Showing posts with label AVAN AVAL NILA. Show all posts
Showing posts with label AVAN AVAL NILA. Show all posts

4 October 2020

அவன் - அவள்- நிலா ( 20 ) ...



கார்த்திக்கால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை . நேற்று வரை அவனிடம் உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பேசிக்கொண்டிருந்தவர் , எதிர்காலத்து அச்சம் , இறந்த காலத்து கசப்பு என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டவர் , பணத்தாலும் , மனத்தாலும் நீயே ஆறுதல் என்று அங்கலாய்த்தவர் இன்று அவனிடம் சொல்லாமல் அல்லது சொல்ல வேண்டுமென்று கூட நினைக்காமல் தயாரிப்பாளரை பார்க்க தாவி ஓடியிருக்கிறார் . மனிதன் எவ்வளவு பெரிய சுயநலப்பிசாசு . அவனுக்கு துக்கத்தை பகிர்ந்து கொள்ளத்தான் ஆள் அதிகம் தேவைப்படுகிறது ...

அவரும் ராமசுப்பு போல இருப்பாரென அவன் எதிர்பார்க்கவில்லை . ராமசுப்பு அவனால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டவன் . பேசிய சிறிது நேரத்துக்குள்ளேயே அனைவரையும் கவர்ந்து விடும் வசீகரம் அவனிடம் இருந்தது . கேட்பவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் பெரும்பாலும் பேசுவான் . அவன் முகஸ்துதி செய்வதை மற்றவர்கள் அறியா வண்ணம் செய்வது அவன் தனிச்சிறப்பு . ஒருவரால் ஆவதற்கு காரியம் ஒன்றுமில்லை என தெரிந்த  பிறகு அவர்களுடன் பழகி அவன் நேரத்தை  வீணடிப்பதில்லை.
தன்னை விட மேம்பட்டவர்களிடம் சிறு வயதிலிருந்தே அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது . அந்த இடத்தை அடைய வேண்டுமென்பதில் மட்டுமே முனைப்பாக இருப்பான் . அதற்கு இடையூறாக காதல் , கல்யாணம் இருக்குமென நினைத்ததால் அந்த பக்கமே அவன் இன்று வரை போகவில்லை ...

ஜானி படத்தில் வரும் தீபா கதாபாத்திரம் போல ஒன்றை விட மற்றது சிறந்ததென்றால் அதற்கு தாவும் மனநிலையில் தான் அவனிருந்தான் . அதனால் பாதிக்கப்படும் நட்புகளை அவன் பெரிதுபடுத்துவதில்லை . சினிமா என்கிற புள்ளி இணைத்ததால் தான் சென்னைக்கு வந்த புதிதில் வேலை பார்த்த ஆட் கம்பெனியில் கார்த்திக் அவனையும் சேர்த்து விட்டிருந்தான் .
சேர்ந்த சில நாட்களிலேயே அனைவருக்கும் அவனை பிடித்து விட்டது . இரவு எத்தனை மணி நேரமானாலும் கார்த்திக் வரும் வரை காத்திருந்து பேசி விட்டு செல்பவன் சிறிது காலம் கடந்தவுடன் விளம்பர ஏஜென்ஸியின்  ரெகுலர் கஸ்டமர் ரகுவுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தான் . கார்த்திக்கை விட பணத்தாலும் , பழக்கத்தாலும் சென்னையில் ரகு பெரியவனாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம் ...

ஒரே இடத்தில் தேங்காமல் ஆறு போல ஓடிக்கொண்டேயிருப்பதில் தவறில்லை தான் ஆனால் சுழலில் சிக்கிக் கொள்ளாமலிருக்க வேண்டும் . என்றுமே யாருடைய வளர்ச்சியையும் கண்டு கார்த்திக் கவலைப்பட்டதில்லை ஆனாலும் அந்த வளர்ச்சியில் கொஞ்சமாவது எதிக்ஸ் இருக்க வேண்டுமென்று நினைத்தான் . அதிலும் குறிப்பாக செய்நன்றி கொன்றவர்களை அவன் ஒரு போதும் மதிப்பதில்லை . சொப்பணசுந்தரியை இன்று யார் வைத்திருக்கிறார்கள்  என்பது போல நட்புகளை மாற்றி மாற்றி வளர்ந்து கொண்டே போன ராமசுப்பு இன்று ஏதோ பெரிய ப்ரொட்யூசருடன் ஒட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி ...

ஆனால் மகாலிங்கம் கதை வேறு என்பது போலவே அவனுக்கு பட்டது. அவருக்கு பெரிதாக சூட்சுமமெல்லாம் தெரியாது . அவர் அவனை தன்னை விட திறமைசாலி என்றே நினைத்திருந்தார் . அந்த நினைப்பே அவருக்கு ஒரு பயத்தை கொடுத்திருக்கலாம் . சினிமாத்துறையில் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் இல்லையெனில் பிணமென நினைத்து கிடாசி விடுவார்கள் . அதீத எச்சரிக்கை உணர்வே ஒரு இனம் புரியாத பயத்தை கொடுக்கிறது . பயம் நல்லவன் யார் கெட்டவன் யாரென நம்மை யோசிக்க விடுவதில்லை . சுற்றியிருப்பவர்களை சந்தேகக் கணணோடு பார்க்க வைக்கிறது . சுந்தரி ஆண் நண்பர்களுடன் நிறைய பேசினாலும் அவன் சண்டையின் போது கிண்டல் செய்திருக்கிறானேயொழிய சந்தேகப்பட்டதில்லை . ஏனெனில் என்றுமே அவள் அவனை விட்டு விடுவாளோ என்கிற பயம் அவனுக்கில்லை . ஆனால் நாம் போடும் அதே கணக்கையே காலமும் போடுவதில்லை ...

இரவு பத்து மணிக்கு மேல் மகாலிங்கம் வந்தார் . அவர் போன காரியம் என்ன ஆனதென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கிருந்தது ஆனால் அவரே சொல்வது தான் முறையென நினைத்தான் அதுவும் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் தான் அவர் சென்றிருக்கிறார் . அவன் மொட்டை மாடிக்கு படுக்க போய் விட்டான் . அவர் குளித்து விட்டு மேலே வந்தார்.  சிறிது நேர மௌனத்திற்கு பிறகு
 " என்ன தம்பி தூங்கியாச்சா ?" என்று அவரே ஆரம்பித்தார் . " நம்ம இவ்வளவு சீக்கிரம் எப்பண்ணே தூங்கிருக்கோம் !"  என்று பதில் சொல்லிக்கொண்டே அவர் பக்கம் திரும்பினான் கார்த்திக்...

தெரு விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம் பிரகாசமாக தெரிந்தது ஆனால் அவர் முகத்தில் அந்த பிரகாசம் இல்லை . " திரும்பவும் க்ளைமாக்ஸ மாத்தனுமாம் கொஞ்சம் பழசா இருக்காம் " அவர் அவனிடம் இதை சொல்லி விட்டு சட்டென முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார் . அவனுக்கு அதற்கான அர்த்தம் புரிந்தது.  ஏற்கனவே க்ளைமாக்ஸில் அவனுக்கு முழு உடன்பாடு இல்லை ஆனால் அவர் தான் பிடித்த முயலுக்கு மூணு கால் போல பிடிவாதமாக இருந்தார் . அவனும் ஒரு லெவலுக்கு மேல் அதில் தலையிடுவது சரிப்படாது என்று விட்டு விட்டான் . உண்மையில் அவர் சொன்ன கதை அவனுக்கு பிடித்திருந்தது . அதில் சில சமரசங்கள் செய்து கொண்டால் வேறு லெவலில் இருக்குமென்பது அவன் கணிப்பு ...

என்ன தான் கதையை மாற்றி மாற்றி யோசித்து எழுதினாலும் கடைசியில் அதன் வெற்றி தோல்வி மக்கள் கைகளில் இருக்கிறது . எவ்வளவு தான் உழைப்பை கொட்டினாலும் அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும் . அதுவும் சினிமா உலகத்தில் அதிர்ஷ்டத்தின் தேவை அதிகமாகவே இருந்தது . காலையில் அவர் சொன்னாமல் போனதற்கு அவர் மேல் கோபத்தில் இருந்தான் . இரவோ அவர் நிலையை அறிந்ததும் அவருக்காக யோசிக்கத் தொடங்கி விட்டான் . அது தான் அவன் . என்றுமே அவன் யார் மேலும் வன்மமாக இருந்ததேயில்லை அந்த நேரத்தில் கோபத்தை அடக்க முடியாமல் கத்தியிருக்கிறான் ஆனால் சிலர் போல வெளியில் சிரித்து உள்ளே பகையை வளர்த்ததில்லை . அதனால் தான் அவனால் அவருடன் சேர்ந்து கதைக்கு இன்னும் பெட்டராக என்ன க்ளைமேக்ஸ் வைக்கலாம் என்று யோசிக்க முடிகிறது . அவன் அவருக்காக யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் காலம் அவனுக்கான எதிர்காலத்தை வேறு மாதிரி எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்தது ...

தொடரும் ...


14 June 2020

அவன் - அவள் - நிலா (19) ...



சென்னைக்கு கார்த்திக் செலவில்  வந்த அந்த முன்னாள் உதவி இயக்குனர் அர் வேலைகளை பெரும்பாலும் முடித்துக்கொண்டு அவனையும் சில கம்பெனிகளுக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டி கடமையை முடித்ததாக நினைத்துக்கொண்டு ஒரு வழியாக மதுரைக்கு புறப்பட்டு போனார் . கார்த்திக் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் . அவர் அறிமுகப்படுத்திய ஆட்களை சென்று பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் , அப்பொழுது தான் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்பது அவனுக்கு தெரிந்தது . சினிமா வெற்றி பெற்றவர்களின் பக்கம் மட்டுமே நிற்கிறது . தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதலும் , அனுதாபமும் கிடைக்கிறதோ இல்லையோ கேலியும் கிண்டலும் நிறையவே கிடைக்கிறது  . தெரிந்த ஆள் மூலமாக போனதால் கொஞ்ச நேர காத்திருப்பலுக்கு பின் அவனை உள்ளே அனுமதித்தார்கள் இல்லையேல் அவர்களின்  பந்தாவுக்காக அவன் வாசலிலேயே தவமிருந்திருக்க வேண்டும்..

வயது வித்தியாசம் காரணமாக அழைத்து வந்தவரின் நண்பர்களுடன் இனி தங்க முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது . அதிலும் இனிமேலும் தொடர்ந்து அங்கே தங்கினால் அவன் கையிருப்பு அதிகமாகவே கரைந்து விடும் அபாயமும் இருந்தது . அவர்கள் நிலைமை அவனை விட இன்னும் மோசமாகவே இருந்தது . " என்ன தம்பி தூக்கம் வரலையா ? " , கேட்டுக்கொண்டே வந்து பாயை அருகில் போட்டுக்கொண்டு அமர்ந்தவாறே சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டார் மகாலிங்கம் . அவரை பார்த்தவுடன் படுத்தவாறே கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தவன் அதை நிறுத்தி விட்டு அமர்ந்து கொண்டான் . அங்கிருப்பவர்களிலேயே ஓரளவு சினிமா ஞானமும் அவன் எதிர்காலம் மேல் கொஞ்சம் அக்கறை கொண்டவராகவும் அவரிருந்தார் . "  இல்லேண்ணே " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை நீட்டியவரிடம் வேண்டாமென்று மறுத்தான் . அவரும் அந்த சிகெரட்டை காலைக்கடன் கழிக்கும் போது அடித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்பில் சட்டைப்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு விட்டு லேசாக சிரித்தார் ...

" என்னென்ணே சிரிக்கிறீங்க ?! " கார்த்திக் கேட்டவுடன் அவனை பார்த்தவர்
" ஒண்ணுமில்லை தம்பி என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தை நினைச்சு சிரிச்சேன் " . அவன் என்ன என்பது போல் பார்க்க ஒரு இழுப்பை இழுத்து புகை விட்டுக்கொண்டே பேசத்தொடங்கினார் . " நான் அப்போ சென்னைக்கு வந்து லோல்பட்டு ஒரு வழியா ஓரளவு பிரபலமான ஒருத்தர்ட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன் . டிஸ்கசன் அப்போ டைரக்டர் கேசுவலா சிகெரெட்டை நீட்ட மத்தவங்கல கவனிக்காம நான் வாங்கி அவரோட சேர்ந்து அடிக்க ஆரம்பிச்சுட்டேன் . அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங் போயாச்சு.
என் பேர சொல்லி டைரக்டர் கூப்பிட நான் அஸோஸியேட்ட தானே கூப்பிடுவாங்க நம்மள கூப்புடுறாரேன்னு புரியாம ஓடினேன் " . நிதானமாக தம்மை இழுத்து புகையை விட்டார் . என்கிட்டே செட் ப்ராப்பர்ட்டி பத்தி கேக்க ஆரம்பிச்சார் . நான் அது வேற ஒருத்தர் தானே பாக்குறார்ன்னு சொல்ல
" ஏன் உனக்கு தெரியாதா என்ன புடுங்குற வேலை பாக்கறியா " ன்னு டக்னு கத்திட்டாரு .  தண்டத்துக்கு வந்து சேர்ந்து என் தாலிய அறுக்குறானுங்கன்னு அவர் பாட்டுக்கு கன்னாபின்னான்னு கத்த ஆரம்பிச்சுட்டாரு . அன்னிக்கு முழுக்கவே எனக்கு நிறைய அர்ச்சனை தான் . எனக்கு ஒண்ணுமே புரியாம அன்னிக்கு நைட் சீனியர் சொல்லி தான் எல்லாம் வெளங்கிச்சு " ...

" அவர் சிகரட்டை நீட்டி நான் வாங்கினது ஒரு பெரிய கொலைக்குத்தம்  இல்ல . ஆனா இங்க நிறைய பேர் தனக்கு கீழ இருக்கறவனுக்கு இடம் கொடுத்தா  நமக்கு ஆப்பு வந்துடுமோன்னு தேவையில்லாத ஒரு பயத்துல இருக்காங்க . அதனால தான் அவனுங்க ஈகோ அதிகமாகி தான் யாருன்னு காட்டறதா நினைச்சு நம்மள நோகடிக்குறாங்க " . சினிமா பிரபலங்களின் முகத்துக்குள் இன்னொரு முகம் இருக்கிறது . " ஆனா ஒரு பியூட்டி  என்னென்னா தம்பி , ரெண்டு வாரம் முன்னாடி அவரை பார்த்தேன் . நான் சிகரெட் பாக்கட்டை நீட்ட சில வருஷம் முன்னாடி அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அவர் உடனே வாங்கிக்கிட்டாரு . கடைசியா எடுத்த ரெண்டு ஃப்ளாப் அதிலயும் ப்ரொட்யூசரும் அவர் தான் , கேக்கவா வேணும் மனுசன்  ரொம்பவே நொடிஞ்சுட்டாரு " . சடுதியில் வெற்றியும் தோல்வியும் வந்து ஆளையே தூக்கியடிக்கும் துறை சினிமா ...

எல்லா துறைகளிலும் ஏற்றமும் , இறக்கமும்  ஒன்று தான் ஆனால் சினிமாவில் அவையிரண்டுமே அந்த  துறையை போலவே அபரிமிதமாக இருக்கின்றன . மூத்த உதவி இயக்குனர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் போது இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி நம்மால் கரையேற முடியுமா என்று அவனுக்கு பல தடவை தோன்றியதுண்டு ஆனாலும் ஒரு வைராக்கியம் அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தது . பாம்குரோவ் ஹோட்டலை தாண்டும் போதெல்லாம் அந்த வாசலில் தான் சூப்பர் ஸ்டார் ஒரு காலத்தில் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் படுத்திருப்பார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்படும் போது அந்த வைராக்கியம் அதிகமாகும் . அவர் மட்டுமல்ல இன்று சினிமாவில் சாதித்த பலரும் அந்த வைராக்கியத்தோடு எங்கோ இருந்து சென்னைக்கு வந்தவர்கள் தான் . அக்கடலில் நீந்தி மேலே வந்தவர்களை மட்டும் கொண்டாடுகிறோம் அதில் கரையேற முடியாமல்
மூழ்கிப் போரானவர்கள் ஏராளம் ...

" தம்பி ரொம்பெல்லாம் யோசிக்காதீங்க , மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்" அவன் முகத்தை வைத்து உள்ளே ஓடும் எண்ண ஓட்டங்களை படித்துக் கொணடிருந்தார் மகாலிங்கம் . " அப்டில்லாம் இல்லேண்ணே , எவ்வளவோ பேர் ஒண்ணுமில்லாம வந்து இங்கே எவ்ளோ பெரிய ஆளாகியிருக்காங்கன்னு யோசிச்சேன் " . அதை ஆமோதிப்பது போல அவர் தலையாட்டினார் . " ஆனா நானும் பார்த்துட்டேன் தம்பி , பெரும்பாலும் சினிமாவுல சாதிக்கணும்னா ஒன்னு எல்லா வசதியும் இருக்கறவனா இருக்கணும் , இல்லேன்னா ஒன்னுமே இல்லாதவனா  இருக்கணும் , இந்த ரெண்டுங்கட்டானா அதான் மிடில் க்ளாஸா மட்டும் இருந்தா கரையேறுரது ரொம்ப கஷ்டம் " . அவர் சொன்னதில் புதைந்து கிடைக்கும் உண்மை அவனுக்கு நன்றாகவே உரைத்தது ...

இரண்டு பேரும் சில நிமிடங்கள் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் . வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல்கள் சீரியலின் உபயத்தால் வெகுவாகவே குறைந்திருந்தன  . விரக்தி , அச்சம் , மலைப்பு எல்லாமே ஒரு சேர வந்து ஒரு வித சோர்வை உருவாக்கி விடுகிறது . " பணம் மாதிரி தான் தம்பி படிப்பும் " , அவர் சொன்னவுடனே அவன் புரியாமல் பார்த்தான் . " படிப்பு நிறைய இருக்கிறவன் இந்த பக்கம் வர மாட்டான் , சுத்தமா படிக்காதவன் எந்த வேலையையும் ஈகோ பார்க்காம செய்வான் , ஆனா ஓரளவு டிகிரி வரை படிச்சவனுக்கு ரெண்டு பக்கமும் சாய முடியாம நடுவுல நின்னாகனும் " . அவர் சொல்வது எல்லாமே  அவனோடு சேர்த்து அவருக்கும் பொருந்துவதாகவே இருந்தது . தஞ்சாவூரில் ஒரு மிடில் கிளாசில் இருந்து டிகிரி  வரை முடித்து விட்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர் . இன்று நாம் யோசிக்கும் அல்லது செய்யும் விஷயத்தையும் உலகத்தில் எவனோ செய்திருக்கிறான் , செய்து கொண்டிருக்கிறான் அல்லது இனிமேல் செய்வான் என்பது ஒரு நியதி போலும்  ...

பொதுவான சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாலும் அவர் ஏதோ ஒன்றில் அவனுடைய ஆலோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ கேட்பதற்காக வந்தது போலவே இருந்தது  .ஏற்கனவே அவர் சொன்ன கதையை பற்றியதாக இருக்கலாமென அவன் நினைத்தான் . அவர் ஒன் லைனர் சொன்ன போதே அவனுக்கு பிடித்திருந்தது . அதை அவர் ரெடி பண்ணி முழு கதையாக ஒன்றரை மணி நேரம் நடேசன் பூங்காவில் வைத்து சொன்னது பசுமரத்தாணி போல அவன் மனதில் இருந்தது . அதிலும் குறிப்பாக கதையில் அவன் மனதுக்கு பட்ட சில குறைகளை வெளிப்படையாக சொன்னது அவருக்கு பிடித்திருந்தது ஆனால் கூட இருந்த அல்லக்கைகளுக்கு பிடிக்கவில்லை . சினிமா பத்தி உனக்கு என்ன தெரியும் என்பது போல அவனுடன் சண்டைக்கு வந்தார்கள் . அவர் சொன்ன சில சீன்களை  அவன் நன்றாக மேம்படுத்தியது அவர்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை . அவர் அவனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது அவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது . அவர் டைரக்டரானவுடன் உடனே
அஸிஸ்டன்ட்களாக சேர்ந்து விடலாமென நினைத்தவர்களுக்கு அவன் வரவு எங்கே வேலைக்கு உலை வைத்து விடுமோ என்கிற பயத்தை தந்தது ...

