Showing posts with label தி.மு.க. Show all posts
Showing posts with label தி.மு.க. Show all posts

17 November 2011

கூட்டணி தர்மம் ...


            
    " ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் " என்றார்  பாரதி . " எது தர்மம் " என்பது பற்றி அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கினார் சாணக்கியன் , ஆனால் இதையெல்லாம் விட தர்மம் கிலோ எவ்வளவு என்று கேட்கும் அரசியல்வாதிகளால் இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் தர்மம் " கூட்டணி தர்மம் " ...

    பொது ஜனம் எக்கேடு கெட்டுப்போனாலும் தங்கள் பதவி பறிபோய் விடக்கூடாதென்பதே இந்த தர்மத்தின் முக்கிய குறிக்கோள்..இது மட்டுமல்ல இன்னும் நிறைய கிளை குறிக்கோள்கள் , கொள்கைகள் ... இந்த கூட்டணி தர்மத்திற்காக கட்சி தலைவர்கள் என்னவெல்லாம்  செய்கிறார்கள் அல்லது செய்யலாம் என்பது பற்றிய சில குறிப்புகள் இதோ ...

    முதலில் தன் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர் ஊழல் செய்ய போகிறார் என்று திட்டவட்டமாக தெரிந்திருந்தாலும் பிரதமர் கடிதம் எழுவதை தவிர வேறொன்றையும் செய்து விடக்கூடாது , அதிலும் அந்த கடிதத்தில்  ஊழல் செய்யலாமா , கூடாதா என்பதையெல்லாம் தெளிவாக விளக்காமல் விட வேண்டும் ...

                                                         
     பதில் கடிதத்தில் அமைச்சர் இல்லையில்லை நான் என் கட்சிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி ஊழல் தான் செய்வேன் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும் அதை தடுப்பது போல நேரடியாக எந்தவொரு பதில் கடிதமும் போட்டு விடக்கூடாது , அதே சமயம் நீங்கள் செய்யப்போகும் ஊழல் நிச்சயம் நல்ல திட்டமே , இருப்பினும் பிற்காலத்தில் ஏதும் சிக்கல் வராமல் இருக்க மற்ற இலாக்கா அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யலாம் என்று வேண்டுமானால் அறிவுரை வழங்கலாம் ...

    இரண்டாவது , கூட்டாக எவ்வளவு கொள்ளையடித்தாலும் தனியாக யாரையும் மாட்டி விடக்கூடாது   , அப்படியே ஊழல் சில லட்சம் கோடிகளை தாண்டும் போது அது சம்பந்தமாக நடவடிக்கைகளே எடுக்காமல் ஏதாவது அறிக்கைகள்  விட்டும் பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சிகளும் நிறைய அமளி துமளி செய்தால் கூட்டணி கட்சி தலைவருடன் அமர்ந்து பேசி அவர் கை காட்டும் நபரை சில நிபந்தனைகளுடன் மாட்டி விடலாம்...
                                       
    நிபந்தனைகளின் படி மாட்டிவிடப்படும் நபருக்கு சி.பி.ஐ ரெய்ட் வரப்போவதை  முன் கூட்டியே தெரிவித்து முடிந்தவரை சம்பந்தப்பட்ட ஆவணங்களை மறைக்குமாறு சொல்லிவிட வேண்டும் . அதையும் மீறி அவர் மாட்டும் போது சட்டம் தன்  கடமையை செய்யும் என்று அறிக்கை விடலாம்...

                         
    அடுத்ததாக , கைதானவரை வெளியில் விட சொல்லி கூட்டணி கட்சி தலைவர் நச்சரிக்கும் சமயத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் நிற்க வைப்பதற்கு வேட்பாளர்களே இல்லையென்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் போது , எப்படியிருந்தாலும் தோறகத்தானே போகிறோம் என்ற உண்மை தெரிந்தும் ஏன் இவ்வளவு தொகுதிகள் கேட்கிறார்கள் என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் கூட்டணி கட்சி தலைவரும் விட்டுக்கொடுத்து விட வேண்டும் ...

