Showing posts with label கர்ணன். Show all posts
Showing posts with label கர்ணன். Show all posts

18 April 2012

பழையன புகுதலும் - பார்க்கத் துடிக்கும் படங்கள் ...



ந்த வருடம் வெளியான படங்களில் " கர்ணன் " சிறிய முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டியிருப்பது திரைத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பதோடு , கர்ணன் போல ஏற்கனவே பெரிய வெற்றியடைந்த படங்களை மீண்டும் மறு வெளியீடு செய்வதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபடவும் வைத்திருக்கிறது ... இது போன்று எல்லா படங்களையும் மறு வெளியீடு செய்வார்களா என்று தெரியவில்லை , ஆனால் ஒரு ரசிகனாக நான் திரையில் பார்க்க விரும்பும் எவர் கிரீன் படங்களின் பட்டியல் இதோ :


சந்திரலேகா

எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு , இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு $ 600000 /. பட்ஜெட்டில் அந்த காலகட்டத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசான முதல் தமிழ் படம் " சந்திரலேகா " .எம்.கே.ராதா , டி.ஆர்.ராஜகுமாரி , ரஞ்சன் , என்.எஸ்,கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இப்படம் பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் என்றே சொல்லலாம்



வீர பாண்டிய கட்டபொம்மன்

பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் ஜெமினி கணேசன் , பத்மினி உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து  1959 ஆம் ஆண்டு வெளியான " வீர பாண்டிய கட்டபொம்மன் " வசூலில் சக்கை போடு போட்டதுடன் நடிகர் திலகத்திற்கு ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகருக்கான விருதையும் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது ... ஆக்ஸ் துறையுடன் சிம்ம குரலில் சிவாஜி பேசிய வசனங்களை பெரிய திரையில் பார்ப்பது போல நினைத்து பார்த்தாலே உடல் புல்லரிக்கிறது ...

திருவிளையாடல்

சிவாஜி - சாவித்திரி ஜோடியில் வெளி வந்த மற்றுமொரு வெற்றி படம்
" திருவிளையாடல் " ... ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளியான படத்தில் எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் இருந்தாலும் என்றுமே நினைவில் நீங்காமல் இருப்பது சிவபெருமானாக நடித்த சிவாஜிக்கும் , தருமியாக நடித்த நாகேசுக்கும் இடையேயான வசனங்களும் , பால முரளி கிருஷ்ணா குரலில் " ஒரு நாள் போதுமா " பாடலும் ...


ஆயிரத்தில் ஒருவன்

சிறு வயதிலிருந்தே நான் சிவாஜி ரசிகனாக இருந்தாலும் எம்.ஜி.ஆரை பார்த்து முற்றிலும் பிரமித்த படம் " ஆயிரத்தில் ஒருவன் " ...1965  இல் சிவாஜிக்கு ஒரு திருவிளையாடல் என்றால் எம்.ஜி.ஆருக்கு " ஆயிரத்தில் ஒருவன் " ... எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா , நம்பியார் , நாகேஷ் போன்றவர்களின் நடிப்பிற்காகவும் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வாலி எழுதிய கருத்தாழம் மிக்க பாடல்களுக்காகவும் எத்தனை  முறை பார்த்தாலும் சலிக்காத படம் ...


 
எங்க வீட்டு பிள்ளை

டபுள் ஆக்டிங்கில் ஆள் மாறாட்டத்தை வைத்து எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் அவை எவையும் " எங்க வீட்டு பிள்ளை " யை மிஞ்ச முடியாது. வாலியின் வரிகளில் " நான் ஆணையிட்டால் " பாடல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக போவதை மக்களுக்கு முன் கூட்டியே உணர்த்தியது ...

காதலிக்க நேரமில்லை

பெரிய ஹீரோக்கள் படம் மட்டும் தான் மனதில் நிற்க வேண்டுமா ? நிச்சயம் இல்லை என்று " காதலிக்க நேரமில்லை " படம் பார்த்த அனைவரும் சொல்வார்கள் ... அறிமுக ஹீரோ ரவிச்சந்திரன் , காஞ்சனா , முத்துராமன் , நாகேஷ் இவர்கள் கூட்டணியுடன் , விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையும், ஸ்ரீதரின் இயக்கமும் யாரமையுமே படம் பார்க்க நேரமில்லை என்று சொல்ல வைக்காது ... நாகேஷ் , பாலையாவிடம் சொல்லும் பேய் கதையை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும் ...



