Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

6 March 2012

தேர்தல் முடிவுகள் - காங்கிரஸை "கை" கழுவிய மக்கள் ...


த்திரபிரதேசம் , பஞ்சாப் , உத்ராகந்த் , மணிப்பூர் , கோவா என ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன ... இதில் உ.பி , பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது , குறிப்பாக  403 தொகுதிகள் அடங்கிய உ.பி யில் ஆட்சியை பிடிப்பவர்கள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது அரசியல் வரலாறு ...

அதனால் தான் மாநில கட்சிகளான எஸ்.பி , பி.எஸ்.பி இரண்டுடனும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸ் , பி.ஜே.பி ஆகிய தேசிய கட்சிகளும் மிகுந்த வலிமையுடன் களத்தில் இறங்கின ... எப்போதுமே குடும்ப அரசியலை நம்பாத பி.ஜே.பி உமாபாரதியை நட்சத்திர பேச்சாளராக களமிறக்க , காங்கிரஸ் வழக்கம் போல ராகுல் காந்தியை களமிறக்கியது ...



இந்த தடவையும் ராகுல் காந்தி கூட்டிய  200  க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு கை தட்ட கூட்டம் கூடியதே ஒழிய " கை " க்கு ஒட்டு போடுவதற்கு அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன ... பீகார் , குஜராத் தேர்தல்களை தொடர்ந்து ராகுல் மீண்டும் மண்ணை கவ்வியிருப்பது அவர் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்பதையே காட்டுகிறது ...

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் , கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 95 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த காங்கிரசிற்கு இது பெரிய அடி ... எதிர்பார்த்ததை போலவே தனிப்பெரும் கட்சியாக 224 தொகுதிகளை கைப்பற்றியுருக்கும்  எஸ்.பி தனித்து ஆட்சியமைக்க போவது உறுதியாகிவிட்டது ... இந்த வெற்றிக்கு முலாயம் சிங்கின் புதல்வன் அகிலேஷின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது ...

80 சீட்களை மட்டும் வென்ற பி.எஸ்.பி ஆட்சியை இழந்து விட்டது ... சட்டம் , ஒழுங்கை கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டாலும் மாயாவதியின் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் ... சென்ற முறை இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்த பிராமண , தாகூர் சமூகத்தினர் இம்முறை பி.ஜே.பி , காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததும் பி.எஸ்.பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் ...


பி.ஜே.பி யை பொறுத்த வரை கடந்த முறை பெற்ற 51 சீட்களை விட 2 சீட்கள் குறைவாக பெற்றது சறுக்கல் தான் என்றாலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்ததை எண்ணி வேண்டுமானால் சந்தோசப்பட்டு கொள்ளலாம் ...

பஞ்சாபிலும் வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியான அகாலி தள் - பி.ஜே.பி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ... ஆட்சியை பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 46 இடங்களையே வென்றிருக்கிறது ...

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல கோவாவிலும் 9 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை பி.ஜே.பியிடம் இழந்த காங்கிரசிற்கு ஒரே ஆறுதல் மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பதே , அதே போல உத்ராகந்தை பொறுத்த வரை ஆளும் பி.ஜே.பி , காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தாலும் பி.ஜே.பி யே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்படுவதும் காங்கிரஸிற்கு நிச்சயம் கலக்கத்தை கொடுத்திருக்கும் ...


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பல காங்கிரஸ் தலைவர்கள் உ.பி யில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் இல்லை , உள்ளூர் தலைவர்களே காரணம் என்பது போல பேச ஆரம்பித்துவிட்டார்கள் ...இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உ.பி யில் காங்கிரஸ் அடையப்போகும் வெற்றிக்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்று சொல்லி வந்தார்களே என கேட்டால் வடிவேலு பாணியில் அது போன வாரம் , இது இந்த வாரம் என்று சொல்வார்களோ என்னவோ , அவர்களுக்கு தான் மக்களின் மறதி மேல் எவ்வளவு  நம்பிக்கை !

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்து 2014  இல் நடக்க போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று சொல்லப்பட்டாலும் , காங்கிரஸின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையும்  , நேரு குடும்பத்தில் இருந்து யாராவது போய் நின்றாலே மக்கள் ஓட்டளித்து விடுவார்கள் என்ற காங்கிரஸாரின் நினைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும் இதை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம் ...

இனி வரப்போகும் தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியை காங்கிரஸ் அனுப்புகிறதோ இல்லையோ பி.ஜே.பி உட்பட மற்ற எதிர்கட்சிகள் அவர் வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்ளும் என நினைக்கிறேன் , ஏனெனில் அவர் ராசி அப்படி ...