அவர் நிறைய தடவை மற்றவர்களுக்கு தெரியாமல் அவனுடன் மட்டும் கதையை விவாதம் செய்திருக்கிறார் . தன்னிடம் எந்தவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் நேர்மையாக கதை விவாதத்தில் அவன் கலந்து கொண்டது அவருக்கு பிடித்திருந்தது . அவருக்கே சில சமயம் மொக்கையாக தெரியும் சீன்களை அவனை தவிர மற்றவர்கள் புகழ்ந்த போது அவருக்கு எரிச்சலே மிஞ்சியது . அதற்காகவே அவர் அவனுடன் கதை பற்றிய விவாதத்தில் ஈடுபடுவதையே அதிகம் விரும்பினார் . ஒரு இயக்குனருக்கு முதல் படம் எடுத்து முடித்து வெற்றிகரமாக ஓட வைப்பதென்பது தலைப்பிரசவத்தை விட
அதிக சிக்கலானது என்பது அவர் அனுபவம் சொல்லித்தந்த பாடம் . இன்னும் சில நாட்களில் அவர் கதை ப்ரொட்யூசரிடம் ஓகே ஆகி அட்வான்ஸ் வாங்கக்கூடிய நிலையில் இருப்பது அவனுக்கு தெரியும் . கதைக்கான ஃபைனல் டச்சுக்காக பேசப்போகிறாரோ என அவன் எதிர்பார்த்தான் ...

சிறிது நேரத்திற்கு பிறகு அவரே மவுனத்தை கலைத்தார் . " தம்பி நாம லாஸ்ட்டா பேசினது ஃபுல்லா ஓகே தானா  இல்ல ஏதாவது மாத்தணுமா ?!"
பொதுவாக இது தான் பெஸ்ட் என்று எதையுமே சொல்லவே முடியாது யோசிக்க யோசிக்க அது மாறிக்கொண்டே வரும் ஆனாலும் பல
திருத்தங்களுக்கு பிறகு ஒன்றை செலக்ட் செய்து விட்ட பின் அதை மாற்ற வேண்டாமென்பதே அவன் யோசனையாக இருந்தது . " ம் அப்போ இத அப்படியே வச்சுக்கலாம்ன்ற " என அவர் கேட்க அவன் ஆமாம் என்பது போல தலையசைத்தான் . " ஓகே தம்பி படுக்கலாம் " அவர் சொல்லிக்கொன்டே தலையணை மேல் சாய்ந்தார் . அவனும் அப்படியே கண்ணயர்ந்தான் . காலையில் எழுந்தவனுக்கு அவர் அங்கே இல்லாதது ஆச்சர்யம் அதிலும் பாய் , தலையணை , போர்வை எல்லாவற்றையும் அவர் எடுத்துக்கொண்டு போயிருந்தது கூடுதல் வியப்பை தந்தது . கீழே ரூமிலும் ஆளில்லையே என்று ரூம் மேட்டிடம் விசாரிக்க அவர் அவனை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே
" என்னப்பா உனக்கே தெரியாதா ?! என்று அவனை நம்பாமல் பார்த்தார் .
" சீரியஸா தெரியாதுன்னே " என்ற பின் " அவர் காலையிலேயே சீக்கிரம் கிளம்பி ப்ரொட்யூசர் கிட்ட அட்வான்ஸ் வாங்க போயிருக்கார் " என்று சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு தொண்டையில் ஏதோ கனத்தது ...

தொடரும் ...











22 March 2020

அவன் - அவள் - நிலா (18) ...


வள் சில நாட்களாகவே யாருடனும் அதிகம் கலந்து கொள்ளாமல் தனியாகவே இருந்தாள் . முன்பெல்லாம் என்ன தான் புத்தகங்களுக்குள் மூழ்கினாலும் ப்ரேக் எடுத்து ரூமை விட்டு வந்து பேசி விட்டு போவாள் . கூட்டுக்குடும்பம்  என்பதால் யாராவது எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள் . அவர்கள் சொல்லும் கதைகளை சுந்தரி ஆர்வமுடன் கேட்பாள் . அதிலும் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது அம்மாவும் அத்தையும் அவள் தூங்கி விட்டதாக நினைத்து ரகசியமாய் ஏதோ பேசிக்கொண்டிருக்க புகுந்து ஏதாவது டவுட் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்வாள் . பாட்டியிடம் இருந்து நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தவளுக்கு கதை சொல்லிகளை பிடிக்கும் . கதை சொல்லிகளின் டெக்னிக்கல் வடிவம் தானே சினிமா . அதனால் தானோ என்னவோ நேரடியாக சினிமாவின் மேல் ஈடுபாடு இல்லாவிட்டாலும் அதில் கதை சொல்ல கிளம்பியிருக்கும் கார்த்திக்கின் மேல் அவ்வளவு ஈடுபாடு வந்துவிட்டது . அவன் பேரை நினைக்கும் போதே ஏதோ மனம் கட்டுக்கடங்காமல் எங்கெங்கோ செல்கிறது ...

அவனை முதன்முதல் திருமணத்தில் வைத்து பார்த்தது , பேசியது , பழகியது எல்லாமே அவள் கண்முன் வரும் . உண்மையிலேயே நிஜத்தை விட அந்த கற்பனையில் அவள் அதிக சந்தோசத்துடனே இருப்பாள் . கற்பனையில் அவளுக்கேற்றவனாக , அவள் சொல்வதை கேட்பவனாக , கோபப்படாதவனாக , அவள் கேட்காமாலேயே ஏதாவது சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்பவனாக  என அவளுக்கேற்ற டெய்லர் மேடாக கார்த்திக் இருப்பான் . அவன்  பேசாமல் அவளை அதிகம் பேச வைத்து கேட்பான் , அவள் வெட்கப்படுவது பார்த்து ரசிப்பான் , திடீரென தொட்டு வெட்பம் ஏற்றுவான் , எதிர்காலத்தில் அவளுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளில் இருப்பான் , மொத்தத்தில் அவன் உலகத்தில் இல்லாமல் அவளையே உலகமாக நினைப்பான் . பெண்களுக்கு கடவுள் கொடுக்கும் ஒரு வரப்பிரசாதம் இந்த கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பது . அதில் எந்த பிக்கல் பிடுங்கலும் அவர்களுக்கு இல்லை ...

அவனை வேண்டுமென்றே கொஞ்சம் சீண்டி விட்டு கோபப்படுத்தி அழகு பார்த்திருக்கிறாள் . ஆனால் அந்த சந்தோசமெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மேல் நிலைக்காது . அந்த விளையாட்டை கூட புரிந்து கொள்ளாமல் அவன் மூர்க்கமாகி விடுவான் . அதன் பிறகு அவனை சமாதானப்படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதென்றாகி விடும் . எவ்வளவு கத்தினாலும் மனதளவில் அவன் குழந்தை என்பது அவளுக்கு புரியும் . ஆனாலும் அதற்காக ஒவ்வொரு முறையும் அவனை பொறுமையாக கையாள்வதென்பது அவளுக்கு இயலாத காரியம் . ஆண்கள் அம்மாவை போலவே தங்கள் மனைவியை / காதலியை எதிர்பார்க்கிறார்கள் . நிச்சயமாக ஒரு தாயை யாராலும் சமன் செய்ய முடியாது . செய்ய வேண்டுமென்கிற அவசியமும் இல்லை . இரண்டும் வெவ்வேறு உறவுகள் , வெவ்வேறு உணர்வுகள் அவையிரண்டையும் ஆண்கள் தன்னவளிடத்தில் எதிர்பார்ப்பதும் , அதை நிறைவேற்ற பெண்கள் முயற்சிப்பதும் , முடியாமல் தோற்பதும் பெரிய சிக்கல்களின் சின்ன புள்ளியாக உருவெடுக்கிறது ...

கதவை யாரோ படபடவென தட்டும் சத்தம் கேட்டு தன்னிலைக்கு வந்தாள் சுந்தரி . " வரேம்மா " என்று சொல்லிக்கொண்டே வேகமாக கதவை திறந்தாள்.
" எந்த லோகத்துலடி இருக்க " . " பூலோகத்துல தான் " என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்  சுந்தரி . " இப்படி எதையாவது சொல்லி மழுப்பிடு , எத்தனை தடவ கூப்பிட்டேன் தெரியுமா ?" , அம்மா படபடவென பேசினாள் . " ஏம்மா எந்த ஏரோப்ளேன பிடிக்க இந்த அவசரம் ?" சுந்தரி ஆர்வமுடன் கேட்டாள் . " ஆமாம் பிடிக்குறாங்க , ஜானகி மாமி வந்துருக்கா , சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா , ஹால்ல இருக்கா " .  அம்மா ஏன் பம்பரமாக சுற்றுகிறாள் எனபது சுந்தரிக்கு இப்போது புரிந்தது . ஜானகி மாமி ஏற்கனவே இங்கே வந்திருக்கிறாள் . அவளுக்கு ஒரு வகையில் தூரத்து சொந்தம் .  ஒரு முறை பார்த்ததிலிருந்து அவளுக்கும் அவள் மகனுக்கும் சுந்தரியை மிகவும் பிடித்துவிட்டது . ஏற்கனவே அதை ஜானகி மாமி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள் . அம்மாவுக்கும் அவர்கள் குடும்பத்தை பிடித்திருக்கிறது. சுந்தரி அப்பாவிடம் சொல்லி படிப்பை காரணம் காட்டி தட்டிக் கழித்து விட்டாள் . இப்போது அவள் கல்லூரி படிப்பு முடியப்போகும் தருவாயில் மறக்காமல் வந்திருக்கிறாள் மாமி  ...

போகவில்லையென்றால் அம்மா விட மாட்டாள் என்பதற்காகவே மனமில்லாமல் முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு ஹாலுக்கு போனாள் சுந்தரி . அம்மா அவளை பார்த்து பவுடர் போட சொல்லி  சைகை செய்ய அதைப் பார்த்த மாமி " நம்ம குழந்தைக்கு எதுக்கு அதெல்லாம் சும்மாவே கோவைப்பழம் மாதிரி இருக்கா " என்றாள் . அந்த புகழ்ச்சி சுந்தரிக்கு அதீதமாக பட்டது கூடவே ஏனோ ஒரு பயம் வந்தது . மாமி அவளை பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு தலையை தடவிக்கொண்டே பேசினாள் .
" நெறைய புக்ஸ் படிப்பியாமே , அம்மா சொன்னா " . " ம் " என்பது போல சுந்தரி தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் . " இங்கிலிஷ் நாவல் கூட நெறைய படிப்பா " . அம்மாவை ஒரு முறை முறைத்தாள் சுந்தரி . இது ஏதோ பெண் பார்ப்பதற்கு முந்தைய ஒத்திகை போல பட்டது அவளுக்கு . சும்மாவே அம்மாக்கள் " காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு போல " பீற்றிக்கொள்வார்கள் . இப்போது ஒரு பெரிய இடத்து மாமி சுந்தரியை தனது மருமகளாக்க வீடு தேடி வந்திருக்கிறாள் , அந்த சந்தர்ப்பத்தில் மகளை பாராட்டாமல் அவள் அம்மா விட்டு விடுவாளா ?!.

மாறி மாறி மாமி கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு ஏனோதானோ வென்று பதில் சொல்லிவிட்டு ஒரு  வழியாக தப்பித்து மீண்டும் ரூமுக்கு வந்து சேர்ந்தாள் சுந்தரி . " மாமி நீங்க ஒன்னும்  தப்பா எடுத்துக்காதீங்கோ , அவளுக்கு செத்த தலைவலின்னு படுத்திருந்தா , அதான் " . சுந்தரிக்கு அவள் அம்மா சமாளிப்பது நன்றாகவே கேட்டது . " சே சே அதனாலென்ன மாமி குழந்தை ரெஸ்ட் எடுக்கட்டும் " . ஜானகி மாமி குழந்தை என்று கூப்பிடும் போதெல்லாம் சுந்தரிக்கு அன்னீஸியாக இருந்தது . தான்  எப்படி அழைக்கப்பட வேண்டுமென்கிற உரிமையை நாம் தான் தரவேண்டும் , ஆனால் அதை மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் போது ஒரு வித எரிச்சல் வந்து விடுகிறது . அதுவும் இது திருமணம் சம்பந்தப்பட்டது என்பதால் அவளுக்கு எரிச்சலும் , பயமும் கூடுதலாகவே இருந்தது . சுந்தரிக்கு உடனடியாக கார்த்திக்கோடு பேச வேண்டும் போல இருந்தது ...

கார்த்திக் முன்பு கொடுத்திருந்த நம்பரை புக் செல்ஃபில் இருந்து சுந்தரி தேடியெடுத்தாள் . மதுரையில் இவர்கள் டாப்படிக்கும் இட்லி கடையின் நம்பர் அது . மாமி போனவுடன் அம்மா இல்லாத நேரமாக பார்த்து ஹாலில் இருந்து அந்த நம்பருக்கு ஃபோன் செய்ய வேண்டும் . முன்பு சுரேஷ் வீட்டு நம்பர் கொடுத்திருக்கிறான் , அதில் பேசியிருக்கிறாள் . அதன் பிறகு இந்த கடை நம்பர் தான் . ஒரே ஆளே எப்பொழுதும் எடுப்பதில்லை ஆனால் யார் எடுத்தாலும் கார்த்திக் என்றவுடன் சுந்தரியா என்று கேட்பார்கள் . அப்படி கேட்டவுடன் அவளுக்கு ஒரு வெக்கம் வரும் . தான் இன்னாருடைய ஆள் என்பதை வேறொருவர் சொல்லக்கேட்பதே பெண்களுக்கு அலாதிப்பிரியம் தான் . தன் தோழியை அவள் காதலன் பேரை சொல்லி கூப்பிடும் போது அவளுக்கு வெக்கம் பிடிங்கித்தின்னும் . அதை சொல்லி சொல்லியே அவளை தோழிகள் ஓட்டுவார்கள் . சுந்தரிக்கு அது போன்றதொரு கொடுப்பினை அமையவில்லை . யாரிடமும் பகிரங்கமாக சொல்ல முடியாத சூழல் . யாராவது ஒருவருடன் சொன்னாலும் எல்லோருக்கும் வைரஸ் போல பரவிவிடும் அபாயம் . கொக்கு  மீனுக்கு காத்திருப்பது போல அவள் நல்ல சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தாள்  ...

சுந்தரி கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல காத்திருந்த அதே நேரத்தில் சரக்குக்கு தண்ணீரையும் , சோடாவையையும் மிக்சிங் செய்துகொண்டே சரியா இருக்கிறதா  என்று அவன் சென்னைக்கு தன்னை கூட்டிக்கொண்டு வந்தவரிடம் கண்களாலேயே வினவிக்கொண்டிருந்தான் .
" போதும் போதும் " என்பது போல கையை ஆட்டினார் அந்த முன்னாள் உதவி இயக்குனர் . இதே மதுரையில் நண்பன் மர்ரு மிக்சிங் செய்து கொடுத்ததை  அடித்து தான் அவனுக்கு பழக்கம் . இன்று நிலைமை உல்டாவாக மாறியிருப்பதை நினைத்து நொந்து கொண்டான் . ஆனால் இதெல்லாம் பார்த்தால் சினிமாவில் காலம் தள்ள முடியாது என்பது அவனுக்கு புரிந்தது . " தம்பி என்னடா அண்ணன் சரக்கு மண்டியா இருக்கேன்னு நினைக்காதீங்க , ஊருக்கு போனா அடிக்க முடியாது " .
ஓசி யில எவனும் வாங்கித்தர மாட்டானென்பதை அவர் நாசூக்காக சொல்வது போல காரத்திக்கிற்கு பட்டது . " அதெல்லாம் ஒன்னும் இல்லென்னே " , சொல்வதற்காக சொல்லி வைத்தான் . " இன்னிக்கு பார்த்தோம்ல அவன்லாம் ரெண்டு வருஷம் முன்னால ஒண்ணுமே இல்லாம வந்தான் , இப்போ  என்னடான்னா நம்மக்கிட்டயே பகுமானம்  பண்றான் " என்று போதையில் அவர் பொரும ஆரம்பித்தார் . ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து விட்டு வரும் போது அவருடைய பொருமலும் அவனுடைய செலவும் அதிகமாகிக்கொண்டே இருந்தன ...

தொடரும் ...

8 March 2020

அவன் - அவள் - நிலா ( 17 ) ...


சென்னைக்கு போவதென முடிவானது . இதற்கு மேலும் கார்த்திக்கின் அப்பாவிற்கு அவன் மதுரையில் இருப்பது சரியென படவில்லை . இப்படியே போனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் கொலை செய்யப்படுவான் அல்லது யாரையாவது ஏதாவது செய்து விட்டு ஜெயிலுக்கு போவான் என்பது அவருக்கு தெளிவாக புரிந்தது . திடுதிடுப்பென இப்படி கிளம்ப வேண்டியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஏற்கனவே சினிமா ஆசையில் சென்னைக்கு போகும் முடிவெடுத்திருந்தவனுக்கு பேரதிர்ச்சியாக இல்லை . அதோடு அப்பா இப்போதிருக்கும் நிலையில் அவனால் எதுவுமே பேச முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது.
ஒரு பக்கம் அவனது அப்பா அங்கு சென்னையில் வேலை பார்க்கும் தனது நண்பனின் மூலம் கார்த்திக்கிற்கு வேலை வாங்கி தருமாறு பேசிக்கொண்டிருக்க அவன் எந்த டைரக்டரிடம் முதலில் போய் வாய்ப்பு
கேட்கலாம்  என்று யோசித்துக்கொண்டிருந்தான் ...

சூப்பர் குட்ஸ் ஃபிலிம்ஸ் இல் ப்ரொடக்ஷனில் இருக்கும்  சீனியர் சரவணனின் நண்பர் மதுரைக்கு வந்திருப்பது தெரிய வர அவரை போய் சந்திக்க கிளம்பினான் கார்த்திக் . கல்லூரி நண்பன் கௌசிக் அவருடன் தொடர்பிலிருப்பதால்  அவனையும் கூட்டிக் கொண்டு போவதென முடிவெடுத்தான் . அவரை பார்ப்பதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது . அவர்கள் முன் பந்தாவாக இருக்க வேண்டுமென்பதற்காகவே அவர்  லேட்டாக வந்தது போல அவனுக்குப்  பட்டது. கௌசிக் ஏதோ பேச முற்பட அவர்  வெளியில் போய் பேசிக்கொள்ளலாம் என்பது போல சைகை  காண்பித்தார் . மூவரும் தெரு
முக்கில் இருந்த பெட்டிக்கடைக்கு போனார்கள் ...

கடையில் இரண்டு வடையை எடுத்துக்கொண்டவர் இவர்களிடம் நீட்ட கௌசிக் மட்டும் ஒன்றை வாங்கிக்கொள்ள அவர் அவனுக்கு ஒன்றை கொடுத்து விட்டு இன்னொன்றை எடுத்துக்கொண்டார்  . ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கி அதில் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டவர் " சிகரெட் புடிக்கிற பழக்கம்லாம் இல்லேல்ல ? " என்று சொல்லிக்கொண்டே சிகரெட் பாக்கெட்டை பாண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் . இருக்கு  இல்லை என்பது போல இரண்டுக்கும் பொதுவாக அவர்கள் தலையை ஆட்டி வைத்தார்கள் . சிகரெட் வீணாகி விடுமோ என்கிற பயத்திலேயே அவர் அவசரமாக உள்ளே வைத்துக்கொண்டது போலவே  அவனுக்கு பட்டது . " அண்ணே நான் சொன்ன ஃப்ரெண்ட் இவன் தான் " என்று கௌசிக் கை காட்ட அவன் கை குலுக்கிக்கொண்டான் . சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்தவுடன் டீ வர அவர் அதோடு சேர்த்து நேரடியாக விஷயத்துக்கு வந்தார் ...

