Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

29 July 2014

தெருக்கூத்து - 1 ...


சினிமா செய்திகள் மட்டுமின்றி வாராவாரம்  நாட்டு நடப்புகளை சும்மா ஒரு அலசு அலசலாம் என்று எனக்கு ஏடாகூடமாக தோன்றியதன் விளைவே இந்த தெருக்கூத்து   . இது வரை என் கிறுக்கல்களை பொறுத்துக்கொண்ட மக்கள் இனிமேலும் எதையும் தாங்கும் இதயத்தோடு அதை தொடர்வார்கள் என்கிற நம்பிக்கையில் ...

ரயில்வே பட்ஜெட்டால் நடுத்தர மக்களுக்கு ஏறியிருந்த உஷ்ணம் பொது பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வருமான வரி சலுகைகளால் தணிந்திருக்கும் என்று நம்பலாம் . புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு மணி நேரத்துக்குள் செல்லலாம் என்கிறார்கள் . எல்லாம் சரி அதுலயும் வித்அவுட்ல போவ முடியுமா ? . கிறிஸ்துவம் எனது மதம் , இந்து எனது கலாச்சாரம் என்று , கிறிஸ்துவ மதம் வந்து 2000 வருடங்கள் தான் ஆகிறது ஆனால் இந்து கலாச்சாரம் இங்கே 5000 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது என்று கோவா துணை முதல் மந்திரி பேசியிருப்பது பிரச்சனையை கிளப்பியிருக்கிறது . நல்ல வேளை  இதை  சொன்னவர் ஒரு கிறிஸ்துவர் , அதுவே இந்துவாக இருந்திருந்தால் ?! ...

28 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை ஜெயித்தது போலவே லார்ட்ஸ் மைதானத்திலும் தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி டெஸ்ட் மேட்சை ஜெயித்திருக்கிறது . நீண்ட நாட்கள் சோபிக்காமல் இருந்த இஷாந்த் சர்மா-விக்கெட்டுகளை வீழ்த்தி மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கிய  சந்தோஷம் வடிவதற்குள் அவர் இஞ்சூரி காரணமாக அடுத்த மேட்சில் ஆடவில்லை . பின்னிக்கு பதில் அஸ்வினை எடுப்பார்கள் என்று பார்த்தால் பேட்டிங்கை வலுப்படுத்த ரோஹித்தை எடுத்திருக்கிறார்கள் . கடந்த முறை ஏற்பட்ட  4-0 தோல்விக்கு பழி தீர்க்கும்  வகையில் தோனி டீம் சீரியசை  ஜெயிக்க வாழ்த்துவோம்  .  கங்குலி ஜெயித்த பிறகு சட்டையை கழட்டி சுற்றியது போல தோனி பேண்டை  கழட்டி சுத்துவாரோ ? ! ...

போன் பேசிக்கொண்டே ரயில்வே கிராசிங்கை கவனிக்காமல் ஸ்கூல் வேனை ரயிலோடு மோதியதில் அந்த முட்டாள் டிரைவர் உட்பட அனைவரும் பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது . கால் சென்டர்களில் வேலை பார்ப்பவர்களிடமிருந்தே நிர்வாகம் வேலை நேரங்களில் செல்போனை வாங்கி வைத்துக் கொள்ளும்  போது பல உயிர்களுடன் விளையாடும் இது போன்ற சம்பவங்களை தடுக்க  எல்லா டிரைவர்களிடமிருந்தும் பயண நேரங்களில் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டாலென்ன ? .ஆறு வயது சிறுமி ஸ்கூலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது . அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரூ மக்கள் நடத்திய அமைதி போராட்டம் மனதை கவர்ந்தது . பள்ளிக்கூடங்களிலேயே இந்த நிலைமை என்றால் பிள்ளைகளை எங்கு தான் அனுப்புவது ? ...

அரசு பேருந்தில் ஊருக்கு சென்ற போது மேல்மருவத்தூரில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் வண்டி ஊர்ந்து தான் சென்றது . விசாரித்தால் ஆடி அம்மாவாசையை முன்னிட்டு கோவிலில் பயங்கர கூட்டம் என்று சொன்னார்கள்  . கோவிலுக்கு வருபவர்களுக்காக  ஏதாவது நடை மேம்பாலம் கட்டி விட்டால் பக்தர்கள் மட்டுமல்லாமல் பயணிகளும் பிழைப்பார்கள் . நிர்வாகம் கவனிக்குமா ?! . டாஸ்மாக்கை தவிர மற்ற எல்லா அரசு திட்டங்களுக்கும் அம்மா பெயரை வைத்து நன்றாகவே பிராண்டிங் செய்கிறார்கள் . அம்மா உணவகம் , குடிநீரை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரிகளை கருத்தில் கொண்டு அம்மா வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் . மற்றதைப் போலவே அதுவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . அம்மான்னா சும்மா இல்லேடா! ...

