Showing posts with label சசிகுமார். Show all posts
Showing posts with label சசிகுமார். Show all posts

15 September 2012

சுந்தரபாண்டியன் - சறுக்க மாட்டான் ...


சிகுமார் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குனர் பிரபாகரன் இயக்குனராய் அறிமுகமாகியிருக்கும் படம் சுந்தரபாண்டியன் ... சசிகுமார் - சமுத்திரக்கனி பாணியில் வரும் வழக்கமான நண்பர்களை சுற்றி பிண்ணப்பட்ட கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ... " சுப்ரமணியபுரம் " மாதிரி ஒரு படம் கொடுத்ததே  ஜென்மத்திற்கும் போதுமென்று சசிகுமார் நினைத்து விட்டாரோ என்னமோ , இதில் ஒரு முழுமையான கமர்சியல் ஹீரோவாக தன்னை முன்னிறுத்த முயற்சித்திருக்கிறார் ...

ஊரே மெச்சும் பெரிய குடும்பத்தின் ஒரே வாரிசு சந்தரபாண்டியன் ( சசிகுமார் ) , கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நண்பர்களுடன்  வெட்டியாக ஊரை சுற்றுவதை தவிர இவருக்கு உருப்படியாக ஒரு வேலையும் இல்லை ...                 ( இன்னும் எத்தன படத்துக்கு தான் சினிமால  ஹீரோவ இப்படியே காட்டப் போறாங்களோ ) ... வேலை வெட்டி ஏதும் இல்லாததால் தன் நண்பன் அறிவு
 ( இனிகோ பிரபாகரன் ) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய் காதலித்து வரும் அர்ச்சனாவுடன் ( லக்ஷ்மி மேனன் ) அவரை சேர்த்து வைக்கும் மாபெரும் பணியை கையிலெடுக்கிறார் சுந்தபாண்டியன் ... இதன் பிறகு என்ன நடக்குமென்பதை நாம் மின்சாரகனவில் ஆரம்பித்து சமீபத்தில் வந்த ராட்டினம் வரை பல படங்களில் பார்த்துவிட்டதால் அதை பற்றி வேறெதுவும் சொல்வதற்கில்லை... இரண்டாம் பாதியை சுப்ரமணியபுரம் , நாடோடிகள் பாணியில் ட்விஸ்ட் வைத்து முடித்திருக்கிறார்கள் ...


சசிகுமார் நடிப்பில் மெருகேறியிருக்கிறார் என்று சொல்லலாம் , ஆனால் அவருக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்காமல் ரஜினி ரசிகன் என்ற போர்வையில் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை எதற்கு பின்பற்றினார் என்று தெரியவில்லை ... மாஸ் ஹீரோவாக ஆக வேண்டுமென்ற ஆசை அவர் முகத்திலும் , அவருக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளிலும் நன்றாக தெரிகிறது.
சசிக்கென்று தனியாக மார்க்கெட் இருக்கலாம் , அவர் வசனத்திற்கு ரசிகர்கள் கை தட்டலாம் , அவர் நடிப்பில் மினிமம் கியாரண்டியை படங்கள் தொடலாம் , ஆனால் சசிகுமார் சுப்ரமணியபுரம் போல ஒரு படத்தை கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கான முயற்சியை கூட  எடுக்காமலிருந்தால் நாளைய வரலாறு நிச்சயம் அவரை பழிக்கும் ...

அறிமுக நாயகி லக்ஷ்மி தோற்றத்திலும் , மேக்கப் இல்லாத முகத்திலும் மதுரைப் பெண் போல இருந்தாலும் உயரம் மட்டும் இடிக்கிறது ... இவர் கேரக்டரை திமிர் பிடித்தவள் என்று காட்டுவதற்காக உம்மனாமூஞ்சியாகவே விட்டுவிட்டார் இயக்குனர் ... அமலா பாலின் தூரத்து சொந்தம் போல இருக்கிறார் லக்ஷ்மி மேனன் ... " கும்கி " யிலும் இவர் தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல் ...
( இவுகளுக்கு மட்டும் நுழையும் போதே எப்படி தான் இம்புட்டு சான்ஸ் கிடைக்குதோ ) ...