" அண்ணன் சிபாரிசுல அசிஸ்டன்டா  யாருகிட்டயாவது சேர்த்து விட்டுரலாம் , இல்லேன்னா அது அவ்வளவு ஈசி இல்ல "
" அதாண்ணே உங்க கிட்ட கூட்டிட்டு வந்தேன் " என்று கௌசிக்கும் அவன் பங்குக்கு ஐஸ் வைத்தான் . ,
 " அண்ணன்லாம் சென்னைக்கு போய் கஷ்டப்பட்டு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் அசிஸ்டண்டாக முடிஞ்சது " என்று அவர் சொன்னவுடன்  " பத்து வருஷமா அப்படியே தானே இருக்கீங்க " என்று சொல்ல வந்த கௌசிக் அதை வாயோடு அடக்கிக்கொண்டான் . " தம்பி ஏதோ சொல்ல வந்தீங்க " . " இல்லேண்ணே நீங்க சொல்லுங்க " .
" அப்புறம் நானே தொல்லை தாங்காம அதுல இருந்து ப்ரொடக்ஷனுக்கு மாறிட்டேன்னா பாரேன் " என்று அதை ஏதோ பெருமையாக சொல்லிக்கொண்டார் .  " உங்களாலேயே முடியலேன்னா எப்படிண்ணே "
கௌசிக் பக்க வாத்தியம் வாசித்தான் . ஒருவரை புகழுவதில் என்ன காசா ? பணமா ? அடித்து விடுவோமே என்பது தான் அவனது சைக்காலஜி ...

" தம்பி எதுவும் பேச மாட்டாப்லயா ? என்று கார்த்திகை பார்த்து அவர் கேட்க
" உங்கள நம்பி தான்னே வந்திருக்கான் , நல்ல டைரக்டர் கிட்ட சேர்த்து விட்டுடுங்க " என்று கௌசிக் சொல்ல  " யார் நல்ல டைரக்டர் சொல்லு பார்ப்போம் " என்று கார்த்திகை பார்த்து கேட்டார் உடனடியாக .
ஏதாவது சொல்லப்போய் கருத்து வேறுபாடு வந்து விடுமோ என்று யோசித்தவன் " மணிரத்னம் " என்றான் . அவனை சட்டென்று பார்த்தவர்
" அதெல்லாம் பெரிய இடம் , இன்ஸ்டூட்ல இருந்து வந்தாலே  திரும்பி கூட பார்க்க மாட்டாங்க  " என்றார் . அவனுக்கு சப்பென்று ஆகி விட்டது .
" இல்லேண்ணே ஆழ்வார்ப்பேட்டை ல தான் அவர் வீடு நேர போகலாம்னு இருந்தேன் " .  . " தம்பி நீ போய்ட்டு அங்க இருக்குற வாட்ச்மேனுக்கு பொழுதை வேணா போக்கலாம் மத்தபடி ஒன்னும் நடக்காது " அவர் சொல்லி விட்டு சிரித்தார் ...

" வேற யாராவது சொல்லு " , அவன் உடனே ஷங்கர் என்றான் . அவர் சீரியசாக  அவனை பார்த்தார் . " தம்பி நீ சொல்ற யாரையுமே  கிட்ட கூட நெருங்க முடியாது " . சொன்னவரை ஒருமுறையும் கவுசிக்கை ஒருமுறையும் அவன் திரும்பி பார்க்க , ஏதோ யூகித்தவராய் , " அண்ணனால முடியாததுன்னு ஒன்னும் இல்ல , இருந்தாலும் கால விரயம் ன்னு ஒன்னு இருக்குல்ல " என்று சமாளித்து விட்டு மூன்றாவது சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டவர் இரண்டாவது முறையாக டீ சொன்னார் . அவர் ஆசுவாசமாக செய்வதையெல்லாம் பார்த்தால் அடுத்து அவருக்கு ஒரு வேலை வெட்டியுமில்லை என்பது தெளிவாக தெரிந்தது , அதற்கு ஏன் ஒன்  அவர் ஆக காக்க வைத்தார் என்பது மட்டும் அவனுக்கு அப்போது புரியவில்லை  . அவர் சினிமாவில் தன்  பிரதாபங்களையெல்லாம் அடுக்கிக்கொண்டு போக அவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல்  இதையெல்லாம் நம்புறதா வேணாமா என்று விவேக் மாடுலேஷனில் அவனுக்கு யோசனை வந்தது . நாயகன் படத்தில் வருவது போல " நீங்க நல்லவரா கெட்டவரா " என்று கேட்க வேண்டும் போல இருந்தது ...

பேச தொடங்கியதிலிருந்து  அவனுக்கு தீர்க்கமாக அவர் நிறைய கமர்சியல் படங்களை தான் விரும்பி பார்ப்பார் என்பதும் , சினிமாவில் தான் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமென்கிற எண்ணத்தில் மட்டுமே அவர் அந்த துறையை தேர்ந்தெடுத்தார் என்பதும் தெரிந்தது . தரமான படங்கள் மேல் அவருக்கு பெரும்பாலும் ஈடுபாடு இல்லையென்பதும் , டெக்னிக்கல் விஷயங்களிலும் அவர்  பத்து ஆண்டுகளுக்காவது பின் தங்கியிருந்ததும்  அவனுக்கு ஆச்சர்யமாகவும் , அதிர்ச்சியாகவும் இருந்தது . உண்மையில் சாதிக்க முடியாமல் போனவர்களுக்கு தான் தங்களை யாராவது புகழ வேண்டுமென்றோ , அது கிடைக்காத பட்சத்தில் அவர்கள்  தன்னைத்தானே புகழ்ந்து கொள்வார்கள் என்றும் எங்கோ படித்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது . இப்படி பல்வேறு எண்ணங்கள் அவன் மனதுக்குள் ஓடினாலும் சினிமாவில் சேர நிச்சயம் அவர் ஒரு  துருப்புசீட்டு என்பது மட்டும்  புரிந்தது...

இந்த வாரக்கடைசியில் சென்னைக்கு போவதாக சொன்னவர் அவனிடம் எப்படி போகப்போவதாக விசாரித்தார் .  அவன் வைகையில் வருவேன் என்று சொல்ல , அது தனக்கு சரிப்படாது என்றும் கே.பி.என் பஸ்ஸில்  இந்த வாரக்கடைசிக்கு புக் செய்யுமாறு பணித்தார்  . ரயில் டிக்கெட்டை  விட அது பல மடங்கு அதிகமாச்சே  என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் கவுசிக்கை டீ இத்யாதிக்கு பணம் கொடுக்க சொல்ல அவன் கார்த்திக்கை பார்க்க அவன் செட்டில் செய்தான்  . பிறகு தான் கையில் வேறு பைசா இல்லையென்பது தெரிய வர அவரிடம் கேட்கலாமா என்ற யோசைனையை புறந்தள்ளிவிட்டு " அண்ணே ஒரு சிகரெட் கொடுங்க " என்று கேட்டு வாங்கிக்கொண்டான் . அதற்கு மேல் அங்கிருந்தால் மூஞ்சியிலேயே ஊதி விடுவான் என்று பட அவர் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார் ...

" என்ன மாப்ள பெரிய அடைப்பா இருப்பாரு போல " என்று சொல்லிக்கொண்டே கௌசிக் சிகரெட்டுக்கு கை நீட்ட கார்த்திக் முறைக்கவே அவன் கடைக்காரிடம் இருந்த சில்லறைகளை பொறுக்கிக்கொடுத்து தம்  வாங்கி பற்ற வைத்துக்கொண்டான் . " ஆரம்பமே இப்படி இருக்கே அங்க எத்தனை முதலைங்க இருக்கோ " என்றான் கௌசிக் . உண்மையில் சினிமா உலகத்தை பற்றிய  உண்மை பிம்பத்தை அவர் கோடிட்டு காட்டி விட்டார் . அங்கே முதலைகள் மட்டுமல்ல  திமிங்கலம் , அனகோண்டா எல்லாமே வாயை திறந்து வைத்துக்கொண்டு அவனுக்காக காத்திருப்பது போலவே பட்டது . ஒரு சாங்கிலேயே ஹீரோவை பெரிய ஆளாக மாற்றும் விக்ரமனுக்கே  ஒரு படத்தை இயக்க பல வருடங்கள் ஆகியிருக்கும் . நடந்த உரையாடலலிருந்து சினிமாவில் முதல் அடி எடுத்து வைப்பதே எவ்வளவு கடினமென்பது அவனுக்கு புரிய வந்தது . அதே போல் எல்லா செலவுக்கும் அப்பாவை எதிர்பார்க்க முடியாதென்பதும் அவனுக்கு உரைத்தது ...

தொடரும் ...

17 January 2020

அவன் - அவள் - நிலா ( 16 ) ...


ப்பாவை பார்த்தவுடன் கார்த்திக்கின் போதை அப்படியே இறங்கியது . அவர் அவன் நண்பர்களையும் சேர்த்து முறைத்துப் பார்த்துக்  கொண்டிருந்தார் . ரமேஷ்  அண்ணனுக்கு என்று  ஏதோ சொல்ல வாய் திறந்தவன் பிறகு மூடிக்கொண்டான் . கடைக்காரர் மட்டும் வெளியே வந்து " உங்க பிள்ளையா சார் , தண்ணி போட்டா கண்ணு முன்னு தெரில பார்த்து சூதானமாக கூட்டிக்கிட்டு போங்க " என்று அக்கறையாக சொல்வது போல அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்தார் . கார்த்திக் என்ன செய்வதென்று புரியாமல் சுற்றிமுற்றி பார்த்தான் . அவனுக்கு உடனே தம்மடிக்க வேண்டும் போலிருந்தது . அப்பாவிடம் " நீ போப்பா நான் வீட்டுக்கு வரேன் " என்றான் . அவனையே முறைத்துப் பார்த்த அப்பா " ஏன் இன்னொரு ரவுண்டு பாக்கி இருக்கா ?! " என்றார் . " அப்பா அதெல்லாம் ஒண்ணுமில்ல நீ போன்றேன்ல " .
" போக முடியாதுடா நீ வந்தா தான் போவேன் " அவன் அப்பா பிடிவாதமாக நின்றார் ...

ரமேஷ் " மச்சி நீ வீட்டுக்கு போ , காலையில பேசிக்கலாம் "  என்று காதுக்குள் சொன்னான் . கார்த்திக்கிற்கு அப்படி நடுவிலே போவது சுத்தமாக பிடிக்கவில்லை . எத்தனை பேரோடு தண்ணியடித்தாலும் கடைசியில் ரமேஷும் , அவனும் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் படுத்து விடுவது தான் வழக்கம் . அதிலும் ரமேஷ் அண்ணனை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் அவன் அருகில் இருக்க வேண்டும் . சுற்றியிருப்பவர்கள் நிச்சயம் அவனை ஏற்றிவிட்டு பிரச்சனையை இன்னும் பெரிதாக்கி விடுவார்கள் . அவன் யோசிப்பது புரியாமல் ரமேஷ் " வீட்டுக்கு போடா அப்பா அங்கேயே நிக்குறாரு " என்றான் . " என்ன துரைக்கு வீட்டுக்கு வர மனசு இல்லையா ? இப்போ வரலேன்னா ஜென்மத்துக்கும் வர வேண்டாம்னு சொல்லிடு " கார்த்திக் அப்பா தீர்க்கமாக சொன்னார் .
" இல்ல மாமா இப்போ வந்துடுவான் " ரமேஷ் அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அப்பாவிடம் விட்டான் ...

" தள்ளுப்பா நான் ஒட்டுறேன் " என்றவனை " இன்னும் என்ன சுமக்கிற வயசும், திறனும் உனக்கு வரலடா " என்று சொல்லி அவனை பின்னால்  உட்கார வைத்து விட்டு சைக்கிளை மிதித்தார் அப்பா . அப்பா பின்னால்  உட்கார்ந்து சைக்கிளில் போகும் போது அவனுக்கு சின்ன வயதில் அவனை உட்கார வைத்து அவன் அப்பா தங்கம் தியேட்டருக்கு சிவாஜி படம் பார்க்க அழைத்து சென்றது நினைவுக்கு வந்தது . அப்பாவின் பிடியிலேயே அப்படியே சின்னப்பையனாகவே இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மனம் ஏங்கியது . அவன் தூங்கி விடக்கூடாதே என்பதற்காக அப்பா சிவாஜி பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார் . சிவாஜி என்றால் அவருக்கு உயிர் . சிவாஜியுடன் ஒரு முறை சேர்ந்து  எடுத்துக்கொண்ட ஃபோட்டோ அவர் வீட்டில் நடுநாயகமாக வீற்றிருக்கும் . சிவாஜி என்னமோ அவனுக்கு பெரியப்பா என தோன்றுமளவிற்கு அவரை பற்றிய பேச்சு என்றுமே நிறைந்திருக்கும் ...

" ஏம்பா யாராவது மிருதங்கம் வாசிக்கும் போது இப்படி ரத்தம் கக்கி சாவாங்களா ? , எல்லாம் ஓவர் ஆக்டிங் " என்று வேண்டுமென்றே அவன் அப்பாவை வம்பிழுப்பான் . வேறு யாராவது இப்படி சொல்லியிருந்தால் அவன் அப்பா வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போயிருப்பார் . அவன் கேட்டதுமே சிரித்துக்கொண்டே " டே அதெல்லாம் டைரக்டர் சொல்லனும்டா , அவர் நடிப்புல மெய் மறந்து செட்டே வாயடச்சு போயிருக்கும் " என்பார் . 
" இங்கிலிஷ் படத்துலல்லாம் யாராவது இப்படி ஓவரா அழறாங்களா ?" . 
" டே அவனுங்க அப்பா அம்மா  செத்தாக்கூட பெருசா அலட்டிக்காம அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவாங்க , நாம அப்படியா ? அந்தந்த சமூகத்துக்கு ஏத்த மாதிரி தாண்டா நடிப்பும் " என்று விளக்கமாக சொல்வார் . அவர்  சொன்னதில் நிறையவே அர்த்தம் இருந்தது ...

" அவ்வளவு ஏன் , இன்னிக்கு  இருக்குற ரெண்டு பெரிய ஸ்டார்களுக்குமே குரு சிவாஜி தான் . அதுவும் உன் ஹீரோ கமல் டாணா நடிச்சாரே என்ன படம் ?" 
" நாயகன் " உடனே பதில் சொல்வான் . " ம் அதோட ஒரிஜினல் " காட் ஃபாதர் " ஓட ஹீரோ மார்லன் ப்ராண்டோ , அவரையே தன்  நடிப்பை பார்த்து வாயப்பொளக்க  வச்சவர் டா நடிகர் திலகம் , சின்னப்பயலே " என்று ஓங்கி அவன் தொடையில் தட்டுவார் . " அப்பா " என்று கத்திக்கொண்டே அவன் அங்கிருந்து ஓடுவான் . அப்பா மகன் இருவருக்குமே ஆதர்ச நாயகர்கள் நடித்த தேவர் மகன் படத்தை அவன் பல முறை பார்த்திருப்பான் . ஆனாலும் அப்பாவுடன் அதை பார்க்க வேண்டுமென்று அவன் ப்ளான் செய்த போதெல்லாம் ஏனோ அது முடியாமலேயே போய் விட்டது . இதோ ரஜினியுடன் சிவாஜி நடித்த படமே வந்து விட்டது . அப்பா எதுவும் பேசாமல் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார் . " அப்பா நான் ஓட்டவாப்பா " என்றவனை " பேசாம வாடா "  என்று கடிந்து கொண்டார் ...

இருவருக்குள்ளும் இருக்கும் அளவு கடந்த பாசத்தை இருவருமே வெளியில்  காட்டிக்கொண்டதில்லை. பத்து நிமிடம் சேர்ந்த மாதிரி உட்கார்ந்து பேசினாலே அது ஏதோ வாக்குவாதத்திலோ அல்லது  சண்டையிலோ போய் முடிந்துவிடும் . அப்பாவின் அளவு கடந்த கோபத்தை அம்மா மட்டுமல்ல  அனைவரும் சகித்துக்கொள்வது எப்படி என்கிற ஆச்சர்யம் அவனுக்கு எப்பொழுதுமே இருக்கும் . கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது போல அவர் சுற்றியிருப்பவர்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் , ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்திருக்கிறார் . அதுவே கூட அவரை மற்றவர்கள் சகித்துக்கொள்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம் . ஆனால் அவனால்  மட்டுமென்னவோ அவர் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை .அப்பாவை எதிர்த்து பேசாதே என்று  அம்மா பல தடவை சொல்லியும் அவன் அதை சட்டை செய்ததில்லை ...

இருவருக்குமிடையே  அடிக்கடி வரும் சண்டைகளுக்கு கிரக கோளாறு தான் காரணம் என்றார் ஜோசியர் . இருவருக்குமிடையேயான அதிக அளவு வயது
( 44 ) வித்தியாசம் தான் காரணம் என்றார்கள் குடும்ப நண்பர்கள் . ஆனால் இருவருக்குள்ளும் இருக்கும் அதீத அன்பு தான் அனைத்து சண்டைகளுக்கு காரணம் என அப்போது அவனுக்கு புரியவில்லை . ஒரு முறை தங்கம் தியேட்டரில் பட இண்டெர்வெல்லில் அப்பா சிகெரெட் பிடிப்பதை பார்த்து அவனும் கேட்டு அடம் பிடிக்க அந்த சிறுவனின் எதிர்காலம் கருதி அன்றிலிருந்து அவனுக்கு முன் சிகெரெட் பிடிப்பதையே விட்டுவிட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அப்பா காலைக்கடன் கழித்து வந்தவுடன் டாய்லெட் உள்ளே போகும் போது சிகெரெட் ஸ்மெல் நன்றாகவே அடிக்கும் . அதை பயன்படுத்தி அவனும் நிறைய தடவை திருட்டு தம் அடித்திருக்கிறான் . அவன் ஓரளவு பெரியவனானதும் அவன் அப்பா அவனை கண்டும் காணாமல் பெருந்தன்மையாக இருந்திருக்கிறார் . ஆனால் இன்று தண்ணியடித்து விட்டு  தகராறு பண்ணும் போது கையும் களவுமாக அவரிடம் மாட்டுவோமென்று அவன் நினைத்திருக்கவில்லை ....

நேராக வீட்டுக்கு வந்ததும் சைக்கிளை  மெயின் ஸ்டான்ட் போட்டு விட்டு அவனை சைட் வழியாக பின்னால் இருக்கும் பாத்ரூமுக்கு கூட்டிக்கொண்டு போனார் . ஷவரை திறந்து விட்டு அதில் பதினைந்து நிமிடம் நின்ற பிறகு தான் அவனுக்கு போதை இறங்கியது . கதவிலேயே துண்டு கிடந்தது . அவன் சிறு வயதில் அப்பா இதையெல்லாம் அவனுக்கு செய்திருக்கிறார் . ஆனால் அவனுக்கு இப்போது தர்ம சங்கடமாக இருந்தது . இந்த மனுஷன் எதுக்கு இதெல்லாம் பண்ணி இன்னும் நம்மள நாறடிக்கிறார் என்றே அவனுக்கு தோன்றியது . ஆனால் அவர் செய்த எதிலுமே துளி எதிர்பார்ப்போ , செயற்கைத்தனமோ இல்லையென்பது அவனுக்கு புரிந்தது . அவனுடைய  எதிர்காலம் குறித்த கவலையே அவருக்கு அதிகமாக இருந்தது . தான் சரியாக கவனிக்காததால் தான் அவன் இந்த அளவுக்கு போய்  விட்டானோ என்கிற குற்ற உணர்வும்  அவருக்கு மேலோங்கியிருந்தது ...

