Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

10 August 2018

விஸ்வரூபம் 2 - VISHWAROOPAM 2 - வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ...


மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு நடுவே வந்ததால் ஹிட்டாகியிருக்க வேண்டிய விஸ்வரூபம் படம் ப்ளாக் பஸ்டரானது . பெரிய பப்ளிசிட்டியில்லாமல் வந்திருப்பதால் சுமாரான விஸ்வரூபம் 2  படு சுமாராகிப்போனது . விஸ்வரூபம் பார்க்காதவர்களுக்கு 2 சுத்தமாக புரியாது பார்த்தவர்களுக்கு ஓரளவு புரியும் ...

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் பேராபத்தை இந்திய ரா உளவாளி விஷாம் காஷ்மீரி & கோ தடுத்த பிறகு ஆப்கானிய தீவிரவாதிகள் இந்தியாவிற்கு வருவதோடு விஸ்வரூபம் படத்தை முடித்திருப்பார்கள்.  தீவிரவாதி ஓமரின்  சதியை காஷ்மீரி முறியடித்தாரா என்பதை எப்படா படத்த முடிப்பாங்க என்கிற அளவு நீட்டி முழக்கியிருப்பதே விஸ்வரூபம் 2 ...

கமல் வழக்கம் போல நடிப்பால் மட்டுமில்லாமல் ஷார்ப்பான டயலாக்கு களாலும் படத்தை தாங்குகிறார் . சக நடிகர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்தாலும் தனித்து நிற்கிறார் .அம்மா செண்டிமெண்ட் , ரொமான்ஸ் காட்சிகள் இரண்டிலும் அன்டெர்பிளே செய்து அசத்துகிறார். வில்லன் முஸ்லீம் என்பதால்  ஹீரோ முஸ்லிமை  தேசபக்தனாக முன்னிறுத்துகிறார் . ஒரு பிராமணனை தேசத்துக்காக உயிர் விடுபவனாக காட்டுவதால் இன்னொரு பிராமணனை தேச துரோகியாக்குகிறார் . இப்படி சமன் செய்வதாக நினைத்து  இயக்குனாராக குழப்ப மட்டுமே செய்கிறார் ...


ஆண்டிரியா வுக்கு ஆக்ஸனோடு சேர்த்து அசத்தல் துள்ளல் நடிப்பு . பூஜாவை வாரும் இடங்களில் வாவ் போட வைக்கிறார் . பூஜாவுக்கு பிராமண பாஷையோடு சேர்த்து கடலுக்குள் போகும் சீனும் . பாத்ரூமுக்குள் குளித்து கமலை  மூடேத்தும் சீனும் வைத்திருக்கிறார்கள் . சேகர் கபூர் , ராகுல் போஸ் எல்லோரும் நிறைவு . படத்திற்கு பெரிய மைனஸ்  முகமது ஜிப்ரானின்
( ஜிப்ரான் முகமது ஜிப்ரானாக பதவி உயர்வு !!! ) பின்னணி இசை . சொந்தமாக வும் போடாமல் பார்ட் 1 ஐ சரியாகவும் பயன்படுத்தாமல் சொதப்பி விட்டார் . குறிப்பாக விஸ்வரூபம் 1 இல் எவனென்று நினைத்தாய் பாடலோடு வரும் ஃபைட் படத்துக்கு ஹைலைட் . இதில் அதையே ஸ்லோவாக போட்டு சாவடிக்கிறார் ...

ஒளிப்பதிவு , கலை  , எடிட்டிங் என தொழில்நுட்பத்தில் படம் வேர்ல்ட் க்ளாஸ் .
திரைக்கதையிலும் கமல் இண்டெலெக்சுவளாக ப்ரீகுவல் , சீக்குவல் இரண்டையும் கலந்த நான் லீனியராக படத்தை சொல்லியிருக்கிறார் . இரண்டுமே சரியாக  சிங்க்  ஆனாலும் நமக்கு தான் ஸ்லோவாக பெரும்பாலான இடங்களில் நேச்சுரல் சவுண்டோடு நகரும் படம் கொட்டாவியை வர வைக்கிறது ...


இங்கிலாந்தில் தண்ணீருக்குள் ஏதோ கெமிக்கல் வெப்பனை  வைத்து சுனாமி யை வரவைக்க போவதாக இண்டெர்வெல்லில் முடிக்கிறார்கள் . அப்புறம் ராகுல் அண்ட் கமல் இருவருக்குமான பெர்சனல் சண்டையாக  படத்தை கொண்டு போகிறார்கள் . ஈஸ்வர் கேரக்டர் இடைச்செறுகளாகவே படுகிறது . க்ளைமேக்ஸ் சண்டையில் ரீ ரிக்கார்டிங் சொதப்பலால் விறுவிறு மிஸ்ஸிங் .
முதல் பாகத்தை போல பிரம்மாண்டம் காட்டாமல் சிறு வட்டத்துக்குள்ளேயே படம் சுற்றுவதை போல ஒரு ஆயாசம் ...

ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லும்  ஆப்கான் தீவிரவாதி கமலிடம் நட்பு பற்றியெல்லாம் பேசி பாடம்  எடுப்பது தமிழ்படம் . கமல் கடைசி ஆசை என கேட்கும் போது  என்ன நமாஷ் பண்ணனுமா என ராகுல் போஸ் கேட்பது சீரியஸ் சீனில் நல்ல தமாஷ் . " நீங்க எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை பிரதர் ஆனால் தேச துரோகியாக இருக்கக்கூடாது " என கமல்  டயலாக் வைத்திருக்கிறார் . அதே போல " நீங்க எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் பிரதர் ஆனால் குழப்பக்கூடாது " என்று நாமும் சொல்லலாம்.  படத்திற்கு இருக்கும் சொற்ப ஓப்பனிங்கை பார்க்கும் போது தான் ஆண்டவர் ஏன் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்தாரென்று புரிகிறது . நிச்சயம் விஸ்வரூபம் 1 க்கு திருஷ்டி பரிகாரமாக வந்திருக்கும் விஸ்வரூபம் 2 வேஸ்ட் ஆஃப் எனர்ஜி ஃபார் கமல் அண்ட் அஸ் ...

ரேட்டிங்   : 2.5* / 5 * 

ஸ்கோர் கார்ட் : 40 


10 November 2015

தூங்காவனம் - THOONGAVANAM - தூள் வனம் ...


பொதுவாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பைர் ஆகி அல்லது சுட்டு இங்கே தனது கதை , திரைக்கதையில் அவ்வைசண்முகி , தெனாலி , பஞ்சதந்திரம் என்று படமெடுத்து ஹிட் ஆக்கும் உலகநாயகன் முதன்முறையாக ஒரு ஃப்ரெஞ்ச் படத்தை ( Sleepless night ) வாங்கி திரைக்கதை அமைத்து ! தன் உதவி இயக்குனர் ராஜேஸ் ம செல்வா வை வைத்து இயக்கியிருக்கிறார் . இதே போல நேர்மையாக அவர் நிறைய நல்ல படங்களை வாங்கி இங்கே தரமாக ரீ மேக்கினால் தமிழ் சினிமாவுக்கு நல்லது..

ஒரு நாள் இரவில் காப் & மாஃபியா கேங் இடையே நடக்கும் மோதலே தூங்காவனம் . மாஃபியா விடமிருந்து திவாகர் ( கமல்ஹாசன் ) போதைப்பொருளை கடத்த பதிலுக்கு விட்டல் ராவ் ( பிரகாஷ்ராஜ் ) கமலின் மகனை கடத்திவிடுகிறார் . கடத்திய போதைப்பொருளும் கை நழுவிப் போய் விட மகனை கமல் மீட்டாரா ? என்பதை தனது வேகமான திரைக்கதையால் படு ஸ்டைலிஷாக சொல்லியிருக்கிறார் கமல் ...


பாபநாசம் படத்திற்கு பிறகு அதே போல ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வித் எமோஷனல் டச் படம் கமலுக்கு கிடைத்தது பார்ப்பவர்களுக்கு விருந்து . அவர் எங்கும் வானத்தில் எகிறிக் குதித்து யாரையும் அடிக்கவில்லை ( அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும் ) , மகனை மீட்பேன் என்று பஞ்ச் டயலாக் எல்லாம் பேசவில்லை ஆனால் படம் முழுவதும் ஒரு ஹீரோயிசத்தை நிலை நாட்டியிருப்பது கமல் எனும் லெஜென்டால் மட்டுமே முடியும் . கோபம் , வீரம், சோகம் என நிறைய உணர்சிகளை அவர் கண்களாலேயே காட்டியிருப்பது கிளாசிக் . ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்காமல் ஆடியன்ஸ் மேல் நம்பிக்கை வைத்து திரைக்கதை அமைத்திருப்பது கமலின் மெச்சூரிட்டி ...

கமலை சேஸ்  செய்யும் காப் ரோலில் த்ரிஷா படு ஃபிட் . சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் பிரகாஷ் ராஜ் , அவரது உதவியாளராக வந்து கிடைக்கும் கேப்பில் சிரிக்க வைக்கும் குரு சோமசுந்தரம் , காப் திரவியமாக கிஷோர் , கமலின் கொலீக் மணியாக யூகி சேது , சின்ன ரோலில் வந்தாலும் கவனிக்க வைக்கும் சாம்ஸ் மற்றும் சம்பத் , ஜெகன் , ஆஷா என சின்ன படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் படத்திலிருந்து கொஞ்சம் கூட விலகாமல் நம்மை ஒன்ற வைக்கிறார்கள் . கமலின் மகனாக வரும் அப்துல்லா , பப்பில் ஏதோ பிராண்டி வாங்கி அடிப்பது போல மவுத் கிஸ் அடிக்கும் மது ஷாலினி என இருவருமே ப்ளஸ் ...