வேலையில்லா பட்டதாரி என்றவுடன் தனுஷ் நியாபகத்திற்கு வருகிறார் . தான் வளர்த்து விட்ட சிவ கார்த்திகேயனுடன்  அவருக்கு ஏதோ லடாய் என்கிறார்கள் . கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்சனையோ ?. இருந்து விட்டுப் போகட்டும் . கூத்தாடிகள் ரெண்டுபட்டாலும் ஊருக்கு கொண்டாட்டம் தானே ! . திரைப்படமாக வி.ஐ.பி யை விட சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் தனுஷின் மாஸ் , அணிருந்தின் இசை இரண்டுமே வி.ஐ.பி க்கு நல்ல வசூலை கொடுத்திருக்கின்றன . சதுரங்க வேட்டை நன்றாக இருந்தாலும் அதற்கு ஆனந்த விகடன் 52 மார்க்குககளை அள்ளிக்  கொடுத்திருப்பது ஆச்சர்யம் தருகிறது . ஆனால் ராஜா ராணி , கடல் , எதிர்நீச்சல் என்று தங்களால் வாங்கப்பட்ட படங்களுக்கு விஜய் டி.வி விருதுகளை அள்ளிக் கொடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . விஜய் , சூர்யா இருவரும் வந்திருக்க மேடையில் டி.டி யோ வராத அஜித்துக்கு தல , தல என்று வழிந்தது இருவருக்கும் வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கும் . ரஜினிக்கு அடுத்து  சூப்பர் ஸ்டார் பட்டத்த  யாருக்கு கொடுத்தாலென்ன ! தல போல வருமா ?!...

மீண்டும் கூடுவோம் ...



16 November 2013

சச்சின் - SACHIN ...


மூன்றே நாட்களில் இந்தியா டெஸ்ட் மேட்சை ஜெயித்ததற்காக முதல் முறையாக ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் . உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல மைதானமே நிரம்பி வழிகிறது . 18 ஆட்டங்களிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவனையும்  , அறிமுகமான முதல் இரண்டு ஆட்டங்களிலும்  செஞ்சுரி அடித்தவனையும் அனைவரும் மறந்தே போகிறார்கள் . அம்பயர் உட்பட எதிரணியினர் அனைவரும் ஒரு  விளையாட்டு வீரனை வரிசையில்  நின்று வரவேற்கிறார்கள் .  இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை ஒருவனுக்கு 40 வயதிலேயே வழங்கி கவுரவிக்கிறது . இவையனைத்தும் நடந்தது 24 வருடங்களுக்கு முன்னால்  நவம்பரில் அறிமுகமாகி இன்று நவம்பர் 16 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்னும் மகத்தான மனிதனுக்காக ...

கால் நூற்றாண்டு காலமாக கிரிக்கெட்டையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வருபவர் , உலகிலேயே  அதிக அளவு டெஸ்ட் மற்றும் ஒன் டே ஆட்டங்களை  ஆடியவர் மற்றும் ரன்களை குவித்தவர் , சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்தவர் , ஒரு நாள் கிரிக்கெட்  மேட்சில்  முதன் முறையாக 200 ரன்களை அடித்தவர் , அதிக அளவு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்களை வாங்கிக் குவித்தவர்  இப்படி எவ்வளவோ சாதனைகளையும் , புள்ளி விவரங்களையும் தாண்டி  " கிரிக்கெட் எங்கள் மதம் சச்சின் அதன் கடவுள் " என்று நாத்திகர்களை கூட சொல்ல வைத்தவர் சச்சின் ...

எளிமை ,  ஒழுக்கம் , கட்டுப்பாடு , அர்ப்பணிப்பு , உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளால் சிறந்த வீரர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக ரசிர்களால் மட்டுமல்லாமல் முன்னாள் , இந்நாள் விளையாட்டு வீரர்களாலும் கொண்டாடப்படுபவர் சச்சின் . இவரது ஒரு நாள் போட்டி சாதனைகள் ஒரு வேளை நாளை கோலிக்களாலோ  , டெஸ்ட் மேட்ச் சாதனைகள் புஜாராக்களாலோ முறியடிக்கப்படலாம் . ஆனால் அப்பொழுதும் கிரிக்கெட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக சச்சின் மட்டுமே இருப்பார் ..


7 October 2012

டி 20 - இறுதிப்போட்டி ...


செப் 18 இல் ஆரம்பித்த டி 20 உலககோப்பை கிரிக்கெட் தொடர்  இன்று நடைபெறும் இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியோடு முடிவடைகிறது ... இலங்கை இறுதி வரை வரும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் மேற்கிந்திய தீவுகள் ஆஸ்திரேலியா வை மிக அபாரமாக ஜெயித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது டி 20 யில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ...

இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் போட்டி நடப்பது சாதகமாக இருந்தாலும் , க்ரிஸ் கெயில் , பிராவோ , பொல்லார்ட் போன்ற ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய அதிரடி ஆட்டக்காரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம் ... இன்றைய ஆட்டம் மலிங்கா , மென்டிஸ் உள்ளிட்ட இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் , மேற்கிந்திய தீவுகளின் மட்டையாளர்களுக்கும் இடையேயான போட்டியாகவே இருக்கும்.