சசிக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் இனிகோ அவரை விட இளமையாக இருக்கிறார் ... இவர் இப்படி தான் நடந்து கொள்வார் என்று முன்னமே யூகிக்க முடிந்து விடுவதால் ட்விஸ்டில் பெரிய சுவாரசியம் இல்லை ... பிஸ்ஸா படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி இதில் முக்கியமான நண்பன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் , ஆனால் பட முடிவில் மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

சசியின் நண்பனாக வரும் சூரியும் , லக்ஷ்மி மேனனை  டாவடிப்பதாய் ரவுசு கட்டும் அப்புக்குட்டியும் படத்தின் பெரிய பக்கபலங்கள் ... கதை என்று பெரிதாக எதுவும் இல்லாத இந்த படத்தை முதல் பாதி முழுவதும் போரடிக்காமல் பார்க்க வைப்பது இந்த இருவருமே , அதிலும் சூரி படம் நெடுக கட்டையை கொடுத்து பட்டையை கிளப்புகிறார் ... வடிவேலுவின் மேனரிசத்தை இவர் கொஞ்சம் தவிர்க்கலாம் ...


இடைவேளை வரை ராட்டினம் படத்தின் கருவை வேறு மாதிரி களத்தில்  கொடுத்திருக்கிறார்கள் , இடைவேளையில் போலீஸ் வந்து சசியை கைது செய்யும் சீன் கூட அதே போல இருக்கிறது ... இடைவேளைக்கு பிறகு படம் நண்பர்களின் துரோகம் என்ற களத்திற்குள்  நுழைகிறது  ... சசிகுமாரின் முந்தைய படங்கள் போல சாதி குறியீடுகள் மறைமுகமாக இல்லாமல் இதில் நேரடியாகவே வருகிறது ... வெண்ணிலா கபடி குழுவில் " சாதி , சாமி இந்த ரெண்டு பாரத்தையும் இறக்கி வச்சாத்தான் வேகமா போக முடியும் " என்று பாஸ்கர் சக்தி வசனம் எழுதியிருப்பார் , ஆனால் அது சினிமாவில் இருக்கும் நிறைய பேருக்கே  இன்னும் போய் சேராதது வருத்தமே ...

புதிதாய் சொல்லப்படாத கதை , சுப்ரமணியபுரத்தை நினைவு படுத்தும் க்ளைமேக்ஸ் , சசி " குத்தினது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது அதான் நட்பு " என்றெல்லாம் வசனம் பேச , கூட இருப்பவர்களோ நயவஞ்சகர்களாக மாறுவது என்னமோ ஒரு தலை காதல் போல இது ஒரு தலை நட்போ என்கிற அளவிற்கு ஏற்படுத்தும்  சலிப்பு , சசிக்கும் , சாதிக்கும் கொடுக்கப்படும் பில்டப்ஸ் , பாடல்கள் இவையெல்லாம் சுந்தரபாண்டியனை சறுக்க  நினைத்தாலும்  ,

அருமையான பாத்திர தேர்வு , சின்ன சின்ன கேரக்டர்கள் மூலம் கூட சுவாரசியமாக படத்தை கொண்டு சென்றது  , சசி - சூரி அலப்பறை , இரண்டரை மணி நேரம் மண் மனம் மாறாமல் ஏதோ நாம் உசிலம்பட்டிக்கு வந்து விட்டோமோ என்று நினைக்குமளவிற்கு நேட்டிவிட்டியோடு பார்ப்பவர்களை படத்தோடு ஒன்ற செய்த விதம்  , போரடிக்காத திரைக்கதை போன்றவை கமர்சியலாக சுந்தரபாண்டியனை சறுக்க  விடாமல் நிறுத்துகின்றன ...

ஸ்கோர் கார்டு : 42 








3 December 2011

போராளி - புதிய போர் பழைய களம் ...