முதல் சீனிலேயே கதைக்குள் சென்று விடும் படம் இடைவேளை வரை விறுவிறுப்புடன் அதே நேரம் சஸ்பென்ஸ் வைக்க தவறாமல் செல்கிறது இடைவேளைக்குப் பின் கொஞ்சம் வேகம் குறைவது போல் பட்டாலும் நம் கண்களை திரையில் இருந்து எடுக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் கமல்.
சம்பவ இடத்திற்கு சென்று கமல் , யூகி சேது நடந்ததை விசாரிக்கும் ஸீன் , , நிமிஷ கதிக்குள் எல்லோரையும் அடித்துவிட்டு கமல் தப்பிக்கும் ஸீன் ,, கமல் - த்ரிஷா அண்ட் கமல் - கிஷோர் சண்டை போட்டுக்கொள்ளும் ஸீன் என படத்தில் நிறையவே மாஸ்டர் பீஸ்கள் . சானு ர்கீஷின் ஒளிப்பதிவு , ஜிப்ரானின் பின்னணி இசை இரண்டுமே படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்கின்றன ...


படம் முழுவதுமே பெரும்பாலும் ஒரு நாள் இரவு ஹோட்டலில் நடந்தாலும் பார் , ரெஸ்டாரன்ட் , பப் என வரும் ரிப்பீட்டட் லொகேஷன்ஸ் கொஞ்சம் சலிப்பை தருவதை மறுப்பதற்கில்லை . கமல் எதிலுமே ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பார் என்பது யாவரும் அறிந்ததே . ஆனால் ஒரு சீனில் டாய்லெட்டில் கக்கா போய்க்கொண்டிருப்பவன் மேல் விழுந்து கமல் ஓடுவார் . அதற்கு அடுத்த ஷாட்டில் தண்ணீர் விடாததால் அப்படியே கிடக்கும் கக்கா வை கூட காட்டும் அளவிற்கு நேர்த்தியாக இருப்பார் ( தேவையா ?! ) என எதிர்பார்க்கவில்லை .

உத்தமவில்லன் ஒடாததால் கமலுக்கு தயாரிப்பாளராக இந்த படம் முக்கியமான படம் . அப்படியிருக்க மனுஷன் போன வெள்ளிக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யாமல் எதுக்கு தேவையில்லாமல் வேதாளத்துடன் தீபாவளிக்கு வரிந்து கட்டுகிறார் என்று ஓர் ஆதங்கம் இருந்தது . வேதாளத்தை விட மிக குறைவான ஒப்பணிங்கே படத்துக்கு கிடைத்திருப்பதோடு நிறைய தியேட்டர்களில் வேதாள பிரம்மாண்டத்துக்கு முன் ஏதோ புது பட ஹீரோ போஸ்டர் போல கமல் படம் இருந்ததை பார்த்த போது  50 வருடத்துக்கு மேல் சினிமா அனுபவம் , பல வெற்றிகள் , விருதுகள் , உலக அளவிலான ரசிகர்கள் இதெல்லாம் பொய்யா ? வெறும் நடிப்பா என புதிய பறவை சிவாஜி ரேஞ்சுக்கு அந்த ஆதங்கம் கொஞ்சம் அதிகமானது . ஆனால் படத்தை பார்த்த பிறகு கமல் தன்  மேல் மட்டுமல்ல தனது ரசிகர்களின் ரசனை  மேலும் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது புரிகிறது  . மொத்தத்தில் வழக்கமான காப் கதையாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் கமல் நடித்திருக்கும் தூங்காவனம் தூள் வனம் ...

ஸ்கோர் கார்ட் : 44

ரேட்டிங்   : 3.5* / 5* 

( படம் முடிந்த பிறகு வரும் " நீயே உனக்கு ராஜா " பாடல் ஹைலைட் )




6 May 2015

உத்தம வில்லன் - UTHAMA VILLAIN - ஒன் மேன் ஷோ ...


ரண்டு வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் உலகநாயகனின் படம் . கமல் படம் என்பதோடு மட்டுமல்லாமல் சில சிக்கல்களுக்குள் சிக்கி ஒரு நாள் தள்ளிப் போய் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . குணா , மகாநதி , அன்பே சிவம் போன்ற கமலின் சில படங்கள் கமர்சியலாக தோல்வியை தழுவியிருந்தாலும் நம்மிடையே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் . அந்த வரிசையில் கமர்சியலாக தோல்வியை தழுவி ஆனால் உண்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத படம் உத்தம வில்லன் ...