2009 இல் டி 20 கோப்பையை தவறவிட்ட இலங்கை அணியும் , டி 20 இறுதி போட்டிக்கு ஒரு முறை கூட தகுதி பெற்றிராத மேற்கிந்திய தீவுகள் அணியும் இந்த முறை உலக கோப்பைக்காக மிக கடுமையாக போராடும் என்பதில் ஐயமில்லை ... ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது துரதிருஷ்டமே ... ஒப்பனர்களின் ஆட்டம் , தோனியின் சில முடிவுகள் , சேவாக் - தோனி பிரச்சனை , எதிரணிகளை மிரட்டாத வேகப்பந்து வீச்சு போன்றவையும் இந்தியாவின் வெளியேற்றத்திற்கு காரணமாய் அமைந்ததையும் நாம் மறுக்க முடியாது ... டி 20 யை பொறுத்தவரை இந்தியாவிற்கு ஒரே தீர்வு இள ரத்தங்களே ...

ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்தியா 2007 க்கு பிறகு நடந்த மூன்று டி 20 உலக கோப்பைகளிலும் ஒன்றில் கூட அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் போனது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் ... தோனியை டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து தூக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் இப்போது வலுத்து வருகிறது ... தோனி  மட்டுமல்லாமல் ப்ளேச்சர் கோச்சாக நீடிப்பதும் தேவை தானா ? என்ற கேள்வியும் மேலோங்கி நிற்கிறது ...

நமது அணி வெற்றி பெறாத சோகத்தை ஓரங்கட்டி விட்டு இன்று இரண்டு தீவுகளுக்கிடையே நடக்கும் இறுதிப் போட்டியை பார்த்தோமானால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டுமென்பது என் விருப்பம் ... 75 களில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த அணி பல வருடங்களாக  சறுக்கலில் இருந்து விட்டு  இப்போது தான் முன்னேறி வந்திருக்கிறது ... கிரீஸ் கெயில் தன்னம்பிக்கையோடு பேசுவதை பார்க்கும் போது அந்த அணி வெற்றி பெறும் என்பது போல தோன்றினாலும் நடப்பது டி 20 என்பதால் எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது ... நீங்கள் எந்த அணி வெற்றி பெறும் என நினைக்கிறீர்கள் ? உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும் ...


30 September 2012

டி 20 - யுத்தம் ஆரம்பம் ...



ன்னும் சிறிது  நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கிரிக்கெட் யுத்தம் ஆரம்பிக்க போகிறது ... இந்தியா டி 20 உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்று நினைக்கும் ரசிகர்கள் தான் ஏராளம் , அந்த அளவிற்கு இரு நாடுகளில் உள்ள ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாகவே இரு நாடுகளுக்கிடையேயான போட்டி எப்பொழுதும் இருக்கும் ...

இது வரை 7 உலகக்கோப்பை போட்டிகளில் ( 2 டி 20 , 5 50 ஓவர் )  பாகிஸ்தானுடன் ஆடியுள்ள இந்தியா ஒன்றில் கூட தோற்றதில்லை என்று வரலாறு சொன்னாலும் தற்போது பாகிஸ்தான் அணியினரின் தொடர் வெற்றியும் , சேவாக் - தோனி இடையேயான பனிப்போரும்  இந்தியா வெற்றி பெறுவது அவ்வளவு  எளிதல்ல  என்பதை தெளிவாக காட்டுகின்றன ... 

இன்று இந்திய அணி ஹர்பஜன் , சாவ்லாவை விடுத்து சேவாக் , பாலாஜி யுடன் களமிறங்குவதாக தோனி அறிவித்துள்ளார் ... பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமுமில்லை ... டாஸ்  ஜெயித்திருக்கும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்யப் போகிறது ... ஜெயிக்கப் போவது யார் ? மூன்றரை மணி நேரம் எல்லோரும் காத்திருப்போம் ... 

23 September 2012

டி 20 - இந்தியா அபார வெற்றி ...


லங்கையில் நடந்து வரும் டி 20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்தை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது ... ஏற்கனவே இரண்டு அணிகளும் சூப்பர் 8 க்கு தகுதி பெற்று விட்ட போதிலும் அதற்கு முன்னோடியாக அமைந்த இந்த ஆட்டத்தில் இந்தியா நடப்பு டி 20 சேம்பியனை அபாரமாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ...

இந்திய அணியில் சேவாக் , ஜாகிர் , அஸ்வின் ஆகியோருக்கு ஒய்வு தரப்பட அதற்கு பதில் ஹர்பஜன் , சாவ்லா , திந்தா ஆகியோர் சேர்க்கப்பட்டனர் ... டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி கேப்டன் பிராட் இந்தியாவை பேட் செய்ய பணித்தார் ... துவக்க ஆட்டக்காரர்களாக கம்பீர் மற்று பதான் இறங்கினர் ... பதான் எட்டு ரன்களில் அவுட் ஆகி விட கம்பீர் - கோலி ஜோடி நிதானமாக ஆடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது ... கடைசியில் ரோஹித் சர்மா 50 ரன்களுக்கு மேல் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இந்தியா 170 ரன்களை எட்டுவதற்கு காரணமாக  அமைந்தார் ...