     இலங்கை அரசு ஈழ தமிழர்களை அழிப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்வது தெரிந்திருந்தும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் .அதையும் மீறி  மனம் வெதும்பினால் ஏர் கூலரில் காற்று வாங்கியபடியே சொந்தங்கள் புடை சூழ  கூட்டணி கட்சி தலைவர் குடும்ப தொலைக்காட்சியில் கொலு பொம்மை போல அரை நாள் லைவ் ஷோ காட்டலாம் .

    அதுவும் போதாதென்றால் தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்த பிரதமருக்கு தமிழிலேயே கடிதம் எழுதலாம் , பிரதமருக்கு தான் தமிழ் தெரியாதே என்று யாராவது தமிழ் பற்றே இல்லாமல் கேள்வி கேட்டால் , புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சாமர்த்தியமாக பதில் சொல்லலாம் .

                               
     ஈழ தமிழர்களுக்காக என் உயிரையே தருவேன் என கட்டுரை எழுதலாம் , யாராவது ஏன் இன்னும் உயிரை விடவில்லை என்று குசும்பாக கேட்டால் நான் போய் விட்டால் தமிழர்களை யார் காப்பற்றுவார்கள் என்று பதில் கேள்வி கேட்டு மடக்கி விடலாம் ...

     தன் கட்சியை சேர்ந்த தமிழர்களின் பதவிக்காகவும் , தமிழச்சியான தன் மகளின் ஜாமீனுக்காகவும் தான் நாம் டில்லி போகிறோம் என்பது கூட  தெரியாமல் ஏன் ஈழ தமிழர்கள் பிரச்சனைக்காக நீங்கள் டில்லி செல்லவில்லை என்று யாராவது கேட்டால் அப்படி கேட்பவர்கள் தமிழர்களே அல்ல , ஆரியர்கள் என்று பதில் சொல்லலாம் ...

     பெட்ரோல் விலையை குறைக்கா விட்டால் நான் ஆதரவை வாபஸ் பெற்று விடுவேன் என பிரதமர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து சொல்லிவிட்டு , அவருடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு மம்தா அந்தர் பல்டியடித்ததை விடவா என்  தமிழ்பற்று மோசம் என்று கூட சொல்லி மழுப்பலாம் ...

    விலைவாசி உயர்வுக்கு மக்கள் அதிகமாக மீன் முட்டை என்று உணவை வெளுத்து வாங்குவது தான் காரணம் என்று பிரணாப் சொன்னதை மேற்கோள்காட்டி அன்னா வழியில் எல்லோரையும் உண்ணாவிரதம் இருக்க சொல்லலாம்... ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கு பிறகும் " தீவிரவாதம் மிகவும் கண்டிக்கத்தக்கது " என்று சொல்லும் பிரதமரை விட வேறு யாரால் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கவோ , ஒடுக்கவோ முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்கலாம் ...


                           
     மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல் , டீசல் , காய்கறி இவற்றின் விலைகளை ஏற்றி இந்திய பொருளாதாரத்தையே ஏற்றத்தில் வைத்திருக்கும் மத்திய அரசின் நல்லாட்சி கவிழ்ந்து விட கூடாது என்ற நல்லெண்ணத்தில் கூட்டணியில் தொடர்ந்தால் அது புரியாமல் மாநிலத்தில் ஆட்சி பறிபோய் ,  மகளும் ஜாமீனில் வர முடியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மத்திய அரசுடன் நீங்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பி சுயமரியாதையை சுரண்டி பார்க்கும்  போது உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்று சுயத்தை காட்டலாம் ...

     இப்படி பல கட்சிகள் தனித்தனியாக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதோடு , தீவிரவாதம் , ஊழல் , விலைவாசி உயர்வு , சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இப்படி மத்திய அரசுக்கு எதிராக நிறைய  குற்றச்சாட்டுக்கள் இருந்தும் தங்கள் ஆதரவை மட்டும் வாபஸ் பெற்று விடக்கூடாது என்ற தர்மத்தையும் கூட்டாக கடைபிடிக்கின்றன ...