பெரிய சக்சஸ் ஹீரோ மனோரஞ்சன் ( கமல்ஹாசன் ) தனக்கு வந்த நோய் மூலம் சாவு நெருங்குவது தெரிந்து விட தனது கடைசி படம் குருநாதர் ( கே.பி ) இயக்கத்தில் வரவேண்டி அவருடன் கைகோர்க்கிறார் .வரப்போகும்  தங்களது  கடைசி படம் எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்து  அவர்கள் எடுக்கும் படம் உத்தம வில்லன் . அவர்கள் எண்ணத்தில் தர்ப்பையை போட்டு கொளுத்த என்று சொல்லுமளவுக்கு நம் பொறுமையை சோதிக்கும் இந்திரலோகத்தில் அழகப்பன் தான் அந்த  உத்தம வில்லன் . வாழ்வின் கடைசி தருவாயில் இருக்கும் ஹீரோ தனது  குருநாதர் , மகன், மனைவி , பழைய காதலி , அவள் மூலம் பிறந்த மகள் , தற்போதைய கள்ளக் காதலி ( அப்பா எம்பூட்டு பேரு !) என்று எல்லோரிடமும் நடத்தும் உணர்ச்சிப் போராட்டங்களை நீ.....ளமாக இருந்தாலும்  உத்தமமாக எடுக்கப்பட்ட  படத்தை உண்மையில் கெடுக்கும் வில்லன் படத்துக்குள் படமாக வரும் இந்த உத்தம வில்லன் ...


எந்த கேரக்டராக இருந்தாலும் பின்னியெடுக்கும் கமலுக்கு ஹீரோ கேரக்டரையே கொடுத்தால் கேட்கவா வேண்டும் , பின்னி பெடலெடுத்திருக்கிறார் அதே சமயம் உணர்சிக் கொந்தளிப்பான பல காட்சிகளில் அடக்கி வாசித்து மற்றவர்களையும் நடிக்க விட்டிருப்பது அவரின் தனிச்சிறப்பு . குறிப்பாக மகனுடன் அவர் உரையாடும  காட்சி மைல்ஸ்டோன் பழைய காதலி இறந்த செய்தி கேட்டவுடன் அவர் காட்டும் ரியாக்ஷன் நெகிழ்வு. உத்தமனாக வரும் காட்சிகள் மொக்கையாக இருந்தாலும் மொத்தத்தில் ஒரு தேசிய விருதை தட்டும் அளவிற்கு இருக்கிறது கமல் என்னும் உன்னத நாயகனின் நடிப்பு ...

பொதுவாக எல்லோரும் குடும்ப டாக்டர் வைத்திருப்பார்கள் . ஆனால் இதில் டாக்டர் ஆண்ட்ரியாவை குடும்பத்துக்கு தெரியாமல் வைத்திருக்கிறார் கமல் . சாகப்போகும் போது கூட கமல் - ஆன்ட்ரியா சில்மிஷங்களுக்கு குறைவே இல்லை . ஹீரோயினாக வரும் பூஜா சில இடங்களில் ஓவர் ஆக்ட் செய்தாலும்  ஆண்ட்ரியாவை விட  பல இடங்களில் அழகாகவே இருக்கிறார் .
( எந்த எடம்னுல்லாம் குசும்பா கேக்கப்படாது ! )   கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதார்த்தமான நடிப்பில் அழுத்தமாக கவர்கிறார் . கமல் வியாதியை பற்றி தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கத்திலும் , பழைய காதலியின் கடிதத்தை படிக்கும் போது குற்ற உணர்ச்சியிலும் அவரின் நடிப்பை பார்க்கும் போது " இத்தனை நாளாய் எங்கிருந்தாய் பாஸ்கரா ?! " ...

ஆஸ்பத்திரியில் பேசும் ஒரு சீனில் தான் நடிப்பில் யாருக்கும் இளைத்தவள் சாரி சளைத்தவள் இல்லை என நிரூபிக்கிறார் ஊர்வசி . கமலின் மகனாக நடித்திருப்பவர் , மகளாக வரும் பார்வதி , ஜெயராம் ,கே.விஸ்வநாத் என்று எல்லோருமே கிடைத்த கேப்பில் நடிப்பு கெடா வெட்டியிருக்கிறார்கள் . நாசர் & கோ காமெடி என்ற பேரில் செய்யும் கடிகள் மட்டுமே திருஷ்டிப்பொட்டு . ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலம் . டைட்டில் கார்டில் வசனகர்த்தா பெயர் வரவில்லை . ஆனால் " ஆத்மாவுக்கு காது இல்லை " , ஆஸ்பிட்டலில் டாக்டர் ஆண்ட்ரியா ஷர்டை கழட்ட சொல்லும் போது " அதுக்கெல்லாம் டைம் இருக்குமா " போன்ற குறும்பு வசனங்கள் கமல் அக்மார்க் ...