அவன் உள்ளே வந்த நடையிலிருந்தே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த அம்மா அவன் குளித்து விட்டு வருவதற்காக காத்திருந்தவள் போல கத்த ஆரம்பித்தாள் . அவன் அப்பா ஒரு முறை முறைத்தவுடன் அடங்கி அடுப்பங்கரைக்கு போனவள் பாத்திரத்துடன் போட்ட சண்டை ஹாலில் நன்றாகவே கேட்டது . " உங்க புள்ளையாண்டான் ஏதாவது சாப்பிடுறானான்னு கேட்டு சொல்லுங்க " என்று அம்மா கேட்டவுடன் தான் அவனுக்கு பசி உரைத்தது . ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு அவன் செய்த களேபரத்தில்  ஒழுங்காக சாப்பிடவேயில்லை . தட்டை எடுத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான் . என்ன அமளி துமளி நடந்தாலும் வயிற்றுக்கு உணவிட வேண்டும் என்பதை பற்றி எப்பொழுதுமே சிந்திக்கும் ஒரே  ஜீவராசி அம்மா தான் . " என்ன மிளகாப்பொடி தானா ? சட்னி இல்லையா " அவன் கேட்டவுடனே " ஆமாமா நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு சட்னி , சாம்பார் லாம் பண்ணி வைக்கிறாங்க " என்று சத்தம் போட்டு விட்டு " பக்கத்துல சீனி வேணா இருக்கு போட்டுக்கோ " என்று சொல்லவே அவனுக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. அவன் எதற்கு சிரிக்கிறான் என்று புரியாமலேயே அவனை பார்த்தவுடன் அவன் அம்மாவுக்கும் சிரிப்பு தானாக வந்தது ...

சாப்பிட்டு முடித்தவுடன் வாசல் வராண்டாவை தாண்டி தெருவுக்கு போக முற்பட்டவனை அவன் அப்பா குரல் தடுத்தது . " கொஞ்சம் உட்காரு உன் கூட பேசணும் " . அவன் எதை அவாய்ட் செய்ய வேண்டுமென்று நினைத்தானோ அது முடியாமல் போனது . " சொல்லுப்பா " என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் . " இது  வரைக்கும் உன் விஷயத்துல நான் குறுக்க வந்ததில்லை ஆனா நான் இனிமேலும் வராம இருக்கறது நல்லதா படல " . அப்பா ஏதோ முடிவெடுத்தது போல பேசத்  தொடங்கினார் .  " நானும் நீ எல்லாத்தையும் நிறுத்திட்டு நார்மலாயிடுவேன்னு பாத்தேன் ஆனா எதுவுமே நடக்கல " அவர் பேசும் போதே அவன் குறுக்கிட்டு " இப்போ என்ன " என்று ஆரம்பிக்கும் போதே " இனிமேலும் என்னடா நடக்கணும் " என்று அவர் தெருவே கேக்கும்படி கத்தினார் . " இன்னிக்கு கடைக்காரன போட்டு அடிக்கிற , அடுத்து ரமேஷ் அண்ணனை கொன்னவன  ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போவ , நீ திரும்ப வந்தவுடனே சும்மா விடுவாங்களா ? உன்ன அவனுங்க எதாவது பண்ணுவானுங்க , இதுக்காகவாடா உன்ன படிக்க வச்சேன் " . அவன் அப்பாவின் கண்களில் முதன்முதலாக கண்ணீரை பார்த்தவுடன் அவனால் எதுவும் பேச முடியவில்லை . " நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே நீ இங்க இருக்க வேணாம் , மெட்ராஸ் ல இருக்குற என் தம்பி வீட்டுக்கு போ , அங்க ஏதாவது வேலை தேடிக்கோ " . அவர் சொன்னவுடன் தனது  சினிமாக்கனவுக்கு மெட்ராஸ்  உகந்தது தான் என்று யோசித்தவன் " அப்பா என்னால வேற வேலைக்குல்லாம் போக முடியாது நான் ஆட் ஏஜென்சில சேரப்போறேன் " என்று சொன்னான் . அவனை ஏற இறங்க பார்த்தவர்  " நீ என்ன எழவு வேணா பண்ணு  ஆனா இங்க பண்ணாத மெட்ராஸ் ல போய் பண்ணு  " . அவர் தீர்க்கமாக சொல்லிவிட்டு நகர்ந்தார் . அந்த கடையிலிருந்து அவனை வீட்டுக்கு கூட்டி வந்து அவனது எதிர்காலத்தையே  அப்பா மாற்றியிருக்கிறார் என்பது அவனுக்கு சில காலங்கள் கழித்து  புரிந்தது ...

தொடரும் ...


4 January 2020

அவன் - அவள் - நிலா (15) ...


கார்த்திக்கிற்கு எல்லாமே வெறுமையாக இருந்தது . எல்லோரும்  கூட்டம் கூட்டமாக அண்ணனை  எப்படி சம்பவம் செய்தார்கள் என்பது பற்றி விவாதத்தில் இருந்தார்கள் . அண்ணன் காரியம் முடியறதுக்குள்ள அவிய்ங்கள போட்ரனும் ரமேசு என்று அவனுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் . கார்த்திக் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒரு ஓரமாக மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் . ரமேஷ் தன்னைப்போல ஆகாமல் நல்ல படியாக படித்து பெரிய ஆளாக வேண்டுமென்று அண்ணன் அடிக்கடி சொன்னது மட்டும் கார்த்திக் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது .
" சிங்கம் மாதிரி நடந்து வருவானே இப்படி செதச்சிட்டாய்ங்களே " ரமேஷ் அம்மா இடைவிடாது அழுது கொண்டே இருந்தாள் . கடந்த முறை அவர் வீட்டுக்கு போயிருந்த போது ரமேஷ் அம்மா ஒரு பெண்ணின் படத்தை காட்டி
" கார்த்தி தம்பி பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா ஹீரோயினி மாரி இருக்காள்ல "? , கார்த்திக் அம்மா காட்டிய ஃ போட்டோவை பார்த்தான் .
" தேவர் மகன் படத்துல வர  ரேவதி மாதிரி இருக்காம்மா " .
" அப்படி சொல்றா கண்ணு , அண்ணனுக்காக பார்த்திருக்கேன் , அப்புறமா அவன் கிட்ட நீயே சொல்லு " என்று ஃபோட்டோவை அவனிடம் கொடுத்து விட்டு உலையை இறக்க அடுப்பங்கரைக்கு ஓடினாள் ...

எப்பொழுது வீட்டுக்கு போனாலும் அவனை சாப்பிட சொல்லாமல் இருந்ததேயில்லை . அவன் வேண்டாம் என்று சொன்னாலும் எதையாவது கொடுக்காமல் விட மாட்டாள் . " ஏண்டி நீ பாட்டுக்கு அவனுக்கு கோழியா வைக்குற , நமக்கு பாவம் வரதுக்கா ?" ஒரு முறை ரமேஷ் பாட்டி கேட்ட பொழுது " ஆமா அப்படியே வரப்போகுது , அவன் பொறந்தது மட்டும் தான் அங்க , மத்தபடி நம்ம பய " என்று ரமேஷ் அம்மா சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் பாவ புண்ணியத்தையெல்லாம் கணக்கு பார்க்காமல் நாட்டுக்கோழியை ருசித்துக்கொண்டிருந்தான் . அப்படி பார்த்த பெண்மணியை இன்று தலைவிரி கோலமாக பார்க்க என்னமோ போலிருந்தது .  கணவன் இறந்த போது கூட கல்லு போல தைரியமாக இருந்தவரை புத்திர சோகம் உருக்குலைய செய்து விட்டது . பழசையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவன் விரல்களை தம் சுட்டவுடன் சுருக்கென்று எரிய அதை தூக்கிப்போட்டு விட்டு நிமிர்ந்தான் . பலதரப்பட்ட கும்பலுக்கு நடுவே பேசிக்கொண்டிருந்த ரமேஷ் மற்றும் நண்பர்கள் சிறிது விலகி அவனை நோக்கி நடந்து வந்தார்கள் ...

அவர்கள் அருகே வந்ததும் கார்த்திக் மரத்தடியில் இருந்து எழுந்து நின்றான் .
" மச்சி சண்முகம் அண்ணன் வந்தாருடா " அவன் தெரியும் என்பது போல மண்டையாட்டினான் . " அண்ணன ராஜாவும் அவன் கூட்டாளிகளும் தான் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கானுங்க , நாம மடக்கறதுக்குள்ள கோர்ட்ல
சரண்டர் ஆயிடலாம்னு பிளான் போட்ருக்காய்ங்கலாம் " . " ம்ம் " என்று கார்த்திக் கேட்டுக்கொண்டான் . " என்னடா சீரியஸா சொல்லிட்டிருக்கேன் , ம்ம்ன்ற " ரமேஷ் கோபத்தோடு கேட்க , " அண்ணன் ப்ரொட்யூசர் கொடுப்பாருன்னு கனவுல இருந்தான் , இப்போ அது போயிடுச்சேன்னு கவலையில இருப்பான் " , வேண்டுமென்றே கூட்டத்தில் ஒரு அல்லக்கை ரமேஷை ஸ்க்ரூ செய்தான் . கார்த்திக் பதில் சொல்வதற்குள் " ஒம்மால உன் வாய மூடுறீயா " என்று ரமேஷ் அவன் வாயை அடைத்தான் . " நீ சொல்லு மச்சி " என்று மறுபடியும் ரமேஷ் கேட்டான் . " என்ன அவிய்ங்களுக்கு ஸ்கெட்ச் போடணுமா ?" , கார்த்திக் கேட்க ரமேஷுக்கு புது தெம்பு வந்தது ...

" ஆனா என்ன ஸ்கெட்ச் போட்டாலும் மாட்டாம இருக்க முடியாது , அண்ணன போட்டது யாருன்னு இந்நேரம் போலீசும் ஸ்மெல் பண்ணியிருக்கும் , அவிய்ங்களுக்கு  எதாவது ஆச்சுன்னா நம்ம கிட்ட தான் வரும் " .
" அப்போ யாரு அண்ணனை  போட்டதுன்னு தெரிஞ்சும் பொட்ட மாதிரி பம்மிக்கிட்டு இருக்க சொல்றியா " ரமேஷ் வெடித்தான் .
" மாப்பிள்ளை நான் சத்தியமா அப்படி சொல்லல , ஆனா ஒரு நிமிஷம்  உன் அம்மாவை பாரு , நீயும் ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா  அவங்களுக்கு யாரு இருக்கா " கார்த்திக் கை காட்டிய திசையில் அவன் அம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள் . கல் மனதையும் கரைத்து விடும் கதறல் அது . ரமேஷ் டென்ஷனில் ஒரு தம்மை பற்ற வைத்தான் . ஒரே  இழுப்பில் அதை தூர போட்டு விட்டு ஓவென்று கார்த்திக்கை கட்டிக்கொண்டு அழுதான் .
" மச்சி ஒரே நாள்ல இப்படி எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுட்டாய்ங்களேடா " . அவன் அழுவதை பார்க்கும் போது கார்திக்கிற்கும் அழுகையும் , ஆத்திரமும் பொத்திக்கொண்டு வந்தது . எதிர்காலமாவது மண்ணாவது அப்படியே போய் அவனுங்களை போட்டுத்தள்ளிட்டு உள்ளே போய் விடலாம் போல இருந்தது .  ஆனால் அவன் உள்ளுணர்வு அதற்கு எதிராக எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தது ...

துக்கம் விசாரித்த பிறகு ஒவ்வொருவராக சொல்லிக்கொள்ளாமல்
கிளம்பிக்கொண்டிருந்தார்கள் . ரமேஷ் அப்பாவின் நண்பர்கள் ஒரு குழுவாக சாராயம் அடித்துக்கொண்டிருந்தார்கள் . சொந்தக்காரர்கள் ஓரளவு கிளம்பி விட கார்த்திக் , ரமேஷ் மற்றும் நண்பர்கள் என்ன செய்வதென்று குழம்பிப் போயிருந்தார்கள் . அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வழக்கம் போல மர்ரு வும் மொக்கையும் போய் சரக்கை வாங்கிக் கொண்டு வந்தார்கள் . ரமேஷ் அவன் அம்மாவை ஒரு முறை பார்த்துக்கொண்டான் . சொந்தக்காரர்களுடன் அண்ணனின் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தாள் . நிச்சயமாய் அங்கிருந்து நகர மாட்டாள் . ரமேஷும் கார்த்திக் அண்ட் நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடிக்கு போனான் . அங்கிருந்தஒரு போர்வையை உதறிப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்கள் .  பொதுவாக சரக்குடன் சோடா , தண்ணீர் சேர்த்து மெதுவாக அடிக்கும் ரமேஷ் அன்று ராவாக அடித்தான் . அதை தடுக்கும் நேரத்தில் கார்த்திக் தன்னுடைய மிக்சிங்கை மறந்து அப்படியே அடித்து விட்டான் . இருவருக்கும் தலை சுற்றி என்னமோ செய்தது . ஆனால் நிறுத்தாமல் அடித்துக்கொண்டிருந்தார்கள் ...

" அண்ணனை கொன்ன ஒவ்வொருத்தன் கதையையும் முடிக்கணும் மாப்பிள்ளை "கார்த்திக் கத்திக்கொண்டே பீர் பாட்டிலை தரையில் அடித்து உடைத்தான் .  சரக்கு ஏறினாலே அவனை சமாளிப்பது கஷ்டம் அதிலும் எதையும் கலக்காமல் ராவாக அடித்திருக்கிறான் என்ன நடக்குமோ என்று மற்றவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள் . " ஒர்த்தனையும் விடக்கூடாதுடா " என்று கார்த்திக் கத்த ரமேஷும் சேர்ந்து  கொண்டான் . மொக்கை உடனே கீழே எட்டிப்பார்த்து விட்டு வந்து " மச்சி கத்தாதடா அம்மா சத்தம் கேட்டு மேல வந்துடப்போறாங்க " அவன் அம்மா பேரை சொன்னவுடன் கார்த்திக் லேசாக குரலை தாழ்த்தினான் . " என் அம்மாவே அருவாளை  எடுத்துட்டுப்போய் அவிய்ங்களை வெட்டுவாடா " ரமேஷ் கத்தினான் . " மச்சி ஓவர் ஆயிருச்சு அப்படியே விட்ட நீ சாப்புடாம இங்கயே மட்டையாயிடுவ "மர்ரு சொல்லிக்கொண்டே இருவரையும் கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு போய் அங்கிருந்த தொட்டிக்குள் தலையை முக்கினான் ...

தண்ணீருக்குள் தலையை முக்கியும் போதை இறங்காமல் லெமனை அப்படியே வாயில் பிழிந்து கொண்டார்கள் . ஒரு  வழியாக அவர்களை கடத்திக்கொண்டு போய்  வண்டியில் ஏற்றினார்கள் . விழுந்து விடக்கூடாதென்று  முன்னாடியும் பின்னாடியும் இருவர் உட்கார வண்டி புரோட்டா கடைக்கு பறந்தது . வண்டியை சைட் ஸ்டான்ட் போடுவதற்குள் விழுந்து எந்திரித்து கடை பெஞ்சில் உட்கார்ந்தார்கள் . அவர்கள் அமர்ந்த மாத்திரத்திலேயே கடைக்காரனுக்கு லேசாக பீதி வந்தது . பையன் வந்து என்ன வேண்டுமென கேட்க ஆளாளுக்கு புரோட்டா , கொத்து , சிக்கன் என்று ஆர்டர் கொடுக்க கார்த்திக் வழக்கமாக அதோடு சேர்த்து ஆம்லெட் சொன்னான் . கடைப்பையன் எடுத்து வருவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்க ரமேஷ் டேபிளோடு கவிழ்த்து விட்டான் . உடனே கடையிலிருந்து ஒரு குண்டு ஆள் ரமேஷின் சட்டையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்க கார்த்திக் திமிறி எழுந்து அவனை உதைத்து தானும் கீழே விழுந்தான் ...

குண்டு ஆள் திரும்பவும் சுதாரித்து அடிக்க போகும் முன் நடுவில் புகுந்த
மர்ரு " அண்ணே , குடி ஓவர் ஆயிருச்சு , ராவா வேற போட்டானுங்க தப்பா  எடுத்துக்காதீங்க " என்று சமாதானம் செய்ய ஆரம்பித்தான் .
" அப்படியெண்ணயா குடி " என்று குண்டன் வினவ " இல்லேண்ணே ' என்று ரமேஷ் யாருடைய தம்பி என்பதை அவன் எடுத்து சொன்னான் . அந்த குண்டன் நேராக போய் கடைக்காரரிடம் அதை சொல்ல அவர் இன்னும் பிரச்னை வேண்டாமென்பது போல யோசித்தார் . " என்ன தான் குடின்னாலும் பொண்டாட்டிக்கும்  , அக்கா தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதாப்பா ?"
என்று எதையோ கேட்டு வைக்க " வேணும்னா உங்க வீட்ல இருந்து ஆள அனுப்புங்க வித்தியாசம் தெரியுதான்னு பார்த்து சொல்றோம் " என்று ரமேஷ் குழறி குழறி பேசினான் . அவன் சொன்னது அவருக்கு சரியாக புரியாமல்
" என்னப்பா சொல்றான் " என்று குண்டனை கேட்க அவன் ஒண்ணுமில்லை என்பது போல தலையாட்டி வைத்தான் ...

ஒரு வழியாக பழைய படி டேபிளை எடுத்துப்போட்டு சாப்பிட உட்கார ஒவ்வொன்றாக வந்து கொண்டிருந்தது . புரோட்டாவை பலவாறாக பிச்சுப்போட்டு சால்னா வை ஊற்றிப்பிசைந்து வாயில் போட ஆரம்பித்தான் கார்த்திக் . எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த புரோட்டா சால்னாவுக்கு ஈடாகாது என்று நினைத்துக்கொண்டான் . அவனுக்கு ஆம்லெட் வர லேட்டாகவே ஒரு சவுண்ட் விட உடனே வந்தது . அதை சாப்பிட ஆரம்பிக்கும் போது  அவனுக்கு ஒரு வினோத ஆசை வந்தது . உடனே ஆம்லெட்டுக்கு தொட்டுக்கொள்ள சீனி கேட்டான் . அவன் கேட்டவுடன் கடைக்காரன் இல்லையென சொல்ல எனக்கு இப்போ வேணும் என்று எழுந்து நின்று  தகராறு செய்ய ஆரம்பித்தான் . " இது புரோட்டா கடைப்பா டீக்கடை இல்ல , இந்த மாதிரி கருமம் பிடிச்சவய்ங்களா பார்த்து என்கிட்டே அனுப்புறியே ஆண்டவா " என்று அவர் அங்கு மாட்டியிருந்த பெருமாள் படத்தை பார்த்து புலம்ப ஆரம்பித்து விட்டார் . " எனக்கு ஆம்லெட்டுக்கு தொட்டுக்கர சீனி வேணும் " அவன் 16 வயதினிலே கமல் மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் ...

அவன் செய்யும் கலாட்டாவை பார்த்து அங்கிருந்த சிலர் சிரிக்க அவன் மேலும் உஷ்ணமானான் . " என்னப் பார்த்த என்ன கேன மாதிரி இருக்கா " என்று கத்திக்கொண்டே ஒரு சேரை தூக்கி விட்டெறிந்தான் . திரும்பவும் கடைக்குண்டன்  உள்ளே இருந்து ஓடிவர மறுபடியும் கைகலப்பானது .
அங்கே ஒரே களேபரமாகி ஆளாளுக்கு எதையெதையோ தூக்கியடிக்க கடைக்காரர் வெளியே ஓடி வந்து கையெடுத்து கும்பிட ஆரம்பித்து விட்டார் .
அவன் நண்பர்கள் ஓவ்வொருவராக அமைதியாக ஆரம்பிக்க கார்த்திக் மட்டும் கத்திக்கொண்டே  இருந்தான் . அவனை  அமைதியாக இருக்கும் படி அவன் நண்பர்கள் சைகை  செய்து கொண்டே இருந்தார்கள் . " என்னடா ரொம்ப பண்றீங்க , நீங்க காரணமே இல்லாம டேபிளை கவுக்கலாம் நான் ஆம்லெட்டுக்கு சீனி கேட்டு சேரை தூக்கி அடிக்கக்கூடாதா ? " .
அவன் சொல்ல சொல்ல நண்பர்கள் பின்னால் பார்க்க சொல்லி சைகை செய்து கொண்டேயிருந்தார்கள் . அவன் உடனே ஒருவேளை போலீஸ் வந்துவிட்டதோ என்று திரும்பிப்பார்க்க அவன் அப்பா வேலையை வேலையை முடித்து  விட்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று கொண்டு அவனை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு பிடிக்குமே என்று அவர் வாங்கி வைத்திருந்த மசால் தோசை சூடாக ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த பையில் ஆடிக்கொண்டிருந்தது ...

தொடரும் ...

25 December 2019

அவன் - அவன் - நிலா ( 14 ) ...