    இதற்கு கட்சிகளின் பதவி ஆசையோ , இந்த கூட்டணி தொடர்ந்தால் தான் சௌகரியமாக கொள்ளையடிக்க முடியும் என்ற நினைப்போ , தேர்தலை சந்திக்க பயமோ மட்டும் காரணம் அல்ல . சினிமாவில் ஹீரோ என்ன வேண்டுமானால் செய்யலாம் , ஆனால் ஹீரோயின் மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அடிமட்ட ரசிகன் நினைப்பது போல காங்கரஸின் குறைகள் மக்களுக்கே பழகிப் போன பிறகு , பல கட்சிகளுக்கு மாற்று கட்சியை விட காங்கிரசுடன் கூட்டு சேர்வது வசதியாகி விட்டதும் மிக முக்கிய காரணம் ...

6 August 2011

தி.மு.க வினர் கைது பழியா? பாடமா?

                                           
       கடந்த இருபது ஆண்டு கால கழக ஆட்சியில் எது நடந்ததோ இல்லையோ எதிர் கட்சியினரை கைது செய்வது என்பது வழக்கமாக நடந்தேறி வருகிறது ... இருவரில் எவர் இதை முதலில் ஆரம்பித்திருந்தாலும் புரையோடிவிட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியை இனி யாரும் கலைப்பது கடினம்...

            இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம்,ஒழுங்கை நிலை நாட்டுவதே முதல் இலக்கு என்று சொன்ன முதல்வர் அதை செய்தும் காட்டி வருகிறார்..இது வரை 50க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் நில அபகரிப்பு வழக்குகளிலும்,குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்..

      சாதாரண நிர்வாகிகளில் இருந்து வீரபாண்டி ஆறுமுகம் , அன்பழகன் போன்ற பெருந்தலைகள் வரை யாரையும் காவல் துறை விட்டு வைக்கவில்லை..தேசிய மனித உரிமை கழகத்திடம் தி,மு.க வினர் நேரில் சென்று முறையிடும் அளவிற்கு விஷயம் முற்றி விட்டது...
                                           
      சென்ற ஆட்சி காலத்தில் நில அபகரிப்புகள்,கொலை மிரட்டல்கள் இவையெல்லாம் நிறைய நடந்திருந்தும் இதில் சம்பத்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால் காவல் துறையினரால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை..இப்போது ஆட்சி மாற்றத்தால் சம்பத்தப்பட்டவர்கள் நேரில் வந்து கம்ப்ளைன்ட் கொடுப்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது அதி.மு.க தரப்பினரின் வாதம்...

       அரசியல் பழி வாங்கும் நோக்காத்தல் மட்டுமே இந்த கைது படலம் தொடர்கிறது என்பது தி.மு.க வினரின் வாதம்..நில அபகரிப்பு விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தும் இது போன்ற நடவடிக்கைகளை ஏன் சொந்த கட்சியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கருப்பையா போன்றவர்களின் மீது எடுக்கவில்லை என்பது தி.மு.க வினர் வைக்கும் குற்றச்சாட்டு....

        சொத்து குவிப்பு, டான்சி உட்பட இருபத்தியேழு வழக்குகள் தி.மு.க வின் ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்டன..ஆனால் அதில் ஒன்றை தவிர மற்ற வழக்குகளில் இருந்து கோர்ட் அவரை விடுவித்தது..இவையெல்லாம் அப்போது எந்த வித ஆதாரமும் இல்லாமல் போடப்பட்டவையா ? அப்படியென்றால் அது பழி வாங்கும் நடவடிக்கை இல்லையா ?..இந்த கேள்விகளுக்கு தி.மு.க விடம் பதில் இல்லை...