லீட் கேரக்டருக்கு கேன்சர் , பிரைன் டியூமர் என்று நிறைய படங்கள் கோடம்பாக்கத்தில் வந்திருந்தாலும் அதை நுணுக்கமாக கையாண்ட விதத்தில் கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர் ! ரமேஷ் அர்விந்த் . எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல்  மாஸ் ஹீரோவின் இருட்டு பக்கத்தை காட்டுவதோடு அவர் மகன் செய்யும் லீலைகளையும் போகிற போக்கில் பொசுக்கிப் போடுவது , நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல் ஹீரோவின் பிரச்சனைக்குள் சட்டென நுழைவது , பழைய காதலியை காட்டாமலேயே கடிதம் வாயிலாக அந்த கேரக்டரை கண்முன் உலவ செய்தது , உறவுகளுக்கு இடையேயான உணர்ச்சிகளை சரியாக கையாண்டது , சாகப்போகும்  ஹீரோ கடைசிப் படத்தில் சாகாவரம் பெற்ற கலைஞன் வேடத்தில் நடிப்பது , கமலின் உண்மை முகம் அவர் மமகள் பார்வதிக்கு தன் அம்மா எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தும் வகையில் கமல் தனது மேக் அப்பை கலைப்பது என்று படத்தில் நிறைய நுணுக்கமான , அழுத்தமான சீன்கள் ...

இவையெல்லாமே சேர்த்து படத்தை உயரத்துக்கு கொண்டு போக மற்றொரு பக்கம் பொறுமையை ரொம்பவே சோதிக்கும்படத்தின் நீளம் , ஓவர்டோஸ் சோகக் காட்சிகள் , காமெடி என்ற நினைப்பில் ட்ராஜெடி செய்யும் உத்தமன் படக்காட்சிகள் ( அதிலும் ஷூட்டை பார்த்து விட்டு அவர்களே மாறி மாறி சிரித்துக் கொள்கிறார்கள் , நமக்கு தான் ஒரு எழவும் வர மாட்டேங்குது )  , வெகுஜனங்களை கவராத தொம்மையான ஸ்க்ரீன்ப்ளே இப்படி எல்லாமே உத்தம வில்லனை உருட்டிப் போடுகின்றன . கமலின் நடிப்பு ஒன்றுக்காக மட்டும் எல்லா சோதனைகளையும் தாண்டி ரசிகர்கள் படம் பார்ப்பார்கள் என நினைத்தது காலக் கொடுமை . இப்படி கழுவி கழுவி ஊற்ற படத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தாலும் கமல் எனும் நடிகனின் ஒன் மேன் ஷோ படம் விட்டு வெளியே வரும் போது ஒரு லேசான வலியை கொடுக்கத்தான் செய்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 43

( பின் குறிப்பு : கமல் இனிமேல் தன்னை முழு நடிகனாக மட்டும் ஒப்படைத்து நல்ல  இயக்குனர்கள் படங்களில் நடிப்பது உத்தமம் )


7 November 2013

கலைமகன் கமல் ...


ந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...            

கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ...


இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் .கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன . அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...                   

டான்ஸ் , ஃபைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை . அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...
        
இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும். நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் . தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள். தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...         


ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது . ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் .  இன்று ஐம்பத்தெட்டாவது  பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...

- மீள்பதிவு


8 December 2012

விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா ...



லகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் அவரே தயாரித்து இயக்கம் விஸ்வரூபம் படத்தை ஜனவரி 11 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முதல் நாளே டி .வி.யில் டி. டி.எச் இணைப்பில் வெளியிடுவது சரியா ? தவறா ? என்று ஒருபுறம் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்க அவரோ  07.12.2012 - இல் மதுரை , கோவை , சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும்  தனது ரசிகர்கள் புடை சூழ விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  ஜெயா டி .வி. யுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார் . நேற்று மாலை சென்னை ராயப்பேட்டா ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைஞானி இளையராஜா , இயக்குனர் இமயம் பாரதிராஜா உட்பட பல்வேறு பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் ஜெயராம் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் முழு தொகுப்பு  தமிழ் ப்ளாக் உலக வரலாற்றில் முதன்முறையாக இதோ உங்களுக்காக ( யாராவது முன்னரே எழுதியிருந்தால் கம்பெனி பொறுப்பல்ல ஹி .. ஹி ... ) :