ஒரு பக்கம் முடிவுகள் இப்படியிருந்தாலும் 2014 க்குள் பி.ஜே.பி தங்களுடைய  பிரதம வேட்பாளர் யார் என்பதில் ஒரு தீர்மானத்தையும் , கட்சிக்குள் உள்ள பூசலை  களைவதற்குரிய நடவடிக்கைகளையும்  இப்பொழுதிலிருந்தே  எடுக்காவிட்டால் மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அவர்களே வழியமைத்து விடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ...

( மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் முடிவு எண்ணிக்கையில் சிற்சில மாற்றங்களை நாளை எதிர்பார்க்கலாம் ) 

17 November 2011

கூட்டணி தர்மம் ...


            
    " ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் " என்றார்  பாரதி . " எது தர்மம் " என்பது பற்றி அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கினார் சாணக்கியன் , ஆனால் இதையெல்லாம் விட தர்மம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அரசியல்வாதிகளால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் தர்மம் " கூட்டணி தர்மம் " ...

    பொது ஜனம் எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் பதவி பறிபோய் விடக்கூடாதென்பதே இந்த தர்மத்தின் முக்கிய குறிக்கோள்..இது மட்டுமல்ல இன்னும் நிறைய கிளை குறிக்கோள்கள் , கொள்கைகள் ... இந்த கூட்டணி தர்மத்திற்காக கட்சி தலைவர்கள் என்னவெல்லாம்  செய்கிறார்கள் அல்லது செய்யலாம் என்பது பற்றிய சில குறிப்புகள் இதோ ...

    முதலில் தன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழல் செய்ய போகிறார் என்று திட்டவட்டமாக தெரிந்திருந்தாலும் பிரதமர் கடிதம் எழுவதை தவிர வேறொன்றையும் செய்து விடக்கூடாது , அதிலும் அந்த கடிதத்தில்  ஊழல் செய்யலாமா , கூடாதா என்பதையெல்லாம் தெளிவாக விளக்காமல் விட வேண்டும் ...

                                                         
     பதில் கடிதத்தில் அமைச்சர் இல்லையில்லை நான் என் கட்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஊழல் தான் செய்வேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை தடுப்பது போல நேரடியாக எந்தவொரு பதில் கடிதமும் போட்டு விடக்கூடாது , அதே சமயம் நீங்கள் செய்யப்போகும் ஊழல் நிச்சயம் நல்ல திட்டமே , இருப்பினும் பிற்காலத்தில் ஏதும் சிக்கல் வராமல் இருக்க மற்ற இலாக்கா அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யலாம் என்று வேண்டுமானால் அறிவுரை வழங்கலாம் ...

    இரண்டாவது , கூட்டாக எவ்வளவு கொள்ளையடித்தாலும் தனியாக யாரையும் மாட்டி விடக்கூடாது   , அப்படியே ஊழல் சில லட்சம் கோடிகளை தாண்டும் போது அது சம்பந்தமாக நடவடிக்கைகளே எடுக்காமல் ஏதாவது அறிக்கைகள்  விட்டும் பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சிகளும் நிறைய அமளி துமளி செய்தால் கூட்டணி கட்சி தலைவருடன் அமர்ந்து பேசி அவர் கை காட்டும் நபரை சில நிபந்தனைகளுடன் மாட்டி விடலாம்...
                                       
    நிபந்தனைகளின் படி மாட்டிவிடப்படும் நபருக்கு சி.பி.ஐ ரெய்ட் வரப்போவதை  முன் கூட்டியே தெரிவித்து முடிந்தவரை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைக்குமாறு சொல்லிவிட வேண்டும் . அதையும் மீறி அவர் மாட்டும் போது சட்டம் தன்  கடமையை செய்யும் என்று அறிக்கை விடலாம்...

                         
    அடுத்ததாக , கைதானவரை வெளியில் விட சொல்லி கூட்டணி கட்சி தலைவர் நச்சரிக்கும் சமயத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் நிற்க வைப்பதற்கு வேட்பாளர்களே இல்லையென்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் போது , எப்படியிருந்தாலும் தோறகத்தானே போகிறோம் என்ற உண்மை தெரிந்தும் ஏன் இவ்வளவு தொகுதிகள் கேட்கிறார்கள் என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் கூட்டணி கட்சி தலைவரும் விட்டுக்கொடுத்து விட வேண்டும் ...