அடுத்து 171 ரன் இலக்கை நோக்கி ஆட வந்த இங்கிலாந்திற்கு முதல் ஓவரிலேயே விக்கட் எடுத்து பதான் அதிர்ச்சி கொடுத்தார் , அதை தொடர்ந்து ஹர்பஜன் - சாவ்லா ஜோடியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் 80 ரன்களுக்கு சுருண்டனர் ... இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச டி 20 ஸ்கோர் இதுவே ஆகும்... நான்கு ஓவர்கள் பந்து வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கட்களை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கிற்கு மேன் ஆப் தி மேட்ச் விருது கொடுக்கப்பட்டது ... அடுத்து நடக்கவிறுக்கும் சூப்பர் 8 போட்டிகளில் இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடன் இறங்கும் என்பதில் சந்தேகமேயில்லை ...

ஸ்கோர் : இந்தியா 170 / 4 ( ரோஹித் 52 * )
                     இங்கிலாந்து 80 ஆல் அவுட் ( ஹர்பஜன் 4 / 12 )


17 September 2012

ட்வென்டி 20 உலககோப்பை ...


லககோப்பை ட்வென்டி 20 கிரிக்கெட்  இன்று இலங்கையில் தொடங்குகிறது. மொத்தம் உள்ள நான்கு பிரிவுகளில் இந்தியா ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் களம் இறங்குகிறது ... முதல் டி 20 உலககோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்ற இந்திய அணி அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் சோபிக்கவில்லை ...

இது வரை நடந்துள்ள மூன்று டி20 உலககோப்பைகளையும் இந்தியா , பாகிஸ்தான் , இங்கிலாந்து உட்பட மூன்று வெவ்வேறு நாடுகள் வென்றிருப்பதும் , இந்த முறை யார் வெல்வார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியாததுமே ட்வென்டி 20 யின் சிறப்பம்சங்கள்... இலங்கைக்கு எதிராக இந்தியா சமீபத்தில் ஒரு நாள் தொடர் மற்றும் ஒரு ட்வென்டி 20 ஐ அந்த நாட்டிலேயே வென்றிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக  அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

இந்திய அணியில் கோலி , பதான் , ரெய்னா ஆகியோர் பார்மில் இருப்பதும் , யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் நம்பிக்கை கொடுக்கின்றன , அதே சமயம் சென்னையில்  நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய ஆட்டத்தை தோனியின் மெத்தனமான போக்கால் தோற்றது டீமின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது. பயறிசி ஆட்டத்தில் இலங்கையை  எளிதாக வென்ற இந்தியா 185 ரன்கள் அடித்தும் பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்றுப் போனதும் இந்திய அணியை நம்ப முடியாதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் ...

மற்ற அணிகளை பொறுத்தவரை பாகிஸ்தான் , ஆஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். மேற்சொன்ன அணிகள் எல்லாம் டி 20 தர வரிசை  பட்டியலில் பின் தங்கியிருந்தாலும் அப்ரிடி  , ஹஸ்சி , கிரீஸ் கெய்ல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அந்த அணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது ...

நடப்பு சேம்பியன் இங்கிலாந்து , போட்டியை நடத்தும் இலங்கை , இந்தியாவை வென்று நம்பிக்கையில் இருக்கும் நியூசிலாந்து போன்ற அணிகளையும் நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது ... எந்த அணி ஜெயித்தாலும் நடப்பது உலககோப்பை டி 20 என்பதால் அடுத்த இருபது நாட்கள் ரசிகர்களுக்கு விறுவிறுப்பில் பஞ்சமிருக்காது என்று மட்டும் அடித்து சொல்லலாம் ...




26 February 2012

கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் , ஹாக்கியின் எழுச்சியும் ...!



இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தன் மூன்றாவது தோல்வியை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறது ... வழக்கம் போல இந்த தோல்வியின்  மூலமும் ஒரு போனஸ் புள்ளியை எதிரணிக்கு வாரி வழங்கிய இந்திய அணி , முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை
பெரும்பாலும் இழந்து விட்டது ...


அதே நேரத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட் என்னும் சுனாமியால் ஒரங்கட்டப்பட்டிருந்த ஹாக்கி இன்று பிரான்சுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி 8-1  என்ற கோல் கணக்கில் அபாரமாக  வெற்றி பெற்று லண்டனில் நடைபெறவிறுக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றதன் மூலம் உயிர்த்தெழுந்திருக்கிறது...

வெற்றி , தோல்விகள் விளையாட்டில் சகஜம் என்றாலும் உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ சஹாராவுடன் நடந்த தகராறு , ஐ.பி.எல் குளறுபடிகள் , நியோ ஸ்போர்ட்ஸ் சேனலுடன் ஒப்பந்த முறிவு , வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் , டி.ஆர்.பி ரேட்டிங்கில் பின்னடைவு , கடைசியாக தோனி - சேவாக் இடையேயான வெளிப்படையான ஈகோ சண்டை இவற்றால் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் , கேடபாரற்று கிடந்த ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றதோடு இன்று இறுதி ஆட்டத்தில் 7 கோல்கள் வித்தியாசத்தில் பிரான்சை வென்று எழுச்சி அடைந்து வருவது ஒரு பெரிய மாற்றத்திற்கான அடிகோலாக அமைந்திருக்கிறது ... 