  • ஒரு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஒரு இடத்தில் நடத்துவது என்பதே      சாதாரண காரிமயமல்ல , அப்படியிருக்க அதையே மூன்று வெவ்வேறு நகரங்களில் ஒரே தினத்தில் நடத்துவதென்பது எவ்வளவு சிரமம் என்பது அங்கே நடந்த பரபரப்பிலிருந்தும் , நிகழ்ச்சி தாமதமாக தொடங்கியதிலிருந்தும் நன்றாகவே தெரிந்தது  ( இதுலயும் உலகநாயகன் ஒரு ட்ரென்ட்செட்டர் )

  • எம்.ஐ.பி ( மோஸ்ட் இம்பார்டன்ட் பெர்சன் ) , வி.வி.ஐ.பி , வி.ஐ.பி என்று மூன்று பாஸ்கள் கொடுத்திருந்தார்கள் , அதில் எம்.ஐ.பி யில் மட்டும் பிரபலங்கள் அமர்ந்திருக்க மற்ற இரண்டையும் ரசிகர்கள் ஆக்ரமித்தார்கள் . எம்.ஐ.பி யில் இருந்ததால் இசைஞானி மற்றும் உலகநாயகனை மிக அருகாமையில் ரசிக்க முடிந்தது ( எதுக்கு இந்த விளம்பரம் )      

  • நிகழ்ச்சியை அறிமுகம் செய்த பெண் ஒரு இடத்தில வாய் தவறி ஜெயா டி .வி என்பதற்கு பதில் விஜய் டி .வி என்று சொல்லிவிட்டு பின்பு சுதாரித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ... ( பேமண்ட் அவுட்டா ?!  )   

  • மதுரையில் நடந்த நிகழ்ச்சியை திரையில் காட்டிய போது சென்னையை விட அதிக கூட்டத்தையும் ,ஆரவாரத்தையும் காண முடிந்தது . மதுரையில் இசைபேழையை ஒரு ரசிகரே வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது ... ( பாசக்கார பயலுக

  • ஜெயா டி .வி யின் ராகமாலிகா குழுவினர் கமல்ஹாசனின் பழைய பாடல்களை பாடினார்கள் ... ( பொழுத ஓட்டனும்ல

  • ஜெயராம் மூன்றாம்பிறை படத்தின் கமல் - ஸ்ரீதேவி குரல்களை நன்றாக மிமிக்ரி செய்ததோடு தன் 25 வருட கால நட்புக்காக கமல் பணம் வாங்கிக்கொள்ளாமலேயே போர் ப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததையையும் நன்றியோடு  நினைவு கூர்ந்தார்  ( ஆ..ஆ..ஆ ) 

  • பாடகர் கார்த்திக் போட்டு வைத்த காதல் திட்டத்தில் ஆரம்பித்து மேகம் கொட்டட்டும் வரை கமல் பாடல்களை பாடி நம்மை இசை மழையில் நனைத்தார் ... ( நல்ல வேலை உண்மையிலேயே மழை வரல )

  • கமல் கொன்னக்கோல் வாசிக்க சங்கர் மகாதேவன் பாடிய " உன்னை காணாமல் " பாடலை தரணி , லிங்குசாமி , ஏ .ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தனர் . கமல் குரலில் மாயா , மாயா என்ற வரிகள் காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது ... ( குரலுக்கு மட்டும் தனியா ஏதாவது காயகல்பம்  சாபிடுவாரோ ?!

  • " சிவாஜி ஒரு நடிப்பு சிங்கம் ஆனால் அவருக்கு இயக்குனர்கள் தயிர் சாதம் தான் வைத்தார்கள் , எனவே எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்கிறேன் " என்று கமல் தானே படத்தை இயக்குவதற்கான காரணத்தை சொன்னதாக முருகதாஸ் ஒரு தகவலை சொன்னதோடு கமலுக்கேற்ற சமையலுடன் காத்துக்கொண்டிருப்பதாக சொல்லி ஒரு விண்ணப்பத்தையும் வைத்தார் ... ( உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு  

  • படத்தின் இசையமைப்பாளர்கள் சங்கர் - எஸான் - லாய் மூவரையும் கமல் அறிமுகம் செய்ததோடு இசைஞானி இல்லாமல் ராஜ்கமல் தயாரிப்பில் வெளிவரும் முதல்படம் விஸ்வரூபம்  என்பதையும் சொன்னார் ... ( ஆளவந்தான் நியாபகத்தை கஷ்டப்பட்டு அழித்தேன் )