                                               
     கடந்த சில வருடங்களில் நம்மை கவனிக்க வைத்த காம்பினேஷன்களுள் முக்கியமானது சசிகுமார் - சமுத்திரகனி இருவரின் கூட்டணி ... இந்த கூட்டணியின் நான்காவது படம் " போராளி " ...அழுத்தமான கதையம்சம் இல்லாததால் " நாடோடிகள் " போலவோ , காமெடியுடன் கூடிய வேகமான திரைக்கதையால் " ஈசன் " போலவோ அல்லாமல் புது மாதிரி நிற்கிறான்
" போராளி " ...

     ஒரு வீட்டிலிருந்து சசியும் , அல்லரி நரேஷும் தப்பிக்கும் முதல் காட்சியில் தொடங்கும் படம் , கஞ்சா கருப்பின் வீட்டில் இருவரும் தஞ்சம் அடைந்ததும் தங்கு தடையின்றி இடைவேளை வரை வேகமாக செல்கிறது ... பத்திரிக்கையில் இருவரின் படத்தையும் பார்த்து விட்டு ஒரு கும்பல் துரத்த , இவர்கள் ஓட சஸ்பென்சுடன் வருகிறது இடைவேளை ...

     காலனியில் வந்து தங்கிய கொஞ்ச நாட்களிலேயே எல்லோர் மனதிலும் ( குறிப்பாக ஒனர் மற்றும் அவர் பெண் ) நல்ல பெயர் எடுத்த சசியையும் , நரேஷையும் வந்த கும்பல் பைத்தியம் என்று சொல்ல ஏன் ? எதற்கு ? எப்படி ? என இப்படி சுருக்கமாக சொல்லாமல் இடைவேளைக்கு பின் கொஞ்சம் விர்ர்ரிவாக விளக்குகிறார்கள் ...

                 
    சிரிக்கும் போது வெகுளித்தனத்தையும் , முறைக்கும் போது ஆக்ரோஷத்தையும் நன்றாக காட்டும் சசிகுமாரிடம் மற்ற முக பாவங்கள் மிஸ்ஸிங் ... படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்கு பேசாமலேயே இருந்து வாய் பேச முடியாதவரோ என சந்தேகிக்க வைப்பவர் பின் அப்துல் கலாமில் ஆரம்பித்து அடுக்கடுக்காக பேசி சிரிக்கவும் , சலிக்கவும் வைக்கிறார் ... சிலோன் புரோட்டா கேட்கும் சுவாதியிடம் " எனக்கு சிலோனே பிடிக்காது இதுல  புரோட்டா வேற " என்று சசி சொல்லும் போது தியேட்டரில் விசில் ...

                 
   " சுப்ரமணியபுரம் " படத்திற்கு பிறகு சுவாதியை ஏன் தமிழில் யாரும் யூஸ் செய்யவில்லை என்று ஆச்சர்யமாக இருக்கிறது ... கண்களாலேயே பேசுகிறார். குறிப்பாக சசி காதலை ஏற்றுக்கொள்ளும் இடத்தில் வெட்கம் , அழுகை , சந்தோசம் என எல்லா உணர்ச்சிகளையும் கண்களாலேயே காட்டும் காட்சியில் சுவாதியின் நடிப்பு சூப்பர் ...

    அல்லரி நரேஷ் தன் குறும்பு நடிப்பால் கவர்கிறார் ... " நாடோடிகள் " பரணியை நியாபகப்படுத்துவதும் , பேச்சில் தெலுகு வாடை அடிப்பதும் மைனஸ் ...  நிவேதாவின் அமுல் பேபி முகத்திற்கு சென்னை பாஷை பேசும்
தமிழ் செல்வி கேரக்டரை புகுத்தியது , அவர் அக்காவின் பிரச்சனையை போலவே செயற்கையாகவே ஒட்டாமல் இருக்கிறது ...
         