கார்த்திக் சுந்தரியை பற்றிய யோசனையில் இருந்ததால் இரண்டு தம்மோடு நிறுத்திக்கொண்டான் இல்லையேல் அந்த அரைமணி நேர நடையில் குறைந்தது நான்காவது கரைந்திருக்கும் . அவன் மனதை புரிந்து கொண்டு அவள் புகை பிடிப்பதை முழுவதுமாக நிறுத்த சொல்லாமல் குறைத்துக்கொள்ள சொன்னது அவனுக்கு பிடித்திருந்தது . அது போல செய்ய ஆரம்பித்தது அவனுக்கு பலனளித்தது .  காதலையும் அது போலவே  தடாலடியாக நிறுத்தினால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது . மூளைக்குள் உட்கார்ந்து யாரோ சம்மட்டியால் அடிப்பது போல ஒரு வேதனையை கொடுக்கிறது . சில சமயம் சண்டை முற்றிப்போய் சுந்தரியிடம் " சரி தான் போடி , நீயில்லேன்னா எனக்கு வேற ஆள் இல்லையா " என்று கத்திக்கொண்டு வந்திருக்கிறான் . ஆனால் உண்மையிலேயே அவனுக்கு அவளை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது அந்த பிரிவில் தான் புரிந்தது . மனதை மாற்ற அப்படியே வேறு யாருடன் பழகினாலும் அவர்கள் உடலில் அவள் முகமே பொதிந்து நின்றது . இப்போது அவள் எப்படி பேசியிருப்பாள் , சிரித்திருப்பாள் என்று அவள் பிம்பமே அவனை ஆக்கிரமித்தது .  நார்மலாக அவன் மனதை ஓரளவு ஆக்ரமித்திருந்தவள் பிரிவின் போது மொத்தமாக ஆட்சி செய்தாள் என்றே சொல்லலாம் ...

மெயின் ரோட்டுக்கு வந்தவுடன் டாப்பை ஒரு பார்வை பார்த்தவனுக்கு அங்கே யாரும் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது . என்ன நாம ஊர்ல இல்லாத நேரமா பார்த்து எல்லா பசங்களும் திருந்திட்டாய்ங்களா ? என்று யோசித்துக்கொண்டே தெருவுக்குள் இறங்கினான் . இந்த நிசப்தம் அவனுக்கு எதையோ உணர்த்தியது . அந்த தெருவை இப்படியெல்லாம் அமைதியாக இருந்து அவன் பார்த்ததேயில்லை . என்ன நடந்திருக்கும் என்பதை சிலோன் ரேடியோவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என யூகித்தான் . நாட்டு  நடப்புகளை உண்மையான சிலோன் ரேடியோ சொல்லும் என்றால் அவன் தெருக்கோடியில் மளிகை கடை வைத்திருந்த இலங்கை அகதி ஏரியா செய்திகளை அப்படியே புட்டு புட்டு வைப்பார் . கார்த்திக் நேராக அவர் கடைக்கு சென்றான் . 45 வயதில் முன் தலை முழுவதும் சொட்டை விழுந்தாலும் ஆள் பார்க்க கம்பீரமாக இருப்பார் . உண்மையிலேயே ஆள் செய்தி வாசிக்கப் போகலாமென சொல்லும் அளவிற்கு நல்ல குரல்வளம் ...

கடையில் தக்காளி வாங்கிக்கொண்டிருந்த பெண் போகும் வரை அமைதியாக இருந்த கார்த்திக் " என்னண்ணே  ஆச்சு ? பசங்க ஒருத்தனையும் காணோம் " என்று கேட்டான் .  இவனுக்கு பதில் சொல்வதற்காகவே அந்த கடையில்  காத்திருந்தவர் போல " என்ன தம்பி உனக்கு விஷயமே தெரியாதா ? ரமேஷோட அண்ணனை யாரோ வெட்டிட்டாங்களாம் , ஆள் குத்துயிரும் கொலையுயிருமா ஜி.ஹெச் ல கெடக்காரு , பயலுகல்லாம் அங்க தான் போயிருக்காங்க " , அவர் சொன்ன மாத்திரத்திலேயே அவனுக்கு தொண்டை அடைத்தது . சில மாதங்களுக்கு முன்னாள் தான் அவரது கம்பீரத்தை அருகில் இருந்து பார்த்தான் . கத்தியை எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பார்கள் , ஆனால் அவன் இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை . ரமேஷ்  பற்றி யோசிக்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது . அண்ணன் சில வருடங்களில் அரசியலில் மிகப்பெரிய ஆளாக வந்துவிடுவார் அதன் பிறகு நம் ராஜ்ஜியம் தான் என்று கனவு கண்டு கொண்டிருந்தான் ...

ஒரு முறை ரமேஷ் வீட்டு  மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென உதயமான அண்ணன் மிக குஷியில் இருந்தார் . அவர் நடையிலேயே சரக்கடித்திருக்கிறார் என்பது தெரிந்தது .
" என்ன தம்பி ரமேஷுக்கு படிப்பு சொல்லித்தருவன்னு  பார்த்தா சினிமாக்கதை பேசிக்கிட்டு இருக்க ?! " அவர் கேட்பதிலேயே அவனை சும்மா காலை வாருகிறார் என்பது புரிந்தது . " அண்ணே அவன் பெரிய டைரக்டரா வரப்போறான்னே , கதையை கேட்டா மிரண்டுருவ " . ரமேஷ் உடனே புகுந்து அண்ணனுக்கு சீரியசாக விளக்கிக்கொண்டிருந்தான் . " அப்படியென்னடா மிரட்டுற  மாதிரி கதை , பேய்க்கதையா ?" அவர் சிரித்துக்கொண்டே கேட்டார் .
" இல்லேண்ணே , ஒரு சாதாரணமான ஆள் ஒரு பிரச்சனையால் ரவுடியாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மேல வந்து கடைசியா ஸ்டேட்டோட சி.எம் ஆகுற கதை " . கார்த்திக் சொன்னவுடனே அவனை கொஞ்ச நேரம் பார்த்தவர் ,
" தம்பி அதெல்லாம் சினிமாவுல தான் நடக்கும் , நிஜத்துல கொஞ்சம் மேல வரதுக்குள்ள  குத்திப்போட்டு போய்டுவானுங்க " என்றார் . அவர் சொன்ன யதார்த்தத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை ...

" அண்ணே சும்மா உளராத " என்று ரமேஷ் அவரிடம் கோபப்பட்டான் .
" நெருப்புன்னா சுடுமாடா , ஆனா தம்பி சொல்ற மாதிரி நடக்குறதெல்லாம் நூத்துல ஒன்னு , ரொம்ப சிலர் தான் அமைச்சரால்லாம் கூட ஆகியிருக்காங்க".  " நாம இங்க சொல்றது எதுவுமே எங்கோ ஒரு இடத்துல நடந்தது தான் , இல்ல நடக்கப்போறது தான் " .
கார்த்திக் தீர்க்கமாக சொன்னதை அவர் ஆச்சர்யமாக பார்த்தார் .
" நல்லா பேசுறாண்டா " என்று தம்பியிடம் அவனுக்காக சர்டிஃபிகேட் கொடுத்தார் . " சரி அப்படி என்னதான் கத வச்சுருக்க சொல்லு கேட்போம் " என்று சொல்லிக்கொண்டே மாணிட்ச்சந்தை பிரித்து வாயில் போட்டுக்கொண்டார் . அவன் கதையை சுருக்கமாகவும் , முக்கியமான சீன்களை மட்டும் விலாவாரியாவாகவும் விவரித்தான் . " டே என்னடா , நம்ம சுடுகாட்டு மேட்டர் , பஸ் சண்டைல்லாம் வச்சுருக்க " . " ஆமாண்ணே சினிமாவோ , நாவலோ நடந்ததோட தொகுப்பு தானே ,  மானே , தேனே போடுற மாதிரி நம்ம கற்பனைய சேத்துக்கணும் " .  இதுவரை நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த கதையை இப்போது தான் அண்ணாந்து பார்க்கும் ஒருவரிடம் அதுவும் இந்த கதைக்கான சீன்களை யாரை உற்று நோக்கி எடுத்துக்கொண்டானோ அவரிடமே சொல்வது அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது ...

" அதென்னமோ தெரில ஆனா நேர்ல பார்த்ததை விட நீ சொல்றது சுவாரசியமா இருக்கு , அதுவும் இண்டெர்வெல் பிளாக் சூப்பர் " , அவன் ஆடியன்ஸிடம் எதை எதிர்பார்த்தானோ அதை சரியாக சொன்னார் . அவன் வைத்த சீன்களின் ஒரிஜினல் சம்பவங்கள் தெரிந்த அவருக்கே இது பிடிக்கும் போது புதுசாக பார்ப்பவர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று அவன் யூகித்தான்.
" இத படமா எடுக்க என்ன ஒரு அஞ்சு லட்சம் ஆகுமா ?" அவர் அப்பாவியாக கேட்க அவன் சிரித்துக்கொண்டே " இல்லேண்ணே மினிமம் அம்பது லட்சம் ஆகும் , அதுவும் பெரிய ஹீரோவா போடாம இருந்தா " . அவன் சொன்னதைக் கேட்டு அவர் வாயடைத்துப்போனார் . " என்னப்பா சொல்ற பெரிய ஹீரோ இல்லாமயே அவ்ளோ ஆகுமா ?" . " ஆமாண்ணே புதுசா சங்கர் னு ஒரு டைரக்டர் வந்து சினிமாவோட டைமென்ஷனையே மாத்திட்டார் " .
" ஒரு பாட்டுக்கே நூறு மும்பைக்காரிகளை ஆட விடுவாரே அவர் தானே ?,
ஆனா அவர் படமெல்லாம் செம்மப்பா , இந்தியன நானே நாலு தடவ பாத்துட்டேன் " . சினிமாவுக்கு  சாமான்யனிலிருந்து ராஜா வரை யாரையும் கட்டிப்போடும்  மகிமை இருக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
யாரிடமும் அவ்வளவாக பேசிக்கொள்ளாதவர் சினிமாவை பற்றி அவனிடம் அளவளாவிக்கொண்டிருந்தார் ...

" அம்பது லட்சம் என்ன , அஞ்சு கோடி கொடுக்குற ஆளுங்கள கூட நமக்கு தெரியும் " . அவர் சொன்ன போது அவனுக்கே கேட்க ஆசையாக  இருந்தது .
" என்ன தம்பி சும்மா புருடா விடுறேன்னு பாக்குறியா " , அவர் கேட்டவுடன்
" சே , சே இல்லேண்ணே ஆச்சர்யமா பார்த்தேன் " . அவர் மெதுவாக சென்று அங்கே இருக்கும் வாஷ்பேஷனில் எச்சில் துப்பி விட்டு வந்தார் .
" சீரியஸா சொல்றேன் கேட்டுக்க , நம்ம பரமு அண்ணன் கிட்ட இல்லாத பணம் இல்ல , என்ன போன எலக்சன்ல நெறைய பணத்தை விட்டுட்டாரு , ஜெயிச்சிருந்தா கதை வேற " . அவர் பரமு அண்ணனுக்கு எவ்வளவு க்ளோஸ் என்பது ஊருக்கே தெரியும் . " ஒன்னும் பிரச்சனை இல்ல , இன்னும் ஆறு மாசத்துல விட்டத எடுத்துருவாப்புல , நான் உன்ன அங்க கூட்டிட்டு போறேன்".
அவன் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து அவர் பேசியது அவனுக்கு பெருமையாக இருந்தது . " இப்போ நீ சொன்னதெல்லாம் அப்படியே படமா எடுத்துடுவியா " அவர் கேட்கும் போது பயமும் கூட வந்தது  .
" இல்லேண்ணே நான் முதல்ல  அசிஸ்டன்டா ஒர்க் பண்ணனும் , அதுக்கப்புறமா தைரியமா எடுக்கலாம் " . " ஏன்பா இந்த நாயகன் படம் எடுத்தாரே அவர் பேரென்ன ?" , ரமேஷ் உடனே " மணிரத்னம் " என்று சொல்லி தனக்கும் சினிமா தெரியும் என்பது போல பார்த்தான் . " ம் , அவர்லாம் யார்ட்டயும் ஒர்க் பண்ணலன்னு சொல்றாங்க ?! " . 
" உண்மை தாண்ணே  , ஆனா அவர் ஃபாரீன்ல போய்  கோர்ஸ் படிச்சாரு ப்ளஸ் அவருக்கு ஃபேமிலி பேக்கப் நல்லா இருந்தது ,
அதோட அவர் செம்ம டேலெண்டெட்  " என்று அவனுக்கு தெரிந்ததை வரிசையாக  சொன்னான் ....

" இருக்கலாம் , ஆனா அவர் மேல நம்பிக்கை வச்சு பணம் போட்டாங்கள்ள அதான் மேட்டர் " . ஆமாம் அவர் சொல்வது உண்மை தான் , இங்கே திறமை இருப்பவர்கள் அனைவருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை , வாய்ப்பு கிடைத்த அனைவரும் வெற்றி பெறுவதில்லை , வெற்றி பெற்ற  அனைவரும் அதை தக்க வைத்துக்கொள்வதில்லை . சினிமா என்றுமே ஒரு மாய உலகம் .
" தம்பி நீ கதையை ரெடி பண்ணிக்கோ , அப்படியே யார்ட்டயாவது ஒர்க் பண்ணிக்கோ , உன்ன அவர்கிட்ட போய் உக்கார வைக்க வேண்டியது என் பொறுப்பு " அவர் பேச்சு அவனுக்கு உற்சாக டானிக் போல இருந்தது .
கதையை மேலும்  மெருகேற்ற வேண்டுமென நினைத்துக்கொண்டான் . லைப்ரரிக்கு போய் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் . ஒரு நெடு பயணம் போக வேண்டும் , அப்பொழுத் தான் நிறைய புது மனிதர்களை , சம்பவங்களை பார்க்க முடியும் . " சரி தம்பி , நீ சினிமா கதையை ரெடி பண்றதோட சேர்த்து இவனையும் பாஸ் பண்ண வச்சுடு " . என்று ரமேஷை பார்த்து கை  நீட்டி சொல்லிக்கொண்டே அவர் மொட்டை மாடியில் அவருக்கென பிரத்யேகமாக இருக்கும் ரூமுக்கு போனார் ...

சமீபத்தில் ரமேஷை பார்த்த போது  கூட அவன் அண்ணன் கார்திக்கையும் , அவன் கதையை பற்றியும் விசாரித்ததாக சொன்னான் . அதுவும் அவர் யாரைப்பற்றியும் அவ்வளவு மெனெக்கெட்டு விசாரித்ததில்லை , கடந்த முறை பரமு அண்ணன் வந்த போது கூட அவன் மேட்டரை காதில் போட்டு வைத்திருப்பதாகவும் சொன்னது அடுத்த ஒரு வருடத்துக்குள் ஆட் ஏஜென்சி அனுபவத்தை வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட வேண்டுமென திட்டமிட்டிருந்தான் .  ஆனால் எல்லாமே ஒரு நொடியில் தகர்ந்து விடுகிறது .
அவர் தீர்க்கதரிசனமாக அன்றே  சொன்னது அவன்  நினைவுக்கு வந்தது .
சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தவன் வீட்டுக்கு போய் யமஹா சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப ரெடியானான் . " வந்ததும் வராததுமா எங்கடா போற " என்று கேட்க எத்தனித்த அம்மா அவன் கத்தலுக்கு  பயந்து பேசாமல் இருந்தாள்  . " என்னடி பேசாம நின்னுட்ட , துரை எங்க போகப்போறாரு , முக்குல தோஸ்துங்க கூட நின்னு தம்மை ஊத்தப்போறாரு "
அவன் அப்பா குரல் கேட்டதும் அவரை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு அந்த கோபத்தை வண்டியின் கிக் ஸ்டார்ட்டில் காண்பித்தான் ...

மெயின் ரோட்டுக்கு வந்த போதே கும்பல் கும்பலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள் . இவனை பார்த்து கூட சிலர் முணுமுணுப்பது போலவே அவனுக்கு இருந்தது . வண்டியை ஒரு பெட்டிக்கடையில் ஓரங்கட்டி ஹாஃப் பாக்கெட் கோல்ட் பிளேக் ஃபில்டர் வாங்கிக்கொண்டான் . அதில் ஒன்றை எடுத்து  பற்ற வைப்பதற்குள்ளே  மொக்கை அவனை நோக்கி வேகமாக வருவது தெரிந்தது . கார்த்திக்கிடம் நெருப்பை வாங்கி ஒரு சிசர்ஸை பற்ற வைத்த மொக்கை " மாப்பிள உன்ன பாக்க தான் வேகமா வந்துக்கிட்டு இருக்கேன் " என்றான் . அண்ணன் குத்துப்பட்டதாய் சொல்ல தான் வந்திருக்கான் என்பது புரிந்தது . " ம் சிலோன் அண்ணன்  சொன்னாரு , ஜி.ஹெச் சுக்கு தான் கெளம்பிக்கிட்டு இருக்கேன் " . கார்த்திக் சொன்னதை கேட்டு வெறுமையாக பார்த்த மொக்கை " இல்ல மாப்பிள்ளை ஜிஹெச் போகத் தேவையில்லை " என்றான் . " என்னடா ஆச்சு  ?"
" இல்ல  மாப்பிள்ளை டாக்டர்ஸாலயும் காப்பாத்த முடில , அவ்வளோ வெட்டு உடம்பு ஃபுல்லா , அண்ணன் செத்துட்டாரு " . அவன் சொன்னதை கேட்டவுடன் கார்த்திக்கின் வாயிலிருந்த சிகெரெட் தவறி கீழே விழுந்தது .
" நாம அவர் வீட்டுக்கே போய்டலாம் , பாடிய கொண்டு வந்துடுவாங்க"
அவனை போன்றவர்களுக்கு ஒரு ஆளுமையாக இருந்த ஒரு மனிதன் இறந்த சில நிமிடங்களிலேயே அஃறிணையாக மாறியது அவனுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது . அடுத்தடுத்து விதி விகாரமாக தனது கோரைப்பற்களை அவனுக்காக காட்ட காத்துக்கொண்டிருந்தது ...

தொடரும் ...









14 December 2019

அவன் - அவள் - நிலா (13) ...


மாட்டுத்தாவணிக்கு இரவு ஏழரை மணி போல வந்து சேர்ந்தான் கார்த்திக். சுரேஷ் தங்கைக்காக செய்த அடிதடிக்கு பிறகு அவன் வேறெந்த வம்பு தும்புக்கும் போகவில்லை . அதன் பிறகு சுந்தரியின் அண்ணனோடு திருச்சியில் நடந்த சண்டை  தான் . எல்லாமே எதிர்பாராத நேரத்தில் நடந்து முடிந்து விட்டது . கோபம் தலைக்கேறினால் அவனால் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை . பள்ளிக்காலத்திலேயே அவனை ஏற்றி விட்டு தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்பவர்கள் உண்டு . அதெல்லாம் அவனுக்கு போகப்போக தான்  புரிய ஆரம்பித்தது . யார் யாருக்காகவோ சண்டை போட்டவன் தனக்கென்று வரும் போது சும்மா இருக்க முடியவில்லை . சுந்தரியின் முகத்துக்காகவாவது  பொறுத்திருக்கலாம் . அது கூட முடியாமல் போனது அவனுக்கு வருத்தம் தான் . அவனுடைய ஆக்சன் பிரதாபங்களை சுந்தரியிடம் சொல்லும் போது அவள் மர்ரு தங்கை போல ஆவலோடு வாய் பிளந்து கொண்டு  கேட்பதில்லை . தங்கை  கேட்கிறாள் என்பதற்காகவே மர்ரு ரெண்டு மூணு பிட்டை  எக்ஸ்டராவாக எடுத்து விடுவான் . உடனே அவள் " அப்படியான்னா அவன் பாஞ்சு பாஞ்சா அடிச்சானா  ?" என்று கார்த்திக்கிடம் அப்பாவியாக கேட்பாள் . அவனுக்காக கார்த்திக்கும் ஆமாம் போட்டு வைப்பான் ...