  • சங்கர் மகாதேவன் குரலில் " எதை கண்டு " பாடலை இயக்குனர்கள் பாரதிராஜா , கே.எஸ்.ரவிக்குமார் , வசந்த் ஆகிய மூவரும் அறிமுகம் செய்தார்கள் . ரவிக்குமார் கமலிடம் படங்களுக்கு இடையே ஏனிந்த இடைவெளி என்றும் நடு நடுவே  என்னை போன்ற இயக்குனர்களையும் வைத்து படம் பண்ணலாமே என்றும் ரசிகர்கள் கேட்பதாக சொல்லி அவர் கேட்டுக்கொண்டார் ... ( நல்லா வருவீங்க தம்பி )

  • பாரதிராஜா பேசும் போது முன்னணி  நடிகராக இருக்கும் போதே  கமல் 16 வயதினிலே படத்திற்காக கோமணம் கட்டிய துணிச்சலை பாராட்டியதோடு சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே நடிகர் கமல் என்றும் புகழாரம் சூட்டினார் ... ( உடலும் ரசிகனுக்கு பணமும் ரசிகனுக்கு  )    

  • ஜெயராம் கமலிடம் நீங்க ஹாலிவுட்டுக்கு போகும் போது  எந்த நடிகைக்கு கிஸ் அடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு " நான் எச்ச பண்றதுகாகவா அங்க போறேன் " என்று சொல்லி கமல் காமெடி செய்தார்... ( பயபுள்ளைக திருந்த விட மாட்டேன்றாய்ங்களே

  • பிரபு , ராம்குமார் , விக்ரம் பிரபு மூவரும் மேடையேறிய போது பிரபு கமலை அண்ணே என்று அழைத்து பாசத்தை காட்டினார் ... ( சிவாஜி செத்துட்டாரா ?! எவன் சொன்னது ?  

  • படத்தின் கதாநாயகிகளான ஆண்ட்ரியா , பூஜா இருவரும் கமலுக்கு இடம் , வலது என அழகாக நின்று கொண்டிருந்தார்கள் . ஆண்ட்ரியா பாடியதை விட பூஜா தப்பு தப்பாக பேசிய கொஞ்சும் தமிழ் அழகாக இருந்தது ...                ( நைட் நேரத்துல ஆண்ட்ரியாவ  அரை கவுன்ல பாத்ததுல இருந்து தூக்கம் போச்சு  )  

  • விழாவின் முடிவில் பிரபலங்கள் உட்பட படத்தின் தொழில்நுட்பகலைஞர்கள் அனைவரும்  மேடை ஏற்றப்பட்டார்கள் . இரண்டு பாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்தது மற்றும் ஸ்பீக்கரின் இரைச்சல் போன்ற சில குறைகளை தவிர இசை வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது ... ( இந்த தடவ பொங்கல் ஜனவரி 11 ல தான்)

18 April 2012

பழையன புகுதலும் - பார்க்கத் துடிக்கும் படங்கள் ...



ந்த வருடம் வெளியான படங்களில் " கர்ணன் " சிறிய முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டியிருப்பது திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பதோடு , கர்ணன் போல ஏற்கனவே பெரிய வெற்றியடைந்த படங்களை மீண்டும் மறு வெளியீடு செய்வதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபடவும் வைத்திருக்கிறது ... இது போன்று எல்லா படங்களையும் மறு வெளியீடு செய்வார்களா என்று தெரியவில்லை , ஆனால் ஒரு ரசிகனாக நான் திரையில் பார்க்க விரும்பும் எவர் கிரீன் படங்களின் பட்டியல் இதோ :


சந்திரலேகா

எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு , இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு $ 600000 /. பட்ஜெட்டில் அந்த காலகட்டத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசான முதல் தமிழ் படம் " சந்திரலேகா " .எம்.கே.ராதா , டி.ஆர்.ராஜகுமாரி , ரஞ்சன் , என்.எஸ்,கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் என்றே சொல்லலாம்



வீர பாண்டிய கட்டபொம்மன்

பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் ஜெமினி கணேசன் , பத்மினி உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து  1959 ஆம் ஆண்டு வெளியான " வீர பாண்டிய கட்டபொம்மன் " வசூலில் சக்கை போடு போட்டதுடன் நடிகர் திலகத்திற்கு ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது ... ஆக்ஸ் துறையுடன் சிம்ம குரலில் சிவாஜி பேசிய வசனங்களை பெரிய திரையில் பார்ப்பது போல நினைத்து பார்த்தாலே உடல் புல்லரிக்கிறது ...

திருவிளையாடல்

சிவாஜி - சாவித்திரி ஜோடியில் வெளி வந்த மற்றுமொரு வெற்றி படம்
" திருவிளையாடல் " ... ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான படத்தில் எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் இருந்தாலும் என்றுமே நினைவில் நீங்காமல் இருப்பது சிவபெருமானாக நடித்த சிவாஜிக்கும் , தருமியாக நடித்த நாகேசுக்கும் இடையேயான வசனங்களும் , பால முரளி கிருஷ்ணா குரலில் " ஒரு நாள் போதுமா " பாடலும் ...