        செஸ் விளையாட்டில் முதலில் சிப்பாய்,மந்திரி,ராணி என ஒவ்வொன்றாய் அடித்து விட்டு கடைசியில் ராஜாவிற்கு வருவார்கள்..காங்கிரஸின் கைங்கைர்யத்தால் முதலில் ராஜாவே கைது செய்யப்பட்ட பிறகு கனிமொழி கைது செய்யப்பட்டார்...தி.மு.கவும் தேர்தல் கூட்டணி என்று சொல்லி சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டது ....
                                 
      ஒரு பக்கம் எல்லோரும் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்க, மு.க.ஸ்டாலினோ "ஏய் நானும் ஜெயிலுக்கு போறேன், எல்லோரும்  நல்லா பாத்துங்குங்க,நானும் ரவுடி தான் ரவுடி தான்"  என்று "தலைநகரம்" வடிவேலு பாணியில் கலைவாணனை கைது செய்வதற்கு                       முன்னாள் தானாகவே வலிய வந்து வேனுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார் ..

         பொதுவாக பேரணி என்றாலே சலசலக்கும் மதுரை மு.க.அழகிரியின் வலது,இடதுகளான அட்டாக் பாண்டி,பொட்டு சுரேஷ் இவர்களின் கைதால்
வெலவெலத்துப் போனது...பேரணியில் கூடிய சிலரும் காவல்துறையினரை                                                                                                                     பார்த்ததும் "ஏய் ..கை முறுக்கு, சுண்டல் " என்று கூவி விட்டு பேருந்துகளை நோக்கி விரைந்ததாக ஒரு நம்பத்தகுந்த தகவல்...
                                              
        தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வித இரண்டாம் யோசனைக்கும் இடமே இல்லை..அதிலும் குறிப்பாக இப்போது கைது செய்யப்பட்டு வரும் பெரும்பாலானோர் மக்களுக்கு சேவைகள் மட்டுமே புரிந்த தியாகிகளும் அல்ல...

         கட்டப் பஞ்சாயத்து, காவல் துறையின் செயல்பாட்டில் தலையீடு போன்ற செயல்களில் ஈடுபடும் ஆளும்கட்சியினருக்கும்                                     முதல்வர் எச்சரிக்கை விடுத்திருப்பது ஆரோக்கியமான ஆரம்பம்..

        தி.மு.கவினர் கைது பழி வாங்கும் படலமா? பதர் அறுக்கும் வைபவமா? எதுவாக இருந்தாலும் மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிப்பவர்களின் மீது எந்த வித கட்சி பேதமுமின்றி காவல் துறை நடவடிக்கை வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ....










12 July 2011

மு.க.வின் குடும்ப அரசியல் தி.மு.க செயற்குழுவில் வெடிக்குமா ..?

                                               
    2 ஜி ஸ்பெக்டெர்ம் ஊழலில் ராஜா கைது ,தேர்தலில் படு தோல்வி, கூட்டணி தர்மம் கொஞ்சம் கூட இல்லாமல் சி.பி.ஐ யை வைத்து துரத்தி துரத்தி அடிக்கும் காங்கிரஸ், கனிமொழி கைது அதைத் தொடர்ந்து ஜாமீன் மறுப்பு,  தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த நில அபகரிப்பு விவகாரங்களில் தற்போதைய அரசு காட்டி வரும் ஆர்வம் ,
2 ஜி ஸ்பெக்டெர்ம் விவகாரத்தால் தயாநிதி ராஜினாமா இப்படி தி.மு.க விற்கு அடுத்து அடுத்து விழுந்த அடிகளால் கொஞ்ச காலம் அடங்கியே இருந்தது மு.க.அழகிரி - ஸ்டாலின் இவர்களுக்கு இடையேயான பனிப்போர்.....