அதே சண்டையை சுந்தரியிடம் சொன்ன போது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்து  விட்டு " என்ன உனக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பா?" என்று சர்வ சாதாரணமாக கேட்டு அந்த பிம்பத்தை உடைத்தெறிவாள்.  " நம்ம வாழ்க்கை என்ன ரெண்டரை மணி நேர சினிமான்னு நினைச்சியா ?அதுல போலீஸ் கடைசியில தான் வருவாங்க , ஆனா நிஜத்துல முதல்லயே வந்து தூக்கிட்டு போய்டுவாங்க ! . அவனுக்கு புரியும் பாஷையில் பேசினாள். அவனுக்கு முதலில் கோபம் தான் வந்தது .
" அதுக்காக என்ன பயந்து பயந்து பொட்டை மாதிரி வாழ சொல்றியா ? " .  
" ஓ அப்போ நீ வாழற வாழ்க்கைக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல சிலை வப்பாங்களா ? ".  " உன்ன உங்கப்பன் ஆடிட்டராக்குறதுக்கு பதிலா வக்கீலாக்கலாம் , வாய் வத்தலகுண்டு வரைக்கும் நீளுது ! " .  அவனிடம் உள்ள பிரச்சனை அது தான் . அவள் தன்னுடைய நல்லதுக்காக தான்  சொல்கிறாள் என்பதை முழுதாக புரிந்து கொள்ளாமல் அவள் பதிலுக்கு பதில் பேசுகிற விதத்தில் கடுப்பாகி அந்த ஆர்க்யூமென்ட்டில் வின் பண்ண வேண்டுமென்கிற வெறியில் கத்துவான் ...

ஒரு கட்டத்துக்கு மேல் அவனோடு போராட முடியாமல் அவளுக்கு அழுகை வந்து விடும் . இவன் ஏன் இப்படியிருக்கிறான் என்று ஆத்திரம் வரும் . எக்கேடு கெட்டோ போகிறான் நாம் ஏன் நம் தரத்தை இறக்கிக்கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு வரும் . சத்தியமாக இரண்டு பேர் எண்ணங்களுக்கும்  செட்டே ஆகாது என்றே தோன்றும் . அந்த நிமிடம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு " சரிதான் போடா " என்று கத்தி விட்டு போய்விடலாம் போல இருக்கும். ஆனால் அவை எதையும் செய்ய விடாமல் ஏதோ ஒன்று தடுக்கும் . அதற்கு பெயர் தான் காதலா ?!.  " ஓகே உன் இஷ்டத்துக்கு நீ இரு , என்ன வேணா பண்ணு , நான் யாரு இதெல்லாம் கேக்க ? ஆஃப்டர்ஆல் பொண்ணு தானே? 
நான் சொல்லி கேட்டுட்டா உங்க கீரிடம் இறங்கிடுமே ! " . அவள் அழுகையோடு பேசி விட்டு அங்கிருந்து கிளம்புவாள் . அவனுக்கு அவள் போகிறாள் என்றவுடனே தான் புத்தி வரும் . " இல்லடி சாரி , ஏதோ ஒரு இதுல பேசிட்டேன் , நீ பதிலுக்கு பதில் பேசினியா அதான் டென்சன் ஆயிட்டேன்". 
" அப்போ நான் எதுவுமே பேசக்கூடாது , நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டனும் " ...

அவன் அப்படியெல்லாம் நினைக்கிற ஆள் இல்லை ஆனாலும் அவன் ஆழ் மனதுக்குள் ஆணை விட பெண் மட்டம் அல்லது ஆணுக்கு பெண் அடங்கி தானிருக்க வேண்டும் என்கிற எண்ணம் படிந்திருக்கிறது . அது அவன் அப்பாவை பார்த்தோ அல்லது மற்ற ஆண்களின் அடக்கு முறையை பார்த்தோ அவனுக்குள் வேரூன்றியிருக்கலாம் . எதிரில் இருக்கும் பெண்ணிற்கு இதையெல்லாம் உற்று நோக்க முடியாது . அவள் யார் தனக்கு நெருக்கம் என்று நினைக்கிறாளோ அவனே அப்படி பேசுவது இதயத்தை நொறுக்குகிறது . ஆனால் அது தான் நிதர்சனம் . யாரை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அவர்களால் மட்டுமே நம்மை அதிகமாக காயப்படுத்த முடியும் . அவன் கைகளை பிடித்துக்கொண்டு " ப்ளீஸ் மன்னிச்சுடு " என்று . கெஞ்சலானான் . அது தான் அவனின் வினோத குணம் . என்ன தான் கோபம் இருந்தாலும் அவள் அழ ஆரம்பித்தால்  அவனால் தாங்க முடியாது . பெண் அழுதால் பேயும் இறங்கும் என்பார்கள் அவன் மனிதன் தானே ! ...

" இந்தோ  பாரு நான் சும்மா ஜாலியா சுத்திட்டு போக உன்ன லவ் பண்ணல , 
நாம நல்லா இருக்கணும்னா கண்டிப்பா கேள்வி கேப்பேன் " .
அவன் " ம் " என்றான் . " ஏற்கனவே உன் சினிமா ஆசைய வீட்ல ஏத்துப்பாங்களான்னு தெரியல  , இதுல இந்த அடிதடி வேறென்னா எந்த வீட்ல ஒத்துப்பாங்க ? " . அவன் அமைதியானவுடன் அவள் சொல்வது புரிய  ஆரம்பிக்கும் . அவன் முடியை கோதிக்கொண்டே அவள் சொல்லும் போது தாய் மடிக்கு ஏங்கும் குழந்தை போலானான் . எப்பொழுதுமே இதே போல அவன் தான்  சொல்வதைக் கேட்டால் என்ன என்று அவளுக்கு தோன்றும் . 
பதிலுக்கு பதில் சண்டை போடாமல் பொறுமையாக அவனுக்கு இப்படி எடுத்து சொன்னால் என்ன என்று அவனுக்கு தோன்றும் . நாம் மற்றவர்களின் 
செய்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட நாம் விரும்பும்படி அவர்கள் நடக்க வேண்டுமென்றே விரும்புகிறோம் .  எல்லாம் நாம் நினைத்தபடியே நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது ? இரண்டரை மணி நேர படத்திலேயே காதல் , செண்டிமெண்ட்,  ஆக்சன் , ட்விஸ்ட் என பலவற்றை எதிர்பார்க்கும் போது குறைந்தபட்சம் 60 வருட வாழ்க்கை அது அப்படியே ஒரே நேர்கோட்டில் போகுமா என்ன ?!.

மனிதனின் வினோத உணர்வுகளில் முக்கியமானது காதல் . சுஜாதா சொன்னது போல எல்லாமே இருபாலரின் உடல்நிலையில் ஏற்படும் வேதியல் கோளாறுகள் மட்டும் தான் என்று அதை ஒதுக்கி விட முடியுமா ? நிச்சயம் முடியாது . காதலில் நிச்சயம் காமம் இருக்கும் ஆனால் காமத்துக்குள் காதல் இருக்காது . அவனுக்கு தெரிந்த ஒரு பிடிசி டிரைவர் அண்ணன் ஊர் ஊராக சுற்றுவார் . அவனுடைய டீன் ஏஜ் வயதில் அவரின் ஜகதலப்பிரதாபங்களை நிறைய கேட்டிருக்கிறான் . அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை . ஏன் என்று கேட்டால் " காஃபி குடிக்க ஏண்டா வீட்லயே மாட்ட வாங்கி கட்டணும் ? 
தேவைப்படும் போது  வாங்கி குடிக்க  வேண்டியது தான " என்று சூசகமாக சொல்லி விட்டு சிரிப்பார் . தனிக்கட்டையாக இருப்பதாரீலும் , சொத்து இருப்பதாலும் அவரிடம் காசுக்கு பஞ்சமில்லை . ஃபாரீன் சரக்கு ஒரு பாட்டில் எப்பொழுதுமே அவர் வீட்டில் இருக்கும் . பணத்தில் மட்டுமல்ல  ஆள் பார்க்கவும் எம்ஜிஆர் போன்ற சிகப்பு உடல்வாகுடன் இருப்பார் . எப்பொழுதுமே அவர் மேல் ஒரு வித சென்ட் வாசனை இருந்து கொண்டே இருக்கும் ...

" ஏண்ணே  அதுக்கு காசு கொடுத்து போறீங்களே ,போரடிக்காதா ? இல்ல ஒரு  மாதிரி இருக்காதா ? . அவனிடம் எப்பொழுதமே அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகுவதால் நேரடியாகவே கேட்டு விடுவான் . 
" நீ காலையில டிஃபன் சாப்ட்டியா ? " . " சாப்ட்டேனே பொங்கல் கொஸ்து".
" அது ஹெவியா இருக்குமே அப்போ மத்தியானம் சாப்பிட மாட்டியா ?" .
" போங்கண்ணே இப்போ போய் ரெண்டு மேட்ச் ஆடி முடிச்சாலே பசி ஆரம்பிச்சுடும் " . அவர் பிளாக் சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார் . " அதே மாதிரி தான் தம்பி இந்த உடம்புக்கும்  அடிக்கடி பசிக்கும் . பொங்கல் , இட்லி , தோசை , சோறுன்னு மாறி  மாறி  சாப்பிடுற மாதிரி உடம்புக்கும் அத்தினி ,  சித்தினின்னு எல்லாமே  விதவிதமா தேவை ".
அவர் சொல்லும்போதே அவனுக்கு போதையாக இருந்தது . ஆனால் என்ன தான் இருந்தாலும்  அதுக்கு காசு கொடுப்பதில் அவனுக்கு உடன்பாடே இல்லை . அது ஏதோ கடமைக்கு செயற்கையாக நடப்பது போலவே அவனுக்கு பட்டது . அவன் அதையும் கேட்டவுடன் அவர் சிரித்தார் .
" பரவாயில்லையே யார்ட்டயும் போலேன்னாலும் அனுபவஸ்தன் மாதிரியே பேசுற , ஒரு வேளை அண்ணனுக்கு தெரியாம ஏதாவது தப்பு தாண்டா பண்ணிட்டியா ?! : . "என்னன்னே அதெல்லாம் ஒன்னும் இல்ல , என் மனசுக்கு பட்டுச்சு " . " நீ சொல்றது உண்மை தான் , எனக்கும் அந்த மாத்ரி எனக்கே எனக்குன்னு பிரத்தேயகமா ஒருத்தி இருந்தா " . சொல்லும் போதே அவர் கண்கள் லேசாக கலங்கின ...

அவர் எத்தனையோ பெண்களுடன் உல்லாசமாக இருந்திருந்தாலும் அவருக்கென வாழ்ந்த ஒரு பெண்ணை பற்றி பேசும் பொழுது மட்டும் ஒரு வித்தியாசம் தெரிகிறது . அதற்கு பெயர் தான் காதலா ? இது இது தான்  காதல் என்று யாராலும் ஒரு கூண்டுக்குள் அடைக்க முடியாததன் பெயர் தான் காதலா ?!.சுந்தரியுடன் எவ்வளவோ முறை சண்டை போட்டிருக்கிறான்  அந்த கருமம்  பிடித்த காதலே  வேண்டாமென்று நினைத்திருக்கிறான்.
அவளை மறந்து விட  வேண்டுமென்று நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பான் ஆனால் போதையேறியதும் நேராக திருச்சிக்கே போய்  அவளை பார்க்க வேண்டும் போல இருக்கும் . அவளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தோன்றும் .  நண்பர்கள் அவனை டைவர்ட்  செய்ய எவ்வளவோ முயற்சி செய்து தோற்றுப்போவார்கள் . சாதாரணமாக இருக்கும் நேரத்தை  விட அதை விட்டு விலக வேண்டுமென்று நினைக்கும் போது  தான் காதல் உக்கிரமடைகிறது . என்ன எழவுடா இது ? என அவன் பலமுறை யோசித்ததுண்டு ...

சுரேஷ் மாதிரி , பாபு அண்ணன் மாதிரி பெண்களை வெறும் உடல்களாக மட்டும் நினைக்கும் போது சண்டை சச்சரவுகள் வருவதில்லை . அது முடிந்தவுடன் அவளை பற்றிய நினைப்பு இருப்பதில்லை . அவள் பேசுவதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொண்டு குழம்ப தேவையில்லை . அவளோடு சண்டை போட்டுக்கொண்டு  பேசாத தருணங்களிலெல்லாம் ஏதோ இதய நோயாளி மாதிரி துடிக்க தேவையில்லை . பாக்காத நேரங்களிலெல்லாம் ஏதோ திருவிழாவில் காணாமல் போன சிறுவன் போல கதறிக்கொண்டிருக்க வேண்டியதில்லை . ஆனால் இத்தனை  இல்லைகளிலும் சுந்தரியை விட்டு பிரிய வேண்டுமென்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு இல்லவேயில்லை ...

மினி பஸ்சுக்காக சிறிது நேரம் காத்திருந்தவன் பிறகு ஒரு  சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கலானான் . இந்த சிகெரட் , அப்புறம் சுந்தரி இரண்டையுமே மட்டும் அவனால் விடவே முடியாது என்று நினைத்துக்கொண்டான் . தன் காதலியை உடலுக்கு தீங்கு தரும் சிகரெட்டோடு ஒப்பிடுகிறோமே என அவனுக்கு யோசனை வந்தது. நல்லதோ தீங்கோ இரண்டையும் விட்டு அவனால் இருக்க முடியாது என்பதே நிதர்சனம். சிகரெட்டை  விட சொல்லி சுந்தரியே கேட்டிருக்கிறாள் . ஆனால் நல்ல வேளை நானா ? சிகரெட்டா என்று அவள் முரண்டு பிடிக்கவில்லை . அப்படி கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான் என்று அவனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியவில்லை . அவள் அப்படித்தான் நிறைய விஷயங்களில் நாசூக்காக நடந்து கொள்வாள் . அவனே முடிவெடுக்கும்படியாக ஒரு ஸ்பேஷ் கொடுப்பாள் . அதனால் அவள் குறைத்துக்கொள்ளும் படி சொன்ன பிறகு அதை கடமையாக செய்ய ஆரம்பித்தான் . ஆனால் இவையிரண்டையும்  விடவே முடியாது என்று நினைத்தானோ அதை விட்டு விட்டு ஒரு நாள் தனிமையில் நிற்கப்போகிறான் என்பது அப்போதைக்கு அவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை ...

தொடரும் ...




7 December 2019

அவன் - அவள் - நிலா ( 12 ) ...


வன் எதிர்பார்த்ததை விட எளிதாகவே  அந்த சம்பவம் நடந்து முடிந்தது . அவனுக்கு பயந்து ஓடியவர்கள் நிச்சயம் அங்கே ஒரு கும்பல் அதுவும் அந்த ஏரியாவே அலறும் ஒரு தாதாவின் கும்பல் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை . அது என்னமோ புலிக்கு பயந்து ஏரிக்குள் விழுந்து முதலையிடம் மாட்டிய கதை போலாகிவிட்டது  . இதெல்லாம் முன்னமே தெரிந்திருந்த கார்த்திக் சாவகாசமாக ஒரு சிகரட்டை பற்ற வைத்துக்கொண்டே அவர்களிடம் வந்தான் . எம்பிக்கொண்டு அடிக்கப்போன மர்ருவை கார்த்திக் தடுத்தான் . அந்த இடத்தில் அவர்களை அவன் ஆட்கள் அடிப்பது சரியில்லை  அது அவன் நண்பனின் அண்ணனுக்கு செய்யும் மரியாதைக்குறைவாகி விடும் . அமைதியாக இருக்க சொல்லி தனது ஆட்களுக்கு சைகை செய்தான் . சிறிது நேரத்தில் அங்கே ஒரு சலசலப்பு உருவானது . இருட்டிலிருந்து ஒரு ஒளிக்கீற்று போல அவன் நண்பனின் அண்ணன் வந்தார் ...

அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறான் . முதன் முதலில் காலேஜில் கூடப்படிக்கும் பெண்ணை கிண்டல் செய்த பஸ் கண்டக்டரை தனி ஆளாக அடித்து ஓட விட்டதில் அவர் பெயர் கல்லூரி வளாகம் எங்கும் பரவியது . அதன் பின் கண்டக்டரோடு வந்த ஆட்களை கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து அடித்துத் துவைத்ததில் அந்த ஏரியா முழுவதும் பெயர் பிரபலமானது . அதற்கு மேல் கல்லூரி படிப்பிலெல்லாம் நாட்டம் இல்லாமல் முழு நேர அடிதடி ஆளாக அவர் மாறினார் . பிறகு எம்.எல்.ஏ வுக்காக ஒரு செய்கை செய்ததில் இருந்து காவல்துறை அவரை கண்டுகொள்ளாமல் தள்ளியே இருந்தார்கள் . அதை  பயன்படுத்தி எதிரிகளை காலி செய்து தென் மதுரை முழுவதும் பெரிய தாதாவானார் . அவரை நேரடியாக தெரியாதவர்கள் கூட அவர் பெயரை பயன்படுத்தி தங்களை பிரபலப்படுத்திக் கொண்டார்கள் . ரமேஷ் மட்டும் தான் இருப்பானென்று அவன் நினைத்திருந்தான் அண்ணன் இருப்பாரென நினைக்கவில்லை அப்படியே இருந்தாலும் இந்த சப்பை மேட்டருக்கெல்லாம் அவர் வரமாட்டாரென எண்ணியிருந்தான் ...

அவரின் அடிதடி பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருந்து  அவர் ஆறடிக்கு மேல் ஆஜானுபாகுவாக இருப்பாரென கற்பனை செய்து வைத்தவனுக்கு அவனை விட உயரம் குறைவாக ஒரு ஐந்தடி மட்டுமே இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஓடி வந்தவர்களின் கேங்க் லீடர் மட்டும் அவரை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால்  பயத்தில்  வெலவெலத்து போய் விட்டான் . விஷயம்  தெரியாத மற்றொருவன் தேவையில்லாமல் துள்ள இடி  இறங்குவது போல ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்ததில் சுருண்டு தள்ளிப்போய் விழுந்தான் . அவரை கண்டு ஏன் எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . அந்த அடியின் வீரியத்தை  அருகிலிருந்த அவனாலேயே உணர முடிந்தது .  விழுந்தவன் சுதாரித்து எழ சிறிது நேரம்  பிடித்தது . அவர் கார்த்திக்கையும் , எதிர் ஆளையும்  பார்த்து சைகையில் கூப்பிட்டார் . இருவரையும் பார்த்து கொன்று விடுவேன் என்பது போல எச்சரிக்கை செய்து விட்டு எந்த ஏரியா என்று கேட்க இருவரும் சொன்னார்கள் . " இனிமே ஒருத்தன் ஏரியாக்குள்ள ஒருத்தன் போவக்கூடாது , மீறி பார்த்தேன் கொன்னு போட்ருவேன் , போங்கடா " என்று கத்த கார்த்திக் லேசாக கடுப்பானான்  . உடனே அதை புரிந்து கொண்டவனாய் ரமேஷ் அவனை பார்த்து  கண் ஜாடை செய்ய அவனுக்கு ஓரளவு விஷயம் புரிந்தது ...

அந்த அடிக்கு பிறகு விழுந்தவனை கூட்டிக்கொண்டு அவர்கள்  சடுதியில் இடத்தை காலி செய்தார்கள் . அதன் பிறகு கார்த்திக் , ரமேஷ் இருவரின் தோள்களிலும் கை போட்டுக்கொண்ட அண்ணன் " ரமேஷ் ஒழுங்கா படிக்க மாட்டேன்றான் , நீ தான் பாத்துக்கணும் . நீயும் இதோட எல்லாத்தையும் விட்டுட்டு படிக்குற வேலைய மட்டும் பாரு " அவர் சொல்லும் போதே ரமேஷ் அவனை பற்றி நிறைய அண்ணனிடம் சொல்லியிருக்கிறான் என்பது கார்த்திக்கிற்கு புரிந்தது . " சரிண்ணே , நான் பாத்துக்கறேன் , நீங்க ஃப்ரீயா விடுங்க " என்றான் .  அதன் பிறகு அங்கிருந்து மெயின் ரோடு வரை வந்த ரமேஷை சரக்கடிக்க கூப்பிட அவன் அண்ணனுக்கு பயந்து ஆளை விடு என்று எஸ்கேப் ஆகிவிட்டான் . சுரேஷ் சமீப காலமாக அவர்கள் டாப் அடிக்கும்  இட்லிக்கடையில் பரபரப்பாக வெயிட் செய்து கொண்டிருப்பான் . லோக்கல் ஆள் அப்படியே கெளம்பி விட கார்த்திக் யமஹா 100 ஐ ஸ்டார்ட் செய்ய மற்ற இருவரும் ஸ்ப்ளெண்டரில் கிளம்ப 100 கிமி வேகத்தில் ஏரியாவை நோக்கி பறந்தார்கள் ...