    இவர்களை தவிர கரடி வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கஞ்சா கருப்பு ( அமீரை போலவே இவரை சரியாக உபயோகப்படுத்தும் சமுத்திரகனியை பாராட்டலாம் ) , " சாந்தி , சாந்தி " என்று கத்தி சாந்தியை இழக்கும் படவா கோபி , " முடிவ நான் தான் எடுப்பேன் " என மனைவியிடம் சொல்லும் ஹவுஸ் ஒனர் கு.ஞானசம்பந்தம் , காலனியில் குடியிருக்கும் குடிகாரன் , சுவாதியின் தங்கை, " நாங்க அப்பவே இப்படி , இப்ப சொல்லவா வேணும் " என்று சவடால் பேசும் சூரி , சசியின் சித்தியாக வருபவர் இப்படி பலர் ஸ்கோர் செய்கிறார்கள்  ... குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் வசுந்தராவும் , அவர் அப்பாவாக வரும் கிழவரும் மனதில் பதிகிறார்கள் ...

                                   
    டாக்டராக வரும் ஜெயப்ரகாஷிற்கும் , நிவேதாவின் மாமாவாக வரும் நமோ நாராயனாவிற்கும் பெரிய ஸ்கோப் இல்லை .... சுந்தர்.சி.பாபுவின் பின்னணி இசை படத்திற்கு படம் மெருகேறி வருகிறது ... குறிப்பாக சேசிங் சீன்களில் இவரின் ஆர்.ஆர் அருமை ... சென்னையையும் , கிராமத்தையும் பிரித்து காட்டும் கதிரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை ...
                           
    முதல் பாதியில் கதை எதை நோக்கி போகிறது என்ற குழப்பம் ஏற்பட்டாலும் , அதை அடக்கும் வேகமான திரைக்கதை , முதல் பாதியில் கஞ்சா கருப்பையும் , இரண்டாவது பாதியில் சூரியையும் சரியாக பயன்படுத்தியது , தன்னம்பிக்கை , மனித நேயம் இரண்டையும் கலந்து படைக்கப்பட்ட சசிகுமாரின் கேரக்டர் , சசி - சுவாதி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் ,

    " ஏதாவது ஒண்ணுன்னா வேடிக்கை மட்டும் பாப்பீங்க , உதவின்னு கூப்புட்டா ஓடிடுவீங்க " , " மூளை தான் அண்ணாச்சி மூலதனம் " , " சொந்தமா ஏதாவது பண்ணலாம்னு பாத்தா ஏண்டா இப்படிகெடுக்குறீங்க " , சுவாதி சசியிடம் சொல்லும் " அண்டா மாதிரி நினச்சு வேணா தூங்குங்க " போன்ற  நச் வசனங்கள் , சில நேரமே வந்தாலும் மனநிலை சரியில்லாதவர்கள் பற்றிய மிரட்டும் மருத்துவமனை காட்சிகள் , பாடல்களே இல்லாமல் பின்னணி இசை உதவியுடன் பின்பாதியை நகர்த்திய தைரியம் இவற்றிற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம் ....

                             
    முதல் காட்சியிலேயே தப்பியோடுவதை காட்டி விட்டு பிறகு எந்த க்ளூவும் இல்லாமல் வெறும் காமெடியாகவே முதல் பாதியை நகர்த்தியிருப்பது ,  நிவேதா அக்காவின் பிரச்னை , அது சம்பந்தப்பட்ட ஒட்டாத காட்சிகள் , போராளி என்று பெயர் வைத்ததால் சமூக அவலங்களை பற்றிய ஒரு அக்கறையான படமோ என நினைத்தால் , சொத்து தகராறு , சித்தி கொடுமை என வழக்கமான ட்ராக்கில் கதை பயணிப்பது ,

    சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழியென்று என்று கொஞ்சம் சுத்த விட்டிருப்பது , '" நாடோடிகள் " பாணியில் பஸ் பேக் ட்ராப்பில் தேவையில்லாமல் வரும் குத்து பாடலில் ஆரம்பித்து , புத்திசாலித்தனமாக யோசிக்கும் சசிகுமார் வித்தியாசமாக எதையும் செய்யாமல் ஒத்த ஆளாக ஒரு ஊரையே அடிக்கும் வழக்கமான கிளைமேக்ஸ் பைட்டுடன் படத்தை முடித்திருப்பது இவையெல்லாம் போராளியை போர்களத்தில்  வாகை சூட விடாமல் பின்னுக்கு இழுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 
Related Posts Plugin for WordPress, Blogger...