ஆயிரத்தில் ஒருவன்

சிறு வயதிலிருந்தே நான் சிவாஜி ரசிகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரை பார்த்து முற்றிலும் பிரமித்த படம் " ஆயிரத்தில் ஒருவன் " ...1965  இல் சிவாஜிக்கு ஒரு திருவிளையாடல் என்றால் எம்.ஜி.ஆருக்கு " ஆயிரத்தில் ஒருவன் " ... எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , நம்பியார் , நாகேஷ் போன்றவர்களின் நடிப்பிற்காகவும் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வாலி எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்களுக்காகவும் எத்தனை  முறை பார்த்தாலும் சலிக்காத படம் ...


 
எங்க வீட்டு பிள்ளை

டபுள் ஆக்டிங்கில் ஆள் மாறாட்டத்தை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அவை எவையும் " எங்க வீட்டு பிள்ளை " யை மிஞ்ச முடியாது. வாலியின் வரிகளில் " நான் ஆணையிட்டால் " பாடல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக போவதை மக்களுக்கு முன் கூட்டியே உணர்த்தியது ...

காதலிக்க நேரமில்லை

பெரிய ஹீரோக்கள் படம் மட்டும் தான் மனதில் நிற்க வேண்டுமா ? நிச்சயம் இல்லை என்று " காதலிக்க நேரமில்லை " படம் பார்த்த அனைவரும் சொல்வார்கள் ... அறிமுக ஹீரோ ரவிச்சந்திரன் , காஞ்சனா , முத்துராமன் , நாகேஷ் இவர்கள் கூட்டணியுடன் , விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும், ஸ்ரீதரின் இயக்கமும் யாரமையுமே படம் பார்க்க நேரமில்லை என்று சொல்ல வைக்காது ... நாகேஷ் , பாலையாவிடம் சொல்லும் பேய் கதையை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும் ...



அதே கண்கள்
 
ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த ரவிச்சந்திரனை ஆக்சன் ஹீரோவாகவும் ஆக்கிய அருமையான த்ரில்லர் படம் " அதே கண்கள் " , த்ரில்லர் படமாக இருந்தாலும் நாகேஷ் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம் ... 

16 வயதினிலே


ரஜினி , கமல்
இருவரும் இணைந்து நடித்த எத்தனையோ படங்களுள் அவர்களின் நடிப்புக்காக மட்டுமின்றி , வெறும் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளி உலகுக்கு எடுத்து வந்த ட்ரென்ட் செட்டர் பாரதிராஜாவின் இயக்கத்திற்காகவும் இன்றளவும் பேசப்படும் படம் " 16  வயதினிலே " ... இவை தவிர மயிலாக ஸ்ரீதேவியின் நடிப்பு , கவுண்ட மணியின் அறிமுகம் , இசைஞானியின் இசை இவையெல்லாம் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ...


நாயகன்

தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை உடைத்ததில் பாரதிராஜா ஒரு ட்ரென்ட் செட்டர் என்றால் அதை " நாயகன் " படத்தின் மூலம் தொழில் நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற விதத்தில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட் செட்டர் ... கமல் , தோட்டா தரணி , பி.சி.ஸ்ரீராம் இவர்களுக்கெல்லாம் இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்ததில் சந்தோஷம் என்றாலும் இசைஞானிக்கு கிடைக்காமல் போனது காலத்திற்கும் மனதில் நிற்கும் வருத்தம் ... 




பாட்ஷா

எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் " ரஜினிகாந்த் " ... அவரை மாஸ் ஹீரோவாக முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் " பாட்ஷா " தான் மாஸ் ஹீரோயிசத்தின் உச்சக்கட்டம் ... " நான் ஒரு தடவ சொன்னா " என்ற பாலகுமாரனின் வசனத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி கோடி தடவை கூட கேட்கலாம் ... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் " பாட்ஷா " ...


7 November 2011

கலைமகன் கமல் ...


   ஐந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

   வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...

                

   கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ... 

   இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் ... 

   கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன ... அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...

                     

   டான்ஸ் , பைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை ... 

   அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...

        
   இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
   தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

    இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும் ... நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது ... முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் ... தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


    வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள்... தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

   சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

    ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...

           

   ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது ... ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
    முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பார் என்று சினிமா ஆர்வலர்களை வழி மேல் விழி வைத்துக் காக்க வைப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் ... இன்று ஐம்பத்தேழாவது பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...
Related Posts Plugin for WordPress, Blogger...