அதே கண்கள்
 
ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த ரவிச்சந்திரனை ஆக்சன் ஹீரோவாகவும் ஆக்கிய அருமையான த்ரில்லர் படம் " அதே கண்கள் " , த்ரில்லர் படமாக இருந்தாலும் நாகேஷ் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம் ... 

16 வயதினிலே


ரஜினி , கமல்
இருவரும் இணைந்து நடித்த எத்தனையோ படங்களுள் அவர்களின் நடிப்புக்காக மட்டுமின்றி , வெறும் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளி உலகுக்கு எடுத்து வந்த ட்ரென்ட் செட்டர் பாரதிராஜாவின் இயக்கத்திற்காகவும் இன்றளவும் பேசப்படும் படம் " 16  வயதினிலே " ... இவை தவிர மயிலாக ஸ்ரீதேவியின் நடிப்பு , கவுண்ட மணியின் அறிமுகம் , இசைஞானியின் இசை இவையெல்லாம் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள் ...


நாயகன்

தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை உடைத்ததில் பாரதிராஜா ஒரு ட்ரென்ட் செட்டர் என்றால் அதை " நாயகன் " படத்தின் மூலம் தொழில் நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற விதத்தில் மணிரத்னம் ஒரு ட்ரென்ட் செட்டர் ... கமல் , தோட்டா தரணி , பி.சி.ஸ்ரீராம் இவர்களுக்கெல்லாம் இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்ததில் சந்தோஷம் என்றாலும் இசைஞானிக்கு கிடைக்காமல் போனது காலத்திற்கும் மனதில் நிற்கும் வருத்தம் ... 




பாட்ஷா

எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ஹீரோ சூப்பர் ஸ்டார் " ரஜினிகாந்த் " ... அவரை மாஸ் ஹீரோவாக முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் " பாட்ஷா " தான் மாஸ் ஹீரோயிசத்தின் உச்சக்கட்டம் ... " நான் ஒரு தடவ சொன்னா " என்ற பாலகுமாரனின் வசனத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி கோடி தடவை கூட கேட்கலாம் ... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் " பாட்ஷா " ...


28 March 2012

கர்ணன் , நடிப்புலக கர்ணன் - காலத்தை வென்றவர்கள் ...!


பொதுவாக ஒரு படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டால் அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்வதை நான் தவிர்ப்பது வழக்கம் ... ஆனால்  38  ஆண்டுகளுக்கு முன் பி.ஆர்.பந்துலு - சிவாஜிகணேசன் கூட்டணியில் வெளியாகி , மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை பற்றி எழுதாமல் விட்டால் நான் பதிவுலக பாவியாகி விடுவேனோ என்ற பயத்தால் கர்ணன் படம் , சிவாஜி இவர்களை பற்றிய எனது அனுபவங்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் ...

என் அப்பாவும் , பெரிய அண்ணனும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள் , அதிலும் என் அப்பா மதுரையில் சிவாஜி படத்தை பார்க்க முடியாமல் போனால் கூட சைக்கிளை எடுத்துக்கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் போய் பக்கத்து ஊரிலாவது படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுமளவிற்கு சிவாஜியின் தீவிர வெறியர் ... சிறு வயதிலிருந்தே இவர்களை பார்த்து வளர்ந்த எனக்கு சிவாஜியின் பாதிப்பு இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை ...

சிவாஜியின் நடை , உடை ,பேச்சு என எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றும் எத்தனையோ ரசிகர்களை நான் சிறு வயதில் சந்தித்து வியந்திருக்கிறேன் ... பிறகு கொஞ்சம் , கொஞ்சமாக கமல் என்னை ஆக்ரமிக்க தொடங்கியும் என்னால் சிவாஜியின் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை ... ரஜினி , கமல் இருவரும் கோலோச்சிய பிறகும் கூட சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த " திரிசூலம் " படம் 200  நாட்களுக்கு மேல் ஓடியது ...


கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்"  என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...

பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தாலும் பத்துக்கு மேல் வந்து படத்தின் வேகத்தை குறைப்பதென்னவோ உண்மை ... எல்லா சிறந்த படங்களிலும் இருப்பது போல இப்படத்திலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன , ஆனால் அவையெல்லாம் சூரியனை கண்ட இருளை போல சிவாஜிக்கு முன் மறைந்து விடுகின்றன ...
 

படம் ஆரம்பித்ததிலிருந்தே சிவாஜியின் கர்ஜனை தொடங்கி விடுகிறது ... வில்வித்தை போட்டி நடக்கும் போது அர்ஜுனனுக்கு எதிராக சவால் விடுப்பது , பிறகு குலத்தை காரணம் காட்டி தன்னை அனைவரும் இழிவு படுத்தும் போது கூனி குறுகி நிற்பது , ஆட்ட மும்முரத்தில் நண்பனின் மனைவியை இடுப்பில் தட்டி நிறுத்திவிட்டு தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் துடிப்பது , தான் உதாசீனப்படுத்தப்படுவது தெரிந்ததும் பீஷ்மருடன் நேருக்கு நேர் மோதுவது , கோபத்தில் மாமனாருடன் உறுமுவது , தன் இழி நிலைக்கு காரணமான தாயை கொலை செய்ய வேண்டும் என்று கர்ஜித்து விட்டு பின் தாய் யாரென்பதை அறிந்ததும் குழந்தை போல அழுவது என சிவாஜியின் நடிப்பில் அரங்கமே மெஷ்மெரிசம் செய்யப்பட்ட காட்சிகள் ஏராளம் ...

சிவாஜியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து தன் இயல்பான நடிப்பால் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் சாவித்திரி ... இந்த இரண்டு ஜாம்பவான்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்வதென்று புரியாதது போல பாவம் விழிக்கிறார் அசோகன் ... சிவாஜிக்கு அடுத்த  படியாக அதிக கைத்தட்டல் பெறுபவர் கிருஷ்ணராக நடித்த என்.டி.ஆர் , சொல்லப்போனால் இவர் வந்த பிறகு படம் இன்னும் சூடு பிடிக்கிறது... சூட்சுமமாக அவர் பேசும் வசனங்கள் அருமை ...



சதி திட்டத்தால் கர்ணனை அவர் வீழ்த்தி விட்டு அழிந்தது உடல் தானே தவிர, ஆன்மா அல்ல , தர்மத்தை நிலை நிறுத்த இது போன்ற செயல்கள் அவசியமே என்றெல்லாம் தத்துவங்கள் பேசுவதை புத்தி ஏற்றுக்கொண்டாலும் மனம் ஏற்க மறுக்கிறது ... ஏன் கடவுள் மேல் கோபமே வருகிறது , ஏனெனில் இறந்து கிடப்பது கர்ணன் மட்டுமா  ? கர்ணனை நடிப்பால் எமக்கு காட்டிய நடிகர் திலகமல்லவா ?! ... கடைசியில் மாஸ் ஹீரோ இறப்பது போல காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு கர்ணன் படம் நல்ல உதாரணம் , அதனால் தானோ என்னவோ படம்  1964  இல் வெளியான போது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ( தளபதியில் இந்த முடிவை தவிர்த்ததால் படம் வெற்றி பெற்றது ) ..

அதே சமயத்தில் வாழும் போது உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாவிட்டாலும் சாவிற்கு பின் நீங்கா புகழால் எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதியை போல இன்று வரை பல முறை மறு வெளீயீடு செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்துக்கொண்டிருக்கும் படம் கர்ணன் ...

ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிவாஜியை கேலி பேசுபவர்கள் நிச்சயம் அவர் இது போல நடித்திருக்காவிட்டால் கர்ணனாய் , கப்பலோட்டிய தமிழனாய் , வீரபாண்டிய கட்டபொம்மனாய் நம்மிடையே  வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ... சிவாஜி என்றுமே இயக்குனர்களின் நடிகராய் இருந்ததால் அவர்கள் சொல்வதை மறுப்பில்லாமல்  அப்படியே செய்திருக்கிறார் ... உணர்ச்சிவயப்படும் காட்சிகளில் அது ஓவர் ஆக்டிங்காக வெளிப்பட்டிருக்கிறது ... நிச்சயம் அதை குறைத்திருக்கலாம் , ஆனால் அதுவே சிவாஜியின் தனித்தன்மை ...

படம் ஆரம்பித்தவுடன் சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் படம் முடிந்து வெளிவரும் போது கொஞ்சம் கலங்கியது போலிருந்ததை காண முடிந்ததே இதற்கு மற்றுமொரு சான்று  ... மெத்தட் ஆக்டிங்கில் புகழ்பெற்ற மேலைநாட்டு நடிகர்களே சிவாஜியை வானளாவ புகழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு ...


கர்ணன் படம் நமக்கு உணர்த்தும் பாடங்கள் நிறைய ... என்ன தான் நட்பை போற்றும் நல்லவனாக இருந்தாலும் மண்ணாசையும் , மனதில் வளர்க்கும் பகைமையும் ஒருவனை வீழ்த்தி விடும் என்பதற்கு
துரியோதனன் ஒரு உதாரணம் , கொடை வள்ளலாக இருந்தாலும் வாய் துடுக்கு ஆகாது என்பதற்கு கர்ணன் ஒரு உதாரணம் , தர்ம சீலன்  கூட கேட்பார் பேச்சை கேட்டு புத்தி தடுமாறுவான் என்பதற்கு தர்மன் ஒரு உதாரணம் , தர்மத்தை நிலை நாட்டுவதற்காக எந்த வழியையும் கையாளலாம் என்பதற்கு கிருஷ்ணன் ஒரு உதாரணம் , போர் மூண்டால் அதனால் நாசமாக போவது பல்லாயிரக்கணக்கான உயிர்களே என்பதற்கு படமே பெரிய உதாரணம் ...


கர்ணனுக்கும் , சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமைகள் தான் எத்தனை ! கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்பவர்கள் கைகள் கூட தாழ்ந்து விடக்கூடாது என்பதற்காக வருபவர்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளும் பொருட்டு தன் கைகளை தாழ்த்திபிடித்தவன் , கர்ணனிடம் நேரடியாகவும் , மறைமுகமாகும் யாசகம் பெற்றவர்கள் எத்தனையோ பேர் ... சிவாஜியும் தான் வாழ்ந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல் எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார்.

இந்திய - சீன போர் மூண்ட போது தானே வழிய வந்து பண உதவி செய்ததோடு பல நாடகங்கள் நடத்தி அதன் மூலம் வந்த வசூலை அப்போதைய பிரதமர் நேருவிடம் வாரி  வழங்கியது ஒரு உதாரணம் ... சிவாஜிக்கு பிறகு வந்த எந்த நடிகரும் அவருடைய நடிப்பை யாசகம் வாங்காமல் நடித்ததில்லை , அந்த விதத்தில் சிவாஜி ஒரு நடிப்புலக  கர்ணன் ...

கர்ணனிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தும் தேரோட்டி என்று சொல்லி அவனை புறம் தள்ளினார்கள் , அதே போல  "
வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்தில் சிறப்பாக நடித்ததற்காக  ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகன் என்ற விருதினை பெற்றிருந்தும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதினை கூட கொடுக்காமல் உதாசீனப்படுத்தியது இந்திய அரசு ...

போரில் ஜெயிப்பதற்காக நயவஞ்சக சூழ்ச்சிகள் செய்து கர்ணனை வீழ்த்தினான் கண்ணன் ... இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார் ... எத்தனை யுகங்கள் கடந்தாலும் நாம் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றும் பேசிக்கொண்டிருப்பது போல , இன்னும் எத்தனை யுகங்கள் போனாலும் சிவாஜியின் நடிப்புத்திறமையையும்  பேசிக்கொண்டு தானிருப்போம் , ஏனெனில் இருவருமே காலத்தை வென்றவர்கள் ...
Related Posts Plugin for WordPress, Blogger...