நேரம் கடந்திருந்ததால் இட்லிக்கடை மூடியிருந்தது ஆனால் அதனோடு சேர்ந்திருந்த பெட்டிக்கடையும் சாத்தியிருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது . செகண்ட் ஷோ முடிந்து ஆட்கள் வந்த பிறகு தானே மூடுவார்கள்!. மற்றவர்கள் சிகரெட் அண்ட் சரக்குக்கு தேவையான சைடிஷ்கள் வாங்க புறப்பட கார்த்திக் சுந்தரியை பற்றி யோசித்து கொண்டே பின் பக்கம் நடக்கலானான் . அவள் அவனது வாழ்க்கைக்குள் வந்த பிறகு தான்  அவனுக்கு எதிர்காலத்தை பற்றிய எச்சரிக்கை உணர்வு அதிகமானது . அவள் படிப்பை பற்றி நிறைய பேசுவாள் . அவன் அவள் கை  விரல்களை இறுக்கிகொண்டே கழுத்துப்பக்கம் எதையோ தேடிக்கொண்டிருப்பான் . ஆனால் கருப்பைக்குள் இருந்த அபிமன்யு தாய் சொன்னதையெல்லாம் கேட்டது போல அவள் சொன்னதெல்லாம் அவன் மூளைக்குள் நன்றாகவே ஏறியிருந்தது . அவளால் சினிமாவை பற்றிய அவனது எண்ணத்தை மாற்ற முடியவில்லையே தவிர வாழ்க்கைக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் அதுவும் குறைந்தது டிகிரியாவது வேண்டுமென்பதை நன்றாகவே உணர்த்தியிருந்தாள் . அதனால் அவன் தேவையில்லாத அடிதடி , பஞ்சாயத்துக்களிலெல்லாம் தலையிடமாலேயே இருந்தான் . இது சுரேஷின் தங்கை விஷயம் என்பதால் அவனால் தவிர்க்க முடியவில்லை ...

பின்னால் நடந்து கொண்டிருந்தவனுக்கு காலில்  ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தால் அங்கே ஹாஃப் பாட்டில் சிறிது சரக்கோடு உருண்டு  கொண்டிருந்தது . கொஞ்சம் தொலைவில் இட்லிக்கடை கம் பெட்டிக்கடைக்காரன் வேட்டி  விலக விழுந்து கிடந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே போதை என்று தெரிந்தது . ஆனால் காஸ்ட்லியான சரக்கெல்லாம் அவன் அடிக்க மாட்டானே அந்த பாட்டிலை யார் வாங்கிக்கொடுத்தது என்று யோசித்துக்கொண்டே கார்த்திக் குடிசைப்பக்கம் பார்க்க அந்த விரிசலில் சுரேஷ் சரக்கடித்து விழுந்து கிடந்தவன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான் . பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்கு கடைக்காரனுக்கு யார் சரக்கு வாங்கிக்கொடுத்து மட்டையாக்கியது என விளங்கியது .  அவனுக்காக அவர்கள் வேலை செய்த இடைவெளியில் அவன் என்னடாவென்றால் புருசனுக்கு சரக்கை வாங்கி ஊற்றிக்கொடுத்து விட்டு பொண்டாட்டியோடு ஜல்சா செய்து கொண்டிருக்கிறான் . அவர்கள் தண்ணியடிக்கும் போதெல்லாம் சுரேஷ் அடிக்கடி பின்னால் போய்விட்டு லேட்டாக வருவதன் சூட்சுமம் அவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது . ஆனால் அவர்கள் செட்டிலேயே எந்த பெண்ணை பற்றியும் அனாவசியமாக பேசாத அல்லது சைட் அடிக்காதவன் இவ்வளவு பெரிய வேலையையே கமுக்கமாக செய்து கொண்டிருப்பதை  பார்த்தவனுக்கு ஒரு பக்கம் அதிசயமாக இருந்தது . மிகவும்  அமைதியாக இருப்பவர்களுக்கு பின்னால் தான் நிறைய அதிசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன ...

எது எப்படியோ இப்பொழுது அவர்கள் இருக்கும் நிலையில் நடுவே புக  விரும்பாமல் ஓரமாக வந்தான் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடைக்கும் மர்மங்கள் அவனுக்கு ஆச்சர்யமாக  இருந்தன .  அவள் சாப்பிடும் போது சுரேஷ் அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் மீன் குழம்பு ஊத்துங்க என்று புருஷனிடம் சொல்லி ஊற்ற சொல்லுவாள் . அவனும் அதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு அவனுக்கு மீனை நிறையவே  வைப்பான் . ஆனால்  யோசித்துப் பார்த்தால் இது ஏதோ அவசர கதியில் நடந்தது போல அவனுக்கு படவில்லை . அவள் புருஷனுக்கு குடி இல்லாமல் இருக்க முடியாது . குழந்தைக்கு பாலுக்காக வைத்த காசை கூட எடுத்துக்கொண்டு போய் குடித்திருக்கிறான் .  அவளுடைய முயற்சியால் இந்த கடை அமைந்தது . அதன் பிறகு கடனை உடனை வாங்கி இந்த இட்லிக்கடையை நடத்திக்கொண்டிருக்கிறாள் ...

சுரேஷ் அவர்களுக்கு நிறைய தடவை கடனாக பண உதவி செய்திருக்கிறான்.
அதை கொடுத்துக்கழிப்பதற்கு பதில் படுத்துக்கழிக்கிறாள் போலிருக்கிறது , ஆனால் பண விஷயத்தையும் தாண்டி அதீத நெருக்கத்தை அவர்களிடம் அவனால் காண முடிந்தது  . உதவி செய்தவன் மேலுள்ள விசுவாசம் காதலாக மாறியிருக்கலாம் . புருஷனின் கையாலாகாத்தனம் அவளை சுரேஷ் பக்கம் ஈர்த்திருக்கலாம் . சுரேஷ் அதிக செலவு செய்து அக்காவை பெரிய இடத்தில் கட்டிக்கொடுத்த கடனையே இன்னும் அடைத்துக்கொண்டிருக்கிறான் . இன்னும் தங்கை , தம்பி இவர்களின் படிப்பு, குடும்ப செலவையும் அவன் தான்  பார்க்க வேண்டும் . அவனது அப்பா தனியார் கம்பெனியில் குமாஸ்தாவாக இருந்து ரிட்டையர் ஆனவர் .  அவருடைய கொஞ்சம் சேமிப்பு மருத்துவ செலவுக்கே சரியாக இருக்கும் ...

கல்யாண வயதை தாண்டி குடும்பத்துக்காக உழைப்பவர்களுக்கு  என்றுமே மனதுக்குள் ஒரு தீராத ஏக்கம் இருக்கும் . அந்த ஏக்கத்தை தான் அவன் குடிசைக்குள் தணித்துக் கொண்டிருப்பதாய் கார்த்திக் நினைத்தான் . சுந்தரிக்கும் அவனுக்கும் நடுவில் இருப்பது காதல் ஆனால் அவர்களுக்குள் நடப்பது கள்ளக்காதல் ஏனென்றால் அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது . இதெல்லாம் யார் போட்ட சட்டம் ? . இந்த வயதிலிருந்து இந்த வயதுக்குள் தான் காதல்  வர வேண்டுமென்று யார் சொல்வது ? வேலைக்காகாதவனாக  இருந்தாலும் அவன் கூடவே தான் குப்பை கொட்ட வேண்டுமென்கிற விதியை அவளுக்கு யார் எழுதியது ? . அதே சமயம்
கணவன் மனைவி இருவரிடையேயும் ஒரு  அன்யோன்யத்தை அவன் பலமுறை பார்த்திருக்கிறான் . அவள் புருஷன் சரக்கடிக்கும் போது அவள் ஒரு நாளும் ஆம்லெட் வைக்க தவறியதில்லை . மனித மனங்களின் விளையாட்டு அவனுக்கு விசித்திரமாக இருந்தது ...

" என்ன பாஸ் போன விஷயம் என்ன ஆச்சு  ? ரொம்ப பதட்டமாகவே இருந்தேன் " சுரேஷ் சொல்லிக்கொண்டே அவனிடம் தான் வைத்திருந்த சிகரெட்டை நீட்டினான் . கார்த்திக் நடந்து முன் பக்கம் வந்து விட்டதால் சுரேஷுக்கு அவன் மேல் துளியும் சந்தேகம் வரவில்லை . ஆமாமாம் உங்க பதட்டத்தை தான் நான் பார்த்தேனே என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே
" போன வேலை நல்லபடியா முடிஞ்சது , இனிமே அவன் நம்ம தங்கச்சி பக்கம் வரவே மாட்டான் " . கார்த்திக் சொன்னவுடனே சுரேஷுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது . " ரொம்ப தேங்க்ஸ் பாஸ் நீங்க தான் சுமூகமா இத முதல்லயே முடிச்சு வச்சீங்க " . அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது போல கார்த்திக் அவனையே பார்த்தான் . " இல்ல பாஸ் இந்த பொண்ணுங்களோட வயச நம்ப முடியாது , அவ பாட்டுக்கு லவ் கிவ்வு ன்னு அவன் பின்னாடி போக ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் குடும்ப மானம் கப்பலேறிடும் " . அவன் சொன்னவுடனே கார்த்திக்கிற்கு சிரிப்பு வந்தது.
" அட தாயோளி தங்கச்சி வேற ஜாதிக்காரன  லவ் பண்ணா குடும்ப மானம் போய்டும் ஆனா இவன் வேற ஜாதிக்காரப் பொண்ணோட படுத்தா மானம் போகாதா ? என்னடா லாஜிக் என்பது போல நினைத்துக்கொண்டே
" அதான்  மேட்டர் முடிஞ்சாச்சே , டோன்ட் ஒரி , அப்புறம் உங்க வேலைல்லாம் நல்லா முடிஞ்சதா ?" கார்த்திக் கேட்டவுடனே சுரேஷுக்கு பக்கென்று இருந்தது. " இன்னிக்கு ஏதோ பெரிய பெரிய டீல் முடியறதா சொன்னீங்களே பாஸ் ?  கார்த்திக் சொன்னவுடனே " ஓ அதுவா " என்று கேட்டுக்கொண்டே அசடு வழிந்தான் சுரேஷ் . அவர்கள் இருவரும் தம்மை அடித்து முடிக்கும் போது மர்ரு அண்ட் கோ சரக்குக்கேற்ற இத்யாதிகளுடன் வந்து சேர்ந்தார்கள் ...

தொடரும் ...








1 December 2019

அவன் - அவன் - நிலா ( 11 ) ...


ன்று மாதா கோவிலில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூட்டம் இருந்தது . பெண்கள் முகத்தை அதிக நேரம் செலவிட்டு அழகு படுத்தியிருந்தார்கள் . அதில் கொஞ்சமாவது கை கால்களுக்கும் செலவிட்டிருக்கலாம் . அவன்
கிறிஸ்துவப் பள்ளியில் படித்ததால் இயேசு கிறிஸ்துவை பார்த்ததும் பழக்க தோஷத்தில் ப்ளஸ் போடப்போன கைகைளை பிரயத்தனப்பட்டு அடக்கிக்கொண்டான் . பள்ளி நாட்களில் அவனது ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து சிலபஸில் இல்லாத போதனைகளையும் வழங்கினார்கள் . அவனவன் கர்மா வை அவனவன் கடந்தே தீர வேண்டுமென்கிற சிந்தனை உரைக்கும் வரை அவன் கஷ்டம் வரும் போதெல்லாம் தெரு முக்கு பிள்ளையாரையும் சரி , ஜீசஸையும் சரி  விட்டுவைக்கவில்லை . பத்தாவது படிக்கும் போது அவனுடன் நெருக்கமான  கேரளத்து கிறிஸ்துவ பெண் காதலோடு சேர்த்து கர்த்தரின் கருத்துக்களையும் பரப்பினாள் . ஒருவேளை அவள் கூட இங்கே வரலாம் என்று யோசித்தவனுக்கு உடனே சுந்தரியின் முகம் நியாபகத்துக்கு வர அந்த நினைப்பை உடனே அழித்தான் ...

அவன் அவ்வளவு யோக்கியனெல்லாம் இல்லை , ஆனாலும் அவனுக்கு சுந்தரி எல்லா விஷயத்திலும் ஏற்றவளாகவே இருந்தாள் . அவள் போன்ற ஒருத்தியை சந்திக்கும் வரை அந்தந்த வயதிற்கான தேடல் இருக்கவே செய்தது . அதிலும் பேருந்தில் , ஏரியாவில் பேருக்காவது ஒரு பெண்ணோடு சம்பந்தப்படுத்தி பேசப்படாதவன் கேலி செய்யப்பட்டான் அல்லது கழட்டி விடப்பட்டான் . அந்த பெண்ணிற்கு ரூட் போட பல பேர் சுற்றினார்கள் . ஏரியா பரிச்சியத்தாலும் , அவள் அப்பாவை அவன் அப்பாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதாலும் அவளுடன்  பழகுவதற்கு எந்த தடையுமில்லை . அவளுடன் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஒரு மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பேராவது சைக்கிள் பெல் வேலை செய்கிறதா என்பதை செக் செய்து கொண்டே அவள் வீட்டை கடந்திருப்பார்கள் . இருவருக்குமே  சிரிப்பாக வரும் . அதிலும் ஒரு ஆளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் ஆகியிருந்தால் அவள் வயதுக்கு பையனோ , பொண்ணோ இருந்திருக்கும் . ஆனாலும் அத்தனை ஆட்கள் தன்னை சுற்றி வருகிறார்கள் என்பதில் அவளுக்கு பயத்தை விட கர்வமே மேலோங்கியிருந்தது ...

அந்த கர்வம் தொடங்கிய புள்ளியிலிருந்து தான் அவளுக்கு சிக்கல் தொடங்கியது . பொதுவாகவே  கேரளத்து பெண்கள் மற்ற ஆண்களுடனும் இயல்பாக பேசக்கூடியவர்கள் . பாசாங்கு , போலித்தனமில்லாத அவர்கள் பேச்சு இங்கே பல ஆண்களுக்கு தனக்கான பிரத்தியேகமான பாசமாகவோ , அழைப்பாகவோ பார்க்கப்படுகிறது . அதனால் தான் வயது வித்தியாசம் கூட பார்க்காமல் சிலர் அவளை துரத்திக்கொண்டு அலைகிறார்கள் .
ஒரு முறை அவனது அப்பாவே அவள் வீட்டு வாசலருகே சைக்கிளை ரிப்பேர் செய்வது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தவனை கூப்பிட்டு பளேரென அறைந்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார் . வேறு ஏரியாவிலிருந்து வந்தவன் அதன் பிறகு அந்த பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை . அந்த பிரச்சனைக்கு பிறகு அவளது அப்பா ஓரளவு மகளிடம் புத்தி சொல்லி  அனைவருடனும் பேசுவதை  தவிர்க்க சொன்னார் . அவளுக்கே அது கடுப்பாகி அவள் அப்பாவை பற்றி அவனிடமே திட்டியிருக்கிறாள்  ...

அந்த சம்பவத்துக்கு பிறகு அவளோடு எந்த தடங்கலும் இல்லாமல் அவள் வீட்டிலேயே அமர்ந்து பேசக்கூடிய ஒரே ஆணாக அவன் மாறிப்போனான் . அவள் அருகாமையில் இருக்கும் போது தான் ஏன் அத்தனை ஆண்கள் அவள் பின்னால் நாயாய் அலைந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டான் . அவள் தோற்றமே வயதுக்கு மீறியதாக இருந்தது . மாநிறமாய் பெண்கள் அலைந்த ஊருக்குள்ளே அவள் மாம்பழ கலரில் இருந்தாள் . அவள் சிரிப்பு அழகாக இருக்கும் . அதை அனைவரும் ரசிக்கிறார்கள் என தெரிந்தோ என்னமோ அவள் அடிக்கடி சிரித்தாள் . அவன் அவளை அதிகம் பாராட்டாமலேயே இருந்தது அவளுக்கு போரடித்தது . அவனுக்கு என்றுமே அதீத அலட்டல் பிடிப்பதேயில்லை . அவளிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும் தனது அழகை பற்றிய அளவு கடந்த தற்பெருமை இருந்தது . அதனாலேயே அவளை புகழ்பவர்களிடம் அவள் மயங்கினாள் . அவளது வீக்னெஸ்ஸை புரிந்து கொண்டவர்கள் அதை பயன்படுத்தினார்கள் ...

அவளுடன் அதிக நெருக்கமாக இருந்தவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அவள் நடவடிக்கைகள் மேல் அதிருப்தி வந்தது . தன்னை பாராட்டுபவர்களுக்கு மத்தியில் யதார்த்தமாக இருக்கும் அதுவும் தொட்டதுக்கெல்லாம் கோபப்படும் அவன் மேல் அவளுக்கும் எரிச்சல் வந்தது . அதிலும் அவன் பன்னிரெண்டாவது வந்தவுடன் படிப்பிலும் , நண்பர்களோடும் பிஸியானதால் இருவருக்கும் விரிசல் அதிகமானது . அந்த விரிசலும் பிறகு அவளை இவனோடு பார்த்தேன் , அவனோடு பார்த்தேன் என்று யாராவது சொல்லும் போது அவனுக்கு ஏதோ ஒரு வெறுமை வரும் பிறகு நண்பர்களோடு பேச பேச அது கரைந்து விடும் . காதலியை பிரிந்து வரும் காதலனுக்கு நண்பர்களிடத்தில் அமோக வரவேற்பு இருக்கும் . அவன் இத்தனை நாட்கள் நம்மை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணோடு சுத்தினானே என்கிற ஏக்கம் , பொறாமை எல்லாமே கலந்து வருபவனை  சற்று கூடுதலாகவே கவனிப்பார்கள் . அதுவும் சில நேரங்களில் அவனை சந்தோசப்படுத்துவதாக நினைத்து அவளை பற்றி ஏதாவது ஏடாகூடமாக பேசி அவனிடம் வாங்கிக்கட்டிக் கொள்பவர்களும் உண்டு ...

அவள் நினைவிலிருந்து மீண்டு அவன் சுரேஷின் தங்கையின் வழியில் வந்து தொல்லை கொடுப்பவர்கள் வருகிறார்களா என்று தேட ஆரம்பித்தான் . அவனுடைய ஆட்களும் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள் .  அந்த மூன்று
பேரையும் எப்படியாவது அந்த சந்து வழியாக துரத்திக்கொண்டு சுடுகாடு ஸ்பாட்டுக்கு கொண்டு போய் விடவேண்டும் . அங்கே நண்பனின் அண்ணனை வைத்து பஞ்சாயத்து பேசி முடித்து விடலாம் . ஆனால் அது சொல்வது போல அவ்வளவு எளிதில்லை . அவர்களுக்கு தெரிந்தவர்கள் கூடி விட்டாலோ , போலீஸ் வந்துவிட்டாலோ கதை கந்தலாகி விடும் . ஒரு
சேஃப்டிக்கு பொருள் வைத்திருந்தாலும் அதை எடுப்பது நல்லதில்லை . அடிதடி என்பது இல்லாமல் அது கொலை முயற்சி என்கிற லெவெலுக்கு போய் வாழ்க்கையையே தடம் மாற்றி விடும் . அந்த உள்ளுணர்வு எப்பொழுதுமே அவனுக்கு உண்டு . அதனால் தானோ என்னமோ அவன் பல கண்டங்களிலிருந்து தப்பி வந்திருக்கிறான் ...