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமயிலான கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதன் மூலம் ஹாக்கியின் பக்கம் இருந்த இந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது ... அதன் பிறகு சிறு சிறு போட்டிகளில் ஹாக்கி அணி வென்று வந்தாலும் இழந்த தன் ஆளுமையை அதனால் திரும்ப பெற முடியவில்லை ...கிரிக்கெட் வியாதி பட்டி தொட்டியெங்கும் பரவ ஹாக்கி ஆடப்பட்ட செம்மண் தளங்களில் கிரிக்கெட் ஸ்டம்புகள் வலுவாக ஊண்டப்பட்டன ...


ஒரு நாள் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸ் ,  போர் என்று விளாசிக்கொண்டிருக்க இந்திய ஹாக்கி குழு விளையாட்டை மேம்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் குளறுபடிகளில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது ஹாக்கியை மேலும் , மேலும் பலவீனப்படுத்தியது.. தன்ராஜ் பிள்ளைக்கு பிறகு பெரிய வீர்கள் யாரும் இல்லாமல் ஹாக்கி தத்தளித்துக் கொண்டிருக்க கிரிக்கெட்டிலோ  சச்சின் , கங்குலி , டிராவிட் , தோனி என நட்சத்திர வீர்களின் ஜொலிப்பில் ரசிகர்கள் தன்னை மறந்தார்கள்.
சினிமாவோ , விளையாட்டோ தோல்வி அடைவதை ரசிகன் விரும்புவதில்லை , எனவே ஹாக்கியின் தொடர் தோல்விகள் அந்த விளையாட்டை முற்றிலுமாக மறக்கடிக்க செய்தன ... 

இப்படி ஜாம்பவானாக இருந்து வெற்றிகளையும் தாண்டி இந்திய விளையாட்டு துறைக்கே சவால் விடுமளவு விஸ்வரூப வளர்ச்சி பெற்ற பி.சி.சி.ஐ இன்று அடுத்தடுத்து சந்தித்து வரும் சறுக்கல்களை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அமைந்திருக்கிறது இன்றைய தோல்வி...

ஐ.பி.எல் லில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணமும் , புகழும் இளம் கிரிக்கெட் வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு  தேவையான பொறுமையையும் , திறமையையும் சிதைத்து வருவதே இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்..இது நன்கு தெரிந்திருந்தும் போட்டிகளின் மூலமும் , விளம்பரங்கள் மூலமும் குவியும் கோடிகள் அனைவரின் வாய்களையும் அடைத்துவிடுகின்றன ... 


இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியிருந்த மைதானங்கள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் மேல் ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து வருவதையே பறை சாற்றுகின்றன , இதற்கு கூட முக்கிய காரணம் ஐ.பி.எல் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் என்ன  பயன் ? எல்லோரும் பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்க பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்பதை விட ஏன் மணி கட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள் ... 

உலககோப்பை வெற்றியை தொடர்ந்து நடந்த ஒரு டாக் ஷோவில் கவாஸ்கரிடம் ஏன் எல்லோரும் கிரிக்கெட்டின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு வெற்றியை மட்டுமே ரசிகர்கள் விரும்புவார்கள் என்று புன்னகையுடன் பதில் சொன்னார்...இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றால் கவாஸ்கரின் கூற்று உண்மையாவதற்கும் , சச்சின் , தோனி என்று சொல்லி வரும் ரசிகர்களின் உதடுகள் சந்தீப் , மன்ப்ரீத் என்று சொல்வதற்குமுண்டான வாய்ப்புகள் மிக பிரகாசமாகவே உள்ளன ... 

3 February 2012

அப்பாடா ஜெயிச்சாச்சு ...!


ரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது...அசால்டாக இருந்திருக்க வேண்டிய வெற்றி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ட்வென்டி - 20  உட்பட ஐந்து போட்டிகளில் மண்ணைக் கவ்விய இந்திய அணியால் அப்பாடா என்று சொல்லும்படியாகி விட்டது ... 

முதல் ட்வென்டி - 20  யில் 131 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை அதே 131 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது ... ஸ்பின்னர் ராகுல் மற்றும் பிரவீன் குமார் நன்றாக பௌலிங் போட்டிருந்தாலும் இளம் வீரர்களின் துடிப்பான பீல்டிங்கால் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் அவுட் ஆனதே ஆரம்பத்தில் அடித்து ஆடிய அந்த அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த காரணமாய் அமைந்தது ... 


முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வேட் இந்த மேட்சில் அதிகபட்சமாக 36  ரன்கள் அடித்தார் ... பின்னர் ஆடத்தொடங்கிய இந்திய அணிக்கு கம்பீர் மற்றும் சேவாக் நல்ல துவக்கத்தை கொடுத்தனர் ... ஸ்ட்ரைட்டில் சிக்ஸ் அடித்த சேவாக் பின் அதை தக்க வைத்துக்கொள்ளாமல் அவுட் ஆனாலும் கம்பீர் கடைசி வரை நின்று அரை சதம் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார் .... 

கோலியும் தன் பங்குக்கு கால் சதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆனார் ... சென்ற ட்வென்டி - 20  யில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்த கேப்டன் தோனி இந்த முறை அவுட்டாகாமல் கம்பிருக்கு உறுதுணையாக நின்றார் ... 

வரிசையான தோல்விகளால் துவண்டு போயிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த வெற்றி ஒரு சின்ன ஆறுதலை கொடுத்திருப்பதோடு அடுத்து பிப்ரவரி ஐந்தில் தொடங்கப்போகும் இந்திய - ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கும்  நல்ல முன்னோட்டமாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது ...