      ஆனால் கோவையில் 23 ஆம் தேதி நடக்கவிறுக்கும் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் குடும்ப அரசியல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... தேர்தல் தோல்விக்கு 2 ஜி விவகாரம் மட்டும் காரணம் அல்ல கட்சிக்குள் நிலவும் குடும்ப ஆதிக்கமே முழுக் காரணம் என்று ஸ்டாலின் தரப்பு நம்புவதோடு மட்டுமல்லாமல் அதை ஆதாரத்தோடு செயற்குழுவில் முன்வைக்கவும் முனைப்பு காட்டி வருவது அழகிரி தரப்பினரிடையே புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது...
                                      
           ஸ்டாலின் தரப்பு குடும்ப ஆதிக்கத்தை எதிர்ப்பதில் எந்த வித ஆச்சரியமும் இல்லை..பொதுவாக தி.மு.க வின் குடும்ப அரசியலை எதிர்ப்பவர்கள் கூட ஸ்டாலின் தி.மு.க வில் வளர்ந்த விதத்தை விமர்சிப்பதில்லை ..அவர் வலுக்கட்டாயமாகவோ , வேறு யாருடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கோ தி.மு.க விற்கு வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே...கலைஞரின் மகன் என்பதையும் தாண்டி கட்சியினரிடையே அவருக்குள்ள செல்வாக்கையும், மதிப்பையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது ...
                                                   
     தென் தமிழ்நாட்டில் தி.மு.க கட்சி வளர்ந்ததற்கு அழகிரி முக்கிய காரணம் என்றாலும் கடந்த தேர்தலில் கட்சி வீழ்ந்ததற்கும் அவரின் நடவடிக்கைகள் தான் காரணம் என்பது கட்சியினரிடையே தற்போது பரவலாக நிலவி வரும் கருத்து...தயாநிதியின் வளர்ச்சியை தடுப்பதற்காக கவிதை எழுதிக் கொண்டிருந்த கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வந்தார் கலைஞர்.. இன்று அதுவே அவர் கண் கலங்குவதற்கு காரணமாகிவிட்டது                  
                                                                                  
                              அரசியலையும் தாண்டி சினிமா,ரியல் எஸ்டேட் , பத்திரிக்கை என்று குடும்ப அரசியலின் ஆதிக்கம் விரிவானது...உழைத்து பணம் அதிகம் சம்பாதித்தாலே ஊரில் கண் போடுவார்கள் என்று ஒரு வழக்கு உண்டு..இங்கோ ஊரையே அடித்து சம்பாதித்தால் மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா ?..தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தார்கள்..


     எம்.ஜி.ஆர் கட்சியை தன் குடும்பம் போல பாவித்தார்..அதுவே அவரின் வெற்றி...கலைஞரோ தன் குடும்பத்தையே கட்சியாக்கினார்..பொதுமக்களையும் விட தி.மு.க வின் உண்மையான தொண்டர்களையே இது அதிகம் பாதித்தது... கடந்த வருடம் கலைஞர் தன் பிறந்த நாள் விழாவில் தனக்கு அடுத்ததாய் முதல்வர் பதவிக்கு ஸ்டாலினை முன்மொழியப் போவதாக அறிவித்தார்.. ஆனால் அழகிரியின் தலையீட்டால் அது பாழாய்ப் போனது...

      ஒரு தகப்பனாக இரு மகன்களை மட்டுமல்ல ஒரு தலைவனாக கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கலைஞர் வைக்கவில்லை என்பதையே இது காட்டியது...பொதுவாக எந்த ஒரு கேள்வி கேட்டாலும் அதற்கு வேறு
ஏதாவது ஒரு பதிலை சொல்லி ( தி.மு.க வின் தேர்தல் தோல்விக்கு பிராமணர்களே காரணம் , பத்திரிக்கைகளின் தவறான சித்தரிப்பால் தான் தயாநிதி ராஜினாமா செய்தார் இப்படி சில உதாரணங்கள் ).
சமாளிக்கும் திறன் படைத்த கலைஞர் இந்த செயற்குழு கூட்டத்திலும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த ஏதாவது ஒரு அஸ்திரம் வைத்திருப்பாரா? மு.க வின் குடும்ப அரசியல் தி.மு.க செயற்குழுவில் வெடிக்குமா..? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ....


....
Related Posts Plugin for WordPress, Blogger...