     இலங்கை அரசு ஈழ தமிழர்களை அழிப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்வது தெரிந்திருந்தும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் .அதையும் மீறி  மனம் வெதும்பினால் ஏர் கூலரில் காற்று வாங்கியபடியே சொந்தங்கள் புடை சூழ  கூட்டணி கட்சி தலைவர் குடும்ப தொலைக்காட்சியில் கொலு பொம்மை போல அரை நாள் லைவ் ஷோ காட்டலாம் .

    அதுவும் போதாதென்றால் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்த பிரதமருக்கு தமிழிலேயே கடிதம் எழுதலாம் , பிரதமருக்கு தான் தமிழ் தெரியாதே என்று யாராவது தமிழ் பற்றே இல்லாமல் கேள்வி கேட்டால் , புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சாமர்த்தியமாக பதில் சொல்லலாம் .

                               
     ஈழ தமிழர்களுக்காக என் உயிரையே தருவேன் என கட்டுரை எழுதலாம் , யாராவது ஏன் இன்னும் உயிரை விடவில்லை என்று குசும்பாக கேட்டால் நான் போய் விட்டால் தமிழர்களை யார் காப்பற்றுவார்கள் என்று பதில் கேள்வி கேட்டு மடக்கி விடலாம் ...

     தன் கட்சியை சேர்ந்த தமிழர்களின் பதவிக்காகவும் , தமிழச்சியான தன் மகளின் ஜாமீனுக்காகவும் தான் நாம் டில்லி போகிறோம் என்பது கூட  தெரியாமல் ஏன் ஈழ தமிழர்கள் பிரச்சனைக்காக நீங்கள் டில்லி செல்லவில்லை என்று யாராவது கேட்டால் அப்படி கேட்பவர்கள் தமிழர்களே அல்ல , ஆரியர்கள் என்று பதில் சொல்லலாம் ...

     பெட்ரோல் விலையை குறைக்கா விட்டால் நான் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என பிரதமர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து சொல்லிவிட்டு , அவருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு மம்தா அந்தர் பல்டியடித்ததை விடவா என்  தமிழ்பற்று மோசம் என்று கூட சொல்லி மழுப்பலாம் ...

    விலைவாசி உயர்வுக்கு மக்கள் அதிகமாக மீன் முட்டை என்று உணவை வெளுத்து வாங்குவது தான் காரணம் என்று பிரணாப் சொன்னதை மேற்கோள்காட்டி அன்னா வழியில் எல்லோரையும் உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்... ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பிறகும் " தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது " என்று சொல்லும் பிரதமரை விட வேறு யாரால் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கவோ , ஒடுக்கவோ முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கலாம் ...


                           
     மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் , டீசல் , காய்கறி இவற்றின் விலைகளை ஏற்றி இந்திய பொருளாதாரத்தையே ஏற்றத்தில் வைத்திருக்கும் மத்திய அரசின் நல்லாட்சி கவிழ்ந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூட்டணியில் தொடர்ந்தால் அது புரியாமல் மாநிலத்தில் ஆட்சி பறிபோய் ,  மகளும் ஜாமீனில் வர முடியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மத்திய அரசுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சுயமரியாதையை சுரண்டி பார்க்கும்  போது உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று சுயத்தை காட்டலாம் ...

     இப்படி பல கட்சிகள் தனித்தனியாக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதோடு , தீவிரவாதம் , ஊழல் , விலைவாசி உயர்வு , சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இப்படி மத்திய அரசுக்கு எதிராக நிறைய  குற்றச்சாட்டுக்கள் இருந்தும் தங்கள் ஆதரவை மட்டும் வாபஸ் பெற்று விடக்கூடாது என்ற தர்மத்தையும் கூட்டாக கடைபிடிக்கின்றன ...

    இதற்கு கட்சிகளின் பதவி ஆசையோ , இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் சௌகரியமாக கொள்ளையடிக்க முடியும் என்ற நினைப்போ , தேர்தலை சந்திக்க பயமோ மட்டும் காரணம் அல்ல . சினிமாவில் ஹீரோ என்ன வேண்டுமானால் செய்யலாம் , ஆனால் ஹீரோயின் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அடிமட்ட ரசிகன் நினைப்பது போல காங்கரஸின் குறைகள் மக்களுக்கே பழகிப் போன பிறகு , பல கட்சிகளுக்கு மாற்று கட்சியை விட காங்கிரசுடன் கூட்டு சேர்வது வசதியாகி விட்டதும் மிக முக்கிய காரணம் ...
Related Posts Plugin for WordPress, Blogger...