14 November 2011

நூறாவது நூறு ...

                      
    நம் நாட்டில் எவ்வளவோ மதங்கள் இருந்தாலும் கிரிக்கெட்டை தங்கள் மதமாகவும் , சச்சினை அதன் கடவுளாகவும் வழிபடும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் ...

    சச்சின் நூறாவது நூறை அடிக்க வேண்டும் என்ற நூறு கோடி இதயங்களின் வேண்டுதலே சாதாரணமான இந்தய - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை  அசாதரணமான எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது ... அதிலும் கடந்த முதல் டெஸ்டில் சச்சின் 76 ரன்களுக்கு அவுட் ஆனார் ... அவர் படபடப்புடன் இருந்தது அவருடைய சாட் செலக்ஷனில் நன்றாகவே தெரிந்தது.

    இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் சச்சின் பதட்டப்படாமல் தன்னுடைய  நேச்சுரல் கேமை ஆடினாலே தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்வார் என்பது வல்லுனர்களின் கணிப்பு... அதிலும் போட்டி அவருக்கு லக்கியான ஈடன் மைதானத்தில் நடைபெறுவதும் , வீக்கான மேற்கிந்திய தீவுகளுடன் மோதுவதும் அவருக்கு சாதகமாக இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள். ஏற்கனவே சச்சின் ஈடன் மைதானத்தில் மூன்று முறை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ...

                                     
    இந்த வருடம் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தன்னுடைய 99 வது அடித்த சச்சின் அதற்கு பிறகு மற்ற போட்டிகளில் நூறாவது சதத்தை அடிப்பார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க கடைசியில் மிஞ்சியது ஏமாற்றமே ...

    அதிலும் குறிப்பாக செமி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களுக்கு அவர் அவுட் ஆனதில் பலருக்கு பி.பி எகிறியது ... உலக கோப்பை வெற்றி தந்த மாபெரும் சந்தோசத்தில் அந்த ஏமாற்றம் சிறிது காலம் மறக்கப்பட்டது ...

    இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த பரபரப்பு தொற்றிக்கொண்டது ... இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் ஒட்டு மொத்த ஆட்டமும் சொதப்பலாக இருந்ததால் கடைசி டெஸ்டில் 9 ரன்களில் சச்சின் தவறவிட்ட சதம் பெரிய சத்தத்தை எழுப்பவில்லை ...இங்கிலாந்தை நாம் பழி தீர்த்த 5  ஒரு நாள் போட்டிகளிலும் காயம் காரணமாக சச்சின் இடம் பெறவில்லை ...

               
     சாதனையின் மறு பெயர் சச்சின் ... தன் பதினாறாவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இன்று வரை அதிக டெஸ்ட் ரன்கள் , அதிக ஓ.டி,ஐ ரன்கள் , ஒரே வருடத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர் இப்படி எத்தனையோ சாதனைகள் அவருக்கு பின்னால் இருந்தாலும் கடந்த 8  மாதங்களில்  ஒ.டி.ஐ மற்றும் 5  டெஸ்ட் மேட்ச்கள் ஆடியும் தன் நூறாவது சதத்தை பூர்த்தி செய்யாததில்   அனைவருக்கும் வருத்தமே ...

     அவருக்கும் வருத்தம் இருக்காதா என்ன? .சாதனைகள் நிறைய படைத்த சச்சினுக்கு மற்றொரு நிறைவேறப்போகும் சாதனையே  நூறாவது சதம் என்றாலும் , அது இந்திய மண்ணில் , அதிலும் புகழ் பெற்ற ஈடன் மைதானத்தில் நிறைவேறுமானால் ரசிகனுக்கு அதை விட சிறந்த சந்தோசம் வேறொன்றும் இருக்க முடியாது ...

14 October 2011

இந்திய அணி பழி தீர்க்குமா ? பதுங்கி விடுமா ? ...


                                                   
    இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது ... இந்திய மண்ணில் போட்டி நடைபெறுவதும் , ஏற்கனவே இந்தியா இங்கிலாந்தை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்கடித்திருப்பதும் நமக்கு சாதகமாக இருந்தாலும் , இங்கிலாந்தில் இந்திய அணி எட்டுக்கு பூஜ்ஜியம் என்று வாங்கிய உதையை யாரும் மறக்கவில்லை ... 


    உலககோப்பை வெற்றி தந்த மமதையில் மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பப்பட்ட கத்துக்குட்டி இந்திய அணி நன்றாக ஆடி வெற்றி வாகை சூடினாலும் வலிமையான இங்கிலாந்து அணிக்கு முன் அந்த ஜம்பம் எடுபடவில்லை...


     ஐ.பி.எல் போட்டிக்கு எல்லா நாட்டு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆட வர அப்பொழுது கூட இங்கிலாந்து அணியினர் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதன் பலன் வீண்போகவில்லை ... சவாலாக இருக்கும் என்று நினைத்த இந்திய அணி இப்படி சரண்டர் ஆகுமென்று அவர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ... 



    இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு எதிரான வியூகம் சரியில்லாததும் , காயம் காரணமாக ஜாகிர் , சேவாக் போன்றோர் ஆடாததும் , திராவிட் தவிர யாரும் பார்மில் இல்லாததும் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டாலும் , இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியன் பைசா லீக்  கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்காததே மிக முக்கிய காரணம் ... 
                                      
     இதற்கு நேர்மாறான போக்கே இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் நல்ல வெற்றிகளை தேடித்தந்தது ... இது போன்ற டூர்களில் வழிநடத்த கிறிஸ்டன் இல்லாததும் பெரிய இழப்பு ... டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் இடத்தை இழந்ததும் , நூறாவது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் அதை நிறைவேற்றாததும் பெரிய ஏமாற்றங்கள் ... கேப்டன் ஆனதிலிருந்து 11 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியை கண்டிராத தோனிக்கும் இது மறக்க வேண்டிய தொடராகவே அமைந்திருக்கும் ... 

                                 
    டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ட்வென்டி - ட்வென்டி , ஒரு நாள் தொடர் இவற்றிலும்  சச்சின் , சேவாக் , யுவராஜ் , ஜாகிர் போன்ற சீனியர்கள் ஆடா விட்டாலும் தோனியின் தலைமையிலான ரைனா , கோலி , பிரவீன் உள்ளிட்ட இளம் இந்திய அணி கிடைத்த ஒன்றிரண்டு வெற்றி வாய்ப்புகளையும் நழுவ விட்டது ...

   சீனியர் வீரர்களின் காயம் ஒருபுறம் , தோல்வி கொடுத்த பயம் மறுபுறம் இவையிரண்டிற்கும் இடையே தேர்வுக்குழு திராவிட மாயையில் சிக்கியதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை ... அவரும் இந்த ஒரு நாள் தொடருடன் நிம்மதியாய் நிறைவு பெற்றார் ... அறிமுக வீரர் அஜன்கிய ரஹானேவின் ஆட்டம் மட்டுமே ஓரளவு நிம்மதி கொடுத்தது ...


    ஆனால் இந்த முறை ஆட்டம் இந்திய மண்ணில் நடைபெறுவதால் அணியில் அரவிந்த் , வரோன் , ராகுல் ஷர்மா உள்ளிட்ட இளம் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து இந்த பரீட்சார்த்த முயற்சி தொடருமா என்பது கேள்விக்குறியே ... பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்களில் தங்களை நிரூபிக்க அவர்களும் போராட வேண்டியிருக்கும் ...  ஹர்பஜனுக்கு இது நல்ல பிரேக் ... சாம்பியன் லீக் இறுதி போட்டியில் மும்பையின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தது இதற்கு சான்று ...

    சச்சின் , சேவாக் இல்லாத நிலையில் குக் தலைமையின் கீழ் வலுவான இங்கிலாந்து அணியை தோனியின் இளம் இந்திய அணி சொந்த மண்ணில் பழி தீர்க்குமா ? இல்லை பதுங்கி விடுமா ? இரு வாரங்களில் தெரிந்து விடும் ...

29 May 2011

இந்தியன் பைசா லீக்

                         தோனியின்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி  தொடர்ச்சியாக இரண்டாவது முறை  ஐ.பி.எல் கோப்பையை தட்டிச் சென்றதன் மூலம் தான் ஒரு தலை சிறந்த கேப்டன் என்பதை தோனி  மீண்டும் நிரூபித்து இருக்கிறார்..நேற்று சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ...
                      
       2007  ஆம் ஆண்டு நடந்த 20 -20  உலக கோப்பையை தொடர்ந்து , 2010  ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பை , அதே ஆண்டு நடந்த ஏர்டெல் சாம்பியன்ஷிப் கோப்பை , 2011  ஆம்  ஆண்டிற்கான 
50 ஓவர் உலகக்கோப்பை   என்று நான்கு ஆண்டுகளில் அவர் தலைமையின் கீழ் 
அணிகள் ஐந்து  பெரிய   வெற்றிகளை குவித்திருப்பது தோனியின் சிறப்பம்சம்...
             இதையெல்லாம் விட டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை ஒரு வருடத்திற்கும்  மேலாக தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது...
             தோனியின் வருகை வெறும் வேகம் -விவேகம் அல்ல என்பதை நிரூபிப்பதோடு உத்வேகத்திற்க்கான அடையாளத்தையே மாற்றியிருப்பதும் தோனியின் பாணி...
                                    
              கேப்டன் என்பவன் அணியை முன் நின்று வழி நடத்தி செல்பவன் மட்டும் அல்ல அணியில் உள்ளவர்களை அவர்களின் திறமைக்கேற்ப முன்னிறுத்தி அவர்களை பின் நின்று காப்பவனும் கூட
என்ற  தத்துவத்தை விளையாட்டு உலகிற்கு மட்டுமல்லாமல் 
 தலைமைப் பொறுப்பில் உள்ள எல்லா துறையினருக்கும்
தன் வெற்றிகளின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் தோனி   ...
               தன் தலைமையின் கீழான அணியை தனிப்பட்ட எவரையும் நம்பும்
படி வைக்காமல் அணியாக ஆட வைத்ததும், அவரவர் தங்கள் பங்கிற்கு சிறப்பாக செயல்பட்டதும் தோனியின் பலம்..
               சரியோ தவறோ தனக்கு தோன்றும் முடிவுகளை தயக்கமின்றி எடுப்பது , அதனை எந்த வித மறு யோசனையும்  இல்லாமல் செயல்படுத்துவது , தான் எடுக்கும் முடிவுகளின்
எதிர் மறையான பின் விளைவுகளின் முழுப் பொறுப்பையும் தானே
ஏற்றுக்கொள்வது , சரிவு ஏற்படும் நேரங்களில் முன்
நின்று தன்னம்பிக்கையுடன் வழி நடத்துவது என்று தலைமைப் பண்பிற்கான அனைத்து அம்சங்களும் தோனியிடம் உள்ளன...உலகக்கோப்பை
இறுதிப்போட்டி இதற்கு ஒரு உதாரணம்.....
                                          