மர்ரூ எதெற்கெடுத்தாலும் சட்டென்று  பொருளை எடுத்து விடக்கூடியவன் . அதனால் அவனை கூட்டம் அதிகம் இல்லாத இடத்திலேயே நிற்க வைத்திருந்தான் . அந்த மூவரில் முக்கியமானவனை அவன் வம்பிழுத்து அடிதடியை ஆரம்பிக்க வேண்டும் . அதன் பிறகு மொக்கையும் மற்றவனும்
வேறு திசைகளிலிருந்து வந்து அட்டாக் செய்ய வேண்டும் . அவர்களை ஓடவிட்டு துரத்திக்கொண்டு ஸ்பாட்டுக்கு போக வேண்டும் . ப்ளானை யோசித்துக்கொண்டே ஒரு தம்மை பற்ற வைத்தான் கார்த்திக் . இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் அவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள் . அவன் தம்மை அணைத்து  விட்டு நேராக அவர்களை நோக்கி போனான் . அவன் கவனம் முழுவதும் மெயின் ஆள்  மேலேயே  இருந்தது . யார் அந்த க்ரூப்புக்கு தலைவனோ அவனை முதலிலேயே அடித்து விட வேண்டும் . அப்பொழுதான் கூட இருப்பவர்கள் பயத்தில் குழம்பிப்போய் சிதறி ஓடுவார்கள் ...

நடுவில் வந்து கொண்டிருந்தவன் மேல் கார்த்திக் வேகமாக போய் மோதினான் . " டே தாயோளி பாத்து வர மாட்ட " மோதின வேகத்தில் தடுமாறியவன் கோபத்தோடு கத்தினான் . அதையே எதிர்பார்த்திருந்த கார்த்திக் உடனே அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ட்யூப் லைட்டை எடுத்து
சொன்னவன் தோள்களில் அடித்தான் . அதை சற்றும் எதிர்பாராதவன் தடுமாறி விழ அருகில் இருந்தவர்கள் யோசிப்பதற்குள்ளேயே இடுப்பில் ஒரு உதை  விட்டான் . இதை பார்த்தவுடன் அவன் நண்பர்கள் வேறிடத்திலிருந்து வந்து அவர்களை தாக்கினார்கள் . பயத்தில் மூவரும் ஓட ஆரம்பிக்க திட்டமிட்டபடியே அவர்களை சுடுகாடு வழியிலே துரத்திக்கொண்டு போனார்கள் கார்த்திக் & கோ . திடீரென அதில் ஒருவன் விலகி மெயின் ரோட்டுக்கு ஓட ஆரம்பிக்க கார்த்திக் துரத்த ஆரம்பித்தான் . வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்தை தாண்டி கண நேரத்தில் ஓடினான் கார்த்திக் . டிரைவர் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிப்பாட்டி அவனை வசை பாடிக்கொண்டிருந்தார் ...

இது எதுவும் தெரியாமல் சொன்னபடி மர்ரூ அங்கே சரியாக நிற்க வேண்டும் அவன் ஏதாவது பெட்டிக்கடைக்கு போயிருந்தால் சிக்கல் என்பதை யோசித்துக்கொண்டே அவன் ஓடினான் . அவன் நினைத்தது போலவே மர்ரூ சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொறித்துக்கொண்டிருந்தான் . " டே " என்று சத்தம் கேட்டு கார்த்திக் வந்த திசையில் பார்த்தவன் முதலில் உனக்கும் வாங்கவா என்பது போல சைகை செய்ய கார்த்திக் கொன்னுடுவேன் என்று கை காட்டியதையும் உடனே எதிரி ஓடும் திசையை பார்த்தான்  .  அதனை பார்த்தவுடன் சுதாரித்த மர்ரூ  வேறு திசையில் ஓடி வந்து காலை தடுக்க அவன் எகிறி போய் விழுந்தான் . அங்கே வந்து சேர்ந்த கார்த்திக் விழுந்தவனை கொத்தாய் தூக்கி ரெண்டு அறை விட்டான் . பிறகு சுடுகாட்டு வழியாக அவனை ஓடுவதற்கேற்ப திருப்பி விட்டான் . அது புரியாத அவனும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த வழியாக ஓட இடைவெளி விட்டு அவர்கள் துரத்திக்கொண்டு போனார்கள் . ஒரு வேலையாக மதுரைக்கு வந்திருந்த சுந்தரியின் மாமா பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்ததால் எவனோ ஓடுவதையும் அவனை துரத்திக்கொண்டு கார்த்திக் ஓடுவதையும் பின்னர் நடந்த கூட்டத்தையும் நன்றாகவே பார்க்க முடிந்தது ...


ஒரு வழியாக ஓடி ஓடி கடைசியில் தடுப்பு சுவர் மேல் அவர்கள் முட்டி நின்றார்கள் . ஒன்று அதை  தாண்ட வேண்டும் அல்லது சற்று தள்ளியிருந்த சின்ன சந்து வழியாக ஓட வேண்டும் . அங்கே சந்து இருப்பது இருட்டில் தெரியாமல் அவர்கள் கஷ்டப்பட்டு சுவற்றில்  ஏறிக்கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே இருவர் ஏறி விட கடைசியாக ஏறிக்கொண்டிருந்தவனை மர்ரூ பிடித்து இழுத்துப் போட்டு மேலே ஏறி உட்கார்ந்தான் . அவன் எடைக்கு விழுந்தவன் தாக்குப்பிடிக்க முடியாமல் கத்த கார்த்திக் ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து அவனை பிடித்து இழுத்துப் போட்டான் . இந்த கேப்பில் விழுந்து கிடந்தவன் எழுந்து சந்தை கண்டுபிடித்து ஓட இவர்கள் பொறுமையாக சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . அவர்களின் ஓட்டம் முடியும் இடம் இவர்களின் ஸ்பாட் என்று நன்றாகவே தெரியுமென்பதால் ஆசுவாசமாக அதை நோக்கி நடந்தார்கள் ...

தொடரும் ...




10 November 2019

அவன் - அவள் - நிலா (10) ...


கார்த்திக் அவர்கள் இருவரும் சென்ற பிறகும் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் . அவன் தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று யோசித்தான் . சின்ன வயதிலிருந்தே நிறைய பார்த்திருக்கிறான் , பள்ளிக்கூட நாட்களில் பெரிய சேட்டை செய்பவர்கள் எல்லாம் தப்பித்து விடுவார்கள் , அவன் மட்டும் ஏதாவது சிறிதாக செய்தால் கூட  மாட்டிக்கொண்டு விடுவான் . தியேட்டரில் , பஸ்ஸில் என அவனிடம் வெட்டியாக வம்பிழுப்பவர்கள் ஏராளம் . அவன் மனதிற்குள் ஏதோ நெருடல்  ஏற்பட்டால் அங்கே அடிதடி நடந்துவிடும் . பள்ளி நாட்களில் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவன் அடிதடிக்காக அப்பாவை கூட்டி வர சொல்வார்கள் . அவன் நன்றாக படித்ததாலும் . அவன் அப்பாவின் பழக்க வழக்கங்களால் பெரிய தண்டனை எதுவுமில்லாமல் தப்பி விடுவான் ...

இன்னொரு சிகரெட் பிடிப்பதற்கு அவனுக்கு சோம்பேறித்தனமாக இருந்தது , இருந்தும் ஒன்றை பற்ற வைத்தான் . பெட்டிக்கடைக்காரர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் , ஆனால் பயத்தால் எதுவும் கேட்கவில்லை . இப்பொழுது கிளம்பினால் தான் இரவுக்குள் மதுரைக்கு  போக முடியும் , இங்கே நடந்தது எதுவும் தெரியாமல் போனவுடனேயே நண்பர்கள் ட்ரீட் கேட்பார்கள் . கையில் வேறு காசு குறைவாக இருக்கிறது , சுரேஷ் வழக்கம் போல செலவு செய்து விட்டு வரவில் வைத்துக்கொள்வான் . சுரேஷ் பத்திர ஆஃபீஸில் வேலை செய்வதால் அவர்கள் செட்டிலேயே அதிக காசு வைத்திருப்பவன் . நெருங்கிய நண்பன் லட்சுமணனின் சொந்தக்காரன் . அவர்கள் ஏரியாவுக்கு வந்த புதிதில் யாரையும் கண்டுகொள்ளாமல் வேலைக்கு வருவது போவது என்று தானிருந்தான் . லட்சுமணன் அறிமுகம் செய்து வைத்தபோது கூட அவன் பேச்சில் நிறைய பணம் சம்பாதிக்கிறோம் என்கிற திமிர் இருந்தது . பெருமைக்கு எருமை ஓட்டுவது போல கூடுதலாகவே செலவு செய்தான் ...

பணம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து விடாது என்பது சுரேஷுக்கு புரியும் நாள் வந்தது . அவனை போலவே அவன் தங்கையும் சிவப்பாக அழகாக இருந்தாள் . அதனால் அவள் கேட்காமலேயே சில பாடிகார்டுகள் பின் தொடர்ந்தார்கள் . ஏரியாவில் அவ்வளவாக புளங்காத சுரேஷுக்கு இது முதலில் தெரியவில்லை . ஆனால் எங்கே போனாலும் ஏரியாவுக்குள் கண் , காதுகளை வைத்துவிட்டுப் போகும் லட்சுமணனுக்கு இந்த தகவல் முதலில் வந்தது . கல்லூரி முடிந்தவுடனேயே  கார்த்திக் நேராக டாப்புக்கு வந்துவிடுவான் . அவனுக்காக காத்திருந்தது போலவே லட்சுமணன் இந்த விஷயத்தை சொன்னான் . ஒரு பெண் அழகாக இருந்தால் நாலு பேர் பின்னால் வரத்தான் செய்வார்கள் , இதில் அந்த பெண்ணுக்கே பெருமையாகவோ அல்லது உடன்பாடோ இருக்காம் . அதை தெரிந்து கொள்ளாமல் நேரடியாக நாம் விஷயத்தில் தலையிடுவது நல்லதல்ல என்று கார்த்திக் லட்சுணமனுக்கு சொன்னான் . அதில் நியாயம் இருப்பது போலவே அவனுக்கும் பட்டது . இந்த விஷயத்தை முதலில் சுரேஷிடம் சொல்லிவிடவேண்டுமென அவன் முடிவெடுத்தான் ...

சுரேஷ் முதலில் இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டாமலிருந்தாலும், தங்கை பின்னால் சுற்றுபவர்கள் புதூர் கம்மாய் தெருவை சேர்ந்தவர்கள் என்று கேளிவிப்பட்டதும் லேசாக பயம் வந்தது . அடிதடி , பிட்பாக்கெட் , திருட்டு என்று பேர் போன தெருவிலிருந்து சிலர் தனது தங்கையை பின் தொடர்வது அவனுக்கு நல்லதாக படவில்லை . எவ்வளவு செலவானாலும் இந்த பிரச்சனையை தீர்த்து விடவேண்டுமென அவன் யோசிக்க ஆரம்பித்தான் .
" மாப்பிள்ளை , பணம் தர்றேன் யாரையாவது செட் பண்ணி அவனுங்களை மிரட்டலாமா ? , என்று லட்சுமணனிடம் சுரேஷ் கேட்டான் .
" பாஸ் இது பணத்த வச்சு முடிக்கிற வேலை கெடையாது , பழக்கத்த வச்சு முடிக்கிற வேலை " கார்த்திக் சுரேஷிடம் தீர்க்கமாக சொன்னான் . பணம் இருக்கிறது , பழக்கம் எங்கே என்பது போல சுரேஷ் குழம்பிப் போய் பார்த்தான்.
" நீங்க ரெண்டு நாள் தங்கச்சியை  ஸ்கூல்ல விடுங்க , கூட்டிக்கிட்டு வாங்க , அப்படியே அவ கிட்ட பேச்சு கொடுத்து அந்த பசங்கள பத்தி ஏதாவது விஷயம் இருந்தா  தெரிஞ்சுக்குங்க " , கார்த்திக் அவன் மனதில் உதித்த ஐடியாவை சுரேஷிடம் சொன்னான் ...

வியாழன் , வெள்ளி இரண்டு நாட்களும் சுரேஷ் அவன் தங்கையை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவதென ஏற்பாடானது . நிறைய கேப் விட்டு கார்த்திக்கும் , லட்சுமணனும் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களை பின் தொடர்ந்தார்கள் . அண்ணனுக்கு தெரியாமல் தங்கை எதுவும் அந்த பசங்களுக்கு ஜாடை காட்டுகிறாளா என அவர்கள் நோட்டம் விட்டார்கள் . அண்ணனுடன் சாதாரணமாக பேசிக்கொண்டே வந்தவள் அந்த பசங்களை பார்த்தவுடன் லேசாக மிரண்டாள் . அவர்கள் தன்னை பின் தொடர்வது அவளுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணனிடம் சொல்லி அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தாள் . அதனால் தான் அவனிடம் எதுவும் வாய் திறக்காமல் வைத்திருந்தாள் . இன்று அவனே கொண்டு போய்
விடுகிறேனென்று சொன்னது அவளுக்கு சந்தோசம் . சுரேஷை பார்த்து அவர்கள் கொஞ்சம் கூட பயந்தது போல தெரியவில்லை . மாறாக வேண்டுமென்றே சுரேஷின் வண்டியில் இடிப்பது போல வந்து சென்றார்கள் .
அதில் ஒருவன் மற்றொருவனிடம் " ஐயோ சார பார்த்தா ரொம்ப பயமா இருக்கு மச்சி " என்று சுரேஷை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தான் .
சுரேஷுக்கு அவர்களை ரெண்டு அரை விடவேண்டுமென தோன்றியது , ஆனால் அதற்கு அவனிடம் தையிரியம் இல்லை ...

ஒரு வழியாக ஈவினிங்கும் அவளை டியூஷனில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு சுரேஷ் அவர்கள் டாப்புக்கு நேராக போனான் . கடைக்கார பையனிடம் ஒரு ஃபுல் பாட்டில் ரம் , சோடா, சைட் டிஸ் என எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்து விட்டு சோஃபாவில் வந்து அக்கடாவென உட்கார்ந்தான் . இதையெல்லாம் கண்டும் , காணாதது போல காரத்திக்கும் . லட்சுமணனும் சீட் ஆடிக்கொண்டிருந்தார்கள் . எப்போதும் கொஞ்சம் பாலிஷாக பேசும் சுரேஷிடமிருந்து சரக்குக்கு பின்னர் லோக்கலாக நிறைய பேச்சை கேட்கலாமென இருவரும் நினைத்துக்கொண்டார்கள் . சுரேஷ் சரக்கு கைக்கு வந்தவுடன் இவர்களிடம் வந்தான் . " பாஸ் ஆடுனது போதும் வாங்க ரவுண்டு போடலாம் " என்று கூப்பிட்டான் . " என்ன பாஸ் நாலு பேர் இருந்தாலே ஆஃப் தான் வாங்குவீங்க இன்னிக்கு ஃபுள் வாங்கியிருக்க்கீங்க " ,
என்று எதுவுமே தெரியாதது போல கார்த்திக் அப்பாவியாக கேட்டான் . மூன்று க்ளாஸிலும் சமமாக ரம்மை ஊற்ற ஆரம்பித்தான் சுரேஷ் ...

" இல்ல பாஸ் அவனுங்களை சும்மா வியக்கூடாது " . முதல் ரவுண்டிலேயே  அவனுக்கு வார்த்தை குழறியது . நேற்று அவளை ஸ்கூலில்  விட்டது , கூட்டி வந்தது எல்லாவற்றையும் அவர்களிடம் சொன்னான் . அவர்கள் சிப்
அடித்துவிட்டு சிப்ஸை கொறித்துக்கொண்டே  கேட்டார்கள் .
" பாஸ்  இவிய்ங்க   மேட்டர்ல  எடுத்தோம் , கவுத்தோம்னு லாம் பண்ண முடியாது அப்புறம் பிரச்சனை வேற மாதிரி போய்டும் " கார்த்திக் தனிப்பட்ட இருவரின் பிரச்சனை ஏரியா பிரச்னை ஆகிவிடக்கூடாதென்பதில் தெளிவாக இருந்தான் . அதிலும் தங்கை பெயர் இதில்  வந்துவிடக்கூடாதென்பதிலும் அவன் கவனம் இருந்தது . " அவனுங்கள என்ன பண்ணலாம் சொல்றீங்க ?"
" டைரெக்ட்டா தங்கச்சி மேட்டர் இல்லாம , அவனுங்கள பொளக்கலாம் , பொளக்குற பொளல்ல அவிய்ங்க  சில மாசம் வெளியவே வரமாட்டாய்ங்க , அப்புறமா நம்ம ஏரியா பக்கமே தலை வச்சு படுக்க மாட்டாய்ங்க " கார்த்திக் சொன்னான் . " அடிச்சா மட்டும் போதுமா வர மாட்டாய்ங்களா ? " , லட்சுமணன் கேட்ட போது அடி  மட்டும் போதாது என்று அவனுக்கு தோன்றியது ...

" உன் பாய்ண்ட் சரி தான் , அடியோடு விட்டா திரும்பவும் வர வாய்ப்பு இருக்கு", " பாஸ் அப்போ என்ன ஆளையே போட்டுட சொல்றீங்களா ?!"
சில ரவுண்டுகள் உள்ளே போய் வியர்த்து , விறுவிறுத்து சுரேஷ் கேட்டான் .
இருவருக்குமே வெறித்தனமாக சிரிப்பு வந்தது . " என்ன பாஸ் சினிமா ரேஞ்சுக்கு யோசிக்கிறீங்களோ ?" கார்த்திக் சிரித்துக்கொண்டே கேட்டான் .
" இல்ல , நீங்க அடிச்சா மட்டும் போதாதுன்னு சொல்லறீங்க , அதான் " .
" ஆமா , அடிச்சா மட்டும் போதாதுன்னா , அடியோடு விடாம , அவிய்ங்களுக்கு ஒரு பஞ்சாயத்து வச்சு நாம அங்க போக மாட்டோம் , அவிய்ங்க நம்ம ஏரியா பக்கம் வரக்கூடாதுன்னு பேசி முடிக்கணும் " . பஞ்சாயத்து என்றால் ஆலமரம் , சொம்பு என்றெல்லாம் சினிமா மாதிரி சுரேஷ் யோசிப்பானோ என்று நினைத்து இருவரும் மீண்டும் சிரித்தார்கள் . அவர்கள் தன்னை பற்றி தான் சிரிக்கிறார்கள் என்று தெரியாமல் சுரேஷும்  சேர்ந்து சிரித்தான் ...

 இன்னும் ஒரு வாரம் இருக்கும் மாதா கோவில் சப்பர் திருநாளில் நல்ல கூட்டம் இருக்கும் . அந்த கூட்டம் தான் அவர்களுக்கு தேவைப்பட்டது . ஏற்கனவே அந்த சர்ச்சுக்கு வந்து எங்கெங்கே போலீஸ் நிற்பார்கள் எந்த தெரு கூட்டம் குறைவாக இருக்கிறது என்பதையெல்லாம் நோட்டம் பார்த்து வைத்திருந்தார்கள் . சுரேஷ் வந்தால் அவர்களுக்கு அடையாளம்  தெரிந்து விடுமென்பதால் அவனை தவிர்த்தார்கள் . அவனை தவிர்த்து கார்த்திக் , லட்சுமணன் உட்பட ஐந்து பேர் , ஏற்கனவே புதூரிலேயே பெரிய ஆளின் தம்பி கார்த்திக்கின் பள்ளிக்கால நண்பன் என்பதால் அவனிடம் விஷயத்தை சொல்லி வைத்திருந்தான் . அவனும் தான் நேரடியாக தலையிட்டால் அண்ணன் திட்டுவார் என்பதால் அவர்களை அடித்து அண்ணன் இருக்கும் ஸ்பாட்டுக்கே அழைத்து வருமாறும் , அங்கே காத்திருப்பதாகவும் சொல்லி விட்டான் . அவர்களை துரத்திக்கொண்டு சுடுகாடு தாண்டி  அந்த ஸ்பாட்டுக்குள் கூட்டிப்போக வேண்டும் . பாபு , மொக்கை , மர்ரு இவர்கள் தான் இந்த திட்டத்துக்கு சரியாக இருப்பார்கள் என யூகித்தான் . நாளை அவர்களை சந்தித்து விஷயத்தை சொல்ல வேண்டும் . மதுரைக்கு செல்லும் பேருந்தில் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு  பழைய அடிதடிகளை கார்த்திக் அசைபோட்டுக்கொண்டிருந்தான் ...

தொடரும் ...




Related Posts Plugin for WordPress, Blogger...