமேல் இது போன்ற படங்களில் அவர் கவனம் செலுத்துவார்  என்று நம்புவோமாக ...

மதி ரோலுக்கு பாக்சர் ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்ததோடு விட்டு விடாமல் அவர் முதல் படம் என்றே தெரியாத அளவுக்கு நடிக்க வைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு . பொண்ணு பின்னி பெடெலெடுத்திருக்கு . மாதவனுக்கு ஈக்குவலாக ஏன் ஒரு படி மேலாகவே ரித்திகா நம்மை கவர்கிறார் என்றால் மிகையாகாது . வேண்டுமென்றே தோற்று விட்டு மாதவனை பார்த்து நக்கலாக சிரிக்கும் இடம் ஒன்றே போதும் இந்த பொண்ணோட திறமைக்கு சான்று ...



மதியின் அக்கா லக்ஸ் ( மும்தாஸ் ) கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் டிலிருந்து  சற்று விலகி நிற்கிறது படம் . எனக்கு ஏன் மாஸ்டர் நீங்க அவள  மாதிரி கோச்சிங் கொடுக்கல என்று அவர் ஆதங்கப்படுவதும் , அதற்கு மாதவன் பதிலளிப்பதும் உருக்கம் . காளி வெங்கட் , ராதா ரவி குறிப்பாக நாசர் என எல்லோருமே இறுதிச்சுற்றில் நம்மை இறுக்கிப்பிடிக்கிறார்கள் . ஏற்கனவே லீ படத்தில் பார்த்த அதே ரோலில் ஜாகிர் ஹுசைன் . இவர் மாதவனிடம் பேச்சோடு பேச்சாக ஐடி கார்டை வாங்கும் இடம் படத்துக்கு ஹைலைட் . சந்தோஷ் நாராயணின் இசை , சிவகுமார் சூரியனின் ஒளிப்பதிவு , சதீஷ் சூரியா வின் எடிட்டிங் என எல்லாமுமே படத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றன . அருண் மகேஸ்வரனின் கவுச்சியான வசனங்கள் கவுதம் மேனன் படங்களை சில நேரம் நினைவு படுத்தினாலும் நிறைவு ...

உலக அளவில் நிறைய படங்களில் பார்த்த வாழ்ந்து கெட்ட கோச்சின் கதை , அதில் வழக்கமான அரசியல் பண்ணும் வில்லன் , மாஸ்டரின் பேரைக் காப்பாற்றும் மாணவி என கதையில் எதுவுமே புதுசாக இல்லாமல் போனாலும் கேரக்டர்களுக்குள் நம்மை கொண்டு செல்லும் டீட்டைளிங்கிலும், ( குறிப்பாக மாதவன் வரும் முதல் சீனிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொன்ன விதம் ) ப்ரெசெண்டேசனிலும் தான் மணிரத்னத்தின் மாணவி என்று நிரூபிக்கிறார் சுதா கோங்குரா . இது போன்ற கதைகளில் கிளைமேக்சில் ஒரு சண்டை வரும், அதில் முதலில் அடி வாங்கும் லீட் கேரக்டர் பிறகு எதிராளியை வீழ்த்தி ஜெயிக்கும் என்று தெரிந்த சீனாக இருந்தாலும் இதில் மதி ஜெயிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை நம்முள் விதைத்த விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் . விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் , ஆணாதிக்கம் , அதிகார துஷ்பிரயோகம் இவற்றை அழுத்தமாக சொன்ன விதத்திலும் , இரண்டு மணி நேர படம் முடிந்த பிறகும்  பிரபு , மதி இருவரையும் பற்றி நம்மை நினைக்க வைத்த வகையிலும் இறுதிச்சுற்று ஜெயிக்கும் ...

ரேட்டிங்  : 3.5 * / 5 * 

ஸ்கோர் கார்ட் : 44 



Related Posts Plugin for WordPress, Blogger...