                சூதாட்ட புகார்களில் சிக்கி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டது
கங்குலியின் தலைமை..அது வரை தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த இந்திய
அணியை தலை நிமிர்ந்து எதிரிகளை கண்ணோடு கண் பார்க்க வைத்து ஓட விரட்டியது
கங்குலியின் உத்வேகம்..
              கங்குலியின்  தலைமையின் கீழ் மெருகேறிய  யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் , சேவாக் போன்றவர்கள்
இன்று தோனி சர்வதேச போட்டிகளில் குவிக்கும் வெற்றிகளுக்கு பெரிதும்
காரணமாக இருபதையும் யாரும் மறுக்க முடியாது....
             கங்குலி,திராவிடுக்கு பிறகு கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேவாக் சரியான பார்மில் இல்லாததும் , யுவராஜ்,ஹர்பஜன் போன்றவர்களின் நடவடிக்கைகளின் மீது தேர்வுக்குழுவினருக்கு
போதிய நம்பிக்கை இல்லாததும் தோனியின் மீது அதிர்ஷ்டக் காற்று வீச
காரணமான விஷயங்கள்...
               அதிர்ஷ்டம் இல்லையென்றால் சர்வதேச போட்டிகளில் மூன்றே வருட அனுபவம் பெற்ற தோனி தன்னை விட
மூத்த வீரர்களை தாண்டி கேப்டன் பதவியை அடைந்திருக்க முடியாது..
ஆனால் திறமையும்,உழைப்பும்,சாதுர்யமும் உள்ளவர்களையே அதிர்ஷ்டம்
அணைத்துக் கொள்ளும் என்பது தோனியின் வளர்ச்சியைப் பார்த்து
நாம் தெரிந்து கொள்ளும் உண்மை....அதே நேரத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பெற்ற  வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக
இருந்தது க்ரிஷ்டனின் பயிற்சி...அர்ஜுனனுக்கு எப்படி ஒரு கிருஷ்ணனோ
அதே போல தோனிக்கு ஒரு க்ரிஷ்டன்..
                                             
            சென்னை ஐ.பி.எல் கோப்பையை வென்றது ஒரு பக்கம் சந்தோசமாக
இருந்தாலும் ஒன்றிரண்டு போட்டிகளை தவிர மற்றவை எல்லாம் விறுவிறுப்பாக இல்லாதது பெரிய குறை..சர்ச்சைகளுக்கு பெயர் போன
ஐ.பி.எல் இந்த முறையும் வீரர்கள் நாட்டுக்கு ஆடுவதை விட காசுக்கு ஆடுவதற்கே
முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது..
              இது உண்மை தான் என்பதை மலிங்கா , கிரீஸ் கெயில் போன்றவர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள்....ஆனால்
கம்பீர்,யுவராஜ்,சச்சின் போன்றவர்களும்  ஐ.பி.எல் தொடரை முழுமையாக
ஆடி விட்டு இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து
தங்களை விளக்கி கொண்டதன் மூலம் இந்த சர்ச்சை மேலும் வலுத்திருக்கிறது...அதிலும் குறிப்பாக நூறாவது சர்வதேச சத்தத்தை அடிப்பார் என்று எதிபார்க்கப்பட்ட சச்சின் விலகி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.....
                                                
                மூத்த வீரர்கள் விலகிக் கொண்டதன் மூலம் பத்ரிநாத்,சிக்கர் தவான்,
மனோஜ் திவாரி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது
சந்தோசம்..முன்பிருந்தது போல மேற்கிந்திய தீவுகள் அணி பலம் வாய்ந்ததாக இல்லாததும் , அவர்களின் ஆடுகளம் வேகப்பந்திற்கு பெரிய
அளவு சாதகமாக இல்லாததும் மூத்த வீரர்கள் விலகியதற்க்கும், இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்...
              இருப்பினும் உலகக்கோப்பையை தொடர்ந்து ஐ.பில்.எல்,அதை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர்,பின்னர் இங்கிலாந்து தொடர் என்று வரிசையாக இருப்பது தெரிந்திருந்தும் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.
ஆடுவதற்கே அதிக ஆர்வம் காட்டியிருப்பது ஐ.பி.எல் ஐ
"இந்தியன் பிரீமியர் லீக்" என்று அழைப்பதை விட
"இந்தியன் பைசா லீக்" என்று அழைப்பதே பொருத்தம் என சொல்ல வைக்கிறது.........
           


         
Related Posts Plugin for WordPress, Blogger...